Published:Updated:

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்
வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்

ஓவியங்கள் : ரமணன்

பிரீமியம் ஸ்டோரி

வாப்பா தன்னுடைய ஆறாவது மகளின், அதாவது என்னுடைய வீட்டை அபீர் தெருவின் கடைக்கோடியில் கட்டி முடித்தார். அப்போது வாப்பாவுக்கு இன்னும் ஒரேயொரு வீடு மிச்சமிருந்தது. தங்கை பஷீராவின் வீட்டைக் கட்டி அவளுக்கொரு துணை தேடிக் கொடுத்துவிட்டால் வாப்பா சந்தோஷமாக ஹச்சுக்குப் புறப்பட்டுப் போய்விடுவார். அந்தப் புனிதமான யாத்திரையைக் காட்டிலும். கடமையைக் காட்டிலும் தன்னுடைய மகள்களுக்கு நல்ல ஒரு வரனும் ஒரு வீடும் அமைத்து கொடுப்பதைத்தான் வாப்பா தன்னுடைய  வாழ்வின் அர்த்தமென்று கருதியிருந்தார். நான் இவரை மணமுடித்த பிறகு, வாப்பாவைப் பார்க்க அபீர் தெருமுனையிலிருந்த எங்களுடைய வீட்டுக்கு மூன்று மாதங்கள் கழித்து போயிருந்தபோது, வாப்பா மிகவும் தளர்ந்துபோயிருந்தார். மேல் சட்டை இல்லை. வாப்பா எப்போதும் தன்னுடைய மேல்சாரையை நீக்கியதில்லை, வீட்டிலும்கூட. உம்மா நெஞ்சில் ஏதோ களிம்பு பூசிவிட்டிருந்தாள். 

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்

என்னைக் கண்டதும் தன்னுடைய சுருக்கேறிய முகத்துக்குக் கீழே வழியும் பழுப்பு தாடி செங்குத்தாக நிமிர என்னைப் பார்த்தார். வாப்பாவின்  மடியில் எப்போதும் மாட்டுத்தாள் பேப்பர் போட்டும் பொலித்தீன் அடிக்கப்பட்டும் ஒவ்வொரு வருடமும் பத்திரப்படுத்தப்படும் எங்களுடைய கடையின் கணக்குக் கொப்பி தளர்ந்துபோன தொடைகளுக்கு பாரத்தை அழுத்திக்கொண்டு கிடந்தது. வாப்பா முணுமுணுத்துக்கொண்டார். என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு கொப்பியைத் தூக்கி நிலத்தில் வைத்தார், ஏறக்குறைய போட்டார். வாப்பா என்னிடம் எதுவும் பேசவில்லை. அந்தச் சூழலில் என்னுடைய வருகை, அவருடைய மனபாரத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டதென்று அடுக்களைக்குள் போனபோது உம்மா ஒரு போடு போட்டாள். எனக்கு தலையோடி விறைத்தது. வாப்பாவின் செல்லமகளின் வருகை அவருக்குத் துன்பத்தைத் தந்துவிடுமா? 

உம்மா, தன் ரகசியக் குரலை வரவழைத்துக்கொண்டாள். அவள் எப்போது இப்படி குரலை தாழ்த்தி மாற்றிக்கொள்கிறாள் என்றால் ஏதோ ரகசியமான அதேநேரம் கவலையான ஒரு சமாச்சாரம் சொல்லப்போகிறாள் என்று அர்த்தம்.

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்“கடைய விக்கத்தான் வேணும்போல...” என்றாள். எனக்குள் நினைவோடி விளங்கியது. வாப்பாவின் செல்லமகளிற்குக் கல்யாணமாகி மூன்று மாதமாகிவிட்டது. அவள் கடைக்குப் போய் ஆறேழு மாதமாகிவிட்டது. கடையின் நினைப்பை நானெப்படி சுத்தமாக மறந்தேன். கடைக்கு முன்பைப்போல வாப்பாவால் போக முடியவில்லை. உடலின் வலு மெள்ள மெள்ள வாப்பாவை வீழ்ந்திக்கொண்டி ருந்தது.

நேராகப் போய் வாப்பாவின் கண்களுக்குள் போய் நின்றேன். என்றைக்கும் தீர்க்கமாகப் பார்க்கும் கண்களில் ஒரு சொட்டு முதுமையேறவில்லை. வாப்பாவிடம் கொப்பியை வாங்கினேன். என்னுடைய புதிய அபாயாவைக்கூடப் பொருட்படுத்தாமல் அப்படியே தரையில் பென்சிலை எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். அந்தப் பெரிய ஐந்தொகைக் கொப்பியை விரித்து அதனுள் இறங்கினேன். ஒரு மணி நேரம் இவரைக்கூட மறந்தேன் எதிரே உட்கார்ந்திருப்பது வாப்பா மட்டும்தான். அதுவும் எங்களுடைய கடையின் வலதுமூலையில் பெரிய வாளிகள் அடுக்கப்பட்டிருக்கும் சுவருக்கு அண்மையில் இருக்கும் வாப்பாவின் பெரிய முதிரை மரக்கதிரையில் வாப்பா அமர்ந்திருக்கிறார். வாப்பாவின் மேசைக்கு நேர் மேலே உயர்ந்து நிற்கும் இரும்புச் சலாகை அடுக்கின் மீது போடப்பட்டிருக்கும் மெத்தையில் அமர்ந்து, வாப்பாவின் கணக்குப் புத்தகத்துக்குள் இறங்கி கணக்குகள் ஒவ்வொன்றாக வாப்பாவைக் கேட்டுக் கேட்டு அடையாளங்களை இட்டுக்கொண்டு குறிப்புகளை எழுதுகிறேன். ஏழெட்டு வருடமாக இது என்னுடைய தின வேலை. இந்த எட்டு மாதம்தான் அதை நான் சுத்தமாக மறந்தேபோய்விட்டேன்.

அக்காக்களைப்போல எனக்கும்  மணப்பெண்ணுக்கான லட்சணங்களை வரவழைப்பதிலும், என்னைச் சிறுமியிலிருந்து பெண்ணாக வரிப்பதுமாக உம்மாவும் அக்காக்களும் என்னை வீட்டிலேயே அமர்த்திக்கொண்டனர். எல்லாம் வாப்பாவின் ஏற்பாடுதான்.  பள்ளிக்கூடத்தைப்போல கடையையும் கணக்குக் கொப்பியையும்கூட சாதாரணமாகக் கடந்து, வீட்டிலிருந்தபடி என்னை  மணப்பெண்ணாக மாற்றத் தொடங்கினேன்.

 குசினிக்குள் உம்மா சொன்ன பிறகுதான் வாப்பா மனதளவிலும் தளர்ந்து போயிருக்கிறார் என்பது உறைத்தது.  கடை வேறு வாப்பா வேறில்லை. அவர் தளர்ந்துகொண்டிருந்தார்.

கணக்குக் கொப்பிகளுக்குள் நுழைந்தேன்.வாப்பாவை நோக்கி வேக வேகமாகக் கேள்விகள் போகின்றன. பெரும்பாலும் எல்லா கணக்குகளிலும் எண்கள் குறைந்தன. லாபம் தேய்ந்து வழிந்தது. நான் இத்தனை நாளும் நடந்திருக்கும் தவறு ஒவ்வொன்றையும்  கேட்கக் கேட்க, வாப்பா தன்னுடைய முதுமையைக் கண்களிலும் வாங்கத் தொடங்கியதை நான் கவனிக்கவில்லை. அவரின் குரலில் சலிப்பு ஏறும்போதுதான் நான் நிமிர்ந்து பார்த்தேன். வாப்பா கண்களில் தண்ணீர்வைத்திருந்தார். இவர், பாலைவனப்புயல் முடிந்தவுடன் கூடாரத்திற்கு வெளியே தலையை நீட்டும் ஒட்டகத்தைப்போல் கண்களை வைத்துக்கொண்டு வாப்பாவையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு வாப்பாவின் கண்களைச் சந்திப்பதிலிருந்த சங்கடத்தைத் தாண்டி, இவரைக் கவனிக்கத் தோன்றவேயில்லை. ஆனால், அவர் அதையொரு பெருத்த அவமானமாக எடுத்துக்கொண்டார் என்பதை பிறிதொரு நாள் ஏதோவொரு குற்றஞ்சொல்லும் வார்த்தைகளுக்கிடையில் சொருகி என்னைச் சரக்கென குத்தியபோதுதான் தெரிந்துகொண்டேன்.

வாப்பாவிடம் கடைசியாக நானும் எல்லோரும் அவரிடம் சொன்ன வார்த்தைகளைத்தான் சொன்னேன், “வாப்பா, கடையைக் குத்தகைக்குக் கொடுக்கலாம்.”

வாப்பாவின் கண்களில் பழைய கதையோடியது. கிளியண்ணனை நினைத்துக்கொண்டார்போலும். அவர் போன பிறகு வெளி வியாபரம் படுத்தது. நான் போன பிறகு, வாப்பாவிற்கு அடுத்தடுத்து வந்த நுரையீரல் பிரச்னை வியாபாரத்தை இன்னும் தளர்த்திக் கொண்டே போனது. கடையைப் பொறுத்தவரை ஒரேயொரு மாலுமிதான். அது வாப்பா மட்டும்தான்.

அக்காமாரும் சரி என்னுடைய தங்கைகளும் சரி, இத்தனை வருடத்தில் எத்தனை முறை எங்களுடைய கடைக்கு வந்திருப்பார்கள் என்று அவர்களைக் கேட்டால், எண்ணிச் சொல்ல அவர்களுடைய ஒரு கையின் விரல்களே போதுமாயிருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள், என்னுடைய உம்மா கடைக்குள் ஒரு நாள்கூட வந்ததேயில்லை. அவளுடைய உலகம் வேறு. ஆனால், வாப்பா என்னைக் கடைக்குக் கூட்டிப் போனபோது, (உண்மையில் ஒரே நாளில் அது நடந்திருக்காது, சில நாள்களில் அது நடந்திருக்கலாம். அதிகபட்சம் ஒரு மாதம்) எனக்கு எங்கள் கடை பிடித்துப்போனது. பழகிப்போன இயல்பான காட்சிகள் அற்றுப்போய், கடையொரு விசித்திரமான இடமாக என்னுள் இறங்கியது. வாசலுக்குப் போனால், எதிரே வாகனங்கள் ஓடும் வீதியும் அதற்கு அப்பால் விரியும் பெரிய வாவியும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தன. நான் சலிப்பில்லாமல்  வேடிக்கை பார்க்குமொரு சிறுமியாகயிருந்தேன். அப்போது நான் எட்டாம் வகுப்பென்று நினைக்கிறேன். வாப்பாவின் கதிரையில் ஏறி இருந்துகொண்டால் எனக்கு வாவியும் சரி கடைக்கு வருபவர்களும் சரி தெரிய மாட்டார்கள். அதற்கு நான் மேசையில் ஏற வேண்டும் அல்லது கதிரையில் எழுந்து நிற்கவேண்டும். நான் மேசை மேல் தோதாக ஏறி இருந்துகொண்டு கொக்கான் வெட்டுவேன். மேசை மீது மாபிள்கள் அறையும் ஒலி கேட்கும். கடையில் வேலை செய்யும் கிலியண்ணன் வந்து  எனக்கு எப்படி கொக்கான் வெட்டத் தெரியுமென்று கேட்டார். (அப்போது அவருக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். கடையில் வேலைக்கு நின்ற ஏனையவர்கள் அவரை அப்படி அழைத்ததால், நானும் அவரை  ‘கிளியண்ணன்’ என்றே அழைத்தேன்.) பள்ளிக்கூடத்தில் உடன்படிக்கும் தமிழ்ப் பிள்ளைகளுடன் சேர்ந்து பழகிக் கொண்டதைச் சொன்னேன். அதைச் சொல்லித்தந்த மாலினி, இப்போது என்னுடன் கதைப்பதில்லை என்பதையும் சொன்னேன்.  

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்

“கொக்கான் சத்தம் கேட்டா தரித்திரமெண்டு சொல்லுறவை மைமி” என்றார். நான் முகத்தைச் சுருக்கிக்கொள்ள என்னைக் கையமர்த்திவிட்டு, கடையில் விற்பனைக்கு வந்திருந்த ஒரு மெத்தையை எடுத்தார். இரும்புச் சடங்கள் அடுக்கப்பட்டிருந்த  சமாந்தரப் பரப்பில் அந்த மெத்தையைப் போட்டு என்னை ஏற்றிவிட்டார்.

 சட்டென்று நான் எல்லோரையும்விட உயர்ந்துபோனேன். வாவி என்னுடைய கண்களுக்குக் கீழே வந்தது. எங்களின் பரந்த முழுக்கடையையும் என்னால் ஒரே  கண்வீச்சால் பார்க்க முடிந்தது, வாப்பாவோடு அங்கு வேலை செய்யும் அனைவரின்  தலையையும். பிறகு, கொக்கான் சத்தம் கேட்கவில்லை. கற்களை எறிந்து லாகவமாகப் புறங்கைகளில் இறக்கி இறக்கிப் பிடிப்பது அத்தனை அலாதியானது. அதைவிட என்னைச் சட்டென்று அந்த விளையாட்டு தனக்குள் இழுத்துக்கொள்ள அந்தக் கொக்கான் பாட்டுத்தான்  காரணம்.

கோழிக்காய் கொத்தாலங்காய்
பச்சயரிசி பழம் பொறுக்கி
ஒற்றைத்தட்டு இரட்டைத்தட்டு
கைத்தாளம்
ஏந்தி – இறக்கி
ஏறிய கை
STOP!


கற்கள் அந்தரத்தில் இறங்கி ஒவ்வொரு வார்த்தைக்குமாகக் கைகளில் இறங்கி உருளும், கண்மணிகள் கற்களோடு எழுந்து எழுந்து இறங்கும்.

நான் பெரிய பெண்ணாகி, என்னுடைய அபாயா நிரந்தரமாக  என்னுடைய உடலில் ஏறி உட்கார்ந்த பிறகும் நானாகவே அந்த மெத்தையில் ஏறி இருக்குமளவிற்கு வளர்ந்து விட்டேன். உம்மா நான் அப்போதும் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்கு வராமல் கடைக்குப் போய்  வாப்பாவோடு நிற்பதை நிறுத்தப் பார்த்தாள். வாப்பாவிற்கு என்னுடைய பேச்சுத்துணை பழகிப்போய்விட்டது. நான் அந்த மெத்தையில் ஒவ்வொரு நாளும் வந்து அமர்ந்ததிலிருந்து வியாபாரம் கொழிப்பதாக ஒரு நம்பிக்கை வந்தது. யாரோ ஒரு குறிசொல்லும் பக்கிரி ஒருவனைக் கண்டு கேட்டபோது, ‘உன்னுடைய மகள்தான் உன்னுடைய செல்வம்’ என்று சொல்லியிருக்கிறான். பிறகென்ன, வாப்பா என்னை கடைக்குள்ளிருந்து அகற்றும் அம்மாவின் யோசனையைக் கண்டுகொள்ளவேயில்லை. உண்மையில் எனக்கே சந்தேகம் வந்தது, வாப்பாவின் கடுமையான உழைப்பையும் தாண்டி என்னால்தான் எல்லாவற்றின் மீதும் அல்லாவின் கருணைமிகுந்த பார்வை வந்து வீழ்ந்துள்ளதா. வாப்பா புதிதாக இரண்டு கடைத் தொகுதிகளைக் கட்டி கடையை இன்னும் விரிவுபடுத்தினார். இன்னும் இரண்டு பெரிய லொறிகளை வாங்கி கொழும்பிலிருந்து சாமான்களை இறக்கினார். முதலில் லொறிகள் கொழும்பிலிருந்து சாமான்களுடன் வரும். போகும்போது வெறும் லொறிகளாகப் போகும். அப்போது, நான்தான் வாப்பாவிடம், ‘போகின்ற லொறியில் உமி ஏற்றிச் சென்றால் சும்மா போற லொறியில் லாபம்தானே?’ என்று சொல்லிவைத்தேன். வாப்பாவும் செய்துபார்ப்போம் என்று தொடங்க, லாபம் வந்தது. வாப்பா அந்தப் பக்கிரியை ஏறக்குறைய முக்கால் பங்கு நம்பிவிட்டார். அல்லா என்னிலிருந்துதான் கருணையைப் பாச்சுகிறான்.

துவொரு டிசம்பர் மாதம், வாவி நிரம்பி ரோட்டின் விளிம்பு வரை நீரேறியிருந்தது. நான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியபோது,  வாப்பா ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார், அடிக்கடி பெருமூச்சுக்கள் வேறு. கணக்குக் கொப்பி அவரின் தாடிக்குக் கீழே விரிந்து அதை விழுங்கிவிடுவதைப்போலக் கிடந்தது.  விவரம் விசாரித்தேன்,  செலவுப் பக்கம் ஏறி வாப்பாவின் வியாபாரம் பற்றிய மனக்கணக்குகளைத் தகர்த்துவிட்டிருந்தது. இத்தனை வருடக் காலம் துல்லியமாக எல்லாவற்றையும் கணிப்பவர். கணக்குகளை எழுதிவைப்பது ஒரு கடமைக்காகத்தான். வாப்பாவின் முகம் சுருங்கியபோது, கொப்பியை வாங்கி கணக்குகளிலும் குறிப்புகளிலும் இறங்கி நிதானமாக நடந்தேன். எனக்கு குறைபாடுகள் சட்டென்று தெரியும் கண். வாப்பாவிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அந்தப் பதில்களும் கணக்குகளும்  புது விடையை என்னிடம் எடுத்துவந்து தந்தன.

“லொறியளுக்கு அடிக்கிற டீசல் காசு ஏன் இவ்வளவு வருது வாப்பா?”

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்

நான் வாப்பாவிடம் கேட்ட கணிப்புகள் இவைதாம், ‘ஒரு லொறி கொழும்புக்குப் போய் வர எவ்வளவு எடுக்கும்... எவ்வளவு எண்ணேய் விற்கிறது?’ நான் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டேன். லொறிகளுக்கு டீசல் கிரயம் எல்லாம் பார்ப்பது செல்லக்கிளியண்ணன்தான். நான் வாப்பாவைக்கொண்டு அவரைக் கூப்பிட்டேன். செலவைக் காட்டி விசாரித்தபோது புதுக்கதைகள் சொன்னார்.

“லொறியள் டீசல் குடிக்குது. எல்லாத்துக்கும் ஒருக்கா இன்ஜின் செய்யவேணும் மகள்” இதை என்னைப் பார்த்தும், “காட்டைக் கடக்கும்போது புலிப் போராளிகள் லொறியை மறித்து டீசல் பறிக்கின்றனர்” இதை வாப்பாவைப் பார்த்தும் சொன்னார் கிளியண்ணன். சொல்லும்போது, வாப்பா ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டதைப்போல் அவரின் முகம் மாறியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.வாப்பாவிற்குக் கோபம் தலைக்கேறியது. சினந்து குரலை உயர்த்தினார்.

“இதெல்லாம் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? இயக்கத்திடம் காசில்லாமல் லொறிகளில் டீசல் பறிக்கிறார்களா?”

“ஓம் முஸ்லிம்காரரின் லொறியெண்டு...” கிளியண்ணன் இழுத்தார்.

“பொய் சொல்லாதை கிளி, என்ர லொறியெண்டா இயக்கம் கையும் வைக்காது காலும் வைக்காது. என்ர லொறியள் அவங்களுக்கு அவ்வளவு செஞ்சிருக்கு. ஆயிஷா எண்ட பேரப் பார்த்தாலே இயக்கம் பேசாமல் விட்டிடும். நீ சும்மா அவங்கள இதுக்கு இழுக்காத. (என்னுடைய மூத்த அக்காவின் பெயர், அதைத்தான் லொறிகளில் எழுதியிருந்தார்)

 கிளியண்ணனும் கோபப்பட்டார்; சண்டையிட்டார். தானொன்றும் கள்ளனில்லை என்றார். வாப்பாவுக்கு கோபத்தில் வார்த்தைகள் ஏகத்துக்குத் தெறித்தன. ஆள்கள் கூடிவிட்டார்கள். கிளியண்ணன் கோபமாக அங்கிருந்து கிளம்பிப் போனார். வாப்பாவுக்குக் கோபம் அடங்க மாலையாகிவிட்டது. தன்னுடைய மோட்டார் சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு எங்கோ போனார். கிளியண்ணனின் பரிதாபமான முகம் கொஞ்ச நேரம் அலைக்கழித்துக்கொண்டிந்தது. நீண்ட நாள்களாக கடையில் வேலைசெய்தவர் கிளியண்ணன். அவருடைய மனைவி  காசநோய் வந்து இறந்துபோய்விட்டாள்.  அவருக்கு என் வயதில் ஒரு மகளிருக்கிறாள் என்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் (அவளுடைய பெயர்  சரியாக  ஞாபகமில்லை). வாப்பாவைக் கோபத்தில் அவர், ‘சோனி’ என்று பேசியவுடன், வாப்பா அவரை உடனடியாக ‘அங்கிருந்து போ’ என்று பொரிந்து தள்ளிவிட்டு கடைக்குள் வந்து இருந்துவிட்டார். சிறிது நேரத்தில் கடை வாசலிலிருந்து கிளியண்ணன் நகர்ந்துபோக  கூடியக் கூட்டம் அகன்றது. கடையில் வேலை செய்யும் பர்ஹான் நானா, உள்ளே வந்து வாப்பாவை சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருந்தார். வாப்பா அவரிலும் எரிந்துவிழுந்தார். வாப்பா தன்னுடைய பணத்தை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. அவருக்கு தான் ஏமாற்றப்பட்டதைத் தாங்கிக் கொள்வதில்தான் பிரச்னை. பர்ஹான் நானாவிடம் கிளியண்ணன் நியமித்த லொறிச் சாரதிகளையும் கிளீனர்களையும் மாற்றிவிடும்படி சொல்லிவிட்டு எழுந்துவந்து என்னுடைய தலையில் தடவி ஒருமுறை புன்னகைத்தார். வாப்பாவின் விரல்கள் தலையில் படர, எனக்கேறியிருந்த பதற்றம் மெள்ள அடங்கியது. வாப்பா எனக்கு ஏதாவது நொறுக்குத்தீனி வாங்கித் தரும்படி பர்ஹான் நானாவிடம் சொல்லிவிட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனார். வாப்பா அந்த பக்கிரியிடம்தான் போவார்.

எனக்கு பர்ஹான் நானா ஒரு மிக்ஸர் பொட்டலமும் பால் பைக்கற்றும் வாங்கிவந்து தந்தார். சாப்பிடத் தோன்றவில்லை. என்னுடைய கொக்கான் மாபிள்களை எடுத்துக்கொண்டு வெட்டத் தொடங்கிவிட்டேன். மாபிள்கள் மேலெழுந்தன.

வாப்பா திரும்பும்போது கடையைச் சாத்தும் நேரம் வந்துவிட்டது. அந்தப் பக்கிரியிடம்தான் போய்வந்திருக்க வேண்டும். கையில் அந்தப் பின்னப்பட்ட கறுப்பு நீல் கிடந்தது. அதை லாச்சிக்குள் வைத்தார். வாப்பாவின் கர்ப்பப்பையைப்போல இடுப்போடு இருக்கும் பெல்ட் பை, அன்றைக்குக் கொஞ்சம் இயல்பை மீறி உப்பியிருந்தது. நான் கேட்கும்முன்னே வாப்பா அதன் சிப்பை இழுத்து வாயைத் திறந்தார். அப்படியே கையைவிட்டு அந்த ஆறு கற்களையும் எடுத்தார். கூழாங்கற்கள். என்னுடைய கைகளில் அவற்றை வாங்கும்போது ஆலங்கட்டி மழையில் யன்னலுக்கு வெளியே கைவிட்டதைப்போல குளிர் இறங்கியோடியது. இரண்டு நல்ல கரியநிறக் கற்கள் மற்றவை பசலையான வெள்ளைநிறக் கற்கள். யாருடையதோ முழியைப் பிடுங்கிக் கைகளில் எந்தியிருப்பதைப்போல் ஒரு பிரமை எனக்கு. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  ஒருமுறை வாப்பாவின் கைகளில் இருந்துகொண்டு, பாம்பாட்டி ஒருவன் வைத்திருந்த பாம்பின் உடலை பயபக்தியுடன் தொட்டுப் பார்த்தபோதிருந்த பாம்பு தேகத்தின் மென்மையை அந்தக் கற்கள் பழித்தன. அந்தப் புதிய கொக்கான் கற்களின் ஸ்படிக தேகம், உடல் முழுக்கப் பரவிக் கிளர்ந்தது. வாப்பா கற்களை ஆராயும் தன் செல்லமகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். வாப்பாவின் கண்களில் நான்தான் பரவியிருந்தேன்.

அதற்குப் பிறகு, கணக்குக் கொப்பியும் கடை விவரங்களும் என்னுடைய மேற்பார்வைக்கு வந்தே வாப்பாவிற்குப் போயின. அப்போது நான் சாதாரண தரத்திற்குத் தோற்றியிருந்தேன். அவை  நோன்பு நாள்கள். கிளியண்ணன் புலிகளிலிருந்து பிரிந்த ஆயுதக் குழுவினரால்  நகர மத்தியில் பட்டப்பகலில் வைத்து சுடப்பட்ட தகவல் வந்தது. ஏன் எதற்கென்று யாரும் சொல்லவில்லை. அப்போது, நாங்கள் எனக்கு மூத்தவளான பர்ஹாவின் திருமணப் பேச்சுகளில் இருந்த சமயம். அடுத்த நாள் பேப்பரில், கிளியண்ணன் வீதியில் சுருண்டுகிடக்கும் படம். அதில் அவருடலின் அருகில் அவருடைய மகள் நெஞ்சிலறைந்து கதறிக்கொண்டிருக்கும் காட்சியும். அதையொரு செய்தியாகக் கேள்விப் பட்டபோது எழுந்த அந்தர உணர்வு அந்தப் பத்திரிகைப் படத்தைப் பார்த்ததும் உள்ளே முகிழ்ந்து வெடித்தது. கட்டிலில் கிடந்து அழுதேன். அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னுடைய கொக்கான் கற்களை எடுத்து அருகில் பரப்பி, அதன் குளிர்ச்சி மீது விரல்களைப் பரப்பிக்கொண்டேன். வாப்பா, சாவு வீட்டுக்குப் போய்வந்திருந்தார். வாப்பா, இரண்டு மூன்று நாள்களாக இறுகிப்போய்தான் இருந்தார். பர்ஹான் நானாவிடம் கிளியண்ணனை திரும்ப வேலைக்கு வரும்படி சொல்லி விட்டிருக்கிறார். பர்ஹான் நானா கேட்டதற்குத் தீர்க்கமாக மறுத்திருக்கிறார் கிளியண்ணன். வாப்பாவின் கண்களில் தான் இனி எப்படி முழிப்பது என்று கேட்டிருக்கிறார். வாப்பாவுடன் சாவு வீட்டிற்குப் போய் வந்த பர்ஹான் நானா,  உணர்ச்சியற்றக் குரலில் இதைச் சொல்லும்போது கிளியண்ணண் என்னைத் தூக்கி இரும்புச் சலாகைகளுக்கு மேல் போட்ட மெத்தையில் இருத்தும் காட்சி எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. கொக்கான் சத்தமெழுந்து நெஞ்சுச் சுவர்களில் மோதியது.

“கொக்கான் சத்தம் தரித்திரமெண்டு சொல்லுவினம் மைமி...”

கிளியண்ணன் வேலையிலிருந்து போய் வேறு கடைகளில் நிற்கக் கேட்டிருக்கிறார். விஷயம் பரவிவிட்டிருக்க யாரும் அவருக்கு வேலை கொடுக்கவில்லை. புலிகளுக்கு ஏதோ கடத்திக்கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அதனால்தான்  ‘இனம்தெரியாத ஆயுததாரிகள்’ என்று பத்திரிகைகள் சொன்னவர்களால் சுடப்பட்டிருக்கிறார். எனக்கு இந்த ஆயுதம் அரசியல் எல்லாம் தூரமானவை. ஆனால், சாவு மட்டும் அங்கிருந்து ஓடி வந்து எனக்கு பக்கத்தில் உட்கார்ந்துகொள்கிறது. தொண்டைக்குளிருந்து முளைத்த தையல் ஊசி அப்படியே ஓடியோடி உள்ளே தைக்கைத் தொடங்கியது.

அன்றைக்கு என்னுடைய உம்மாவும் சகோதரிகளும் என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு நான் யாரோ ஒருவர் செத்துப்போனதற்கு அழுது கொண்டிருப்பது அத்தனை ஆச்சர்யமான ஒன்றாகயிருந்தது.

வீட்டிற்கு வந்தபோது இவரின் முகம் சரியில்லை. வாப்பாவின் கடையைக் குத்தகைக்குக் கொடுப்பதானால் தன்னிடம் தரும்படி வாப்பாவைக் கேட்கச் சொன்னார். கடை விஷயங்கள் எல்லாம் எனக்கும் தெரியும் என்பது அவருக்கொரு பெரிய அதிர்ச்சிதான். அதுவும் நான் தரையில் உட்கார்ந்து கணக்கு போட்டுக்கொண்டே கடை விசயங்களை வாப்பாவிடம் கேட்டுக் கேட்டு குறை நிறைகளைச் சொல்லும்போது ஆடித்தான் போனார். நான் இடைக்கிடை கடைக்கண்ணால் இவரைக் கவனித்திருந்தேன். எனக்குள் ஒரு பெருமை. நானொரு கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட, தான் நினைத்தது போன்றதொரு மனைவி என்று அவருக்கிருந்த திருப்தியை நான் உடைத்துவிட்டிருந்தேன். அன்றைக்குப் பிறகு அவருடைய ஒவ்வோர் அசைவிலும் தன்னை உணர்த்திக்கொண்டேயிருந்தார்.

மட்டந்தட்டல்கள், குத்தல்கதைகள். குறிப்பாக என்னுடைய வாப்பாவைத் தாக்கிப் பேசும்போது நான் காயப்படுவதைக் கண்டுபிடித்துவைத்திருந்தார். போதாத குறைக்கு வாப்பா, ‘கடையைக் குத்தகைக்குத் தர முடியாது’ என்று சொல்லிவிட்டார்.  இவருக்குக் கொடுத்தால் அக்காக்களின் மணவாளர்கள் சர்வநிச்சயமாகப் பிரச்னை செய்வார்கள். வாப்பாவிற்குக் கடையைக் கைமாற்றுவதில் துளிகூட விருப்பம் இருக்கவில்லை. பழைய மந்திரக் கதைகளில் வருவதைப்போல எங்கோ ஏழு கடல் ஏழு மலை தாண்டி, பாம்புப் புத்துக்குள் இருக்கும் கறையானின் வயிற்றில் செரிமானமாகாமல் கிடக்கும் மணல் துகளில் வைக்கவேண்டிய வாப்பாவின் உயிர், கடையாகத்தானிருந்தது.

நான் வீட்டைவிட்டு வெளியே போவதில்லை. முன்பு என்னுடைய கால்களின் அடிப்படை வரைபடம், வீடு - பள்ளிக்கூடம் - கடை என்றிருந்தன. திருமணப் பேச்சு தொடங்கியவுடனேயே வாப்பா பள்ளிக்கூடத்தை நிறுத்திவிடும்படி சொல்லிவிட்டார். ஏற்கெனவே எனக்கு எல்லா நடைமுறைகளும் தெரிந்திருந்தன. எனக்கு முன் நான்கு  அக்காக்கள் இருந்தார்களே. முன்னரே வடிவமைக்கப்பட்ட அதே நடைமுறைகள். எனக்குக் கிடைத்த - கடைக்குப் போவது, கணக்குப் பார்ப்பது, வேற்று மனிதர்களுடன் கதைப்பது, என்பதெல்லாம் வாழ்கையில் ஒரு புரட்சிதான். ஆமாம், நான் அதை அப்படித்தான் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், நான் அதை யாரிடமும் சொல்ல முடியாது. வாப்பாவிடம்கூட.

இவருக்கு நிரந்தரமாக என்னைத் தோற்கடித்துக் கலைத்துவிடும் விருப்பமில்லை. இவருக்கு என்னை தினமும் தண்டிக்க வேண்டும். மீண்டும் மீண்டும்  “பொம்பிளை பிள்ள மாரி இருக்கியா” என்று சொல்லிக்கொண்டே ஏதாவது சொல்ல வேண்டும். அடுத்தடுத்த வீடுகளில் உள்ள சகோதரிகள் வீட்டிற்குக்கூட முன்அனுமதி வாங்கித்தான் தெருவில் இறங்கலாம். வாப்பா வீட்டிற்குப் போவதென்றால் இவரிடம்தான் போக வேண்டும். ஆச்சர்யம் என்னவென்றால், இதை அவர் ஒருநாள்கூட எனக்குச் சொன்னதே இல்லை. ஆனால், அதை ஒரு நம்பிக்கையாக ஒரு ஆயிரம் வருடத்துச் சடங்காக நானே நம்பிவிடும்படி செய்திருந்தார்.

பகலில் (அநேகமாக காலையில் சாப்பாட்டு முதல்) ஏதாவதொரு குத்தல் கதை சொல்லிவிடுவார். நான் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன், போய்விடுவார்.

மதிய உணவைச் சமைத்த பிறகு,  தொலைக்காட்சி சலித்துப்போய் காட்சிகள் அப்படியே உறையும். சத்தம் கேட்காது  வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் பதுங்கியிருக்கும் மெளனம் வந்து எல்லாப் பக்கங்களிலும் உட்காரும். அப்போதுதான் நான் இவற்றையெல்லாம் நினைத்துக்கொள்வேன். கடையை, வாப்பாவை, கிளியண்ணனை, கொக்கான் கற்களை, கடைசியாக இவரை, கடைசியாக இவர் சொன்ன சீழ் உலராத வார்த்தைகளை. அப்போதுதான் நான் அழுகின்ற நேரம். சிலநேரம் காலையில் சொன்ன வார்த்தைகள் கண்ணீரில் நீர்த்துப்போயிருக்கும். பெரும்பாலும் அவருடைய வார்த்தைகளும் காரணகாரியங்களும் அவ்வளவில் அணைந்து போக முடியாத கங்குகள்தான். 

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்இரவு, பகலைவிட பயங்கரத்தைக் கொடுக்கும் ஒன்று. எரிந்துகொண்டிருக்கும் வார்த்தைகளை எடுத்து எங்காவது வைத்துவிட்டு நான் இவருக்கு இணங்க வேண்டும். இல்லையில்லை நான் இணங்கக் கூடாது. நான் கோபமாகத்தான் இருக்க வேண்டும். அவர் சமாதானம் செய்வார், பரிவாகப் பேசுவார், நம்முடைய குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறோம் என்பது வரை அவரின் குழைவான பேச்சு நீளும். நான், இதெல்லாம் எதற்குச் செய்கிறார் என்று தெரிந்திருந்தாலும் மெள்ள மெள்ள சமாதானமடைவதைப்போல சமாதானமடைய வேண்டும். ஆச்சர்யமாக அந்தக் கச்சிதமான இணங்கல் நடைமுறைகளையும் என்னுடைய அன்றாட பழக்கத்தைப்போல எனக்கு வழங்கப்பட்ட பெண்ணியல்பைப்போல ஏற்றுக்கொண்டும் விட்டேன். எனக்குச் சிரிப்பாக வருகிறது.

என்னுடைய கொக்கான் கற்கள், மீன் தொட்டியிலிருந்தன. தினமும் அவற்றை சின்ன வலையினால் நீர் கலங்கிவிடாமல் கோலி எடுத்து, பக்குவமாகத் துடைத்து, பிறகு தரையில் கால்களை மடித்து உட்கார்ந்து பெரிதாகப் பாடிக்கொண்டே வெட்டுவேன். எப்போதாவது தங்கை வருவாள். அவளுக்கு அந்த விளையாட்டு சுத்தமாகப் பிடிபடவேயில்லை. நான் விசித்திரமாகப் பாடிப் பாடி கற்களை ஏந்தி விளையாடுவதைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பாள். வீடு முழுவதும் கொக்கான் சத்தம் கேட்கும். கிளியண்ணன் சொன்ன தரித்திரமாவது வீட்டுக்குள் வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தால் பரவாயில்லை.

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்

ஒருநாள் இரவு, இவர் வந்தவுடன் நன்றாக உறங்கிப்போய்விட்டார். எனக்கு தூக்கம் பிடிக்கவே இல்லை. படிகளில் இறங்கி கீழே வந்தேன். ஹோலில் மீன்தொட்டி மட்டும் வெளிச்சத்திலிருந்தது. ஒரு துண்டுக்கடல். கைகளைவிட்டு என்னுடைய கோல்டு ஃபிஷ்களைப் பயமுறுத்தப் பார்த்தேன்.  அவை, நான் பயமுறுத்துகிறேன் என்று தெரியாமல் சிநேகமாகக் கைகளைக் கடித்து விளையாடத் தொடங்கின. நீரைக் கைகளால் அளையும்போது ஒளி, திரவமாய் கைகளில் வழியும். கொக்கான் கற்களில் கையைப் பதித்து ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்தேன், நீருக்குள் அவை ஆச்சர்யமாகச் சூட்டுடன் இருந்தன. பொறுக்கி வெளியில் எடுத்துக் கைகளில் ஏந்தினேன், பழையபடி குளிர்ச்சி பரவியது. மீண்டும் தொட்டிக்குள் போட்டு தொட்டுப் பார்த்தேன், சுட்டது. உடலில் பரவசமேறத் தொடங்கியது. தீரத் தீர மீண்டும் மீண்டும் கற்களை வெளியில் போட்டும் நீருக்குள் மூழ்கடித்தும் கொண்டிருந்தேன். கால்கள் உழைந்தன. புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்துவிட்ட உணர்வு. அப்படியே கற்களை எடுத்து துணியில் பரப்பி, வழமைபோல அவற்றைத் துடைத்துக்கொண்டு அப்படியே நடு ஹோலில்  மீன்தொட்டியிலிருந்து வரும் மெல்லிய வெளிச்சத்தில் - இருட்டில் அமர்ந்தேன். கொக்கான் வெட்டத் தோன்றவில்லை. அர்த்தராத்திரியில் கொக்கான் சத்தம் காதைக் கிழிக்கும். வேறு வினையே வேண்டாம். கற்களை எடுத்து நிலத்தில் பரப்பி முக்கோணமாக வைத்தேன். பிறகு சதுரமாக வைத்தேன். பிறகு செவ்வகமாக ஒவ்வொரு மூலைக்கும் கற்களை அடுக்கி அடுக்கி வைத்துப் பார்த்தேன். அந்த மெல்லிய ஒளியில் கற்கள், பூனையின் கண்களைப்போல ஜொலித்துக் கொண்டிருந்தன. செவ்வகத்திற்கு மாற்றிய கற்களைத் திரும்பத் தொடப்போனேன். கைகளுக்குக் கீழே அசாதாரணக் குளிர் பரவியது. வீட்டுக்கு முன்னால் வரும் ஐஸ்பழ வண்டிக்காரனின் பெட்டிக்குள் சட்டென எட்டிப் பார்க்கும்போது ஒரு குளிர்ப்புகை வந்து முகத்தில் மோதுமே, அப்படி ஒரு குளிர் வந்து மோதியது. நான் கைகளை வெடுக்கென்று இழுக்க, கற்கள் உருவாக்கிய செவ்வகம் ஒரு கதவைப்போல தரையில் திறந்துகொண்டது. பயந்தே போனேன். அந்தச் சின்னக் கதவுக்குள்ளிருந்து குளிர்ச்சியும் வெள்ளொளியும் வந்துகொண்டிருந்தன. எனக்கு குரல் தொண்டைக்குள் திரண்டு கட்டிக்
கொண்டது. அதிர்ச்சியில் விக்கித்துப் போனேன். மெள்ள தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எட்டிப்பார்த்தேன்.  முகம் குளிர்ந்தது. வெள்ளையாகச் சற்றுக் கண்ணைக் கூசும் வெளிச்சம் கண்களில் அறைந்தது. இன்னும் குனிந்து நெருங்கினேன். தரை ஈர்ப்பிழந்த உணர்வு, சுதாகரிக்கும் முன்னே உடல் ஒரு பாம்பைப்போல வழுக்கி தலைகுப்புற உள்ளே நழுவிப்போனேன். 

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்

அப்படியே தடுதாளிப்பட்டு காற்றில் விழும் உணர்வு.  மென்மையான மெத்தை ஒன்றின் மீது மோதினேன். நன்கு பரிச்சயமானது அந்த மெத்தை. எழுந்து பார்த்தேன். உணர்ந்தது சரிதான், அது கடையிலிருக்கும் என்னுடைய மெத்தைதான். நானிருப்பது கடையில்தான். ஆனால், கடையில் யாருமில்லை. ஒருவித வெள்ளை ஒளி மட்டும் பரவியிருந்தது. வாப்பாவின் மேசை சுத்தமாகத் துடைக்கப்பட்டு கணக்குக் கொப்பிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. வாப்பாவின் கதிரையும் வெறுமையாகக் கிடந்தது. மெத்தையின் உயரத்திலிருந்து நழுவி இறங்கினேன். குளிரில் தேகம் லேசாக நடுங்கியது. கடைக்கு வெளியில் வந்தேன். எதிரில் வீதியோடியது, வாவி குளிர்ந்துபோய் பனிமூட்டமாக, அந்தம் தெரியாமல் குமைந்திருந்தது காட்சி. எந்த மனிதர்களோ வாகனங்களோ முக்கியமாக வானமோ இல்லை. என்னுடைய கண்ணுக்கு எட்டுமளவு வாவியும் நிலமும் ஆளரவமற்ற நகரத் தெருக்களும் பரவிக்கிடந்தன. வாப்பா என்னை அழைப்பதுபோலிருந்தது. திரும்பி வேகமாக ஓடிவந்து என்னுடைய மெத்தையில் ஏறி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன். என்னுடைய தலையை யாரோ தடவினார்கள். செல்லக்கிளியண்ண னின் குரல் கேட்டது.

“மைமி...”

ஏறக்குறைய அலறிவிட்டேன். இவர் பாய்ந்து எழுந்து என்னை உலுப்பினார். கனவுதான். தண்ணீர் கொஞ்சம் எடுத்துத் தந்தார்.  விவரம் விசாரித்தார், “ஏதோ கெட்ட கனவு” என்றேன். படுக்கச்சொல்லி விட்டு, நான் உறங்கும் முன்னரே உறங்கிப்போனார்.

தூக்கம் பிடிக்கவில்லை, அது கனவைப்போலத் தோன்றவேயில்லை. கட்டிலிலிருந்து இறங்கி மீண்டும் கீழே நடந்தேன். மெல்லிய ஒளிக்குள் புகுந்து தொட்டியை நெருங்கி கொக்கான் கற்களைப் பார்த்தேன். அப்படியே இருந்தன. கையை விட்டுப் பார்த்தேன் சூடு பரவியது. எடுத்தேன். தரையில் அடுக்கி மீண்டும் முக்கோணம், சதுரம், செவ்வகம் சட்டென்று ஐஸ்கீறீம் பெட்டியின் கதவு திறந்துகொள்ள, மெத்தையில் குப்புற விழுந்தேன். இப்போதுதான் உண்மையில் பயந்து போனேன். அலறிக்கொண்டே அப்படியே மெத்தையில் குப்புறக் கிடந்து கண்களை இறுக்க, இவர் உலுப்பி எழுப்பினார்.

இவருக்கு சினம் வந்துவிட்டது அதிகாலை மூன்று மணிக்கு அவரின் நித்திரையைக் கெடுத்துக்கொண்டிருந்தேன். “வீட்டிலிருந்து கண்ட பேய்ப்படங்களைப் பார்க்காதே” என்று ஏசிவிட்டு உறங்கிவிட்டார். நான் பயத்தில் வயதாகித் தளர்ந்தவொரு  ஜின்னைப்போல  அப்படியே முழங்காலை மார்போடு அழுத்திக் கட்டிக்கொண்டே சுவரில் ஒடுங்கிப்போயிருந்தேன். விடியும் வரை நான் உறங்கவும் இல்லை அசையவும் இல்லை. காலையில் எழுந்து ஹொலை தயக்கமாகக் கடந்து தேநீர் தயாரிக்க குசினிக்குப் போனேன். தொட்டியைப் பார்க்கத் திராணியில்லை.அழைப்பு மணியடித்தது. கதவைத் திறந்தேன், தங்கை நொறுங்கிப்போய் நின்றிருந்தாள்.

“அக்கா வாப்பா மெளத்தாயிட்டார்.”

ங்கை பஷீராவுக்குத் திருமணம் நடக்கும்போது, வாப்பா மெளத்தாகி நான்கு மாதமாகியிருந்தது. ஏற்கெனவே வாப்பா பார்த்திருந்த வரன்தான். கடை குத்தகைக்கு விட்டதில் வந்த பணத்தில் அவளுக்கு கொழும்பில் ஒரு பிளாட் வீடு வாங்கப்பட்டது (அவளுடைய கணவர் கொழும்பில் ஒரு வங்கியில் மேலாளராக இருந்தார்). எங்களுடைய கடைக்குட்டி எங்களுடன் இருக்கப்போவதில்லை. அவள் உம்மாவையும் தன்னுடன் கூட்டிப்போனாள். எங்களுடைய பூர்வீக வீடு, வாடகைக்குக் கொடுக்கப்பட்டது. அதில்  வரும் பணம் எனக்கு வருவதாயிருந்தது. வாப்பா அப்படித்தான் உம்மாவிடம் சொல்லியிருக்கிறார். இதற்கிடையில் அடிக்கடி நான் கொக்கான் கற்களை அடுக்கி அடுக்கி எங்களுடைய கடைக்குப் போய் வந்தேன். நகரத்தில் எங்களுடைய கடையைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அதை உடைத்து மாடியாக மாற்றிக் கட்டினார்கள். இரண்டே மாதத்தில் அங்கேயிருந்த எங்களுடைய கடை இடிக்கப்பட்டது. ‘அமைரா ஸ்ரோர்ஸ்’  என்ற பெயர் மட்டும் மிச்சம்வைக்கப்பட்டது, அது என்னுடைய இரண்டாவது தமக்கையின் பெயர். அவள் பிறந்தபோதுதான், வாப்பா பார்த்துக்கொண்டிருந்த தபாற்கந்தோர் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வந்து கடையொன்றை சிறியதாக ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாகப் புகழ் பரவி  ‘அமைரா ஸ்ரோர்ஸ்’ ஒரு வர்த்தக அடையாளமாக மாறிவிட்டது. எங்களுடைய கடை அவ்வளவு விலைக்குப் போக அந்தப் பெயரோடு அது கொண்டிருந்த புகழும் நீண்டநாள் வாடிக்கையாளர்களும்தான் காரணம். நான் அதற்குப் பிறகு, கடையைக் கடந்து இவருடன் காரில் போகும்போது அந்தப் பக்கம் பார்க்கவே மாட்டேன். கடைக்குப் போக வேண்டுமென்றால், இரவில் கற்களை அடுக்கி கதவைத் திறந்து  போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருவேன்.

கொஞ்ச நாள்களில் நான் கடையையும் எங்களுடைய நகரம் மொத்தத்தையும் சுற்றி வந்தேன். நான் இதுவரை போகாத இடங்களுக்கு எல்லாம் போனேன். பயமில்லாமல். நீதிமன்றத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசைகளில் ஒன்று. குற்றவாளிக் கூண்டில் நின்று பார்த்தேன்;  நீதிபதியின் இருக்கையில் இருந்து யாருமற்ற நீதிமன்றம் அதிரச் சிரித்தேன்; தீர்ப்பு சொன்னேன்; விசித்திரமான நாள்கள் அவை. மாலையில் வீட்டுக்கு வரும்போது, சந்தோஷத்தில் பூரித்துப்போயிருக்கும் என்னுடைய  கண்களையும் முகத்தையும் பார்த்து இவர் துணுக்குற்றார். தினமும் வரும்போது அழுத கறை இறங்காமல் சோர்ந்துபோய் ஒரு புராதன பேயைப்போல நகர்ந்து கொண்டிருப்பவள் இவ்வளவு பூரிப்பிலிருக்
கிறாள்... போதாதகுறைக்கு காரில் போகும்போது நான் வாயை வைத்துக் கொண்டிருக்காமல் அவருக்கு சுலபமாகப் போகும் வழிகளையும் எந்தக் கடையில் எந்தச் சாமான் இருக்கும் என்பதையும் சொல்லிக்கொண்டிருந்தேன். அவரின் முகத்தில் தெரிந்த அந்த பேரதிர்ச்சியில் எனக்கொரு திருப்தி. தன்னுடைய போன் தொலைந்து விட்டதாகச் சொல்லி என்னுடைய போனை வாங்கி வைத்துக் கொண்டார். நான் எந்த அதிர்வையும் முகத்தில் காட்டாமல் அதை அவரிடம் கொடுத்தது இன்னும் அவரை துணுகுக்குறச் செய்தது. உண்மையில் நான் மகிழ்வாக இருந்தேன். கடையில் வாப்பாவையும் கிளியண்ணனையும் கற்பனை செய்து கொள்வேன். அவர்களின் குரல்கள் கேட்கும். அவர்களுடன் பேசுவேன். உண்மையில் வாப்பா இருந்த காலத்தில் கடையில் கழித்த நாள்களைவிட இன்னும் பரவசமாயிருந்தேன்.

ஒருநாள் பகலில், இவருடைய கார் வந்து நின்றது. அப்போதுதான் சமைத்து வைத்துவிட்டு கொக்கான் கற்களை எடுக்கலாம் என்று மீன்தொட்டியை நோக்கிப் போனேன். நல்லவேளை கொஞ்சம் பிந்தியிருந்தால் என்னவாகியிருக்கும். நெஞ்சு விறைக்க ஓடிப்போய் கதவைத் திறந்தேன். அவரின் காரின் பின்னால் ஒரு ஆட்டோ வந்து நின்றது. இரண்டு இளைஞர்கள் வந்திருந்தார்கள். கைகளில் வொயர்கள், சாவிப்பெட்டிகள், வேறுசில காட்போட் பெட்டிகள் எல்லாமிருந்தன.

விவரம் விசாரித்தேன், வீட்டிற்கு சிசி டிவி கேமரா பொருத்தப் போவதாகச் சொன்னார். நான், “ஏன்?” என்றேன். காதுக்குள் குனிந்து, “உன்னிடம் யாரெல்லாம் வருகிறார்கள் என்று பார்க்கப்போகிறேன்” என்றார். சுருக்கென்று தைத்தது. ஆள்கள் நின்றதால்  ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. குளியலறைக்குப் போய் கதவை மூடிக்கொண்டு விக்கினேன். நெஞ்சில் இன்னும் ஏறிய ஊசி தட்டுப்பட்டுக் கொண்டேயிருந்தது. அவர்கள் வேலையைத் தொடங்கினார்கள். வீட்டைச் சுற்றி கேமரா பொருத்தப்பட்டது. ஹோலிலும் அறை வாசல்களிலும்கூட. நான், “ஹோலில் எதற்கு?” என்று கேட்டேன். “சும்மாயிரு” என்று அடக்கினார். நான் போய்ப் படுத்துக்கொண்டேன். வாப்பாவின் வீடு இடிந்துகொண்டிருந்தது. அப்படியே உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலையில்தான் எழுந்தேன். வீடு முழுக்க ரில்லர்கள் வேலைசெய்ததால் உடைந்த சுவர் துகள்கள், ஆணிகள், வொயர்கள், பெட்டிகள் என இறைந்துகிடந்தன. இவர் வேலைக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். ஹோலில் ஒரு பெரிய புது டிவி மாட்டப்பட்டிருந்தது. அதில் வாப்பாவினுடைய வீடு பல கோணங்களில் தெரிந்தது. ஹாலும் நானும்கூட. ஹோலின் மூலையில் ஒரு முகத்தை நீட்டிக்கொண்டிருந்த சிசி டிவி கேமராவைப் பார்த்தேன். நடுவிலே ஒரு கேமரா, அதன் இரு பக்கங்களிலும் இரண்டு சென்சார்கள் கண்களாக முழித்துக் கொண்டிருந்தன. உற்றுப் பார்த்தேன். அவை, அதே இவருடைய கண்கள்தாம். சூரியனைப் பார்ப்பதுபோலக் கொஞ்சம் பூஞ்சிப்போய்  அடியில் கொஞ்சம் துயர் உறைந்த கண்கள். அவற்றை முறைத்துப் பார்த்தேன். அழுகை, கண்களைக் கிழித்திறங்கப் பார்த்தது. கற்கள், மீன் தொட்டிக்குள் அமைதியாகக் கிடந்தன. கற்களை எடுத்துக்கொண்டு அறைக்குள் ஓடினேன். கதவைத் திறந்து கடைக்குள் போய் என்னுடைய மெத்தையில் கிடந்து அழுதேன். நிரம்ப நேரம் அறைக்குள்ளேயே இருக்க முடியாது. ‘அவ்வளவு நேரம் அறைக்குள்ளேயே என்ன செய்தாய்?’ என்று கேட்பார். யாருக்குத் தெரியும், தன்னுடைய போனில் இப்போதும் இவர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். உடலில் இருந்த ரோமங்கள் எல்லாம் நுண்புழுக் களாகிக் கூசியது. அறைக்குத் திரும்பினேன். கற்களை ஒழித்துவிட்டு வெளியே வந்து வீட்டை ஒழுங்குபடுத்தினேன். அழுது அழுது தொண்டை கட்டி தடிமனாக்கி
யிருந்தது. மூக்கு ஒழுகச் சீறினேன்.

ஏழெட்டு நாள்கள் ஓடின. பெரும்பாலும் அறையிலேயே அடைந்துகிடந்தேன்.  கடைக்குப் போகக்கூட மனமொப்பவில்லை. வீடு முழுக்க நடந்தேன். ஏதாவது வாசிக்க முடியுமா என்று பார்த்தேன். கண்கள் முதல் சொல்லுக்கே சலித்து விழுந்தன. அவரின் வார்த்தைகள்தான் தைத்துக் கொண்டிருந்தன. இப்போது கடைக்கு அழத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். வாப்பாவும் கிளியண்ணனும் வந்து தேற்றுவதுபோல் உணர்வு. இதையும் தாங்கத்தான் வேண்டும் என்றாகிவிட்டது. ஆனால், தலையை நிமிரும் இடமெல்லாம் அந்தக் கேமராக் கண்கள் தொடர்ந்து  வந்தன. ஆளரவமில்லா காட்டுக்குள் கொடும் மிருகமொன்றால் பின்தொடரப்படும் உணர்வு. கேமராக்களுடன் பழகிடவும் முடியவில்லை. அவை உயரத்தில் இருந்தன.

அவர் பரமதிருப்தியுடன் என்னுடைய வாப்பாவின் வீட்டில் என்னுடன் வாழ்ந்துகொண்டிருந்தார். அன்றைக்கு மதியம் சமைத்துவைத்துவிட்டு வந்து அபூர்வமாக டிவியைப் போட்டேன். பிரதேசத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று... செய்தியோடியது யாரோ ஒரு பெண்ணை போலீஸ்காரர்கள் விலங்குபோட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். கூடவே, இரண்டு பையன்களையும். அவளுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது. அப்படியே எழுந்து டிவியை நோக்கி ஓடிப்போனேன், அவள்தான். அதே ஒல்லியான, கறுத்த  கண்கள் இரண்டும் முகக்குழிக்குள் ஆழமாகப் புதைந்த முகம். கிளியண்ணனின் மகளேதான். இரண்டு பாடசாலை மாணவர்களுடன் ஒரு வீட்டில் அந்தப் பெண் பிடிபட்டிருப்பதாகச் செய்தி ஓடியது. விபச்சார சம்பவத்துக்குரிய கலாசார ஜோடனைகள் வேறு.

அப்போது அழைப்பு மணியடிக்க சிசி டிவியைப் பார்த்தேன். வெளியே அக்கா ஆயிஷா நின்றிருந்தாள். கூடவே அவளுடைய மூத்தமகள். என்னைவிட இரண்டு வயதுதான் அவளுக்குக் குறைவு. கதவைத் திறந்துவிட்டேன். கொண்டுவந்த பலகாரங்களைத் தந்துவிட்டு அக்கா தன் கண்களை டிவிக்கு மாற்றினாள். அந்தச் செய்தியை  ஒரு விளம்பரத்தைப் போட்ட பிறகு மீண்டும் இரண்டாவது முறையாகப் போட்டுக்கொண்டிருந்தனர்.

“ஐய்யோ பாவமடி மைமி இந்தப் பொண்ணு கஸ்ரத்தில கஞ்சா வித்துக்கொண்டு திரிஞ்சதாம்... பள்ளிக்கூடப் பெடியங்க ரெண்டு பேர் கஞ்சா கேட்டதெண்டு அங்கை கொண்டு போயிரிக்கி, யாரோ போலீஸுக்குச் சொல்லிவிட்டிருக்கான், போலீஸ் போய் விபச்சாரமெண்டு பிடிச்சிரிச்சி...”

அக்காவுக்கு அவளைத் தெரியாது. அவளுக்கு கிளியண்ணனையே தெரியாது. எனக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைந்தது. அக்கா போனதும்  கற்களை அடுக்கிக் கதவைத் திறந்து கடைக்குள் போனேன்.கிளியண்ணனின் குரலைக் காணவில்லை. அங்கே இருக்கவே முடியவில்லை. வாவிப் பக்கமாக நடந்துபோய் நீரில் கால்களை அழைந்துகொண்டிருந்தேன். ஜீப்பில் ஏறும் போதிருந்த அவளின் முகம், பல துண்டுகளாக வாவியின் நீர்மையில் மிதந்துவந்தது. கால்களை இழுத்துக்கொண்டு ஓடிவந்து கடைக்குள் புகுந்து மெத்தையில் ஏறிச் சுருண்டேன், தோலெரிந்தது.

மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. கிளியண்ணன் தலையைத் தடவிவிட்டுக் கொண்டிருந்தார். உடலெங்கும் அவரின் பரிவை உணர்ந்தேன். “மைமி...” என்ற அவரின் குரல் குழைந்தது.

வாப்பான்ர கொக்கான் கல்லுகள் - யதார்த்தன்இருப்புக்கொள்ளவில்லை. கொக்கான் கற்களை எடுத்து  ஒரு பையில் போட்டேன். அதற்கு முன் என்னுடன் நான் நிறைய கதைக்கவேண்டியிருந்தது. கற்களுடன் சேர்த்து துண்டுச் சீட்டொன்றை எழுதி அதற்குள் வைத்தேன். சுடிதார் ஒன்றை அணிந்து அதன் மேல் அபாயாவை நுழைத்தேன். ஹோலில் இருந்த நூலகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டேன்.  சிசி டிவியை நிமிர்ந்து பார்த்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினேன். நேராக நடந்து நகரத்திற்கு வந்தேன். நீதிமன்றம் நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனேன். என்னுடைய கால்களுக்கு அந்த வழியில் நல்ல பரிச்சயமிருந்தது. பொதுக் கழிப்பிடம் ஒன்றுக்குள் புகுந்து அபாயாவை அகற்றி, பையில் திணித்துக்கொண்டு சுடிதாருடன் வெளியே வந்தேன். உள்ளூர நடுக்கம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், கிளியண்ணனும் வாப்பாவும் கூடவேதான் வந்துகொண்டிருந்தனர். நேராக வழக்குக்கு கொண்டுவரும் கைதிகளை வைத்திருக்கும் இடத்திற்கு நடந்தேன். அவள் முகத்தை துவாய் ஒன்றினால் மூடிக்கொண்டு சுவர் ஓரம் சுருண்டு உட்கார்ந்திருந்தாள். கைகள் விலங்கிடப்பட்டிருந்தன. யாரும் அவளைக் கவனிக்கவில்லை. அவளே தன் பிரக்ஞையில் இல்லாதவள்போல் சுருண்டு சுவருக்குள் புதைந்திருந்தாள். காவலுக்கு நின்ற போலீஸ்காரர்கள் சற்றுத் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் கொஞ்சம் அருகில் போய் நின்றுகொண்டேன். பையில் கையைவிட்டு கற்கள் இருந்த பையை எடுத்தேன். பொலித்தீன் பையின் வழியே என்னுடயை உடலில் குளிச்சி பரவியது. அவளருகில் போனேன், கைகள் நடுங்கின. மெதுவாக அமர்ந்தேன், குளிர்ச்சி பரவி உடலெங்கும் விறைத்தது; நடுநடுங்கியது; சுடாகிக் கண்ணீர் வழிந்திறங்கியது. கற்கள் துடித்துக்கொண்டிருந்தன. கண்களை மூட, கடையின் விசாலமும் வாவியும் தெரிந்தன. திறந்து மீண்டும் மூடினேன். என்னுடைய வீடும் கேமராக்களும் முறைத்தன. உடல் விறைத்தது. அந்தப் பையை அவளுக்குக் கொடுத்துவிடலாம். யாரும் அவளைக் கவனிக்கவில்லை. அவள் அதை தனது உள்ளாடைக்குள் வைத்துக்கொள்ளலாம். பேப்பரில் அப்படித்தான் விவரமாக எழுதியிருந்தேன். அவள் அதை நம்ப வேண்டும், அவ்வளவுதான். ஏறக்குறைய எல்லாம் அற்றுப்போன பிறகு, ஏதோ ஒன்றைப் பற்றிப் பிடிக்க அவள் தயாராக இருப்பாள். ‘ஒருவேளை, அவள் தூக்கி எறிந்துவிட்டால்? ஒருவேளை அவளிடமிருந்து யாரும் பறித்துப் போட்டுவிட்டால்?’ அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. அந்த நினைப்பை ஏதோ ஒன்று உள்ளேயிருந்து ஊக்கப்படுத்தியது.

 ‘இதைக் கொடுத்துவிட்டு நீ என்ன செய்வாய்?’ என்ற குரல். மூச்சு முட்டிவிடும்போலிருந்தது. பக்கத்தில் சத்தம் கேட்டு மூடியிருந்த முகத்தை அவள் திறக்கப்போனாள். நான் சட்டென்று எழுந்து முகத்தைத் திருப்பிக்கொண்டேன். விறுவிறுவென எழுந்து நடந்தேன். அபாயாவை எடுத்து அணிந்துகொண்டு நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்தேன். வெய்யில் உக்கிரமாகி அபாயாவினுள் உருகிக்கொண்டிருந்தேன். வீட்டைத் திறந்து உள்ளே வந்து, பையை அப்படியே சோபாவில் எறிந்துவிட்டு தொப்பென்று சோபாவினுள் புதைந்து விழுந்தேன். முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு அழுதேன். கை குளிரேறி மரத்துப்போவதுபோல் உணர்வு.  கிளியண்ணனின் குரலும் மகளின் முகமும் கண்களின் இருட்டில் மிதந்து வர, கைகளைத் திறந்து இமைகளை உரித்து விரித்தேன். நேர் மேலே கேமராவின் முகம்... உற்றுப் பார்த்தேன். இப்போது அதற்கு வாப்பாவின் கண்கள்.

(‘கொக்கான் வெட்டுதல்’ என்ற விளையாட்டு, தமிழ்நாட்டில் ‘சொட்டாங்கல்’ என்று வழக்கிலுள்ளது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு