Published:Updated:

பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி? - செழியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி? - செழியன்
பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி? - செழியன்

சந்திப்பு : வெய்யில்

பிரீமியம் ஸ்டோரி

ழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இசை ஆர்வளர், இப்போது, சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘TO LET’ திரைப்படத்தின் இயக்குநர்...

பல்வேறு திரையிடல்கள், விருது விழாக்கள் என பயணத்திலேயே இருந்த செழியனிடம் ஒரு நள்ளிரவில் கேள்விகளை முன்வைத்தோம். அவரது இயல்பைப் போலவே வெளிப்பட்டன பதில்களும். 

பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி? - செழியன்

“படத்துக்கான கரு உருவான சந்தர்ப்பம் குறித்துச் சொல்லுங்கள்...”

“நம் படங்கள், ஏன் எளிமையாக இல்லை என்பது பல வருடங்களாக எனக்குள் இருந்த கேள்வி. நீங்கள் தொடர்ந்து உலக சினிமாக்களைப் பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியவரும். அந்த சினிமாக்களின் அடிப்படை எளிமைதான். கதை என்பது, வாழ்க்கையின் அன்றாடப் பிரச்னைகளிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். நமது சினிமாக்கள் அவற்றுக்கு நேர் எதிரானவை. நமது படங்களின் கதையை இயக்குவது ஒரு வில்லனாக இருக்கும். அந்த வில்லனை எவ்வளவு வலிமையாகச் சித்திரிக்க முடியுமோ அவ்வளவு சித்திரிப்பார்கள். அவனை வெல்வதுதான் நமது படங்களின் சமன்பாடு.

நண்பர்களின் கதை விவாதங்களில் பங்குபெறும்போதெல்லாம் இந்தச் சமன்பாடுதான் வேறுவேறு வழிகளில் சுற்றிச் சுற்றி வரும். முதலில் அறிமுகங்கள். ஒரு பிரச்னை, ஒரு காதல், பத்தாவது காட்சி பாடல், இருபதாவது காட்சி சண்டை என்று இடைவெளிவிட்டு யோசிக்க வேண்டும். இது மிகவும் சலிப்பான வேலை. 

பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி? - செழியன்அப்போது, விகடனில் உலக சினிமா எழுதிக்கொண்டிருந்தேன். தரமான சினிமாக்கள் பார்த்துக்கொண்டும் அவற்றைப் பற்றிப் படித்துக்கொண்டும் இருந்தேன். எளிய கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லும் பயிற்சி நம்மிடம் இல்லையா? நாம் சினிமா என்பதை, பிரபலமான நடிகர்கள் வழியே மட்டும்தான் யோசிக்கிறோமா? இப்படியாக யோசித்துக்கொண்டிருந்தேன். 2007-ல் ஒருநாள், எங்கள் வாடகை வீட்டைக் காலிசெய்யவேண்டிய கெடு தரப்பட்டது. வீடு தேடுகிற விநோதமான அனுபவம் தொடங்கியது. நல்ல வெயில்காலம். அடுத்த வீட்டைப் பார்க்க ஒரு நிழலில் காத்திருக்கும்போது, இதிலேயே ஒரு சினிமா இருக்கிறதே என்று தோன்றியது. அதுதான் தொடக்கம்.”

“மையநீரோட்ட சினிமாவுக்கேயான அம்சங்களிலிருந்து விலகி, ஒரு feature film-ஐ எடுக்க வேண்டும் என ஏன் நினைத்தீர்கள்?”

“மைய நீரோட்டம், எவ்வளவு அழகிய பிரயோகம். இதைக் கேட்டதும் எனக்கு அடித்துச் செல்லும் வெள்ளம் அல்லது சுழித்துக்கொண்டு ஓடும் நீரின் காட்சிகள் தோன்றுகின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? எதிர்ப்பதில்தானே சவால் இருக்கிறது.

நான் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றும்போது, பணத் தேவைக்காக பெயர் இல்லாமல் சில தொலைக்காட்சி  தொடர்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக் கிறேன். அவசர அவசரமாக ஒளியமைப்பு செய்யவேண்டும். அது நம் விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்காது. ஒரு வாரம்தான் வேலைசெய்தேன். பணம் கிடைத்தது. போதும் என்று வந்துவிட்டேன். ஆனால், நிறைவில்லாத வேலையைச் செய்த குற்ற உணர்விலிருந்து வெளியில் வர ஆறு மாதங்கள் ஆயின. ஒரு காட்சியின் ஒளி குறையாக இருந்தால் என்ன? அதை எத்தனை பேர் கவனிப்பார்கள்? எனக்குத் தெரியுமே. ஒரு கட்டுரையில் எழுத்துப் பிழையைத் தெரிந்தே உங்களால் அனுமதிக்க முடியுமா? இது ஒருவிதமான பைத்திய நிலைதான். 

பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி? - செழியன்

கலை மிக வலிமையானது, நீங்கள் நுண்உணர்வுகொண்ட படைப்பாளராக இருந்தால் அவ்வளவுதான்! தொடர்ந்து போர்க் காட்சிகளைப் படம்பிடித்த ஜான் ஐசக் கருணாகரனின் மனநிலை பிறழந்தது. மொஸார்ட் அவரது 35வது வயதில் requiem எழுதப் பணிக்கப்படுகிறார். requiem என்பது, மரணத்தில் இசைக்கப்படும் இசை. அதை எழுதி முடித்து, மொஸார்ட் இறந்துவிடுகிறார். ஈடுபாடு என்பது அதுதான். ‘நெருப்பு என்று சொன்னால், வாய் சுடவேண்டும்’ என்கிறார் லா.ச.ரா. மேலோட்டமாக எதைச் செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. மைய நீரோட்டத்தில் உங்கள் சுயத்திற்கு அனுமதி இல்லை. சமரசம் செய்யவேண்டும். கலையில் தற்கொலை என்பது சமரசம்தான். ஒரே ஒருமுறை உங்கள் சுயத்தை நீங்கள் கொல்லவேண்டும். அது என்னால் முடியாது.

இன்னொரு உண்மை என்னவென்றால், இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோது, தயாரிப்பாளர்கள் யாரும் முன் வரவில்லை. என் சோர்வைப் பார்த்து என் மனைவி பிரேமா, ‘நாமளே தயாரிக்கலாம் செ...’ என்று சொன்னதுதான் இதன் தொடக்கம். என்னை நம்புகிற தயாரிப்பாளருக்கு, நான் நேசிக்கிற சினிமாவுக்கு, நான் உண்மையாக இருக்கவேண்டும். நண்பன் ‘உயிரெழுத்து’ சுதீர் செந்திலிடம்  சொன்னேன், ‘எடுடா... பாத்துகிருவோம்’ என்றான். செய் அல்லது செத்து மடி என்பதுதான் விளையாட்டின் குரூர விதி என்பது எனக்கு மட்டுமே தெரியும். விளையாட்டைத் தொடங்கிவிட்டேன்.

படத்தைப் பார்த்துவிட்டு ‘எவ்வளவு தைரியம் உங்களுக்கு?’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். உலகத்தில் எங்கு படம் எடுக்க வேண்டுமென்றாலும் தொழில்நுட்பமும்,  பணமும் இருந்தால் போதும். ஆனால், தமிழில் மட்டும்தான் படம் எடுக்க தைரியமும் தேவைப்படுகிறது. ஆனால், தமிழில்தான் வீரக்கதைகள் ஏராளமாக இருக்கின்றன. புலியை முறத்தால் விரட்டியிருக்கிறோம். வெள்ளைக் காரர்களின் பீரங்கிகளை எதிர்த்து நின்றிருக்கிறோம். பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு, கேமராவுக்குப் பயந்தால் எப்படி? சினிமாதானே எடுக்கிறோம்... கதைசொல்லப் பயப்படலாமா தோழர்?”

“ஒரு படத்தில் இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் இருப்பது படத்திற்கு பலமா? பலவீனமா? ஏனென்றால், ஒரு மாற்றுக்கருத்து, இன்னொரு பார்வை அங்கு இல்லாமல் போய்விடுகிறது அல்லவா?”

“இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும்  இருப்பதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. சத்யஜித் ரே, அவரது படங்களில் வேறு ஒளிப்பதிவாளரை வைத்துக்கொண்டார். ஆனால், காட்சிக்கான ஒளியமைப்பை அவரே பார்த்துக்கொண்டார். பெர்க்மன், நிக்வெஸ்ட் மாதிரி ஒரு கூட்டு அமைந்தால் அதிர்ஷ்டம்தான். 100 நாள்களில் எடுக்கிற ஒரு படத்தை, அதே தரத்துடன் 40 நாள்களில் என்னால் எடுக்க முடியும். அதற்கான நுட்பங்களில் எனக்குப் பயிற்சி இருக்கிறது.  ‘டு லெட்’ படத்திற்கு அந்த அனுபவமும் வேகமும் அவசியமாக இருந்தது. அடுத்தடுத்த படங்களில் வேறு ஒளிப்பதிவாளரைத்தான் பயன்படுத்துவதாக இருக்கிறேன்.”

“படத்தில் குழந்தைகளின் மனஉலகம் மிக வலுவாகவும் அழகியலாகவும் பதிவாகியிருக்கிறது. ஒருவகையில் அது தத்துவார்த்தக் குறியீடுகளாகவும்கூட சில இடங்களில் வெளிப்படுகிறது. இதைத் திரைக்கதையில் ஏற்கெனவே தீர்மானித்திருந்தீர்களா?”

“ஒரு நல்ல படத்தில் நிகழ்கிற அனைத்தும் ஏற்கெனவே எழுத்திலோ மனதிலோ எதோ ஒருவகையில் திட்டமிடப்பட்டவைதான். தற்செயலாகச் சில அற்புதங்கள் நிகழும். அதை அனுமதிப்பதற்கு நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். அவ்வளவுதான். 

பீரங்கிகளை எதிர்த்து நின்றுவிட்டு கேமராவுக்கு பயந்தால் எப்படி? - செழியன்

‘டு லெட்’ படத்தில், குழந்தையின் உலகம் என்பது திரைக்கதையில் இருந்ததுதான். ஆனால், காகிதத்தில் இருப்பதெல்லாம் காட்சியில் வருமா? அதுதானே சினிமாவின் அடிப்படையான சவால். நடிப்பதாக இல்லாமல் அது காட்சிக்குள் நிகழ்வதாக மாறவேண்டும். இந்தப் படத்தில் நடித்த தருணுக்கு நான்கு வயது. அவனுக்கு ‘இப்படி நடி’ என்று சொல்லிக்கொடுத்து புரியவைப்பது கடினம். சில விஷயங்களை உடனே செய்வான். சில விஷயங்களுக்கு  ‘அங்கிள் ரெஸ்ட் ரூம் வருது’ என்று சொல்லி  ஓடிவிடுவான். காட்சிக்குள் இருக்கும்போது, ஒரு முறையாவது கேமராவைப் பார்த்துவிடுவான். எனவே, படப்பிடிப்பு நடக்கும்போது பல நேரங்களில் அவனுக்குப் படம் பிடிக்கிறோம் என்பது தெரியாமல் எடுத்தோம். உண்மையில் அவனது  உலகத்தில் டைரக்டர், கேமராமேன் எல்லாம் கிடையாது. அங்கிள், அம்மா, அப்பா அவ்வளவுதான்!

ஒரு பறவையைப் படம் எடுப்பதுபோலத்தான் குழந்தைகளைப் படம் எடுப்பதும். நாங்கள் படம் எடுத்த வீட்டில், அவன் விளையாடுவதற்கான பொம்மைகள் இருந்தன. அங்கேயே அவன் தூங்கினான். கதையில் அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காட்சி நடக்கும்போது கேமராவுக்குப் பின்னால் படுத்துக்கொண்டு விளையாடினான். காட்சியிலிருந்து அவன் வெளியே போகவேண்டுமென்றால், ஓடிவந்து என் மடியில் உட்கார்ந்து கொள்வான்.

படப்பிடிப்பில் இருக்கும் வழக்கமான ‘ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்’, ‘கட்’ முதலான சத்தங்கள் எதுவும் அங்கு இல்லாமல் பார்த்துக்கொண்டோம். அந்த வீட்டுக்குள் கேமரா இருந்தது, அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் அவன் இருந்ததால் படப்பிடிப்பு ஒரு விளையாட்டுபோல நிகழ்ந்தது.”

‘திட்டமிட்ட வகையில் ஒரு திரைப்படத்தை எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தன்னியல்பில் நிகழ்கிறவற்றிலிருந்து ஒரு சினிமாவை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறவர் அப்பாஸ் கியாரெஸ்தமி. அவர் மீது ஈடுபாடுகொண்டவர் நீங்கள். உங்களது படமாக்க முறை எப்படியானது?

“கியாரெஸ்தமி பல வருடங்கள் திரைப்படத்தை இயக்கிய பிறகே, திரைப்படத்துக்குள் தன்னியல்பாக நிகழும் ஒரு மாயத்தைக் கண்டுபிடிக்கிறார். பிறகு, அவர் அதை நிகழ்த்திப் பார்த்து வெற்றியும் காண்கிறார். ஒருமுறை இளையராஜா அவர்களைச் சந்திக்கப் போயிருந்தபோது, அவருக்கு அழைப்பு வர, அவர் எழுந்து வெளியில் போனார். அந்த அறையில் நானும் அவரது ஹார்மோனியமும் மட்டுமே இருந்தோம். மனதில் அவர் பாடலை நினைத்துக்கொண்டு நான் அந்த ஹார்மோனியத்தையே பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மேதைகளின் படைப்பாற்றல் பல வருடங்கள் இடைவிடாத பயிற்சிக்குப் பிறகு உள்ளுணர்வுடன் கலந்து, இயல்பாகக் கூடிவருகிறது. அதை ஒரு சூத்திரம்போலப் பின்பற்ற முடியாது.

கியாரேஸ்தமி தனது படத்துக்கு திரைக்கதையெல்லாம் எழுதுவதில்லை. ஒரு இரண்டு மூன்று பக்கங்கள்கொண்ட குறிப்புகள்தான் திரைக்கதை. ‘டு லெட்’டின் திரைக்கதை, முதலில் 150 பக்கங்களாக இருந்தது. பலமுறை திருத்தித் திருத்தி எழுதி, படப்பிடிப்புக்குப் போகும்போது, 33 பக்கங்களாக இருந்தது. படத்தை எடிட்செய்து சென்சாருக்குத் திரைக்கதை எழுதும்போது, அது 24 பக்கங்களாகக் குறைந்துவிட்டது. 24 பக்கங்கள், கியாரெஸ்தமியின் இரண்டு பக்கங்களாக மாற, நான் இன்னும் எத்தனை வருடங்கள் படம் எடுக்க வேண்டும்?

எழுதிய திரைக்கதையை வரிவிடாமல் எடுக்கிற துவக்கநிலை இயக்குநராகத்தான் நான் இருக்கிறேன். இடையிடையே அற்புதம்போல நிகழும் சில கணங்களை தற்செயலாகத் திரைப்படத்திற்குள் அனுமதிக்கிறேன். அவ்வளவுதான்... கியாரெஸ்தமி எளிமையின் ஆசான். எளிமைதானே இருப்பதிலேயே கடினம். தன்னியல்பின் வழியே நிகழும் ஒரு திரைப்படத்தை நிகழ்த்த முடியும்தான். அதற்கு இன்னும் பல வருடங்கள் காட்சி ரீதியாக அசுர சாதகம் செய்ய வேண்டும்.”

ஓர் படத்தை அது ‘இந்தியப் படம்’, ‘தமிழ்ப் படம்’ என எது தீர்மானிக்கி்றது? (அப்படியான வரையரைகள் தேவையா என்பதும் ஒரு கேள்விதான் என்றாலும், ஈரானியப் படங்கள், பிரெஞ்சுப் படங்கள் எனப் பெருமித அடையாளப்படுத்துதல்கள், அரசியல்படுத்துதல்கள் உண்டுதானே?)


“தமிழில் ஒரு படம் எடுத்தால், அது தமிழ்ப் படமாகத்தானே இருக்கவேண்டும்.  இல்லை என்பது எவ்வளவு பெரிய சோகம். ஏனெனில், நம் அடையாளமும் தனித்துவமும் நம் சினிமாக்களில் இல்லை. ‘டு லெட்’ ஒரு தமிழ்ப்படம். இயற்கை விவசாயத்தில் உங்கள் தோட்டத்தில் வளர்ந்த காய்போல இது ஆர்கானிக் தமிழ் சினிமா. இது தமிழின் அடையாளங்களுடன் இருக்கிறது. எனவே, இது ஒரு தமிழ்ப் படம்தான். அதனால்தான், இத்தனை சர்வதேச விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், இது ஓர் இந்தியப் படமா என்று கேட்டால், வெளிநாடுகளில் இந்திப் படத்தைத்தான் இந்தியப் படமாகக் கருதுகிறார்கள். ஒரு தமிழ்ப் படம் இந்தியப் படமாகவும் கருதப்பட வேண்டுமெனில், இதுபோல இன்னும் பல படங்களை தொடர்ச்சியாக நாம் எடுக்க வேண்டும்.”
 
“இசை ஆர்வலர் நீங்கள். ஓர் இசைப்பள்ளியை நடத்திவருகிறீர்கள்.இளையராஜாவுக்கு நெருக்கமானவரும்கூட. ஆனாலும், படத்தில் இயல்பு ஒலிகளை மட்டுமே பயன்படுத்தியிருக் கிறீர்களே?”

“இசையின் மீது எனக்கு இருக்கும் அளவில்லாத மரியாதைதான் காரணம்.  இளையராஜா இந்தப் படத்துக்கு வேண்டும் என்று மனதுக்குள் ஒரு விருப்பம் இருந்தது. அந்த விருப்பத்துடன்தான் திரைக்கதையை எழுதினேன். ஆனால், எழுதிமுடித்த பிறகு பின்னணி இசைக்கான தேவையே கதையில் இல்லை என்பது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படத்தில் இசை இல்லை என்று உறுதியானதும், எனக்குப் பிடித்த ஒரு வெளிநாட்டுப் படத்திலிருந்து ஒரு நல்ல இசையைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டேன். சில காட்சிகளைப் படம் பிடிக்கும்போது, அந்த இசையை மெலிதாக பின்னணி இசைபோல ஒலிக்கவிட்டோம்.  ஏனெனில், காட்சியின் தன்மையில், நடிகர்களின் நகர்வில், அல்லது இருப்பில்  ஒரு லயம் தேவைப்பட்டது. அதை இசையினால்தான் உருவாக்க முடியும்.  உதாரணமாகக் கட்டடத்தில் கான்கிரீட் கூரை அமைக்கும்போது, கீழே கம்புகளால் முட்டுக் கொடுப்பார்கள். தளம் உறுதியானதும், கம்புகளைப் பிரித்து எடுத்து
விடுவார்கள். அதுபோல, இசையினால் முட்டுக்கொடுத்து காட்சிக்குள் ஓர் இறுக்கத்தை உருவாக்கிவிட்டு, ஒலிச்சேர்க்கை செய்யும்போது இசையை நீக்கிவிட்டேன். படத்தில் முக்கியமான காட்சிகள் இசையில் நிகழ்ந்தவைதான். நுட்பமாகக் கவனித்தால் இதை நீங்கள் உணரமுடியும். காட்சிக்குள் இசை ஒளிந்திருக்கிறது, ஒரு சப்-டெக்ஸ்ட்போல.

படப்பிடிப்பு முடிந்ததும், ஒவ்வொரு காட்சியிலும் வரும் ஒலிகளுக்காக ஒரு  ஸ்கிரிப்ட் எழுதினோம். இயல்பான ஒலிகளும் மௌனமும் இசையைவிடவும் வலிமையான பின்னணியாக அமையும் என்பதை ஏற்கெனவே நான் பல உலகப் படங்களில் பார்த்திருக்கிறேன். அது இந்தப் படத்தின் தன்மைக்குப் பொருந்தியதால், இயல்பான ஒலிகளை மட்டும் இதில் பயன்படுத்தினோம்.”

“விகடனில் நீங்கள் எழுதிய ‘உலக சினிமா’ தொடர், பெரிய அளவில் கவனம்பெற்ற ஒன்று. தொடர்ந்து உலக சினிமாவை அவதானித்து வருகிறவர் என்கிற வகையில், ‘தமிழ் சினிமா’ உலக அரங்கோடு ஒப்பிடும்போது என்ன நிலையில் இருப்பதாகக் கருதுகிறீர்கள்?”


“உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் பதிவுசெய்கிறேன். அந்தக் கதைசொல்லல் முறை வேறு. அந்த விளையாட்டின் விதிகள் வேறு. அதையெல்லாம் நாம் முயற்சிக்கவே இல்லை. இந்த வருட ‘கான்’ திரைப்பட விழாவில் உயர்ந்த விருதுகள் பெற்ற திரைப்படங்களைப் பார்த்தேன். சினிமா ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டே இருக்கிறது. முதலில் நம் சமன்பாடுகளைவிட்டு நாம் வெளியே வரவேண்டும். பிறகு, நம்மைப் பற்றிய தற்பெருமைகள் விடுத்து, உலகத்தரம் என்றால் உண்மையில் என்ன என்று உணர்ந்து, நேர்மையாக திரைப்படத்தை அணுகவேண்டும். பாரதி சொன்னதுபோல ‘தமிழனின் அறிவுக்கு எதுவும் சுலபம்’தான். ஆனால், அதை நிரூபிக்க நம்பிக்கை மட்டும் போதாதே.”

“எதிர்காலத்தில் முழுநீள ‘கமர்ஷியல்’ சினிமா எடுக்கும் எண்ணம் உள்ளதா?”

“கமர்ஷியல் என்பது குத்துப் பாட்டும், சண்டையும், பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசக் காட்சிகளும், வன்முறையும்தான் என்றால், ஒருபோதும் அது மாதிரிப் படத்தை நான் எடுக்கமாட்டேன். ‘அவார்ட் படம் என்றால், அது பொதுமக்கள் பார்க்
கக்கூடியது அல்ல’ என்கிற அபிப்ராயத்தை முதலில் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். ‘தியேட்டருக்கு எடுக்கப்படும் ஒரு படத்தில், பாடல்களை வெட்டிவிட்டால் அது திரைவிழாப் படமாகிவிடும்’ என்று நம்மிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது. உலகத்தில் எங்குமே இல்லாத மூட நம்பிக்கை இது. குரங்கின் வாலை வெட்டிவிட்டால் அது மனிதனாகிவிடுமா? 

‘கமர்ஷியல்’ என்றால் வணிகம் என்றுதானே பொருள். திரைவிழாக்களில் திரையிடப்படுகிற படங்கள், தியேட்டரில் வெற்றிகரமாக ஓடுகிற, (நீங்கள் சொல்கிற கமர்ஷியல்) படங்களைவிட அதிக லாபம் ஈட்டித் தருகின்றன. அப்படிப் பார்த்தால்,   ‘டு லெட்’ மிகச் சிறந்த வணிகப் படம். அது விரைவில் திரைக்கும் வர இருக்கிறது. இதுபோன்ற நல்ல படங்களைத் தொடந்து எடுப்பேன்.”

“தேசியவிருது கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா, யாரிடமிருந்து முக்கியமான வாழ்த்து கிடைத்தது?”

“கிடைத்தால் நல்லது என்று நினைத்தேன். ஏனெனில், 20க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகள் பெற்றும், ‘டு லெட்’ படத்தின் மீது இங்கு எந்தக் கவனமும் இல்லை. தேசிய விருது வந்ததும்தான் ஊடகங்கள் பெரிதாகக் கவனித்தன. ஓர் இண்டிபெண்டன்ட் சினிமாவுக்கு இந்தக் கவனமும் வெளிச்சமும் அவசியம். மேலும், நம் நாட்டில் விருதுகள் என்பது பெரும்பாலான நேரங்களில் பிரபலங்களையே சார்ந்திருக்கின்றன. எந்த பிரபலமும் இல்லாமலேயே ‘டு லெட்’ படம் விருதுபெற்றது, நல்ல விஷயம். நடுவர் குழுவுக்கு என் நன்றிகள்.

வாழ்த்துகள் யாரிடமிருந்து வந்தாலும் அது முக்கியமானதுதானே. என் தாய்மாமா குணசேகரன், என்னைப் பற்றி எதில் என்ன செய்தி வந்தாலும் உடனே அழைத்துப் பேசுவார். அவரிடமிருந்து இந்தமுறை வாழ்த்து வரவில்லை. நான் தொலைபேசி செய்து கேட்டபோது, அவர் பேசமுடியாத நிலையில் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்று பதில் வந்தது. என்ன சொல்ல? வாழ்க்கையின் திரைக்கதையில் எப்போதுமே லாஜிக் இல்லை. பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருந்த என் ஏழாம் வகுப்பு தமிழாசிரியர், சீனிவாசன் அய்யாவிடமிருந்து ‘டேய் செழியா... படவா ராஸ்கோல்... உன்னைய டிவியில பார்த்தேண்டா அய்யா’ என்று ஆனந்தக் கண்ணீருடன் ஒரு வாழ்த்து வந்தது.  அதுதான் மிக முக்கியமான வாழ்த்து.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு