Published:Updated:

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா
கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

சந்திப்பு : வெய்யில், விஷ்ணுபுரம் சரவணன்படங்கள் : ரா.ராம்குமார், க.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

வீன தமிழ்க் கவிதையில் தனித்ததொரு முகம், கலாப்ரியா. அரை நூற்றாண்டுகாலமாகக் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். மிகச் சமீபத்தில் அவரது முதல் நாவலான ‘வேனல்’ வெளியாகியிருக்கிறது. இயல்பான பேச்சுமொழியிலான உரையாடல்களையும் குறுங்கதைகளையும் கவிதைக்குள் லாகவமாகப் பொதிந்தெழுதியவர் கலாப்ரியா. வன்முறையையும் பாலியல் வேட்கையையும் உட்கனலாகக்கொண்ட இவரது கவிதைகளில், பல நூற்றாண்டுகால மனிதஅக யதார்த்தத்தின் வெம்மை பரவும். 

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

தென்காசி அருகே இடைகால் எனும் கிராமத்தில் அவரது வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து உள்நுழைந்தோம். திறந்துகிடக்கும் ஜன்னல்களில் குற்றாலக் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க, பழைய பாடலொன்றை ரசித்தபடி சாய்வுநாற்காலியில் இசைமயக்கம்கொண்டிருந்தார். கேள்விகளை முன்வைத்தோம்... அதிக உடல்மொழி இல்லை, குரலில் அதிர்வு இல்லை, தயக்கமற்ற, பாவனையில்லாத பதில்களால் அன்றைய மாலையை ருசிப்படுத்தினார்.

“உங்களுடைய பால்ய வாழ்க்கை எப்படி இருந்தது... சோமசுந்தரம் எப்படி கலாப்ரியா ஆனார் என்று சொல்லுங்கள்...”


“எனது சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் நிறைந்த வீடாகத்தான் எங்கள் வீடு இருந்தது. திருமணத்திற்கு வருகிறவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசுசாகக் கொடுக்கும் பழக்கம் அப்போது பரவலாக இருந்தது. மொய் எழுதும்போது, யார் என்ன புத்தகம் கொடுத்தார்கள் என்பதோடு, அதன் விலை, பதிப்பகம் என எல்லா விவரங்களையும் எழுதிவைக்கும் பழக்கம் எங்கள் வீட்டிலிருந்தது. ‘கன்னிகா’, ‘பொற்சிலை’, ‘உயிரோவியம்’, ‘பெரிய இடத்துப்பெண்’  ‘அண்ணாவின் ஆறு கதைகள்’ எனப் பல நூல்கள் அப்படித்தான் எனது வாசிப்பிற்குள் வந்தன. அதில், ‘உயிரோவியம்’ ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் படிக்கும்போது, எனக்குப் பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும். 

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியாஎனது அண்ணன் மீனாட்சி சுந்தரம், ம.பொ.சியின் ‘தமிழரசுக் கழக’த்தின் அனுதாபி. நல்ல வாசிப்பாளர். பெரும்பாலான இதழ்கள் அவர் வழியாக வீட்டுக்கு வரும். தொடர்கதைகளின் காலம் அது. ஒரு இதழ் வீட்டுக்கு வந்தவுடன், தொடர்கதைகளை எல்லோரும் ஒரே நேரத்தில் வாசிக்க முடியாது என்பதால், யாராவது ஒருவர் சத்தமாக வாசிக்க, மற்ற அனைவரும் கேட்கும் பழக்கம் இருந்தது. நான் வாசிக்கிறேன் எனக் கேட்டு வாங்கி வாசிப்பேன். காதல் காட்சிகள் வந்தால்,
‘சரி சரி நல்லா வாசிக்கிறே... போதும்’ என்று சொல்லி புத்தகத்தை வாங்கிக்கொள்வார்கள்.இப்படியாக வாசிப்பு என்பது, தொடர்ச்சியாக ஒரு வீட்டுப் பழக்கமாக இருந்தது.

அந்த நேரத்தில் வண்ணதாசன் வீட்டுக்குப் போய்வந்துகொண்டிருப்பேன். இருவரின் வீடுகளும் ஒரே தெருவில்தான் இருந்தன. அவரின் வீட்டிலும் நிறைய புத்தகங்கள் இருந்தன. வார இதழ்களில் வந்த தொடர்கதைகளை, சினிமா பாட்டுப் புத்தகங்களையெல்லாம் பைண்ட் பண்ணி வைத்திருப்பார்கள். தி.க.சியின் சேகரிப்புகள் தனியாக இருக்கும். அங்கிருந்த பல புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. வண்ணதாசன், அவரது அண்ணன் கணபதி இருவருமே நன்றாக ஓவியம் வரைவார்கள். ‘குமுதம்’ ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் வெளியாகும் ஓவியங்களை வரைந்து பார்ப்பார்கள்.  அவர்களோடு சேர்ந்து நானும் கிறுக்குவேன். அப்போது நான், எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாகவும் வண்ணதாசன், பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்ததாகவும் நினைவு. அப்போதே அவரின் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அவற்றை வாசித்துவிட்டு, நானும் சிறுகதைகள்  எழுதிப்பார்த்தேன். சிறுகதைகள் என்று நம்பிக்கையாகச்  சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. வண்ணதாசன், வாசித்துவிட்டு கேலிசெய்யும் வகையில் அவை இருந்தன. ஆனாலும், எழுத்து முயற்சி தொடர்ந்தது.

பிறகு, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் பாரதிதாசன், முடியரசன், வாணிதாசன் ஆகியோரின் கவிதைகள் அறிமுகமாயின. எனக்கு யாப்பு தெரியாது என்றாலும், சந்தத்தோடு அவர்களின் கவிதைகளைப் போலவே எழுதுவேன். பிறகு  ‘கணையாழி’, ‘கசடதபற’ போன்ற இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. நா.காமராசன், பா.செயப்பிரகாசம் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. அதன்வழி வேறு ஒரு கவிதை உலகம் அறிமுகமானது. கொஞ்சம் கொஞ்சமாகக் கவிதையின் பக்கம் நகர்ந்தேன்.”

“கலாப்ரியா என்ற பெயரை வைத்துக்கொண்ட காரணம்?”

“ரா.கி.ரங்கராஜன் ‘குமுதம்’ இதழில்  ‘அவிட்டம்’ என்ற புனைப்பெயரில் கவிதைகள், துணுக்குகளெல்லாம் எழுதுவார். அதைப் பார்த்து நானும் எனது ‘ராசி’யான  ‘கும்பம்’ என்ற பெயரில் எழுதினேன்.

வண்ணநிலவன் ‘பொருநை’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை அப்போது  நடத்திக்கொண்டிருந்தார். ‘ஒரு இதழை நீங்கள் தயாரித்துக்கொடுங்கள்’ என வண்ணதாசனிடம் அவர் கேட்டிருந்தார். வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இவரும் அட்டை ஓவியமெல்லாம் வரைந்து தயார் செய்துகொண்டிருந்தார். ‘நீ ஒரு கவிதை கொடு’ என்று என்னிடம் கேட்டார். கவிதை எழுதிய பின், ‘கும்பம்’ என்கிற பெயர் மோசமாக இருப்பதை உணர்ந்தேன். திடீரென்று ஒரு யோசனை, ‘சசிகலா’ பெயரின் ஒரு பகுதியை தொடக்கமாகவைத்து ‘கலாப்ரியா’ என்று கவிதைக்குக் கீழே பெயர் எழுதிக் கொடுத்தேன். ‘இந்தப் பெயர் நல்லா இருக்குப்பா’ என்று அவர் சொன்னதும், உற்சாமாகிவிட்டேன். ஏனென்றால், அவர் ஏதாவது சத்தம்போடுவாரோ என நினைத்து பயந்துகொண்டிருந்தேன்.பிறகு, ‘கசடதபற’(1968), ‘கணையாழி’, ‘தீபம்’ எனத் தொடர்ந்து எல்லா இதழ்களிலும் ‘கலாப்ரியா’ என்ற பெயரில் எழுதத் தொடங்கிவிட்டேன்.”

“சிலர் உங்களை ‘கோபால்’ என்று அழைக்கிறார்களே?”

“அம்மாவின் அப்பா பெயர் கோபால். அந்தப் பெயரை எந்தப் பிள்ளைக்காவது வைத்துவிட வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. என்னை அந்தப் பெயர் சொல்லியே வீட்டில், தெருவில் கூப்பிடுவார்கள். பள்ளி, அலுவலகம் தவிர மற்ற இடங்களில் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு நான் கோபால்தான்.”

“முதன்முதலில் பிரசுரமான உங்களுடைய கவிதை எது?”

“அறிஞர் அண்ணாவின் மறைவின்போது, வானொலியில் கலைஞர் ஓர் அஞ்சலிக் கவிதை வாசித்தார். அந்தக் கவிதையை அன்று ஊரே கூடி, அமைதியாகக் கேட்டது. அதுவரையிலாக கலைஞர் எழுதியதிலேயே அது கொஞ்சம் சந்த அலங்காரங்கள் குறைந்த, எனக்கு நெருக்கமான கவிதையாக இருந்தது. அந்தக் கவிதை என்னை ஆழமாகப் பாதித்தது. உடனே, அண்ணாவைப் பற்றி நானும் ஒரு கவிதை எழுதினேன். அண்ணாவின் இறுதிஊர்வலத்தில் நான் எழுதிய கவிதையை ஒரு மாணவன் ராகத்தோடு பாடினான். அதுதான் அரங்கேற்றப்பட்ட எனது முதல் கவிதை. ‘பொருநை’ இதழில் அச்சாகி வந்தது, ‘அவளுக்காய்’ என்றொரு ரொமான்டிக் காதல் கவிதை. அதை நான் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போதும் அதைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். பிரசுரமான என்னுடைய முதல் கவிதையாக நான் நினைப்பது,  ‘கசடதபற’ இதழில் வெளியான ‘என்னுடைய மேட்டுநிலம்’ என்ற கவிதையைத்தான்.”

“அன்றைக்கு உங்களுடைய குடும்பச் சூழல், கல்விச்சூழல் எப்படியிருந்தது, உங்களை வீட்டில் எப்படிப் புரிந்துகொண்டார்கள்?”

“பள்ளியில், நான் மூன்றாவது அல்லது நான்காவது ரேங்க் வாங்கும் அளவுக்குப் படிப்பேன். என்றாலும், வீட்டினருக்கு என்னிடம் படிப்பு உள்பட எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. உறவினர்களைச் சந்திக்கும்போது, நான் அருகிலிருந்தால், இவன் சின்னவன்... நல்லாப் படிப்பான்!’ என்று அப்பா சொல்வார், அவ்வளவுதான்.  

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

அப்போ, தமிழ்நாடு முழுக்க எம்.ஜி.ஆர்  ரசிகர் மன்றங்களுக்குத் தொடர்ச்சியாகக் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருப்பேன். எனக்கும் ஏராளமான கடிதங்கள், மன்றத்திலிருந்து வரும். வீட்டில் அனைவருமே, வருகிற கடிதங்களைப் பத்திரமாக எடுத்துவைத்துத் தருவார்கள். உண்மையில், அவர்கள் அப்போது என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தார்களோ தெரியவில்லை. ஆனால், காதல் தோல்வியிலிருந்து வெளியேவந்து, சினிமா தீவிரத்திலிருந்து விடுபட்டு, வாசிப்பது, பத்திரிகைகளில் எழுதுவது என  மாறிக்கொண்டிருந்தபோது, சந்தோஷப்பட்டார்கள். எனது எழுத்து பத்திரிகைகளில் வருவதில் அவர்களுக்குப் பெருமிதம் இருந்தது.

கல்லூரியில் முதல் வருடத்தில் படிக்கும்போது, பேராசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு, என்னிடம் ‘பாடம் புரிந்ததா?’ எனக் கேட்பார். நான், ‘புரிந்தது சார்’ என்று சொன்னால், ‘அப்படின்னா, எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்’ என்று கேலியாகச் சொல்வார். அதே பேராசிரியர் கல்லூரி மூன்றாம் ஆண்டில், என்னை எதிர்பார்த்து பாடம் நடத்தக் காத்திருந்தார். ‘நீ இல்லாம இந்த சப்ஜெக்ட இங்க எவனுக்குடே எடுக்க... யாருக்கு புரியும்’ என்று கேட்பார். இடைப்பட்டக் கல்லூரி காலத்தில் ஏதோ பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.” (சிரிக்கிறார்)

“கவிஞரானதும் வாசிப்பில் என்ன மாற்றங்களைச் செய்துகொண்டீர்கள்?”

“கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், பல முக்கியமான புத்தகங்களை எனக்கு  அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்படி அவர் அறிமுகப்படுத்திய புத்தகம்தான், ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. கல்லூரி நூலகத்தில் அந்தப் புத்தகம் கிடைத்தது. தொடக்கப் பகுதிகள் படிக்கச் சிரமமாக இருந்தன. ஆனால், படிக்கப் படிக்கப் பல கதவுகள் திறந்துகொண்டன. ஆச்சர்யங்கள்  தொடர்ந்தன. ‘பிரபா’ என்றொரு பகுதி வரும். அது என் வாழ்க்கையைப்  புரட்டிப்போட்டது. ‘பிரபா’ என்று புத்தகத்தில் வரும் இடங்களிலெல்லாம் அதை அடித்துவிட்டு, ‘சசி’ என்று எழுதினேன். அந்தப் புத்தகம் கல்லூரி நூலகத்தில் இன்னும் இருக்கலாம். பிறகு, நவீன இலக்கிய வாசிப்பிற்குள் நுழைந்துவிட்டேன். அதுவரை வாசித்துக்கொண்டிருந்த கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன் போன்றவர்களின் நூல்களைப் பரணில் ஏற்றிவிட்டேன். மேலும், வண்ணதாசனின் வீடு பக்கத்திலிருந்ததால், அவர் வாசிக்கும் அனைத்து நூல்களும் எனக்கும் வாசிக்கக் கிடைத்தன.”

“நீங்கள் நவீனக் கவிஞராக உருவானபோது, உங்களைப் பெரிதும் பாதித்த கவிஞர் யார்?”

“வைத்தீஸ்வரனும் ஞானக்கூத்தனும் என்னைப் பாதித்தார்கள். சர்யலிஸத் தன்மையோடு அன்றைக்கு வெளிவந்த ஞானக்கூத்தனின் ‘எட்டுக் கவிதைகள்’ என்னை மிகவும் பாதித்தன.”

“கவிதையை வைத்து என்ன செய்ய முடியும் என நினைத்தீர்கள்... அதில் அரசியல் நம்பிக்கை ஏதேனும் இருந்ததா?”

“அப்படிக் குறிப்பிட்ட நம்பிக்கைகள் எதுவும் இல்லை. அப்போது, கவிதைகள் திராவிட இயக்க மேடைகளில் ஒரு கருவியாக இருந்ததுதான் என்றாலும், கவிதையை வைத்து அரசியல் மாற்றம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை, பிரக்ஞைபூர்வமாக எனக்கு இருந்ததில்லை.”

“அப்படியானால், கவிதை உங்களுக்கு அப்போது என்னவாக இருந்தது?”


“அந்த வயதில், மொழியின் வழியே கவிதையின் வழியே, நான் ஓர் ஆளுமையாக மாறிக் கொண்டிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. இன்றைய வார்த்தைகளில், அன்றைய உணர்வை மிக உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால், கவிதை ஒருவகையில் அன்று மனமைதுனமாக இருந்தது.”

“கவிதைக்கு வெளியே, உங்களின் அரசியல் நம்பிக்கை என்னவாக இருந்தது?”


“அன்றைய தி.மு.க, இயக்கத்தினரின் தீவிர அரசியல் நம்பிக்கைகள் யாவிலும் எல்லோரையும்போலவே எனக்கும் நம்பிக்கை இருந்தது. ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்பது உண்மையாகிட வேண்டும் என விரும்பினேன். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அது மெள்ள உடைய ஆரம்பித்தது.

“கொள்கை ரீதியாகவா?”

இல்லை. உள்ளூர் தி.மு.க. ஆள்கள் செய்யும் அலும்புகளினால் ஏற்பட்ட மாற்றம் அது. தீவிரமாக உழைத்தவர்களுக்கு அச்சமயம் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பு அது. அந்தக் காலகட்டத்தில் ‘துக்ளக்’ இதழில் வெளியான தி.மு.க. மீதான விமர்சனங்கள், ‘ஒருவகையில், நமது நம்பிக்கை இழப்பு சரிதானோ’ என நினைக்கவைத்தன; ஒரு விலகல் மனநிலையை உண்டாக்கின. மேலும், அந்த நேரத்தில் படிப்பு முடிந்து, வேலை தேடிக்கொண்டிருந்த காலம்வேறு. அதுவும்கூட, அரசியலிலிருந்து கவனம் மாறியதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.”

“தி.மு.க-வின் கொள்கைப் பிடிப்பினால்தான் எம்.ஜி.ஆர் ரசிகரானீர்களா?”

“அப்படித் தீர்மானமாகச் சொல்ல முடியும் எனத் தோன்றவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் படங்கள், திமுக-வை அன்று  வெகுவாக மக்களிடம் கொண்டுசென்றன என்பதில் மாற்றமில்லை. அவர்தான் முதன்முதலாக, தன் படங்களில் துணிந்து தி.மு.க. கொடியைக் காட்டினார். கலைவாணர்கூட சினிமாவுக்காக, ‘திருக்குறள் முன்னணி கழகம்’ என்று மாற்றிதான் சொல்வார். கலைஞரின் படங்களில்கூட திரைக்கதைக்கு வெளியே, வலிந்து தி.மு.க பிரசாரம் இருக்காது. தேவையான ஒருசில இடங்களில் மட்டும்தான் இருக்கும். அதுவும் கருத்தியல் ரீதியாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் மட்டும்தான் சினிமாவில் தங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டார்கள். 1958-ல் ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் ‘எங்கள் திராவிட பொன்னாடே’ என்ற பாடலை வைத்தார் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், தனது சின்னத்தையே (Emblem) அன்று கறுப்பு சிவப்பில் வைத்துக்கொண்டது; படங்களில்  பாத்திரப் பெயரை உதயசூரியன் என வைத்துக்கொண்டது எனத் தீவிரமாக இருந்தார். அது ஒருவகையில் எங்களைப் போன்ற இளைஞர்களை அன்று ஈர்த்ததும் உண்மைதான்.” 

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

“எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபோது, உங்களுடைய மனநிலை என்னவாக இருந்தது?”

“எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டதை ‘மாலை முர’சில் வந்த சிறப்புப் பதிப்பைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அப்போது, மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்த பா.செயப்பிரகாசம், ‘இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ எனக் கேட்டார். ‘நாலைந்து நாள்கள் பரபரப்பாகப் பேசப்படும். பிறகு, எம்.ஜி.ஆரையே மறந்துவிடுவார்கள். அவரது அத்தியாயம் இதோடு முடிந்தது’ என்றுதான் சொன்னேன். அவருக்கு நான் சொன்னதில் நம்பிக்கை இல்லை. அவரை அரசுத் தரப்பிலிருந்து அன்றிரவே சென்னைக்கு அழைத்திருந்தார்கள். நான்கு நாள்கள் கழித்து, அவர் நெல்லை திரும்பி வருவதற்குள் இங்கு பெரிய கலவரமாகி விட்டது. என் கணிப்பு தவறிவிட்டது.”

“இப்போதும் நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்தானா?”

“(சிரிக்கிறார்) இப்போதும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தால் பிடிக்கிறதே. அதை ஏன் மறைக்கவேண்டும். மேலும், சிறுவயது முதலே நான் விமர்சனபூர்வமான ரசிகனாகத்தான் இருந்துவந்திருக்கிறேன். மன்றத்தில் செயல்பட்டு வந்திருந்தாலும்,
எம்.ஜி.ஆர் படங்களை விமர்சனம் செய்ய ஒருபோதும் தயங்கியதில்லை. மணி என்று எனக்கொரு நண்பர் உண்டு. எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகர். அவரிடம் ஒரு சென்டிமென்ட் உண்டு. அதாவது,
எம்.ஜி.ஆர் படத்தை முதல் நாள், முதல் காட்சியை அவர் பார்த்தால், அந்தப் படம் ஓடாது என்று. அதனால், எந்தப் படத்தையும் இரண்டாவது காட்சிதான் பார்ப்பார். அப்படி, அவர் தியேட்டர் உள்ளே செல்ல காத்திருக்கும்போது, படம் பார்த்துவிட்டு வெளியே வரும் என்னிடம், ‘படம் எப்படி?’ என்று கேட்பார். நான், ‘சுமாராத்தான் இருக்கு’ என்று சொல்வேன். அவர் ஆத்திரத்தோடு, ‘போடா மூதேவி... உங்கிட்ட போய் கேட்டேனே’ என்று திட்டிவிட்டுப் போவார். ‘அடிமைப் பெண்’ படத்தை அப்போது எனக்குப் பிடிக்கவில்லை என்றுதான் சொன்னேன். பிறகு, பார்க்கப் பார்க்க பல்வேறு விஷயங்கள் பிடிபட்டன.ஆக, எப்போதுமே விமர்சனபூர்வமான
எம்.ஜி.ஆர் ரசிகனாகவேதான் நான் இருந்து வந்திருக்கிறேன்.”

“அப்போது ‘மொழி’, ‘இனம்’ சார்ந்த சிக்கல்கள் தாண்டி, மக்களுக்கு வேறு என்ன பிரச்னைகள் இருந்தன?”

“1967-ல் அரிசி தட்டுப்பாடுதான் பெரிய விஷயமாக இருந்தது. அரிசிதான் அரசியலாக இருந்தது. இன்னொரு விஷயம், எல்லாவிதமான லைசன்ஸ்களும் காங்கிரஸ் காரர்களுக்குத்தான் கொடுப்பார்கள்.அதுவும், அவர்கள் ‘மேல்தட்டு’க்காரர்களாக இருக்கவேண்டும். பல ரேஷன் கடைகள்கூடக் காங்கிரஸ்காரர்களிடம்தான் இருந்தன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, நிறைய விஷயங்கள் மாறின. சாதிக்கான முன்னுரிமை என்பது, பணத்துக்கான முன்னுரிமையாக மாறியது. சாதிக்கு ‘சீட்’ என்பது போய், பணத்துக்கு என ஆனது. இந்தித் திணிப்பைவிடவும் அரிசித் தட்டுப்பாடுதான் பெரும் பிரச்னையாக அன்று இருந்தது. ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ என்று அண்ணா ஒரு இடத்திலும் சொல்லவே இல்லை. ஆனால், எப்படியோ அவர் சொன்னதாக பரவிவிட்டது. இது பெரிய அளவில் பரவி பிரச்னை ஆனதும், ‘தினத்தந்தி’யில் ஓவியர் செல்லம் வரைந்த அண்ணாவின் ஓவியத்தோடு, ‘ரூபாய்க்கு ஒரு படி நிச்சயம்; மூன்று படி லட்சியம்’ என விளம்பரம் செய்திருந்தார்கள். பிறகு, தொடர்ச்சியாக அறிவிப்பு விளம்பரங்கள்  ‘தினத்தந்தி’யில் வந்த வண்ணம் இருந்தன. ஏனெனில், ஆதித்தனார் அப்போது அவர்களுடன்தான் இருந்தார். இது தேர்தல் நேரத்தில் தி.மு.க-வுக்கு உதவியாக இருந்தது.”

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டீர்கள் அல்லவா?”

“அது நடந்த காலத்தில் நான் சின்னப்பையன். பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். போலீஸ் கெடுபிடியான நேரம் அது. ஊருக்கு வெளியே போஸீஸ் குவிக்கப்பட்டிருக்கும். அப்போது போராட்டக்காரர்கள், எங்களைப்  போன்ற பையன்களைக் கூரியர்போலப் பயன்படுத்திக்கொண்டார்கள். அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ், போஸ்டர்களை ரகசிமாகக் கொடுக்க - வாங்க, ரகசியக் கூட்டம் குறித்த தகவல்களைப் பரிமாற போன்ற வேலைகளுக்கு எங்களைப் பயன்படுத்துவார்கள். போலீஸ்காரர்கள் எங்களை அடிக்கவோ, கைதுசெய்யவோ முடியாது. விரட்டி வருவார்கள், குறுகிய சந்துகளுக்குள் ஓடிவிடுவோம். புதிய இடம் என்பதால், வெளியூர் போலீஸ்காரர்கள் துரத்தி வரமாட்டார்கள். இப்படியாகச் சிறிய அளவிலானது எங்களைப் போன்றவர்களின் போராட்டப் பங்கு. அந்தப் போராட்டமோ மிக வலியது.”

“இன்றைய தலைமுறை இளைஞர்களில் ஒரு தரப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையே தவறு என்பதாகப் புரிந்துகொண்டிருக்கிறார்களே...”

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மட்டுமல்ல, இவர்கள் வரலாற்றில் நிகழ்ந்த பல போராட்டங்களை அப்படித்தான் புரிந்துவைத்திருக்கிறார்கள். வங்கி யூனியனில் போராடிய கதையைச் சொன்னால், ‘ஏன் சார் போராடுறீங்க...வேலை பார்த்தா சம்பளம் கொடுக்கப் போறாங்க’ என்று சொல்கிறார்கள்.எதற்காகப் போராடினோம் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் நான், ‘தம்பி, ஐந்து மணிக்கு வேலை முடிந்து கிளம்புறீங்களே எப்படி? டி.ஏ.அலவன்ஸ் வாங்குறீங்களே எப்படி? இதெல்லாம் யார் போராடிக் கிடைச்சது? என்று கேட்டால், முழிக்கிறார்கள். இன்று உங்களுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதனால், உங்களுக்கு அதைப் போராடி பெற்றவர்களின் வலி தெரியவில்லை.

இவர்களுக்கு இதுபோல் சொல்ல வேண்டிய வரலாறு நிறைய இருக்கிறது. ஒருவேளை இங்கு இந்தி திணிக்கப் பட்டிருந்தால், எவ்வளவு வேலை வாய்ப்புகள் பறிபோயிருக்கக்கூடும். அந்தக் காலகட்ட வரலாற்றை அறியாமல் இதைப் புரிந்துகொள்வது கடினம். வட இந்தியர்களில் பெரும்பான்மையானவர்களால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது. அதுவும் இங்கு இந்தியைத் திணிக்க ஒரு காரணம். இந்தியே மொத்த தேசத்திற்கான மொழி என்றாகிவிட்டால், அதைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு? மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என்பீர்கள். ஒரு மொழியை இழப்பதும் இன்னொன்றுக்குப் பெயர்வதும் என்ன சிறுபிள்ளை விளையாட்டா? மொழி என்பது வெறும் தொடர்புக் கருவி மட்டும்தானா? அதற்குள் எத்தனை ஆயிரம் ஆண்டுகால பண்பாட்டு வேர்கள் கிளைத்துக்கிடக்கின்றன? மிகுந்த அக்கரையோடு நான் கேட்டுக்கொள்வது இதுதான், ஏற்றுக்கொள்வது இருக்கட்டும்... முதலில், கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்.”

“எல்லா அரசியல் தத்துவங்களும் இந்த நூற்றாண்டில் தோற்றுப்போய்விட்டன என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. உங்களுடைய பார்வை என்ன?”

“அதிகாரங்களுக்கு எதிராகப் போராடும் அரசியல் என்றைக்கும் இருக்கும். அந்தத் தத்துவம் எப்போதும் தோற்காது. போராடுகிறவர்கள் போராடிக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் அதன் பலனை அனுபவிப்பது கிடையாது. அதை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. வெற்றி தோல்விகளுக்கு, போராடுகிறவர்கள் தயக்கம் காட்டுவதில்லை. இன்றும் போராடுவதற்கான பல தேவைகள் நம் சூழலில் இருக்கத்தான் செய்கின்றன. தன்னெழுச்சியான மெரினா போராட்டத்தை எல்லோரும் பார்த்தோமே. காவிரியை நாம் போராடித்தானே பெற வேண்டியிருக்கிறது. இன்றைக்கு பிஜேபியை ஓரங்கட்டி வைத்திருக்கிறோமே... அதுவும்  போராட்டத்தினால் சாத்தியமானதுதான்.”

“தி.மு.க-வைப் பற்றிய உங்களின் மனநிலை தற்போது என்னவாக இருக்கிறது?”

“சமீபகால அரசியல் அரங்கில் நடப்பவற்றையெல்லாம் பார்க்கும்போது, தி.மு.க-வை விட்டால் வேறு வழியில்லை என்ற கருத்து இன்னும் உறுதியாகிறது. ஈ.வெ.ரா, ‘இன்னர் அஜெண்டாவோடு காங்கிரஸுக்கு அதாவது, காமராஜருக்கு எப்படி அந்நாளில் ஆதரவு கொடுத்தாரோ அதுபோல, இந்தக் காலகட்டத்தின் தேவையை மனதில்கொண்டு, எல்லா விமர்சனங்களையும் கடந்து, தி.மு.க-வை நாம் ஆதரிக்க வேண்டும்.”

“தி.மு.க-வுக்கு வலுவான எதிர்காலம் இருக்கிறது என நம்புகிறீர்களா?”

“நம்பிக்கை இருக்கிறது. அதேசமயம், தலைமைக்கு இன்னும் நல்ல யோசனைகள் சொல்லக்கூடிய ஆள்கள் உடனிருந்தால் இன்னும் நல்லது என்று தோன்றுகிறது.”

“கலைஞரோடு உங்களின் உறவு எப்படியானது”


“நலம் விசாரிக்கும் அளவிலான நட்புதான். ஆழமாக இலக்கிய விவாதம் செய்கிற அளவுக்கு இல்லை. செயல்பட இயலாத உடல்நிலையில் அவர் இருப்பது, ஒரு தி.மு.க-காரனாக எனக்கு வருத்தமாகத்தானிருக்கிறது. ஆனால், இயற்கையை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்ற புரிதலும் இருக்கிறது.”

“திருநெல்வேலியைச் சுற்றி, ‘தாமிரபரணி படுகொலை’, ‘மண்டைக்காடு கலவரம்’,  ‘கூடங்குளம் அணுஉலைப் போராட்டம்’ எனப் பல பிரச்னைகள் நடந்துள்ளன. அவை குறித்து நெல்லைப் பகுதியைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகள் அதிகம் வரவில்லையே?”


“அவை குறித்து எழுதப்படவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டம்தான். குறிப்பிட்ட ஒரு சாரர் மீது பழி சொல்ல முடியாது. படைப்பில் அவற்றைப் பதிவுசெய்ய வேண்டிய பொறுப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.”

“திராவிட இயக்க இலக்கியங்களின் இன்றைய தொடர்ச்சி பற்றிய உங்களுடைய அபிப்ராயம்?” 

“கூர்ந்து கவனித்தீர்களென்றால், நவீன எழுத்துகளில் ஆன்மிகமும் கடவுளும் பாடப்படவே இல்லை. அதாவது, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிகத்தை, கடவுளைப் போற்றுகிற, பரப்புகிற கவிதைகள்  எழுதப்படவில்லை. யாரும் யாரையும் இன்று தடுத்துக்கொண்டில்லை; தணிக்கை செய்யவில்லை. பொதுமனநிலையிலேயே அந்த விமர்சனமும் மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. இதுதான் இலக்கியத்தில் திராவிட இயக்கம் செலுத்திய பாதிப்பு. அது ஒரு சமூகத்தின் மனநிலையை ஆழமாகப் பாதித்திருக்கிறது. அங்கிருந்துதானே இலக்கியம் பிறக்கவேண்டும்?

ஆன்மிகத்தை, மதத்தை, கடவுளைக் கேள்வி கேட்பது தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது. சமீபத்தில்கூட, ‘கவசத்தை தானம் வழங்கிய கர்ணனின் மார்பில் புதுக்காமம் தீர்த்தாள் அவன் மனைவி’ என்று நான் எழுதியிருக்கிறேன். எதை நோக்கியும் கேள்விகளைத் தைரியமாக முன் வைக்கின்ற மனநிலையை உருவாக்கியதில் திராவிட இயக்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.”

“சிற்றிதழ் காலகட்டம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?”


“நிச்சயமாக இல்லை. ஹரிகிருஷ்ணனின் ‘மணல்வீடு’, கோணங்கியின் ‘கல்குதிரை’ போன்ற சிற்றிதழ்கள் மிகச் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறன. ஏராளமான புதிய பங்களிப்பாளர்களை அதில்  பார்க்க முடிகிறது. பழைய ஆள்கள் மீண்டும் தீவிரமாக இயங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.”

“ஓர் இலக்கிய இதழ் கையில் கிடைத்ததும் எதை முதலில் வாசிப்பீர்கள்?” 

“முதல் பக்கத்திலிருந்து முழுமையாக ஒருமுறை புரட்டிப் பார்த்துவிடுவேன். சிறுகதைகள், கட்டுரைகள் என எல்லாமும் இருந்தாலும், முதலில் வாசிக்க ஆரம்பிப்பது கவிதைகளைத்தான். நானும் ஒரு கவிஞன் என்பதால் அல்ல. அது, குறுவடிவமாக ஈர்ப்பதும்கூட ஒரு காரணம்.”

“ஒரு கவிதைத் தொகுப்பை நீங்கள் வாசிக்கும் விதம் பற்றிச் சொல்லுங்கள்?”

“கவிதைத் தொகுப்பின் தலைப்பே முதலில் உங்களுக்குள் ஓர் அபிப்ராயத்தை உருவாக்கும். தலைப்பு, முதல்வரி அல்லது ஒரு இமேஜ் உள்ளே இழுக்க வேண்டும். அப்படி இழுத்துவிட்டால், அந்தக் கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்து, அதன் வெளிக்குள் பயணிப்பேன்.   நம்முடைய அனுபவத்துக்குச் சமதியான ஒன்றைச் சொல்கிற, நாம் இதுவரை பேசியிறாத விஷயங்களைப் பேசுகிற கவிதைகள் பிடிக்கும்.”

“ஒரே மூச்சில் அனைத்துக் கவிதைகளையும் வாசிப்பீர்களா?”


“இல்லை, அப்படி முடியாது. ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி எடுத்துக்கொள்வேன். பிறகு, ஒரு கவிதையை வாசிக்கும்போது, எனக்குள் எழுகிற வரிகளை, உணர்வுகளைக் குறித்து வைத்துகொள்வேன். பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட தொகுப்பின் ஓரப் பக்கங்களிலேயே கிறுக்கிவைத்துவிடுவேன்.நல்ல வரிகள், புதிய சொற்சேர்க்கைகள், புதிய கற்பனைகளை அடிக்கோடிடுவேன். இந்தப் பழக்கம் எனக்கு வண்ணதாசனிட மிருந்து தொற்றிக்கொண்டது. வாசிப்பில் என்னிடமிருக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால், உங்கள் கவிதைப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் போதே சட்டென்று எனது கற்பனைகளுக்குள் பாய்ந்துவிடுவேன். வாசிப்பு தடைபட்டுவிடும். ஆனாலும், ஒரு கவிஞனுக்கு இது சந்தோஷம் தரும் பிரச்னைதான்.”

“உங்களுடைய கவிதை எழுதும் முறை எப்படியானது?”

“முதலில் எனக்கு ஒரு பொறிதான் உருவாகும். எழுதும் சூழல் அமையும் பட்சத்தில், உடனே அதை எழுதிப்பார்ப்பேன். இயலாதெனில், அதைக் குறித்துவைத்துக் கொள்வேன். பின்பு, நேரம் வாய்க்கும்போது முயல்வேன். மறதியின் காரணமாக, பல கரைந்துபோய்விடுவதும் உண்டு. உருவான பொறியை ஒரு சித்திரமாக விரித்து எடுத்துச் செல்வேன், உடன் எழும் சித்திரங்களை  கவனமாகத் தொடர அனுமதிப்பேன். அடிப்படையில், ஒரு கவிதைக்குள் இயங்கும் அனைத்து வரிகளுக்குள்ளும் ஒரு உள்நீரோட்டம் இருக்கவேண்டும்; அதில் இயங்கும் இமேஜ்களுக்குள் ஓர் ஒருங்கிணைவு இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இப்போதெல்லாம், கவிதைக்கு ஒரு ‘இமேஜ்’ போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அந்த அனுபவத்திலிருந்து வாசகர்கள் அந்தக் கவிதையை  நீட்டித்துக்கொள்ளட்டுமே என்று தோன்றுகிறது.”

“உடன் எழும் எல்லாச் சித்திரங்களையும் ஏற்பீற்களா?”

“எப்போதுமே எழுத உட்காரும்போது, நனவிலியிலிருந்து பல இமேஜ்கள் எழுந்து வரும். தொலைந்த ஒன்றை கிணற்றில் தேடப் போய், வேறு எதிர்பாராத என்னென்னவோ கிடைக்குமே, அதுபோல தொடர்பற்ற பல இமேஜ்கள் வரும். ஆனால், கவிதைக்குள் நான் அனைத்தையும் அனுமதிப்பதில்லை. இது நமது இமேஜ் என்று அதை செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்கக் கூடாது என்பது என் கருத்து. தேவையில்லை என்றால், கவலைப்படாமல் வெட்டி எறியவேண்டும். சிலர் இதற்குத் துணிவதில்லை. அப்படியான கவிதைகளை வாசிக்கும்போதே தெரியும். அப்படிப் பல சித்திரங்களை நிராகரிக்க ஒரு பக்குவமும் துணிவும் வேண்டும். எல்லாவற்றையும் செல்லம் கொஞ்சினால் கவிதை தேறாது. இன்றைய பின்நவீனத்துவ முறையில், அப்படியெல்லாம் ஒவ்வொரு இமேஜுக்குள்ளும் ஒருங்கிணைவு இருக்க வேண்டிய அவசியமில்லை. அதை வாசகன் செய்துகொள்வான் என்று வாதிக்க முடியும். அவரவருக்கான பாதையில் அவரவர் செல்லலாம். யாருக்கும் தடையில்லை.”

“எழுத வாய்ப்பில்லாத நிலையில் குறிப்புகளாக எழுதிவைக்கப்படும் ‘மனநிலைகள்’ பின் எழுத உட்காரும்போது, அதே உயிர்ப்புடன் இருப்பதில்லையே?”


“பெரும்பாலும் இருக்காதுதான். அப்படிப் போன பல குறிப்புகள் உண்டு. பேருந்தில் முன்னிருக்கையில் இருக்கும் குழந்தை நம்மைப் பார்த்துச் சிரிப்பதும், கைநீட்டுவதும், சேட்டை பண்ணுவதுமாக இருக்கும். அந்த சூழல், அனுபவம், உணர்வுகள் தருகிற பொறியை, வரியை அப்போதே எழுத வாய்ப்பிருக்காது. வீட்டுக்கு வருவதற்குள் நமக்கு நிறைய விஷயங்கள் நடந்துவிடும். குழந்தை தந்த அதே பரவசம் நம்மிடம் இப்போது மீண்டும் உருவாகும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதேசமயம், பல மாதங்கள், வருடங்கள் கழித்து அன்றைய தருணத்தைவிட அழகான, ஆழமான ஒரு சித்திரமாக அந்தக் குழந்தை நமது கவிதைக்குள் தவழ்ந்துவருவதும் உண்டு. கலையில் பயிற்சிகள் அவசியம்தான் என்றாலும், எல்லா நேரங்களிலும் பயிற்சி கைகொடுப்பதில்லை.”

“பலரும் சாதாணமாகக் கடந்துசென்றுவிடுகிற காட்சிகள்கூட, உங்கள் கவிதைகளுக்குள் நுட்பமாக இடபெற்றுவிடுகின்றன. இது எப்படி சாத்தியமாகின்றனது?”


“எந்தவொரு நிகழ்விலும் நுட்பமான ஏதோ ஒரு இடம் இருக்கும். ஒரு காட்சி, ஒரு ஃப்ரேம் இருக்கும். எல்லோரும் குடித்துவிட்டு, சண்டைபோட்டு கலைந்துசென்றுவிடுகிற காட்சியில், கடைசியாக அனைந்துகிடக்கிற பல்வேறுவகைப்பட்ட அளவிலான சிகரெட் துண்டுகள், ஒரு நுட்பமான காட்சியாக மிஞ்சுகிறதல்லவா? எல்லோரும் புறப்பட்டுச் சென்றதும், அங்கிட்டும் இங்கிட்டுமாக சுழல்கிற பிளாஸ்டிக் குவளையின்  லயத்தில், தனிமையில் ஒரு நுட்பம் இருக்கிறதல்லவா? எப்போதும் விஷயம் சொல்லப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. நம் கவனம் முக்கியம்.”

“கவிதை என்பது, யாரும் பழகிக்கொள்ள முடிந்த ஒரு கலைதான் என்று நம்புகிறீர்களா? தமிழில் அது சார்ந்த நிறைய நம்பிக்கைகளும் மர்மங்களும் உண்டு. பிறப்பினால் வருவது என்கிற நம்பிக்கைகூட உண்டு. அதனால் கேட்கிறேன்...”


“பிறப்பின் வழியே ஒருவன் கவிஞனாக ஆவதில்லை. அதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கற்றுக்கொள்வதன் வழியே, ஈடுபடுவதன் வழியே, தொடந்து முயற்சிப்பதன் வழியே மட்டுமே உருவாக முடியும். யார் எங்கு பிறந்தால் என்ன? என்னுடன் எத்தனை நண்பர்களோ வாசிக்க வந்தார்கள். நான் மட்டும்தான் தொடந்து முயன்றேன்; கவிஞன் ஆனேன். வண்ணதாசனுடன் பழகிய எல்லோருமா கவிஞராகிவிட்டார்கள்? கலை எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் வாய்க்கக்கூடியது. யாரும், எப்போதும், எந்த வயதிலும் கவிஞனாகலாம்.”

“எந்த விஷயம் கவிதைக்குள் உங்களைத் தீவிரமாகத் தள்ளுகிறது?”


“சோகபாவம்தான் அதிகம் என்னைக் கவிதைக்குள் ஈர்க்கிறது. ‘கண்ணீர்விட வசதியில்லாத சொர்க்கம் வேண்டாம்’ என்பார் தாகூர். மகிழ்ச்சியின் காலம் குறைவானது; முழுமையாக அனுபவிப்பதற்குள் கரைந்துபோவது. சோகம் அப்படியல்ல.”

பாலுணர்வு - வன்முறை என்ற இரண்டு அம்சங்கள் உங்கள் படைப்புகளில் தீவிரம் கொண்டிருப்பவை. ஒருவகையில் நிரந்தரமான மானுடப் பிரச்னையும்கூட. இது நேர்ந்தது குறித்து இன்னும் விரிவாகச் சொல்ல முடியுமா?”

“வன்முறை என்பது தன்னைத்தானே வதைத்துக்கொள்வது. அது எனக்குக் காதல் தோல்வியிலிருந்து வந்திருக்கலாம். பாலியலைப் பொறுத்த வரை தொடக்கத்திலிருந்தே ஒளித்துவைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதுதான் என் நிலைப்பாடு.

‘காயங்களுடன் கதறலுடன்
ஓடி ஒளியுமொரு பன்றியை
துரத்திக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்’


இந்த எனது கவிதையில் செயல்படும் மனதை, ஒரு கட்டுடைப்பில் ‘செக்ஸ் & வயலன்ஸ்’ என்று சொல்கிறார்கள். நீங்கள் கேள்வியிலேயே குறிப்பிடுவதுபோல, இவை இரண்டும், பொதுமானுடத் தன்மைதான்.கலாப்ரியாவுக்கு மட்டுமேயானதில்லை. தமிழ்ச் சூழலில் சிலர் சொல்லி சொல்லி வன்முறைக்கும் பாலியலுக்கும் என்னை பிராண்ட் ஆக்கிவிட்டார்கள்.” (சிரிக்கிறார்)

“கவிதைக்கான கருவை மற்ற கலைவடிவங்க ளிலிருந்து பெறுவதுண்டா?”

“நிச்சயமாக. கலையில் நமக்கான செய்திகள் வெளிப்படுகிற இடங்கள் உண்டு.  ஓவியத்தைப் பற்றியோ இசையைப் பற்றியோ  எனக்கு ஆழமான அறிவு கிடையாது என்றாலும், ரசனை உண்டு. எனக்கென்று ஒரு பார்வை உண்டு. ஓவியங்களிலிருந்து சில சலனங்களையும் இசையிலிருந்து ஒரு மனநிலையையும் (Mood) பெறுகிறேன். பிற கலை வடிவங்களிலிருந்து நேரடியாக கவிதைக்கு நாம் எதையும் பெற முடியாது. அவை கலைக்கான ஒரு மனநிலையைத் தரும். அதிலிருந்து நிறைய எழுதியிருக்கிறேன்.”

“பேச்சுவழக்கை, கவிதைக்குள் கொண்டுவரும் வடிவத்தை எப்படி அடைந்தீர்கள்... உங்களுக்கு அந்த வகையில் முன்னோடி யார்?”

“நிச்சயமாக முன்னோடி இருக்கிறார். கி.ராஜநாராயணன். அவர்தான், ‘பேச்சுவழக்கைப் படைப்பில் எழுதணும்பா’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் அது உவப்பானதாகத்தான் தோன்றியது. அப்படி நிறைய எழுதிப் பார்த்தேன், வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்தேன்.”

“அய்யோ... நாம் கவிஞனாக ஆகாமலிருந்திருந்தால், இந்த வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று நினைத்ததுண்டா?”


“சமீபமாக அப்படிப் பலமுறை நினைத்துக்கொள்கிறேன். இதுவும் இல்லாமல் போயிருந்தால், அடையாளமே இல்லாத சாதாரணமான ஒருவனாக இருந்திருப்போமே என்ற எண்ணம் வருகிறது. வாழ்க்கையில் சில தொந்தரவுகள் வரும்போது, கவிஞராக இருப்பது உதவியாக இருக்கிறது. அந்தத் தொந்தரவான சூழலையும் கவிதையாக்க முடிகிறது.” (சிரிக்கிறார்)

“அதேசமயம், கலைமனம்தான் நமக்கு இவ்வளவு துயரைத் தந்திருக்கிறது என எப்போதாவது நினைத்ததுண்டா?”


“வெகு சொற்பமான பொழுதுகளில் தோன்றியதுண்டு. ஆனால், பெரிய துன்பங்களையெல்லாம் கவிதைமனம் ஒருபோதும் தந்ததில்லை. லௌகீக வாழ்க்கைக்கு இடைஞ்சலாகவும் ஒருபோதும் இருந்ததில்லை.”

“ ‘குற்றாலப் பதிவுகளி’ன் முக்கியமான பங்களிப்பாக எதைக் குறிப்பிடுவீர்கள்?”

“கோட்பாடுகளும் அதைப் பற்றிய உரையாடலும் ஒரு தரப்பினருக்கேயானது  என்ற பிம்பத்தை அது உடைத்தது. இலக்கியம் பற்றிய கோட்பாட்டு அறிவை, அது சார்ந்த உரையாடலை ஜனநாயகப்படுத்தியது. அந்த சந்திப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களுக்கு அது பிரயோஜனமாக இருந்தது. அந்தச் சந்திப்புகளின் தாக்கத்தை ஜெயமோகன், கோணங்கி எஸ்.ராமகிருஷ்ணன், யவனிகா ஸ்ரீராம்,   போன்ற பலரும் இன்றைக்குக் குறிப்பிடுகிறார்கள். அரங்குகளில் விவாதிக்கப்பட்டதைவிடவும் அரங்குக்கு வெளியே நடந்த உரையாடல்களும் விவாதங்களும் தீவிரமானவை. அமைப்பியல், பின்நவீனம், கட்டுடைப்பு, எதிர்க்கவிதை, ஆட்டோ பொயட்ரி எனப் பல்வேறு கோட்பாடுகளைப் பற்றிய உரையாடல்கள் அங்கு சாத்தியப்பட்டன.”

“எந்தக் கலைவடிவம் குறித்து அதிகம் உரையாடப்பட்டது?”

“தொடங்கியது கவிதைப் பட்டறையாகத்தான். ‘கவிதை பற்றியே பேசுகிறீர்களே, மற்ற வடிவங்களையும் சேருங்கள்’ என எல்லோரும் சொன்னதும், நான்காம் ஆண்டிலிருந்து கதை, கவிதை, கட்டுரை என்ற மூன்று குறித்தும் பேசுவதாக அரங்குகளை அமைத்தோம். அப்போதும், நாடகத்தை விட்டுவிட்டீர்களே என்று சொன்னார்கள். என்ன செய்வது, நேரப் பற்றாக்குறைதான். மூன்று நாள்கள் தங்கியிருப்பது என்பது வந்து செல்பவர்களுக்குச் சிரமமாக இருந்தது. நடைமுறை கஷ்டங்கள், தொடர்ந்து சந்திப்பை நடத்த அனுமதிக்கவில்லை.”

“ ‘கசடதபற’ - ‘வானம்பாடி’ இரண்டிலும் எழுதியிருக்கிறீர்கள். வெகுசன இதழ்களிலும் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி என்ன அடையாளம் வைத்திருக்கிறீர்கள்?”

“எங்கு எழுதினாலும், எப்போதும் நான் என்னுடைய எழுத்துகளைத்தான் எழுதிவந்திருக்கிறேன்.” (சிரிக்கிறார்)

“உங்களது கவிதைகள் மீது அன்றைக்கு  என்ன மாதிரியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன?”

“தாகூரின் பாதிப்புகள் என்னிடம் அதிகம் இருந்ததாகச் சொல்லப்பட்டது. ஞானக்கூத்தன் அவரது பேச்சில், எழுத்தில், தாகூரின் கெட்ட பாதிப்பு என்னிடம் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒருவகையில் அது உண்மைதான். நோட்டில் எழுதிவைத்திருக்கும் கவிதைகளில் எது என்னுடையது எது தாகூருடையது என்று தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது. அழகு என்று நினைத்து திருஷ்டிப் பொட்டுவைக்க, கரும்புள்ளி செம்புள்ளி மாதிரி ஆகிவிட்டது. 

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியாகல்விப்புலத்திலிருந்து, கலாப்ரியா செக்ஸ் கவிதைகள் எழுதுபவர் என்று சொன்னார்கள். தமிழில் ‘முலை’ எனும் வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் என்று கிண்டல்செய்தார்கள். ‘தேன்மழை’ என்ற மாணவர் பத்திரிகையில், ஒரு கேள்விக்குப் பதில்சொல்லும் விதமாக,  ‘அப்படியான கவிதைகளை எழுதத்தான் ‘முலை ஸ்பெஷலிஸ்ட்’ கலாப்ரியா இருக்கிறாரே’ என்று எழுதியிருந்தார்கள்.

பிறகு, ‘அழகாய்  இல்லாததால் / அவள் எனக்குத் / தங்கையாகிவிட்டாள்’ என்ற கவிதையைப் போட்டு நாயடி பேயடி அடித்தார்கள். அழகாக இருந்தால் தங்கையுடன் படுத்துப்பியா? என்றெல்லாம் கேட்டார்கள். கவிதை என்ன சொல்ல வருகிறது என்று புரிந்துகொள்ளவே இல்லை. இன்றைக்கு வரைக்கும் அந்தக் கவிதையை தவறான பாதையில் இழுந்துவந்துகொண்டிருக்கிறார்கள்.”
 
“அந்தக் கவிதையில் இயங்குவது ஒரு ஆணின் self confession அல்லவா?”

“ஆமாம். எத்தனை முறை சொல்வது? பிறகு, ஒருகட்டத்தில் அலுத்துவிட்டது.”

“மூன்று தலைமுறை கவிஞர்களைப் பார்த்திருக்கிறார்கள். தமிழ்க் கவிதைப் போக்கு எப்படி இருக்கிறது?”

“நிச்சயமாக போக்கு சீராகத்தான் இருக்கிறது. நிறைய நல்ல கவிதைகள் எழுதப்படுகின்றன. முகநூலில்கூட மிகச் சிறந்த கவிதைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால், சூழலில் புதிய நல்ல ‘கவிஞர்கள்’ வருவதுதான் குறைந்துவிட்டது. அதற்கான காரணம் என்னவென்று ஆராய வேண்டும்.”

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

“ ‘கொங்குதேர்’ தொகுப்பில் முக்கியமான கவிஞர்கள் சிலர் விடுபட்டுள்ளார்கள் என்றொரு குற்றச்சாட்டு எழுந்ததே... அது பற்றிய உங்கள் கருத்து என்ன?”

“அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. முதல் தொகுப்பு வரும்போதே, வசந்தகுமார் அண்ணாச்சியிடம், ‘பிரம்மராஜன் போன்றோரைச் சேர்க்கலாமே’ என்று உரிமையினால் கேட்டுக்கொண்டேன். அவர், ‘இது முழுக்க ராஜமார்த்தாண்டனின் தேர்வு. அவர் பிரம்மராஜனுடையவை, கவிதைகளாக இல்லை எனச் சொல்கிறார். நான் என்ன செய்ய முடியும்... சரி, அப்படி ஒரு விமர்சனமும் வரமட்டுமே’ என்றார்.

அது அவரின் நிலைப்பாடு. அப்படியும் ஒரு பார்வை இருந்துவிட்டு போகட்டுமே. அது போன்ற ஒரு தேர்வுமுறையைத்தான் இந்தத் தொகுப்புக்கும் முன்வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அதில் நமக்கு ஏற்பில்லை என்றால், அதற்குப் பதிலீடாக இன்னொரு தொகுப்பைக் கொண்டுவர வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்?”

“தாமதமாக உரைநடை எழுத வந்ததாக நினைக்கிறீர்களா?”

“ஆமாம். பல விஷயங்களைக் கட்டுரைகளில் காலிபண்ணிவிட்டோமோ என்கிற எண்ணம் வருகிறது. ஏனெனில், சினிமா சார்ந்த கட்டுரைகளிலும்கூட என் வாழ்க்கைச் சம்பவங்களை இணைத்துதான் எழுதினேன். நாவலுக்கான பல பாத்திரங்களை அதில் எழுதிவிட்டேன். எல்லோரும், ‘இரண்டாவது நாவல் எப்போது?’ எனக் கேட்கும்போது, ஏற்கெனவே எழுதிய கதாப்பாத்திரங்கள் திரும்பவும் வந்துவிடாமல் இருக்க மூளையைக் கசக்க வேண்டியதாக உள்ளது.”

“ ‘வேனல்’ நாவல், எவ்வளவு புனைவு, எவ்வளவு நிஜம்?”

“80 சதவிகிதம் புனைவுதான். ஆனால், நான் பார்த்த 1955 - 1965 வரையிலான திருநெல்வேலியின் வாழ்க்கை. எனக்கு அறிமுகமான வாழ்க்கை.”

“‘வேனலில்’ ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கைதான் பெரிதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால்...”


“உண்மைதான். அதனால்தான், எனக்கு அறிமுகமான வாழ்க்கை என்று சொன்னேன். நாவல் இயங்கும் காலத்தில் எனக்கு அறிமுகமான உலகம், மக்கள், அவர்களின் வாழ்க்கைச்சூழல் ஆகியவற்றையே பதிவுசெய்திருக்கிறேன்.” 

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

“நாவலில் வருவதுபோல, ஒரு மலையாளப் பெண்ணை அதுவும் நாடக நடிகையை, தையல்காரரின் மகளை எப்படி ஒரு சைவ வெள்ளாளக் குடும்பம் எளிதில் உள்ளே ஏற்றுக்கொள்கிறது. இது யதார்த்தம்தானா?”

“ஏற்றுக்கொண்ட உண்மைச் சம்பவங்களும் உண்டு. ஆயினும், அந்த விஷயத்தில் பாதி புனைவும், பாதி உண்மையும் உண்டு.”

“தமிழ் இலக்கியத்தில் தலைகீழாக மாறிவிட்டதாக நீங்கள் கருதுவது எதை?”

“மொழிநடை. ஜெயகாந்தன் வரைக்கும் இருந்த ‘பிராமணிக்கல்’ மொழிநடையை தற்போது ஒரு படைப்பிலும் நீங்கள் பார்க்க முடியாது.”

“கவிதை, கட்டுரை, நாவல் உள்ளிட்ட வடிவங்களில் இயங்கும் நீங்கள், எதில் ஆத்மார்த்தமாகச் செயல்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?”


“சிறுகதை இன்னும் கைக்கு எட்டாததாகவே இருக்கிறது. நாவல் ஒன்றுதான் எழுதியிருக்கிறேன். கவிதையில்தான் பிடித்தவாறெல்லாம் இயங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.”

“ ‘வானம்பாடி’ கவிஞர்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?”


“கவிதையை அவர்கள் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லவில்லை. ஆனால், கவிதைக்குள் நிறைய பேரைக் கவர்ந்து இழுத்துவந்தார்கள். அவர்கள் சொல்லித்தான் பாப்லோ நெருடாவை எனக்குத் தெரியவந்தது. ஆனால், அத்தனை பேரில் ஒரு பாப்லோ நெருடாகூட உருவாகவில்லை. ஓர் இடத்தில் தேங்கி நின்றுவிட்டார்கள். தாண்டிச் சென்றிருக்கலாம். அதேசமயம், தமிழ்க் கவிதையில் அவர்களின் பங்களிப்பே இல்லை என்று யாரேனும் சொல்வார்கள் என்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது.” 

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

“ ‘வானம்பாடி’களுக்குப் பிறகான கவிஞர்களில் குறிப்பிடத்தக்க அரசியல் கவிஞர்கள், கவிதைகள்...”

“கவிதையே ஒரு அரசியல்தானே...என்னுடையவற்றில், ‘எட்டயபுரம்’ தொகுப்பில் பெரும்பாலும் அரசியல் கவிதைகள்தான்.  தற்போது எழுதுபவர்கள் எனக் கேட்டால் மனுஷ்ய புத்திரன், யவனிகா ஸ்ரீராம், செல்மா பிரியதர்ஷன், லிபி ஆரண்யா, போகன் சங்கர் ஆகியோர் சிறப்பாக அரசியல் கவிதைகள் எழுதிவருகிறார்கள்.”

“நினைவில் அழுத்தமாகப் பதிந்திருக்கும் பாரதிக்குப் பிறகான கவிஞர்கள் வரிசையைச் சொல்ல முடியுமா?”


“அப்படி, பாரதி என்றொரு அளவுகோலை வைத்துக்கொள்ள வேண்டுமா என்று தெரியவில்லை. அவரைப் போலவா? அல்லது அவரைத் தாண்டியா? என்றும் கேள்வி எழுகிறது. பொதுவாக, கவிதையை Free Verse-க்கு கொண்டுவந்து நகர்த்தியதின் வழி என எடுத்துக்கொண்டால், பாரதிக்குப் பிறகு ந.பிச்சமூர்த்தி வருகிறார். அவரிடமும்கூட தாகூரின் தாக்கமிருந்தது. அடுத்து பிரமிள், முக்கியமான தளத்தில் இயங்கிவர். அடுத்து, ஞானக்கூத்தனை ஓரளவுக்குச் சொல்லலாம். பிறகு, எங்கள் தலைமுறை வந்துவிடுகிறது. அதற்குப் பிறகு நான் பட்டியலிடுவது அபத்தமாகிவிடும்.”

“இந்தப் பட்டியலில் வழக்கமாக ஆத்மாநாம் பெயர் வந்துவிடும். நீங்கள் அவரை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இன்றைக்கு நாம் பிரமாதமாகக் கொண்டாடுகிற அளவுக்கு, அவரின் கவிதைகள் என்னை ஈர்க்கவில்லை. என்னை அவர் பாதிக்கவே இல்லை. ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் அவருக்கும் முன்பாக எழுதவந்த கவிஞன் நான் என்பதால்கூட அப்படி இருக்கலாம். இந்தப் பட்டியலில் கொண்டுவருவதற்கு வெளியேவைத்துப் பார்த்தால், அவர் ஒரு நல்ல கவிஞர், ட்ரெண்ட் செட்டர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், என்னால் அவரைப் பெரிய ஆளுமையாகச் சொல்ல முடியவில்லை.”

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

“இரண்டாயிரத்துக்குப் பிறகு ஏராளமான கவிஞர்கள் தமிழில் எழுதிவருகிறார்கள். கவிஞர்கள் குறித்த குறிப்பிடும்படியான அடையாளப்படுத்தல்கள் இல்லாத சூழ்நிலையில், அவர்களில் நம்பிக்கையான இயக்கம் கொண்டவர்களை அடையாளப்படுத்த முடியுமா?”

“இரண்டாயிரத்திற்குப் பின்னான என்று சொன்னால், அதற்கு முந்திய, யுகசந்தி போன்ற காலத்தையும் (Transition period) கணக்கிலெடுக்க வேண்டுமென நினைக்கிறேன். அதாவது, 90-களின் இறுதியில் வந்த கவிதைகள், கவிஞர்களையும் சேர்த்தே பார்க்க முடியும்.  இது மிகப்பெரிய பட்டியல். ஆனால், இவர்களின் கவிதைகளை ஓர் ஆரோக்கியமான பாய்ச்சலாகவே பார்க்கிறேன். இவர்கள் பெரும்பாலும் தங்கள் முன்னோடிகளிலிருந்து உள்ளடக்கம், அரசியல், வடிவம், எனப் பலவிதத்திலும் விலகிவந்திருப்பதைப் பார்க்கிறேன். தனித்த அடையாளத்துடன் விளங்குபவர்கள் சிலரை நினைவிலிருந்து சொல்கிறேன்.வரிசை குறித்தோ விடுபடல் குறித்தோ யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். தேவேந்திர பூபதி, கடற்கரய், கண்டராதித்தன், பிரான்சிஸ் கிருபா, ராணிதிலக், ஸ்ரீநேசன், செல்மா பிரியதர்ஷன், றியாஸ் குரானா, இளங்கோ கிருஷ்ணன், தக்கை பாபு, இசை, லிபி ஆரண்யா, சாம்ராஜ், முகுந்த் நாகராஜன், போகன் சங்கர், கதிர்பாரதி, தூரன் குணா, பாம்பாட்டிச் சித்தன், நேசமித்திரன், மனோ மோகன், வெய்யில், நரன், சபரிநாதன், ஃப்ராங்லின் குமார், தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நதி, லீனா மணிமேகலை, தி.பரமேசுவரி, சக்தி ஜோதி, தேன்மொழி தாஸ், பத்மஜா நாரயணன், சசிகலாபாபு, கனிமொழி.ஜி போன்றோரும் இன்னும் பலரும் நம்பிக்கை தருபவர்களாக இருக்கிறார்கள்.” 

“வண்ணதாசன் - கலாப்ரியா நட்பு, தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஒன்று. இருவருக்கும் மையமான விஷயம் என்று ஏதாவது இருக்கிறதா?”

“ஒன்று, திருநெல்வேலி. இரண்டாவது, காட்சிப்படுத்துதல். இரண்டு ஆள் உயரத்துக்கு உள்ள ஒரு மரம், கிளைகள் வெட்டப்பட்டு நிற்கிறது. அதில் கோடாரியைக் கொத்தி அப்படியே வைத்துவிட்டுச் சென்றிருந்தார்கள். அதைப் பார்த்ததும் நான் ஒரு உவமை சொன்னேன், இப்போது அது நினைவில் இல்லை. அதற்கு அவர், ‘பெண்கள் தலைசீவிக்கொண்டி ருக்கும்போது, அவசர வேலை வந்தால், சீப்பை அப்படியே தலையில் வைத்தபடி வேலை செய்வார்களே... அதுபோல் இருக்கிறது’ என்றார். காட்சிப்படுத்துதல் இருவருக்கும் ஒரு பொதுவான அம்சம்.”

“காட்சிப்படுத்துதல் என்றதும் நினைவுக்கு வருகிறது. சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்ததுண்டா?”

“திரைக்கதை எழுதும் ஆர்வமிருந்தது. ரவிசுப்பிரமணியனுடன் சேர்ந்து ‘எஸ்தர்’ ஸ்கிரிப்ட்டில் வேலைசெய்தேன். பிறகு, சாம்ராஜுடன் ஒரு திரைக்கதையில் வேலைசெய்தேன். இன்னும் எதுவும் திரைவடிவமாகவில்லை.”

“சினிமா உங்கள் வாழ்வில் நிறைய நேரத்தை எடுத்துக்கொண்டதா?”

“ஆமாம், இப்பவும்தான். ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருப்பேன், டிவியில் நல்ல படம் போட்டால், அதைப் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். நேற்றுகூட ‘தாயைக் காத்த தனயன்’ படம் ஓடியது.  ‘எதற்கு சீரியஸாக வாசித்துக்கொண்டிருக்க வேண்டும்’ என்று அப்படியே புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். ஒருவகையில் திரைப்படங்கள், பழைய நினைவுகளை மீட்கும் ஊடகங்களாக இருக்கின்றன. அப்படியே அந்த நினைவில் எழும் காலத்திற்குள் மூழ்கிவிடுவேன்.”

“திரைப்பட பாடலாசிரியர்களில் கண்ணதாசன் வைரமுத்து போன்றோர் தமிழ் ரசிகர்களை  ஆழமாகப் பாதித்தவர்கள். நவீனக் கவிஞர்கள் பலரும்கூட அவர்களை ரசிப்பதைப் பார்க்கமுடியும். விக்ரமாதித்யன், ‘கண்ணதாசனால் பாதிக்கப்பட்டு எழுதவந்தேன்’ என்று குறிப்பிடுகிறார். ஆனாலும், நவீன கவிஞர்கள் அளவுக்கு அவர்களை மதிப்பிட முடியாது என்று சொல்லப்படுவதை ஏற்கிறீர்களா?”

“பாடலாசிரியர்கள் பொதுவாகவே சொன்னதையே சொல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அல்லது பெரும்பாலும் எடுத்தாள்கிறார்கள். கண்ணதாசனின் மரபுக் கவிதைகள் ஏராளமிருக்கின்றன. அதுகுறித்து யாரும் பேசுவதில்லை. அது பேசப்பட்டிருந்தால், அதுபோலவே வைரமுத்துவும் நிறைய எழுதியிருப்பார், வாசிக்கப்பட்டிருக்கும். அவை பற்றி பேசும் சூழலும் வந்திருக்கும். இருவராலும் முடியுமென்றாலும், ஏனோ ஒரு கட்டத்தில் போதும் என்று நிறுத்திவிட்டார்கள். அதற்கு இரண்டு பக்கமும் தீவிரமாக உழைக்க வேண்டும். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தீவிர இலக்கியத்திலிருந்துதான் சினிமா பாடலாசிரியர்கள் எடுத்துக் கையாள் கிறார்கள். எப்போதும் புதிய சிந்தனைகள் தீவிர இலக்கியத்திலிருந்துதான் பிறக்கின்றன.”

“பாலகுமாரனிடம் நட்புகொண்டவர் நீங்கள். சுஜாதாவிடம் உங்கள் நூலுக்கு முன்னுரை வாங்கியிருக்கிறீர்கள். இந்த இரண்டு பேரையும் நவீன இலக்கியவாதிகள் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. நீங்கள் எப்படி இணக்கமாக இருந்தீர்கள்?”

“இருவருக்குமே தீவிர இலக்கியத்திற்கு வருவதற்கான வாசிப்புபலம் இருந்தது. ஆனால், ஒருகட்டத்தில் தனக்கு வரவேற்பு கிடைத்த இடத்திலேயே கவனம் செலுத்தி நின்றுவிட்டார்கள். பாலகுமாரனைப் பற்றி சமீபத்தில் நான் எழுதுகையில், அவர் அசோகமித்திரன்போல வந்திருக்க வேண்டியவர் என்று குறிப்பிட்டேன். பாலகுமாரனோடு பேனா நட்பு இருந்தது. சுஜாதாவுக்கு என்னுடைய ‘வெள்ளம்’ தொகுப்பை அனுப்பியிருந்தேன். அதைப் படித்துவிட்டு, ‘கணையாழி கடைசிப் பக்கங்க’ளில் எழுதினார். என்னை அவருக்கு எனது கவிதைகளால் பிடித்திருந்தது. நேரில் பார்க்கும்போது மகிழ்ச்சியடைந்தார்.”

“’வேனல்’க்குப் பிறகு செய்யவேண்டிய முக்கியமான வேலைத்திட்டம் என ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?”

“நிறைய விஷயங்களை ஆவணப்படுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக, திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்களை அகராதியாகத் தொகுக்க வேண்டும். பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். யாராவது சேர்ந்துகொண்டால் வேலை எளிதாக இருக்கும்.”

“சரி, இலக்கியத்திலிருந்து வெளியே வருவோம். காதல் பற்றிய உங்களின் பார்வை என்ன?”


“காதலை, முழுக்கக் காமம் சார்ந்தது என்று சொல்லிவிட முடியாது. என்னுடைய வாழ்க்கையில் அப்படி யோசித்துப் பார்த்ததே இல்லை. வெற்றிபெற்ற பல காதல் ஜோடிகளைப் பார்க்கும்போது, அழகோ, உடலோ அங்கே முதன்மையாக இருப்பதே இல்லை. என் எழுத்தைப் பொறுத்தவரை, காதல் என்பது வேர் போன்றது. நான் அதைப் பயன்படுத்தி பூக்களையும் கனிகளையும் பறித்துக் கொள்கிறேன். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத வேர்போல காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.”

“ ‘சசி’ என்ற நினைவுக்கு என்ன வயது?”

“முதல் வகுப்பிலிருந்து கணக்கில் எடுத்துக்கொண்டால், 62 வயதாகிறது.”

“உங்களுடைய 40 ஆண்டுகால திருமண வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்?”

“மிக மகிழ்ச்சிகரமானதாக உணர்கிறேன். எனது மனைவி, வாழ்வின் மிகச்சிறந்த உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக என்னைத் தொடந்து சகித்துக்கொண்டிருக்கிறார். வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, அவர் வேலைக்கும் சென்றது, பொருளாதார ரீதியாக பெரிதும் உதவியது. என் எழுத்துப் பணியை ஒருநாளும் அவர் தொந்தரவாக நினைத்தது இல்லை. என் எழுத்துகளுக்கு முதல் விமர்சகரும் ப்ரூஃப் ரீடரும் அவர்தான்.”

கடந்தகாலப் போராட்டங்களை இந்தத் தலைமுறை மதிக்கவேண்டும்! - கலாப்ரியா

“உங்கள் எழுத்துகளுக்குக் கடுமையான விமர்சனங்கள் எதுவும் சொல்லியிருக்கிறாரா?”

“அப்படி ஏதும் சொன்னது இல்லை. ‘வேனல்’ நாவலின் முதல் 100 பக்கத்தை எழுதிக்கொடுத்தபோது, ‘நல்லா இருக்கு. ஆனா, ‘நினைவின் தாழ்வாரங்கள்’ மாதிரி இருக்கு’ என்று சொல்லிவிட்டார்.  ‘அடடா... அப்படி இருக்கக் கூடாதே’ என  ‘கன்ட்ரோல் டெலிட்’ செய்துவிட்டேன். இது தெரிந்ததும், ‘அய்யய்யோ... நான் சொல்லியிருக்கக் கூடாதோ’ என வருத்தப்பட்டார். உங்களுக்குத் தெரியும், ‘நினைவின் தாழ்வாரங்களில்’ எதையும் ஒளிக்காமல் எழுதியிருப்பேன். பலரும் அதைப் படித்துவிட்டு, ‘உங்கள் மனைவி ஏதும் சொல்லவில்லையா?’ என்று கேட்பார்கள். ‘ப்ரூஃப் பார்த்ததே அவர்தான்’ என்று சொல்வேன். அவருக்குள் சில வருத்தங்கள் இருக்கலாம். ஆனால், இதுவரை என்னிடம் அதைக் காட்டிக்கொண்டது இல்லை.”

“உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?”

“நான், மனைவி, இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்தவள் சங்கரன்கோவிலில் டாக்டராக இருக்கிறாள். சின்னவள் பெங்களூரில் ஐ.டியில் வேலைசெய்கிறாள். மூத்தவளுக்கு இரண்டு குழந்தைகள். சின்னவளுக்கு ஒரு குழந்தை.”

“வேலைபார்த்த காலம் வரை வங்கிப் பணியை மகிழ்ச்சியோடு செய்தீர்களா?”


“நிச்சயமாக. அதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், மாலை ஐந்து மணியோடு அன்றைக்கான வேலை முடிந்துவிடும். பிறகு வேலை குறித்து எதுவும் சிந்திக்க வேண்டியதில்லை. எவ்வளவு பெரிய விடுதலை... அதனாலேயே பொறுப்புகள் அதிகமுள்ள பதவிஉயர்வுகள் வந்தபோதும் நான் மறுத்துவிட்டேன். வீட்டில் மனைவியும் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால், இந்த முடிவை இலகுவாக எடுக்க முடிந்தது. நிறைய எனக்கான நேரத்தை வழங்கிய வேலை என்பதால், மகிழ்வாகவே செய்தேன்.”

“உங்களின் ஆன்மிகம் என்பது என்ன?”


“கூட்டமில்லாத கோவில்களுக்குச் செல்ல பிடிக்கும். தனியாக இருக்க விரும்புவேன். சடங்குகள், மூடநம்பிக்கைகள் பக்கம் செல்வதில்லை. 32 வருடங்களாக சபரிமலை கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு சென்றிருக்கிறேன். அந்தக் கூட்டுக்களியில் ஒரு சந்தோஷமிருக்கிறது. அதேசமயம், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மாட்டேன் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மற்றபடி அமைதியும் தேடலும்தான் எனது ஆன்மிகம்.”

“ஒரு கவிஞராக வாழ்வில் பெருமிதமாக உணர்ந்த தருணங்கள் பற்றி...”

“நகுலன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன் எனத் தொடக்கத்திலிருந்தே பெரியவர்களின் பாராட்டுகள் கிடைத்தது எனக்குக் கிட்டிய பேறு. கலைஞர், தமிழறிஞர்கள், பெரிய ஆளுமைகள் சூழ, பெரிய மேடைகளில் இருக்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தால், பரவசமாகிவிடுவேன். அவ்வளவு   பெருமிதமாக இருக்கும். இன்னும் இரண்டு வரிகள் பாடினால், அழுகைவந்துவிடும் போலிருக்கும். எழுத்துதானே நம்மை இந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிற்க வைத்திருக்கிறது என நினைப்பேன்.”

“தமிழ் இலக்கியப் பாதையில் என்னவாக அடையாளப்பட விருப்பம்?”

“எல்லா வகையிலும் எழுதிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், கவிஞன் என்ற அடையாளம் நிலைத்தாலே போதும்.”

“திருநெல்வேலி, தாமிரபரணி என்பது உங்கள் வாழ்க்கையில் என்ன மாதிரியான படிமமாக இருக்கின்றன?”

“தாய்மடி என்பதாக...”

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுமக்களில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தூத்துக்குடியே ஸ்தம்பித்துப்போய்க் கிடக்கிறது. இந்தச் சூழலை ஒரு படைப்பாளியாக எப்படி உணர்கிறீர்கள்?”

‘‘இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு, தமிழகத்தில் நடந்திருக்கும் முக்கியமான தன்னெழுச்சிப் போராட்டமாகவே இதைப் பார்க்கிறேன். அதேசமயம், அப்போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளைவிடவும் கொடூரமான வகையில் இன்றைக்கு மக்கள் ஒடுக்கப்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அன்றைக்கு மனதிலும் உடலிலும் உண்டான பதற்றத்தையும் ஆற்றமையையும் கோபத்தையும் இப்போதும் அப்படியே உணர்கிறேன். மத்திய அரசு, இந்தப் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட அளவிற்குக்கூட மாநில அரசு உணரவில்லை. ஒடுக்குமுறையின் செய்திகள் பரவி, தனக்குக் கெட்டபெயர் வருமென்று இணையசேவையை முடக்கச்செய்திருப்பது மத்திய அரசுதான் என்றே யூகிக்கிறேன்.  மாநில அரசுக்கு அந்த அளவுக்குக்கூட பயமில்லை. காஷ்மீருக்குப் பிறகு, மூன்று மாவட்டங்களுக்கு இணையசேவை முடக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் மட்டும்தான். இந்த ஜனநாயகமற்ற ஒடுக்குமுறையை, உண்மையை, கலைஞர்கள் எழுத்தின் வழியே எங்கும் எடுத்துச் செல்லவேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு