Published:Updated:

`பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ்

`பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ்
`பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ்

``உடல் ஓவியம், கேலிச்சித்திரம், காபி ஓவியம், துணி ஓவியம், கண்ணாடி ஓவியம், குகை ஓவியம், உட்கட் ஓவியம் எனப் பல்வேறு வகையான ஓவியங்கள் இருக்கின்றன. இங்கு நீங்கள் பார்க்கப்போவது, நெருப்பு ஓவியம்! வாட்டர் கலர் என்று தண்ணீரையும் சாண்ட் ஆர்ட் என்று மண்ணையும் பயன்படுத்துகிறவர்களைப் பார்க்கலாம். ஆனால், நெருப்பைப் பயன்படுத்தும் ஓவியரைப் பார்ப்பது அரிது. `அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும்' என்பார்கள். அது இந்த நெருப்பு ஓவியத்தின் விஷயத்தில் உண்மை” என்று சொல்கிறார் ஓவியர் வசந்தகுமார்.

கடுமையான போராட்ட உலகில் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள அனைவரும் போராடுகிறோம். அந்த வகையில், கோவையைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் வசந்தகுமார், நெருப்பைக்கொண்டு ஓவியம் வரைகிறார் என்பதைக் கண்டறிந்து, அவரைச் சந்திக்கப் புறப்பட்டோம். மிகக் குறுகிய வளைவுகளுடன் ஆரம்பித்த சிவானந்தா காலணியில், கடைசி வீடு அவருடையது. வீட்டில் அவர் அறை முழுவதும் ஓவியங்கள், தூரிகைகள், கலர்கள், பட்டாசுகள், பெரிய பெரிய பலகைகளில் மாட்டிவைத்த கேன்வாஸ் பேப்பர்கள் என நிறைய பொருள்கள் இருந்தன.

``சின்ன வயசுல இருந்தே எனக்கு ஓவியம் வரைவதற்கு ரொம்பப் பிடிக்கும். அப்ப சின்னச் சின்ன கார்ட்டூன்கள்தான் வரைவேன். என் குடும்பத்தில் நான்தான் மூத்தவன். B.Sc., படிச்சுட்டு என்ன பண்றதுனு தெரியாம இருந்தப்போதான் ஓவியம் மீது ஆசை வந்தது. ஆர்.எஸ். புரத்தில் இருக்கிற ரவிராஜ் ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்து ஓவியம் கத்துக்கிட்டேன். திறமையுள்ள எல்லோரும் வரைகிறார்கள். அதில் எப்படி என்னைத் தனித்துவமாகக் காட்டுவது என யோசித்தேன். வீட்டில் இருந்த பட்டாசுகளை வைத்து ஓவியத்தில் புதுசாக ஏதாவது பண்ணலாம் என நினைத்தேன். அதில் பல வண்ணங்கள் கண்டுபிடித்தேன்.”

இந்த நெருப்பு ஓவியம் வரைய ஆரம்பித்தபோது, என் வீட்டிலும் அக்கம்பக்கத்தாரும் பயந்தனர். பிறகு, அனைவரையும் சமாதானப்படுத்திவிட்டு வரையத் தொடங்கினேன். தொடக்கத்தில் சில பல தவறுகள், காயங்கள். இப்போது எல்லாமே பக்கா... நான் எதிர்பார்ப்பதை சுலபமாகக் கொண்டுவந்துவிட முடிகிறது. முதலில் கேன்வாஸ் ஷீட்டில் அவுட் லைன் வரைந்து, அதன் மீது பட்டாசு மருந்துப் பொருள்களைத் தூவி நெருப்பைப் பற்றவைத்து அதற்கு நிறம் கொடுப்பேன். தேவையான நிறம் வந்தவுடன் குறிப்பிட்ட நேரத்தில் அதை அணைத்துவிடுவேன். இது பல வண்ண கலர்களாகக் கிடைக்கும். இறுதியில் தேவையற்ற பொருள்களை நீக்கிவிட்டால், ஆபத்தான நெருப்பு அழகான ஓவியமாக மாறியிருக்கும். பட்டாசு மருந்தைத் தவிர வேறு எதையுமே பயன்படுத்துவதில்லை.

இதுபோல பல ஓவியங்கள் வரைந்து ஓவியக் கண்காட்சியில் வைத்துள்ளேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள ஓவியக் கண்காட்சிகளிலும் கலந்துகொண்டுள்ளேன். இதன் மூலம் பலரது பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றுவிட்டேன். கலைத்துறையில் எனக்கென தனி இடத்தைப் பிடிப்பதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். தற்போது தென்னிந்தியாவில் உள்ள ஒரே நெருப்பு ஓவியர் நான் மட்டும்தான் என்பதில் மிகுந்த பெருமை'' என்கிறார் நெருப்போவியர்.

நெருப்பு ஆபத்தானது என்று சொல்லும் நேரத்தில், ஒருவர் நெருப்பிலிருந்து கலையைப் படைக்கிறார். பட்டாசுகளைப் பயன்படுத்தி ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டும் இவருக்கு மட்டும் தினம் தினம் தீபாவளிதான்… வாழ்த்துகள் சகோ!