Published:Updated:

`வே.பாபுவோட இறுதி அஞ்சலியில் சொந்தக்காரங்களை விட நண்பர்கள் அதிகம்!'- சிபிச்செல்வன்

`வே.பாபுவோட இறுதி அஞ்சலியில் சொந்தக்காரங்களை விட நண்பர்கள் அதிகம்!'- சிபிச்செல்வன்
`வே.பாபுவோட இறுதி அஞ்சலியில் சொந்தக்காரங்களை விட நண்பர்கள் அதிகம்!'- சிபிச்செல்வன்

``அவரோட காதலி இறந்ததுக்கு அப்புறம் அவர் தன்னைப் பத்தின பெரிய அக்கறை இல்லாமலே இருந்தாரு. அவரோட அப்பா, அம்மா, தம்பி, அக்கா எல்லாதுக்கும் உதவியா கடையைப் பாத்துக்கிட்டாரு.’’

``சற்று முன்
இறந்தவனின்
சட்டைப்பையில்
செல்போன்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது

கையில் எடுத்த
காவலர்
``சார் யாரோ
அம்முன்னு கால் பண்றாங்க"
என்கிறார்

ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து
மூடுகின்றன."

- வே.பாபு 

இந்தக் கவிதை இன்று பலரின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் வரிகளாக நிற்கின்றன. கவிஞர் தக்கை வே.பாபு நேற்று முன் தினம் இயற்கை எய்தினார். அவரது பிரிவைத் தாங்க இயலாத அவரது நண்பர்கள் பலரும் அவரின் நினைவுகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். `நடித்தது போதும் நண்பா' எழுந்து வா எனவும், `உன் கவிதையில் வரும் தான்யா அழைக்கிறாள் எழுந்துவா' எனவும் இனி ஒருபோதும் திரும்பி வராத தன் நண்பனை அழைத்துப் பார்க்கிறார்கள். மரணத்தின் கோர முகம் ஒருவரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்று, அவர்  நமக்கு எவ்வளவு முக்கியமானவர்,  அவரது இழப்பு நம் வாழ்வில் எந்த அளவுக்கு ஈடு செய்ய முடியாதது என அச்சுறுத்தும். 

அவரது நினைவுகளைப் பற்றி, அவரது நண்பரும் மலைகள்.காம் -ன் ஆசிரியருமான சிபிச்செல்வனிடம் பேசினோம். தனது நண்பனின் இறுதி அஞ்சலிக் கூட்டத்தை முடித்துவந்தவரிடம் கனத்த இதயத்துடன் நம்மிடம் பேசினார். ``பொதுவா கவிஞர்கள், எழுத்தாளர்கள் இறந்துட்டா அவங்க இறுதி அஞ்சலிக்கு மிகச் சொற்பமான பேர் கலந்துகிட்டாங்கனு சொல்வாங்க. ஆனா, பாபுவோட இறுதி அஞ்சலிக்குச் சொந்தக்காரங்கள விட நண்பர்கள் அதிகமா கலந்துகிட்டாங்க. பாபுவுக்கு எல்லாமே நண்பர்கள்தான். நானும் பாபுவும் ஒரே ஊர். `மாமாவை ஆட்டோல ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறாங்கப்பா' னு என் பையன் வந்து சொன்னான். வேகமா கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போனேன். அவனோட இதயத்துடிப்பு எந்த ஏற்ற, இறக்கமும் இல்லாம ஒரே கோடா இருந்தது. அவரோட காதலி இறந்ததுக்கு அப்புறம் அவர்  தன்னைப் பத்தின பெரிய அக்கறை இல்லாமலே இருந்தாரு. அவரோட அப்பா, அம்மா, தம்பி, அக்கா எல்லாத்துக்கும் உதவியா கடையைப் பாத்துக்கிட்டாரு. தக்கை சிறுபத்திரிகை, தக்கை பதிப்பகம்னு நிறைய பண்ணிட்டு இருந்தாரு. இலக்கிய வட்டத்துல அவருக்கு நிறைய பேர் நண்பர்கள்தான். அடிக்கடி அவங்கள கூப்பிட்டு இலக்கியக் கூட்டம் நடத்துவாரு. பாபு இல்லாதது நிறைய பேத்துக்குப் பெரும் அதிர்ச்சியாவும், வலியாவும் இருக்கும். நண்பர்கள் பாபுவை மறக்கறது கஷ்டம்." என்றார் வேதனையுடன்.

கவிஞர் பாபுவின் சொந்த ஊர் சேலம் அம்மாப்பேட்டை. டிப்ளோமா இன் டெக்ஸ்டைல் டெக்னாலஜி முடித்துவிட்டு, மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்திருக்கிறார். மில்லில் குழந்தை தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதை மனம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் வேலையைவிட்டு வந்துவிட்டார். 

அதன் பிறகு சேலம் அம்மாபேட்டையில் பூக்கடை நடத்தி வந்தார். தனது காதலியின் மரணத்துக்குப் பிறகு முழுக்க கவிதைகளும், நண்பர்களும் என வாழ்ந்து வந்துள்ளார் பாபு. கவிஞர், சிற்றிதழாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பாபு தனது `மதுக்குவளை மலர்’ என்னும் தொகுப்பின் மூலம் பரவலாகக் கவனம் பெற்றார். தனது காதலியின் நினைவுகளுடேயே வாழ்ந்துவந்த பாபு திருமணம் செய்து கொள்ளவில்லை. இலக்கியக் கூட்டம் நண்பர்கள் எனத் தனது வாழ்வை நிறைத்துக் கொண்டவர்.  

மற்ற துறைகளில் இருப்பவர்களை விட கலைஞர்களின் வாழ்வு எந்த அளவுக்கு சுவாரஸ்யமானதோ, அதே அளவுக்குத் துயரமானதும்கூட. அதிலும் கவிஞனின் உலகம் மாயங்கள் நிறைந்தது. எதையும் சற்றே  ஆழமாகப் பார்க்கும் கண்களைப் பெற்றது கவிஞர்களின்  ஜென்ம சாபம் அல்லது வரம். அவர்களின் அக உலகம் சதா எதையாவது அசைபோட்ட படியே கிடக்கும். அது பெரும்பாலும் தன்னைப் பற்றியோ, தனது குடும்பத்தைப் பற்றியோ இருப்பதில்ல. கவிஞன் மனிதனின் ஒட்டுமொத்த துயரையும், தன் துயராகப் பார்ப்பவன். அவன் தன் மனதினுள் இந்த வெளியையும், ஒட்டுமொத்த வெளியையும் தன் மனதாகவே பார்ப்பவன். கவிஞர் பாபுவின் கவிதை ஒன்று பெருந்துயரை நமக்குக் கடத்தும்.

``தன்யாவுக்கு வயது 
எட்டு நாட்கள்

இன்குபேட்டரிலிருந்து
ஆறாவது நாளில் 
வெளியே வந்தாள்

கால் கண்கள் திறந்த நிலையில் 
உங்களைத்தான் பார்க்கிறாள் 
என்கிறாள் 
அவள் அம்மா

உடலெங்கும் 
ட்யுப்களால் 
பேசிக் கொண்டிருப்பவள் 
அரை குறையாய் 
பற்றிக் கொள்கிறாள் 
சுண்டு விரலை

ஐயோ தன்யா
இந்த சுண்டு விரலை 
கெட்டியாய் பிடித்துக் கொள்ளேன்

என்னைக் காப்பாற்றேன் "

வாழ்வு குறித்த தீராத தேடல்களும் கேள்விகளும் , வாழ்வின் துயர்களும் கவிஞனை அவ்வளவு எளிதாகக் கடந்து வர விடுவதில்லை . எல்லாக் கலைஞர்களின் அஞ்சலிக் கூட்டங்களிலும் வழக்கமாக ஒன்று சொல்லப்படும். கலைஞர்கள் என்றும் மரணிப்பதில்லை. அவர்களது படைப்புகளின் வழியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று. ஆனால், யதார்த்தத்தில் நினைவுகள் அப்படி எதையும் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல அனுமதிப்பதில்லை. காலம் உலகிலிருந்து ஒருவரை விடுவித்து, பலரின் மனதில் அவரை விதைத்து விடுகிறது. பலரின் மனதும் இப்படிப் பலரையும் சுமந்தபடியே காலம் கழிக்கிறது. நண்பர்களின் மனதில் நிரந்தரமாய்த் தங்கிக் கொள்ளுங்கள் பாபு. 

அடுத்த கட்டுரைக்கு