Published:Updated:

“நான் கலைஞர்களுக்காக வாதாடுபவன்!”

“நான் கலைஞர்களுக்காக வாதாடுபவன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் கலைஞர்களுக்காக வாதாடுபவன்!”

வெ.நீலகண்டன் - படங்கள்: பா.காளிமுத்து

விஞர், ஓவியர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்குபவர்  இந்திரன்.  அதிகம்  வாசிக்கப்படாத ஆப்பிரிக்கப் போராளிப் படைப்பாளிகளின்  எழுத்துகளையும்,  மூன்றாம் உலக இலக்கியங்களையும், மராத்தி, குஜராத்தி தலித் இலக்கியங்களையும் தமிழுக்குக் கொண்டுவந்தவர். 

பார்த்ததும் மனதுக்கு நெருக்கமாகிவிடும் எளிமையும், மிகையில்லாத அன்பும் இந்திரனின் அடையாளங்கள். எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கும் இந்திரன்,  எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளுமை.

“நான் கலைஞர்களுக்காக வாதாடுபவன்!”

“70  வயதைக் கடந்திருக்கிறீர்கள். வாழ்க்கை நிறைவாக இருக்கிறதா?”

“இந்த வாழ்க்கை என்னுடையது மட்டுமல்ல; நிறைய நல்ல மனிதர்கள் வடிவமைத்துத் தந்தது. சின்ன வயதிலேயே பெரிய பெரிய ஆளுமைகளோடு சரிக்குச் சமமாக அமரும் வாய்ப்பு கிடைத்தது. 15 வயதுக்குள்ளாகவே எழுத ஆரம்பித்துவிட்டேன்.  ஏறக்குறைய 55 ஆண்டுகள்... ஒரு படைப்பாளியாகத் தொடர்ந்து நிலைத்திருக்க என் குடும்பம்தான் காரணம். எதையேனும் எழுத வேண்டும்; யாரையேனும் கொண்டாட வேண்டும்; எங்கேனும் அது நிலைத்துப் பேசப்பட வேண்டும். அந்த அற்ப சந்தோஷம்தான் திரும்பத் திரும்ப எழுதத்தூண்டுகிறது. இந்த சந்தோஷத்துக்காக நிறைய இழந்திருக்கிறேன். பணி உயர்வைப் பறிகொடுத்திருக்கிறேன். ஒரே நல்ல விஷயம், பிள்ளைகளை நல்ல விதமாக வளர்த்தது. அதில் என் பங்கென்று பெரிதாக எதுவுமில்லை. மனைவி வாணிதான். தாய்மாமா மகள். அவள் இல்லாவிட்டால் எதுவுமே இல்லை. நான் எழுதுவதற்கு அமர்ந்தால் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஓர் அறைக்குள் போய்விடுவாள். இப்போதும், அப்பன் செய்வது உதவாக்கரை வேலை என்று அவர்கள் நம்பவில்லை. அந்த நம்பிக்கை தான் இன்னமும் எழுத ஆதர்சமாக இருக்கிறது..”

“15 வயதுக்குள்ளாகவே எழுதுவ தற்கான சூழல் எப்படி அமைந்தது?”


“நான் வளர்ந்த விதம் அப்படி. அப்பா ஏ.பி.கஜேந்திரன், காலேஜ் ஆஃப் பைன் ஆர்ட்ஸில் படித்தவர். ராய் சௌத்ரியின் மாணவர். ஒருங்கிணைந்த சென்னை மாகாண அளவில் வாட்டர் கலரில் முதலிடம் பிடித்தவர். பெரிய முருக பக்தர். முருகனுக்கு அருகிலேயே வாழ வேண்டும் என்பதற்காக போயஸ் கார்டனில் இருந்த வீட்டை விற்றுவிட்டு வடபழனிக்கு அருகில் வீடுகட்டிக் குடிவந்தார்.  . பாரதியார் ஒரு தலித்துக்குப் பூணூல் போட்டு பிராமணர் ஆக்கினாரே, கனகலிங்கம், அவர், அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். பாண்டிச்சேரியில் இருந்து எப்போது சென்னைக்கு வந்தாலும் எங்கள் வீட்டில்தான் தங்குவார். ‘பாரதிப்புதையல்’ பத்மநாபன், கம்பதாசன் ஆகியோரும் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்கள். கம்பதாசனைப் பார்த்துதான் கவிஞனாக வேண்டும் என்ற ஆசையே எனக்கு வந்தது.  பாரதியின் கவிதை, ரவிவர்மாவின் ஓவியங்கள், வள்ளலாரின் ஆன்மிக ஒருமைப்பாடு, சிற்பி ராய் சௌத்ரியின் குத்துச்சண்டை, பாரதிதாசனின் குயில் பத்திரிகை என்று எப்போதும் ஏதோவொன்றைப்பற்றி எங்கள் வீட்டில் உரையாடல் ஒலித்துக்கொண்டே யிருக்கும். அந்தச் சூழலில் வாழ்ந்த எவரும் கவிஞனாகலாம். அதுதான் நிகழ்ந்தது.”

“நீங்கள் இயல்பில், ஒரு மினிமல் ஆர்ட்டிஸ்ட்   அந்தத் துறையை விட்டுவிலகி விமர்சனம், கவிதை என்று நகர்ந்தது ஏன்?”


“அப்பாவைப் பார்த்துத்தான் அந்த முடிவுக்கு வந்தேன்.  மாநிலத்திலேயே முதலாவது இடம்பிடித்துத் தேர்ச்சி பெற்ற அப்பாவால் ஓவியராக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியவில்லை. அப்போதெல்லாம் ஓவியருக்குப்  பெண்கூட தரமாட்டார்கள்.  சென்னை மாநகராட்சியில் வடிவமைப்பாளராகச் சேர்ந்துதான் அப்பா வாழ்க்கையை ஓட்டினார். விமர்சகனாக மாறியதற்கும் அப்பாதான் காரணம்.  அப்பாவைப்போல புலமைமிக்க பல படைப்பாளிகள்  இங்கே இருக்கிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. கே.எம்.கோபாலன், ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆர்.பி.பாஸ்கரன் மாதிரி உலகத்தரமான கலைஞர்களை நாம் பெரிய அளவில் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது.  இங்குள்ள இதழ்களில் பெட்டிச்செய்திகள்கூட அவர்களைப் பற்றி வருவதில்லை. வடநாட்டில் இன்னும் மோசம்... தமிழகக் கலைஞர்களைத் திட்டமிட்டுத் தவிர்க்கிறார்கள்.  அந்த ஆதங்கத்தில்தான் எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் என்னை  எப்போதும் நான் கலை விமர்சகன் என்று சொல்லிக்கொள்வதில்லை; நான் கலைஞர்களுக்காக வாதாடுபவன்.” 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நான் கலைஞர்களுக்காக வாதாடுபவன்!”

“தமிழில் விமர்சனம் என்ற துறையே வளராமல் போய்விட்டதே?”

“பெரும் சோகம் அது. இலக்கியத்தில்கூட சிலரைச் சொல்லலாம். கலை விமர்சனம் செய்பவர்கள் தமிழில்  மிகவும் குறைவு. விமர்சனம் செய்ய மொழி வளமை மட்டும் போதாது. கள அனுபவம் வேண்டும். நான்  ஓவியன். தவிர, நெடுங்காலம் ஓவியர்களோடும் சிற்பிகளோடும் சுற்றித் திரிந்திருக்கிறேன். கேன்வாஸைச் சுமந்துசென்று கண்காட்சிக் கூடங்களில் மாட்டியிருக்கிறேன். நிறைய வாசித்துமிருக்கிறேன்.  அதுமட்டுமல்ல, செயற்பாட்டாளனாகவும் இருந்திருக்கிறேன்.  தமிழகத்திலுள்ள நவீன ஓவியர்களின் ஓவியங்களை எடுத்துச்சென்று பாரீஸில் உள்ள ஒரு பிரபலமான பிரெஞ்சு கேலரியில்  கண்காட்சி நடத்தினேன். ‘தமிழ் ஆர்ட்’  என்று பெயர் வைப்பதற்கு பிரெஞ்சுக்காரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ‘இந்தியன் ஆர்ட்’  என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்றார்கள். அவர்களுக்குத் தமிழ்ச் சித்திரங்களின் பழைமையையும் பாரம்பர்யத்தையும் புரியவைத்தேன். 5 நாள்கள் தமிழ்ச் சித்திரக்கலை குறித்து விரிவுரையும் கொடுத்தேன். இதுமாதிரியான  அனுபவங்களின் அடிப்படையில் நான் விமர்சிக்கும் தகுதி பெறுகிறேன். அப்படியான தகுதிகளோடு இங்கே விமர்சகர்கள் இல்லை. ஆனால், உருவாக வேண்டும். அதற்காக நான் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். பிரிட்டிஷ் கவுன்சில் ஆதரவோடு, சென்னையில் உள்ள விஸ்காம் மாணவர்களுக்கு டாக்டர் பார்த்தா மிட்டர் போன்ற   உலகளாவிய விமர்சகர்களை அழைத்துவந்து, கலையை அணுகுவது குறித்துப் பயிற்சியளித்தேன். ஆனால், தொடர்ந்து அதை முன்னெடுக்க முடியவில்லை.”

“உங்கள் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் எதிர்க்கலாசாரக் கூறுகளே அடிப்படையாக இருக்கின்றன. திட்டமிட்டுத்தான் அப்படியான படைப்புகளைத் தேர்வு செய்கிறீர்களா?”


“முதலில் நான் மொழிபெயர்ப்பாளரான கதையைச் சொல்லிவிடுகிறேன். நான் தமிழ் வழியில் படித்தவன். ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராது.  ‘வானம்பாடி’  இதழை நடத்திய புலவர் கோவேந்தனும், 

ம.இலெ.தங்கப்பாவும்தான் என்னை  மொழிபெயர்ப்பு நோக்கி நகர்த்தினார்கள். சிறுவயதில் பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இடதுசாரிகள் நடத்திய அகில இந்திய பாரதி விழாவில் படித்தேன். நானும் தங்கப்பாவும் சேர்ந்து பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறு வெளியீடாகக் கொண்டு வந்தோம்.

பிற்காலத்தில் நான் தீவிர மொழிபெயர்ப்பாளனாகக் காரணம், அமெரிக்கன் லைப்ரரிதான். முழுநேரமும் அங்குதான் கிடப்பேன். அங்கு ஆங்கிலப் படைப்பாளிகளைப்போல ஆப்பிரிக்கப் படைப்பாளிகளுக்கும் தனிவரிசை இருக்கும். ஆங்கிலப் படைப்பாளிகளின் படைப்புகள்  கசடதபற-வில் மொழிபெயர்த்து வரும். ஆனால் ஆப்பிரிக்கப் படைப்பாளிகள் குறித்து எதுவும் வராது. அதனாலேயே அந்தப் புத்தகங்களை எடுத்துப் படித்துப்பார்க்க ஆரம்பித்தேன். இரே டுரம், ஜேம்ஸ் பால்வின், எல்லிசன் போன்ற எழுத்தாளர்களின் கவிதைகள் என்னை உலுக்கின. அந்த உந்துதலில்தான் ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ வந்தது. அப்படியான ஈர்ப்பில்தான் மூன்றாம் உலக இலக்கியங்களைப் ‘பசித்த தலைமுறை’ என்ற பெயரில் மொழிபெயர்த்தேன். மராத்தி, குஜராத்தி  தலித் கவிதைகளின் மொழிபெயர்ப்பான ‘பிணத்தை எரித்தே  வெளிச்சம்’ எதிர்ப்பின் அடையாளம்தான்.  எதிர்க் கலாசாரக் கூறு என்பது திட்டமிட்ட தேர்வுதான்...”

“சமீபகாலத்தில் நிறைய மொழிபெயர்ப்புகள்  வருகின்றன. அவற்றின் தரம் குறித்துக் கேள்வி எழுகிறதே?”

“உண்மைதான்.  உணர்ச்சி வேகத்தில் மொழிபெயர்க்கிறார்கள். பலவற்றை வாசிக்காமல் தவிர்த்து விடுகிறேன். மூலப்படைப்பின் மொழியிலும், பெயர்க்கப்போகும் மொழியிலும் மிகுந்த புலமை இருந்தால் மட்டுமே படைப்பில் உண்மைத்தன்மை இருக்கும்.  இங்கே இந்தப் பணியைப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டியது சாகித்ய அகாடமிதான். ஆனால், அந்த அமைப்புக்குள்  நிறைய அரசியல் இருக்கிறது. யார்மீதெல்லாம் தூசி படிந்து, அவர்களால் இனி அமைப்புக்கு ஆபத்தில்லை என்று கருதுகிறார்களோ அவர்களுடைய படைப்புகளை மட்டும்தான் மொழிபெயர்க்கிறார்கள்...” 

“இப்போதெல்லாம்  கலை சார்ந்த  படைப்புகள் ஏதும்  உங்களிடமிருந்து வருவதில்லையே?”

“தமிழ்நாட்டில் ஓவியம் தூங்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் ஓவிய நுண்கலைக் குழு இன்று செயல்படவில்லை. நான் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த நுண்கலை ஓவியச் சிறப்பிதழ் வெளியிடுவதை அரசு நிறுத்திவிட்டது. சென்னையில் உள்ள லலித்கலா அகாடமியும் தூசுபடிந்து கிடக்கிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட சென்னை ஓவியக்கல்லூரி ஓய்ந்து கிடக்கிறது. தமிழக ஓவியர்கள் இதுகுறித்து அக்கறைப்பட்ட தாகத் தெரியவில்லை. கலை குறித்த நிஜமான அக்கறையுடன் கூடிய விவாதங்களோ, பயிற்சிப் பட்டறைகளோ நடத்த முன்வருவதில்லை. இந்த நிலையில் நான் தமிழக ஓவியங்கள் குறித்து எழுதுவதற்கு என்ன இருக்கிறது?”

விரக்தியை விலக்கி, வெளிச்சம் பெருக்குங்கள் இந்திரன்!