Published:Updated:

அடுத்து என்ன? - கவிப்பித்தன்

அடுத்து என்ன? - கவிப்பித்தன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - கவிப்பித்தன்

அகாலத்தின் முன்பற்களில் கிழிந்தழியும் வாழ்க்கை - அமரர்படங்கள்: ச.வெங்கடேசன்

அடுத்து என்ன? - கவிப்பித்தன்

அகாலத்தின் முன்பற்களில் கிழிந்தழியும் வாழ்க்கை - அமரர்படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:
அடுத்து என்ன? - கவிப்பித்தன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - கவிப்பித்தன்

குலைதள்ளி பூவும் பிஞ்சுமாய் நிற்கிற ஒரு வாழைமரத்தை, சூறைக்காற்று வந்து முறித்துத் தள்ளிவிட்டுப் போனாலே தாங்கிக்கொள்ள இயலாத மனம் வாய்த்தவர்களாக நாம் வாழ்கிறோம். ஒற்றை வாழையின் இழப்பையே தாங்கவியலாத நம்மால், விபத்துகளின் கோர முகங்களை எப்படித்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? புத்தகத்தின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்குள் எளிதாக நுழைந்துவிடுவதைப்போல ‘விபத்து’ என்கிற அந்த வார்த்தையைப் புரட்டித் தள்ளிவிட்டு நம்மால் கடந்துவிட முடிகிறதா?  

அடுத்து என்ன? - கவிப்பித்தன்

எங்கள் தந்தையைப்போல ஒரு ராணுவ வீரனாகிவிட வேண்டும் என்ற கனவுடனே வளர்ந்தவன், என் இளைய சகோதரன். எங்கள் மாவட்டத்திலேயே நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு, நாங்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஓர் அதிகாலையில், என் கடைசித் தங்கையிடம் மட்டும் சொல்லிவிட்டு அவன் தனியாளாகக் கிளம்பிப் போனான். அதீதமான நெரிசலால் பேருந்திலிருந்து கீழே தள்ளப்பட்டு, அதே பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டான். காற்றுக்குப் பதிலாகப் பேருந்தின் பாரத்தையெல்லாம் குடித்துப் பெருத்திருந்த கறுநிற டயர்கள், அவனது கால்களின் மீது ஏறி இறங்கின. நடப்பது இன்னதென்று அவன் உணர்வதற்குள்ளான ஒருசில விநாடியிலேயே அது நடந்து முடிந்துவிட்டது.

நகரமே அசதியில் தூங்கிக்கொண்டிருந்த அன்றைய நடுநிசியில், சென்னை பொது மருத்துவமனையில் அவனுக்குச் சொல்லப்படாமலேயே அவனது ஒரு கால் முழுமையாக வெட்டி எடுக்கப்பட்டது. மயக்கம் தெளிந்து கண்விழித்த அவன், இடுப்புக்குக் கீழே காலற்ற வெறுமையை உணர்ந்தபோது என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “இனிமே நான் மிலிட்ரிக்குப் போக முடியாதா?’’ என்பதுதான். கண்களில் துளிர்த்த நீரோடு அப்போது அவன் கதறி அழுதது வலியினால் மட்டுமல்ல.

என் உறவுக்காரப் பெண் ஒருத்தி, தன் முறைமாமனையே விரும்பி திருமணம் செய்துகொண்டாள். இருவருமே பட்டதாரிகள். சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் அவனுக்கு வேலை. திருமணமாகி இரண்டாவது ஆண்டின் ஒரு சனிக்கிழமை. வேலை முடிந்து  மாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கி, தலையில் அடிபட்டு, உணர்விழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். தேங்காய்மூடியைத் திறப்பதைப்போல, அவனது மண்டையோட்டைத் திறந்து அறுவைசிகிச்சை செய்யப்பட்டப் பின்னரும் அவனுக்கு உணர்வு திரும்பவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - கவிப்பித்தன்

மீண்டும் மீண்டும் அறுவைசிகிச்சைகள் தேவைப்படும் என்பதால், அகற்றப்பட்ட மண்டையோட்டை மீண்டும் பொருத்தாத மருத்துவர்கள், அதை அவர்களிடமே கொடுத்து, அதைக்  குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்குமாறு சொன்னார்கள். குளிர்ப்பதனப் பெட்டியோடு வாழ்கிற வாழ்க்கை வாய்க்காத குடும்பம் அது. அந்த ஊரிலேயே குளிர்ப்பதனப் பெட்டி ஒருவர் வீட்டில் மட்டுமே இருந்தது. அந்தப் பெட்டியில் காய்கறி அடுக்கிலேயே அந்த மண்டையோட்டையும் சேர்த்து வைத்தனர். அதைப் பார்த்து மிரண்ட அந்த வீட்டுக்காரருக்கு, பயத்தில் கடுமையான காய்ச்சல் கண்டுவிட்டது.

மண்டையோடற்ற தலையுடன் மருத்துவமனையில் நான்கு மாதம் கோமா நிலையிலேயே கிடந்தான் அவன். அவர்களின் கையிருப்பு, நகைகள், கால் காணி நிலம் எல்லாம் கைவிட்டுப்போயின. அதற்கு மேலும் செலவுசெய்ய அவர்களால் முடியாதபோது, ‘உணர்வு திரும்பினால் உடனே அவனையும் மண்டையோட்டையும் கொண்டுவர வேண்டும்’ என்ற நிபந்தனையோடு அவனை கோமா நிலையிலேயே வீட்டுக்கு அனுப்பிவைத்தது மருத்துவமனை நிர்வாகம்.

எவ்வித சலனமும் அற்ற ஒரு மரக்கட்டையைப்போல மாதக்கணக்கில் கிடந்தவனை, அந்த இளம்பெண் மட்டும்தான் கவனித்துக்கொண்டாள். பொருத்தப்பட்ட குழாய் வழியாக நேரம் தவறாமல் திரவ உணவையும் மருந்துகளையும் ஊற்றினாள். அவனைப் பெற்றவர்கள்கூட நம்பிக்கையிழந்து, துடித்துக்கொண்டிருக்கிற அவனது நாடி சீக்கிரத்தில் அடங்கிவிட்டால் போதும் என்கிற மனநிலைக்கு வந்த பிறகும், அவள் மட்டும் நம்பிக்கையோடு இரவும் பகலும் அவன் அருகிலேயே தவம் கிடந்தாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவனைப் பார்க்க நான் போயிருந்தபோது, அவன் கோலத்தைக் கண்டு உண்மையிலேயே விக்கித்துப்போனேன். எலும்புகள் மட்டுமே மிச்சமிருந்த அவனது உடலின் மீது இழுத்துப் போர்த்தியிருந்த தோல், ஒரு முதியவரின் தோலைப்போல ஆயிரமாயிரம் சுருக்கங்களால் நிறைந்திருந்தது.

அடுத்து என்ன? - கவிப்பித்தன்

“கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ்மென்ட் தெரியுது மாமா…” என்று நம்பிக்கையோடு என்னிடம் சொன்ன அவளைக் கண்கள் கலங்கப் பார்த்தேன். அடுத்த மூன்றாவது நாள் அவனின் இறப்புச் செய்தி வந்தபோது, நான் பித்து மனநிலைக்குத் தள்ளப்பட்டேன். அவளின் வலியும், நம்பிக்கையும், போராட்டமும் எந்தப் பயனுமில்லாமல் எந்த சூன்யத்தில் போய் ஒளிந்துகொண்டன? ஒரு கைபேசி அளவுக்குக்கூட அவளுக்கு உதவாத உறவுகளின் உதாசீனத்தை மீறிய அவளது நம்பிக்கை ஏன் அர்த்தமற்றுப் போனது? இந்த விபத்துகள் ஏன் இவ்விதமான கோரத் தாண்டவங்களைத் தொடர்ந்து நிகழ்த்துகின்றன? இந்தக் கேள்விகள் என்னைத் தொடர்ந்து அரித்துக்கொண்டே இருக்கின்றன.

உறவுகளை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டு, பின்னர் குடும்பத்தினரின் சம்மதத்தோடு எளிமையான வாழ்க்கை நடத்தத் தொடங்கிய ஒரு தம்பதியரின் அகாலமான வாழ்வு, என்னைப் பல இரவுகளில் தூங்கவிடாமல் செய்கிறது.

சமையலுக்கான காய்கறிகள் வாங்க, ஒரு பிற்பகலில் சாலையோரமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள் அந்தக் காதல் மனைவி. அசுர வேகத்தில் பின்னால் வந்த லாரி அவள் மீது மோத, நிகழ்விடத்திலேயே தலை நசுங்கிச் செத்துப்போனாள். அது கைபேசிகள் பரவலாகாத காலம். அவள் கணவன் மாலையில் வீடு திரும்பிய பிறகுதான் அவனுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அவளின் கோர மரணமும், உடல் பிணவறைக்குப் போயிருப்பதையும் கேட்ட அதிர்ச்சியில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே அவனும் இறந்துபோனான். அப்போது அவர்களுக்கு ஆறு மாதப் பெண் குழந்தை ஒன்றும் இருந்தது.

 ஒரே மருத்துவமனையின் பிணவறையில் இருவரின் பிணங்களும் வைக்கப் பட்டிருந்தன. முதலில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட மனைவியின் பிணம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. கணவனின் உடல் மறுநாள்தான் கிடைந்க்கும் எனச் சொல்லப்பட்டது. மறுநாள் காலையில் மண்டையைப் பிளந்து உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அந்தப் பிணத்தின் தலையில் உளியால் வெட்டினார் பிணவறை உதவியாளர். பிணத்தின் தலையிலிருந்து ரத்தம் கசிய, அதன் இடதுகை லேசாக அசைகிறது. அதைப் பார்த்த அந்த உதவியாளர் அலறிக்கொண்டு வெளியே ஓடுகிறார். நம்ப முடியாத அதிசயமாக இறந்தவன் பிணவறையிலிருந்து உயிருடன் மீண்டு வந்தான். அடக்க முடியாத துக்கத்தோடு காதல் மனைவியின் பிணத்தைப் பார்க்க தன் வீட்டுக்கு ஓடினான். ஆனால், அவனைப் பார்த்த அவனது குடும்பம் மகிழ்வதற்குப் பதிலாகப் பயத்தில் அலறியது. வீட்டையே பூட்டிக்கொண்டு ஓடியது.

அங்குதான் தொடங்குகிறது எனது ‘அமரர்’ நாவல். நம்ப முடியாத பல நிகழ்வுகளோடு நாவலைப் பின்னி வருகிறேன். உறவுகளும், ஊராரும் துரத்தித் துரத்தி அடித்த அந்த மனிதன், தினசரி பிணங்கள் புழங்கும் சுடுகாட்டிலேயே சில காலம் வாழ நேர்ந்தது. அவன் ஊருக்குள் வந்துவிட்டால் ஊருக்கே பேராபத்து வந்துவிடும் என அந்த ஊரே அச்சத்தில் வாழ்ந்தது. விபத்துகளின் கோர முகங்கள் ஒருபுறம். நமது நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் மறுபுறம்.

பொதுவாகவே எனது ‘இடுக்கி,’ ‘ஊர்ப்பிடாரி,’ ‘பிணங்களின் கதை’ ஆகிய முந்தைய சிறுகதைத் தொகுப்புகளில் பிணவாடை அதிகமிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தூக்கம் வராத சில முன்னிரவுகளில் எங்கள் ஊரில் எனக்குத் தெரிந்து வாழ்ந்து இறந்துபோனவர்கள் எத்தனை பேர் என மனதுக்குள்ளேயே எண்ணிக்கொண்டிருப்பேன், பட்டியல் நீளும். அவர்களின் முகங்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவருவேன்.  அவற்றில் சில முகங்கள் நிழலுருவங்களாகவும், பல முகங்கள் அரூபமாகவும் மாறி வருவதைக் கவலையோடு நினைத்துக்கொள்வேன். அந்தக் கவலைகளைத்தான் எனது சிறுகதைகளில் தொடர்ந்து பதிவுசெய்கிறேன்.

‘மடவளி’ நாவலுக்குப் பிறகு, நிறைய சிறுகதைகள் எழுத வேண்டும் என்றே விரும்பினேன். அதுபோலவே கடந்த சில மாதங்களாக சிறுகதைகளுக்கான மனநிலையே என்னுள் ஓங்கியிருந்தது. ‘அகாலம்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி முடித்துவிட்டுத்தான் இந்த ‘அமரர்’ நாவலைத் தொடங்கியிருக்கிறேன்.

என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவர் ‘மடவளி’யைப் படித்துவிட்டு, அவருடைய கதையையும் நான் எழுத வேண்டும் என்று என்னிடம் சொன்னபோது, முதலில் அதை ஒரு புன்சிரிப்போடு கடந்துவிட்டேன். மீண்டும் மீண்டும் அவர் என்னை நெருக்கியபோதுதான் ஒரு மாலையில் அவருடன் ஆத்மார்த்தமாக அமர்ந்து பேசினேன். அவர் பேசப் பேச நான் கரைந்துகொண்டிருந்தேன். அவரின் உலகம், அதிர அதிர என்னை உள்வாங்கிக் கொண்டது. அதுதான் ‘அமரர்’ நாவல்.

அதற்காக மேலும் சில தரவுகளை நான் சேகரிக்கவேண்டியிருந்தது. வருவாய்த் துறையில் பணிபுரிவதால், எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்குவதுதான் எனக்கான பெரும்சவால். ஆனால், வழமைபோலவே இந்த நாவலும் அதற்கான காலத்தையும் சூழலையும் தானே உருவாக்கிக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலம் கைவிடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism