Published:Updated:

இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்

இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்

படங்கள் : பொன்.ஜெயக்கொடி

இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்

படங்கள் : பொன்.ஜெயக்கொடி

Published:Updated:
இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்

ந்த மொழிச் சொல்லின் கலப்பும் இல்லாமல் தனித்தியங்கும் வல்லமைபெற்றது தமிழ் என்பதில் ஐயமில்லை. அதை  நிலைநிறுத்தும் நோக்கம்கொண்டது தனித்தமிழ் இயக்கம். ‘மொழி சார்ந்தது மட்டுமல்ல, ஆழ்ந்து நோக்கும்போது, தமிழர்களது அரசியல் வரலாறு, சமூக அமைப்பு, சாதி அடிப்படை முதலியவற்றுடன் தொடர்புகொண்டது தனித்தமிழ் இயக்கம்’ என்பார் கா.சிவத்தம்பி (தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற்பின்னணி, ப.9). எப்படியிருப்பினும் தமிழ் உரைநடையில் தனித்தமிழ் இயக்கத்தின் செல்வாக்கு பெரிது.

இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்

கல்வி, சட்டம், ஆட்சி ஆகியவற்றில் முழுமையாகத் தமிழ் இல்லாதபோதும், புதுப்புதுக் கலைச்சொற்கள் தமிழ் மொழியில் தோன்றுகின்றன. அவ்விதம் சொற்களை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் எல்லாத் தரப்பு மக்களிடமும் இருக்கிறது. சமூக வலைதளம் தொடர்பான பல தமிழ்ச் சொற்கள் இன்று உருவாகிப் பயன்பட்டுவருகின்றன. இது தனித்தமிழ் இயக்கத்தின் செல்வாக்கால் விளைந்தது என்று மனமுவந்து சொல்லலாம். காரணம், தமிழ் சார்ந்து அழுத்தம் தரும் கொள்கைக் குழுவாகத் தனித்தமிழ் இயக்கம் இருந்துவருகிறது.

ஒரு மொழியைப் பேசும் மக்கள், பிறமொழி பேசும் மக்களோடு ஏதோ ஒருவிதத்தில் தொடர்புகொண்டிருக்கும் காரணத்தால் பிறமொழிக் கலப்பில்லாமல் ஒரு மொழி இயங்குவது எளிதல்ல. ஆகவே, நடைமுறையில் தனித்தமிழ் சாத்தியமில்லை என்னும் கருத்து உள்ளவன் நான். மேலும், தனித்தமிழ் உணர்வாளர்கள் இரட்டை வழக்குமொழியான தமிழின் இயல்பான பேச்சுத் தமிழை ஏற்றுக்கொள்வதில்லை; மரபிலக்கியத்திலேயே மனம் செலுத்தி இக்கால இலக்கியத்தைப் பற்றி எதிர்மறைக் கருத்துகளை மிக வன்மையாக முன்வைத்துப் புறக்கணிப்பவர்கள். ஆகவே, தனித்தமிழ் உணர்வாளர்களின் படைப்புகளில் எனக்கு ஆர்வம் தோன்றியதில்லை.

அந்த மனநிலையை மாற்றியவர் ம.இலெ.தங்கப்பா. இன்றைய காலத்துக் கோட்பாட்டு ஆய்வுகளைப் பகடிசெய்து ‘கூழாங்கற்களின் அமைப்பியல் – ஓர் ஆய்வு’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ‘காலச்சுவடு’ இதழில் வெளியானபோதுதான் அவர்மீது கவனம்கொண்டேன். பிறகு ஆ.இரா.வேங்கடாசலபதி ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ என்னும் தம் நூலில் இடம்பெற்றிருந்த ‘தமிழில் பகடி இலக்கியம்’ என்னும் கட்டுரையில் சில இடங்களில் ம.இலெ.தங்கப்பாவின் பெயரைக் குறிப்பிட்டு அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகளைப் பற்றியும் சில வரிகள் எழுதியிருந்தார்.

அதனால் ஆர்வமுற்று ம.இலெ.தங்கப்பாவின் ‘இயற்கை ஆற்றுப்படை’, ‘ஆந்தைப் பாட்டு’ ஆகியவற்றை வாசித்தேன். அவருடைய ஆர்வம், செயல்பாடுகளை அறிந்துகொண்டதும் குறிப்பிட்ட கருத்துநிலைகொண்ட ஒருவரை அக்கருத்து நிலையோடு உடன்பாடு இல்லாத காரணத்துக்காக முழுமையாகப் புறக்கணிப்பது சரியானதல்ல என உணர்ந்தேன். கருத்து நிலைக்காகப் பிறரைப் புறக்கணிக்கும் தனித்தமிழ் உணர்வாளர்களின் அதே செயலை நாமும் செய்யக் கூடாது என்றும் துணிந்தேன்.

2009-ம் ஆண்டு அழகியபெரியவன், தேவிகாபுரம் சிவா உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து தொடங்கிய ‘வேலூர் இலக்கியப் பேரவை’யின் முதல் விருது, அப்போது அங்கே நடைபெற்ற புத்தகக் கண்காட்சி அரங்கில் ம.இலெ.தங்கப்பா அவர்களுக்கு வழங்கப்பட்டது. பாராட்டுரைகளையும் விருதுகளையும் விரும்பாத அவர், அந்த விருதை நண்பர்களின் அன்புக்காக ஏற்றுக்கொண்டார். விருதளிப்பு நிகழ்வில் அவரது படைப்புகளைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்கென அவரைப் பற்றி நண்பர்களிடம் கலந்துரையாடியும் படைப்புகளை வாசித்தும் தயாரித்துக்கொண்டபோது, அவரது ஆளுமையை முற்றிலுமாக உணர்ந்தேன்.

இயற்கையோடு இயைந்த ம.இலெ.தங்கப்பா (08-03-1934 - 31-05-2018) - பெருமாள்முருகன்

வாழ்க்கைக்கென அவர் வகுத்துக்கொண்ட ‘இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை’ மிகவும் உயர்வானது. அந்த வாழ்க்கை முறையில் அன்புக்கு மையமான இடம் இருந்தது. தம் படைப்புகள் மூலமாகவும் அவர் அன்பையே முன்வைத்தார். அது பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியின் மூலம் அவருக்கு வாய்த்தது என நினைக்கிறேன். விருதளிப்பு நிகழ்வில் அவர் ஆற்றிய ஏற்புரையும் அன்பையே முன்வைத்தது. அது, இயற்கையைத் தழுவிய அன்பு. இயற்கைக்குள் மனிதனும் அடக்கம் என்பதை உணர்த்தும் அன்பு.

சிறுவர் பாடல்கள், கட்டுரை நூல்கள், செய்யுள் நூல்கள், மொழிபெயர்ப்புகள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் ம.இலெ.தங்கப்பா. அவற்றுள் ‘இயற்கை ஆற்றுப்படை’ எனக்கு மிகவும் பிடித்த நூல்.

ஆற்றுப்படை என்பது, வள்ளல்களைப் புகழும் சங்ககால இலக்கிய வகை. வழிகாட்டுதல் என்னும் உத்தி வகையைக்கொண்டது. வறுமையில் இருந்த கலைஞன் ஒருவன் வள்ளல் (அரசன்) ஒருவனைக் கண்டு அவனிடம் தன் கலைத்திறனை வெளிப்படுத்திப் பலவிதப் பரிசுகளைப் பெறுகிறான். அவன் வறுமை முற்றிலுமாகத் தீர்ந்துவிடுகிறது. பரிசுப் பொருள்களோடு தன் ஊரை நோக்கிச் செல்லும் அவன் வழியில் இன்னொரு கலைஞனைச் சந்திக்க நேர்கிறது. அந்தக் கலைஞன் மிகுந்த வறுமையில் இருக்கிறான். அவனது பரிதாப நிலை கண்டு தனக்குப் பரிசு கொடுத்த வள்ளலின் சிறப்புகளை அவனுக்கு எடுத்துச் சொல்லி, ‘அவ்வள்ளலிடம் சென்று உன் திறன்களை வெளிப்படுத்திப் பரிசுபெற்று வறுமையைத் தீர்த்துக்கொள்’ எனப் பரிசு பெற்று வந்த கலைஞன் வழிகாட்டுகிறான். இம்முறையில் அமைவது ஆற்றுப்படை நூல்.

அந்த வள்ளலின் நாட்டுவளம், மக்கள், உணவுமுறை, விருந்தோம்பல், கொடுக்கும் பெரும்பரிசுகள் என்பவற்றைச் சொல்வதோடு அவனது வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, புகழ் முதலியவற்றை ஆற்றுப்படை விவரித்துச் செல்லும். பரிசு பெற்று வரும் கலைஞனின் கூற்றாகவே முழுப்பாடலும் அமையும்.  வறுமை தீரும் வழியை மட்டுமல்ல, வள்ளலின் அரண்மனையை அடைய எந்தெந்த வழிகளில் செல்ல வேண்டும் என வழி சொல்லுதலும் உண்டு. அவ்வழிகளின் இயற்கை அழகு, நில வருணனை, அங்கு வாழும் மக்களின் வாழ்முறை, அவர்களது விருந்தோம்பல் எனப் பலபடச் சொல்லுதலும் உள்ளிருக்கும்.

இந்த உத்தியை விரிவாக்கிக் கடவுளிடம் வரம்பெற வழிகாட்டும் வகையில் இயற்றப்பட்டது ‘திருமுருகாற்றுப்படை’. செறிவான தொடர்களில் இயற்கை வருணனை அமைந்த நூல் இது. ‘மந்தியும் அறியா மரம்பயில் கானகம்’, ‘கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு’ ஆகிய தொடர்கள் திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளன. இம்மரபைப் பின்பற்றியதோடு அதை வளப்படுத்தும்விதத்தில் வள்ளல், கடவுள் ஆகியோரைத் தவிர்த்து அவ்விடத்தில் இயற்கையை மையப்படுத்தி அதன் புகழ்பாடும்விதத்தில் எழுதப்பட்ட நூல் ‘இயற்கை ஆற்றுப்படை.’ இயற்கையில் ஈடுபட்டு இன்பம் பெற்ற ஒருவன் இயற்கையைப் பற்றி அறியாமல் நகரத்தில் வாழும் ஒருவனுக்கு இயற்கை இன்பம் பெற வழிகாட்டுவதாக அமைந்த நூல் இது.

சங்க நூல்போலவே ஆசிரியப்பா வகையில் சங்ககால மொழிநடையைப் பின்பற்றி ம.இலெ.தங்கப்பா எழுதியிருக்கிறார். 1962-ல் எழுதித் ‘தென்மொழி’ இதழில் தொடராக வந்த இப்பாட்டு, 572 அடிகளைக்கொண்டது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1989-ல் சிறுநூலாக வெளியாயிற்று. 56 ஆண்டுகளுக்கு முன் இந்நூலில் அவர் முன்வைக்கும் வாழ்க்கைப் பார்வை இறப்பு வரைக்கும் அவருக்கு மாறவில்லை.

‘இயற்கையிலேயே தோன்றி இயற்கையிலேயே மீண்டும் கலந்துபோகவிருக்கும் நமக்கு இயற்கையின் பெருமையை உணர்ந்து போற்றும் எண்ணம், இயற்கை வழங்கும் செய்தியைப் புரிந்துகொள்ளும் நாட்டம் இல்லாதிருப்பது எத்துனை இரங்கற்கு உரியது’ என்றும் ‘இயற்கையில் படிந்த நெஞ்சே படைப்பின் விரிவினையும் பெருமிதத்தையும் மாந்தனின் சிறுமையினையும் உணர்கின்றது’ என்றும் அந்நூல் முன்னுரையில் எழுதியுள்ளார்.

‘நகர்உறை மகனே நகர்உறை மகனே’ என்னும் விளியோடு தொடங்கும் நூல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நானில வருணனைகளைச் செய்து இயற்கையோடு வாழும் பேற்றைப் பற்றிப் பேசி முடிகிறது. திறந்த நெஞ்சோடும் கண்ணோடும் இயற்கையைக் கண்டு இயைந்து வாழ்தலைப் பேசும் இந்நூலை இன்றைய உரைநடை வாசிப்புக்குப் பழகிய வாசகர் பயில்வது கடினம். ஓரளவு பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி உடையோரே இதைப் பயின்று அனுபவிக்க முடியும். கவி ஆற்றல்கொண்ட தங்கப்பா அவர்கள், நவீன இலக்கியப் பார்வையும் உடையவராக இருந்திருந்தால் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ந்திருக்கும் என்னும் உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரது மிக முக்கியமான பெரும்பணி என்பது, மொழிபெயர்ப்புகள். பாரதிதாசன் கவிதைகளையும் முத்தொள்ளாயிரப் பாடல்களையும் வள்ளலார் பாடல்களையும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ளார். அவர் செய்த சங்க இலக்கியப் பாடல்களின் மொழிபெயர்ப்பு ஆ.இரா.வேங்கடா சலபதியைப் பதிப்பாசிரியராகக்கொண்டு ‘Love Stands Alone’ என்னும் தலைப்பில் ‘பெங்குவின்’ பதிப்பக வெளியீடாக வந்து மிகப்பெரும் கவனத்தைப் பெற்றது.

தமிழ்தான் உலகின் முதன்மொழி, தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை என்றெல்லாம் பேசுவதால் தமிழுக்குப் பயனேதும் இல்லை. தமிழில் இருப்பவற்றை வெளியுலகிற்குக் கொண்டுசென்றால் போதும், தமிழுக்குரிய சிறப்புகள் இயல்பாகவே கிடைத்துவிடும். செயல்பாடு இல்லாமல் வெற்றுப் பெருமை பேசுவதில் பொருளில்லை. உலக அரங்கில் தமிழ் முன்னிற்க வேண்டுமானால் இம்மொழியின் இலக்கிய வளத்தைப் பிறமொழிகளுக்குக் கொண்டுசேர்க்கும் பணியை வல்லுநர்கள் கையிலெடுக்க வேண்டும். அத்தகைய வல்லுநர்களை உருவாக்க வேண்டும். அவர்களைப் போற்ற வேண்டும்.

அவ்வகையில் ம.இலெ.தங்கப்பாவின் மொழிபெயர்ப்புகள் முக்கியத்துவம் உடையவை. சங்க இலக்கிய மொழிபெயர்ப்புக்காகப் பெரிதும் போற்றப்படும் ஏ.கே.இராமனுஜன் அவர்களோடு ஒப்பவைத்துப் பேசத்தக்கவர் தங்கப்பா; அம்மரபின் தொடர்ச்சியில் இணைகிறார் தங்கப்பா என ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்த ஆளுமைகள் பலர் கூறியுள்ளனர். சங்க இலக்கியத்தின் எளிமை, நேரடித்தன்மை, உள்ளுறைப் பொருள்கள் ஆகியவற்றை மிக அற்புதமாக உள்வாங்கி ஆங்கிலம் வழியாக நவீன கவிதையாக்கியுள்ளார். தனித்தமிழில் பேசுவதை வாழ்நாள் கொள்கையாக வைத்திருந்த அவர், ஆங்கில மொழியிலும் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர் என்பதற்கு இம்மொழிபெயர்ப்பு சான்று.

சங்க அகப்பாடல்கள், புறப்பாடல்கள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 160 பாடல்களின் மொழிபெயர்ப்பு இந்நூலில் உள்ளது. பெரும்பான்மையானவை குறுந்தொகைப் பாடல்கள். வெவ்வேறு திணைப் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் ஆங்கிலத்தில் நவீனமாகும் அதிசயத்தை இம்மொழிபெயர்ப்பை வாசிக்கையில் உணர முடிகிறது.

ஒரு சான்று:
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 
    
                           (குறுந்தொகை, 3)


Larger than the earth,
vaster than the sky,
and immeasurably deeper than the seas
is my love for him
from the hills
where the honeybees make
abundant honey
from the black–stemmed
Kurinji flowers.

இத்தகு ஆற்றல்மிகு ஆளுமையைத் தமிழுலகம் இழந்துவிட்டது. அவர் எழுதிய நூல்கள் பலவும் இன்று பதிப்பில் இல்லை. பதிப்பில் உள்ள நூல்கள் விற்பனை ஆகாமல் கிடக்கின்றன. காரணம், அவற்றைத் தமிழுலகம் போதுமான அளவு அறிந்துகொள்ளவில்லை. அவர் மொழிபெயர்த்து வைத்துள்ளவை இன்னும் பல உள்ளன எனவும் அறிய முடிகிறது. அனைத்தும் அச்சுக்கு வர வேண்டும். ஓர் ஆளுமையின் மறைவை அவர் விட்டுச் சென்றவற்றைப் போற்றுவதன் மூலமே நினைவுகூர முடியும். அன்பைத் தனித்து நிற்கவிடாமல் அரவணைத்துப் போற்றுவதும் பிறருக்குக் கையளிப்பதும் தேவை. அதைத் தமிழுலகம் உணர்ந்தால் மகிழ்ச்சி.