Published:Updated:

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: வீ.சதிஷ்குமார், அருள் பிரகாஷ்

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: வீ.சதிஷ்குமார், அருள் பிரகாஷ்

Published:Updated:
“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

மிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்; ஓய்வற்ற களப்பணியாளர்... மதுரையிலுள்ள தனது மகனின் வீட்டில் இப்போது வசித்துவருகிறார். எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைக்கான குறிப்புகள், இரண்டாம் பதிப்பிற்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் புத்தகமொன்றின் சரிபார்ப்புப் பக்கங்கள், பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் எனப் பரபரப்பாக இருக்கிறது அவரது எழுத்து மேசை. மாறாக, மிக நிதானமாகப் பேசுகிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“உங்களை ஓர் இடதுசாரி நாட்டார் ஆய்வாளர் என்று குறிப்பிடலாமா?”

“நாட்டார் வழக்காறு என்பது பண்பாடு சார்ந்தது. பண்பாட்டில் ஒரே பண்பாடுதான் உள்ளது என்பதை இடதுசாரிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆள்கிறவர்களின் பண்பாடு - ஆளப்படுகிறவர்களின் பண்பாடு, சுரண்டுபவர்களின் பண்பாடு - சுரண்டப்படுகிறவர்களின் பண்பாடு என்று வகைப்படுத்துவார்கள். நான் இயங்கிவருகிற நாட்டார் வழக்காறு, ஆளப்படுகிற சுரண்டப்படுகிற மக்களின் பண்பாட்டைக் களமாகக்கொண்டது என வைத்துக் கொண்டால், என்னை ‘இடதுசாரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்’ என்று தாராளமாகச் சொல்லலாம். அதே நேரத்தில் நாட்டார் வழக்காறு என்பது அடித்தள மக்களுக்கு மட்டுமே உரியது அல்ல; அது மேட்டுக்குடி மக்களுக்கும் உண்டு. ஆனால், ஓர் ஆய்வாளர் தனது ஆய்வின் மூலம் எதை வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தது அவரது அடையாளம்; ஆய்வின் முக்கியத்துவம். மார்க்ஸியத்தில் நம்பிக்கைகொண்டு மார்க்ஸிய முறையியலை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் நான் இடதுசாரி ஆய்வாளன்தான்.”

“உங்களுக்குள் பண்பாடு சார்ந்த பார்வைகள் எங்கிருந்து உருவாகின?”


“சிறுவயதில் எனக்கு இதயப் பிரச்னை இருந்ததால், மற்றவர்களைப்போல ஓடியாடி விளையாடுவதிலிருந்து பெற்றோரால் தடுக்கப்பட்டிருந்தேன். எனவே, வாசிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. என் தந்தை, எட்டாம் வகுப்பு வரை படித்தவர். அவருக்கு சாமிநாத சர்மா, சாமி சிதம்பரனார் ஆகியோருடன் அறிமுகம் இருந்தது. வீட்டிலிருந்த அவர்களுடைய நூல்களையெல்லாம் வாசித்திருக்கிறேன். அப்போது, அந்த நூல்களெல்லாம் எந்த அளவுக்குப் புரிந்தன எனத் தெரியவில்லை. ஆனால், ஏதாவது ஒன்றை வாசிப்பது என்பது, எனக்கு விளையாட்டுபோல ஆகிவிட்டது. பிறகு, திருநெல்வேலிக்கு இடம்பெயர்ந்து வந்தபோது, பேராசிரியர் கு.அருணாசலக் கவுண்டரின் சுவாரஸ்யமான பேச்சின் வழியே நான் நிறைய செய்திகளை அறிந்துகொண்டேன். அவர் வையாபுரிப்பிள்ளை கருத்துப் பள்ளியைச் சேர்ந்தவர். தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, தோழர் நல்லக்கண்ணு போன்றோர் அவரின் மாணவர்கள்தான். அவர் எனக்கு ஏராளமான புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்.

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

பிறகு, தோழர் ப.மாணிக்கம் அறிமுகமானார். அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவர் அவர். பேராசிரியர் நா.வானமாமலையினுடைய தொடர்பு, இவரின் வழியாகத்தான் எனக்குக் கிடைத்தது. பேராசிரியர் நா.வானமாமலையிடமுள்ள நல்ல பழக்கங்களில் ஒன்று, ஒவ்வொருவரின் விருப்பம் அறிந்து, அந்தத் துறைசார்ந்து அவர்களிடம் வேலை வாங்குவது. துறைசார்ந்த புத்தகங்களைத் தந்து வாசிக்கச் சொல்வார்; அது குறித்துப் பேசச் சொல்வார்; ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். இப்படியாக... பேராசிரியர் அருணாசலக் கவுண்டர், தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, ப.மாணிக்கம், தோழர் நல்லக்கண்ணு போன்ற சிறந்த ஆளுமைகளுடன் எனது 17 வயதிலேயே நட்பு ஏற்பட்டது. இவர்களுடைய நட்பினால் எனக்கு நூல்களைத் தேர்வு செய்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. சரியான பயணத்துக்கான தொடக்கம் அங்கேயே உருவாகிவிட்டது. இதுபோன்ற அபூர்வமான வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. எனக்குக் கிட்டியது. ”

“ஆய்வாளராக நீங்கள் உருவான புள்ளி எது?”

“வாசிப்பு ஆர்வமுடையவன் என்பதே எப்போதைக்குமான என் முதன்மையான அடையாளம். எழுதுவது என்பது எப்போதும் நிர்பந்தங்களினால் செய்யப்படுவதாகவே இருந்துவந்திருக்கிறது. பேராசிரியர் நா.வானமாமலை என்னை எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் ‘ஆராய்ச்சி’ இதழைத் தொடங்கியபோது, அதன் புற வேலைகளில் பங்கெடுத்துக்கொண்ட நான்கைந்து பேரில் நானும் ஒருவன். இதழ் அச்சுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் ஒருநாள், ‘இந்த இதழுக்கு நீயும் ஒரு கட்டுரை கொடு. அப்போதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!’ என்றார். என்னுடைய கட்டுரை இடம்பெற்றுத்தான் ‘ஆராய்ச்சி’ இதழ் சிறப்படைய வேண்டும் என்பதில்லை. மற்றவர்கள் மொழியில் சொல்லப்போனால் ‘எனது கட்டுரை அதில் ஒரு திருஷ்டிப் பொட்டுதான்’. ஆனாலும், ‘நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதிக் கொடுத்தேன். அது, திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றியது. அந்தக் கட்டுரையை அச்சில் பார்த்தபோது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது! அப்போது, நா.வா சொன்னார், ‘ரொம்பக் கறாரா இருந்திருந்தா இந்தக் கட்டுரையை நான் போட்டுருக்கக் கூடாது. ஆனா, நீ தொடர்ந்து எழுதணும்னு நான் விரும்புறேன். அதனாலதான் அனுமதிச்சேன். அடுத்த முறை செறிவா ஒரு கட்டுரை எழுது’ என்று சொன்னார். அதன்பிறகு, ‘பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை நிறைய கள ஆய்வுகள் செய்து எழுதினேன். அது அவருக்கு நிறைவாக இருந்தது. ‘நல்ல கட்டுரையா வந்திருக்கு. இதை அப்படியே போட்டுக்கலாம்!’ என்று சொன்னார்; இதழிலும் கொண்டுவந்தார். அது வெளிவந்த பிறகு, எனக்கு நிறைய தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தொலைபேசி வசதியில்லாத காலம் என்பதால், ஏராளமான கடிதங்கள் வந்தன. பலரும் நேர்ப்பேச்சில் அந்தக் கட்டுரை குறித்து என்னிடம் விவாதித்தார்கள். அது எனக்கு உற்சாகமளித்தது. அங்கிருந்து இந்த ஆய்வுப் பயணம் தொடங்கியது.”

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“அன்றைக்கு வீட்டில் உங்களது அரசியல் மற்றும் ஆய்வியல் ஆர்வத்தை எப்படிப் புரிந்துகொண்டார்கள்?”

“வீட்டில் ஒரே பையன் என்றால், பெற்றோர் அதிகம் செல்லம் கொடுப்பார்கள் அல்லவா? ஆனால், என் தந்தை, அதுபோல் எந்தச் சலுகையும் கொடுக்காமல் கறாராகவே நடந்துகொண்டார். ஆனால், என்னுடைய நட்பு வட்டத்தை ஒருபோதும் தடைசெய்யவில்லை. அன்று பலரும் என் தந்தையிடம், ‘உன் பையன் கம்யூனிஸ்ட் ஆள்களுடன் தொடர்புவைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று சொன்னபோது, அவர் என்னைக் கண்டிக்கவில்லை. எனது இந்தத் தொடர்பை, வாசிப்பு ஆர்வத்தை நல்லவிதமாகவே புரிந்துகொண்டார். அவரே சில புத்தகங்களை வாங்கித்தந்து வாசிக்கவும் சொல்வார். எனது நகர்வுக்கு வீட்டில் ஆதரவான சூழலே இருந்தது.”

“எந்தெந்த நூல்கள், நாட்டாரியலுக்கு முக்கியமான அடித்தளத்தை உருவாக்கின என்று கருதுகிறீர்கள்?”

“ஐம்பதுகளின் இறுதி வரை ‘நாட்டாரியல்’,  ‘நாட்டுப்புறவியல்’ என்கிற சொல்லே இங்கு அறிமுகமாகவில்லை. நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன. மேலும், அன்றைக்கு இந்தப் பாடல்களுக்குக் குறிப்பிடும்படியான மதிப்பும் இருக்கவில்லை. மதிப்பு குறைவான ஓர் இலக்கிய வகைமையாகவே நாட்டார் பாடல்கள் பார்க்கப்பட்டன. கி.வா.ஜகந்நாதன் அந்தக் காலகட்டத்தில் சில நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து, ‘மச்சு வீடு’, ‘கஞ்சியிலும் இன்பம்’, ‘நாடோடிப் பாடல்கள்’ என்ற மூன்று தலைப்புகளில் நூலாகக் கொண்டுவந்தார். பெரியசாமித்தூரன்... பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர், கொங்குப் பகுதியில் நிலவிய பாடல்களைத் தன்னுடைய மாணவர்களைக்கொண்டு சேகரித்து, ‘காற்றில் மிதந்த கவிதைகள்’ என்ற நூலாகக் கொண்டுவந்தார். தி.நா.சுப்பிரமணியன்... தமிழ்நாட்டின் முன்னோடிக் கல்வெட்டு ஆய்வாளர்; தென்னிந்தியக் கோயில் சாசனங்களையெல்லாம் பதிப்பித்தவர், ‘காட்டு மல்லிகை’ என்ற தலைப்பில் ஒரு நூலைக் கொண்டுவந்தார். பெர்சி மாக்வின் என்ற ஒரு பிரிட்டிஷ் அதிகாரி... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்தியாவைவிட்டு வெளியேறியவர். ஒரு பாடலுக்கு ஓரணா ரெண்டணா எனக் கொடுத்து மக்களிடம் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்களையெல்லாம் இந்தியாவைவிட்டுப் போகும்போது, ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி, அதைச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். பல்கலைக்கழகத்திற்கு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. பலகாலம் அதைத் தூங்கவைத்துவிட்டனர். ஒன்று மட்டும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதில் இருப்பதெல்லாம் பழைமையான விஷயம். பழைமையான விஷயங்கள் இருக்க வேண்டிய இடம், சரஸ்வதி மஹால். ஆக, அங்கு அனுப்பிவிட்டார்கள். சரஸ்வதி மஹால்காரர்களுக்கு, ‘இது ஓலைச்சுவடி இல்லை, இலக்கியமுமில்லை, இலக்கணமுமில்லை ஆகவே, என்ன செய்வது எனத் தெரியவில்லை. கி.வா.ஜகந்நாதனுக்கு அனுப்பி, இதைப் பதிப்பியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள். அவர் அதை, ‘மலை அருவி’ எனப் பெயரிட்டுப் பதிப்பித்தார். மு.அருணாசாலம்... மரபுவழித் தமிழறிஞர், ‘காற்றில் மிதந்தவை’ என்ற தலைப்பில் சில பாடல்களைப் பதிப்பித்தார். அன்னகாமு என்பவர் ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள்’ என்ற பெயரில் ஒரு நூலைப் பதிப்பித்தார். இவை அனைத்தையும் கவனித்தால்... குறிப்பாக நூல் பெயர்களைக் கவனித்தால், இவை அனைத்தும் ரசனை அடிப்படையில் பார்க்கப்பட்ட, பதிப்பிக்கப்பட்ட நூல்கள் என அறிந்துகொள்ளலாம். இன்றைக்கு நாட்டுப்புறவியல் ஓர் அறிவியல் துறையாக வளர்ந்துவிட்டது. இங்கிருந்து அவற்றைப் பார்க்கும்போது, அவற்றில் ஆய்வியல் குறைபாடுகள் உள்ளதாகத் தோன்றும். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பாடல்களைத் தொகுத்து, இந்தத் துறைக்கு வளம்சேர்ந்த அவர்களது பணி, மதித்துப் போற்றத் தக்கது. அன்றைக்கு அவர்கள் அவ்வளவு பாடல்களைச் சேகரிக்காவிட்டால் நாட்டுப்புறவியல் அந்தப் பாடல்களையெல்லாம் இழந்திருக்கும்.”

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“தமிழில் ‘நாட்டுப்புறவியல்’ ஒரு ஆய்வுப்பொருளாகத் தொடங்கிய இடம் எது?”

“1959 அல்லது 60-ல் பேராசிரியர் நா.வானமாமலை, ‘தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற ஒரு நூலை வெளியிட்டார். அதுவரை வந்த தொகுப்புகளிலிருந்து அது வெகுவாக மாறுபட்டிருந்தது. அதில் யார் யார் அந்தப் பாடல்களைப் பாடினர், யார் யார் அவற்றைச் சேகரித்தனர், எந்தப் பகுதியில் அந்தப் பாடல்கள் நிலவின என்ற குறிப்புகளை உள்ளடக்கியதாக நூல் இருந்தது. சங்கப் பாடல்களுக்கு மு.வரதராசனார் விளக்கக் குறிப்புகள் எழுதுகிற பாணியில், பாடல்களின் உள்ளடக்கத்தை, பாடலில் உள்ள சமூகவியல் தன்மைகளைக் குறிப்பிட்டு ஒவ்வொரு பாடலுக்கும் கீழே நான்கைந்து வரிகள் எழுதியிருந்தார். நாட்டார் பாடல்கள் ரசனைக்கும் பொழுதுபோக்கிற்குமானது அல்ல, அதில் ஆய்வதற்குச் சமூகம் தொடர்பான செய்திகளும் இருக்கின்றன என்று உணர்த்திய அந்த நூல், நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த பார்வையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது.”

“அப்படியானால், 60-கள்தான் நாட்டாரியலின் முக்கியமான காலகட்டம் அல்லவா?”


“ஆமாம். 60-ல் சியாமளா பாலகிருஷ்ணன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் தமிழக நாட்டுப்புறப் பாடல்களை மையமாகக்கொண்டு முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். 1961-ல் கே.பி.எஸ்.ஹமீது எம்.லிட் பட்டத்திற்காக கேரளப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வுசெய்தார். 64-ல் பேராசிரியர் நா.வா-வினுடைய ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ வெளியானது. 500லிருந்து 600 பக்கங்களைக்கொண்ட நூல் அது. திருநெல்வேலி, சேலம் போன்ற பல வட்டாரங்களைச் சேர்ந்த பாடல்கள் அதில் இடம்பெற்றிருந்தன. தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரி வரை பாடல்கள் வகைப்படுத்தப் பட்டிருந்தன. ஆறு பேர் சேர்ந்து பாடல்களைத் தொகுத்திருந்தனர். தொகுத்தவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று அவர்களது புகைப்படங்களைக் குறிப்புகளோடு நூலில் இடம்பெறச் செய்திருந்தார் நா.வா. இதன்மூலம் பாடல்களைச் சேகரிப்பவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆறு. அழகப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது, எம்.லிட் பட்டத்திற்காக நாட்டார் பாடல்களை 1966-ல் ஆய்வுசெய்தார். 1969-ல் முனைவர் பி.ஆர்.சுப்ரமணியன், கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்டத்திற்காகத் தாலாட்டுப் பாடல்கள் பற்றி ஆய்வுசெய்தார். இந்தக் காலகட்டத்தில்தான் நாட்டார் பாடல்கள் ஓர் ஆய்வுப்பொருளாக மாறின. இப்படியாக, நாட்டார் பாடல்கள் சார்ந்த ஆய்வுப்புலம் வளர்ச்சி காணத் தொடங்கியது. புதிதாக ஒரு துறை தோன்றுகிறது என்றால், அதைக் கல்விப்புலம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது அங்கீகாரம் பெறும். இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அன்றைய காலகட்டத்தின் சூழலும் அளவுகோலும் அப்படித்தான் இருந்தன. கல்விப்புலத்தில், பதிப்புத்துறையில் என 60-களில் நாட்டாரியல் ஒரு தனித்துறையாக அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது.”

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“நாட்டாரியல் சார்ந்த கோட்பாடு எங்கிருந்து நமக்குக் கிடைத்தது?”

“ஒரு கருத்து உருவாகி, பரவலாகும்போதுதான் அதை ஆய்வுசெய்வதற்கான கோட்பாடு உருவாகும். நாட்டார் வழக்காற்றியல், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. காரணம், பல மேற்கத்திய நாடுகளுக்கு நமக்கு இருப்பதைப்போன்ற பாரம்பர்யம் கிடையாது. அவர்களுக்குப் பழைமை என்பது அபூர்வமான விஷயம். உதாரணமாக, இங்கிலாந்தில் தொழிற்புரட்சி பற்றிக் கூறும்போது, ஸ்பின்னிங் வீல் கண்டுபிடித்தது தொழிற்புரட்சிக்கான ஒரு முன்னோட்டம் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், நம்மிடம் ‘ஓடம்’ என்ற நெசவுத்தறி தொழில்நுட்பம் பற்றிய குறிப்புகள் கம்பராமாயணத்திலேயே இருக்கின்றன. ஆக, அவர்கள் தங்கள் பழைமைக்கு முக்கியத்துவம் தந்தார்கள். அதனால், நாட்டார் பாடல்களும் அது குறித்த ஆய்வுகளும் முக்கியத்துவம் பெற்றன. அவற்றை ஆராய்வதற்கான பல கோட்பாடுகளை அவர்கள் உருவாக்கினார்கள். நமக்குப் பல ஆயிரம் வருடப் பாரம்பர்யம் இருக்கின்றது. பதினெண் மேல்க்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், கதைப்பாடல்கள், நவீன இலக்கியம் எனத் தொடர்பு அறுபடாமல் ஒரு பாரம்பர்யம் தொடர்ந்துவருகிறது. அதனால், நாம் நாட்டார் பாடல்களை முக்கியமானவையாகக் கருதவில்லை. நாட்டார் பாடல்கள் பாமரத்தன்மை வாய்ந்தவை என்றும் அது பாமரர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் நினைத்தோம்.

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

ஆரம்பகாலத்தில் இவை ஆய்வுப் பொருளாக மாறும்போது, வெறும் விவரணை சார்ந்த ஆய்வுகளாக மட்டுமே நிகழ்த்தப்பட்டன. பி.ஆர்.சுப்பிரமணியம் போன்றோர், ‘விவரணை மட்டுமே ஆய்வாக முடியாது’ என்று குறிப்பிட்டு, அமைப்பியல் கோட்பாட்டு அடிப்படையில் தாலாட்டுப் பாடல்களை, ஒப்பாரிப் பாடல்களை ஆய்வுசெய்து ஒரு தொடக்கத்தைத் தந்தார். ஆனாலும், கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஆய்வுசெய்வதில் சில இடர்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், இந்தக் கோட்பாடுகள் பெரும்பாலும் மேற்கத்திய நிலத்தில் உருவானவை. எப்படி அவற்றை நம்முடைய நிலத்தில் அப்படியே பொருத்திப் பார்க்க முடியும்? சில கோட்பாடுகளை இறுக்கமான சட்டகங்களாக வைத்துக்கொண்டு அதற்குள்ளேயே அனைத்தையும் பொருத்திப் பார்த்து ஆய்வு மேற்கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதுதான். கோட்பாட்டுப் பார்வையற்று, பாடல்களில் இருப்பதை அப்படியே உரைநடையில் விவரித்துச் சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? என்ற எதிர்க்கேள்வியும் நியாயமானதுதான். இவற்றிற்கு இடையில்தான் நாட்டார் வழக்காற்றியல் வளர்ந்து வருகிறது.” (சிரிக்கிறார்)

“அப்படியானால், நீங்கள் கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுமுறையைப் புறக்கணிக்கிறீர்களா?”


“நான் கோட்பாடுகளைப் புறக்கணிக்கவில்லை. கோட்பாட்டின் மூலம் ஓர் இறுக்கமான வேலியை உருவாக்கிக்கொள்ளக் கூடாது; பார்வையைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது என்கிறேன். கோட்பாடுகள் பெரும்பாலும் நமது நிலத்தில் உருவானவையாக இல்லை என்பதால், அதில் பல சிக்கல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஓர் ஆய்வாளர் தாலாட்டுப் பாடல்களைப் பற்றி ஆய்வுசெய்துள்ளார். அது நூலாகவும்கூட வெளிவந்துள்ளது. அந்த ஆய்வில், சில தாலாட்டுப் பாடல்களைப் பிராமணர்களிடமிருந்தும் சில தாலாட்டுகளைப் பாடல்களைப் பிராமணர் அல்லாதோரிடமிருந்தும் சேகரித்துத் தொகுத்திருக்கிறார். பிராமணர் அல்லாதோரின் தாலாட்டுப் பாடல்களிலிருந்து சில செய்திகளை எடுத்துக்காட்டும் ஆய்வாளர், ‘அவர்களின் பாடல்களில் அர்ச்சுனனுடைய புத்திரனோ, பீமனுடைய உடன்பிறப்போ, தர்மருடைய புத்திரனோ, ராமனின் தம்பியோ என மகாபாரதக் கதைமாந்தர்கள், ராமாயணக் கதைமாந்தர்களின் பெயர்களும் சித்திரிப்புகளும் அதில் உள்ளன. அதேசமயம், பிராமணர்களுடைய தாலாட்டுகளில் இது போன்ற சித்திரிப்புகள் இல்லை. ஏன், பிராமணர் அல்லோதோரின் பாடல்களின் அந்தப் பெயர்ப் பயன்பாடும் சித்திரிப்பும் இருக்கிறது என்றால், அவர்கள் தங்களுக்குச் சமூகத்தில் மதிப்பு இல்லை என நினைக்கின்றனர். அதனால், தங்களுடைய குழந்தைக்குச் சமூக உயர்வைக் கற்பிப்பதற்காக பாரத, ராமாயணக் கதாபாத்திரங்களைப் பாடல்களில் இணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. பிராமணர்களுக்குச் சமூகத்தில் மதிப்பு இருப்பதால், அவர்களுடைய தாலாட்டுப் பாடலில் இந்தக் கதாபாத்திரங்கள் சார்ந்த சித்திரிப்புகள் இணைக்கப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை’ என்கிறார். இந்தக் கருத்து எப்படிச் சரியாக இருக்க முடியும்? இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்?

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

ஒரு சமூகத்துக்கு உயர்வில்லை. இன்னொரு சமூகத்துக்கு உயர்வு இருக்கிறது என்கிற பார்வையே ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடுதான். இது முழுமையான ஆய்வு அல்ல. அவரது ராண்டம் சாம்பிளிங் (Random Sampling) சேகரிப்பு முறையில் அல்லாமல், இன்னும் விரிவான தளத்தில் பாடல்களைச் சேகரித்து இந்த ஆய்வைச் செய்திருந்தால், இந்தக் கருத்து உடைந்துபோயிருக்கும். அவர் இந்தத் தவற்றை எப்படிச் செய்கிறாரென்றால், கர்நாடகத்துக்காரரான எம்.என்.சீனிவாசன் இந்தியச் சமூகவியலாளர். அவர் ‘சான்ஸ்கிரிட்டிசேஷன்’ என்ற ஒரு புதிய கோட்பாட்டை கொண்டுவருகிறார். அதைத் தமிழில் பல்கலைக்கழகங்கள் ‘மேல்நிலையாக்கம்’ என மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தனக்கு மேலாண்மை இல்லையென்று நினைத்தால், அந்தச் சமூகம் பிராமணர்களைப் பார்த்து அவர்களின் பழக்கங்களை நகலெடுத்து முன்னேறும் என்பதுதான். அவர் என்ன நோக்கத்தில் இந்தக் கோட்பாட்டைக் கொண்டுவந்தார் என்று தெரியவில்லை. ஆனால், இந்தக் கோட்பாடு சமூகத்தில் என்னவாக உருவெடுக்கிறது என்றால், ‘சமூகத்தில் மேம்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாம் மேம்பட வேண்டுமென்றால் அவர்களைப் பார்த்து நகலெடுத்துக்கொண்டால்தான் உண்டு’ என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. இது மிகவும் மோசமான ஒரு கருத்து. இந்தக் கருத்துநிலையில் நின்று தனது ஆய்வைப் பொருத்திப் பார்த்துதான் முதலில் நான் குறிப்பிட்ட ஆய்வாளர் அந்த முடிவுக்கு வருகிறார். நாட்டார் ஆய்வியல் என்பது அவ்வளவு எளிமையான வேலை அல்ல. வகைமாதிரியாகச் சில பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டோடு பொருத்தி முடிவுக்குவரும் கருத்து, அந்தக் குறிப்பிட்ட சமூகத்தின் உண்மை நிலையைப் பிரதிபலிக்காது. இது கோட்பாட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஆய்வுசெய்யும்போது ஏற்படுகிற மிகப்பெரிய சிக்கல். இதைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என்கிறேன்.”

“பின்நவீனத்துவம், நாட்டாரியலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா?”


“பின்நவீனத்துவம் பேசுகிறவர்கள் நாட்டார் வழக்காற்றியலில் இருந்தார்கள். ஆனால், அவர்கள் அதைப் பயன்படுத்தி குறிப்பிடும்படியான ஆய்வுகள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. பெருங்கதையாடல்களை, காலத்தில் நிலைத்தவற்றைக் கேள்வி கேட்கும் ஒன்றாக, அவற்றை உடைத்து மறுகட்டமைப்பு செய்கிற ஒன்றாகப் பின்நவீனத்திற்கு ஓர் இடம் இருக்கத்தான் செய்கிறது.”

“நாட்டார் ஆய்வுகள் இன்றைக்கு எவ்வளவு தூரம் விரிவு கண்டுள்ளன?”


“நாட்டார் வழக்காற்றியலில் அறுபதுக்கும் மேற்பட்ட வகைப்பாடுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றதுபோல வகைப்படுத்தி ஆய்வுசெய்து வருகிறார்கள். உதாரணமாக, வாய்மொழி இலக்கியம் என்ற பிரிவில் பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, உழைப்புப் பாடல்கள், கதைப்பாடல்கள், கதைகள் என ஏழெட்டு வடிவங்களைக் கொண்டுவருகிறார்கள். மற்றொரு பக்கம் இவற்றிலுள்ள ஒவ்வொன்றையும் தனித் தனியாக எடுத்தும் ஆய்வுசெய்கின்றனர். இன்றைக்கு நிகழ்த்துக்கலைகளும் நாட்டார் வழக்காற்றியலுக்குள் வந்திருக்கின்றன. அவற்றை உள்ளே கொண்டுவந்தவர் மு.ராமசாமி. அவர்தான் தோல்பாவை நிழல்கூத்து குறித்து ஆய்வுசெய்தார். தோல்பாவை நிழல்கூத்து என்பது, வெறும் நிகழ்த்துக்கலை மட்டுமல்ல, அது கலைஞர்களையும் உள்ளடக்கியது என்ற புதிய பார்வையை முன்வைத்தார். அதில் மேற்கத்தியக் கோட்பாடுகாளைப் பயன்படுத்தியும் ஆய்வுசெய்தார்.
பி.ஆர்.சுப்பிரமணியம், மு.ராமசாமி ஆகியோர் கோட்பாடுகளைப் பயன்படுத்தி நாட்டார் ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முன்னோடிகள் என்று சொல்லலாம். மு.ராமசாமியின் சிறப்பு, நாட்டார் வழக்காற்றியலை வாய்மொழியிலிருந்து நிகழ்த்துக்கலைக்குக் கொண்டுசென்றது. இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு காலகட்டங்களில் ஒயிலாட்டம், தேவராட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்த்துக்கலைகள் பற்றி ஆய்வுசெய்யப்பட்டன. இதுமட்டுமல்லாது, நாட்டார் சமயங்கள், நாட்டார் தெய்வங்கள்,  (அதிலும் குறிப்பிட்ட ஒரு தெய்வம் பற்றி மட்டும் சமயம் பற்றி மட்டும்கூட) குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், பிறப்பு முதல் இறப்பு வரையிலான பழக்கவழக்கங்கள் எனப் பல வகைகளில் விரிந்து, இன்று நாட்டார் வழக்காறு என்பது தவிர்க்க முடியாத ஒரு துறையாக வளர்ந்துவிட்டது.”

“நாட்டாரியல் என்பது கல்விப்புலத்தைப் பின்புலமாகக்கொண்டவர்களைத் தாண்டி பொதுவெளியில் பரவலாகாத ஒரு துறையாக இருக்கிறதே?”


“இது ஓரளவு உண்மைதான். பேராசிரியர் நா.வானமாமலை, பேராசிரியர் இ.முத்தையா, பேராசிரியர் நா.ராமச்சந்திரன் போன்றோர் கல்விப்புலத்தில் இயங்கி வந்திருந்தாலும், அதன் தாக்கமில்லாதவர்களாகத்தான் ஆய்வில் இயங்கினார்கள். நானும்கூட அப்படியானவன்தான். ஆனாலும், இன்றைக்குப் புத்தகக் கடைகளுக்குச் சென்று, நாட்டார் வழக்காற்றியல் நூல்களைச் சேகரித்தால், மிகப் பெரும்பாலான நூல்கள், எம்.பில் அல்லது முனைவர்பட்டத்திற்காகச் செய்யப்பட்ட ஆய்வுகளாகத்தான் இருக்கும். இந்த ஆய்வுகள் எப்படி அமைந்திருக்க வேண்டுமென்றால், வழக்காறுகளை வெறும் ஆய்வுப் பொருளாக மட்டும் பார்க்காமல், இந்த வழக்காற்றிற்கு யார் உரிமையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையையும் வழக்காற்றையும் மேம்படுத்த முனைவதாக இருந்திருக்க வேண்டும். அதாவது பயன்பாட்டு வழக்காற்றியலாக (Applied Folklore) அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தப் பயன்பாட்டு வழக்காற்றியல் இன்றைக்கு எப்படி ஆகிவிட்டது என்றால், அரசின் எயிட்ஸ் விழிப்புஉணர்வு பிரசாரம், குடும்பக்கட்டுப்பாடு பிரசாரம், முதியோர்க்கல்வி பிரசாரம் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பிரசாரக் கருவியாக மட்டுமே ஆகிவிட்டது. ஆனால், பயன்பாட்டு வழக்காற்றியல், மக்களின் கருத்துநிலை வளர்ச்சிக்கும் கருத்துநிலையில் ஏற்பட்ட பழைமைவாதத்திலிருந்து விடுபடுவதற்கும் உதவுவதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஆட்காட்டிப் பாடல் குறித்துச் சொல்லலாம். அதைப் பற்றி பேராசிரியர் தே.லூர்து,  பி.எல்.சாமி ஆகியோர் கட்டுரை எழுதியுள்ளார்கள். ஆனாலும், அந்தப் பாடல் எப்போது மக்களிடம் பரவலாகச் சென்றது என்றால், அதை இசைக்கலைஞர் கே.ஏ.குணசேகரன் பாடி, ஒலிப்பதிவு நாடாவாக வெளியிட்டபோதுதான். அந்தப் பாடலை அவர் தமுஎகச மேடைகளில் தொடர்ந்து பாடிவந்தார். அந்தப் பாடலின் முதல் வடிவில், குருவி இரை தேடி வந்த இடத்தில் வலையில் மாட்டிக்கொண்டு, ‘நான் அழுத கண்ணீரு ஆறா பெருகி ஆனை குளிப்பாட்ட... குளமாப் பெருகி குதிரை குளிப்பாட்ட... என்று அழுதுபுலம்புவதாக இருக்கும். கற்பனையும் உணர்ச்சியும் பீறிடுகிற பாடல் அது. கே.ஏ.குணசேகரனிடம் தோழர் எஸ்.ஏ.பெருமாள், ‘உங்க குரல்ல கேட்கும்போது, இந்தப் பாடல் ரொம்ப உணர்ச்சிகரமா நல்லா இருக்கு. ஆனா, இந்தப்  பாடலின் முடிவு, நம்பிக்கை வறட்சிகொண்டதா இருக்கே... அதில் ஒரு சிறிய மாற்றம் செய்யலாமா என்று கேட்டிருக்கிறார். குணசேகரனும் ஒப்புக்கொள்ள இருவருமாகச் சேர்ந்து, ‘ஏழக் குருவியே நீ ஏங்கியழக் கூடாது... கத்தும் குருவியே நீ கதறியழக் கூடாது. வலை என்ன பெருங்கனமா... அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா!’ என்று மாற்றி எழுதினார்கள். இந்த மாற்றத்திற்குப் பிறகு பாடலைக் கேட்கும்போது, மனதில் அப்படி ஒரு நம்பிக்கை வரும். பயன்பாட்டு நாட்டார் வழக்காற்றியல் என்பது இதுதான். மக்களை அவர்களது அவலத்திலிருந்து விடுபடச் செய்யும் கனவுகளைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். இன்றைக்கு அரசியலில் தனிமனிதத் துதிபாட, சினிமாவில் சாதிய துதிபாட என ஆகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும்.”

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“உங்களுடைய முதல் ஆய்வு பரதவர் பற்றியது. 24 வயதில்தான் ‘மீனவர்’ என்ற ஒரு சமூகம் இருப்பதையே அறிந்துகொண்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்றைக்கும்கூடப் பொதுவில் கலக்காத ஒரு சமூகமாகத்தானே மீனவர் சமுதாயம் இருந்து வருகிறது? இது ஒரு சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் ஆரோக்கியமானதா?”

“தொழில், வாழிடம் இவை இரண்டும்தான் மனித சமூகத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பவை. தமிழ்நாட்டில் பல சமூகங்கள், தொழில் மற்றும் வாழிடம் சார்ந்து குறுகிய வட்டத்தில் வாழ்ந்திருக்கின்றன; இன்றைக்கும் வாழ்ந்துவருகின்றன. இந்தச் சமூகங்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகள் இதுவரை அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப் படவில்லை.  காணிக்காரர்கள், பளியர்கள், தோடர்கள் எல்லாம் இன்றைக்கும் ஒரு சிறிய எல்லைக்குள்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பரதவர்களும் தங்களது தொழில் சார்ந்து அப்படி வாழக்கூடிய சூழலில்தான் உள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கே வேம்பார் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்டத்தின் கோவளம் வரை இவர்கள் அடர்ந்திருக்கும் பகுதி. கிழக்கே முழுக்கக் கடல்தான். மேற்கே, பல மைல் தூரம் வந்தால்தான் ஊர். சில அடிப்படைப் பொருள்கள் வாங்குவது தவிர்த்து அங்கே குறிப்பிடும்படி அவர்களுக்கு வேலை இல்லை. அவர்களின் அன்றாட வாழ்க்கை முழுவதும் கடலைச் சார்ந்துதான் இருக்கிறது. அதனால், அவர்களுக்கு மற்றவர்களுடன் கலப்பு இல்லாமல் ஆகிவிட்டது. காலையில் ஐந்து மணிக்கு மீன் பிடிக்கப் போகிறவர்கள், மாலையில் அல்லது அடுத்த நாள் வருகிறார்கள். பிடித்து வந்த மீனை ஊர்களுக்குள் சென்று அவர்கள் சந்தைப்படுத்த வேண்டியதில்லை. விற்பனையாளர்கள் கடற்கரைக்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள். எனவே அவர்களின் எல்லை அங்கேயே குறுகிவிடுகிறது. அவர்கள் செல்லும் திருவிழாக்கள்கூட, ‘மனப்பாடு சவேரியர் திருவிழா’, ‘உவரி அந்தோனியார் திருவிழா’, ‘தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா’ எனக் கடற்கரை சார்ந்த கோயில் திருவிழாக்களாகத்தான் இருக்கின்றன. மற்றொரு முக்கியமான விஷயம், மீனவர்களுள் இருக்கிற சாதிய அமைப்பு முறை மற்றும் பஞ்சாயத்து வழக்கம். இது மிக வலுவாக அவர்களிடம் இயங்கிவருகிறது.

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

அதேநேரம், இதுபோன்று இருந்த சமூகங்கள் அதிலிருந்து உடைபட்டு வெளியில் வந்ததும் உண்டு. திருநெல்வேலி, தூத்துக்குடி தேரிப்பகுதிகளில் பனைத்தொழில் மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்த நாடார்கள் அப்படி வெளியில் வந்தவர்கள்தான். அவர்களும் பனையில் ஏறி பதனீர் இறக்குவது, பதனீரைக் காய்ச்சிக் கருப்பட்டியாக்குவது அதை விற்பனைக்குக் கொண்டு செல்வது என அந்தக் குறுகிய பனங்காட்டுக்குள்ளேயே வாழ்ந்தவர்கள்தான். அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம், அவர்களுள் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்களுக்கு மிஷனரிகள் கல்வி கொடுத்தன. அதே நேரத்தில் தேரிக்காட்டுக்கு வெளியில் வாழ்ந்த நாடார் சமூகத்தினர் நன்செய் புன்செய் நில உடைமையாளர்களாகவும் வணிகர்களாகவும் கல்விஅறிவு பெற்றவர்களாகவும் முன்னேறியிருந்தார்கள் என்பதும் உண்மை. இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவத்தைத் தழுவவில்லை.”

“பரதவர்களும் பெரிய அளவில் கிறிஸ்தவர்களாக மாறினார்களே...”


“ஆமாம். ஆனால், ஒப்பீட்டளவில் நாடர்களுக்கு வழங்கப்பட்ட அளவு மிஷனரிகளால் மீனவர்களுக்குக் கல்வி வழங்கப்படவில்லை. காரணம், நாடார்களில் பெரும்பான்மையோர் மாறியது, சீர்திருத்தக் கிறிஸ்தவம். மீனவர்கள் தழுவியது கத்தோலிக்கக் கிறிஸ்தவம். இது பெரும்பாலும் சடங்கு சார்ந்தது. அதனால் தேரைக் கொடுத்து அதை இழுக்கவைத்தார்கள். சப்பரம் கொடுத்து அதைத் தூக்கச் செய்தார்கள். கூட்டுபிரார்த்தனைகளில் துதிகளை உரக்கச் சொல்லும்படிக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள், விவிலியம் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். விவிலியம் வாசிக்க வேண்டுமென்றால், கல்வி அவசியம். அதனால், எங்கெல்லாம் தேவாலயம் நிறுவினார்களோ அங்கெல்லாம் ஒரு பள்ளியைத் திறந்தார்கள். அதில் நாடார்கள் கல்வி கற்றார்கள்; கல்வியின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றார்கள். இது அவர்களின் இடமாற்றத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. மதம் மாறாத நாடார்களையும்கூட இந்த மாற்றம் பாதித்தது; அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது மீனவச் சமூகத்தில் நிகழவில்லை. அவர்களிடம் பழைய தொழில் சார்ந்த கடலோடான போராட்டம் இன்னும் தொடர்கிறது. அதேசமயம், முழுமையாக இல்லாவிட்டாலும் மீனவச் சமுதாயமும் ஓரளவு கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்று நவீனமடைவதும் நடந்துகொண்டுதானிருக்கிறது.”

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“நாட்டார் வழக்காற்றியலுக்கான ஆய்வுக்களத்தின் எல்லை எது? எது நாட்டார் பகுதி? யார் நாட்டார் மக்கள்? ‘நாட்டார்’ என்கிற பெயர் பிரச்னைக்குரியதாக இருக்கிறதே?”

“இதற்கு நான் என்ன பதில் சொன்னாலும் நீங்கள் மறுக்க முடியும். (சிரிக்கிறார்) இலங்கைத் தமிழர்களிடம் புழக்கத்திலிருந்த நாட்டார் என்ற சொல்லின் தாக்கத்தில் பேராசிரியர் நா.வானமாமலையும் இங்கே ‘நாட்டார்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இலங்கையில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது, எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், இங்கே பயன்படுத்தும்போது, ஒரு சிக்கல் எழுகிறது. ஏனென்றால், இங்கே ‘நாட்டார்’ என்று ஒரு சாதி இருக்கிறது. ஆக, நாட்டார் இலக்கியம், நாட்டார் வழக்காறு என்று சொல்லும்போது, நாட்டார் சாதியுனுடைய இலக்கியம் பற்றிச் சொல்கிறீர்களா.. அவர்களுடைய வழக்காறுகளைச் சொல்கிறீர்களா என்ற கேள்வி வருகிறது. இந்தக் கேள்வி சரிதான் என்றாலும், அறிவுத்துறையில் அதற்கு ஒரு பொருளில் பயன்பாடு இருக்கிறது என்றால், அதை நாம் புரிதலோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பயன்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். அதில் தவறில்லை.

இதற்குப் பேராசிரியர் நா.வா ஒரு விளக்கம் கொடுப்பார். ‘ஆட்டம்’ (Atom) என்ற சொல்லிற்கு ‘பிளக்க முடியாதது’ என்று பொருள். அறிவியலில் இன்று அணுவைப் பிளந்துவிட்டோம். ஆனால்,  இன்றைக்கும் ‘அட்டாமிக் என்ர்ஜி’, ‘ஆட்டம் பாம்’ போன்ற வேர்ச்சொல்கள் பயன்பாட்டில்தான் இருந்துவருகின்றன. அதுபோலத்தான் நாம் ‘நாட்டார்’ என்ற சொல்லையும் புரிந்துகொள்ள வேண்டும். சரி, ‘நாட்டுப்புறம்’ என்று சொல்லலாமா? என்றால், மதுரை நகரத்தில், சென்னை நகரத்தில், மும்பை நகரத்தில் வழங்கும் வழக்காறுகளும் இருக்கின்றன. கடலுக்குள் செல்கிறவர்களிடம் சில பரிபாஷைகள் இருக்கின்றன; வானியல் சார்ந்த அறிவு, நம்பிக்கைகள் இருக்கின்றன, இவையும் வழக்காறுகள்தான். இவையெல்லாம் கிராமத்திலா இருக்கின்றன, பிறகெப்படி இதை ‘நாட்டுப்புறவியல்’ ‘நாட்டாரியல்’ என்றெல்லாம் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால், பதில் இதுதான், இது ஓர் அறிவியல் துறையின் பெயராக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆகவே இப்படிக் குறிப்பிடத்தான் வேண்டும். அதேபோல, நாட்டார் வழக்காற்று ஆய்வுக்கான மக்கள், பகுதி, எல்லை போன்றவற்றைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாது. எங்கெல்லாம் வழக்காறுகள் இருக்கின்றனவோ அவை எல்லாமே நாட்டரியலுக்கான ஆய்வுக்களம்தான். பல அறிவியல் துறைகளின் சங்கமம்தான் இன்றைய நாட்டார் வழக்காறு!

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

“கிராமங்கள் துரிதமாக நகரமயமாகிக் கொண்டிருக்கும் சூழலில், மக்கள் நவீனமடைந்து கொண்டிருக்கும் சூழலில், நாட்டார் ஆய்வுத் தரவுகளுக்கான எதிர்காலம் என்னவாக இருக்கும்?”

“என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் வரலாம். தரவுகள் மாறும்.. ஆனால், ஒருபோதும் இல்லாமல் போகாது. உதாரணத்திற்கு, முன்பு ஒரு மாட்டுவண்டி செய்து முடித்ததும், அதை முதல்முறை ஓட்டும்போது அதன் சக்கரத்தின் அடியில் எலுமிச்சையை வைப்பது வழக்கமாக இருந்தது. இன்றைக்குப் புதிதாக வாங்கும் டூவீலர், கார்களுக்கு இந்தச் சடங்கைச் செய்கிறார்கள். இதற்கென்றேகூடச் சில கோயில்கள் இன்றைக்கு வந்துவிட்டன. வீட்டிலிருந்து பிணத்தை இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லும்போது, வீட்டின் முற்றத்தில் வைத்து மூன்றுமுறை சுற்றுவார்கள். பிணத்திற்குத் திசைக்குழப்பம் உண்டாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இப்படிச் செய்கிறார்கள். இன்றைக்குப் பிணத்தை வேன் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஆயினும், வீட்டின் வாசலில் முன்னாலும் பின்னாலுமாக மூன்று முறை வண்டியை நகர்த்தி எடுத்துச் செல்கிறார்கள். இப்படித்தான், வழக்காறுகள் மாறும் புதிய வழக்காறுகள்கூடத் தோன்றும். ஆனால், ஒருபோதும் வழக்காறுகள் அழியாது. தரவுகளும் அப்படித்தான். களத்துக்குப் போனால்தான் தெரியும் கம்ப்யூட்டர்கள் சார்ந்து எவ்வளவு புதிய வழக்காறுகள் உருவாகியிருக்கின்றனவோ?!”

“இதைத்தான் நானும் கேட்க நினைத்தேன். இன்று சமூக ஊடகங்கள், மக்கள் புழங்கும் இன்றியமையாத ஒரு மெய்நிகர் சமூகவெளியாக உருவாகியிருக்கின்றன. இவற்றையும் இனியான காலங்களில் ஓர் ஆய்வுவெளியாக நாட்டாரியல் எடுத்துக்கொள்ளுமா?”

“நிச்சயமாக. கற்பனைத்தன்மையும் பயமும் அழகியலும் நாட்டார் வழக்காற்றியலின் முக்கியமான கூறுகள். இவை அனைத்துக்கும் சமூக ஊடகத்திலும் இடமிருக்கின்றன. ஆகவே, அதுவும் நிச்சயமாக ஓர் ஆய்வுவெளிதான். ஒரு கருத்தை வெளிப்படுத்த வேண்டும், அதேசமயம் அதை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது எனும்போது, நாட்டாரியல் உடல்மொழியைக் கச்சிதமாக அங்கு பயன்படுத்தும். சில சமயம் அதைத் தவிர்க்கும். இன்றைக்குச் சமூகஊடகங்களில் வெளியிடப்படும் மீம்ஸ் வகைகளெல்லாம் அப்படியானவைதான். சில பார்த்ததும் புரிந்துவிடுகின்றன; சில யோசித்துப் பார்த்தால்தான் புரிகின்றன. சொலவடைகள்போல இதுவும் மக்களின் விமர்சன வெளிப்பாடுதான். நான்தான் ஏற்கெனவே சொன்னேனே புதிய வழக்காறுகள் உருவாகிக்கொண்டே வரும்.”

“தமிழ்ச் சமூக நினைவில் ஆழமாகப் பதிந்துள்ள பொது உணர்வு என்று ஏதாவது உள்ளதா?”


“பொது உணர்வு என்பது நேர்மறையா எதிர்மறையா என்று ஒரு கேள்வி இருக்கிறது. அதைக் கடந்து பேசினோமென்றால், மொழி அடையாளத்தின் மீதான ஈர்ப்பு, தமிழர்களிடம் முதன்மையானதாக இருக்கிறது. மொழிக்குப் பிறகு வட்டாரத்தன்மை வருகிறது. அதாவது, பிறந்த ஊர்ப்பற்று. பிறகு சாதி வந்துசேர்கிறது. இந்த மூன்றும் நான் பார்த்த வரை தமிழர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ள பொதுஉணர்வாக இருக்கின்றன. முதல் இரண்டும் அவர்களை நெருக்கமாக்கி இணைக்கிறது. சாதிய உணர்வு மேலோங்கும்போது, மற்ற இரண்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன.”

“நாட்டார் வழக்காற்றியலில் இதுவரையிலான ஆய்வுகளின் வழியே தொகுத்துக்கொண்டால், தமிழில் பெண்களைப் பற்றிய சித்திரம் என்னவாக உள்ளது?”

“செவ்விலக்கியம் மற்றும் புராண, இதிகாசப் பெண் பாத்திரங்களோடு ஒப்பிடுகையில், சற்று வேறுபட்ட சித்திரங்கள் நாட்டார் வழக்காறுகளில் கிடைக்கின்றன. ஒரு பக்கம் குடும்ப வன்முறைக்கு ஆட்படுபவர்களாகச் சித்திரிக்கப்பட்டாலும், குடும்பத்தில் பொதுவெளியில் அவர்கள் எழுப்பிய எதிர்க்குரல்களின் பதிவுகளும், வெளிப்படுத்திய பகடிகளும் வழக்காறுகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் உரிமை தொடர்பான பதிவுகளும்கூட உண்டு. ‘சாமி ஆடிய மனைவி’ என்ற என் கட்டுரை, சாமி இறங்குதல் என்ற நம்பிக்கையை எதிர்க்குரலாகப் பயன்படுத்திய மனைவியரை மையமாகக்கொண்டது. அவலத்திற்கு ஆளாகி மாண்டுபோன பெண்கள், தெய்வமான வரலாற்றைப் பேராசிரியர் ச.மாடசாமி பதிவுசெய்துள்ளார். பாலியல் வன்முறைக்கு ஆட்பட்ட பெண்களின் சோக வரலாறுகளும் பதிவாகியுள்ளன. இரண்டு போக்குகளுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.”

“பெண்களின் துயரங்கள் நமது ஆய்வாளர்களால் பெரிதும் பேசப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே...”


“நமது பெண் தெய்வங்களில் ஒன்றுகூட மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரியவில்லையே. எதிரிகளால் மட்டுமல்லாமல், தந்தை, அண்ணன் போன்றோரால் கொல்லப்
படுகிறவர்களாகத்தான் காலந்தோறும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். தனது, குடும்ப, சாதியப் பெருமிதம், பெண்ணின் ‘கற்போடு’ இணைக்கப்பட்டிருப்பதாக நம்புவதன் வாயிலாகத் தொடர்ந்து பெண்கள் கொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள். தெய்வங்களின் நிலையை மக்களுடன் பொருத்திப் பார்த்தால், இப்படித்தான் சொல்லமுடிகிறது.

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

மேலும் உழைப்பு, கலை, தொழில்நுட்பம் எனப் பெண்கள் இந்தச் சமூகத்துக்கு எவ்வளவோ பங்களித்திருக்கி றார்கள். நிகழ்த்துக்கலை, சாதி, தொழில், சமயம் குறித்த ஆய்வுகளில் அவற்றில் ஈடுபட்ட பெண்களின் வாழ்வியல் பிரச்னைகள் ஆழமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை. என்னுடைய பனைமரம் குறித்த ஆய்வு நூலிலும்கூடப் பெண்களின் பங்களிப்பு விரிவாகப் பதிவாகவில்லை என்றே தோன்றுகிறது. வருத்தம்தான்!”

“சாதிய வேறுபாடுகள், வர்க்க முரண்கள், பகைமைகள்கொண்ட இந்திய சமூகத்தில், நாட்டார் ஆய்வில் மக்கள் சொல்கிற எல்லா விஷயங்களையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?”

“நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு நாட்டார் ஆய்வில் சொல்லப்படுகிற பாடலை, கதைகளை, பழமொழிகளை அது எந்த அளவிற்கு உண்மை எனக் கண்டறிந்து அதை உறுதிசெய்ய வேண்டியதுதான் ஆய்வாளனின் வேலை. பல்வேறு தரவுகள், எதிர்த் தரவுகள் எனச் சேகரித்து, ஒப்பிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் சொல்கிற கதையையோ பாடலையோ மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முடிவிற்கு வந்துட முடியாது; கூடாது.”

“ஆய்வுகளின்போது இந்தச் சாதிய முரண்கள் சார்ந்த உணர்வுகளை அவதானிக்க முடிகிறதா?”


“பல விஷயங்களைப் பார்க்க முடியும். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கிடையே முரண்கள் இருக்கும். அது அந்தப் பகுதியின் பாடல்களில் கதைகளில் எதிரொலிக்கும். தகவல் தரும் மக்களின் கோபம், ஆற்றாமை, பகையுணர்வு, பகடிகளின் வழியாகவும் அதை உணர முடியும். குறிப்பாக அடக்குமுறைகளுக்கான எதிர்க்குரல்களை அதிகம் கேட்க முடியும்.”

“ ‘வில்லிசைக் கலை’, நாடார் சமுதாயம் உருவாக்கிய கலை என்பதாக ஆய்வுகள் முன்வைக்கப்படுவதை ஏற்கிறீர்களா?”


“குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, குறிப்பிட்டுச் சொல்லும்படியான எண்ணிக்கையில் வில்லிசைக் கலைஞர்களாக நாடார் சமுதாயத்தினர் இருந்து வந்திருக்கிறார்கள். வேளாளர்களும் ஈடுபட்டு வந்திருந்தாலும், எண்ணிக்கையில் நாடார்கள் அதிகம். வில்லிசைக் கலைஞர்களில் இரண்டு வகையானவர்கள் உண்டு. மற்றவர்கள் எழுதிக் கொடுக்கிற வில்லிசைப் பாடல்களை நிகழ்த்துபவர்கள்; அவர்களாகவே பாடல்கள் எழுதி நிகழ்த்துபவர்கள். நாடார்களில் நிகழ்த்துபவர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக மற்றவர்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களும் இருந்திருக்கிறார்கள். திருநெல்வேலிப் பகுதியைப் பொறுத்தவரை, பல சமூகங்கள் இந்தக் கலையில் இயங்கி வந்திருக்கிறார்கள். தேவர்கள், நாடார்கள், தலித்துகள், குறிப்பாக அருந்ததியர்களும் இக்கலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர்கள் நிகழ்த்துபவர்களாக மட்டுமின்றி வில்லிசைக் கதைப்பாடல்கள் எழுதிக் கொடுப்பவர்களாகவும் இருந்துவந்திருக்கிறார்கள். நான் பதிப்பித்த  ‘பூச்சியம்மன் வில்லுப்பாடு’ என்ற கதைப்பாடலை எழுதியவர் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். காரணம் சரியாகத் தெரியவில்லை, திருநெல்வேலியைப் பொறுத்தவரை வேளாளர்கள் அதிகம் இந்தக் கலையில் ஈடுபடவில்லை. இப்படிப் பல சமூகங்கள் இணைந்து பொதுவில் ஈடுபட்டு வளர்த்திருக்கும் இந்த வில்லிசைக் கலையை ஒரு குறிப்பிட்ட சமூகம் உருவாக்கியது என்று சொல்லமுடியாது. அப்படி உறுதிபடச் சொல்லும் அளவிற்கு இங்கு ஆய்வுகள் நடைபெறவில்லை.”

“ஏன் மதுரையைத் தாண்டி வட பகுதிக்கு வில்லுப்பாட்டு பயணப்படவில்லை?”


“வில்லுப்பாட்டு ஒரு வட்டாரத்தன்மையுள்ள கலை. தென் தமிழகத்தை, குறிப்பாக குமரி மாவட்டத்தையும் திருநெல்வேலி மாவட்டத்தையும் மையமாகக்கொண்டது. இப்படித் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் வட்டாரக் கலைகள் உண்டு. கொங்குப் பகுதியில் உடுக்கைப் பாட்டு, மதுரையில் லாவணி, வட தமிழகத்தில் தெருக்கூத்து என அந்தந்தப் பகுதிகளில் அவை சிறப்பாக வழங்கப்படும்.”

“வில்லிசைக் கலை, எவ்வளவு பழமையான கலையாக இருக்க வாய்ப்புள்ளது?”


“உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சில பள்ளுப்பாடல்களில் வில்லுப்பாட்டு பாடியதற்கு நெல் அளந்த குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றைக்கொண்டு உத்தேசமாகக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.”

“அன்றைக்கு மக்களின் இடப்பெயர்ச்சிக்கான பிரதான காரணங்களாகப் பஞ்சம், தொற்றுநோய், பாலியல் வன்முறை போன்றவை இருந்ததாகக் குறிப்பிடுகிறீர்கள். முதல் இரண்டைப் புரிந்துகொள்ளமுடிகிறது. பாலியல் வன்முறை என்பதைக் கூடுதலாக விளக்க முடியுமா?”


“பாலியல் வன்முறை என்பது, பெரும்பாலும் ஆளப்படுபவர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆளக்கூடிய பாளையக்காரன் அல்லது குறுநில மன்னன், ஒரு குடும்பத்திலிருந்து ‘பெண்ணை அனுப்பி வை’ எனக் கேட்டுக் கட்டாயப்படுத்தும்போது, அந்தக் குடும்பம் அங்கிருந்து இடம்பெயர்கிறது. அன்றைக்குக் கூட்டுக்குடும்பத்தில், ஒரு குடும்பம் என்பது 30லிருந்து 40 பேர் கொண்டதாக இருக்கும். எனவே, அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இடம்பெயர்வார்கள். அப்படி இடம்பெயர்ந்தவர்கள், அவர்களுக்குள் புதிதாக மணஉறவு வைத்துக்கொண்டு பல்கிப் பெருகுவார்கள். சொல்லப்போனால், ஓர் ஊராக அவர்கள் பின்னர் மாறிவிடுவது உண்டு. ஆய்வின்போது, அவர்கள் இடம்பெயர்ந்ததற்கான காரணம் கேட்டால், ஒட்டுமொத்தமாக ஒரே கதையைத்தான் சொல்வார்கள். தமிழ்நாட்டில் குடியேறி தமிழர்களுடன் ஒன்றிவிட்ட தெலுங்கு பேசும் சமூகத்தினர் ஆந்திரத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்ததாகச் சொல்வதுண்டு.   இவர்களில் சில பிரிவினர்,  ‘இஸ்லாமியர்கள் பெண் கேட்டதால் ஆந்திராவிலிருந்து இடம்பெயர்ந்தோம்’ என்று சொல்வார்கள். பெண் கேட்டதால் மட்டும் இப்படி இடம்பெயர்ந்திருக்க வாய்ப்பில்லை. பெண் கவர்தலாகத்தான் அது இருந்திருக்க வேண்டும். நாகரிகம் கருதி  ‘பெண்கேட்டல்’ என்பதாக மாற்றிச் சொல்லத் தொடங்கியிருக்கலாம். தமிழகத்தின் பெரும்பாலான சாதிகளிடமும் இப்படியான இடப்பெயர்வுக் கதை உண்டு.”

“சாஸ்தா வழிபாட்டில் ஒரு சாஸ்தாவைப் பல சாதிகள் வழிபடுவதைப் பார்க்க முடிகிறது. இதை இடப்பெயர்ச்சியின் விளைவாக சாதிக்குழுக்கள் தேவைசார்ந்து தங்களைப் பல்வேறு சாதிக்குழு அடையாளத்துடன் மாற்றிக்கொண்டு கலந்ததற்கு ஓர் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாமா?”

“இருந்திருக்கலாம். இடம்பெயர்ந்து போகிற ஊர்களில் பெரும்பான்மையாக, வலுவாக இருந்த சாதிகளோடு சென்று கலந்திருக்கலாம். யூகம்தான், நேரடியான சான்றுகள் இல்லை. நீங்கள் குறிப்பிடுகிற மாதிரி விஷயங்கள் சில கதைகளில் உண்டு.
 
ஆனால், கொலையுண்ட தெய்வ வழிபாட்டில் பல சமூகங்களும் இணைந்து இன்றைக்கும் பங்குபெற்றுவருகிறார்கள். அதில் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படியான கதைகளும் உண்டு. இன்னும் விளங்கிக்கொள்ள முடியாத விஷயங்களும் உண்டு. உதாரணமாக, குறுநில மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வள்ளியூரில் இரண்டு தேவர் சமூகத்து இளைஞர்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பீடம் வைத்து அந்தச் சமூகத்தினர் இன்றைக்கும் வணங்கி வருகிறார்கள். அவற்றில் ஒரு பீடம் நாடார் சமூகத்தைச் சார்ந்தது. இது எப்படிச் சாத்தியமானது என்று ஆராய்ந்தால், குறுநில மன்னர்களின் படைவீரர்கள் அந்த இரண்டு தேவர் சமூகத்து இளைஞர்களைக் கொலைசெய்ய வரும்போது, தூரத்தில் புழுதி பறப்பதைப் பனையிலிருந்து பார்த்த நாடார் அந்த வீரர்களைத் துரிதப்படுத்தியிருக்கிறார். அதற்காக, படைவீரர்கள் அந்த நாடாரையும் கொலைசெய்திருக்கிறார்கள். அந்த நன்றி உணர்வின் காரணமாக அவருக்கும் ஒரு பீடம் வைத்து வழிபடுகிறார்கள். இப்படி நிறைய கதைகள் உண்டு. அருந்ததிய வீரனை வணங்குகிற வெள்ளாளர் சமூகமும் பிராமண சமூகம்கூட உண்டு.”

“சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் என எவற்றைச் சொல்வீர்கள்?”

“அடிப்படையில் இதற்கான முன்னெடுப்புகள் அரசிடமிருந்துதான் தொடங்க வேண்டும். ஏனென்றால், சமூகப் பாதுகாப்பு என்ற ஒன்று இன்றைக்குச் சமூகத்தில் கேள்விக்குரியதாக இருக்கிறது. அது, சாதிய அடிப்படையில்தான் நிகழ்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், எல்லோருமாகச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் அல்லது அரசு பார்த்து உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில், நீங்கள் உங்கள் சமூகத்து ஆள்களிடம்தான் அல்லது அமைப்பிடம்தான்போய் நிற்க வேண்டும். எல்லோருக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய அரசாங்கம், ஓட்டு அரசியலில் சாதியம் சார்ந்ததாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. காவல்நிலையத்தில் உயர்சாதி அதிகாரி ஒருவரிடம், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், புகார் அளித்து சரியான அணுகுமுறையைப் பெறமுடியுமா? அதேநேரத்தில், அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அமைப்போடு அங்கு சென்றால், சரியான விதத்தில் அணுகப்படுவார். இதுதான் யதார்த்தம். இங்கே அரசு அமைப்பே சாதியமாக உள்ளது. அடுத்ததாகக் கல்வி நிறுவனங்கள். அவை, நியாயமான முறையில் இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அனைத்து சமூகத்தவருக்கும் அவரவர் திறமைக்கு உரிய வகையில் மேலே படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, உயர்கல்வியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் குறிப்பிடும்படியான வேலைவாய்ப்பும் பெற வழியின்றி போய்விடுகிறது.”

“அப்படியானால், அம்பேத்கர் முன்மொழியும் அகமணமுறை ஒழிப்பில் உங்களுக்கு...”

(இடைமறிக்கிறார்) “நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதற்கு ஆதாரமே இவைதான். அகமண முறை ஒழிப்பிற்கான சூழல் எப்படி உருவாகும்? முறையான கல்விபெற்று, வேலைவாய்ப்பு பெற்று, ஒன்றாகப் பணியாற்றுகிற சூழலில்தானே காதல் மலர முடியும். இணைந்து பயில்வது, இணைந்து பணியாற்றுவது, இணைந்து உண்பது எனச் சூழல் உருவானால், தானாக சாதிமறுப்பு திருமணங்கள் நடக்கும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.”

“ ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்றொரு முன்வைப்பு நடந்தேறி உள்ளது. அம்பேத்கரிடம் உள்ள எந்தப் போதமையில் இப்படியான உரையாடல் சாத்தியமாகிறது? (இந்துத்துவப் பெரியார் ஒருபோதும் சாத்தியமில்லை என்கிற கருத்தையும் இங்கு கணக்கில்கொண்டால்)”

“அம்பேத்கர், பெரியாரைப்போல கடவுள் மறுப்பாளர் இல்லைதான். ஆனால், ‘நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால், இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று தமது யால்டா பிரகடனத்தில் வெளிப்படுத்தியவர். ‘தீண்டாமையின் ஊற்றுக்கண் இந்துமதம்’ என்று எழுதிய அவர், வேதமறுப்புச் சமயமான புத்த மதத்தை ஆயிரக்கணக்கான மஹர் சாதியினருடன் தழுவியவர், பகவத்கீதை குறித்த அவரது ஆய்வுரை இந்து மதக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதா என்ன?”

“கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் சாதியக்கூறுகளும் அடிப்படைவாதமும் இருந்தும், ஏன் இந்துமதம் மட்டும் பகுத்தறிவுவாதிகள் மற்றும் இடதுசாரிகளால் மிகவும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிறது என்கிற கேள்வியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

“தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் இடதுசாரிகளுக்குமிடையே மோதல் ஏற்படுவதற்கான களங்களே இல்லை. கேரளத்தில் உண்டு. அங்கே கத்தோலிக்கர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே எப்போதும் மோதல் உண்டு. இ.எம்.எஸ்-ன் ஆட்சி கவிழ்ந்ததற்குக் காரணமே அதுதானே. பெரியாரைப் பொறுத்தவரை கிறிஸ்தவத்தை விமர்சித்து நிறையவே பேசியும் எழுதியும் உள்ளார். புதுச்சேரியில் அவருடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய ‘புதுவை முரசு’ பத்திரிகையில் பிஷப்புகளின் மூடநம்பிக்கைகளைப் பற்றி எழுதியதால் நீதிமன்றத்தில் பிஷப்புகள் வழக்குத் தொடர்ந்தார்கள். அது பிரான்ஸ் நீதிமன்றம் வரை சென்று, பின்னர் அபராதம் ரத்தானது. தலித்தாக இருந்து இஸ்லாத்திற்கு மாறியவரிடம், ‘இஸ்லாத்திற்கு மதம் மாறுவதால் நாளைக்கே உங்கள் பிரச்னையெல்லாம் தீர்ந்துவிடும், நீங்கள் வசதியாகிவிடுவீர்கள் என்று நான் சொல்லமாட்டேன். இந்துப் பறையர் கிறிஸ்தவப் பறையர் என இரண்டு பறையர்கள் இருக்கிறார்கள். இஸ்லாம் பறையர் என்று ஒருவர் இல்லை. அதனால்தான் உங்களை இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று சொன்னேன்’ என்று பெரியார் கூறியிருக்கிறார். கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் பகுத்தறிவுவாதிகள் விமர்சிக்கவில்லை என்று சொல்பவர்கள், பெரியார் குறித்து முழுமையாக வாசிக்காதவர்களாகத்தான் இருக்கமுடியும். மேலும், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் எது பெரும்பான்மை பலம்கொண்டிருக்கிறதோ அதுதான் முதன்மையான விமர்சனத்திற்கு உரியதாக இருக்கும். அந்த விதத்தில்தான் இந்து மதம் சார்ந்த விமர்சனங்கள் வைக்கப்படுகிறன.

கிறித்துவமும் இஸ்லாமும் சமத்துவத்தைப் போதிக்கும் மதங்கள். ஆனால், இந்து மதம் சமத்துவத்தைப் போதிக்கும் மதமாக இல்லையே? நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்பது கீதை கிருஷ்ணனின் வாக்கியம்தானே? கிறிஸ்தவத்தில் இஸ்லாத்தில் அதன் தலைமை குருவாக, போதகர்களாக, யாரும் ஆக முடியும். இந்து மதத்தில் ஒரு காஞ்சி சங்கராச்சாரியராகவோ தர்மபுரம் ஆதீனமாகவோ மதுரை ஆதீனமாகவோ எல்லோராலும் ஆக முடியுமா? கோயிலில் சென்று பூஜை செய்யமுடியுமா? மீனாட்சிபுரம் மதமாற்றத்தில் மதம் மாறிய தேவேந்திரகுல வேளாளர், வாணியம்பாடி அரபிக் கல்லூரியில் படித்துமுடித்து இன்று சிவகாசியில் தொழுகை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்து மதத்தில் இது சாத்தியமா? முடியாதில்லையா. அதனால்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது.”

“நாட்டார் தெய்வங்களும் இந்துமதத்தின் ஓர் அம்சமே என்கிறார்களே?”

“நாட்டார் தெய்வங்களுக்கு உயர்வு கற்பிக்க வேண்டும் என்று அதை வணங்குகிறவர்களில் சிலர் ஆகமவிதிகளை நோக்கிக் கோயில்களைக் கொண்டுபோகிறார்கள். மற்றொரு புறம், எல்லா நாட்டார் தெய்வங்களையும் இந்து மதத்திற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் முயற்சிசெய்துகொண்டிருக்கிறார்கள். வணங்குகிற மக்களிடமும் ஓர் இரட்டைத் தன்மை இருக்கத்தான் செய்கிறது. சுடலைமாடனையும் வணங்குகிறான்; திருச்செந்தூர் முருகனையும் வணங்குகிறான். இசக்கியம்மனையும் வணங்குகிறான்; திருப்பதி வெங்கடாசலபதியையும் வணங்குகிறான். ஏற்கெனவே, பல்வேறு வழிகளில் எல்லா நாட்டார் தெய்வங்களையும் சிவனுடனும் பார்வதியுடனும் இணைத்துவைத்துவிட்டுக் காத்திருப்பவர்களுக்கு இப்போது இணைப்பது எளிதாகிவிடுகிறது.”

“வரலாறு கற்பிக்கும் தகுதி, தமிழுக்கு இல்லை என்று நீலகண்ட சாஸ்திரி எழுதினார். அதை மறுத்து பாரதி கவிதை எழுதினார். அ.மார்க்ஸ் ஒரு நேர்காணலில், ‘பின் நவீனம் சார்ந்த குறிப்பிடத்தக்க விஷயங்களை மொழிபெயர்க்கும் அளவுக்கு தமிழ் நவீனப்படவில்லை’ என்று குறிப்பிட்டார். தமிழ் மொழியின் தகுதி, வளர்ச்சி பற்றி உங்கள் பார்வை என்ன?

“கவிதை, செய்யுள், இலக்கணம், புராணம் என்ற வகைமைக்குள் மட்டுமே செயல்பட்டு வந்த எந்த மொழியும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளத்தான் செய்யும். தமிழ் மொழியும் இதற்கு விலக்கல்ல. 1579-ம் ஆண்டில் அச்சான ‘கிரிசித்தியானி வணக்கம்’ என்ற நூலில் ‘கிரிசித்து’ என்ற சொல்லுக்கான பொருளை விளக்க முற்பட்ட அந்நூலின் ஆசிரியர், ‘தமிழ்ப் பாஷையிலே நன்றாய்ச் சொல்லக் கூடாது’  என்கிறார். இன்றைய நிலை எப்படி உள்ளது? சமூகவியல், அறிவியல் கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகளும் நூல்களும் இன்று வெளிவரவில்லையா என்ன? கணிப்பொறி முக்கியத்துவம் பெற்றுள்ள இன்றைய சமூகத்தில், கணிப்பொறியறிவை வளர்க்கும் நோக்கில் கணிப்பொறியை மையமாகவைத்து இதழ்களும் நூல்களும் வரவில்லையா? தொடக்க நிலையில் சில இடர்பாடுகள் இருக்கலாம்தான். ஆனால், அவை நிரந்தரமானவை அல்ல. இவற்றை உருவாக்குவதில் மொழி ஆசிரியர்களின் பங்களிப்பைவிட, அந்தந்த அறிவுத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு மேலோங்கி இருத்தல் அவசியமானது.”

“சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றவை நாட்டாரியலை எவ்வளவு தூரம் பாதித்துள்ளன?”

“பெரும்பாலும் நாட்டாரியல்தான் இலக்கியத்தைப் பாதிக்கும். இலக்கியம் நாட்டாரியலைப் பாதிப்பது மிக அரிதுதான். நாட்டாரியல் தாக்கங்கள் சங்க இலக்கியத்தில் உண்டு என்பதைக் குறிப்பிடும்படியான பல ஆய்வுகள் தமிழில் நடந்துள்ளன. ஆனால், இலக்கியங்களிலிருந்து மிகச் சொற்பமான விஷயங்களையே நாட்டார் மக்கள் பயன்படுத்தியி ருக்கிறார்கள்.”

“சங்க இலக்கியத்தில் ‘பெருந்திணை’ குறித்துப் பெரிதும் பேசப்படவே இல்லையே...”

“கைக்கிளை எனும் ஒருதலைக் காதலையும் பெருந்திணை என்ற பொருந்தாக் காமத்தையும் விரிவாகப் பேச வேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். இன்று, சாரு நிவேதிதாவைப் படிக்கிற பின்நவீனத்துவக் காலம். ஆனால், அன்றைய பாலியல் சார்ந்த மதிப்பீடுகள் வேறாக இருந்திருக்கலாம். இலக்கியம் என்பது ஓர் உயர்வான விஷயம் எனக் கருதிய காரணத்தால் இவை பற்றிப் பேசாமல் விட்டிருக்கலாம்.”

“அப்படியானால், பரத்தையர் குறித்து அவ்வளவு பாடல்கள் இருக்கிறதே...”

“அவற்றில் குறிப்பிடப்படும் பரத்தையர் வாழ்வும் இன்றைய சிவப்பு விளக்குப் பகுதி வாழ்வும் ஒன்று அல்ல. நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள், அவர்கள் கைக்கிளையையும் பொருந்தாக்காமத்தையும் இல்லை என்று சொல்லவில்லை. ஆம், இவை இந்தச் சமூக வாழ்க்கையில் இருக்கின்றன என்று முறையாகப் பதிவுசெய்துவைத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், அவை பற்றி இவ்வளவு குறிப்பிடுவதுபோதும் என்று நினைத்திருக்கலாம். நாங்கள் படிக்கும் காலத்தில் எங்களது ஆசிரியர், ‘பெருந்திணைப் பாடல்கள் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. பின்னர் தொகுத்தவர்கள் அப்பாடல்களைத் தவிர்த்திருக்கலாம்’ என்று சொன்னார். நாங்கள், ‘நல்ல சமாளிப்பு சார்’ என்றோம்.”

“நாட்டார் கலைகளில், பழமொழிகளில் ‘இன்செஸ்ட்’ உறவுகள் சார்ந்த உரையாடல்கள் உள்ளனவா?”

“நிறைய இருக்கின்றன. ராமநாதன் சார் ‘முறையற்ற பாலுறவுகள்’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதைக் குறையாகவோ பிரச்னையாகவோ பார்க்க வேண்டியதில்லை. நாம் ஒழுக்கம் சார்ந்து சில திட்டவட்டமான வரையறைகளை வைத்துக்கொண்டிருப்பதால், இன்செஸ்ட் சார்ந்த எதிர்மறைக் கண்ணோட்டம் நம்மிடம் இருக்கிறது. நாட்டாரியலில் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது சூழல் சார்ந்து தன்னைச் சுயதணிக்கை செய்துகொள்ளும்.”

“பனை மரம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்த புள்ளி எது?”


“அலைச்சலையும் பொருட்செலவையும் மிச்சப்படுத்தும் வழிமுறையாக நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையே ஆய்வுக்களமாகக் கொள்வது நல்லது என்ற எண்ணம் என்னுள் வேரோடியிருந்தது. மேலும், நண்பர்களின் உதவியும் எளிதில் கிடைக்கும் என்பது அனுபவம் உணர்த்திய உண்மை. ஒன்றிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டபோது, பனைமரக் காடுகளைக் காணமுடிந்தது. இம்மாவட்டம் தொடர்பான ஆவணங்களிலும், கிறிஸ்தவ மறைப்பணியாளர்களின் பதிவுகளிலும் பனைமரம் குறித்த பதிவுகளைப் படித்தபோது, இம்மரம் குறித்த விரிவான பதிவை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. பொருள்சார் பண்பாடு என்ற அறிவுத்துறையுடனான தொடர்பு, ஆர்வத்தைச் செயல்படுத்தத் தூண்டியது.”

“கள் அருந்துவது பற்றி உங்கள் பார்வை?”

“போதையுணர்வைத் தூண்டும் பொருள்கள் கலக்கப்படாத கள், ஓர் இயற்கையான பானம். சங்க இலக்கியங்களின் துணைகொண்டு பார்த்தால், பண்டைத் தமிழரின் தேசியபானம் என்று கள்ளைக் குறிப்பிடலாம். உடல்நலம் சார்ந்தும், ஒழுக்க உணர்வு சார்ந்தும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகக் கள் கருதப்படுகிறது. போதையூட்டும் தன்மைகொண்டதாக இதைப் பார்ப்பதுதான் காரணமாகும். கலப்படமில்லாத கள், ஆரோக்கியமான பானம்தான். இன்று, தென்னங்கள் இறக்க அனுமதிக்கப்படும்போது, பனங்கள்ளையும் இறக்க அனுமதிக்கலாமே!”

“1967-களில் மதுவிலக்கு இருந்த காலகட்டத்தில் கிராமங்களில் சூழல் எப்படி இருந்தது. இன்றைய பூரண மதுவிலக்குக் கோரிக்கையை இதோடு இணைத்துச் சொல்ல முடியுமா?

“கிராமப்புற உழைப்பாளிகளின் பொருளாதார நிலை அன்று சீரழியாமல் இருந்தது. ஆனால், இன்று பூரணமதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. எனவே, தென்னங்கள்ளையும் பனங்கள்ளையும் அனுமதித்துவிட்டு, டாஸ்மாக் கடைகளை மூடிவிடலாம். இதனால், மது அருந்துபவர்களின் உடல் நலமும் பொருள் நலமும் பாதுகாக்கப்படும். தென்னை, பனை வளர்ப்போரின் பொருளாதார நிலையும் மேம்படும்.”

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணு சேகரித்து வைத்திருக்கும் சாதிப் பழமொழிகளை வெளியிட முடியாத சூழல் இருப்பதாக ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அ.கா.பெருமாள் தன்னுடைய ‘வயக்காட்டு இசக்கி’ எனும் நூலில் தான் சேகரித்த பல உண்மைகளை எழுதமுடியாத சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். சூழல் அப்படித்தான் உள்ளதா?”

“உண்மையில் சூழல் அப்படித்தான் உள்ளது. வாசகர்கள் என்ற பெயரில் சாதி, மதம் சார்ந்து நிற்கும் சிலர், கருத்துகளை முன்வைக்காது, கூட்டம் திரட்டல், ஆயுதம், உடல்வலு என்பனவற்றின் துணையுடன் மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ள விரும்புகிறார்கள். இதனால் ஆய்வாளர்கள் மட்டுமின்றி படைப்பாளிகளும்கூட அடக்கி வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளைக் குறித்த பதிவுகளும்கூட இதே நிலையைத்தான் எதிர்கொள்கின்றன.”

“நாட்டுப்புறப் பகடிகளின் உச்சமாக நீங்கள் கருதுகிற இடங்கள்?”

“சாதி, பொருளியல், பதவி இவற்றின் அடிப்படையில் மேலாதிக்கம் செய்வோரைக் குறித்த தம் எதிர்க்குரலை, கதையாகவோ பழமொழியாகவோ பாடலாகவோ கூறும் ஒருவரோ ஒருத்தியோ கூறிமுடித்ததும் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது.”

“நாட்டார்மொழிப் படைப்பிலக் கியமாகத் தமிழில் உருவானவற்றில் தாங்கள் முக்கியமாகக் கருதும் படைப்புகள் எவை?”

“நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’,கி.ராஜநாராயணின் ‘கோபல்ல கிராமம்’, சி.எம்.முத்துவின் ‘கறிச்சோறு’, பாமாவின்  ‘கருக்கு’, கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’, சு.தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ மற்றும் பா.செயப்பிரகாசம், பூமணி, ஆர்.சண்முகசுந்தரம் என நீண்ட பட்டியல் உண்டு.”

“உங்களுடைய ஆய்வுப் பயணத்தில் இதை ஆய்வுசெய்ய வேண்டாம், தவிர்த்துவிடலாம் என்று நினைத்தது உண்டா?”

“அப்படி எதையும் நினைத்ததில்லை. முதலில் சேகரிப்பாளனாக மட்டுமே இருந்த காலத்தில் பாடல்களை மட்டுமே சேகரித்தேன். கதைகளைச் சேகரிக்கவில்லை. காரணம், கதையை ஆடியோவாகப் பதிவுசெய்து எழுதுவது, மிகவும் சிரமமான வேலை. பிரதிக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டுமானால், நம்பகத்தன்மையோடு வரி பிறழாமல் எழுத வேண்டும். அன்றைக்கு அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்ததால், கதைப் பக்கம் போகவில்லை.” (சிரிக்கிறார்)

“இன்னும் விரிவாக ஆய்வுசெய்யப்பட வேண்டிய களங்கள் பற்றிச் சொல்லுங்கள்…”


“நாட்டார் தொழில்நுட்பம், பொருள்சார் பண்பாடு, இஸ்லாம், கிறிஸ்தவம், தமிழ்ச் சமணம் சார்ந்த வழக்காறுகள் குறித்த ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன. அவை முன்னெடுக்கப்பட வேண்டும்.”

“முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?”


“வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு படிநிலையே முதுமை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், உறவுகளின் அரவணைப்பும், உடல்நலமும், அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் பொருளாதார நிலையும் இருப்பின் முதுமை ஒரு பிரச்னை அல்ல. அறிவுசார்ந்த தேடல், புதிய நூல்கள், புதிய நண்பர்களின் அறிமுகம் போன்றவை முதுமை வாழ்வைச் சாரமுடையதாக்கும். என்னைப் பொறுத்த அளவில் முதுமை சாரமுடையதாகவே உள்ளது.”

“அரை நூற்றாண்டு காலம் ஓர் ஆய்வாளராக, களப்பணியாளராக உழைத்திருக்கிறீர்கள். நிறைவாக உணர்கிறீர்களா?”

“சாதி, மதம் கடந்த நிலையில் சமகால ஆய்வாளர்களின் வழிகாட்டுதலை இளமையிலேயே பெற்றுள்ளேன். அவர்களில் சிலர் இன்று இல்லை. ஆனால், அவர்கள் ஆற்றுப்படுத்திய நெறி இன்றும் துணைநிற்கிறது. அறிவுத்துறை நாள்தோறும் வளர்கிறது. புதிய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறது. ஓர் ஆய்வாளனுக்கு நிறைவுதருவது அவனது எழுத்துக்களை வாசித்து விமர்சிக்கும் வாசகர்கள்தான். இந்த அளவுகோலின்படி நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவே எண்ணுகிறேன். சில தொழில்நுட்பக் கருவிகள் இன்று ஆய்வுக்குத் துணைநிற்பதைப் பார்க்கும்போது, இவை பல ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கப்பெருமூச்சு அவ்வப்போது வெளிப்படுவதும் உண்டு.”