Published:Updated:

இப்படியும் குழந்தைமையைக் கவிதையால் கொண்டாட முடியுமா? #Children'sDay

இப்படியும் குழந்தைமையைக் கவிதையால் கொண்டாட முடியுமா? #Children'sDay
இப்படியும் குழந்தைமையைக் கவிதையால் கொண்டாட முடியுமா? #Children'sDay

ன்று குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்கூட கொண்டாட்ட மனநிலைதான் இருக்கும். பெரியவர்களின் மனதில் புது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் மந்திரக்காரர்களாகக் குழந்தைகள் இவ்வுலகில் திகழ்கின்றனர். திருமண வீடுகளில் குழந்தைகளின் கூச்சலும் கும்மாளமும் இல்லையென்றால், அந்த விழாவின் சிறப்பில் கொஞ்சம் குறைவுதான் இல்லையா! 

குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் அழகுதான். அவற்றை ரசிக்காதவர்களைப் பார்ப்பது அரிதினும் அரிது. குழந்தைகளின் மழலை மொழியையும் அவர்களின் சின்னச் சின்ன செய்கைகளையும் தங்கள் கவிதைகளில் பல்வேறு விதமாக வடித்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகளின் குழந்தைமை வழியும் செயல்களிலிருந்து வாழ்க்கையின் மிகப் பெரிய தரிசனத்தை உள்வாங்குவதாகக் கூறும் படைப்பாளிகளும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் குழந்தைகளைப் பற்றிய பதிவுகள் (குழந்தைகள் இடம்பெறும் படைப்புகள் என்றும் சொல்லலாம்) ஏராளம். மிகக் குறிப்பாக கவிதைகளில் குழந்தைகளைப் பற்றியப் பதிவுகளைத் தொகுத்தால் பல தொகுதிகளாக வெளியிடும் அளவுக்கு எண்ணற்ற கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் சிலரின் கவிதைகளை இன்று படிக்கலாம். இந்த ஆண்டின் குழந்தைகள் தினத்தில் அழகான கவிதைகளைப் படித்து, குழந்தைகளைக் கொண்டாடும் மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வோம். 

விளையாட்டுப் பிள்ளைகள்

இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்.
ஒன்று
ஊஞ்சலில் நின்றும், உட்கார்ந்தும்,
ஒற்றைக்காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக்கொண்டும்
ஓ-வென்று கத்திக்கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?

- முகுந்த் நாகராஜன்

நீர் தெளித்து விளையாடுதல்

முன் பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டுவிட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும்போது
காரணம் தெரிந்துவிட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்.

- முகுந்த் நாகராஜன்

குழந்தைகளின் ஜன்னல்கள்
 
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?

- முகுந்த் நாகராஜன்

மதுக்கடையில் உருளும் கோலிக் குண்டுகள்

குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லரை
கை நழுவி விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதோர் அற்புதம்...
அவன் சட்டைப் பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக் குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென்று இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருப்பவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக் குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.

- யூமா வாசுகி

துண்டு ஒன்றை
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்.

குழந்தையாக முடியாமல்
அல்லற்பட்டுக் கொண்டிருப்பது
அம்மாக்கள்தான்.

- அ.வெண்ணிலா


குழந்தை

பொம்மைகளை விற்க
பொம்மைக்காரன் குட்டிக்கரணம் அடிக்கிறான்
பொம்மைகளை விடுத்து
பொம்மைக்காரனே வேண்டுமென்று கேட்கிறது குழந்தை.

- சந்திரா

கடவுளின் கிளாஸ் மேட்

பிஞ்சு விரல்களால்
குழந்தை தன்னை வணங்கும்போதெல்லாம்
நண்பேன்டா என அணைத்துக்கொள்கிறார்
கடவுள்.

வீட்டுப்பாடம் செய்யாத குழந்தைகளின்
தாய் தகப்பன்களுக்கு அன்றைய தினம்
கடவுள் வரமளிப்பது
குழந்தைகளின் கையெழுத்து.

புறங்கைகளில் வழிந்துகொண்டிருந்த
ஐஸ்க்ரீமைத் தானும் நக்கித் தின்ன வேண்டும் என கடவுள் வருவதாலேயே
பாவம் குழந்தைகள்
இன்னொரு ஐஸ்க்ரீம் கேட்கின்றன.

குப்புறப் படுக்க குழந்தை திணறும்போதெல்லாம்
'ஓ... மை காட்’ எனப் பதறும் கடவுள்
இப்படியோ அப்படியோ விழுந்து

அது சிரித்தவுடன்
'காட் இஸ் கிரேட்’ எனக் கண்களை மூடுகிறார்.

அவசர அவசரமாய் அலுவலகம் போகும்
அப்பாக்களின் மீது கவலைகொண்ட கடவுள்
குழந்தையை அதே அப்பாக்களின் மீது
உச்சா போகவைத்துவிடுகிறார்.

அம்மா மடியில் நான்தான் படுப்பேன் என
அடம்பிடிக்கும் குழந்தைகளிடம்
'இன்னிக்கு அவன்... நாளைக்கி நீ’ எனச் சொல்ல
சமாதானம் அடையும் குழந்தையின் மடியில்தான் என்றைக்குமே படுத்துக்கொள்கிறார் கடவுள்!

- பி.மோகன் குமார்

(கவிதைகள், அக்கவிஞர்களின் தொகுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டவை)