Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

நட்சத்திரத்தில் உறங்கிய பறவை

பறந்துவிடுவதற்கான முன் ஆயத்தம்
சிறகைத் தூசி தட்டி நிமிர்ந்து
சோம்பல் முறித்து எழுகிறது பறவை.
வானின் நீண்டவெளியில்
பூமியின் தூரத்தை மிஞ்சிய
அந்தப் பறவை
ஒரு சொல்லொன்றை ஆகாயத்திலிருந்து
உதிர்த்துவிடுகிறது.
அது மேகங்களில் மறைந்து
தாமதமாகக் கீழிறங்குகிறது.
பெருமலைகளில் மோதுண்டும்
பெருமரங்களில் மோதுண்டும்
நதிகளில் விழுந்து  நனைந்தும்
பூமிக்கு இறங்குகிறது.
அது உதிர்த்த சொல்லில் வடிந்த
குருதித் துளிகளின் தடயம்
கம்பளிப்பூச்சி வரைந்த கோடுகளைப்போல
ஓவியமானது.
தாமதத்தின் வெறுப்பை, பறவை
ஒரு சகாராவின் சூட்டைச் சுமக்கச் சொல்லி
அந்தச் சொல்லுக்குக் கட்டளையிடுகிறது.
மறுத்துவிடுகிற சொல்லை
ஆகாயத்துக்குப் புறப்படச் சொல்கிறது.
சொல் கடந்த தூரத்தைப் பறவை ஒத்திருந்தது.
இரவு, சொல்லையும் பறவையையும்
பிடித்துக்கொள்கிறது.
நட்சத்திரம் உறங்க அழைக்கிறது.
பறவை, சொல்லோடு தஞ்சம் புகுந்துகொள்கிறது
இப்போது பறவை தன் தூக்கத்தில்
அந்தச் சொல்லைப் பிரதி செய்கிறது
இயலாமையென!


- ஜே.பிரோஸ்கான்

சொல்வனம்

வால் நீண்ட கதை

அவனது தற்கொலைக்குப் பிறகாக
முளைத்த கதைக்கு
கால்கள் மட்டுமல்ல
நீண்ட வாலும் இருந்தது
நள்ளிரவுத் தற்கொலைக்கு
முந்தைய சாயங்காலத்தில்
அவன் நீலநிறச் சட்டை அணிந்திருந்ததாக
அவள் சொன்னாள்
நீண்டநேரம் மொட்டைமாடியில்
நின்றுகொண்டு
வானத்தையே வெறித்துப்
பார்த்துக்கொண்டிருந்ததாக
இன்னொருத்தி சொன்னாள்
எப்போதும்போல் இல்லாமல்
அன்றைக்கு அவனது முகம்
பிரகாசமாக இருந்ததாக
விளக்குச்சரம் போட்டவள் சொன்னாள்
ஓரிரு தினங்களுக்கு முன்
அவ்வீட்டிற்கு சற்றும் சம்பந்தமில்லாத
ஒரு பெண்ணின் நிழல்
சமையலறை ஜன்னலில் தெரிந்ததாக
பின் வீட்டு டீச்சர் சொன்னபோதே
அக்கதையின் வால்
காலப் புதரின் பொந்துக்குள்
தன்னை இழுத்துக்கொள்ளத்
தொடங்கியிருந்தது


- வே.முத்துக்குமார்

சொல்வனம்

பிறக்காத மனிதர்களின் உரையாடல்

நான் மேகங்களோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்
என்னையும் ஒரு வாசகனையும்
ஓர் இடத்தில் சந்திக்கவைக்கிறது
அங்கு மிக அருகில் பயணம் செய்யும் காற்று
நாங்கள் சந்தித்துக்கொண்டோம்
உரையாடல் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது
அதன் ஒலி ஒரு முத்தத்தைவிட மென்மையானது
சூரியன் வழக்கத்தை மீறி
குளிர்மையை அங்கு பரப்பியது
அது இரண்டு தேநீர்க் குவளையின்
வெப்பத்தைவிடக் குறைவானது
எமது தலைகளுக்கு மேலாக
வானம் சற்று நகரத் தொடங்கியது
அது மரபணுவில்
பின்னோக்கிச் செல்வதைப்போல் இருந்தது
இப்போது ஆதிக்குச் சென்றுவிட்டோம்
எனக்கும் வாசகனுக்கும்
தனித்தனிப் பாதைகள்
பூமியில் இன்னும் நாங்கள் பிறக்கவே இல்லை.


- ஏ.நஸ்புள்ளாஹ்

சொல்வனம்

பிரியாணிக்குள்ளிருந்து ஃபோர்க்

அந்த உயர்தர அசைவ உணவகத்தில்
ஃபோர்க் ஒன்றினால்
பசியைத் தேடிக்கொண்டிருந்தவர்களுக்கென
பிரியாணிக்குள்
தன் மடி உயிர்ப்பந்துடன்
அடக்கமாகியிருக்கும் கோழியின்
விசுவாசம் தேவைப்படுகிறது
எல்லோருக்கும்...
அதை நடிப்பால் தர இயலாதவை
பிரியாணிக்குள் புதைவதில்
என்ன ஏமாற்றம் இருக்க முடியும்?


 - ராம்பிரசாத்