Published:Updated:

“அதாவது கண்ணுங்களா!” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்

“அதாவது கண்ணுங்களா!” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
“அதாவது கண்ணுங்களா!” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்

“அதாவது கண்ணுங்களா!” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்

மாணவிகளைத் தவறாக வழிநடத்திய தாகக் கைதாகிச் சிறையில் இருக்கும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியிடம், ஜூன் 28-ம் தேதி சென்னையில் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக சி.பி.சி.ஐ.டி போலீஸார் மனுதாக்கல் செய்தபோதெல்லாம் தொடர்ச்சியாக அதை கோர்ட் நிராகரித்து, ‘சென்னைக்கு எதற்குப் போக வேண்டும்? விருதுநகரிலேயே குரல் பரிசோதனையை நடத்துங்கள்’ என்றது.

ஜூன் 20-ம் தேதி ஜாமீன் கோரி நிர்மலாதேவி ஐந்தாவது முறையாகத் தாக்கல் செய்த மனுவையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில்தான், சென்னையில் குரல் சோதனை நடத்த மூன்று நாள்கள் மட்டும் கோர்ட் அனுமதி வழங்கியது. ஜூன் 28-ம் தேதி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறைக்கு நிர்மலாதேவியை அழைத்துச் சென்றனர். துறையின் கூடுதல் இயக்குநர் நளினி, இணை இயக்குநர் ஹேமலதா ஆகியோர்  மூன்று மணி நேரம் நிர்மலாதேவியிடம் குரல் பரிசோதனை மேற்கொண்டனர்.

“அதாவது கண்ணுங்களா!” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்

‘குரல் சோதனை’ குறித்து விசாரித்தோம். “சத்தமாகப் பேசுதல், மெதுவாகப் பேசுதல், நடந்துகொண்டே பேசுதல் என்று பலவிதங்களில் இந்தச் சோதனை நடத்தப்படும். வழக்கின் தன்மை, குற்றம்சாட்டப்பட்டவரின் உடல்நிலை, மனநிலைக்கு ஏற்பச் சோதனை செய்வார்கள். நிர்மலாதேவி, மாணவிகளிடம் செல்போனில் பேசிய பகுதிகளை முழுவதுமாக ஒரு புத்தகத்தில் எழுதி, அதைச் சாதாரணமாக வாசிக்கச் சொல்லி நிர்மலாதேவியிடம் கொடுத்தார்கள். பின்னர், அதையே சத்தமாகவும், வேறுவிதமான ஏற்ற இறக்கங்களுடனும் வாசிக்கச் சொன்னார்கள். குரல் சோதனை நடப்பதுபோல் நிர்மலாதேவிக்குத் தெரியாது. ஆனால், அத்தனையும் நுட்பமாகப் பதிவுக்குள் வந்துவிடும். ‘வாய்ஸ் அனாலிசிஸ் ஸ்பெக்ட்ரா’ என்ற கருவியில்தான், செல்போன் ஆடியோ பேச்சு பதிவேற்றம் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் எந்தப் பதற்றமும் இல்லாத நார்மல் நிலைக்கு வரும்வரை ஆய்வு போய்க்கொண்டே இருக்கும். நிர்மலாதேவி விவகாரத்திலும், ஆய்வு இதேரீதியில் போனதால், மூன்று மணிநேரம் வரை பரிசோதனை முழுமையாக நடந்தது. நிர்மலாதேவியும் ஆய்வுக்கு முழுமையாக உடன்பட்டார். மிகவும் பாப்புலர் ஆகிவிட்ட ‘அதாவது கண்ணுங்களா’ என்ற வார்த்தையை அடுத்தடுத்த மாடுலேஷன்களில் உச்சரித்தபோது, நிர்மலாதேவியின் முகம் இறுக்கமாகிவிட்டது. அந்த போர்ஷன் மட்டும் கூடுதலாகக் கவனிக்கப்பட்டது’’ என்ற தகவலைச் சொல்கிறார்கள்.

குரல் சோதனையை எந்த அளவுக்கு நீதிமன்றங்கள் நம்பும்? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சொல்லப்பட்ட விவகாரத்தில் டி.டி.வி.தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட்கள் நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ‘சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் போனில் பேசியுள்ளார். ஆதாரம் எங்களிடம் உள்ளது’ என்று சொன்னபோது, ‘ஆடியோ பதிவுகளை முக்கிய ஆதாரமாக ஏற்க முடியாது, அது தினகரன் குரலே இல்லை. மேலும், குரல் மாதிரி சோதனை என்பதே சட்டவிரோதம்’ என்று தினகரன் தரப்பு கோர்ட்டில் வாதிட்டது. அத்துடன் அந்த விவகாரம் அப்படியே நின்றுவிட்டது. நிர்மலாதேவி விவகாரத்தின் நிலையே வேறு. ‘செல்போனில் மாணவிகளிடம் பேசியது நான்தான். ஆனால், தவறான வழிநடத்தலுக்கான தொனியில் நான் பேசவில்லை’ என்று அவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். எனவே, இந்தச் சோதனை ஒரு சம்பிரதாயம்தான்” என்கிறார்கள்.

எப்படியும், நிர்மலாதேவி வழக்கின் மர்ம முடிச்சுகளை இந்தச் சோதனை விடுவிக்கப் போவதில்லை.

- ந.பா.சேதுராமன்
படம்: ஆர்.எம்.முத்துராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை?

துரை சிறையில் இருக்கும் நிர்மலாதேவிக்கு ஆறாவது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட உதவிப்பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடக்கூடிய பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள், 70 நாள்களைக் கடந்து சிறையில் உள்ளனர். ‘இவர்களை வெளியில் விட்டால், மறைக்கப்பட்ட உண்மைகளைப் பேசிவிடுவார்கள்’ என்பதால் இவர்களை ஜாமீனில் விட அரசுத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது.

“அதாவது கண்ணுங்களா!” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்

நிர்மலாதேவியிடம் அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவது ஏன் என்று அவரின் வழக்கறிஞர் மகாலிங்கத்திடம் கேட்டோம். ‘‘வழக்கு நடந்து வருவதால் இது சம்பந்தமாக நான் எதுவும் கூற முடியாது’’ என்று மறுத்துவிட்டார். மதுரையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஸ்டாலினிடம் கேட்டோம். ‘‘நிர்மலாதேவிமீது ஐ.பி.சி 370 (பாலியல் குற்றத்துக்குத் தூண்டுதல்), ஐ.பி.சி 511 (குற்றச் செயலுக்கு முயற்சி செய்தல்), தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 67 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாமீனில் விடக்கூடிய பிரிவுகள்தான் என்றாலும், இது ஒரு முக்கியமான வழக்கு என்பதால் நீதிமன்றம் பிணை மறுத்திருக்கலாம். நிர்மலாதேவி, மாணவிகளிடம் போனில் பேசியதுதான் இந்த வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டு. அதனால், அதைத் தொழில்நுட்பரீதியாக நிரூபிக்கக் குரல் சோதனையைத் தற்போதுதான் முடித்துள்ளார்கள். இதற்கு மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஏதுமில்லை என்று நினைக்கிறேன். இனி வெளியில் வந்து அவரால் சாட்சிகளைக் கலைக்க முடியாது என்று நீதிமன்றம் கருதினாலோ, அல்லது அவருக்கு ஏதும் பிரச்னை வராது என்று நினைத்தாலோ ஜாமீன் வழங்கலாம்’’ என்றார். உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர், ‘‘நிர்மலாதேவியைத் தொடர்ந்து உள்ளே வைத்திருப்பதன் மூலம், ஒட்டுமொத்தக் குற்றத்துக்கும் அவரே காரணம் என்று மக்களை நம்பவைக்க நினைக்கிறார்கள். இந்த வழக்கை மக்கள் மறந்துவிடும் நேரத்தில், நிர்மலாதேவியை வெளியில் விடுவார்கள். ‘அதுவரை வேறு எதைப் பற்றியும் பேசக்கூடாது. வேறு யாரையும் காட்டிக்கொடுக்கக்கூடாது’ என்று நிர்மலாதேவியிடம் டீலிங் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது’’ என்கிறார்கள்.  பதற்றமோ, கவலையோ இல்லாமல்தான் சிறையில் நிர்மலாதேவி இருக்கிறார். 

- செ.சல்மான், படம்: ஈ.ஜெ.நந்தகுமார்