Published:Updated:

அனைவரையும் நான் நேசிக்கிறேன்!

அனைவரையும் நான் நேசிக்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
அனைவரையும் நான் நேசிக்கிறேன்!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

அனைவரையும் நான் நேசிக்கிறேன்!

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

Published:Updated:
அனைவரையும் நான் நேசிக்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
அனைவரையும் நான் நேசிக்கிறேன்!

வளுடைய உடல் பூமியில் கிடத்தப்பட்டிருந்தது. முகத்தில் புன்னகை. சாதித்து முடித்த பிறகு தோன்றுமே, அப்படியொரு புன்னகை. தொளதொள அங்கியை அவள் அணிந்திருக்கிறாள். வெறுமை
யான கால்கள். நீண்ட பல பயணங்களை மேற்கொண்ட பிறகு இப்போதுதான் அவை ஓய்ந்து கிடக்கின்றன. அவளுக்கு அருகில் சுருண்டுகிடக்கும் பாம்புகள்போல குழந்தைகளின் சடலங்கள் ஒட்டிக்கிடக்கின்றன.
`இவர்கள் என் குழந்தைகள். நான்தான் அவர்களை உலகுக்கு வழங்கினேன். நானே திரும்பவும் எடுத்துக்கொள்கிறேன்' என்று அந்தப் பெண்ணின் உதடுகள் முணுமுணுப்பதுபோல ஒரு பாவனை. நிலா கவனித்துக்கொண்டிருக்கிறது. கவனித்துக்கொண்டு அப்படியே நிற்கிறதேயொழிய, வருத்தப்படுவதுபோல இல்லை. நிறைய பார்த்துப் பழகிவிட்டது போலும்.

குறைபாடுகள் ஏதுமற்ற, நிறைவான ஒரு பெண்ணின் உடலை `எட்ஜ்' (விளிம்பு) என்னும் தனது கவிதையில் வர்ணிக்கிறார் சில்வியா பிளாத். அந்தப் பெண்ணை மரணம்தான் குறைபாடுகளிலிருந்து விடுவித்து, அவள் வாழ்வையும் பிறப்பின் நோக்கத்தையும் நிறைவடையச் செய்திருக்கிறது. ஆனால், அந்த மரணத்தையும்கூட அவள் போராடியே பெற வேண்டியிருந்தது, புகழைப்போல.

`எனது வார்த்தைகளைக்கொண்டு என் கவிதைகளை எழுதிக்கொள்வதைப்போல, என்னை நிறைவுசெய்துகொள்ள மரணத்தை நானே வரவழைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. `தற்கொலை' என இதைக் கொச்சைப்படுத்தாதீர்கள். `கோழைத்தனமான செயல்' என்று வெறுப்பையும் சினத்தையும் உமிழாதீர்கள். என் மரணத்தைப் பற்றி தீர்ப்பு எழுதுவதற்கு முன், ஒரு நிமிடம் யோசியுங்கள். என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?'

அனைவரையும் நான் நேசிக்கிறேன்!

சில்வியா பிளாத்தின் கவிதைகளில் மரணத்தின் வாசத்தைப்போலவே நேசத்தின் வாசமும் நிறைந்துகிடக்கிறது. `ஒருவர் விடாமல் அனைவரையும் நான் நேசிக்கிறேன்' என்று தனது டைரியில் எழுதினார் சில்வியா பிளாத். `என்னைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொரு கதையையும், ஒவ்வொரு சம்பவத்தையும், உரையாடலின் ஒவ்வொரு பகுதியையும் நான் நேசிக்கிறேன். அவை எனக்கான கச்சாப்பொருள். ஒருவர் விடாமல் எல்லோரையும்போல நான் இருந்துபார்க்க விரும்புகிறேன். ஊனமுற்ற ஒருவரைப்போல, இறந்துகொண்டிருக்கும் ஒரு மனிதரைப்போல, ஒரு பாலியல் தொழிலாளியைப்போல என்னாலும் இருக்க முடியுமா? அவர்களைப்போல சிந்தித்து, உணர்ந்து, வாழ்ந்துபார்த்து எழுத முடியுமா? ஆசைதான். ஆனால், என்னால் எல்லோராகவும் இருக்க முடியாது என்பது தெரிகிறது. எனக்கு ஒரேயொரு வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. அதை மட்டுமே நான் வாழ முடியும். அதை நான் மட்டுமே வாழ்ந்தாக வேண்டும்.'

அளவுகடந்த நேசத்துடன் மலர்ந்த சில்வியா பிளாத்தை, அந்த ஒரே ஒரு வாழ்க்கை ஏன் மூர்க்கத்தனமாக அலைக்கழிக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்கான விடையை சில்வியாவின் கவிதைகளிலும் நினைவுக் குறிப்புகளிலும் தேடலாம்தான். எளிமையான அழகுடன் மிளிரும் அந்த எழுத்துகள் நம்மை வரவேற்று, அருகில் இழுத்துக்கொள்வதும் உண்மைதான். ஆனால், இழுத்துக்கொண்ட பிறகு ஒரு பெரும் இருள் நம்மைச் சூழ்ந்து கொண்டுவிடுகிறது.

8 வயது முதல் 24 வயது வரை சில்வியா பிளாத் எழுதிய, இதுவரை வெளிவராத பல கடிதங்களைக்கொண்ட முதல் தொகுப்பு, சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. ஆயிரம் பக்கங்களைக் கடந்து நிற்கும் அந்தப் புத்தகம், நியாயப்படி அதன் உள்ளடக்கத்துக்காகத்தான் கொண்டாடி வரவேற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் அட்டைப்படம் காரணமாக, தவிர்த்திருக்கவேண்டிய ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டது.

அமெரிக்கப் பதிப்பில் பிரச்னை எதுவுமில்லை. கோட் அணிந்து, புன்னகையுடன் கேம்பிரிட்ஜுக்கு அருகில் நிற்கும் சில்வியா பிளாத்தின் படம், அதன் அட்டையில் இடம்பெற்றிருந்தது. சிக்கல், பிரிட்டிஷ் பதிப்பில்தான். மணல் பரப்பில் சில்வியா பிளாத் வெண்ணிற நீச்சலுடையில் கால்களை மடக்கி அமர்ந்திருக்கும் முழு வண்ணப் படம் அட்டையில் இடம்பெற்றிருக்கிறது. பலர் வெடித்துவிட்டார்கள். சில்வியாவின் எழுத்துகளைவிடவும் அவருடைய உடல் முக்கியமானதாக மாறிவிட்டதா? ஒரு நட்சத்திரத்தைப்போல பிரகாசித்தாலும் சில்வியாவை கவர்ச்சியான ஓர் இளம் பெண்ணாக மட்டுமே அடையாளப்படுத்த விரும்புகிறீர்களா? ஓர் இலக்கிய மேதையை அறிமுகப்படுத்தும் முறை இதுதானா?

இந்த அச்சம் சில்வியா பிளாத்துக்குமே இருந்திருக்கிறது. ஒரு கவிதையையும் கதையையும் கவிதையாகவும் கதையாகவும் அணுகாமல், அதை எழுதியவர் யார் என்பதைப் பொறுத்து ஆணுக்கோர் அளவுகோலும் பெண்ணுக்கு இன்னொன்றும் வைத்து மதிப்பிடும் வழக்கத்தை இந்த உலகம் விட்டொழிக்கப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். தன் படைப்புகள் நேர்மையாக மதிப்பிடப்படும் என்று அவர் நம்ப தயாரில்லை. எனவே, `என் எழுத்துகளை நானே சுயபரிசீலனை செய்துகொள்வேன். அது போதும் எனக்கு' என்றார் அவர். `யாருடைய தலை யசைப்புக்காகவும் காத்திருந்து நேரத்தை நான் வீணாக்கப்போவதில்லை. நான் எனக்கு நேர்மையாக இருந்தால் போதும். என் நேர்மை என் கவிதைகளிலும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் அது போதும்.'

சில்வியா பிளாத் இரு உலகங்களில் வாழ்ந்துவந்தார். முதல் உலகம் என்பது, ஒரு கவிஞராக அவரே படைத்துக்கொண்டது. அங்கே அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன. இரண்டாவது, குடும்பம். இங்கே எதுவும் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக, அந்த உலகம் அவரைக் கட்டுப்படுத்திவைத்திருந்தது. இந்த இரண்டு உலகங்களும் ஓயாமல் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. `சில்வியா, நீ எனக்கு முழுமையாக வேண்டும். என்னை வளர்த்தெடு. என்னைச் செழிப்பாக்கு. நான்தான் காலத்திடம் போராடி உன்னை என்றென்றும் வாழவைக்கப்போகிறேன்' என்றது எழுத்துலகம். `அம்மா, எனக்கு நீ வேண்டும். என்னைவிட்டு நொடிப்பொழுதும் நீங்கிச்சென்றுவிடாதே' என்று அவருடைய இரு குழந்தைகளும் சில்வியாவின் மெலிந்த கரங்களை மாறி மாறிப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தார்கள். கவிதைகளா, குழந்தைகளா? யாருக்கு நான் அதிகம் தேவைப்படுகிறேன்? அல்லது எனக்கு யார் அதிகம் தேவைப்படுகிறார்கள்?

இப்படியொரு மோதல் வந்துவிடக் கூடாது என்றுதான் இளம் வயதில் ஆசைப்பட்டார் சில்வியா பிளாத். `என்னுடைய 17 வயதை நான் என்றென்றும் பத்திரப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் விலைமதிப்புமிக்கது. நேரம் ஓடிக்கொண்டிருப்பது கவலையளிக்கிறது.'

சிறிது காலம் கழித்து மீண்டும் ஒரு பதிவு... `எனக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ என அஞ்சுகிறேன். தினமும் மூன்று வேளை உணவு சமைப்பதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும். திரும்பத் திரும்பச் செய்யும் அன்றாடப் பணிகளிலிருந்தும் எனக்கு விடுதலை தேவை.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைவரையும் நான் நேசிக்கிறேன்!

வாழ்க்கை ஒருவரையும் விடுவிப்பதில்லை என்பதை உணர்ந்தபோது, அவர்இதுவரை கண்டுவந்த கனவுகள் ஒவ்வொன்றாக வண்ணமிழக்கத் தொடங்கின. சில்வியா பிளாத் முதலில் தற்கொலைக்கு முயன்றது அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 1950-ம் ஆண்டில். அப்போது அவர் வாசிப்பிலும் எழுதுவதிலும் மூழ்கிக்கிடந்தார். பெண்கள் பத்திரிகை ஒன்று வெளியிட்டிருந்த சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்து, கதை ஒன்றை எழுதி அனுப்பினார். அந்தக் கதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

ஒருநாள், `நம் ஊருக்கு டைலான் தாமஸ் வருகிறார், அவரைச் சந்திக்க யாரெல்லாம் வருகிறீர்கள்?' என்று ஆசிரியர் கேட்டபோது, சில்வியா பிளாத் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார். டைலான், அவருக்குப் பிடித்தமான ஒரு கவிஞர். ஆனால், சில காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு அவரால் போய்ச் சேர முடியவில்லை. மனம் உடைந்த சில்வியா, டைலான் தாமஸ் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இரண்டு நாள்கள் சுற்றித்திரிந்து பார்த்தார். அவர் தென்படவேயில்லை. சில வாரங்கள் கழித்து சில்வியா தன் கால்களைக் கீறிக்கொண்டார். `உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சல் என்னிடம் இருக்கிறதா எனப் பார்த்தேன்' என்றார்.

ஆகஸ்ட் 1953-ல் மீண்டும் தற்கொலைக்கு முயன்றார் பிளாத். இந்த முறை, தன்னுடைய அம்மாவின் தூக்கமாத்திரைகளை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்கு அடியில் ஊர்ந்துசென்று படுத்துக்கொண்டார். சாப்பிட்டது அனைத்தும் வெளியில் வந்துவிட்டன. சோர்ந்துபோய் மூன்று நாள்கள் படுத்துக்கிடந்தார். (இருள் என்னை நிரந்தரமாக விழுங்கிவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன்!) அவரைக் கண்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆறு மாத காலம் அவருக்கு உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மின்சார அதிர்ச்சியும் கொடுத்துப்பார்த்தார்கள். அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தித் தேறி வந்ததோடு உயர்ந்த மதிப்பெண்ணையும் பெற்று கல்லூரியிலிருந்து வெளிவந்தார் சில்வியா பிளாத்.

இந்த  அனுபவங்களை `தி பெல் ஜார்' என்னும் நாவலில் பதிவுசெய்திருக்கிறார் பிளாத். அவர் எழுதிய ஒரே நாவல் இது. சோவியத் உளவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஜூலியஸ் ரோஸன்பர்க், ஈதல் ரோஸன்பர்க் இருவருக்கும் அமெரிக்க அரசு மரண தண்டனை அளிப்பதிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. இந்த மரணங்கள், ஏனோ சில்வியா பிளாத்தை மிகவும் பாதித்தன. `என்னைப்போலவே அவர்கள் உடலிலும் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. நான் பிழைத்துக்கொண்டேன்... அவர்கள் இறந்துவிட்டார்கள். வெளியில் வந்தால், வீட்டுக்குச் சென்றால், உண்ண அமர்ந்தால், படித்தால், நண்பர்களுடன் பேசினால், என்ன செய்தாலும் அந்த இருவருடைய உடல்களும் என் நினைவுகளில் தேங்கி மிதந்துகொண்டிருக்கின்றன' என்று நாவலில் எழுதினார் சில்வியா பிளாத்.

கவிதைகளில் தன்னைப் புதைத்துக் கொள்ள முடியுமா எனப் பரிசோதித்துப் பார்த்தார். தன்னுடைய காதலை, ஏக்கத்தை, சோகத்தை, நம்பிக்கையை, தேடலைச் சொற்களில் கடத்திவிட்டு எதுவுமே நடக்காததுபோல வாழ்ந்து பார்க்கலாமா என முயன்றார். என்னாலும் இயல்பாக வாழ முடியும் என்று பலமுறை சொல்லிப்பார்த்ததோடு, அதை நம்பவும் முயன்றார். அப்போது அவர் எழுதிய கவிதைகளில் காதலும் இழப்பும் ஒளியும் இருளும் மரணமும் வாழ்வும் அபூர்வமான முறையில் ஒன்று கலந்திருந்தன.

தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல, புறச்சூழலும் அவருக்கு அழுத்தத்தையே கொடுத்தது. உதாரணத்துக்கு, உலக நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுத பலத்தை வளர்த்துக்கொள்வது அவரைப் பாதித்தது. அணு ஆயுதம் அவரை நிம்மதியிழக்கச் செய்தது. ஒரு நாடு இன்னொன்றின் மீதும் ஒரு மனிதர் இன்னொருவர் மீதும் ஏன் மேலாதிக்கம் செலுத்த நினைக்க வேண்டும் என அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கணவரும் சக கவிஞருமான டெட் ஹ்யூக்ஸ் அவரைக் கைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் இணைந்து வாழ ஆரம்பித்தபோது, சில்வியா முற்றிலுமாக உடைந்துபோனார். மனச்சிதைவு அவரை ஆயிரம் கரங்களுடன் முழுமையாகப் பற்றிக்கொண்டது. இருள்... இருள்... இருள். தன்னை மட்டுமல்ல முழு உலகையுமே இருள் வென்றெடுத்துவிட்டது என்று அவர் நம்பத் தொடங்கினார். கனவுகள் உதிர்ந்து செல்ல ஆரம்பித்தன. உறக்கம் தொலைந்துபோனது. மருத்துவரிடம் சென்று மாத்திரைகள் வாங்கிக்கொண்டார். மீண்டும் கவிதையை நாடினார். `நான் வாழ்வின் அடியாழம் வரை சென்று பார்த்துவிட்டேன். நீ பார்த்திருக்க மாட்டாய். எனவே, நீ அச்சப்படுகிறாய். எனக்கு அச்சமில்லை. மோசமானவை எனச் சொல்லத்தக்க அனைத்தும் எனக்குப் பழகிவிட்டன' என்று எழுதினார் சில்வியா. `காதலை நீ இன்னமும் நம்புகிறாய் என்பது வியப்பளிக்கிறது' என இன்னோரிடத்தில் எழுதினார். காதல் ஒரு நிழல். நீ கதறி அழுதாலும் அது உயிர்பெற்று எழாது. காதல் உன்னை மீட்கப்போவதில்லை. என்னை எப்படி அது கைவிட்டதோ அப்படியே உன்னையும் அது கைவிடும்.

சில்வியாவின் பிற்காலக் கவிதைகளிலும் டைரிக் குறிப்புகளிலும் இருள், தடிமனான பாம்புபோல அவர் கால்களைச் சுற்றிப் படர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. `இன்று மிகுதியான மனச்சோர்வை உணர முடிகிறது. ஒரு வார்த்தைகூட எழுத முடியவில்லை. கடவுள்கள் துன்புறுத்துகிறார்கள். தனிமையில் ஒதுக்கப்பட்டவள்போல உணர்கிறேன். உணரும் ஆற்றலை இழந்துவிட்டதுபோல இருக்கிறது. நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் மனம் என்னைக் கொன்று தின்று கொண்டிருக்கிறது. நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துகொண்டிருக்கிறேன்.'

30 வயது சில்வியா பிளாத், தனது அடுத்த தற்கொலை முயற்சியை 1963 பிப்ரவரி 11 அன்று மேற்கொண்டார். குழந்தைகளுக்கு ரொட்டியும் பாலும் எடுத்து வைத்துவிட்டு அவர்கள் இருந்த அறையைப் பூட்டினார். கதவுகளுக்குக் கீழுள்ள இடைவெளியைப் போக்க துணிகளைப் பரப்பிவைத்து அழுத்தினார். அது போதாதென்று, டேப் எடுத்துவந்து ஒட்டினார். நிதானமாக அருகில் உள்ள சமையலறைக்குச் சென்று தனது தலையை அடுப்பில் நுழைத்து, எரிவாயுவைத் திறந்துவிட்டார்.

சில்வியாவை அறிந்திருந்த பலரும் உடனடியாக டெட் மீது ஆத்திரம் கொண்டனர். சில்வியாவின் கல்லறை வாசகத்தில் இடம்பெற்றிருந்த `ஹ்யூக்ஸ்' என்னும் பெயரை அவர்கள் சேதப்படுத்தி அழித்தார்கள். `சில்வியாவுக்கு இனி டெட் ஹ்யூக்ஸின் பெயர் தேவைப்படாது. இவர் சில்வியா பிளாத் மட்டுமே' என முழங்கினார்கள். டெட்டும் உடைந்துதான் போனார்.

சில்வியா இறுதிக்காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பு, இப்போது அவரிடம் வந்திருந்தது. தன்னுடைய மனைவியின் மேதமையை நிலைநாட்டும் அற்புதமான அந்தக் கவிதைகளை அவர் தாமதமின்றி வெளியிட விரும்பினார். அதே நேரம், சில்வியாவின் கவிதைகள் வெளிவந்தால் அவருக்கு தான் இழைத்த துரோகமும் உண்டாக்கிய ரணமும் தெரிந்துவிடும் என்பதை டெட் அறிந்திருந்தார்.

`சில்வியாவின் கவிதைகள் எனக்கு எதிரானவை; என்னைக் குற்றம் சுமத்துபவை. ஆனால், பாதகமில்லை. அவை வெளிவந்தே தீர வேண்டும்' என்றார் டெட். முற்றிலும் எதிர்பாராத வகையில் இன்னொரு பெருந்துயரத்தை டெட் எதிர்கொள்ள ச்வ்வேண்டியிருந்தது. அவர் சில்வியாவைவிட்டுப் பிரிய காரணமாக இருந்த அசியா வெவில், ஆறு ஆண்டுகள் கழித்து சில்வியாவின் வழியைப் பின்பற்றி அதேபோல தற்கொலை செய்துகொண்டார்.

சில்வியா தனது மரணத்துக்குப் பிறகு உயிர்பெற்று எழுந்துவந்தார். இப்போது அவருக்கு றெக்கைகள் முளைத்திருந்தன. இலக்கிய உலகம் ஆராதிக்கும் தேவதைகளில் ஒருவராக அவர் மாறியிருந்தார். இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கவிதைகள் `புலிட்ச'ர் விருதை வென்றன. அவருடைய ஒவ்வொரு சொல்லையும் நெஞ்சோடு அள்ளி அணைத்துக்கொள்ள ஒரு பெருங்கூட்டம் துடித்தது. அவரைப் புதிது புதிதாகக் கண்டடைபவர்களின் எண்ணிக்கை முடிவற்று வளர ஆரம்பித்தது. `சில்வியா, உன் அருமை தெரியாமல் உன்னை இழந்துவிட்டோம். திரும்பி வா' என்று இவர்கள் இறைஞ்சுகிறார்கள்.

`மரணம் அழகானது' என்கிறார் சில்வியா பிளாத்... `மிருதுவான, பழுப்புத் தரையில் தலை சாய்த்துப் படுத்திருக்கவே நான் விரும்புகிறேன். புற்கள் எனக்கு அருகில் மெலிதாக அசைந்துகொண்டிருக்கின்றன. நான் அமைதியை கவனித்துக் கொண்டிருக்கிறேன். காலம் மறைந்து விட்டது. நேற்று என்றொன்று இருந்ததில்லை. நாளை என்று எதுவும் இராது. வாழ்வை நான் மன்னித்துவிட்டேன். நான் அமைதியாகிவிட்டேன்.'