Published:Updated:

கிறிஸ்துமஸ் விளம்பரத்தில் சர்ச்சை... சுற்றுச்சூழல் அக்கறையின் பேரில் பிராண்டிங்?!

கிறிஸ்துமஸ் விளம்பரத்தில் சர்ச்சை... சுற்றுச்சூழல் அக்கறையின் பேரில் பிராண்டிங்?!
கிறிஸ்துமஸ் விளம்பரத்தில் சர்ச்சை... சுற்றுச்சூழல் அக்கறையின் பேரில் பிராண்டிங்?!

சமூகக் கருத்துகளை, சமூகத்தின்மீது அக்கறை உள்ளதுபோன்று காட்டிக்கொள்வதை கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதை வரவேற்கலாமா?

பிரச்னைக்குக் காரணமானவர்களே அந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் தூதுவர்களாக மாறுவதுதான் இப்போதைய ட்ரெண்ட். இப்போது ப்ளைவுட் நிறுவன விளம்பரங்கள் மரம் நடுவதின் அவசியத்தை உணர்த்துகின்றன. உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் டெலிவரி பாய்கள் விபத்துகளில் சிக்குவதாகச் செய்திகள் அதிகம் வந்ததும், சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனமே சாலைவிதிகளை வலியுறுத்தும் விளம்பரங்களை தயாரித்து வெளியிடுகின்றன. சுற்றுச்சூழலை மாசு செய்யும் நிறுவனங்களே சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு விளம்பரங்களை தயாரிக்கின்றன. இதில் ஒரு முரண் இருந்தாலும் இவை சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்கள் என்பதால் இவற்றுக்கு லைக்ஸும் குவிகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மதிப்பும் சமூகத்தில் உயர்கிறது. 

பிரிட்டனில் உள்ள `ஐஸ்லேண்ட்' என்கிற ஒரு சூப்பர்மார்க்கெட் குழுமம், கிறிஸ்துமஸுக்காக ஒரு விளம்பரம் தயாரித்தது. எண்ணெய் தயாரிக்க பனைமரக் காடு ஒன்று அழிக்கப்படுவதாகவும், அதனால் பாதிக்கப்பட்டு அங்கு வாழும் ஒராங்குட்டான் குரங்குக் குட்டி ஒன்று காட்டைவிட்டு வெளியேறி, நகரத்தில் இருக்கும் ஒரு சிறுமியிடம் அடைக்கலமாவது போன்றும் படமாக்கப்பட்டிருந்தது அந்த விளம்பரம். `பனை எண்ணெய் அற்ற கிறிஸ்துமஸாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் அழியும் 25 ஒராங்குட்டான்களுக்கு, இந்த விளம்பரம் சமர்ப்பணம்’ என்கிற செய்தியோடு முடியும் அந்த விளம்பரம். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை எம்மா தாம்சனின் குரலில் அனிமேஷனாக சமூக வலைதளங்களில் வெளியாகிய இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. ஆனால், இந்த விளம்பரம் டிவியில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்ட விளம்பரம் என்பதுதான் செய்தி. 

இந்த அனிமேஷனை முதலில் உருவாக்கியவர்கள் கனடாவைச் சேர்ந்த கிரீன் பீஸ் நிறுவத்தினர். இது ஒரு சூழலியல் சார்ந்து இயங்கும் நிறுவனம். பெரிய நிறுவனங்களுக்கான விளம்பரங்களை சென்சார் செய்து அனுமதி தரும் பிரிட்டனின் க்ளியர்காஸ்ட் நிறுவனம் `இந்த விளம்பரம், அரசியல் சம்பந்தமான விளம்பர விதிமுறைகளுக்கு எதிராக இருக்கிறது’ என்று தடைவிதித்தது. ``இந்தக் காணொளிக்கு அனுமதி கிடைப்பது கடினம்தான் என நினைத்தோம். ஆனாலும், சூழலியல் சார்ந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்ததால் அனுமதிபெற முயன்றோம்" என்கிறார் இந்த விளம்பரத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான வாக்கர். 

டிவியில் அனுமதி கிடைக்காததால் `இந்தக் காணொளியைச் சமூக வலைதளங்களில் பரப்புங்கள்’ என்று ஐஸ்லேண்ட் நிறுவனம் உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்த, விளம்பரம் இப்போது வைரலாகிவிட்டது. தனது அதிகாரபூர்வ தளத்தில் ``எங்களுடைய தடை செய்யப்பட்ட விளம்பரத்தை இங்கே காணுங்கள்'' என்றே பிரசாரம் செய்துவருகிறது ஐஸ்லேண்ட்.

இந்த விளம்பரத்தைத் தயாரித்திருக்கும் ஐஸ்லேண்ட் நிறுவனம் பற்றித் தெரிந்துகொள்வது மிக அவசியம். இங்கிலாந்து உள்ளிட்ட யுனைடெட் கிங்க்டமில் கோலோச்சும் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனம்தான் இந்த ஐஸ்லேண்ட். பதப்படுத்தப்பட்ட உணவுகள் விற்பதில் இந்த நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. 2023-ம் ஆண்டுக்குள் தங்களது எல்லாத் தயாரிப்புகளிலும் பிளாஸ்டிக் கவர்களை நீக்கிவிடுவதாக 2018-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஓர் அறிவிப்பை வெளியிட்டு, மக்களின் நற்பெயரைப் பெற்றது இந்நிறுவனம். சூழலியல் அக்கறைகொண்ட விளம்பரங்களை இந்த நிறுவனம் வெளியிடுவதும் அதற்குத் தடை கிடைப்பதும் ஒருபக்கம் ஐஸ்லேண்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங்கை உயர்த்தவே செய்திருக்கிறது. 

இதேபோல NIKE நிறுவனத்தின் ஒரு சமூக விழிப்புஉணர்வு விளம்பரமும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அமெரிக்க என்.எஃப்.எல் வீரர் காலின் கேப்பர்நிக் நடித்திருந்த இந்த நைக் விளம்பரத்தில், கறுப்பின அமெரிக்கர்கள் மீதான போலீஸ் வன்முறை காட்டப்பட்டிருக்கும். இதில் போலீஸுக்கு எதிரான காலினின் மௌனப் போராட்டத்தைக் காட்டிவிட்டு `நீங்கள் எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் எதன் மீதாவது நம்பிக்கை வையுங்கள்' என்கிற வாசகத்தோடு விளம்பரம் முடியும். இந்த விளம்பரம் அமெரிக்க ஊடகங்களில் பயங்கர விவாதப் பொருளானது. ``தன் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படும் விளம்பரத்தில் ஒரு நிறுவனத்தால் எப்படிச் சமூகநீதி கேட்டுப் போராடுவது போன்ற காட்சிகள் அமைக்க முடியும்?’' என்று ஊடகங்கள் வாதிட்டன. ஆனால், நுகர்வோருக்கு இந்த விளம்பரம் பிடித்திருந்தது. நைகீயின் வருமானமும் உயர்ந்தது.

இப்படிச் சமூக விழிப்புஉணர்வு விளம்பரங்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடிக்கத்தான் பெருநிறுவனங்கள் வரிசைகட்டி இறங்கியிருக்கின்றன. இதில் மறைமுகமாக வியாபார நோக்கம் இருந்தாலும் நமக்குத் தேவையான நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக்கொள்வதில் தவறில்லைதானே என்கிறார்கள் சிலர். ஆனால், இது அவரவர் அகநிலையைப் பொறுத்த விஷயமல்லவா?

அடுத்த கட்டுரைக்கு