Published:Updated:

`தடயங்கள் உருவாவதற்கு முன்பே தன்னை அழித்துக்கொண்டவன்!’ - தக்கை பாபு இரங்கல் நினைவுகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`தடயங்கள் உருவாவதற்கு முன்பே தன்னை அழித்துக்கொண்டவன்!’ - தக்கை பாபு இரங்கல் நினைவுகள்
`தடயங்கள் உருவாவதற்கு முன்பே தன்னை அழித்துக்கொண்டவன்!’ - தக்கை பாபு இரங்கல் நினைவுகள்

`தடயங்கள் உருவாவதற்கு முன்பே தன்னை அழித்துக்கொண்டவன்!’ - தக்கை பாபு இரங்கல் நினைவுகள்

விண்ணுலகம், சொர்க்கம், நரகம் மட்டுமன்றி பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என பிரபஞ்சத்தைப் பற்றியான கவனிப்பும், அக்கறையும் சதா எழுத்தாளர்களின் நினைவுகளில் ஊறிக்கொண்டே இருக்கும். ஆனால், தங்களின் உடல்நிலையைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. அதனால் நம் தமிழ் இலக்கியச் சூழல் அடைந்த இழப்புகள் ஏராளம். சமீப காலங்களில் கவிஞரும், பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் முதற்கொண்டு கவிஞர்கள் குமரகுருபரன், வைகறை, பாடலாசிரியர் அண்ணாமலை, இப்போது தக்கை பாபு என இழப்புகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே செல்கிறது. 

கவிஞர் வே.பாபு. கவிஞர், சிற்றிதழாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத்தன்மை வாய்ந்தவர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த ஞாயிறன்று (11.11.2018) சேலத்தில் மரணமடைந்தார். அவரது இறுச்சடங்கில் எழுத்தாளர்கள் கோணங்கி, யவனிகா ஶ்ரீராம், பா.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, செல்மா பிரியதர்ஸன், ஶ்ரீநேசன், நேசமித்ரன், சாம்ராஜ், இளங்கோ கிருஷ்ணன், குமார் அம்பாயிரம், இசை, வேல்கண்ணன், சபரிநாதன், கவின்மலர், சேலம் சண்முகவேல் உட்பட ஏராளமான எழுத்தாளர்களும், கலை உலக நண்பர்களும் கலந்துகொண்டனர். தகனத்துக்குப் பின், மயானத்தின் ஆலம் விழுதுகளின் நிழலில் வே.பாபுவுக்கான இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. 

நிகழ்விலிருந்து...

முதலில் பேசிய ஆதவன் தீட்சண்யா, ``இலக்கியவாதியாக இருப்பவனை வேறு ஒரு தளத்தில் வைத்துப் பார்க்கிற பார்வையை சேலம் மக்களிடையே உருவாக்கியவர் பாபு. எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதற்கான அன்பு அவரிடம் இருந்திருக்கிறது. அதுதான் நம் அனைவரையும் இந்த இடத்தில் சேர்த்திருக்கிறது. மற்றபடி அவருக்கு எந்தவிதமான மரியாதை செலுத்தப்போகிறோம் என்பதை, இந்த இடத்தில் உணர்ச்சிகரமாகப் பேசுவதைக் காட்டிலும் ஆற அமர்ந்து நிதானத்துக்கு வந்த பிறகு பேசி முடிவு செய்ய வேண்டும். சிவா லாட்ஜில் நடத்திய உரையாடல்கள், பிற இடங்களில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தியது என பாபு செய்த பணிகள், செய்ய நினைத்த பணிகள் என இவற்றையெல்லாம் கலந்துபேசி நாம் முன்னெடுக்க வேண்டும்.

காலையில் பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர்கள் சொன்னார்கள் 'மணிக்கணக்காகப் பேசும் பாபு உடல் நலத்தைப் பற்றிப் பேசினால் பேச்சை மாற்றிடுவார்' என்று. இவ்வளவு நண்பர்கள் இருக்கையில் யாரிடமாவது தன் உடல் நோவுகளைப் பற்றிப் பேசியிருக்கலாம். நமக்குள் இருக்கும் விவாதங்கள் கருத்துவேறுபாடுகள் குறிப்பிட்ட பிரச்னை சார்ந்தது. ஆனால், அதைவிட முக்கியமா தோழமையாலும் அன்பாலும் இணைந்திருக்கிறோம். கொண்டாட்ட நேரங்களில் மட்டுமல்லாமல் கஷ்டங்கள் வரும்போது பகிர்ந்துகொள்பவர்களாக இருக்கணும். அதுதான் பாபுவின்  மரணம் உணர்த்தும் செய்தி" என்றார் வேதனையுடன். 

``பாபுவின் மரணம் ஈடுசெய்யமுடியாதது என்பது ரொம்ப ஃபார்மலான ஒரு வார்த்தைதான். பலவீனமான குரல் இவ்வளவு வலிமையா எக்கோ வாங்கும் என்பது சிறுபத்திரிகைச் சூழலில் நடக்கக்கூடிய நிகழ்வு. எவ்வளவோ கூட்டங்களுக்குப் போயிருக்கிறோம், தவிர்த்திருக்கிறோம். ஆனால், பாபு கூட்டங்களுக்கு அழைத்ததுபோக, 'பாபு நான் இல்லாமல் கூட்டத்தை நடத்திடுவீங்களா?' என்று கேட்கும் அளவுக்கு பாபுவின் அன்பு நெருக்கமானது. பாபுவின் நினைவாக நான் கூறவேண்டியது... ஆதவன் சொன்னது போல் `இலக்கியவாதிகள் தயவுசெய்து உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள். அது உங்களுடைய தனிப்பட்ட உடல்நிலை அல்ல; இலக்கியச் சூழலின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் அது.’ ஆரோக்கியமில்லாமல் அகாலத்தில் போய்விட்ட கடைசி இலக்கியவாதியாக பாபு இருப்பதுதான் பாபுவுக்கு நாம் செய்யக்கூடியதாக இருக்கமுடியும். இலக்கியவாதிகள் தனிமனிதர்கள் இல்லை, அவர்களை நம்பி ஒரு சூழலே இருக்கு" என்றார் பா.வெங்கடேசன்.

``மதுக்குவளை மலர் உதிர்ந்துவிட்டது. பதினைந்து இருபது வருஷமாகத் தெரியும். என்னை சைக்கிளின் பின் கேரியரில் உட்காரவைத்து சேலம் முழுக்கச் சுற்றியிருக்கிறார். ஒவ்வொருமுறை சேலம் வரும்போது வீட்டில் கிளம்புவதிலிருந்து அவன் வீட்டு வாசல் வரும் வரை விசாரித்துக்கொண்டே இருப்பான். நம் எல்லோரையும் ஒருங்கிணைத்த பேரன்பும், ஆற்றலும் பாபுவைவிட இன்னொரு நபருக்கு வருமா என்று தெரியவில்லை. கடைசியாக அவர் கவிதைகளையெல்லாம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்; புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்று சொன்னார். அதற்கு குறிப்புரை எழுதித்தரச்சொல்லியும் கேட்டிருந்தார். என்னுடைய கட்டுரை நூலையும் அவர் வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். மர்மமாகவே இருக்கும் பாபு மர்மமாகவே போய்ட்டான்" என்று விம்மலுடன் பேசினார் கவிஞர் ஶ்ரீநேசன். 

கவிஞர் செல்மா பிரியதர்ஸன், ``சற்றும் எதிர்பாராத மரணம். அவன் கடைசியாக எழுதிய கவிதையில்கூட, `மருத்துவமனையில் எட்டு நாள்களுக்கு முன்பாகப் பிறந்த குழந்தையின் சுண்டு விரலை இறுக்கிப் பிடித்துக்கொண்டு என்னைக் காப்பாற்று’ என்று சொல்வான். எல்லாத்தையும் தாண்டி சிறுகுழந்தையோட பிசுபிசுப்பு மாறாத சுண்டுவிரலைப் பற்றியவுடன், வாழ்க்கையில் வாழ்வதற்கான நம்பிக்கையும் இருந்திருக்கு என்பதைத்தான் நாம் பார்க்கவேண்டியதாக இருக்கிறது. பல்வேறு குழுக்களோடு இணைந்து பணியாற்றியவன் என்பதைத்தாண்டி, பல்வேறு குழுக்களையும் இணைத்துப் பணியாற்றியவன் என்பதுதான் முக்கியமானது. தாமிரபரணி மரணம், சிறுகுழந்தைகளின் மனம் உட்பட எல்லாத்தையும் எழுதிப்பார்த்தவன்.

செயல்முனைப்பும், தன்முனைப்பும் ரெண்டும் இணையாகத்தான் இருக்கும். ஆனால், இவனிடம் செயல்முனைப்பு மட்டுமே இருந்தது. எந்த இடத்திலும் தன்முனைப்பும் இருந்ததில்லை. எந்த இடத்திலும் தன்னைக் காட்டிக்கொள்ளாதவன். தடயங்கள் உருவாவதற்கு முன்பே தன்னை அழித்துக்கொண்டவன். அந்த அடிப்படையில் பாபுவின் மரணம் உண்மைதானா என்ற பதற்றமான சூழ்நிலைதான் இருக்கிறது. அவனிடம் பேசி நீண்ட நாள்கள் இருக்கும். `டிசம்பர் 15-ம் தேதி நடத்தும் கூட்டத்துக்கு வருவியா, எங்களையெல்லாம் மறந்திடலைதானடா? ' என்று கேட்டான். ஆனால், அதற்கு முன்பாகவே வரவைத்துவிட்டான். அவன் எந்த மூடும் இல்லாமல் நட்பை, இலக்கியத்தை, இலக்கிய மனத்தைக் கொண்டாடும் ஓர் அடையாளமாக தமிழ்க் கவிதையில் இருப்பான்" என்று பேசினார். 

``எந்த விதமான உள்கணக்குகளும் இல்லாமல் ஒரே சமயத்தில் எழுத்துக் கலைஞனாகவும் களச் செயற்பாட்டாளராகவும் செயல்பட்டவர். தமிழ்ச் சூழலில் மறக்கவே முடியாத இலக்கியக் கூட்டங்களை நடத்திக்காட்டியவர். எழுத்தில் வாழ்வது என்று ஒன்று இருக்கு. அது சொற்களாக இருந்து மனித மனங்களோட உணர்வுகளில் வாழ்வது. இனி பாபுவுக்கு அந்த வாழ்வு இருக்கும்" என்றார் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.

``பாபுவைப் பார்க்காதவரை சேலம் கடந்துபோகிற ஊராகத்தான் இருந்தது. பாபுவைப் பார்த்தபிறகுதான் தங்கும் ஊராக மாறியது சேலம். இப்போது மறுபடியும் கடந்துபோகிற ஊராகிவிட்டது. அவரோடு பழகிய ஏழெட்டு வருடத்தில், மிகவும் மோசமான தருணங்களிலும் அவர் முகம் சுளித்துப் பார்த்ததில்லை. கடுமையான ராணுவத்தளவாடங்களுக்கு நிகரான ஒழுங்கையெல்லாம் கடைப்பிடிக்கக் கூடிய ஜெயமோகன் நடத்தக்கூடிய ஊட்டி இலக்கியக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். அங்குக் கிடைத்த சிறப்புகளுக்கு நிகராக பாபு நடத்தின அமர்வுகளிலும் கிடைத்திருக்கு. இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. கடைசியாக நடைபெற்ற ஆர்.சிவக்குமார் நிகழ்ச்சி உட்பட. மாற்றான கொண்டாட்டம் மிகுந்த நிகழ்வுகளை ஒழுங்கமைக்கக் கூடிய நபராக பாபு இருந்தார். தனக்கிருந்த உடல் உபாதைகள் அனைத்தையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டார். அப்படிப் பயணிப்பதில்தான் அவருக்கு விருப்பம் இருந்ததுபோல" என்றார் கவிஞரும், சிறுகதை ஆசிரியருமான சாம்ராஜ்.
 
பிற உயிர்களின் மீது, ஏன் உயிரற்ற பொருள்களின் மீதும் கூட அக்கறை காட்டும் எழுத்தாளர்கள் சிறிதளவாவது, தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், படைப்பாளன் இந்தச் சமூகத்துக்கானவன். அவனது இழப்பு இந்தச் சமூகத்தின் இழப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு