பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உப்புக்குறவரின் துப்பாக்கி விசைப்பல்

உப்புக்குறவரின் துப்பாக்கி விசைப்பல்
பிரீமியம் ஸ்டோரி
News
உப்புக்குறவரின் துப்பாக்கி விசைப்பல்

கவிதை: வெய்யில் - ஓவியம்: செந்தில்

1
குடை ரிப்பேர்... குடை ரிப்பேர் என்று பாடிக்கொண்டு வந்தவருக்கு
இந்தக் கோடையின் முதல் மாதுளைச் சாற்றைப் பருகத் தந்தோம்
என் தந்தையின் பழுதுற்ற உயிர்மையை அவர் செப்பனிடத் தொடங்கினார்
அம்மா அவருக்கு ஒத்தாசையாக அருகிலேயே இருந்தாள்
அவளது வியர்வை அவ்வளவு மர்மமான வாசனைகொண்டிருந்தது
அக்காவும் நானும் ரிப்பேர்காரரின் பையிலிருந்த
சுத்தியலைக்கொண்டு எங்கள் உச்சந்தலையை
விளையாட்டாகத் திறந்தோம்
வீட்டைச் சுற்றி மழை பக்கவாட்டில் பெய்தது அன்று.

2
உப்புக்குறவர் ஒருவர்
பாலைப் பெரும்பொழுதில் ஊருக்கு வந்தார்
அவரது குடிசையை கழுதைகளை பிள்ளைகளை சாக்குகளை
எஃகுப் பாதையில் ஓர் ஊர்தி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கலங்கினார்
அதன் கூவல்
அவரது மூப்பனின் சாவுக்கேவலை ஒத்திருந்தது
நம்மால் என்ன முடியும்?
கொஞ்சம் ஆறுதல்சொல்லி
குறிபார்த்து அவர் துப்பாக்கி பழக
எங்கள் பிள்ளைகளின் தலைகளை அனுப்பிவைத்தோம்
பூச்சூடி.

உப்புக்குறவரின் துப்பாக்கி விசைப்பல்

3
செத்த நாய் ஒன்று துரத்துகிறது
என்னைப் புதை என்னைப் புதை என்று.
அடியாழத்தில் ராஜபல்லக்கை
சிதைத்துக்கொண்டிருக்கின்றன யாழல்கள்.
அகழாய்வில் கிடைத்த எலும்புகளை
எப்படிச் சித்ரவதை செய்வதென்று
அரசுக்குத் தெரியவில்லை
மண் தனக்குள் நினைத்துக்கொண்டது,
“வரலாற்று ரகசியங்கள் பாஸ்பரஸைப் போன்றவை!”

4
ஆயிரங்கண் பானையை வனைந்துகொண்டிருக்கிறார் குயவர்
மறைந்திருந்து பார்க்கிறாள் அம்மன்.
மனைவியின் பழுதுற்ற கண்களை
நேர்ச்சைக் காசுகளோடு அவர் முடிந்துவைத்திருக்கும்
விளக்குமாடத்தையே சுற்றி சுற்றி வருகிறதொரு தாய்வண்டு.

5

ஓர் நுண்ணுயிரி
விரும்பியபடியே
யானையைத் தன் உணவுமேசைக்கு வரவழைத்துப் புசிக்கிறது.
அதில் எந்த மர்மமும் இல்லை என்கிறது விதி.
பற்களை இழுத்துச் செல்லும் எறும்புகள் கோக்கின்றன
மதயானையின் புன்னகையை.

உப்புக்குறவரின் துப்பாக்கி விசைப்பல்

6
மேன்ஷன் அறை எண் 208-ல்
மான்குட்டி உறங்கிக்கொண்டிருக்கிறது
அழைப்புமணியை நகங்களால் பிராண்டும் புலிக்கு
காலம், ‘நண்பன்’ என்று பெயர்வைக்கிறது
உலகின் கருணையைச் செரிக்க இயலாது
டீக்கடையை நோக்கித் தன் இரைப்பையை ஏந்திப் போகிறான்
சர்க்கஸ் வீரன்.

7
எந்த நூற்றாண்டிலிருந்தோ கசியும் ரத்தம்
தலைமாட்டை நனைக்கிறது
எனது சிறிய கழனியை
ஒரு மண்புழுவின் வயிற்றில் பத்திரம்வைத்திருக்கிறேன்
நடுகல்லைப் பின்னிக்கிடக்கிறது கருஞ்சாரை
நேர்ச்சைக் கிடாய் அந்தியை வெறித்து நிற்கிறது
நம் குறுவாள் வரலாற்றில் தொலைந்துபோனது.