பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வெட்டுக்கத்தி - சிறுகதை

வெட்டுக்கத்தி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
வெட்டுக்கத்தி - சிறுகதை

குமாரநந்தன் - ஓவியங்கள்: ஸ்யாம்

வர்கள் வெகுநேரம் அங்கே சுற்றிக்கொண்டிருந்தார்கள். வெயில் மிதமாக இருந்தது. காலை நேரத்தின் அடையாளமாய் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள், மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் கறிக்கடையைத் திரும்பவும் நோட்டமிட்டார்கள். இளைஞன் ஒருவன் கறி வெட்டிக்கொண்டிருந்தான். மெள்ள கடைப் பக்கம் நகர்ந்து சைகை காட்டினார்கள். அந்த இளைஞன் ஏறிட்டுப் பார்த்துவிட்டு  ‘காசு கொடு’ என்பது போலக் கையை நீட்டினான். வந்த இருவரில் வெள்ளைச் சட்டை அணிந்திருந்தவன் உள் பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். இளைஞன் பணத்தை வாங்கி, கறி வெட்டும் கட்டைக்கு அப்பால் இருந்த பெட்டியில் வீசிவிட்டு உள்ளே போனான். வரும்போது அவன் கையில் குவாட்டர் பாட்டில்கள் இருந்தன.

மஞ்சள் சட்டையில் இருந்தவன் அதை வாங்கி லாகவமாய் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். அவர்கள் முகம் திருப்தியாய் இருந்தது.

வெட்டுக்கத்தி - சிறுகதை

அந்த இளைஞன் தொடர்ந்து கோழிக்கறியை வெட்ட ஆரம்பித்தான்.

அதே நேரம் போலீஸ் ஜீப் ஒன்று கடை வாசலில் வந்து நின்றது. அவன் தன்னிடமிருந்து நழுவிய இயல்பு நிலையைத் தாவிப் பற்றிக் கொண்டான்.

இரண்டு போலீஸார் இறங்கி வந்தனர். “டேய் இங்க சரக்கு விக்கறது நீதானே?” என்றார் ஒருவர். அவன் ஒன்றும் புரியாத பாவனையில் அவரைப் பார்த்தான். போலீஸார் உள்ளே போக ஆரம்பித்ததும், “சார் சார், ஸ்டேஷனுக்கு கரெக்டா காசு கொடுத்துகிட்டுதான் இருக்கோம்” என்றான் அவசரமாக.

கார்த்திக் எனப் பெயர் தரித்திருந்த போலீஸ்காரர் அவனை நெட்டித் தள்ளினார். இன்னும் இரண்டு போலீஸார் உள்ளே போயினர்.கடை வாசல் அசாதாரணத் தன்மையடைந்தது. கொத்துக் கொத்தாய் கால்கள் அங்கே நிற்க ஆரம்பித்தன. உள்ளே இருந்து பெட்டிநிறைய மது பாட்டில்களை ஒரு போலீஸ்காரர் எடுத்து வந்தார். அடுத்து வந்தவர் இன்னொரு பெட்டி, அடுத்து, அடுத்து... கூட்டம் சலசலத்தபடி நின்றது. அந்த இளைஞன் அப்படியே நின்றான்.

ஜீப் மதுப்பெட்டிகளால் நிறைந்தது.

கார்த்திக் என்ற போலீஸ்காரர் அவனை ‘ஜீப்புல ஏறு’ என்றார். அவன் அப்படியே நின்றான். இன்னொருவர் அவன் பிடரியில் கை வைத்து ஜீப்பை நோக்கி நெட்டித் தள்ளினார்.

‘சார் சார்’ எனக் கத்திக்கொண்டே பைக்கில் வந்தார் ஏழுமலை. அவசரமாக ஸ்டாண்டு போட்டு வண்டியை நிறுத்தினார். அசட்டுச் சிரிப்பால் அசாதாரண சம்பவங்களைக் கட்டுப்படுத்திவிட முடியும் என நினைப்பவர் போல மெல்லிய சிரிப்போடு பேசினார். “சார் நீங்க இங்க ஸ்டேஷன்ல கேளுங்க, இனிமே விக்க வேணாம்னா விட்டுர்றோம்” என்றார். அந்த இளவயது போலீஸ் “யோவ் யாருய்யா நீ?” என்றான்.

“சார் நான்தான் இந்தக் கடை முதலாளி. இவன் என் பையன். காலேஜ் படிக்கிறான். அவனை விட்டுருங்க. நான் வர்றேன். என்னைக் கூட்டிக்கிட்டுப் போங்க” என்றார். அவர்கள் ‘ஸ்டேஷனுக்கு வா’ என்றுவிட்டு அவர் மகனை வண்டியில் ஏறச் சொன்னார்கள். ஏழுமலை “சரவணா, நீ போ, நான் பின்னாடியே வர்றேன்” என்றார். சரவணனை ஏற்றிக்கொண்டு ஜீப் கிளம்பியது. கூட்டம் மெள்ளக் களைய ஆரம்பித்தது.

ஏழுமலை வெட்டிய கறியை அள்ளி உள்ளே போட்டுவிட்டு, ஷட்டரை இழுத்துப் பூட்டினார். பைக்கை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்குப் போனார்.

போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டு உள்ளே இருந்த பாதாம் மரத்தடியில் ஜீப் நின்றது. ஏழுமலை பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போனார்.

போலீஸ்காரர் பாலன், “வாங்க சார், என்ன இவ்வளவு தூரம்?” என்றார். ஏழுமலைக்கு ரத்தம் சூடேறியது. “சார் என்ன இது?” என்றார். பாலன் எதுவும் பேச வேண்டாம் என்பதுபோல அவர் கையைப் பிடித்து அழுத்தினார். 

“ஒண்ணும் பயப்பட வேண்டாம். வேற யாரையாவது ஏற்பாடு பண்ணுங்க. கேஸ் எழுதித்தான் ஆவணும். பெட்டிசன் மேல பெட்டிசன் போய்க்கிட்டிருக்கு. வேற வழியில்ல’’ என்றார்.

ஏழுமலை சலிப்பாய், “சரி என்னைக் கொண்டு போய் உள்ள வச்சுக்குங்க. நாலு ஜனங்க இருக்கிற கடைவீதியில் இப்படித்தான் காலேஜ் படிக்கிற பையனை ஜீப்ல ஏத்திக் கூட்டி வர்றதா?” என்றார்.

“காலேஜ் பையனுக்குக் கறிக்கடையில என்ன வேலை? அதுவும் சரக்கு எடுத்துக் கொடுத்துகிட்டு இருந்தா போலீஸ் பிடிக்க மாட்டாங்களா, ஏம்பா?” என்றார் சரவணனைப் பார்த்து.

அவன் எதுவும் பேசவில்லை. ஜன்னல் வழியே பஸ் போகும் சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான். ரெய்டுக்கு வந்த போலீஸார், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல உட்கார்ந்திருந்தார்கள்.

“சரி இப்ப என்ன, கேஸ் போட்டுதான் ஆகணும். ஒருத்தரை உள்ள தள்ளிதான் ஆகணும், அவ்வளவுதானே. எம்பேர்ல கேஸ் எழுதிக்கங்க. சரவணா நீ கௌம்பு” என்றார்.

பாலன் “அட நில்லுப்பா, சும்மா பொரியறியே. நீ உள்ள போயிட்டா பதினைஞ்சு நாளைக்குக் கடைய யார் நடத்துவா? நீ பேசாம இரு. ஆளு யாரையாவது ரெடி பண்ணிக்கலாம்” என்றார் பாலன்.

“டீ சாப்பிடறீங்களா?” என்று கேட்டார். இருவரும் மௌனமாக இருந்தனர். “யாரைப் போய் நான் இதுக்குப் பிடிச்சுக்கிட்டு வருவேன்?” என்றார் ஏழுமலை.

“நீ இந்த ஃபீல்டுக்குப் புதுசு அதான் ஒண்ணும் தெரியலை” எனச் சலித்துக்கொண்டார். “உங்க கடையில் கறி வெட்டிகிட்டு இருந்தானே செவப்பா ஒரு ஆளு. கொஞ்சம் லூசு மாதிரி இருப்பானே, அவன் எங்க?” என்றார்.

“அவனை நிறுத்திட்டோம். திருட்டுப் பூனை மாதிரி எப்பப் பார்த்தாலும் சரக்க எடுத்து குடிச்சுக்கிட்டே இருந்தான்” என்றார் ஏழுமலை.

அப்போது ஓர் இளைஞன் உள்ளே வேகமாக வந்தான். ஏழுமலை அவனைப் பார்த்து ‘இவன் எங்கே இங்க வந்தான்’ என யோசித்தார். அவன் நேராக அவரிடம் வந்து, “என்ன மாமா நீங்க. இதுக்குப் போய் கவலைப்படலாமா? நான் இருக்கேன் மாமா. உங்களை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது” என்றான்.

ஏழுமலை அவனைப் பார்த்துக் கும்பிட்டு “தம்பி போயிடு” என்றார்.

“மாமா, சரவணன் என் ஃப்ரெண்டு மாமா. அவன இப்படி விட்டுட்டு நான் போயிடுவேன்னு நினைச்சீங்களா? முடியாது மாமா” என்றான்.

பாலன் “நீ அந்த ரியல் எஸ்டேட்காரர் மகேந்திரன் பையன்தானே, உம்பேர் என்ன?” என்றார்.

“ஆமா சார். சரவணன் என் உயிர் நண்பன். அவனை விட்டுருங்க. என் உயிரை வேணா எடுத்துக்குங்க” என்றான்.

வெட்டுக்கத்தி - சிறுகதை

“சின்ன வயசா இருக்கு. இப்ப இருந்தே இந்த லெவல்ல இருந்தா நீ எல்லாம் எதுக்குடா ஆகப் போற?” எனச் சிரித்தார்.

அவன் “சார், என்னை ஜெயிலுக்கு அனுப்புங்க. நான் போறேன். என் நண்பன் அவனை விட்டுருங்க” என்றான்.

பாலன் ஏழுமலையைப் பார்த்து, ‘தானா வந்து மாட்டுது பாத்தியா?’ என்பது போலச் சிரித்தார்.  ஏழுமலை, “தம்பி நீ வீட்டுக்குப் போ. அம்மா வந்தா என்னைத்தான் கண்டபடி பேசும்”  என்றார்.

“அம்மா வந்துட்டுப் போறாங்க மாமா. அதுக்காக என் உயிர் நண்பனை விட்டுட்டு நான் போயிடுவேனா?” என்றான். ஏழுமலை ‘இதென்னடா ரோதனை’ என முணுமுணுத்துக் கொண்டார்.

“நீங்க ஏன் பயப்படறீங்க? அறியாப் பையன். ஆறுமாசம் ஜெயில்ல இருந்தாலும் தெரியாது. பதினைஞ்சு நாள் விளையாட்டு மாதிரி இருந்துட்டு வந்துருவான். பேசாம இவனையே அனுப்புங்க” என்றார்.

“சார், அவன் ஒரு பைத்தியக்காரன். அவங்கம்மா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்றது? அதெல்லாம் வேணாம். ஏய் லோகு நீ போடா வீட்டுக்கு” எனக் கத்தினார்.

அவன் அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான். “சார், மாமா அப்படித்தான் பேசுவாரு. அவருக்கு எம்மேல பாசம் அதிகம். நீங்க கேஸ் ஃபைல் பண்ணுங்க. நான் கையெழுத்துப் போடறேன். மாமா நீங்க ஏன் கவலைப்படறீங்க? என் நண்பனுக்காக நான் ஜெயிலுக்குப் போக மாட்டேனா?” என்றான்.

பாலன் ஏழுமலையிடம், “நீ போய் உட்காருப்பா” என்றுவிட்டு மளமளவென கேஸ் எழுத ஆரம்பித்தார்.  எழுதி முடித்துவிட்டு, “சரி தம்பி, வண்டியில ஏறு” என்றார். இவர்களைப் பார்த்து “நீங்க  போங்க” என்றார்.

லோகு ஓடிப்போய் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டான். ஏழுமலை பாலனிடம் “சார் அந்த சரக்கு..?” என இழுத்தார். “கஷ்டம்தான். அதப்பத்தி நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க. போய் ஆக வேண்டியதைப் பாருங்க” என்றார்.

“சார், ஐம்பதாயிரம் முதல் போட்டு வாங்கி வச்சிருந்தேன். இன்னும் ஒரு பெட்டிகூட ஓடலை” எனறார். போலீஸ்காரர்கள் யாரும் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

ரெய்டு வந்தவர்கள் வண்டியில் ஏறிக்கொள்ள ஜீப் ஸ்டேஷனை விட்டு வெளியே நகர்ந்தது.

ஸ்டேஷன் வாசலில் குழுமியிருந்தவர்கள் ‘ஏமாந்தவன புடிச்சி ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க பாத்தியா?’ என, இவர் காதில் விழட்டும் என்பது போலப் பேசினார்கள்.

ஏழுமலைக்கு திக்கென்றிருந்தது. லோகுவின் அம்மா நீலாவிடம் என்ன சொல்வது?

ஏழுமலை முதலில் கோழிக் கறிக்கடைதான் வைத்திருந்தார். ஊரெல்லாம் சில்லி சிக்கன் கடைகள் புற்றீசல்களைப் போல முளைக்க ஆரம்பித்தன. அவற்றின் சுவை சரியாய் இல்லை என அவர் யோசித்துக்கொண்டே இருந்தார். பிறகு கறிக்கடையிலேயே முன்னால் இருந்த ஹைவே இடத்தில் சில்லி சிக்கன் கடை போட முடிவு செய்தார். கடைக்கு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு இருந்தது.

சரவணன் சில்லி சிக்கன் பொரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டான்.  சாயந்திரம் கல்லூரி விட்டு வந்ததும் கறிக்கடையில் நின்று சில்லி போடுவது குறித்து அவன் கர்வம் அடைந்தான். அவனைப் போல் பதமாய் சில்லி கலக்குபவர்கள் அந்த வட்டாரத்திலேயே இல்லை. ஏன், சேலம் வட்டாரத்திலேயே இல்லை என்று அவன் நினைத்தான்.

உப்பு, காரம் எல்லாம் கோடு போட்டு நிறுத்தியதைப்போல அத்தனை கச்சிதமாய் இருக்கும். கறியை எடுத்தால், எண்ணெய் மின்னாமல், பஞ்சுபோல வெந்திருக்கும். அத்தனை கச்சிதமாய் அனல் வைத்து, கறியை எண்ணெயில் பொரிப்பான். அவனுடைய சில்லிக்கு அங்கே ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. சின்ன ஊர் என்பதால்தான் தன்னை அவ்வளவாக உலகுக்குத் தெரியவில்லை என்பது அவனுடைய எண்ணம். அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

முதலில் கோழிக்கறி மற்றும் சில்லிக் கடையாக இருந்தது, பின் சரக்கு கிடைக்கும் இடமாக மாறியது மிக வேடிக்கையானது. அவன் அப்பா ஏழுமலை அதற்கு முன், போதையில் தள்ளாடிக் கொண்டு வருபவர்களைக் கடைக்கு வெளியிலேயே நிறுத்தி அனுப்பிவிடுவார். அவர்தான் இப்போது, பைக்கில் போய் பெட்டி பெட்டியாய் சரக்கு வாங்கிக்கொண்டு வருகிறார்.

கோழிக்கறி வெட்டுபவன், சரக்கு விற்பவன் மற்றும் கல்லூரி மாணவன் என்ற இந்தக் கூட்டுச் சித்திரம் சரவணனுக்கு மிக வசீகரமாய் இருந்தது.

லோகு பார்க்க பணக்காரவீட்டுப் பையன் மாதிரி இருப்பான். ஒரு காலத்தில் அது உண்மைதான். ஆனால் இப்போது இல்லை. அவன் அப்பா மகேந்திரன் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர். அந்த வட்டாரத்தில் இருக்கும் பிரமாண்டமான பள்ளிக்கு அவர்தான் நிலம் வாங்கிக் கொடுத்தார். அந்த ஒரு வியாபாரமே அவரை எங்கோ கொண்டு போனது. தினம் தினம் பத்து கார்களாவது அவரைத் தேடி வந்தன.

 ஒரே மகன் லோகநாதனை அவர் இடம் வாங்கிக் கொடுத்த பள்ளியிலேயே படிக்க வைத்தார். பள்ளி நிர்வாகம் அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை.

லோகுவுக்குப் படிக்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. உள்ளூர் மாணவனாய் இருந்தாலும் பள்ளி ஹாஸ்டலில்தான் தங்க வேண்டும் என்பது அந்தப் பள்ளியின் சட்டம். எனவே, லோகு அங்கே தங்கினான். ஹாஸ்டலில் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களை நான்கு மணிக்கே படிக்க எழுப்பி விடுவார்கள். பத்தாம் வகுப்பு படித்த இவனால் அந்த நேரத்துக்கு எழ முடியவில்லை. காவலாளியைப் பச்சை பச்சையாய்த் திட்டினான். அவர் கோபப்படாமல், கடமை தவறாமல் தினம் தினம் அதிகாலை நாலு மணிக்கு அவனை எழுப்பி விட்டுக்கொண்டே இருந்தார். கோபப்பட்டு, புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

மகேந்திரன் ஏழையாய் இருந்து பணக்காரர் ஆனவர். லோகுக்கு ஏழ்மையை அவ்வளவாய்த் தெரியாது. பணக்காரப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் பணக்காரச் செலவுகளைத் தெரிந்து வைத்திருந்தான்.

பத்தாயிரம் இருபதாயிரம் என அப்பாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஊர் சுற்றினான். பெங்களூரு, மும்பை, டெல்லி எனத் தனியாகப் போய்விட்டு வந்தான். நகரங்களில் உள்ள பிரபலமான மது விடுதிகளில் பணத்தைத் தண்ணீராய் செலவு செய்தான்.

அவனுடைய பணத் தேவை பிரமாண்டமாய் எழுந்தது. மகேந்திரன் பயந்துபோனார். இந்த அளவுக்குப் போனால் சொத்து பெருங்காயம் மாதிரி கரைந்துபோகுமே என, மகனைக் கண்டிக்க முயன்றார். ஆனால் நிலைமை தலைக்கு மேலே வெள்ளம் போவதுபோலப் போய்விட்டது. அவருடைய கண்டிப்புகளை அவன் ஒரு பாமரத் தகப்பனின் பத்தாம் பசலித்தனமான புலம்பல்கள் என்பதுபோலப் பார்த்தான்.

மகனின் எதிர்காலம் பற்றிய ஓயாத பயம் அவரைப் பக்கவாத நோயில் தள்ளியது. சென்னையில் பிரபலமான மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். இருந்த நிலங்கள் எல்லாவற்றையும் நீலா மின்னல் வேகத்தில் விற்றாள். எல்லாம் எதிர்காலக் கணிப்பில் ஊர் ஓரத்தில் வாங்கப்பட்டவை. பத்து லட்சம், ஐந்து லட்சம் என அடிமாட்டு விலைக்குத்தான் விற்றன.

வெட்டுக்கத்தி - சிறுகதை

ஒரு மாதம் மருத்துவமனையில் வைத்திருந்ததில், பணமெல்லாம் மாயமாகிவிட்டது. எவ்வளவு செலவானது என அவள் கணக்குப் பார்க்க விரும்பவில்லை. இப்போதுகூட அவளுக்கு அந்தக் கணக்கு என்னவென்று தெரியாது. பக்கவாதம் கொஞ்சம்தான் குணமான மாதிரி தெரிந்தது. தூக்கவே முடியாமல் இருந்த வலதுகையைக் கொஞ்சம் தூக்கினார். மற்றபடி  எந்த முன்னேற்றமும் இல்லை. எல்லா வைத்தியமும் செய்தாகிவிட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என டாக்டர்கள் கை விரித்தனர்.

கணவரை வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டாள் நீலா.  லோகுவுக்கு முன்புபோல் கையில் பண நடமாட்டம் இல்லை என்பது சகிக்க முடியாததாய் இருந்தது. அப்பா இவனைப் பழிவாங்க வேண்டும் என வேண்டுமென்றே நோயில் விழுந்ததைப்போல நினைத்துக் கொண்டான். அம்மா இல்லாதபோது, படுக்கையருகில் நின்றுகொண்டு வாய்க்கு வந்தபடி திட்டினான். பீ மூத்திரம் எல்லாம் நீலாதான் அள்ளினாள்.

ஊரிலேயே பெரிய வீடாய்க் கட்ட வேண்டும் என்ற கனவில் மகேந்திரன் சொந்த வீடு கட்டுவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். வீடு கட்ட நேரம் கூடி வரவில்லை. ஸ்கூல் நிலம் விற்ற கமிஷனில் பெரிய வீட்டுக்குக் குடி மாறினார். கையில் பணம் புரண்டபோது எதுவும் தெரியவில்லை. இப்போது அவ்வளவு பெரிய வீட்டுக்கு வாடகை கொடுக்க சிரமமாய் இருந்தது. நீலா சிறிதாக வீடு பார்த்தாள்.  வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் கடைக்குப் போக ஆரம்பித்தன. “தம்பி எங்கியாவது வேலைக்குப் போகலாமில்ல” என மெள்ள மகனிடம் கேட்டாள். அவன் அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டான்.

“அப்பாவைப்போல நீயும் நிலம் விக்கிற தொழில் செய்யலாமே? கொஞ்சம் நாலு இடம் அலைஞ்சு திரிஞ்சு தொழிலைக் கத்துக்கிட்டா பின்னாடி நல்லா இருக்கலாமே” எனப் பக்குவமாய் எடுத்துச் சொன்னாள்.

“எனக்கு அந்த மாதிரியெல்லாம் பொய் பேசத் தெரியாது” என்றான் அவன்.

நீலாவுக்குக் கோபம் வந்தது. “அப்போ என்னதான் செய்வே? படிக்கவும் இல்ல. அப்பாவோட வேலையையும் கையில எடுத்துக்க மாட்டே. வேலைக்கும் போக மாட்டே. வயித்துக்கு என்ன சாணியவா திங்க முடியும்?” என்றாள்.

அவளுக்கு மனம் உடைந்துவிட்டது. கதறலான அழுகை வெடித்துக்கொண்டு கிளம்பியது. அவள் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவள். அவள் அப்பா ஒரு ஜவுளி வியாபாரி. இன்றைக்கும் அவள் அண்ணன்கள் திருப்பத்தூரில் ஜவுளி வியாபாரம் செய்துகொண்டு செல்வாக்காய் இருக்கிறார்கள். தன் விதி இப்படி ஆகிவிட்டதே என்று அன்று முழுவதும் அழுது தீர்த்தாள்.

லோகு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். வீட்டை விட்டால் அவன் நேராக வருவது சரவணன் கோழிக் கடைக்குத்தான். பெரும்பாலும் அவன் கோழிக் கடையில்தான் இருந்தான். கலகலப்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு அனைவருக்கும் எரிச்சலூட்டுவதுதான் அவனுடைய பேச்சு முறை.

சரவணனை மூச்சுக்கு முந்நூறு தடவை ‘நண்பா நண்பா’ எனக் கூப்பிட்டு அவன் பொறுமையை சோதித்தான். என்றாவது ஒருநாள் அவனைக் கறி வெட்டும் கத்தியாலேயே ஒரு காட்டு காட்டிவிட வேண்டும் என சரவணன் நினைத்தான். கோழிக் கடையையே சுற்றி சுற்றி வருவதும், சரக்கு வாங்க வருபவர்களிடம் வலியச் சென்று பெரிய இடத்துப் பையன் மாதிரி பேசி கட்டிங் தேற்றுவது அவனுடைய அன்றாட வேலை. அது நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.

நீலா நூல் மில்லுக்கு வேலைக்குப் போனாள். பெற்ற கடனுக்கு, மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்று நினைத்தாள். ஏழை பாழை, வயிற்றுக்குச் சோறில்லாதது, உட்கார வீடில்லாததாய் இருந்தாலும் பரவாயில்லை, கொஞ்சம் லட்சணமாய் இருந்தால் போதும் எனப் பார்த்தாள். ஆனால், எந்த வீட்டிலும் இவனுக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

நீலாவுக்கு மகனை நினைத்தாலே ஆத்திரமாய் வந்தது. சாயந்திரம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் படுத்து விடுவாள். கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்து மகனைப் பார்க்க கோழிக்கடைப் பக்கம் வருவாள். “இங்க என்னடா பண்ற? வா வீட்டுக்கு” என்பாள். அவன் “போம்மா வர்றேன். போம்மா வர்றேன்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி, அவளை அனுப்பிவிடுவான்.

காலை, மதியம், மாலை வரை சரக்கு  கிடைக்கவில்லை என்றால், நீலா வருவதற்குள் வீட்டுக்குப் போய், பித்தளைப் பாத்திரம் எதையாவது தூக்கிக்கொண்டு வந்துவிடுவான். பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டுக் குடிக்க ஆரம்பித்தால், இரண்டு நாள்கள் காலம் வெள்ளைக் குதிரையில் மேகங்களுக்கு இடையே போகும்.

லோகு ஜெயிலுக்குப் போனதும் கோழிக்கடை வெறிச்சென இருந்தது. எந்நேரமும் நண்பா நண்பா எனச் சுற்றி வரும் அவன் இல்லாமல் கடை அடையாளத்தை இழந்திருந்தது. சரவணன் ஜெயிலுக்குப் போயிருந்தால் அவன் எதிர்காலம் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கும்போதே ஏழுமலைக்கு என்னவோ செய்தது.

நீலா கடை வாசலில் நின்றுகொண்டு அழுதாள். “தகப்பன் இல்லாத பையன்.கேக்கறதுக்கு யாரு இருக்கான்னுதானே எம்பையனை ஜெயிலுக்கு அனுப்பிட்டே. இனிமே யாரு அவனுக்குப் பொண்ணு தருவா? எங்க அவன் வேலைக்குப் போவான். உனக்கு உம்பையனைப் போலத்தானே எனக்கு எம்பையனும். அவனை இப்படி அழிச்சிட்டியே” என ஒப்பாரி வைத்தாள்.

ஏழுமலைக்கு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. “நீலா உம்பையனை நான் வேறையா நினைக்கலை. அவனுக்கு இன்னொரு கோழிக்கடை வேணும் னாலும் வெச்சுத் தர்றேன். நான் உம்பையனுக்கு துரோகம் நினைக்கலை. அவனாவேதான் வந்தான். நானும் எவ்வளவோ சொன்னேன்” என வினயமாய் சொன்னார்.

அவர் கூனிக்குறுகிச் சொன்ன விதத்தைப் பார்த்து நீலாவுக்கு என்னவோ போல் இருந்தது. “என்னவோ அவன் தலையெழுத்து, என் தலையெழுத்து. அவங்க அப்பா அவனை எப்படிப் படிக்க வெச்சார். எப்படித் தொழில் பண்ணினார். அப்பேர்ப்பட்ட குடும்பம் கந்தற சிந்தறையா போயிடுச்சி. இனி என்ன போனா என்ன, இருந்தா என்ன?” எனப் புலம்பிக் கொண்டே கூந்தலை அள்ளி முடிந்தபடி போய்விட்டாள்.

சரவணனுக்கு அதே நினைவாய் இருந்தது. விளையாட்டுப்போல ஜெயிலுக்குப் போய் விட்டான். ஒருவேளை அவன் இல்லாவிட்டால், நான் அல்லது அப்பா யாராவது ஒருவர் போயிருக்க வேண்டும். அதை நினைக்கும் போதே நெகிழ்ச்சியாய் இருந்தது. லோகு மேல் இனம் புரியாத பாசம் ஏற்பட்டது.

அப்பாவும் மகனும் லோகுவை ஜாமீனில் எடுக்க, தவிதாயப்பட்டார்கள். கை முதல் எல்லாம் போலீசார் கொண்டுபோய்விட்டனர். பலத்த அடிதான். ஆனாலும் லோகுவை வெளியே கொண்டு வர வேண்டியது அவர்கள் கடமை அல்லவா? அதைத் தட்டிக் கழிக்க முடியுமா? பணம் புரட்டிக்கொண்டு, முன்சீப்பிடமும் தாசில்தார் அலுவலகத்திலும் நடையாய் நடந்து கையெழுத்து வாங்கி, கோர்ட்டில் சமர்ப்பிக்க ஒருவாரம் ஆகிவிட்டது. அதன்பின் அப்படி இப்படி என மேலும் ஒரு வாரம் கழித்துதான் வெளியே விட்டார்கள்.

வெட்டுக்கத்தி - சிறுகதை

லோகு வெளியே வரும் நாளில் கடையை மூடிவிட்டு வாடகை கார் எடுத்துக்கொண்டு சேலம் சென்ட்ரல் ஜெயிலுக்கு இருவரும் போனார்கள்.

லோகு சிரித்துக்கொண்டே வெளியே வந்தான். அவனைப் பார்த்தபோது சரவணனே ஜெயிலில் இருந்து வருவதைப் போல ஏழுமலைக்கு வாஞ்சை ஏற்பட்டது. ‘வாப்பா’ எனக் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு வந்தார். சரவணன் சிரித்தபடி அவன் கைகளைப் பற்றிக்கொண்டான். லோகு அவனைப் பார்த்து  ஆழ்ந்து சிரித்தான். அதில் தான் எவ்வளவு பிணைப்பு. அவன் முன்போல இல்லை. ஏதோ பெரிய யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்றவனைப்போல நிதானமாகவும் பக்குவமாகவும் காணப்பட்டான். வண்டி நேராக செல்வி மெஸ்ஸுக்குப் போனது. ‘சாப்பிடு சாப்பிடு’ என வரிசையாய்க் கறிவகைகளை வரவழைத்து அவனைச் சாப்பிட வைத்தார்கள்.

ஊருக்கு வந்ததும் கடையைத் திறந்து உள்ளறைக்குக் கூட்டிக்கொண்டு போனார் ஏழுமலை. “உனக்கு எவ்வளவு வேணுமோ குடிச்சிக்க லோகு’’ என்றார்.

ஜெயிலிலிருந்து வெளியே வந்து இரண்டு நாள்கள் ஆகியும் அவன் வீட்டுக்குப் போகவில்லை. நீலா வந்து வந்து பார்த்தாள். ‘வந்துருவாம் போம்மா’ என அனுப்பிவிட்டார்கள்.

லோகு கடைக்கு எப்போது வேண்டுமானாலும் வருவான். எவ்வளவு வேண்டுமானாலும் குடிப்பான். அப்பாவும் மகனும் எதுவும் கேட்க மாட்டார்கள். நீலாவுக்கு பயமாய் இருந்தது.

“அண்ணே, நீங்க எதாவது செய்யணும்னு நெனைச்சா வேற எதாவது செய்ங்க. இப்படி அவனைக் குடிக்க வெச்சு அழிச்சிறாதீங்க” என அழுதாள்.

ஏழுமலை சிரித்துக்கொண்டே “நான் தராட்டாலும் அவன் இப்படித்தான் கண்டவங்க கிட்ட வாங்கிக் குடிக்கப் போறான். அந்தப் பிரச்னை இல்லாம நானே கொடுத்திடறேன். அவ்வளவுதான்” என்றார்.

முதலில் இது ஒரு பிரச்னையே இல்லை என்றுதான் தோன்றியது. ஆனால் போகப் போக அது யானையைக் கட்டித் தீனி போடுவது போல முடியாத காரியம் எனப் பட்டது. என்ன செய்வது என ஏழுமலை தீவிரமாக யோசித்தார். லோகு கல்மிஷமில்லாமல் ஜீப் ஏறி ஜெயிலுக்குப் போன காட்சி அவர் மனதுக்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.

கடைசியாக இப்படி முடிவு செய்தார். தினமும் ஒரு குவாட்டர் மட்டும் இலவசமாகக் கொடுத்துவிடுவது. லோகு எதுவும் பேசவில்லை. இரண்டு நாள் கம்மென்று வாங்கிக்கொண்டான். பிறகு “நான் உங்களுக்காக ஜெயிலுக்குப் போனேன்” என்றான். “அங்கே வெறும் தரையில் படுத்தேன். வாயில் வைக்க முடியாத மோட்டா அரிசிச்சோற்றைத் தின்னேன். நான் எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் தெரியுமா? எங்க அப்பா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?” என விதவிதமாகப் பேசினான்.  அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஏழுமலையின் நெஞ்சில் கத்தி போல் இறங்கியது. அவமானத்தில் கூனிக் குறுகிப்போனார். பிறகு இரண்டு நாள் அவனுக்கு வேண்டிய சரக்கைக் கொடுத்தார். அதற்குமேல் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும், அவனுக்கு ஒரு குவாட்டர்தான் எனச் சொல்லிவிட்டார்.

லோகு தினமும் கடைக்கு முன்னாலேயே எப்போதும் உட்கார்ந்திருந்துகொண்டு, வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம் நியாயம் சொன்னான். “என் வாழ்க்கையவே தியாகம் செஞ்சேன். இப்ப எதுக்கும் வழியில்லாம அநாதையா நிக்கறேன்” என்றான். ஏழுமலைக்கு இப்போது அவனுடைய பேச்சு அவமானமாகத் தெரியவில்லை. ஏதோ நாய் ஒன்று வாசலில் சதா குரைத்துக்கொண்டு இருப்பதைப்போல நினைத்துக் கொண்டார்.

அப்பாவுக்கும் மகனுக்கும் இவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியவில்லை. பேசாமல் நாமே யாராவது ஜெயிலுக்குப் போய்விட்டு வந்திருக்கலாம் என்று இருவருக்குமே தோன்றியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. விடியற் காலை நேரமாக வந்து சரவணன்தான் கடையைத் திறந்தான். எங்கோ சந்துக்குள் ஒளிந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன் போல உடனே அங்கே வந்தான் லோகு. விடுவிடுவென உள்ளே போய் ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு வந்தான். 

சரவணனுக்குக் கண் மண் தெரியாத கோபம் வந்தது என்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டு, லோகு ஏதாவது சொல்லுவான் என எதிர்பார்த்தான். ஆனால், அவன் சிரித்துக்கொண்டே கடையை விட்டு வெளியே போகப் பார்த்தான். சரவணன் அவனை அழைத்து “பாட்டிலுக்குக் காசு கொடு” என்றான்.

“பணம்தானே, வாங்கிக்கலாம்” என மீண்டும் சிரித்தான் லோகு. சரவணன் மீண்டும் பணம் கேட்டான். லோகு மீண்டும் சிரித்தான். “தம்பி ஞாபகம் இருக்கா? ஜெயிலுக்குப் போக போலீஸ் ஸ்டேஷன்ல காத்திருந்தியே, போயிருந்தா என்ன ஆகியிருக்கும் தெரியுமா? காலேஜ் போயிருப்ப?” என இளக்காரமாகச் சிரித்தான்.

சரவணன் திட்டிக்கொண்டே கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு அவன் தலையை வெட்டுவதைப் போலப் பாய்ந்தான். லோகுவின் கண்களில் ஒரு கணம் உயிர்பயம் எட்டிப் பார்த்து மறைந்தது.

“வெட்றயா... வெட்டு” எனச் சிரித்தான். சரவணன் கத்தியை அறை மூலையை நோக்கி வீசினான். பெருஞ்சத்தத்தோடு போய் விழுந்தது கத்தி. வெட்டுக்குத் தயாராய் இருந்த கோழிகள் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டன. அவன் செயல் அவனுக்கே நடுக்கமாய் இருந்தது. ஒரு விநாடியில் என்ன செய்யத் துணிந்துவிட்டேன். லோகு தலை வெட்டப்பட்டு ரத்தக்கோலமாய்க் கிடக்கும் காட்சி அவன் மனதுக்குள் துல்லியமாய் விரிந்தது. அதைப் பார்த்து அவனுக்கு உடல் சூடானது. கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் என நினைத்தான். மத்தியானமெல்லாம் ஜுரம் கொதித்தது. ஏழுமலை லோகுவைத் தேடிக் கொண்டு வீட்டுக்குப் போனார். நீலா “நீயெல்லாம் ஒரு மனுசனா? உம் மகன் கத்தியில வெட்ட வந்தானாமே? நீங்கல்லாம் உருப்பட மாட்டீங்க. நாசமாதான் போவீங்க” என சத்தம் போட்டாள். ஆவேசமாய் லோகு பக்கம் திரும்பி “டேய் நீ ஒரு ஆம்பளையா இருந்தா இவன் கடை வாசலை மிதிக்கக் கூடாது” எனக் கத்தினாள்.

லோகு ஒருவாரமாய் கடைப்பக்கம் வரவில்லை. மேட்டுக் கடைக்கும் சரக்கு விற்கும் சின்னதுரை வீட்டுக்கும் போய் வந்துகொண்டிருந்தான். அங்கே உட்கார்ந்துகொண்டு சரவணனையும் ஏழுமலையையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் நாள்பூரா திட்டிக்கொண்டிருப்பதாய்க் கேள்விப் பட்டார்கள்.

 அன்று ஞாயிற்றுக்கிழமை, ஏற்கெனவே நடந்தது மாதிரியே ஜீப் ஒன்று கடை வாசலில் நின்றது. கடந்த முறை ரெய்டு வந்து இரண்டு மாதம்தான் ஆகியிருந்தது. சரவணன் சோர்வாய் உணர்ந்தான். சத்தமாய்க் காறி, கடைக்கு வெளியே துப்பினான்.  சரியாக அந்தநேரத்தில் லோகு அங்கு வந்தான். போலீஸார் சரக்கை எடுத்துக்கொண்டு போவது, தான்  ஜெயிலுக்குப் போக வேண்டியிருப்பதுகூட சரவணனுக்குப் பெரிதாய்த் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் லோகு அங்கே நின்றுகொண்டு வஞ்சம் தீர்த்துவிட்ட தோரணையில் சிரித்துக் கொண்டிருந்ததைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்த முறை போலீஸார் ஒரு சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதைப் போல இயல்பாய் இருந்தார்கள். சரவணனும்கூட இயல்புக்குத் திரும்பிவிட்டான்.

ஏழுமலை லோகுவின் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு தள்ளிப் போய், “லோகு, நடந்ததெல்லாம் இருக்கட்டும். போன தடவை மாதிரி இந்தத் தடவையும் நீயே போயிட்டு வந்துடு. இந்த தினம் தினம் சரக்கு தர்றதெல்லாம் வேண்டாம்; அது  சரிப்பட்டு வராது. நான் மொத்தமா ஒரு தொகை அம்மா கிட்ட கொடுத்தர்றேன்” என்றார்.

லோகு என்னவென்று அர்த்தம் செய்து கொள்ள முடியாத வகையில் சிரித்தவாறே `முடியாது’ என்பதாகத் தலை அசைத்தான்.

ஏழுமலை மெள்ள மெள்ள கெஞ்சும் தொனிக்கு மாறினார். அவன் ஒரே மாதிரி தலையாட்டிக் கொண்டே அங்கிருந்து நகர ஆரம்பித்தான். அவர் லோகு லோகு என்றார்.

சரவணன், ஒருவேளை தான் கேட்டால் சம்மதிப்பானோ என நினைத்தவனாய், “லோகு, போன தடவை சொன்னியே, நான் உன்னோட உயிர் நண்பன்னு. இந்த ஒரு தடவை உதவி பண்ணு” என்றான். அவன் வார்த்தைகளில் பழைய சம்பவங்களின் சாயல்கள் உண்மையிலேயே சுத்தமாய் மறைந்துவிட்டது.

லோகு அவன் இப்படிக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவன் போல உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு நடு விரலை நீட்டி ஆபாசமாய் சைகை காட்டினான்.

சரவணனுக்கு அசிங்கத்தை மிதித்த மாதிரி ஆகிவிட்டது. அவன் பேசாமல் போய் ஜீப்பில் ஏறிக்கொண்டான்.

ஸ்டேஷனில் போய் இவர்கள் எதுவுமே பேசவில்லை. “போன தடவை வந்தானே அந்தப் பையன் எங்கே?” என்றார் போலீஸ்காரர் பாலன். இவர்கள் எதுவும் பேசவில்லை. “ஏன், சரிப்பட்டு வரலியா?” என்றார்.

ஏழுமலை தான் ஜெயிலுக்குப் போவதாய் சொன்னார். சரவணன் பிடிவாதமாய் மறுத்துவிட்டு, அவனே ஜெயிலுக்குப் போனான். இன்னும் ஒரே மாதம் இருந்திருந்தால் கல்லூரிப் படிப்பு முடிந்திருக்கும், அதற்குள் இப்படி நடந்துவிட்டது. அதனால் என்ன, படிப்பை முடிச்சிடு என ஏழுமலை எவ்வளவோ தூரம் சொன்னார். ஆனால், சரவணன் காலேஜ் போக ஒரேயடியாய் மறுத்துவிட்டான். ஏழுமலைக்கு அப்போதுதான் இந்தச் சரக்கு வியாபாரத்தை எதற்கு ஆரம்பித்தோம் என இருந்தது. எல்லாம் முட்டாள்தனம் என நினைத்து அழுதார். அழுதுகொண்டே மகனிடம் கெஞ்சினார். “தம்பி, படிப்பை முடிச்சிடு. எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப விட்டா ஒரேயடியா விட்டுப்போயிடும். சொன்னா கேளுப்பா” என்றார். சரவணன் அசையவில்லை.

லோகு மீண்டும் கடைக்கு வரத்தான் செய்தான். மணிக்கணக்காய் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு சரக்கு வாங்க வருபவர்களிடம் தொண தொணத்துக் கொண்டிருந்தான். எக்காளமிட்டுச் சிரித்தான். சரவணனோ ஏழுமலையோ எதையுமே கண்டு கொள்ளவில்லை. அனைத்தையும் கடந்த ஞானிகள்போல இருந்தார்கள்.

அன்று புதன்கிழமை. சரவணன் கடையில் கறி வெட்டிக்கொண்டிருந்தான். லோகு அப்போதுதான் வீட்டிலிருந்து வந்தான். சாலையில் காலை நேரப் பரபரப்பு முடிந்து சோம்பல் படர்ந்திருந்தது.

லோகு ``நண்பா, ஒரு குவாட்டர் குடேன். காசு அப்புறமா தர்றேன்’’ என்றான். சரவணன் எதுவும் பேசவில்லை. “நண்பா, சரக்கு குடு நண்பா, கையில காசு சுத்தமா இல்லை. யாராவது வந்தாகூட வாங்கித் தந்துடறேன்” என்றான். “நண்பா, அடுத்த தடவை ரெய்டு வந்தா நான் ஜெயிலுக்குப் போறேன் நண்பா. பிராமிஸ்” என்றான். சரவணனின் முகம் இறுகியது. கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு லோகுவை ஏறிட்டுப் பார்த்தான். லோகு பயந்துவிட்டதைப்போல ஐயோ என்றான். “நண்பா, இப்ப என்ன ஆகிப் போச்சு? நான்கூடத்தான் படிக்கலை. பீஸ் கட்டியிருந்தா அஞ்சு லட்சம் ஆகியிருக்கும் அதையே தூக்கி எறிஞ்சிட்டு வந்தேன். நீ என்னவோ இதுக்குப் போய் இப்படி ஃபீல் பண்றியே நண்பா. வாழ்க்கைல எது வேணா நடக்கும் நண்பா. சரி சரின்னு போயிட்டே இருக்கணும். சரி சரக்கு குடு” என்றான். சரவணன் வெட்டிய கறியை அள்ளித் தராசில் வைத்தான்.

லோகு மெள்ள கடைக்குள் போனான். சரவணன் டேய் நில்றா என்றான்.  அப்போது சரக்கு வாங்க வந்த ஒரு கும்பல் சட்டென விக்கித்துப் போய் நின்றது. சரவணனிடம் “தம்பி, என்ன ஆச்சு?” என்றார்கள். லோகுவைப் பார்த்து, “இந்தாப்பா, இங்கே என்ன கலாட்டா பண்றியா, வெளிய போப்பா” என்றார்கள்.

லோகு அவமானப்பட்டுப்போய் நின்றான். என்ன செய்வதென்று தெரியவில்லை. மெள்ள புன்னகைக்க முயன்றான்.

சரவணன் தாவி வந்து அவன் சட்டையை வளைத்துப் பிடித்தான். பொத்தான்கள் பட் பட்டெனத் தெறித்து விழுந்தன.

கடைக்கு வந்தவர்கள், இந்தாப்பா தம்பி, என வந்தார்கள். லோகுவின் கையருகே கறிவெட்டும் கத்தி இருந்தது. லோகுவின் கை அதைப் பற்றியது. பிறகு அங்கு ஆடு போலவும் மனிதக் குரல் போலவும் இரண்டும் கலந்த ஓலம் ஒன்று எழுந்தது. சரவணன் மரக்கட்டை மாதிரி நெட்டாக அப்படியே பின்னால் விழுந்தான். தடால் என்ற சத்தம் கொடூரமாய் எழுந்தது. அவன் கழுத்தில் ஆழமாய் வெட்டு விழுந்திருந்தது. அவனிடமிருந்து அலறல் சத்தம் எழுந்தபோதே கடைவீதியில் இருந்து மக்கள் படை படையாய் வர ஆரம்பித்தார்கள்.

கூட்ட நெரிசலில் கடையே இருண்டு போய்விட்டது. லோகுவின் கண்கள், வெறுமையாகிவிட்ட சரவணனின் கண்களை வெறித்தபடி இருந்தன.

இருபது ஆண்டுகளுக்குப் பின் அந்த ஊரில் ஒரு கொலை நடந்திருந்தது.