பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது!”

“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது!”

அழகுசுப்பையா ச. - படங்கள்: ரா.ராம்குமார் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ழுத வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடிநிலைக் காலகட்டத்தைச் சித்திரிக்கும் `புதிய தரிசனங்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துவிட்டது. `உறவுகள்’ சிறுகதை, இயக்குநர் மகேந்திரனால் `பூட்டாத பூட்டுகள்’ என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. ஆனால், இன்றும் `பொன்னீலனின் வீடு எங்கே?’ என்று அவரது சொந்த ஊரில் போய்க் கேட்டால், பெரும்பாலானோர் `தெரியாது’ என்றுதான் பதில் சொல்கிறார்கள். தேடி வரும் வாசகர்கள், நண்பர்கள் என எல்லோருக்கும் அந்தச் சின்னக் கிராமத்தில் பொன்னீலனின் வீட்டைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய தேடலாக இருக்கும். தற்போது அதற்காகவே வீட்டுக்கு வெளியே `பொன்னீலன்’ என்று தன் பெயரைச் செதுக்கிவைத்துள்ளார்.

“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது!”

``இன்றைய இலக்கியச்சூழல் எப்படியிருக்கிறது?”

``பல அம்சங்களில் வளர்ச்சியடைந்திருக்கிறது. நாங்கள் எங்கள் காலத்தில் ஒரு வட்டாரத்தின் அல்லது ஓர் ஊரின் அல்லது ஒரு சமூகத்தின் பிரச்னைகளையும் அசைவுகளையும் விசாலமான திரையில் பதிவுசெய்தோம். இன்று சமூகப்பரப்பு ரொம்பவே ஆழமும் அகலமும் பட்டிருக்கிறது. இதுவரை கண்ணில் படாமல் இருந்த பல சமூகக் குழுக்கள், இன்று கலை இலக்கிய வடிவங்கள் வழியே பூத்து, சமூகப் பரப்புக்குள் முகம் காட்டுகின்றன. இன்னும் பூக்கவேண்டியவை பூத்து, சமூகத்துக்கு முகம் காட்டவேண்டியவை பல இருக்கின்றன.

ஆனால், படைப்பாளிக்கு அன்று இருந்த எழுத்துச் சுதந்திரம் இன்று இருக்கிறதா? சொல்லத் தெரியவில்லை. சாதியைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவதற்கு அன்று இருந்த வாய்ப்புகள் இன்று குறைந்திருக்கின்றன. மதங்களும் சாதிகளும் தங்களை மேலும் மேலும் இறுக்கிக்கொண்டு வருகின்றன. விமர்சனங்களைத் தாங்கும் மனநிலை ரொம்பவே குறைந்துவருகிறது என்றே உணர்கிறேன்.

எழுத்தாளர் படுகொலைகள், மதச் சகிப்பின்மையால் திட்டமிட்டு நடைபெறுகின்றன என்றே தோன்றுகிறது. அண்மையில் இந்துத்துவத்தை எதிர்த்துக் கடுமையாக விமர்சனம் செய்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொன்றான் ஒரு மதவெறியன். அப்படிக் கொன்றவன் ஸ்ரீராமசேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞன். அவன் பெயர் பரசுராம் வாக்மோர் என, பெங்களூரு சி.ஐ.டி போலீஸார் கண்டுபிடித்துக் கைதுசெய்துள்ளனர். அண்மையில் திரிபுராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, அகர்த்தலாவில் முந்தைய ஆட்சியாளர்களால் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை, அரசியல் சகிப்பின்மையால் பி.ஜே.பி-யினர், பீடத்தோடு இடித்துக் கீழே தள்ளி, லெனின் தலையைத் துண்டித்துக் கால்பந்து ஆடினார்களே, இது கொலையைவிடக் கொடுமையானதல்லவா!

அறிஞர் கோவிந்த் பன்ஸாரே ஏன் கொல்லப்பட்டார்? சிவாஜி பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து `யார் இந்த சிவாஜி?’ என்னும் நூலை எழுதினார் அவர். இந்தப் புத்தகம், மராத்திய வட்டாரங்களில் அமோகமாக விற்பனையானது; மக்களுக்கிடையே சமரசச் சிந்தனையை வளர்த்தது. தாங்கள் கட்டி எழுப்பியிருக்கும் இந்துத்துவப் பொய்மைக்கு இது வேட்டுவைக்கிறதே என அஞ்சிய சில இந்துத்துவ வெறியர்கள், அவரைச் சுட்டுக்கொன்றார்கள். பொதுவான பத்திரிகைகளும் இதர ஊடகவியலாளர்களும்கூட உண்மையை விளக்கும் எழுத்துகளை, சற்று அச்சத்தோடுதான் இன்று பார்க்கிறார்கள். திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள் ஆகியோர் மத்தியில்தான் மனம் திறந்து பேசும் சூழ்நிலை உள்ளது. ஆனால், அவர்கள் சிறுபான்மையினராக உள்ளவர்களே.”

“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது!”

``இந்துத்துவத்தை எதிர்கொள்ள, பெரியாரையும் அம்பேத்கரையும் அவர்களின் வாதங்களையும் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு செயலாற்றிவரும் வேளையில், இந்து மதத்துக்குள் ஆன்மிகம், மதம் கடந்த ஆன்மிகம் பற்றி உடன்பாடான நிலையைக் கொண்டுள்ளீர்களா?”

``பெரியாரையும் அம்பேத்கரையும் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்கிறார்கள். நானும் ஏற்றுக்கொள்கிறேன். இந்து மதம் என்பதே, வர்ண அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. வர்ணக் கட்டமைப்பை எதிர்த்துப் பல்வேறு நிலைகளில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன்.

நான் ஒரு மார்க்சியன். மார்க்சியன் என்ற நிலையில், ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் என் பாதையை அமைத்துக்கொள்கிறேன். ஆத்திகம், கடவுளை ஏற்றுக்கொள்கிறது. நாத்திகம், கடவுளை மறுக்கிறது. மார்க்சியன் என்ற நிலையில், ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையே மனிதநேய திசையில் மக்களை ஒன்றுபடுத்தி, மனித நல்லிணக்கத்தை உருவாக்க ஒரு பாதையைத் தேடுகிறேன். அந்தப் பாதைக்கு மார்க்சியம் ஒளி கொடுக்கிறது என நம்புகிறேன். தன்னில் பிறரையும் பிறரால் தன்னையும் காணும் மன விசாலமே `ஆன்மிகம்’ எனக் கருதுகிறேன். என்னுடைய அடிப்படை மனிதநேயம். எந்த மதத்தினுள்ளும் ஆன்மிகத்தை நான் தேடவில்லை.”

``இந்துத்துவவாதிகள் தொடங்கி நக்சல்பாரிகள் வரை பலதரப்பினருக்கிடையிலும் பேசப்பட்டது `புதிய தரிசனங்கள்’ நாவல். கொள்கையளவில் இருமுனைக்கோடிகளில் உள்ளவர்களிடையே உரையாடல் நடைபெற வேண்டும் என நினைக்கிறீர்களா?”


`` `புதிய தரிசனங்கள்’ எழுதி முடித்த காலத்தில், இது தமிழகத்தில் இலக்கியத் தளத்தைத் தாண்டி மார்க்சியத்தின் பல்வேறு பிரிவினர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளிடையே தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தேன்; ஏற்பட வேண்டும் என விரும்பினேன். ஆனால், அரசியல்வாதிகள் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. எந்த விவாதமும் நிகழவில்லை. விவாதங்கள் இல்லாமல் வளர்ச்சியில்லை.

அதுபோல `மறுபக்கம்’ நாவலும் பண்பாட்டுத் தளத்தில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தேன். ஆனால், விவாதங்கள் நடைபெறவில்லை. பொதுவாக தமிழ்ச் சூழலில் இலக்கியங்கள் பற்றித் தீவிரமான விவாதங்கள் எந்தத் தளத்திலும் விரிவாக நடைபெறவில்லை என்றே கருதுகிறேன். கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன், கலை இலக்கியப் பெருமன்றத்தினர் முதலிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் சில விவாதங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். என் நாவல்கள் பற்றியும் பேசிவருகிறார்கள்.”

``சூழல், வளர்ச்சி, அறிவியல் ஆகியவை குறித்து முரண்பட்ட கருத்து மார்க்சியர்களிடையே இருக்கும்போது, `சூழல் மார்க்சியம்’ அவசியம் என நினைக்கிறீர்களா? நவீன அறிவியலை மார்க்சியர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது நியாயம் என நினைக்கிறீர்களா?”

``சூழல் மார்க்சியம் அவசியம் என நினைக்கிறேன். இன்று விஞ்ஞான வளர்ச்சியால் சுற்றுச்சூழல் மாசடைவது ஒருபுறம் என்றால், மறுபுறம் அதைவிட பயங்கரமாக இயற்கை அழிக்கப்பட்டுவருகிறது. மலைகள் உடைக்கப்ப டுகின்றன. வனங்கள் அழிக்கப்படுகின்றன. கடல்கள் நாசமாகின்றன. சேலம்-சென்னை பசுமைப்பாதை எவ்வளவு பயங்கரமானது என்பதை நாடு நன்கு உணர்ந்து அதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை பலியாக்க ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது.

“எழுத்தாளர் எந்தக் கட்சியிலும் அடைபடக் கூடாது!”

சூழல் மார்க்சியம் மிகமிக அவசியம். இயற்கைச் செல்வங்களை ஒருபோதும் செயற்கையாக உருவாக்க முடியாது. `எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்!’ என்று சொன்னார் மார்க்ஸ். சந்தேகக் கண்ணால் பார்ப்பது முற்றிலும் நியாயமே. அணு உலைகள், ஸ்டெர்லைட் ஆலை முதலிய நஞ்சு உமிழும் பேரமைப்புகள் விஞ்ஞானம் விளைவித்த பெருங்கேடுகள் அல்லவா! பொதுவாகவே பெருந்திட்டங்கள், பெரும் அணைகள், பெருங்கட்டுமானங்கள் இவற்றுக்குப் பதிலாக, சிறு திட்டங்கள், சிறு அணைகள், சிறு கட்டுமானங்கள் நல்லது என்ற உணர்வு மார்க்சியர்களிடையேயும் மேலோங்குகிறது. இதுவே காலத்துக்கு ஏற்றது.”

``பலரும் புராணங்கள், காவியங்களை மறுவாசிப்பு செய்து எழுதுகின்றனர். இன்றைக்கு மார்க்சிய வட்டாரத்திலிருந்து அப்படி மறுவாசிப்பு எழுத்துகள் வருவதில்லையே?”

``புராணங்கள், காவியங்களிலிருந்து நாவல்கள் உருவாக்க, புராண-காவியத் தேர்ச்சி அவசியம். மார்க்சிய வட்டாரத்தில் இந்த வாசிப்பும் தேர்ச்சியும் குறைவாக இருக்கலாமோ? புராண-காவியக் கூறுகள், ஆதிக்க மதங்களின் புனைவுகளே! அவற்றை மார்க்சியர்கள் புறக்கணிப்பது நியாயமே. `காமம் செப்பாது’, `சக்தி தாண்டவம்’ முதலிய சில கதைகளில் புராணச் செய்திகளை உள்ளடக்கமாக்கி விமர்சித்துள்ளேன்.

மாறாக, நாட்டார் மரபுகளிலிருந்து இலக்கியம் படைக்கும் போக்கு மார்க்சியர்களிடையே வளர்ந்துவருகிறது. என்னுடைய `மறுபக்கம்’ நாவல் முழுக்க முழுக்க நாட்டார் மரபுகளைக்கொண்டு கட்டமைக்கப்பட்டது.’’

``கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த எழுத்தாளராக இருப்பதை எப்போதாவது அசௌகரியமாக உணர்ந்துள்ளீர்களா?”


``எழுத்தாளர், எந்தக் கட்சிக்குள்ளும் தன்னை அடைத்துக்கொள்ளக் கூடாது என்று என் அனுபவம் எனக்கு உணர்த்துகிறது. அது, எழுத்தாளனின் சுதந்திரத்தை ஒடுக்கிவிடும். எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் சொல்வார், `எழுத்தாளர்கள் கொள்கையைக் குதிரையாக்கி அதன்மீது ஆரோகணித்துச் சுதந்திரமாகத் தன் படைப்புலகில் வலம் வர வேண்டும். குதிரையைத் தோளில் ஏற்றிச் சுமக்கக் கூடாது’ என்று. இதன் பொருள் என்ன?’’