Published:Updated:

'கோத்தர்'... 40 ஆண்டு முயற்சியில், கைவசமான எழுத்து வடிவம்!

'கோத்தர்'... 40 ஆண்டு முயற்சியில், கைவசமான எழுத்து வடிவம்!
News
'கோத்தர்'... 40 ஆண்டு முயற்சியில், கைவசமான எழுத்து வடிவம்!

'கோத்தர்'... 40 ஆண்டு முயற்சியில், கைவசமான எழுத்து வடிவம்!

நீலகிரி மாவட்டத்தில் தாேடர், காேத்தர், இருளர், குரும்பர், பனியர், காட்டுநாயக்கர் என பாரம்பரியம் மிக்க 6 வகையான பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். வெறும் பேச்சு வழக்காக மட்டுமே கோத்தர் மக்களின் 'கோவ்' மாெழி இருந்துள்ளது. 40 ஆண்டு முயற்சிக்குப் பிறகு 'கோத்தர்' பழங்குடியின பூசாரி கனகராஜன், கடந்த 2015-ல் ‛கோவ்’ மாெழி க்கான எழுத்து வடிவத்தை உருவாக்கினார். இரண்டு  புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தற்போது கோத்தர் பழங்குடியின வரலாறு, வாழ்க்கை முறை என அனைத்தும் அடங்கிய புத்தகத்தை தயாரித்து வருகிறார். அவரைச் சந்திக்க புதுக் காேத்தகிரி கிளம்பினேன். வெள்ளை வேட்டி, துண்டும், நீண்ட வெள்ளை தாடி, தலையில் காெண்டையுடன், வீட்டின் அருகே கையில் நடப்பதற்கான தடியுடன் திண்ணையில் அமர்ந்திருந்தார். மலைக்காற்று போல நேசம் கலந்த உரையாடலைத்  தொடங்கினார். 

`` `கோத்தர்' என்ற வார்த்தையே இடையில் வந்ததுதான். 'கோவ்' என்ற வார்த்தையே 'காேத்தர்' என மருவிவிட்டது.  'கோவ்' என்பது எங்கள் மூதாதையர் ஒருவரது பெயர். அவரது மனைவியின் பெயர் காேத்தி. கோவ் என்பது கோத்தா எனவும், பன்மையில் சொல்லும்போது காேத்தர் என்று ஆகிவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீலகிரி மாவட்டத்தில் குந்தா கோத்தகிரியை தலைமை இடமாகக் காெண்டு ஊட்டி காெல்லிமலை, சாேலுார் காேக்கால், கூடலுார் காேக்கால், புதுக் காேத்தகிரி, திருச்சிகடி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே கோத்தர் பழங்குடியினர் வசிக்கிறார்கள். 'கோக்கால்' எனில் எங்கள்  மொழியில் ஊர் என்று அர்த்தம். கோத்தர் என்பது எங்கள் இனம், கேரி என்பது எங்கள் வீடு அமைந்துள்ள இடம். கோத்தர் கேரி என்பதுதான் கோத்தகிரி என மாறியது. தமிழர்கள் இங்கு குடியேற தொடங்கியதும் கோத்தகிரி என்பதற்கு கோத்தர் என்பதை இனம் என்றும் கிரி என்பதை மலை என்றும் அர்த்தப்படுத்திவிட்டனர்’ என்கிறார் கனகராஜன். 

`கோத்தர்’ இன மொழிக்கான எழுத்து வடிவத்தைக் கண்டுபிடிச்சது எப்படி?

``எனக்கு 73 வயது. எட்டாவது படித்திருக்கிறேன். வருமான வரித்துரையில் அட்டெண்டராக காரைக்குடியில் (1968-ல்) ஓராண்டு வேலை செய்தேன். எங்கள் கலாசாரத்தில் பூசாரியாக இருந்தால் வேறு வேலை செய்யக் கூடாது. அதனால், அரசு வேலையை விட்டுவிட்டேன். பூசாரி ஆகி 40 ஆண்டுகளாகி விட்டது. 

கோத்தர் பழங்குடியின சிறுவர்கள் பேசும்பாேது இரண்டு வார்த்தைகள் கூட 'கோவ்' பாஷையில் இருப்பதில்லை. இதனால், எங்கள் பாஷைக்கான எழுத்து வடிவத்தை உருவாக்கி எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு கற்பித்து 'கோவ்' பாஷையின் அழிவைத் தடுக்க வேண்டும் என்ற சிந்தனை இருந்தது. பூசாரியானதும் காேத்தகிரியில் ஆசாரி பட்டறையை 12 ஆண்டுகள் நடத்தினேன். அப்பாேது புத்தகங்களைப் படித்து ஆங்கில இலக்கணம் கற்றேன்.

1975 முதல் 'கோவ்' மாெழிக்கான எழுத்து வடிவங்களைத் தேடினேன். தமிழ் மற்றும் ஹிந்தி மாெழிகளை அடிப்படையாகக் காெண்டு 'காேவ்' மாெழிக்கான எழுத்துவடிவத்தை உருவாக்கியுள்ளேன். 2015-ம் ஆண்டு 'கோவ்' எழுத்துகளின் எண்ணிக்கை, இலக்கணம் என 19 தலைப்புகள் அடங்கிய ‛ கோவ் மாெழி’ முதல் பாகம் புத்தகத்தை வெளியிட்டேன். அதே ஆண்டு ‛காேவ் மாெழி அகராதி காேவ் மாந்த் அடிக்பித்அள்’ (கோத்தர் பாஷை அடிக்கி வைக்கப்பட்டுள்ள குகை) என்ற இரண்டாவது புத்தகத்தையும் வெளியிட்டேன். இது எங்கள் மாெழிக்கான டிக்ஷ்னரி போன்று வரிசைப்படி, வடிவமைக்கப்பட்டுள்ளது. பல சொற்கள் இன்னமும் கிடைக்கவில்லை. சிலரிடம் பேசும்போது கிடைக்கும் சொற்களை தாளில் எழுதி வைத்துக் காெள்வேன். விடுபட்ட சில வார்த்தைகளை எழுதிவைத்துள்ளேன். 

எழுத்து வடிவத்தை உருவாக்க மட்டும் 40 ஆண்டுகளாகி விட்டது. பலமுறை எழுத்து வடிவங்களை வடிவமைத்து ஸ்கேன் செய்து,  ஜெராக்ஸ் எடுக்கும்போது தலைகீழாகப் பதிந்து விடும். இதனால் அதிகம் செலவானது.

எங்கள் ஜனத்தாெகை குறித்து சில ஆண்டுகளுக்கு முன் டில்லியில்  இருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து சென்றனர். கோத்தர் பழங்குடிகளின் மக்கள் தாெகை சுமார் 2300 பேர். ஒரே ரத்த உறவில் திருமணம் செய்து காெள்வதால் இனவிருத்தி குறைவாக உள்ளது. கலப்புத் திருமணம் செய்தால் இனவிருத்தி அதிகரிக்கும் என்றனர். எங்கள் கலாசாரத்தில் பெண்கள் கலப்பு திருமணம் செய்து காெண்டால் ஊரை விட்டு அனுப்பிவிடுவோம். ஆண்கள் தவறு செய்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவாேம். அதனால் கலப்பு திருமணம் செய்ய வாய்ப்பில்லை. கோத்தர் பழங்குடியினர் வசிக்கும் 7 காேக்கால்களிலும் சிலர் என்னைப் போலவே 'காேவ்' மாெழி மீது ஆர்வமாக உள்ளனர். அவர்கள் மாெழியை வளர்க்கவும், சிறுவர்களுக்குக் கற்பிக்கவும் தயாராக உள்ளனர். 

50 ஆண்டுகளுக்கு முன் எங்கள் மாெழி யாருக்கும் புரியாமல் இருந்தது. ஆனால், தற்போது எளிதில் புரிந்துக் காெள்கிறார்கள். கோத்தர் பழங்குடியின சிறுவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி படிக்கிறார்கள். அதனால் அவர்கள் பேச்சு வழக்கில் தமிழ், ஆங்கிலம் அதிகமாகியுள்ளது. 'கோவ்' மாெழிப் பயன்பாடு குறைவதால் அது அழியும் அபாயம் உள்ளது. அவ்வாறு அழியாமல் இருக்க என் புத்தகம் உதவும்" என்றார் தீர்க்கமாக...

காேத்தர் கலாசாரம், வரலாறு என அனைத்தும் அடங்கிய புத்தகத்தை வெளியிடத் தயாராகி வருகிறார் கனகராஜன். கோத்தர் பழங்குடியின சாதனையாளர்கள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதுகிறார். மேலும், கோத்தர் பழங்குடியினத்தில் ஒரு பைலட், ஒரு டாக்டர், எம்.ஏ., டிகிரி முடித்தவர்கள் உள்ளதாகவும், தனது பேத்தி பரதநாட்டியக் கலைஞர் என்றும் பெருமையுடன் சொன்னார் கனகராஜன். அந்தப் புன்னகையில் தனது மொழி, இனம் குறித்த எதிர்கால நம்பிக்கை நிறைந்திருந்தது.