Published:Updated:

பனியன் கம்பெனி ஊழியரின் மகள், தேசிய அளவு கராத்தே போட்டியில் பங்கேற்பு!

பனியன் கம்பெனி ஊழியரின் மகள், தேசிய அளவு கராத்தே போட்டியில் பங்கேற்பு!
News
பனியன் கம்பெனி ஊழியரின் மகள், தேசிய அளவு கராத்தே போட்டியில் பங்கேற்பு!

``மூணு பொம்பளைப் புள்ளைங்களை பெத்திருக்கீங்க. ஒழுங்கா அதுங்களை எல்லாம் கரையேத்துற வழியைப் பாருங்கன்னு சொன்னவங்கதான் ஏராளம். ஆனாலும் எங்கள் மகளை அவள் ஆசைப்பட்ட மாதிரி ஒரு பெரிய கராத்தே சாம்பியனாக உருவாக்கிக் காட்டணும்ங்கற வைராக்கியம் மட்டும்தான் எங்க மனசுல ஓடிக்கிட்டே இருக்கு" - ரம்யாவின் பெற்றோர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் தற்போது 11 வயதேயான ரம்யாவை தேசிய அளவிலான கராத்தே போட்டிக்குத் தேர்வாக வைத்திருக்கிறது.

திருப்பூர் பாரதி நகர், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்றுகொண்டு இருக்கும் மாணவி ரம்யாவுக்குத் தற்காப்புக் கலையான கராத்தே மீது ரொம்பவே ஆர்வம். முறைப்படி பயிற்சியில் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை புரிந்திருக்கிறார் அவர். 'ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா' சார்பில் நடத்தப்படும் கராத்தே போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரம்யா கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற ரம்யா, அடுத்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகியிருக்கிறார். அடுத்தகட்ட இலக்குகளை நோக்கி மும்முரமாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரம்யாவுக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் சந்தித்தோம்.

மகளை மடியில் அமர வைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார் தந்தை மகேஸ்வரன். ``எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர். அங்கே சொந்தமாகத் தையல்கடை வைத்து நடத்திட்டு இருந்தேன். ஆனால், சொல்லும்படியான வருமானம் இல்லை. அப்படியிருக்கும்போதுதான் எனக்குக் கல்யாணமும் நடந்துச்சு. எதுவும் யோசிக்காமல் மனைவியைக் கூட்டிட்டு திருப்பூருக்கு பஸ் ஏறியவன்தான். பனியன் கம்பெனியில் தையல் வேலைக்குப்போய் குடும்பத்தை நடத்த ஆரம்பிச்சோம். அடுத்தடுத்து மூணு பெண் குழந்தைகள் பிறந்தாங்க. குடும்ப கஷ்டம் இன்னும் அதிகமாயிடுச்சு. உசுரக் கொடுத்து உழைச்சாவது புள்ளைங்க மூணு பேரையும் நல்லாப் படிக்க வெச்சிரணும்னு கர்வத்தோட இருந்தோம். இப்போ மூத்தவ காலேஜ் படிக்கிறா, இளையவளும், கடைக்குட்டி ரம்யாவும் பள்ளிக்கூடம் போறாங்க. இதுல ரம்யாவுக்கு கராத்தே மேல ஆர்வம். இப்போ அவளோட கனவை நனவாக்க இன்னும் கொஞ்சம் கூடுதலா உழைக்க வேண்டியிருக்கு" என பாசிட்டிவ் வார்த்தைகளால் முடித்தார் மகேஸ்வரன்.

பின்னர் பேசத் தொடங்கிய ரம்யாவின் அம்மா, சாந்திதேவி, ``சின்ன வயசுலேருந்தே பள்ளிக்கூடம் லீவு விட்டா, எங்கூட சேர்ந்து ரம்யாவும் கம்பெனிக்கு வந்திடுவா. கம்பெனியில் அவ துறுதுறுன்னு ஓடியாடி விளையாடுவதைப் பார்த்த ஒரு தம்பிதான், ரம்யாவைக் கராத்தே கிளாஸ்க்குச் சேர்த்துவிடுங்கன்னு சொல்லுச்சு. அதுவரைக்கும் ரம்யாவுக்கு கராத்தேன்னா என்னன்னுகூட தெரியாது. அப்புறம் அந்தத் தம்பியே அவருக்குத் தெரிஞ்ச கராத்தே மாஸ்டர்கிட்டே அறிமுகம் பண்ணி வெச்சார். அங்கேபோய் பார்த்ததும் ரம்யாவுக்கு ஆர்வம் தாங்க முடியலை. அவளோட ஆர்வத்தைப் பார்த்துட்டு நாங்களும், என்ன சிரமம் வந்தாலும் சரி, அவளைக் கராத்தே கத்துக்க வெச்சிடுவோம்னு முடிவு பண்ணோம். ஆனால், ஒவ்வொரு மாதமும் கராத்தே கிளாஸ்க்கு ஃபீஸ் கட்டவே சிரமப்பட வேண்டியிருந்தது. அதையும் ஒருவழியாக சமாளித்துதான் மகளுக்கு கராத்தே பயிற்சியைக் கொடுத்துட்டு இருக்கோம். மணிமணியாய் பணத்தைச் சேர்ந்து அவளுக்கு ஒரு கராத்தே சீருடையையும் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அதையும்தாண்டி நிறைய உபகரணங்கள் தேவைப்படுது. ரம்யாவுடன் கராத்தே பயிலும் மற்ற மாணவர்கள்தான், அவ்வப்போது லெக் பேடு, பேஸ் மாஸ்க்குன்னு கொடுத்து உதவி செய்றாங்க" என்றார் கண்ணீருடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம்மிடம் பேசிய ரம்யாவின் பயிற்சியாளர் சி.மகேஸ்வரன், ``என்னதான் களத்தில் நாங்கள் பயிற்சி கொடுத்தாலும், பிள்ளைகளின் பெற்றோர் கொடுக்கும் முழுமையான ஊக்கம்தான் அவர்களைச் சிறந்த வீரர்களாக உருவாக்கும். நான் அதிகாலை 3 மணிக்கெல்லாம் பயிற்சி தர தொடங்கிவிடுவேன். ரம்யாவின் பெற்றோர் 2 மணிக்கே எழுந்து அவரைத் தயார்படுத்தி அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். குடும்பத்தின் வறுமையை என்றைக்கும் ஒரு குறையாகவே அவர்கள் காட்டிக்கொண்டது இல்லை. ஒரு வருடத்துக்கு முன் ரம்யாவின் தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, அதற்கான சிகிச்சைகளில் இருந்ததால், ரம்யாவால் தொடர்ந்து 6 மாதங்கள் வரை கராத்தே பயிற்சிக்கு வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் இத்தோடு போதும் என்றும் நிறுத்திவிட்டார்கள். மிகவும் போராடித்தான் மீண்டும் பயிற்சிக்கு வந்து சேர்ந்தார் ரம்யா. வந்ததும் அடுத்த இரண்டே மாதங்களில் நடைபெற்ற மாநில போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அடுத்ததாக தேசியப் போட்டியில் அவர் பெறப்போகும் வெற்றியைக் காணத்தான் நாங்கள் அனைவருமே காத்திருக்கிறோம்" என்றார்.

எளியவர்களின் நல்ல கனவுகள் நிறைவேறட்டும்!