சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியம்: செந்தில்

சூத்திரம்

பள்ளிக்கூடத்தில்
ஸ்கேல் இல்லாமல்
நேர்க்கோடு இழுப்பது
எங்களுக்கெல்லாம்
ஒரு சாகசமாக இருந்தது...
என் தாத்தனின் ரகசியச் சூத்திரப்படி
நான் நேர்க்கோடு வரைந்து
பள்ளியில் வெற்றிபெற்றேன்.
தாத்தன்கள் இல்லாதவர்களுக்கு
வெற்றி அவ்வளவு சுலபமாயிருக்கவில்லை.
வளர்ந்த பிறகுதான் புரிந்தது
நான் வரைந்து வெற்றிபெற்ற
நேர்க்கோடுகளிலெல்லாம்
வளைவுகள் இருந்தன.
வளைவுகளின் மேல் வெயில் விழுந்து
கானல்நீராய்
நேர்க்கோடு தெரிந்தது
தெரிந்தபோது
என் பேரனுக்கு நேர்க்கோடு வரையும் சூத்திரத்தை
ஏற்கெனவே சொல்லிக்கொடுத்துவிட்டிருந்தேன்!


 - ராம்பிரசாத்

காட்சி

விளையாட்டின்போது
காணாமல்போன பந்தைத்
தேடிக்கொண்டிருந்தார்கள்
சிறுவர்கள்...
தொலைந்துபோன குளத்தில்!


- சாமி கிரிஷ்

சொல்வனம்

மாறும் வட்ட நிலவு

வட்ட நிலவைக்
கால்பந்தாக்கி விளையாடுகிறான்
விளையாட்டு வீரன் ஒருவன்

கறுப்பழகி ஒருத்தி
யாருக்கும் தெரியாமல் நெற்றிப்பொட்டென இட்டு
கண்ணாடியில் அழகு பார்க்கிறாள்

தன் அப்பளத்திற்கு அளவெடுக்கிறான்
வியாபாரி ஒருவன்

தாமதமாகி, பசியோடு வீடு திரும்புபவன்
வட்டலாக்கி எடுத்துக்கொண்டு
அவசரமாய் வீட்டுக்குள் நுழைகிறான்

சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்ட பிச்சைக்காரன்
திருவோடாக்கிக் கைகளில் ஏந்துகிறான்

நூறு ரூபாய்த்தாளை வைத்துக்கொண்டு
தேநீர் குடிக்க நினைப்பவன்
நாணயமாக மாற்றுகிறான்

புதிதாய் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனவன்
ஊரிலிருக்கும் அம்மாவின் முகம் பார்க்கும்
கண்ணாடியாக்குகிறான்

புதிதாய்க் காதலிக்கத் தொடங்கியவன்
தன் காதலிக்குத் தூதனுப்பும்
வெள்ளைப் புறாவாக்குகிறான்

படிக்காமல் கணிதத் தேர்வெழுதிய
படிப்பேறாத ஒருவன்
வாங்கப்போகும் மதிப்பெண்ணாய்ப் பார்க்கிறான்

உணவு கிடைக்காத மூதாட்டியொருத்தி
பசி மிகுதியில்
அவசர அவசரமாய்ப் பிய்த்துத் தின்கிறாள்!


- சௌவி