சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மழைக்கோப்பை

மழைக்கோப்பை
பிரீமியம் ஸ்டோரி
News
மழைக்கோப்பை

கவிதை: சுகுணா திவாகர் - ஓவியம்: ஹாசிப்கான்

மழைக்கோப்பை

கோப்பை நிறைய தேநீரும்
கோப்பை நிறைய மழையும்
மேஜையின் எதிரெதிரே வைத்தேன்.
நீ மழைக்கோப்பையை எடுத்துக்கொண்டாய்.
புன்னகையுடன் உறிஞ்சத்தொடங்கினாய்.
ஒவ்வொரு துளியும் மழை...
ஒவ்வொரு துளியும் காலம்...
`மழையைக் கண்ணீரோடு ஒப்பிடுவதில்
உடன்பாடில்லை எனக்கு' என்றபடி
கோப்பையை வைத்தாய்.
பிரார்த்தனையும் வாழ்த்துகளுமாய்
இரு பூக்கள் முளைத்திருந்தன.
காலிக் கோப்பை பூந்தொட்டியாகியிருந்தது.
`மழை ஒரு மந்திரச்சொல்' என்றபடி விடைபெற்றாய்.
மழையின் கால்களுக்கு இரண்டு கொலுசுகள்.
வலதுகால் வைத்து வரும்போது மண்வாசம் கிளர்த்துகிறது.
மழை திரும்பிச்செல்லும்போது
எல்லாவற்றையும் ஈரப்படுத்திவிடுகிறது
நம் பாதைகளை...
நம் ஆடைகளை...
நம் பிரார்த்தனைகளை...
நம் வாழ்த்துகளை...
நம் கண்களை...
மழைவாசம் மெல்லப் பரவுகிறது.
பூத்திருக்கும் இரு மலர்கள் அசைகின்றன
உன் கண்களென.