சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“மொழியை அறிமுகப்படுத்தியவர்கள் பெண்கள்!”

“மொழியை அறிமுகப்படுத்தியவர்கள் பெண்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“மொழியை அறிமுகப்படுத்தியவர்கள் பெண்கள்!”

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: ச.வெங்கடேசன்

என் கருத்த உடல்களிலிருந்து
சிந்தப்படுகின்ற ரத்தமெல்லாம்
இத்தேசத்தில் தீப்பற்றி எரிகின்றன
தீண்டப்படாத முத்தங்களாக!


முத்தம் என்பதன் ரசனை சார்ந்த நம் பார்வையை மாற்றி அமைத்திடும் இந்தக் கவிதை வரிகளை எழுதியவர், சுகிர்தராணி. சமகாலக் கவிஞர்களில் காத்திரமான படைப்புகளைத் தந்துவருபவர். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களிலெல்லாம் இவரை நிச்சயம் பார்க்கலாம். வேலூர், லாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

“நீங்கள் இயங்கும் வெளியாக இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?”

“பள்ளிப்படிப்பு வரை பாடப்புத்தகங்கள் மட்டும்தானே வாசிப்பு. அதிகபட்சம் செய்தித்தாளும் மாத நாவல்களுமே வாசிக்கக் கிடைத்தன. வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இவர்களால் எழுத்துக்குள் கொண்டுவர முடிகிறது என்ற ஆச்சர்யம் வந்தது. அதுதான் எனக்குள் இருந்த எழுத்தைக் கண்டுணர வைத்தது. அச்சில் ஒரு விஷயம் வெளியாகும்போது, ஏராளமானவர்களைச் சென்றடைய முடியும் என்ற எண்ணமும் தோன்றியது. தமுஎகச நண்பர்களின் அறிமுகம் கிடைத்ததும், எழுத்து சார்ந்து பெரிய வெளி இருக்கிறது எனத் தெரியவந்தது. அதிலும், கவிதை மூலம் படிப்பவரோடு சட்டென்று உரையாடிவிட முடியும் என்றும், நாம் சொல்லவந்ததை சரியாகச் சேர்த்துவிட முடியும் என்றும் நம்பி எழுதிவருகிறேன். கவிதை பன்முகத்தன்மைகொண்டது என்றாலும், நான் எழுதும் தலித்தியக் கவிதையை, ஆதிக்கச் சாதி கவிதையாக நிச்சயம் புரிந்துகொள்ள முடியாது. அதன் அடிநாதத்தை மாற்றிப் பொருள்கொள்ள முடியாது அல்லவா!”

“மொழியை அறிமுகப்படுத்தியவர்கள் பெண்கள்!”

“பெண் எழுத்து குறித்து உங்களின் வரையறை என்ன?”

“தாய்வழிச் சமூகத்தில் மொழி பெண்ணால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. சொத்து, வாரிசு எனப் பெண்கள் ஓரங்கட்டப்பட்டு ஆண்களுக்குத் தலைமைப்பொறுப்பு கொடுக்கப்பட்டது. இப்போது பெண்கள் நிலமற்றவர்களாகி விட்டனர். என்னுடைய ஊர் எதுவென்றால், அப்பாவின் ஊரைத்தானே சொல்லவேண்டியிருக்கிறது. அம்மாவுக்கு என்று ஓர் ஊர் இல்லாமல் போய்விட்டதே! இப்படித்தான் நிலமும் மொழியும் ஊரும் பெண்களிடமிருந்து பறிபோய்விட்டது. அவற்றை மீட்கவேண்டிய தேவையும் இருக்கிறது. என்னுடைய விடுதலையை நான் அடைவதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதெல்லாம் ஆண் மொழிதான். எந்த மொழி உதவுகிறதோ, அதுவே பெண் மொழி. இந்தப் பெண் மொழியால் எழுதுவதே பெண் எழுத்து.”

“பெண்கள் பார்க்கப்படுகிற விதத்தில் பொதுச் சமூகத்துக்கும் இலக்கிய வெளிக்கும் வித்தியாசம் இருக்கிறதா?”

“இலக்கியச் சூழலிலும் பெண்களைப் புறம் பேசுவது இருக்கத்தான் செய்கிறது. எல்லோருமே என்று சொல்ல முடியாது. ஆனாலும், இருக்கத்தான் செய்கிறார்கள். எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். ஆனால், காமம் பற்றி ஒரு பெண் எழுதினால், அந்தக் கவிதையை அவளோடு பொருத்தி முடிவுக்கு வருவது ஆபத்தான போக்கு. சக படைப்பாளியாக இருந்தாலும், ஓர் ஆண் ஆணாகவே நின்றுவிடும் தருணங்கள் அதிகம்.”

“படைப்பாளி எந்தக் கணத்தில் எழுத்தைத் தாண்டி, போராட்டத்தில் பங்கேற்க முன்வருகிறார்?”

“எழுத்து என்பதே அரசியல் செயல்பாடுதான். பொருளாதார, மத, சாதிய ஏற்றத்தாழ்வுகள் நிலவும் நம் நாட்டில், மனமகிழ்ச்சி எழுத்துக்கான தேவை இல்லவே இல்லை. இன்னும் நிறைய அரசியல் படைப்புகளே தேவைப்படுகின்றன. எழுத்தோடு நின்றுகொள்ளும்போது போதாமையைத் தருவதோடு, ஒரு குற்றவுணர்வை எனக்குத் தருகிறது. கறுப்பிலக்கிய நூல்கள், ரஷ்ய நூல்கள் உள்ளிட்ட பல புத்தகங்களைப் படித்துதான் நான் அரசியல் மயப்பட்டேன். ஆனாலும், எழுத்துச் செயல்பாடு அது நிகழ்வதற்கான களத்திலும் நிற்கும்போதுதான் முழுமை அடைகிறது.”

“படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் அரசியல் கவிதைகளாக மாறுகின்றனவா?”

“நான் பள்ளியில் படிக்கும்போது யாரும் என்னுடன் சேர மாட்டார்கள். என்னோடு பேசவோ, எந்தப் பொருளைக் கொடுத்தாலும் வாங்கவோ கூடாது என மற்ற பிள்ளைகளுக்குச் சொல்லியே அனுப்பியிருப்பார்கள். அதற்கு மாட்டுக்கறி சாப்பிடுவதை ஒரு காரணமாகச் சொன்னாலும், சாதிதான் முதன்மையானது. வகுப்பின் கடைசி வரிசையில் உட்கார வைப்பார்கள். இது உயரம் கருதி என்றால், சரி என ஏற்றுக்கொள்ளலாம். சாதி காரணமாக இருக்கும்போது என்ன செய்ய? பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்குத் தோழிகளே இல்லை. இதை இப்போது சொல்லும்போதும் கண்கலங்கிவிடும். பால்யத்தைப் பற்றிப் பேச கசப்பான அனுபவங்களே இருக்கின்றன. தலித் எழுத்தாளர் எனச் சொல்லிக்கொள்வதற்குக் காரணம் அதிலிருந்துதான் உருவானது. ஆதிக்க சாதியினர் தன் சாதி அடையாளத்துடன் சொல்லிக்கொள்வதற்கும் எனக்கும் வேறுபாடு இருக்கிறதுதானே! அவர்கள் பெருமிதத்துக்கும், நான் சாதி ஒழிப்புக்காகவும் சொல்கிறோம். இப்போதும் சேரியில்தான் வசிக்கிறேன். இரட்டைக் குவளை முறை, தொடாதிருப்பது என்பதெல்லாம் கண்ணுக்குப் புலப்படும் தீண்டாமை. கண்ணுக்குப் புலப்படாத தீண்டாமை என்பது மனதிலே சாதி இயங்குவது. இந்த இரண்டு வகையான தீண்டாமைகளையும் ஒழிக்க வேண்டியிருக்கிறது.”

“தமிழக அரசியல்வாதிகள், பெண்களின் சிக்கல்களை அணுகும் விதம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா?”


“ ‘ஆட்சியைப் பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியைப் பிடிக்கலாம்’ என்று ஓர் அமைச்சரே கூறுகிறார். அதேபோல, மேடைகளில் எதிரணியைப் பார்த்து சவால் விடும்போது ‘ஆம்பளையா இருந்தா...’ எனத் தொடங்குகிறார்கள். வீரம் என்பது ஆண்களுக்கானது என்று கருதுபவர்கள். இவர்களை வைத்து, எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துவிட முடியாது. இடதுசாரிப் பார்வைகொண்டுள்ள அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும், பெண்கள் பிரச்னைகளின் ஆழத்தை உணர்ந்து பேசுகிறார்கள்; அணுகுகிறார்கள்; முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, இடதுசாரிக் கட்சியினரே, வாச்சாத்தி, சிதம்பரம் பத்மினி, ஆணவக்கொலைகள் போன்ற விஷயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதோடு, சட்ட ரீதியாக நீதியைப் பெற்றுத்தரும் வரை போராடுகிறார்கள். அதையும் மறக்காமல் சொல்ல வேண்டும்.”

“மொழியை அறிமுகப்படுத்தியவர்கள் பெண்கள்!”

“மற்ற பிரச்னைகளுக்காகப் போராடும்போது தமிழராகவும், தலித் பிரச்னைக்கு நிற்கையில் தலித்தாகவும் பார்க்கப்படுகிறோம் என எழுதியிருந்தீர்களே?”

“ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றதுமே எல்லோருடனும் இணைந்து நின்று போராடினோம். ஆனால், ஜல்லிக்கட்டில் யார் மாட்டைப் பிடிக்கலாம், யார் பிடிக்கக்கூடாது என்ற சாதியப் பிரிவினை இருக்கத்தானே செய்கிறது. ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை வளர்க்க லட்சக்கணக்கில் செலவாகும். நிச்சயம் ஒரு ஏழையால் முடியாது. ஒரு முதலாளியால்தான் ஜல்லிக்கட்டு மாட்டை வளர்க்க முடியும். தலித்துகள் நிலமற்றவர்கள். அதனால் உழைப்பாளர்களாக இருக்கிறார்கள். தன் முதலாளி வீட்டில் வளர்ந்த மாட்டை அடக்குவது, வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் இழிவாகத்தானே பார்க்கப்படுகிறது. ஸ்டெர்லைட், அணு உலை என எல்லாப் போராட்டங்களிலும் நாங்கள் நிற்கிறோம். ஏனென்றால், வலியின் கொடுமை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தலித்தியப் போராட்டங்களில் இடதுசாரிகளைத் தவிர்த்துப் பார்த்தால், தலித் தலைவர்களே நிற்கிறார்கள். இதனால்தான் தமிழர் எனும் குடைக்குள் தலித்துகளுக்கு இடமில்லையா என்கிற கேள்வி எழுகிறது. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதில், இந்திய அளவில் இரண்டு சதவிகிதம்தான். அதிலும் தண்டிக்கப்பட்டவர்கள் சொற்பம்தான். ஆனால், அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும்போது, தலித்துகள் மட்டுமே எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. பொதுப் பிரச்னை என வரும்போது தலித்துகளின் பங்களிப்பை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால், தலித் பிரச்னையின்போது, தனித்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை!”

“உங்கள் வாழ்வில் பெருமிதமான தருணம்?”

“சாதியின் காரணமாக, பின்வரிசையில் உட்காரவைக்கப்பட்ட கிராமத்துப் பெண்ணான என்னுடைய கவிதைகளைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டிருப்பதைப் பெருமிதமாகச்  சொல்வதா எனத் தெரியவில்லை. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“கல்வியில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய பாடத்திட்டம் பற்றி...”


“நான் நடத்தும் ஒன்பதாம் வகுப்புப் பாடத்தில், அழகிய பெரியவன், தமிழ் ஒளி, வைரமுத்து, யூமா வாசுகி எனச் சமகாலப் படைப்பாளர்களின் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அரசியல் சார்ந்த கவிதைகளாகவும் அமைந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். உரைநடைப் பகுதி, 8-ம் வகுப்பு வரை பழைய பாடத்திட்டத்தில் படித்துவரும் பிள்ளைகளுக்குச் சிரமமாக இருக்கலாம். இப்போதே `இது பாதிப்பை ஏற்படுத்தும், நல்லது  செய்துவிடும்’ எனச் சொல்லிவிட முடியாது. ஒரு வருடத்தின் முடிவில்தான் தெரியவரும்.”

“கடந்த 100 ஆண்டுகளில் பெண்களின் வாழ்வில் நடந்த பெரும் மாற்றமாக எதைச் சொல்வீர்கள்?”

“நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாகக் கல்வி. நான் படிக்கும்போது, வகுப்பில் ஐந்து அல்லது ஆறு பெண்களே இருப்பார்கள். என் அம்மாவின் காலத்தில், இன்னும் குறைவாகவே இருந்திருப்பார்கள். இப்போது, ஆண்களுக்கு இணையாக, சில இடங்களில் அவர்களைவிடக் கூடுதலாகவே பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதன் எதிரொலிப்பு வேலைவாய்ப்பிலும் தெரிகிறது. பெண்கள் அரசியலுக்கு வந்ததும் முக்கியமான மாற்றம் என்று சொல்ல வேண்டும்.  இந்தியாவிலேயே பெண்களுக்கான முதல் பள்ளியை சாவித்திரிபாய் பூலே தொடங்கியதன் தொடர்ச்சிதான், நான் ஆசிரியை வேலை பார்ப்பதும். 1945-ம் ஆண்டிலேயே, தாழ்த்தப்பட்டவர்களுக்கான அகில இந்திய மாநாட்டுக்கு மீனாம்பாள் தலைமை தாங்கியிருக்கிறார். அதில், அம்பேத்கர் கலந்துகொண்டிருக்கிறார் என்பது சாதாரண விஷயம் இல்லையே! எழுத்திலும் மேல்தட்டுப் பெண்கள் மட்டுமே எழுதிவந்த சூழல் மாறி, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் எழுத வந்திருக்கிறார்கள். கல்வியை ஆயுதமாகக் கைக்கொண்டுள்ளனர். அம்பேத்கர், பெரியார், இடதுசாரிய இயக்கங்கள் இதை முன்னெடுத்தனர். அதேசமயம், இந்த வளர்ச்சிக்கு இணையாகப் பெண்களின் மீதான வன்முறையும் அதிகரித்தே வருகிறது என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால், அதை மீறியும் பெண்கள் சாதித்தே வருகின்றனர்.’’