Published:Updated:

அவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்! - எழுத்தாளர் ரமணிசந்திரன்

அவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்! - எழுத்தாளர் ரமணிசந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்! - எழுத்தாளர் ரமணிசந்திரன்

அவள் அரங்கம்தொகுப்பு: ஆ. சாந்தி கணேஷ்

ன்றைக்கு 40-50 வயதுகளில் இருக்கிற பெண்கள், தங்கள் இருபது வயதுகளில் வாசல் திண்ணையிலும் துணி துவைக்கிற கல்லிலும் சமையற்கட்டின் மங்கலான நாற்பது வாட்ஸ் பல்ப் வெளிச்சத்திலும் காதலாகி கசிந்து படித்த எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் ரமணிசந்திரன். பெண்களுடைய ஆழ்மனதின் காதல் தேடல்களைத் தன் அழகான தமிழால் நிறைவு செய்பவர். கார்த்திக்போல, மோகன்போல, அரவிந்த்சாமிபோல, அஜீத்போல என்று சினிமா ஹீரோக்களின் சாயலில் கணவன் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டதுபோலவே,  ‘ரமணிசந்திரன் கதைகளில் வருகிற நாயகர்கள்போல கணவன் கிடைத்தால் எப்படியிருக்கும்’ என்று சென்ற தலைமுறை இளம்பெண்களை ஏங்கவைத்தவர். அவர் கதைகளின் ‘சுப’ முடிவுகள், பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போன அம்சம். இதோ ‘அவள் அரங்க’த்தில் ரமணிசந்திரன்... இவருடைய எழுத்துகளைப் போலவே பதில்களும் அவ்வளவு பாசிட்டிவ்!

அவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்! - எழுத்தாளர் ரமணிசந்திரன்

எழுத்து ஆர்வம் எந்த வயதில் வந்தது? முதல் கதை எந்தப் பத்திரிகையில் வந்ததென்று ஞாபகமிருக்கிறதா?

 - சி.லதா, கோவில்பட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எழுத்து ஆர்வம் எந்த வயதில் வந்தது என்று ஞாபகம் இல்லை. எழுதவேண்டுமென்று நான் நினைத்ததும் இல்லை. ஆனால், ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளைப் படிப்பேன். அரை மணி நேரப் பயண தூரத்தில், காயாமொழி கிராமத்தில் இருக்கிற என் அம்மாவழிப் பாட்டி எங்கள் வீட்டுக்கு வாரம் ஒருமுறை வண்டி கட்டிக்கொண்டு வருவார். அப்போதெல்லாம் பாட்டிக்கு ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ இரண்டும் வாசித்துக் காட்டுவது என் டியூட்டி. எழுத்தின் மீது ஆர்வம் வந்ததற்கு, அந்தத் தருணங்கள்கூட உந்துதலாக இருந்திருக்கலாம்.

முதல் கதை ‘ராணி’யில் வந்தது. கதையின் பெயர் ‘கவிதா’. அது ஒரு தொடர்கதை. அந்த வாய்ப்பு எனக்குக்  கிடைத்த விதம் கொஞ்சம் சுவாரஸ்யமானது. ‘ராணி’ பத்திரிகையின் ஆசிரியர் அ.மா.சாமி, என் தங்கையின் கணவர். தங்கைக்குத் திருமணமான புதிதில், நான் அவளுக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவேன். அவற்றை அவள் கணவர் படித்துவிட்டு, என் எழுத்தில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது என்று அவருடைய பத்திரிகையில் கதை எழுதச் சொல்லிக் கேட்டார். நான் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நேரத்தில் கோயம்புத்தூரில் வேலைபார்த்துக்கொண்டிருந்த என் கணவருக்குச் சென்னைக்கு மாற்றலானது. நான் சென்னை வந்து சேர்ந்தேன். ‘ரமணியக்கா, நீங்க ராணி புக்ல  தொடர்கதை எழுதப் போறதா அறிவிச்சுட்டேன்’ என்றார் என் தங்கையின் கணவர். நானும் வேறு வழியேயில்லாமல் ஒரு கதை எழுதி அவருக்கு அனுப்பினேன். அதில் ‘ஓர்’ வருகிற இடத்தில் ‘ஒரு’ போட்டு, ‘ஒரு’ வர வேண்டிய இடங்களில் ‘ஓர்’ போட்டு என்று நிறைய  தவறுகள் இருப்பதாக அவர் சொல்ல, அந்தக் கதையைக் கிழித்துப் போட்டுவிட்டேன். அடுத்து நான் எழுதிய கதைதான் ‘கவிதா’. அது ராணியில் தொடர்கதையாக வந்தது.

உங்கள் கதைகளுக்கான கருவை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

- எஸ்.வைதேகி, சென்னை-21

என் கதைகள் கற்பனைகள் மட்டுமே. நிஜ வாழ்க்கையை என் எழுத்துக்குள் நான் கொண்டுவருவதே இல்லை. இன்றைக்குச்  சண்டை போட்டவர்கள் இன்னும் சில வருடங்களில் சமாதானமாகிவிடலாம்; அவர்கள் சண்டை போட்ட காலத்தில் அவர்கள் வாழ்க்கையைக் கதையாக எழுதி, அதை அவர்கள் சமாதானம் ஆன பின்பு படித்தால் எவ்வளவு வலிக்கும்? அதனால்தான் உண்மைக் கதைகளை என் கதைகளுக்குக் கருவாகத் தேர்ந்தெடுக்க மாட்டேன். கதைகளுக்கான கருவை நான் சந்திக்கிற மனிதர்களின் இயல்புகளில் இருந்து எடுத்துக்கொள்கிறேன்.

அவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்! - எழுத்தாளர் ரமணிசந்திரன்

டீன் ஏஜில் படித்த புத்தகங்கள்... அவற்றில் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த புத்தகத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?

- ஜே.சுஜிதா, திருச்சி

கிடைத்ததைப் படித்தேன் அவ்வளவு தான். எங்கள் அப்பா பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட் என்பதால் நூலகத்தில் இருக்கிற புத்தகங்களை வீட்டுக்கு வரவழைத்துப் படிப்போம். அப்படிப் பல ஆங்கிலக் கதைகள்கூட படித்திருக்கிறேன். நான் படித்தவற்றில் எழுத்தாளர் அநுத்தமாவின் ‘நைந்த உள்ளம்’, ‘ஜெயந்திபுர திருவிழா’ என்ற இரு கதைகளும் பிரமாதமானவை  என்பேன். கதையின் போக்கில் வருகிற சின்னச் சின்ன வார்த்தைகள்கூட கதையின் பிற்பகுதியில் அப்படியே பொருந்திவரும். ஆனால், அவர் எழுத்துகளின் அருகில்கூட  என் எழுத்து களால் நெருங்க முடியாது.

உங்கள் கதை மாந்தர்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கின்றனவே..?

- டி.ரவிக்குமார், கோவில்பட்டி

அந்தந்த கேரக்டர்களின் இயல்புக்குத்  தகுந்த மாதிரி நல்ல தமிழ்ப்பெயர்களாக வைப்பேன். உதாரணத்துக்கு, மாதவியும் அபரஞ்சியும். `மாதவி' என்றால் `கருப்பட்டி' என்று அர்த்தம். அந்த அளவுக்கு அவள் இனிமையானவள். `அபரஞ்சி' என்றால் `சுத்த தங்கம்' என்று அர்த்தம். இப்படி நான் வைத்த பெயர்கள் எல்லாம் டிரெண்டாகிவிட்டன.

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்கள்?

- வி.லதா, தி.நகர்

நான் ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கும்போது மற்றவர்களின் கதைகளைப் படிப்பதில்லை. அந்தக் கதையின் சாயலோ, சொல்லாடலோ என் கதையில் வந்துவிடலாம் எனப்  பயப்படுவேன். எனக்குத் தெரிந்து கல்கியின் புத்தகங்கள் படித்தால் மட்டும் சொல் வளம் மாறாது; எழுத்துக்கும் பாதிப்பு வராது.

எழுத்தாளர்கள் நிறைய பயணம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்... நீங்கள் எப்படி?

- தி. மீனாட்சி, மதுரை

நிறைய எழுதுபவர்கள் நிறைய பயணம் செய்வார்களோ என்னவோ? நான் வருடா வருடம் எங்கள் ஊர்க் கோயிலுக்குப் போவேன். அதுதான் நான் போகிற பயணம்!

உங்கள் மருமகளுக்கு, பெண்ணுக்கு, பேத்திக்கு உங்கள் நாவல்களில் பிடித்தது?

- வண்ணமதி, சென்னை

என் மருமகள் `நார்த்'தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால், அவருக்குத் தமிழ் பேச மட்டும்தான் தெரியும்; படிக்கத் தெரியாது. பேத்தி என் கதைகளைப் படிப்பாளா என்பது எனக்கே தெரியாது. என் மகள் என்னுடைய சில கதைகளைப்  படிப்பாள். ‘சோகமா கதை எழுதாதீங்கம்மா’ என்பாள். என்னுடைய ‘வெண்மையில் இத்தனை நிறங்களா’ என்கிற நாவலை `அழுகுணி கதை’ என்று கிண்டலடிப்பாள்.

உங்கள் கதைகளில் வருகிற கதாநாயகிகள் சந்திக்கிற பிரச்னைகளை அவ்வளவு அழகாகத்  தீர்த்து வைக்கிறீர்கள். என் பிரச்னையை  உங்களிடம் நேரில் வந்து சொன்னால், தீர்வு சொல்வீர்களா?

- தேன்மொழி, மதுரை

நிச்சயம் அதைச் செய்ய மாட்டேன். இந்தப் பதிலுக்காகத் தயவுசெய்து என்மீது வருத்தப்படாதீர்கள். கதைகள் என்பது பதிலைக் கையில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ப பிரச்னையை உருவாக்குகிற கணிதத்தைப் போன்றது. எழுத்தாளர்கள் உருவாக்குகிற பிரச்னைகளை, அந்த எழுத்தாளர்களே உருவாக்குகிற கதை மாந்தர்கள் ஜெயிக்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் படித்துவிட்டு, என்னால் உங்கள் பிரச்னைகளுக்கு  தீர்வு சொல்ல முடியும் என்று நினைத்துக்கொண்டால் எப்படி? என் 80 வயது அனுபவத்தில் வாழ்க்கை ரகசியம்  ஒன்று சொல்கிறேன். பிரச்னையில்  மாட்டிக்கொண்டிருப்பவர் களுக்கு  மட்டுமே அதற்கான நியாயமான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும். மற்றவர்கள் தங்கள் அறிவால் தீர்வு சொல்வார்கள். உணர்ந்து சொல்ல முடியாத தீர்வுகள் எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும்?

எங்களுக்கு உங்கள் எழுத்து நல்ல தோழியாக இருக்கிறாள். உங்கள் தோழிகள்பற்றி சொல்லுங்களேன்...

- கிருபா.ஆர், சென்னை-15

இந்திரா, என் பெரியம்மா பெண். நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருப்போம். எங்களின் ரசனைகூட ஒன்றுபோலதான் இருக்கும். அவளும் சென்னையில்தான் இருக்கிறாள் என்றாலும் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடிவதில்லை. தையலே இல்லாமல் துணி சேர்வதுபோன்ற நட்பு எங்களுடையது.

வாசுகி என் கதைகளுக்கு ரசிகையாகச் சந்திக்க வந்து பிறகு தோழியாகிப் போனவள். கால் நூற்றாண்டு நட்பு எங்களுடையது. சென்னைக்கு வந்தால் என்னைப் பார்க்காமல் செல்ல மாட்டாள்.

அவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்! - எழுத்தாளர் ரமணிசந்திரன்

உங்களுடைய சில கதைகளில் காபியில் முறுக்கை உடைத்துப்போட்டுச் சாப்பிடுவதுபோல வரும். நீங்கள் அப்படிச் சாப்பிட்டிருக்கிறீர்களா?

- எம்.கார்த்திகை பிரியா, விருதுநகர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் காபியில் முறுக்கை உடைத்துப் போட்டுச் சாப்பிடுவார்கள். நானும் சிறு வயதில் சாப்பிட்டிருக்கிறேன். ரொம்ப ருசியாக இருக்கும். இதற்காகவே எங்கள் வீடுகளில் டின் நிறைய முறுக்குகள் இருக்கும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்கிற காலகட்டத்திலேயே  மறுமணம், காதல் தோல்விக்குப் பிறகு திருமணம் என்று எழுதியிருக்கிறீர்களே. ஃபீட் பேக் எப்படி இருந்தது?

- நந்தினி.ஹெச், விருதுநகர்

நன்றாகத்தான் இருந்தது. அந்தக் கதைகளைப் பற்றி இதுவரை யாரும் என்னிடம் குறை சொன்னதில்லை.

உங்கள் கதைகள் எல்லாவற்றிலும் ஒரே கருவே இருக்கிறதே... உங்களுக்குச்  சலிக்கவே இல்லையா?

 - ரேணுகா தேவி.எல், சிவகாசி

எனக்கு மற்ற எழுத் தாளர்கள்போல பெரிய எக்ஸ்போஷர் கிடையாது. நான் பெருவாரியான நேரம் வீட்டிலேயே இருக்கிற ஹவுஸ் வொய்ஃப். வீட்டுக்குள் நான் என்னென்ன பார்க்கிறேனோ, அதைத்தான் என்னால் எழுத முடியும். தவிர, வன்முறை, தம்பதியர் பிரிந்துபோவது, நோயினால் இறப்பது மாதிரியான கதைகளை எழுதக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.

சிவந்தி ஆதித்தனார் குடும்பத்தைச் சேர்ந்தவர் நீங்கள்.  சிறு வயதில் அரசியல் தலைவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

- சி.கலைச்செல்வி, திருப்பூர்

அரசியல் தலைவர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் எங்கள் வீட்டுக்கு வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் பிறந்த வீட்டில் பெண்கள் உள்கட்டுக்குள்தான் இருப்பார்கள். ஆண்கள் வெளிக்கட்டில் புழங்குவார்கள். தவிர, அப்போது நான் சிறுமியல்லவா?  பெருந்தலைவர் காமராஜர் ஒரு தடவை வந்ததாக மங்கலாக ஒரு ஞாபகம் இருக்கிறது. 

உங்கள் இளமைப் பருவத்தில் #MeToo மாதிரியான விஷயங்கள் நடந்திருக்கின்றனவா?

- பி.அனிதா, தஞ்சாவூர்

கேள்விப்பட்டதுகூட இல்லை. ஓப்ரா வின்ஃப்ரேகூட தனக்கு நிகழ்ந்ததை  தன்னுடைய டாக் ஷோவில் பகிர்ந்து கொண்டார் இல்லையா? இது மிகப்பெரிய எழுச்சி. ஆனால், இதனால் தீர்வு கிடைக்குமா என்பது எனக்குப்  புரியவில்லை.

இந்தப் புகழ் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள்?

- கே.மகாலஷ்மி, கோயம்புத்தூர்-3

சவால்களா..? எனக்கா..? அதெல்லாம் நிறைய  கதைகள் எழுதிய எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் நிகழ்ந்திருக்கலாம். என்னால் முடிந்தால்தான் எழுதுவேன் என்கிற கேரக்டர் நான். அதனால் சவால்களையெல்லாம் பெரிதாக நான் சந்திக்கவில்லை. ஒரு தடவை தீபாவளி சிறப்பிதழ் ஒன்றுக்கு மறுநாள் கதையைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். இரவெல்லாம் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் என் விரல்களில் ஒன்றில் ஜவ்வு கிழிந்து விட்டது. அப்படியும் அந்தக் கதையை முடித்துக்கொடுத்தேன். இதைச் சவால் என்று சொல்லலாமா... தெரியவில்லை.

நீங்கள் எழுதுவதற்கு உங்கள் கணவர் எந்த வகையில் உறுதுணையாக இருக்கிறார்?      
                                             
- க.ஸ்டெல்லா, திருநெல்வேலி

நிறைய...  ஓர் உதாரணம் சொல்கிறேன். என்னுடைய ஒரு நாவலுக்கு, ஃபைவ் ஸ்டார்  ஹோட்டல்களின் நடைமுறைகள் பற்றிய தகவல்கள் தேவைப்பட்டன. `பெல்  பாய்ஸ்', அவர்களின் தலைவரான `பெல்  கேப்டன்' போன்ற தகவல்களை எல்லாம் அவர் பார்த்துவிட்டு வந்து, என்னிடம் சொன்னார். இந்த மாதிரி எனக்குத் தெரியாத, நாவலுக்குத்  தேவைப்படுகிற விஷயங்களை அவர்தான் சொல்லுவார்.குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, கதைகளும் எழுதிக்கொண்டு... சமாளிக்க முடிந்ததா?

- மல்லிகா ஆறுமுகம், பழநி

 ஒரு தடவை எழுத்தாளர் அனுராதா ரமணனைச் சந்தித்தபோது, ‘உங்களுக்குப் பின்னாடி பத்து வருஷங்கள் கழித்துத்தான்  நான் எழுத வந்தேன். ஆனால், உங்களைவிட நான் அதிகமாக எழுதிவிட்டேன் தெரியுமா!’ என்று விளையாட்டாகச் சொன்னார். அது உண்மைதான். வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று கதைகள் மட்டுமே எழுதி வந்த எனக்கு, பிள்ளைகளை வளர்க்க நேரமில்லாமல் போகுமா, என்ன?

அவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்! - எழுத்தாளர் ரமணிசந்திரன்

மறக்க முடியாத பாராட்டு அல்லது விமர்சனம்?

- லக்ஷ்மி மணிவண்ணன், பொன்னேரி

ஒரு பத்திரிகையில் நெடுங்கதை போட்டிக் காக ஒரு கதையை எழுதி அனுப்பியிருந்தேன். இரண்டாம் பரிசுதான் கிடைத்தது. அந்தக் கதையின் நாயகன் ஒரு மிலிட்டரி மேன். கதையின் முடிவில் மனம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் அந்த மிலிட்டரி மேனும் அவன் மனைவியும் பிரிந்து போவதுபோல கதையை முடித்திருந்தேன். அந்தக் கதையை விமர்சித்து எனக்கு ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கதையின் மீது இரண்டு விமர்சனங்கள் வைத்திருந்தார் அவர். ‘கணவனைப் பிரிந்த அந்தப் பெண்ணின் எதிர்காலம் பற்றி உங்கள் கதை தீர்வு சொல்லவில்லையே?’, ‘மிலிட்டரியில் லீவ் எடுக்கிற நடைமுறைகள் பற்றித் தவறாக எழுதியிருக்கிறீர்கள்’ என்பவைதாம் அவை. அந்தக் கதைக்குப் பிறகு தம்பதிகள் பிரிவதுபோல நான் எந்தக் கதையுமே எழுதவில்லை. தவிர, ஆர்மியில் லீவு எடுப்பது போன்ற, எனக்குத் தெரியாத உலக நடைமுறைகளைச் சம்பந்தப்பட்ட வர்களிடம் கேட்டுத்தான்  எழுதுவேன்.

எப்போதும் பெண் எழுத்தாளர்கள் குறை வாகவே இருக்கிறார்களே... ஏன்?

- மலர்க்கொடி, காஞ்சிபுரம்

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.  இப்போது 60, 70 பெண் எழுத்தாளர்கள்  நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவை விற்பனையிலும் நன்றாக இருப்ப தாக சில பதிப்பகத்தார் சொல்லக் கேட்டிருக் கிறேன்.

உங்கள் ஓய்வுக் காலம் எப்படியிருக்கிறது?

- ஆர்.மைதிலி, கோட்டூர்புரம்

டி.வி-யில் காமெடி நிகழ்ச்சிகள் பார்ப்பேன். என்.எஸ்.கிருஷ்ணன் காமெடி கண்ணில்பட்டால் நிச்சயம் பார்த்து விடுவேன். ‘பயணம்’, ‘பள்ளிக்கூடம்’, ‘சாட்டை’ மாதிரியான படங்கள் டி.வி-யில்
போட்டால் பார்ப்பேன். அப்புறம், சைனீஸ் செக்கர்ஸ், `ஸ்க்ராபிள்' கேம்ஸ் விளையாடுவேன். வாழ்க்கை நிம்மதியாகப்  போய்க்கொண்டிருக்கிறது.