பிரீமியம் ஸ்டோரி

ரெய்டு!

வீட்டில் ஒரு பொருள்
காணாமல்போனதும்
முதல்
ரெய்டு நடத்தப்படுவது
குழந்தைகள் அறையில்தான்!
அதில் பல
கிடைத்தும்விடுவதுண்டு
அப்பாவின் பேனா
தண்ணீர் பாட்டில் மூடி
அம்மாவின் சீப்பு
புதுசாய் வாங்கிய ரிப்பன்
தாத்தாவின் மூக்குக்கண்ணாடிப்பெட்டி
டி.வி ரிமோட்
காலையில் வந்த பேப்பர்
செல்போன் சார்ஜர்
பாட்டியின் ஜோதிடப் புத்தகம்
என நீளும் பட்டியலில்
குழந்தை தொலைத்த எதுவும்
அங்கு
காணக்கிடைப்பதில்லை
என்பது மட்டும்
இன்றுவரை
அவிழாத புதிர்!

- ப்ரணா

சொல்வனம்

உரு

குழந்தையின்
பல் பதிந்த இடத்தில்
வெள்ளையாய்ச் சிரிக்கிறது ஆப்பிள்.                                   

- ந.சிவநேசன்

நொதி

மகளின் தற்கொலைக்குப்
பிறகான நாளொன்றில்
வாடகை வீட்டைக்
காலிசெய்ய வந்தவள்
யாரும் பார்த்திராத
ஒரு கணநேரத்தில் எடுத்துப்
பத்திரப்படுத்திக்கொள்கிறாள்
வெடித்த கழுத்து நரம்புகளின்
நொதி வாசனை அப்பியிருக்கிற
தூக்குக்கயிற்றை!

- வே.முத்துக்குமார்


ஒரு ராத்திரி, அப்பாவின் அழுகை


நிச்சயமாக அப்பா அழுவதை எனது
இருபத்தேழு வயதில் காண்பதென்பது
அதிர்ச்சி பொதிந்த ஆச்சர்யம்தான்!
தாத்தா இறந்தப்போ வராத அழுகை
நேற்று இரவு ஏன் வந்தது
வீட்டுச் சுவர்களே நீங்கள் நிச்சயமாக
அறிந்துவைத்திருக்க முடியும்
அந்த இரவிடம் பேசிப்பயனில்லை
அது மௌனமாக நிற்கிறது.
அம்மா, சாப்பாட்டில் உப்பு சேர்க்கவில்லை
அப்பா, சாப்பாட்டைக் குறைகூறவுமில்லை.
பாட்டி, வெற்றிலையைச் சப்பி தன் கடைவாயில்
வழியும் எச்சிலைத் துடைக்க மறந்து பேசுகிறார்.
நடக்கும் தரையில் சிந்திய எச்சிலை மிதித்த அப்பா
பாட்டியைக் கோபிக்கவேயில்லை.
அழுகை எதற்காக என்பது மர்மமாகவே இருக்கு
அப்பாவின் நாளாந்தச் செயலில் மாற்றமில்லை.
அப்போ அழுகைக்கும் அப்பாவுக்குமான உறவுதான் என்ன?
அம்மாவிடம் நான் கேட்டுடப்போறேன்
`அப்பா புன்னகைக்க உன்னிடம் ஏதாவது
வழி இருக்கா?’ என்று.

- ஜே.பிரோஸ்கான்


மாரல் ஆஃப் தி ஸ்டோரி

அந்த யானை அவ்வளவு
ஒல்லியாக இருந்தது
கரடிக்குக் கன்னம்
கொஞ்சம் அதிகம்தான்
சிறுத்தை, சற்று
நிறம் மாறி இருந்தது
நரி மறந்த வசனத்தை
நேரம் தவறி மான் பேசியது
நகைப்புக்குரியது
மற்றபடி சிங்கத்துக்குக் குரல் மட்டுமே இருந்தது
எவ்வளவு நேரம் படுத்தேயிருப்பது
பாம்பு அவ்வப்போது நின்றுகொண்டது
வாழ்வென்பது நம்பிக்கைகளால் ஆனது
பேசிய ஓநாய்க்குத் திக்குவாய்
திரை மூடிய பிறகும்
வழியெல்லாம் அரங்கேறிக்கொண்டிருந்தது
குழந்தைகளின் மாரல் ஆஃப் தி ஸ்டோரி!

- கவிஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு