Published:Updated:

பேசலாம் பிரபஞ்சன்!

சக்தி தமிழ்ச்செல்வன் - படம்: க.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

“இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” - ‘விகடன்’ தடம் நேர்காணலில் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறிய வார்த்தைகள் இவை. பூக்கள் எப்படி இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவையோ, நேசத்தைக் கொடுப்பவையோ அப்படித்தான் பிரபஞ்சனும். அவரின் எழுத்தும் பேச்சும் மனிதனின் மனச் சிடுக்குகளுக்கு மத்தியிலும் `பூ’ பூக்கச் செய்பவை.

பிரபஞ்சன் சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் மனித மாண்பையும் தொடர்ச்சியாகத் தன் எழுத்தில் வலியுறுத்திவருபவர். குறிப்பாக, திருமணம் என்னும் ஏற்பாடு எப்படிப் பெண்களை ஒடுக்குகிறது என்பதைத் தன் கதைகளில் சித்திரித்தவர். எழுத்தையே தன் வாழ்க்கையின் முதன்மைப்பணியாகக் கொண்டு, கிட்டத்தட்ட 55 வருடமாகத் தமிழ்ச்சமூகத்துடன் உரையாடிய பிரபஞ்சன், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே இதய அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்தவர், மீண்டும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

பேசலாம் பிரபஞ்சன்!

அந்தச் சூழலிலும், நோயின் சுவடு தெரியாமல், புன்னகையால் வரவேற்ற பிரபஞ்சனிடம் பேசினேன். அவரால் அதிகம் பேச முடியவில்லை. ஓரிரு வார்த்தைகள்தான். அதில் எப்போதும் சுடரும் ஒளி, தீவிரம் குறைந்திருந்தாலும் வழக்கமான அன்பும் அக்கறையும் தொனிக்கத்தான் செய்கிறது.

பிரபஞ்சன் என்றாலே ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் குங்குமம் வைத்ததைப் போன்ற நெற்றித்தழும்பும் தினந்தோறும் மழிக்கப்பட்ட முகமும்தான். ஆனால் இப்போது, இதோ நான் பார்த்த பிரபஞ்சன் அப்படி இல்லை. நிறைய தளர்ந்திருந்தார். எப்போதும் பார்க்க முடியாத தோற்றமாக, முகத்தில் ஆங்காங்கே முடிகள். களைப்பு கண்களுக்கு அடியில் படுத்துக்கிடக்கிறது. ஆனாலும், மருத்துவமனைப் படுக்கையில் மருந்து நெடிகளையும் தாண்டி அறை முழுக்க நிரம்பியிருந்தது `பிரபஞ்ச’வாசம்.

அவரின் இதழ்களைவிட, கண்கள்  அன்பாகச் சிரித்தன. எப்போதும் கண்ணாடிக்குள்ளிருந்து தரிசனம் செய்யும் கண்கள், கண்ணாடியைத் துறந்திருந்தன. ``நல்லா இருக்கேன். இப்போதான் சாப்பிட்டேன்” என்ற வார்த்தைகளைக் கண்களாலும் இதழ்களாலும் ஒருசேர உச்சரித்தார். அந்த வார்த்தைகள் கொஞ்சம் சிரமப்பட்டு வந்தாலும், அதன் ஆணிவேர் என்பது உரையாடலுக்கான தோழமைதான்.

தமிழ் எழுத்துலகில் புதிதாக அறிமுகமாகும் எழுத்தாளர்களை உற்சாகமூட்ட, அவர் ஒருபோதும் மறந்ததில்லை. `எல்லோருக்குள்ளும் ஒரு வாழ்க்கையிருக்கும். அந்த வாழ்க்கையை எழுதுங்கள். எழுதுவதால்  நீங்கள் இந்தச் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம். சக மனிதனுக்கு நம்மால் நம் அன்பை எழுத்தின் வழியே கடத்துவோம். அதைவிட வேறு என்ன செய்துவிட முடியும் நம்மால்?’ என மனோகரமாகப் புன்னகை செய்வார். அந்தப் புன்னகையின் தடத்தைத்தான் இப்போதும் கண்டேன்.

தன் வாழ்வை முழுவதுமாகவே எழுத்துக்கு ஒப்படைத்துவிட்டவர் பிரபஞ்சன்.  ஒரு படைப்பாளி தனது பொருளாதார நிலை பற்றிக் கவலைப்படாமல், எழுத்துப்பணியைச் செய்வதில்  எவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்பது பொதுச்சமூகம் அறிந்ததே! அந்தச் சிரமங்களுடன்தான் தன் புன்னகையைச் சுமந்துகொண்டிருந்திருக்கிறார் பிரபஞ்சன். எவ்வளவு பிரச்னைகள் வந்தபோதிலும், நோய்கள் ஆட்கொண்டபோதும் தன்னை எழுத்துலகிலிருந்து விடுவித்துக்கொண்டதில்லை அவர். மீண்டும் உடல்நலம் தேறி எழுத வருவார் என்ற நம்பிக்கையில் உரையாடினேன்.

அருகில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது வழக்கமாக உரையாடலை முடிக்கும் தனது அடையாளச் சொல்லான, ``பேசலாம்..!” என்றபடி உரையாடலை முடித்தார்.

தேறி வாருங்கள். இன்னும் எழுத வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு