Published:Updated:

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்

கற்களின் தியானம்

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்

கற்களின் தியானம்

Published:Updated:
கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்

1973-ல் யோம் கிப்பூர் போரில் கலந்துகொள்ளச் சென்ற இஸ்ரேலியக் கல்லூரி மாணவர்கள் தங்களுடன் துப்பாக்கி, வெடிகுண்டு மற்றும் யஹுதா அமிகாயின் கவிதை நூல் மூன்றையும் கொண்டுசென்றார்கள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்வதே கடினமானது. போர்க்களத்தில் கவிதையின் இடமென்ன, கவிதையும் ஓர் ஆயுதம்தானா?

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்

யஹுதா அமிகாய், பாலஸ்தீனத்தின் தேசியக்கவியாகக் கொண்டாடப்படுகிறவர் என்பதால் மட்டும் அவரது கவிதை நூலை மாணவர்கள் கையில் வைத்திருக்கவில்லை. மாறாக, உயிரின் மதிப்பு மற்றும் மரணத்தின் முன்பான மனிதநிலை ஆகியவற்றைப் பேசுவதோடு போர்வீரனுக்கு ஆறுதல் தருகிறது என்பதாலேயே யஹுதா அமிகாயின் கவிதைகள் இளைஞர்களால் விரும்பி வாசிக்கப்பட்டன.

 தன்னை அடையாளம் கண்டுகொள்ள விரும்பிய ஒவ்வோர் இளைஞனும் அமிகாயின் கவிதைகளைத் தேர்வுசெய்கிறான். அவரது கவிதையின் சுறுசுறுப்பான முரட்டுத்தனமான விளையாட்டுத்தனமான ரகசியமான மொழி, முற்றிலும் புத்துணர்வு அளிக்கிறது. காதலே யஹுதா அமிகாய் கவிதைகளின் மையம். அவரது கவிதைகள், இரண்டு வித்தியாசமான உலகங்களின் அனுபவத்தைப் பிரதிபலிக்கின்றன. நினைவுகளின் சுமை மற்றும் அலைக்கழிப்புப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார். அதன் பொருட்டே அவர் கடவுளோடு சண்டையிடுகிறார். ‘கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே முடிவில்லாமல் ஊஞ்சலாடிக்கொண்டேயிருக்கிறேன். பெரும் முகத்திரைபோல ஜெருசலேம் நகரின் மீது காலம் படர்ந்துள்ளது’ என்று எழுதுகிறார் அமிகாய்.

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்யஹுதா அமிகாய் 1948-ல் எழுதத் தொடங்கினார்; 1955-ம் ஆண்டில் அவரது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். பின்பு, பல்வேறு காலகட்டங்களில் 11 கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாடகத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இஸ்ரேலுக்கு வெளியில் நன்கு அறியப்பட்ட கவிஞராக இவரைக் கொண்டாடுகிறார்கள். ஒருமுறை நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

எபிரேய மொழியில் கவிதை எழுதுவதற்கு, விவிலிய காலத்திலிருந்து இன்றைய சூழல் வரையான அதன் சாராம்சத்தை உள்வாங்கியிருக்க வேண்டும். மேலும் மொழியை உருக்கி, புதிதாக்கத் தெரிந்திருக்க வேண்டும். ‘ஒரு மல்யுத்த வீரனைப்போல, தான் மொழியுடன் சண்டையிடுவதாக’ அமிகாய் குறிப்பிடுகிறார்.

1994-ம் ஆண்டில், ஈத்ஷாக் ராபின் மற்றும் ஷிமோன் பெரெஸ் ஆகியோர் யாசீர் அராஃபத்துடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர். ஒஸ்லோவில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்க அமிகாய் அழைக்கப்பட்டார். அந்த விழாவின்போது, அமைதி பற்றி 20 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் எழுதிய கவிதை ஒன்றை வாசித்துக்காட்டினார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விருதை ஏற்றுக்கொண்டு நன்றி கூறும்போது ஈத்ஷாக் ராபின், அமிகாயின் கவிதை ஒன்றை மேற்கோளாகக் காட்டியே தனது உரையை நிகழ்த்தினார்.

எளிய மனிதர்களின் உதடுகளில் தொடங்கி, நோபல் பரிசு மேடை வரை அவரது கவிதை உச்சரிக்கப்படுகிறது என்பதே விசேஷம். கவிதை எழுதுவது என்பதே ஒருவிதமான சமூக நடவடிக்கைதான். கவிதை என்பது, விடுதலை உணர்வு; பெரும்சக்தி; ஆன்மிகத் தேடல். கவிதை, உலகை அப்படியே பிரதிபலிப்பதில்லை. மாறாக, உலகம் அனுமதிக்காதவற்றைக் கவிதை அனுமதித்து மாற்றுலகை உருவாக்குகிறது. தாயகம் திரும்பும் ஒருவனைப்போல கவிதையின் வழியாகவே ஒருவன் தனது வாழ்வின் ஆதாரங்களுக்குத் திரும்புகிறான். கவிதையுடன் உரையாடுவது என்பது, இன்மையோடு அல்லது இருத்தலோடு கொள்ளும் உரையாடலே. ஆழ்மனதின் வெளிப்பாடே கவிதையைச் சாத்தியப்படுத்துகிறது.

கவிதை, மொழியை அர்த்தம் சார்ந்து மட்டும் பயன்படுத்துவதில்லை. மாறாக, மொழியின் வழியே மொழியால் கைக்கொள்ள முடியாத உணர்வுகளை, நிலைகளை வெளிப்படுத்த முயல்கிறது. கவிதையின் மொழி என்பது, தண்ணீர் பனியாவது போன்றதோர் உருமாற்றம். ரஸவாதிகளைப் போலவே கவிஞர்கள் மொழியைக் கையாளுகிறார்கள்.

வரலாற்றைக் கவிஞன் தொடும்போது, அது தன் கடினத்தன்மையை இழந்து உருகியோடத் தொடங்குகிறது. பிரார்த்தனை என்பது கவிதையின் உன்னத வடிவங்களில் ஒன்று. அதன் வழியே மனிதன் கடவுளுடன் உரையாடுகிறான் என்றால் கடவுளுடன் மனிதர்கள் பேசக் கண்டுபிடித்த வடிவமே கவிதை.

உலகைக் கண்டு வியந்த முதல் மனிதனின் அனுபவம் முதல், சாட்டிலைட் யுகத்து மனிதனின் நவீன அனுபவம் வரை பரந்த தளத்தில் கவிதை பல்வேறு வாழ்வியல் அனுபவங்களைப் பேசுகிறது. அகவுலகின் சிக்கல்களை, தனிமையை, காமத்தின் குமிழ்களை அடையாளப்படுத்துகிறது. இனம், மொழி, வயது, பால் அடையாளம் என வரையறை செய்யப்பட்ட மனித இருப்பின் வரம்புகளைக் கடந்து, கவிதை மனிதனை பிரபஞ்சஜீவியாக்குகிறது.

கவிதையின் வழியாக பால்ய காலத்துக்குத் திரும்புதல் எளிதானது. குறைவான சொற்களைக்கொண்டு அது கடந்த காலத்துக்குள் ஒருவனைப் பிரவேசிக்கச் செய்துவிடுகிறது. கவிதை ஒரு ரகசிய மொழியைப்போலச் செயல்படுகிறது. அந்த மொழி அறியாதவர்கள் அதன் உன்னதத்தைத் தவறவிட்டுவிடுகிறார்கள் அல்லது புறக்கணித்துப் போய்விடுகிறார்கள். சங்கின் உள்ளே கடலின் ஓசை கேட்டுக்கொண்டே யிருப்பதைப்போலவே கவிதையின் உள்ளே உலகின் ஒசை கேட்டுக்கொண்டேயிருக்கிறது. கவிதை பற்றி இப்படி முடிவற்ற எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டே போகலாம். உலகக் கவிதையின் பரப்பு மிகப் பெரியது. அதில் ஒரு கவிஞன் அடையாளம் காணப்படுவதும் கொண்டாடப்படுவதும் அவனது கவிதைகள் உலகின் குரலாக ஒலிப்பதும் அபூர்வமானது.

சமகால உலகக் கவிதைகளில் தனிக்குரலாக ஒலிக்கும் கவிஞர் யஹுதா அமிகாய், ஹிப்ரூ மொழியில் கவிதைகள் எழுதியவர். இவரது கவிதைகள் 40 மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றன. பிரபல ஆங்கிலக் கவியான டெட் ஹியூஸ், இவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

‘கவிதை எழுதுவது, என்பது ராணுவத்தினர் சங்கேதங்களை உருவாக்குவது போன்றது. அதனுள் உள்ள செய்தியைப் புரிந்துகொள்ள நமக்குக் கவிதையின் சங்கேத மொழி தெரிந்திருக்க வேண்டும். கவிதை எழுதுவதற்குச் சிறந்த மொழி என்று தனியாக எதுவுமில்லை. எல்லா மொழிகளிலும் மோசமான கவிதைகளும் இருக்கின்றன, நல்ல கவிதைகளும் இருக்கின்றன’ என்கிறார் யஹுதா அமிகாய்.

யூதரான இவர், ஜெர்மனியின் வூர்ஸ்பர்க்கில் பிறந்தவர். தந்தை, சில்லறை வணிகம் செய்துவந்தார். 12 வயது வரை ஜெர்மனியில் வாழ்ந்திருக்கிறார். யூத வெறுப்பு வலுப்பெறத் தொடங்கியதும் இவரின் பெற்றோர் ஜெருசலேத்திற்கு இடம்பெயர்ந்தனர். ஆரம்பக்கல்வியை ஜெர்மனியில் பயின்ற இவர், வீட்டில் ஹிப்ரூ மொழிகளையும் பேசியதால் இருமொழி அறிந்தவராக வளர்ந்தார். முதல் உலகப்போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றியிருக்
கிறார். ஆகவே, தனக்கு ராணுவவீரன், கவிஞன் என்ற இரு முகங்கள் இருப்பதாக யஹுதா அமிகாய் கூறுகிறார். சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பாலஸ்தீன மக்கள் இவரைத் தேசியக்கவியாகக் கொண்டாடு
கிறார்கள். “நான் தேசியக்கவி அல்ல, உலகின் கவிஞன் என்றே அமிகாய் கூறுகிறார்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற நாளில் ரூத் என்ற இளம்பெண்ணைக் காதலித்திருக்கிறார் அமிகாய். அந்தப் பெண்ணே இவருக்கு ‘அமிகாய்’ என்ற பெயரை வைத்துக்கொள்ள யோசனை சொன்னவர். காதலின் பொருட்டே அவர் தனது ஜெர்மனியப் பெயரை மாற்றிக் கொண்டார். ரூத் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்றுவிடவே, அவர்களின் காதல் முறிந்துபோனது. ஆனாலும், தொடர்ந்து ரூத்திற்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டேயிருந்தார் அமிகாய். ரூத்தின் திருமணச் செய்தி கிடைத்த பிறகு அவர்களின் காதல் உறவு முறிந்துபோனது.  

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்

40 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூத்தை தற்செயலாக அமெரிக்காவில் சந்தித்தபோது, தனது கடந்தகாலக் காதலை அவர் வெளிப்படுத்திக்கொள்ளவேயில்லை. ஆனால், அமிகாயின் கவிதைகள் பற்றி ஆய்வுசெய்த ஓர் ஆராய்ச்சியாளர் ரூத்தை சந்தித்து அவர் வசமிருந்த காதல் கடிதங்களைப் பெற்று அதைப் பதிப்பித்திருக்கிறார். காதலே யஹுதா அமிகாயைக் கவிதை எழுதத் தூண்டியது. தீவிர சமய நம்பிக்கைகள் உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவருக்கு மதம் வழியாக அறிமுகமான உலகம் ஒரு புறமும், போரின் விளைவால் உருவான சிதைவுற்ற உலகம் மறுபுறமுமாக இருந்தது. இந்த இரண்டு உலகங்களில் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வது என்ற குழப்ப உணர்வே அவரது ஆரம்பக் கவிதைகளின் அடிநாதம்.

கவிதையில் புதிய உவமைகளை, உருவங்களைப் பயன்படுத்துவதில் யஹுதா நிகரற்றவர். ‘கவலைகளின் துறைமுகத்தில் காத்திருக்கிறேன்’ என்று இவரது ஒரு கவிதை வரி நீள்கிறது. கவலைகளின் துறைமுகம் என்ற உருவகம் எவ்வளவு அடர்த்தியானது. துறைமுகத்திற்கு வந்து இறங்கும் பொதிகள் எங்கோ கொண்டுபோகப்படுகின்றன; எங்கிருந்தோ வருகின்றன. துறைமுகம் என்பது தற்காலிக இடம். அதுபோன்றே குடும்பக் கவலைகள் தன் மீது இறக்கி வைக்கப்படுவதாக யஹுதா கூறுகிறார்.

‘பேச்சிற்கும் பாட்டிற்குமான வேறுபாடே கவிதைக்கும் உரைநடைக்குமான வேறுபாடு. இரண்டும் சொற்களைக்கொண்டு நிகழ்த்தப்படுவதாக இருந்தாலும், கவிதையில் இசைத்தன்மை அதிகமிருக்கும். அன்றாட வாழ்க்கையைக் கவிதையில் எழுதுவது எளிதானதல்ல. காரணம், தினசரி வாழ்க்கை பெரிதும் அர்த்தம் சார்ந்தது; செயல்பாடுகளால் உருவானது. அந்த உலகை அர்த்தத் தளத்திலிருந்து சங்கேத, அரூபத் தளத்திற்குக் கொண்டுபோவது கவிதையின் சவால். அதை யஹுதா மிக அழகாகச் செய்துகாட்டுகிறார். வீடும் உலகமும் என்ற இரு எதிர்நிலைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து இயங்குகின்றன. வீடு என்பது வசிப்பிடமல்ல, ஓர் அடையாளம். கடவுளுக்கும்கூட ஒரு வீடு இருக்கிறது. கடவுளும் பாதுகாப்பை விரும்புகிறவராக இருக்கிறார். உலகுக்குள்தான் வீடு அடங்கியிருக்கிறது. ஆனால், உலகம் அனுமதிக்காத சில விஷயங்களை வீடு அனுமதிக்கும். கதவுகள் அற்ற பறவைகளின் கூட்டினைப் போன்றதொரு வீடு தனக்குத் தேவை’ என்றே யஹுதா கூறுகிறார்.

தனது கவிதைகளின் வழியே பெரும்புகழைப் பெற்ற இவர், கவிதை வாசிப்பதற்காகப் பலமுறை அமெரிக்கா சென்றுவந்திருக்கிறார். தன்னைத் தேடிவரும் இளம் கவிஞர்களுக்குத் தேவையான உதவிகளும் உத்வேகமும் அளித்து அவர்களை எழுதவைத்தவர் யஹுதா. ஆகவே, ஜெருசலேத்தில் உள்ள அவரது வீடு எப்போதும் இளைஞர்களின் கூட்டம் நிரம்பியதாக இருந்தது. 2000-ல் அவர் மரணமடைந்தபோது அவரது வீடு தேடிவந்து அஞ்சலி செலுத்த நின்றவர்களில் பெரும்பகுதியினர் இளைஞர்கள்.

ஆரம்பக்கல்வியை ஜெர்மன் மொழியில் கற்றபோதும், வாழ்நாள் முழுவதும் ஜெர்மனியப் புத்தகங்களை ஆசையாக வாசித்தபோதும் தனது கவிதைகளில் ஜெர்மனியச் சொற்கள் இடம்பெறாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டார் அமிகாய். தன் படைப்பு மொழியாக அவர் ஹீப்ரூவை மட்டுமே கொண்டிருந்தார். யூதர்களை ஜெர்மன் மோசமாக நடத்திய விதத்துக்காக, தான் ஒருபோதும் ஜெர்மன் மொழியைத் தனது படைப்பு மொழியாகப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை அவர் எடுத்தார். அது ஓர் அரசியல் நிலைப்பாடு என்று அமிகாய் கூறியிருக்கிறார்.

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்

ஐரோப்பா முழுவதும் யூதர்கள் தங்களின் வாழ்விடத்தை இழந்து துரத்தப்பட்டார்கள். பல லட்சம் பேர் நாஜி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். யூத இனஅழிப்பு அவரை வெகுவாகப் பாதித்தது. அதன் வெளிப்பாடே அவரது கவிதைகளில் யூதசமயம் முக்கிய இடம்பெறுகிறது. அதுபோலவே யூத மக்களின் வாழ்க்கைச் சிறப்புகள், வரலாறு, நம்பிக்கைகள் அவரது கவிதைகளில் திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றன. ஒருகாலத்தில் ஜெர்மனியின் வெற்றிக்காக யூதர்கள் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட்டார்கள். ஜெர்மனியைத் தனது சொந்த தேசமாக நினைத்துக் கொண்டாடினார்கள். ஆனால், நாஜி அரசும் ராணுவமும் ஈவிரக்கமின்றி யூதர்களைப் படுகொலை செய்தன. ‘ராணுவ வீரனாகப் பணியாற்றியவன் என்ற முறையில் போரின் கோரத்தை, மனித உயிர்கள் மதிப்பற்றுப் போவதை நன்றாக உணர்ந்திருக்கிறேன்’ என்கிறார் அமிகாய். ‘போர்க்களத்தில் சண்டையிடும்போது, ராணுவத்தினர் மறைவுடைகள் அணிந்து
கொள்வதைப்போலவே கவிதை எழுதும்போது நானும் எனது அடையாளங்களை மறைத்துக் கொண்டுவிடுகிறேன்’ என்றும் கூறுகிறார்.

ஜெருசலேம் நகரம் புராதனமானது. வரலாற்றின் முக்கிய மையமாகக் கருதப்படும் இந்த நகரம், மூன்று சமயங்களுக்கும் முக்கியமான கேந்திரமாக உள்ளது. இயேசுவின் கடைசி விருந்தும், சிலுவையேற்றமும், மறுஉயிர்ப்பும் இங்கே நடைபெற்றதாகக் கூறுகிறார்கள். பைபிள் நிகழ்வுகளைப் புதிய தளத்தில் புதிய கண்ணோட்டத்தில் தனது கவிதையில் அமிகாய் பயன்படுத்துகிறார். ‘பைபிள் தன் கவிதைகளுக்கு மூல ஊற்றைப்போலிருக்கிறது’ என்றொரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

‘தண்ணீரை எனக்குப் பிடிக்கும்
பாறைகளும்தான்
இப்போது பாறைகளிடமிருந்தே அதிகம்
கற்றுக்கொள்கிறேன்
மௌனத்தை, உறுதியை, எதிர்ப்பை,
நிதானத்தை’


என அவரது ஒரு கவிதையின் முதற் பகுதி தொடங்குகிறது. கிறிஸ்துவச் சமய வழிபாட்டில் தண்ணீரும் பாறையும் இரண்டு முக்கியக் குறியீடுகள். தண்ணீரால்தான் பாவநீக்கம் செய்யப்படுகிறது. பாறையின் மீது நின்றுதான் இயேசு பிரசங்கம் செய்கிறார். ஜெருசலேத்திலுள்ள ஒரு பாறையின் மீதுதான் ஆபிரகாம் தன் மகனை பலி கொடுக்க முயன்றார். கடவுள் அவர் முன்னே தோன்றி, தடுத்து ஆட்கொண்டார் என்கிறது பைபிள். ஆகவே, பாறையும் தண்ணீரும் பைபிளின் புனிதக் குறியீடுகள். அதைச் சமகால வாழ்க்கையின் குறியீடாக மாற்றுகிறார் அமிகாய்.

நானும் ஒரு டிரோஜன் குதிரையைப்போல
காதலால் நிரப்பப்பட்டிருக்கிறேன்
இரவானதும் எனக்குள் ஒளிந்திருக்கும் காதலின் வேட்கைகள்
கட்டற்று வெளியேறுகின்றன
விடிகாலையில் மீண்டும் திரும்பிவிடுகின்றன
என் இருண்ட வயிற்றுக்குள்


என்ற இன்னொரு கவிதையில், ‘டிராய்’ யுத்தத்தில் போர்வீரர்கள் ஒளிந்துகொண்டு வரும் டிரோஜன் குதிரையைக் காதலின் உருவமாக மாற்றுகிறார் அமிகாய். இரவில் கட்டற்று காதல் பீறிடுகிறது. காமமும் ஒருவகை யுத்தம்தானே!

வேறு ஒரு கவிதையில், உலகில் சரி பாதி மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்; சரிபாதி மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். இதில், நான் எந்தப் பாதியைச் சேர்ந்தவன் என்ற கேள்வியை எழுப்புகிறார். ‘ஜெருசலேம் நகரமும் நானும் குருடனும் அவன் கைக்கழியும்போல வாழ்கிறோம். எனக்கு இந்த நகரமே வழிகாட்டுகிறது. ஜெருசலேத்திலுள்ள கற்களில் நரம்புகள் ஓடுகின்றன. மனிதர்களின் வேதனையைக் கற்கள் ஏற்றுக்கொள்கின்றன. மனிதர்கள் தங்கள் துயரத்தை, வலியைக் கல்லிடம் ஒப்படைக்கிறார்கள். ஆகவே, கற்களும் சோகமயமாகக் காட்சியளிக்கின்றன. இறந்த விலங்கின் பற்கள் எனப் பாறைகள் உயர்ந்து நிற்கின்றன. ஒளிரும் சூரியனும் மேகங்களும் கால மயக்கத்தை உருவாக்குகின்றன’ என்று தனது ஜெருசலேம் நகர வாழ்வினைப் பற்றி நினைவுகூர்கிறார் அமிகாய்.

பைபிளில் இடம்பெற்றுள்ள தாவிது கோலியாத் சண்டை, சோதோம் நகர அழிவு, காயின் ஆபேல் சண்டை, கொலை, மவுன்ட் ஜியோன் குறிப்புகள் போன்றவை அமிகாயின் கவிதையிலும் இடம்பெறுகின்றன. இன்றைய மனிதனுக்குக் கிடைத்திருப்பது துண்டாடப்பட்ட வாழ்க்கையே. துயரமும் வலியும் நிராசைகளும்கொண்ட இந்த வாழ்க்கையின் ஒரே நம்பிக்கை அன்பு செலுத்துவதே. அதைத் தனது கவிதைகளில் அழுத்தமாக வலியுறுத்துகிறார் அமிகாய்.

அமிகாயின் கவிதைகளை மையமாகக்கொண்டு குறும்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதில், ‘யங் டேவிட்’ என்ற குறும்படம் சிறப்பானது. இவரது கவிதைகளுக்கு நிகரான கவிதைகளைத் தமிழில் ஆத்மநாம் எழுதியிருக்கிறார். இருவரையும் ஒன்றாக வைத்து வாசிக்கையில் ஏற்படும் அனுபவம் புதுவிதமாக இருக்கிறது.

அமிகாயின் கவிதைகளுடன் பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளையும் ஒப்பிட முடியும். மூவரும் இணையான கவிஞர்கள். ‘வாழ்வின் கனமானது பொருள்களின் கனத்தைவிடக் கூடுதலானது’ என்கிறார் கவிஞர் ரில்கே. அதன் சாட்சியம்போலவே அமிகாயின் கவிதைகள் இருக்கின்றன.

யஹுதா அமிகாய் கவிதைகள்

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்தமிழில்: சமயவேல்

மழலையர் பள்ளிக் குழந்தைகள் மேல் கடவுள் இரக்கம் கொள்ளட்டும்

ழலையர் பள்ளிக் குழந்தைகள் மேல் கடவுள் இரக்கம்கொள்ளட்டும்
அவர் பள்ளிக் குழந்தைகளிடம் இரக்கப்படுவது — மிகக் குறைவு
ஆனால், பெரியவர்கள் மேல் அவர் இரக்கப்படுவதே இல்லை.

அவர்களை அவர் கைவிட்டுவிடுகிறார்
சில வேளைகளில் அவர்கள் நான்கையும்கொண்டு தவழ வேண்டியிருக்கிறது
வறுத்தெடுக்கும் மணலில்
மருந்திட்டுத் துணி கட்டும் மருத்துவ நிலையத்திற்கு
பெருக்கெடுத்து ஓடும் ரத்தத்துடன் இருக்கிறார்கள் அவர்கள்.

ஆனால், ஒருவேளை 
உண்மையில் நேசிப்பவர்கள் மேல் அவர் இரக்கம் காட்டக்கூடும்
மற்றும் அவர்களைக் காக்கவும் கூடும்
மற்றும் அவர்களுக்கு நிழல் கொடுப்பார்  
ஒரு பொது பெஞ்சில் தூங்குபவன் மீது கவிழ்ந்திருக்கும் ஒரு மரம் போல.

ஒருவேளை நாம் அவர்களுக்காக செலவழிக்கவும் கூடும்
நமது அன்பின் கடைசிப் பைசாவையும்
நமது அம்மாவிடமிருந்து கையகப்படுத்தியது 

அவர்களது சொந்த ஆனந்தமே நம்மைக் காப்பாற்றும்படிக்கு 
இப்பொழுதும் இன்னும் வரும் நாள்களிலும்.

நான் நிலவாய் இருந்தேன்

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்னது குழந்தை மிகுந்த துயரில் இருந்தது

நான் அவனுக்கு என்ன கற்பித்தாலும் —
அன்பின் பூகோளம்
கேட்க இயலாத சில விசித்திர மொழிகள்
தூரம் காரணமாக —
எனது குழந்தை இரவில் அவனது சிறிய படுக்கையை என்னை நோக்கி ஆட்டுகிறான்.
மறந்திருத்தலைவிட அதிகம்
மறக்கடிக்கப்பட்ட அதே மொழி
நான் செய்ததை அவன் புரிந்துகொள்ளும் வரை
நான் இறந்தவனுக்குச் சமம்.

நமது அமைதியான குழந்தையுடன் நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
நீ அவனை ஒரு போர்வையைக்கொண்டு மூடு
சொர்க்கம் போல, மேகங்களின் அடுக்குகள் —
நான் நிலவாய் இருக்க முடியும்

உனது துயரமான விரல்களைக்கொண்டு நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
அவற்றுக்குக் கையுறைகள் போட்டுவிடு
மற்றும் போ வெளியே.

நான் நிலவாய் இருந்தேன்.

வெடிகுண்டின் விட்டம்

ரு வெடிகுண்டின் விட்டம் முப்பது சென்டிமீட்டர்
மற்றும் அது பாதித்த பரப்பின் விட்டம் ஏறத்தாழ ஏழு மீட்டர்
நான்கு மரணங்கள் மற்றும் பதினோரு காயங்கள்
மற்றும் இவற்றைச் சுற்றி, ஒரு பெரிய வட்டத்தில்
வலி மற்றும் காலம், சிதறடிக்கப்பட்ட இரண்டு மருத்துவமனைகள்
மற்றும் ஒரு சுடுகாடு. ஆனால் அந்த இளம்பெண்,
அவள் வந்திருந்த அவளது சொந்த நகரத்தில் புதைக்கப்பட்டாள்
அது ஒரு நூறு கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தில் இருந்தது
வட்டத்தைக் கணிசமான அளவு பெரிதாக்கியது
மற்றும் அவளது மரணத்திற்காக துயரில் இருக்கும் தனித்த மனிதன்
கடல் கடந்து ஒரு தொலைதேசத்தின் தூரத்துக் கரைகளில்
வட்டத்திற்குள் முழு உலகையும் உள்ளடக்கினான். 
அநாதைகளின் ஊளையைக்கூட நான் குறிப்பிட மாட்டேன்
அது கடவுளின் சிம்மாசனம் வரைக்கும் போகிறது மற்றும்   
அதற்கும் அப்பால், மற்றும் உருவாக்குகிறது
முடிவே இல்லாத, கடவுளே இல்லாத ஒரு வட்டம்.

ஒருமுறை அம்மா என்னிடம் கூறினார்

கவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்ம்மா ஒருமுறை என்னிடம் கூறினார்
அறையில் பூக்களுடன் உறங்க வேண்டாம் என்று
அதிலிருந்து நான் பூக்களுடன் உறங்குவதில்லை
அவர்களில்லாமல் நான் தனியே தூங்குகிறேன்.

அங்கு ஏராளமான பூக்கள் இருந்தன
ஆனால், எனக்கு ஒருபோதும் போதிய நேரம் இருந்ததில்லை
ஆனால், நான் நேசிக்கும் ஆட்கள் ஏற்கெனவே அவர்களாகவே தள்ளிப்போகிறார்கள்
எனது வாழ்க்கையிலிருந்து வெளியே, படகுகள்போல
கரையிலிருந்து வெளியே.

என் அம்மா கூறினார்
பூக்களுடன் தூங்க வேண்டாம் என்று
நீ தூங்கப் போவதில்லை
நீ தூங்கப் போவதில்லை, எனது குழந்தைப்பருவத்தின் அம்மாவே.

நான் பற்றியிருந்த மாடிப்படிக் கைப்பிடி
அவர்கள் என்னைப் பள்ளிக்கு இழுத்துச் சென்றபோது 
எரிந்ததிலிருந்து வெகுகாலம் ஆகிவிட்டது
ஆனால் என் கைகள், பற்றிக்கொண்டிருக்கின்றன,
இன்னும் பற்றிக்கொண்டிருக்கின்றன.

சாட்சிகளுக்கு அழைப்பாணை

டைசியாக நான் எப்போது தூங்கினேன்?
சாட்சிகளை வரவழைப்பதற்கான காலம் நெருங்கிவிட்டது
நான் அழுவதைக் கடைசியாகப் பார்த்த அந்த அவர்கள்
சிலர் இறந்துவிட்டனர்.
நிறைய தண்ணீர் கொண்டு நான் என் கண்களைக் கழுவுகிறேன்
மீண்டும் ஒருமுறை உலகைக் காணும்படிக்கு
ஈரமும் புண்பட்டதும் வழியாக.
நான் சாட்சிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
அண்மையில், நான் முதல் முறையாக உணர்ந்தேன்
எனது இதயத்தில் ஊசிக் குத்தல்கள்.
நான் பயப்படவில்லை
நான் கிட்டத்தட்ட பெருமைகொள்கிறேன், ஒரு சிறுவனைப்போல
அவனது அக்குள்களிலும் மற்றும் அவனது கால்களுக்கிடையிலும்
முதல் முடிகளைக் கண்டுபிடித்த அவனைப்போல.