Published:Updated:

அடுத்து என்ன? - அ.வெண்ணிலா

அடுத்து என்ன? - அ.வெண்ணிலா
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - அ.வெண்ணிலா

ராஜேந்திர சோழனின் அகப்போராட்டமும் புறப்போராட்டமும்படங்கள்: கா.முரளி

அடுத்து என்ன? - அ.வெண்ணிலா

ராஜேந்திர சோழனின் அகப்போராட்டமும் புறப்போராட்டமும்படங்கள்: கா.முரளி

Published:Updated:
அடுத்து என்ன? - அ.வெண்ணிலா
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - அ.வெண்ணிலா

சிறு வயதில் அடிக்கடி ஓர் ஏக்கம் வரும், ‘அரசர்கள் அரசாட்சி செய்த காலத்தில் வாழ்ந்திருக்கலாமே’ என்று. பல இரவுகளின் கனவுகளில் குதிரைகளின் குளம்போசை யையும் வாள் சத்தத்தையும் நுட்பமாகக் கேட்டிருக்கிறேன். குப்தர்களின் ஆட்சி, பொற்கால ஆட்சி என்று எட்டாம் வகுப்பில் படித்தபோதெல்லாம், ‘நாம் ஏன் அந்தக் காலத்தில் பிறக்காமல் போய்விட்டோம்?’ என்று வருந்தியது உண்டு. படாடோபமான அரண்மனைகளும், ஆடம்பரமான வாழ்க்கையும் என்னைத் தொந்தரவு செய்திருக்கின்றன. வரலாற்றின் யதார்த்த முகத்தைப் படித்தறியும் வரை அரசர்களின் காலம் பற்றிய பிரமிப்பு எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. எல்லாக் காலத்திலும் மக்களின் வாழ்க்கை, வலிகளும் துயரங்களும் நிரம்பியவைதான் என்ற புரிதல் வந்த பிறகும், வரலாற்றுக் கதைகள் மேல் இருக்கும் பிரமிப்பு மட்டும் இன்று வரை குறைந்தபாடில்லை.

அடுத்து என்ன? - அ.வெண்ணிலா

வரலாற்றின் ஊடே பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் கடந்த பத்தாண்டுகளாகத் துளிர்விட்டுக்கொண்டே இருந்தது. கவிதைக்குள் உழன்றுகொண்டிருந்தாலும், விரிந்து பரந்த தளத்துடன் நாவல் என்னை வசீகரித்துக்கொண்டே இருக்கிறது. இரு பெரும் யானைகளை வசக்கிச் செல்வது போன்ற பரவச அனுபவத்தைப் பெறவே வரலாற்று நாவலை எழுத முனைந்தேன். வரலாற்று நாவல்களில் வெற்றி பெறுவது கடினம். வரலாற்று நாவல்களின் மேல் தீராத ஆர்வம்கொண்ட வாசகர்கள் எப்போதுமே இருக்கிறார்கள். ஆனால், தமிழில் வெற்றி பெற்ற வரலாற்று எழுத்தாளர்களின் எண்ணிக்கை இரு கைகளுக்குள் அடங்கிவிடும்.

‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு இருக்கும் புகழுக்காகவே வாசகர்கள் இன்றும் அந்த நூலை வாங்கிச் செல்கிறார்கள். புத்தகங்களை நேசிக்கும் குடும்பங்களின் பெருமிதமாக ‘பொன்னியின் செல்வன்’ இருந்துவருகிறது. இன்று கல்கியைப்போல் ஓர் எழுத்தாளர், பொன்னியின் செல்வனைத் தொடராகவோ, புத்தகமாகவோ எழுதினால் அத்தொடர் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. தற்காலத்திய வாசகர்களுக்கு பரணி பாடும் வரலாற்றுக் கதைகள் விருப்பத்திற்குரியனவாக இல்லை. வரலாற்று நாவல் எழுதத் தொடங்கிய  என் முன்னால் இரண்டு சவால்கள் இருந்தன. வரலாற்றைச் சொல்லும் முறையிலும் பார்வையிலும் புதுமை வேண்டியிருந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் புகழுடன் கோலோச்சிக் கொண்டிருந்த பிற்கால சோழர்களின் ஆட்சிக்காலம். தலைநகரம் தஞ்சை; சோழ சாம்ராஜ்யத்தின் உச்சமென பேரரசன் ராஜராஜன்; ஆடற்கலையும் கட்டடக் கலையும் சைவமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்த நேரம்.

ராஜராஜனின் மகன் ராஜேந்திரன், தந்தைக்கு நிகரான ஆற்றலும் பெருமையும் கொண்டவன்; தந்தை பேரரசனாக இருந்த காலத்தில், போர்க்களங்களில் படைத் தளபதியாக நின்று சோழ சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவன்; எதிரிகளை அவரவர் எல்லைகளோடு நிற்கவைத்தவன்; சோழ சாம்ராஜ்யத்திலேயே வீரத்திற்குப் பெயர்பெற்றவன். ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன்தான் அரசன். வேறு ஆண் வாரிசுகள் இல்லாத நிலையில் போட்டிகளும் இல்லை. ஆனாலும், ராஜேந்திரனுக்கு 50 வயது வரை இளவரசனாகப் பட்டம் சூட்டப்படவில்லை. காலம் தாழ்த்தி, ‘இளவரசு’ பட்டம் சூட்டப்பட்டதற்கான காரணங்கள் வரலாற்றில் இதுவரை கண்டறியப் படவில்லை. ராஜராஜனின் மறைவிற்கு இரண்டாண்டுகளுக்கு முன்புதான் இளவரசனாகப் பட்டம் சூட்டப்படுகிறான் ராஜேந்திரன்.

ராஜராஜனின் காலத்தில், தஞ்சை புகழ்மிகு தலைநகரமாக இருக்கிறது. சோழர்களின் கலைப் பெருமையாக ராஜராஜேச்சுவரம் பெரியகோயில் தஞ்சையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. புகழின் உச்சத்தில் தஞ்சை விளங்கிய நேரத்தில், ராஜேந்திரன் அரசனான பிறகு, தலைநகரத்தை தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றுகிறான். கங்கை வெற்றியைக் கொண்டாட அந்நகரம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், தலைநகரத்தை மாற்றுவதற்குப் போதுமான வலுவான காரணங்கள் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - அ.வெண்ணிலா

வரலாற்றில் விடை தெரியாத இந்த இருபெரும் நிகழ்வுகளின் மர்மத்திலிருந்தே நாவல் தொடங்குகிறது. சொந்த பராக்கிரமத்தால் ராஜேந்திரன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் புகழ்பெற்றாலும், ‘தந்தையைப்போல்’ என்ற ஒப்பீட்டை அவனால் விலக்க முடியவில்லை. தந்தையின் நிழலில் தன்னுடைய அடையாளம் தொலைந்துபோகும் துயரத்தில் உழல்கிறான். வெற்றிகளை அள்ளி வருகிறான். பட்டங்கள் தந்தைக்குச் செல்கின்றன. மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கிறான். நற்பெயர் தந்தைக்கு. எல்லா செயலுக்கும் ராஜராஜனைப் போலாகுமா என்றோ, ராஜராஜனின் மகனல்லவா என்ற வார்த்தைகளையோ எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம். ராஜராஜன் என்ற சூரியனுக்கடியில் கறு நிழலென மறைந்துகொள்கின்றது ராஜேந்திரனின் தன்னொளி. மிகப் பெரும் வெற்றியாளன்தான். ஆனால், எப்போதும் தோல்வியின் கசப்புடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜேந்திரனின் அக உலகப் போராட்டமே நாவலின் மையம்.

தந்தையை விஞ்சுவதற்காக மட்டுமல்லாமல், தன் தனித்துவத்தை மீட்டெடுக்கவும் ராஜேந்திரன் முன்னெடுக்கும் முயற்சிகள் நாவலின் அத்தியாயங்களாக விரிகின்றன. தான் பிறந்து வளர்ந்த ‘பழையாறை’யும் தலைநகரமான தஞ்சையையும் விட்டு, வேறிடம் தேடி கால்கள் நிலைகொள்ளா மல் அலைகிறான். தேசமே அவனுக்குச் சொந்தமென்றாலும், தந்தையின் நிழல் படாத இடம் தேடி தேசத்திற்குள்ளேயே தவிக்கிறான். சோழ தேசத்திற்குள்ளேயே வறண்ட நிலமொன்றைத் தேர்வுசெய்து புதிதாக ஒரு நகரத்தை உருவாக்குகிறான். தஞ்சை பெரியகோயிலைப்போல் புதிதாக ஒரு கோயில் கட்டுகிறான். அப்பகுதியை வளமாக்க மிகப் பெரிய ஏரி வெட்டுகிறான். தொலை தேசங்களுக்குப் பெரும் படையுடன் சென்று வெற்றிக்கொடி நாட்டித் திரும்புகிறான். எல்லாம் நிறைவாக இருந்த தேசத்தில் அரசனான ராஜேந்திரன் மட்டும் நிறைவற்ற மனத்துடன் போராடுகிறான். தந்தையின் நிழலிலிருந்து மீள நினைக்கும் ராஜேந்திரன், தன் முயற்சிகளில் வெற்றி பெற்றானா என்பதே நாவல்.

ராஜேந்திரனின் இந்த அகப் போராட்டத்திலிருந்து அவனை மீட்டெடுக்க அவனுடன் நிற்பவர்கள் அவனின் தாய் வானவன் மாதேவி, சகோதரி குந்தவை, மனைவியருள் ஒருத்தியான வீரமா தேவி, நடன மங்கை பரவை நங்கை, குரு சர்வ சிவபண்டிதர், வீரமா தேவியின் சகோதரன் மூவேந்த வேளான் ஆகியோர். புரிதலுடன்கூடிய உறவுகளின் கைப்பற்றி நடக்கும் ராஜேந்திரனின் மீண்டெழும் போராட்டங்களைப் பேசுகிறது நாவல். அரண்மனை என்றாலே சூழ்ச்சி; ஆட்சி என்றாலே சதி என்ற வழக்கமான பரபரப்புப் பின்னணிகள் இல்லாமல், நிதானமான கதையோட்டத்தில் நாவல் நகர்கிறது.

வரலாற்றைச் சொல்லும்போது, கதையின் சுவாரஸ்யம்போலவே, பின்புலமும் சுவாரஸ்யமாக இருக்கவேண்டும். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய புவியியலை, மொழியை, மக்களின் வாழ்முறைகளைக் கதைக்குள் கொண்டுவரவேண்டிய சவாலும் எனக்கிருந்தது. எட்டாண்டுகளாகத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிப் பகுதிக்குள் பயணித்தேன். மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக சோழர்களின் வரலாற்றைப் படித்தேன். அறியப்பட்ட சோழர்களின் வரலாற்றைக் கடந்து, நேரடியாக அக்காலத்
தின் சொற்கள் உள்ள கல்வெட்டுகள், செப்பேடுகளில் இருந்து, சோழர் காலத்தில் வழக்கத்திலிருந்த சொற்களை நாவலுக்குள் கொண்டுவந்துள்ளேன். கடந்து சென்றுள்ள 1000 ஆண்டுகளில் நிறைய சொற்கள் பொருள் மாறியிருக்கின்றன. குறிப்பாக ஓர் உதாரணம், வேலைக்காரப் பெண்கள்தான் சோழர்கள் காலத்தில் ‘பெண்டாட்டி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். திருவமுதிடும் பெண்டாட்டி என்றால், சமையல் செய்யும் பெண் என்று பொருள். ஆனால், இன்றோ பெண்டாட்டி என்ற சொல், மனைவியை மட்டும் குறிக்கிறது. மனைவிகள் வேலைக்காரிகளைப்போல் மாறிப்போனதின் சமூகப் பரிமாணத்தினை இச்சொல் சுட்டுவதாகக்கூடச் சொல்லலாம். இன்று வரை வழக்கத்திலிருக்கும் இன்னோர் அழகான சொல், ‘இலைச் செப்பு’. பலர் வெற்றிலைச் செல்லம் என்கிறார்கள்.

 அரசர்களையும் அந்தப்புரத்தையும் அமைச்சரவையையும் போர்க்களத்தையும் மட்டும் சுற்றிச் சுற்றி வராமல் நாவலில் சாதாரண மக்களும் வந்திருக்கிறார்கள். 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்முடைய வாழ்வில் கோயில்களுக்கு முக்கிய இடமிருந்தது. ஒரு பண்பாட்டு நிறுவனமாகப் பல்வேறு பரிமாணங்களுடன் கோயில் மக்களின் வாழ்வில் இருந்தது. சோழர்கள் காலத்தில் தில்லைக் கோயிலுக்கு இருந்த இடம் அபரிமிதமானது. என்னுடைய நாவலில் தில்லைக் கோயில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே வருகிறது. கோயில்கள் அரசர்களின் பெருமையை நிலைநாட்ட கட்டப்படுகின்றன. ஆனால், யதார்த்தத்தில் கோயில்கள் அதிகாரமும் அரசியலும் நிரம்பிய இடமாக எவ்வாறு மாறிப்போகின்றன, வழிபாட்டில் தமிழின் இடத்தை வடமொழி எவ்வாறு எடுத்துக்கொள்கிறது என்ற நுண்ணரசியல்களையும் எழுதிப் பார்த்துள்ளேன்.

சோழர் காலக் கோயில்கள் என்றாலே நினைவுக்கு வருவது தேவரடியார்களும் அவர்களின் கலைகளும்தானே. இறைவனின் சேவைக்காக நேர்ந்துவிடும் வழக்கம் வரலாற்றுக் காலம்தொட்டு வழக்கத்தில் இருந்தாலும், சோழர் காலத்தில்தான் நிறுவனமயமானது. கலை மற்றும் கோயில் பணிகளுக்காகப் பெண்கள் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்டார்கள். தேவதாசிப் பெண்களின் வாழ்க்கை, யதார்த்தத்தில் எவ்விதமிருந்தது என கோயிலுடன் இணைந்த ஒரு வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக நீண்ட காலத்திற்கு நிலைத்திருந்து வலிமையான ஆட்சியைக் கொடுத்தது சோழப் பேரரசுதான். புகழும் பெருமைகளும்கொண்டிருந்த அப்பேரரசே இன்றைக்குள்ள சமூகத்தின் பாகுபாடுகளுக்கு வழிவகுத்ததாகக் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன. சாதிய வேறுபாடுகள் தோன்றிய காலம், தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து சம்ஸ்கிருதத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்த காலம், பார்ப்பனர்களுக்கு மட்டும் நிலதானங்கள் வழங்கி அவர்களை நிலவுடைமையாளர்களாக்கிய காலம் என நீளும் குற்றச்சாட்டுகளின் நிழல் பிடித்து, சோழர்கள் காலத்தின் வாழ்வியலுக்குள் நடந்து பார்த்திருக்கிறேன்.

பெயர் சூட்டப்படாத நாவலை எழுதி முடிக்கும் தறுவாயில் தோன்றிய உண்மை இதுதான்: மனித மனம் எல்லாக் காலத்திலும் ஒன்றுபோலத்தான் இருந்திருக்கிறது, விதிகளையும் விலக்குகளையும் உருவாக்கிக்கொண்டு.