Published:Updated:

என்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்
என்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்

என்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்

பிரீமியம் ஸ்டோரி

2017 முழுக்க எனக்கு ‘கூகுள் வருட’மாக அமைந்தது. ஒவ்வொரு வார்த்தையாக கூகுளில் தேடினேன். என்னுடைய தேடலில் நான் எழுதிய கட்டுரை ஒன்றுதான் வந்தது. ‘அட,  இங்கேயும் அப்படியா?’ என்று கம்ப்யூட்டரை மூடிவைத்தேன்.

என்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் மூளையில் கரு எப்படி உதிக்கிறது என்பதுதான் கேள்வி. பல காரணங்களைச் சொல்லலாம். ஒரு சம்பவமாக இருக்கலாம்; வார்த்தையாக இருக்கலாம் அல்லது பழைய நினைவு அல்லது கனவு என்றும் சொல்லலாம். ரயிலில் விழுந்து இறந்த பெண்ணைப் பார்த்தபோதுதான் டால்ஸ்டாயின் மிகச் சிறந்த நாவலான அன்னா கரீனினா  அவர் மூளையில் தோன்றியது என்று சொல்வார்கள். அந்தச் சம்பவம் ஒரு திறப்புதான். நாவல் ஏற்கெனவே அவர் மனதில் உட்கார்ந்திருந்தது.

நான் இதே கேள்வியைப் பல வருடங்களுக்கு முன்னர் ஆங்கில எழுத்தாளரான டேவிட் செடாரிசிடம் கேட்டிருக்கிறேன். “ஒன்றுமே எழுத இல்லாதபோது என்ன செய்வீர்கள்?” அவர் சொன்னார், “நான் தினமும் எழுதும் பழைய டைரிக் குறிப்புகளைப் படிப்பேன். ஏதாவது தோன்றும்”. சமீபத்தில் அவருடைய டைரிக் குறிப்புகளே ‘Theft by Finding’ என்ற பெயரில் நூலாக வெளியாகியிருக்கிறது.  ஒருவருடைய வீட்டில் நடப்பதை ரகசியமாக எட்டிப்பார்ப்பதுபோல அந்தப் புத்தகமும்  சுவையாகத்தான் இருக்கிறது.

இன்று தமிழில் பல லட்சம் வார்த்தைகளைத் தாண்டி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “மிகப் பெரிய எழுத்தாளர்களுக்கெல்லாம் ‘எழுத்துத் தடங்கல்’ ஏற்பட்டிருக்கிறது. ஜெயமோகனுக்கு அப்படி நேர்ந்திருக்கிறதா?” என்றபோது, அவர் சொன்னார், “நான்  தடங்கலால் பல சமயம் கஷ்டப்பட்டிருக்கிறேன். அதைக் கடந்துபோக ஒரு வழியுண்டு. கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்ப அடிப்பேன். ஒரு பக்கம் தாண்டியதும் ஏதாவது தோன்றும். அதைத் தொடர்ந்து எழுதுவேன். மூன்றாவது பக்கம் வந்ததும் கதை தன்னைத் தானாகவே எழுதத் தொடங்கிவிடும். நான் தள்ளி நின்று பார்ப்பேன். கதை முடிந்ததும் முதல் இரண்டு பக்கங்களையும் நீக்கிவிடுவேன்.”

னுக் அருட்பிரகாசம் என்ற இளைஞர் எழுதிய ‘The Story of a Brief Marriage’ புத்தகத்தைப் படித்தேன். இவர் இலங்கைக்காரர். அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக்கொண்டி
ருக்கும் மாணவர். இவருடைய 208 பக்க நாவல் பற்றி பத்திரிகைகள் நிறைய எழுதின. தெற்கு ஆசிய இலக்கிய நடுவம் இந்த நூலுக்காக இவருக்கு 25,000 டொலர் பரிசு வழங்கியது.  ‘The Wall Street Journal’ ‘பத்திரிகை 2016-ல் வெளிவந்த மகத்தான பத்து நாவல்களில் இதுவும் ஒன்று’ என எழுதியிருக்கிறது.

ஈழப்போரின் கடைசி நாட்களை இது விவரிக்கிறது. ஒரு கிழவர், தன் மகளை என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிய  நேரம், ஓர் இளைஞனை அணுகி தன் மகளை மணமுடிக்கும்படி கேட்கிறார். அவனும் சம்மதிக்கிறான். ஒருநாள் மட்டுமே நீடிக்கும் அந்தத் திருமணத்தைப் பற்றியதுதான் கதை. இந்த நாவலை எழுதியபோது அனுக்கின் வயது 19. போர் நடந்த நாள்களில் இவர் அங்கே இல்லை; ஒன்றையுமே நேரில் பார்த்தது கிடையாது.  “பத்திரிகைத் துணுக்குகள், டி.வி செய்திகள், போரில் தப்பியவர்களின் நேர்காணல்கள் ஆகியவற்றை வைத்து புனைந்த நாவல்” என்று சந்தித்தபோது சொன்னார்.

ப்படி, எப்போது மனதில் சிந்தனை உருவாகும் என்பதைச் சொல்லவே முடியாது. ஒரு சின்னப் பொறிதான் கதையை ஆரம்பித்திருக்கும். ஆனால், கதை எழுதி முடிந்த பின்னர் அந்தப் பொறி, கதையின் உள்ளே மறைந்துபோன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

என்னைவிட்டுத் தப்புவது - அ.முத்துலிங்கம்

30 வருடத்துக்கு முந்திய‑ ஆப்பிரிக்க அனுபவம் ஒன்று திடீரென்று நினைவுக்குவந்தது. இத்தனை வருடமும் அது எங்கேயிருந்தது? ‘பருவத்தால் அன்றிப் பழா’ என்னும் அவ்வையின் வாக்குபோல அது அதற்கு ஒரு காலம் உண்டு. இந்தக் கதைக்குக் கருவாக அமைந்தது ஒரு சிறுவனுடைய வசனம்தான். அந்தப் பையனுடைய அம்மா கிறிஸ்தவர்; அப்பா முஸ்லிம். பையனுக்கு 5 வயது நடந்தபோது அப்பா இறந்துபோனார். அவனுடைய தாயார் அவனை வளர்க்கச் சிரமப்பட்டார். வீடு வீடாகப் போய் வீடுகளைக் கூட்டிச் சுத்தமாக்கினார். நெடுநேரம் முழங்காலில் உட்கார்ந்து நிலத்தைத் துடைத்தார். இரவுகளில் கூடை பின்னி விற்றுக் காசு சேர்த்து மகனைப் படிக்கவைத்தார். ஒருநாள் பையன், தாயார் படும் கஷ்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு கேள்வி கேட்டான், “என்னுடைய அப்பா முஸ்லிம். அவர் இன்னும் மூன்று பெண்களை மணமுடித்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யவில்லை? செய்திருந்தால் எனக்கு நாலு அம்மாமார் கிடைத்திருப்பார்கள். என்னை நாலு பேர் வளர்த்திருப்பார்கள். நீ இத்தனை கஷ்டப்படவே தேவையில்லை” இந்த வசனம்தான் முக்கியம்; கதையின் அடிப்படை. கதையின் தலைப்பு ‘சின்ன ஏ, பெரிய ஏ.’ அந்தச் சிறுகதை வெளிவந்ததும் நிறைய பாராட்டு கிடைத்தது. ஆனால், பையன் சொல்லும் வசனம் அந்தக் கதையில் எங்கோ புதைந்துபோனது. அது பற்றி ஒருவருமே பேசவில்லை.

னக்குக் கனவு வருவது அபூர்வம். சிலருக்கு முழுச் சிறுகதையும் கனவிலேயே வந்துவிடும். வண்ணதாசன் அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி. சமீபத்தில் கனடாவுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய சாதனை விருதுபெற வந்திருந்தார். அவர் ஆறு நாள்கள் தங்கினார். அவர் தங்கியிருந்த நாள்களில் அவருடைய மெய்க்கடிகாரமும் கைக்கடிகாரமும் ஒன்றுடன் ஒன்று பேசவில்லை. படுக்கும் நேரத்தில் விழித்திருந்தார். விழித்திருக்கும் நேரத்தில் கனவு கண்டார். இதுதான் அவர் சொன்ன கனவு.

‘ஒரு நிகழ்ச்சி தொடங்கப்போகிறது. நடிகர் நாசர்தான் அதை நடத்துகிறார். நான் இருக்கும் வரிசைக்கு வந்து, நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒரு புறாவைப் பறக்கவிட வேண்டும் என என்னைக் கேட்டுக்கொள்கிறார். இவ்வளவு பேர் இருக்க என்னை ஏன் கேட்கிறார் என நினைத்தபடியே எழுகிறேன். வேட்டியும் ஜிப்பாவும் அணிந்திருக்கிறேன். நாசர் என்னைத் துரிதப்படுத்தி, புறாவைக் கைகளில் தருகிறார். புறா சிறியது; ஒரு மாவடுபோல என் கைக்குள் அது வெதுவெதுப்பாக இருக்கிறது’. இப்படியே அவருடைய கனவு நீள்கிறது. ஓர் எழுத்தாளருக்குக் கனவே சிறுகதை உருவத்தில் வெளிப்படுவது எத்தனை வசதி. மரம் ஒன்று, நாற்காலியும் மேசையுமாக காய்ப்பதுபோல.

நூறு விதைகள் விழுந்தால் ஒன்றிரண்டுதான் முளைக்கும். கரு, கதையாவதும் அப்படித்தான். சில சம்பவங்கள் அருமையான கதையாகக்கூடிய சாத்தியங்களோடு இருக்கும். ஆனால், அவை கதையாக மாறாமலேயே மறைந்துவிடும்.  என்னுடைய நண்பர் ஒருவர் விமானி. ஒருமுறை பைலட் அறைக்குள் விமானியுடன் அமர்ந்து பிரயாணப்படுகிறேன். இரண்டு விமான ஓட்டிகள் விமானத்தை ஓட்டுகிறார்கள். ஒருவர் என் நண்பர், நான் தோளுக்கு மேல் பைலட் அணிவதுபோல  சீட் பெல்டைக் கட்டி நண்பருக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கிறேன். முன்னுக்கு முகப்புக் கண்ணாடியில் நூறுவிதமான பல்புகள் எரிவதும் அணைவதுமாக இருக்கின்றன. விமானம் அபிட்ஜான் நகரை நோக்கிப் பறக்கிறது. நண்பர் சொல்கிறார்,   “இடதுபக்கம் விமானதளம் இப்போது தெரியும்.”

மற்ற விமானி சொல்கிறார், “இல்லையே... வலதுபக்கம் என்று கருவி சொல்கிறது.”

“அப்படியா?” இதே பக்கம்தான். இன்னும் சிறிது நேரத்தில் உண்மை புரியும்.”

என் நெஞ்சு படபடவென்று அடிக்கிறது. விமானம் வழிதவறிவிட்டது என்றே நினைக்கிறேன். ஆனால், இரண்டு விமானிகளும் நிலவில் அமர்ந்து பேசுவதுபோல சாதாரணமாகப் பேசுகிறார்கள். இது நடந்து 40 வருடம் இருக்கும். இந்தச் சம்பவம் இன்னும்  சிறுகதையாக மாறவே இல்லை.

சில சம்பவங்கள் ஆகச் சமீபத்தில் இருப்பதால் அவை கண்ணுக்குத் தெரிவதில்லை. ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவைச் சந்திக்கப் போயிருந்தேன்.  அவர் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய அம்மா இறந்த பின்னர், அவர் பாதுகாத்துவந்த ஒரு சின்ன மரப்பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். அதற்குள் சுஜாதாவின் அம்மா வேறு ஒருவருக்கும் தெரியாமல் பணம் சேர்த்துவைத்திருந்தார். சுஜாதாவின் அப்பா அழத்தொடங்கினார். “நான் ஒரு குறையும் வைத்தது கிடையாது. எதற்காக இவ்வளவு பணம் எனக்குத் தெரியாமல் சேர்த்தார். நான் அவரைக் கைவிட்டுவிடுவேன் என நினைத்தாரோ?” எனப் புலம்பினார். அவர் மனைவி அவருக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே நினைத்தார். இதைச் சுஜாதா என்னிடம் சொன்னபோது, இதற்குள் அருமையான சிறுகதை இருப்பது எனக்கு உடனேயே புலப்பட்டது. அந்தச் சம்பவத்தை சுஜாதா சிறுகதையாக எழுதுவார் என நான்கு வருடம் காத்திருந்தேன். அவர் எழுதவே இல்லை. பின்னர் நானே அதை ஒரு சிறுகதையாக எழுதி வெளியிட்டேன்.

சிலருக்கு சம்பவங்கள் தேவையாக இருக்காது. அவர்களுக்கு இயற்கையாகவே கற்பனை கொட்டிக்கொண்டிருக்கும். சமீபத்தில் நான் வை.மு.கோதைநாயகி பற்றி படித்தேன். 58  வயது மட்டும் வாழ்ந்து  1960-ம் ஆண்டுதான் இறந்துபோனார். இவர் 115 நாவல்கள் எழுதினார். ஐந்து வயதில் மணமுடித்த இவருக்கு எழுத வாசிக்க  வராது. இவர் சொல்லச் சொல்ல இவருடைய சிநேகிதி இவருடைய முதல் நாடகமான  ‘இந்திரமோகனாவை’ எழுதினார். அதற்குக்  கிடைத்த வரவேற்பைப் பார்த்து அதிசயித்து இவரே எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு நாவல்களை எழுதித் தள்ளினார். ஒரு சம்பவத்துக்கோ, வார்த்தைக்கோ கனவுக்கோ இவர் காத்திருக்கவில்லை. கற்பனை இவருக்கு வெள்ளம்போல தானாகவே வந்தது.

ங்கிலத்தில் ஓர் எழுத்தாளர் இருந்தார். அவர் ஒரு விபத்தினால் எழுத்தாளர் ஆனார். அவருடைய பெயர் மார்கிரெட் மிச்செல். ஒருமுறை கால் முறிந்து படுத்தப் படுக்கையாக இருந்தபோது, அவருடைய கணவர் தினமும் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைக் கட்டுக்கட்டாக அள்ளிக்கொண்டு வருவார். மார்கிரெட் அவற்றைப் படித்துவிட்டு ‘இதன் முடிவு சரியில்லை’, ‘எழுத்து நடை மோசம்’,  ‘முழுக்க முழுக்க அபத்தம்’ இப்படி ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார். கணவன் ஒருநாள் சொன்னார், “உனக்குத்தான் ஒரு புத்தகமும் பிடிக்கவில்லையே. நீயே உனக்குப் பிடிக்கும் விதமாக ஒரு புது புத்தகத்தை எழுதுவதுதானே.” அப்படிப் பிறந்ததுதான்  ‘Gone with the Wind’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற நாவல். இந்த நாவலுக்குப் பல விருதுகள் கிடைத்தன. பின்னர் திரைப்படமாகவும் வந்தது. மார்கிரெட் கால் உடைந்து படுக்கையில் கிடந்திராவிட்டால் இப்படியான ஓர் இலக்கியம் உலகத்துக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

ன்று காலை பேராசிரியர் சுகிர்தராஜாவின் கட்டுரை ஒன்றைப் படித்தேன். உடனேயே அவரை அழைக்க வேண்டும் எனத் தோன்றியது. ஏன் என்றால், அந்தக் கட்டுரை தொடங்கிய விதம் என்னைக் கவர்ந்தது. லண்டனில் வசிக்கும் அவரை அழைத்து கட்டுரையின் தொடக்க வரியைப் பற்றிச் சொன்னேன். எனக்கு மிகவும் பிடித்த டென்மார்க் எழுத்தாளர் ஐசாக் டெனிசனின் ஆரம்ப வரிபோல இருக்கிறதென்று பாராட்டினேன். சுகிர்தராஜாவுடைய தொடக்க வரி இப்படிப் போனது, ‘நான் கொஞ்ச நாள் ஒரு கார் வைத்திருந்தேன்.’ இறுதியில், அந்தக் கட்டுரையை எழுதுவதற்கான பொறி அவர் மூளையில் எப்படித் தோன்றியது என்று கேட்டேன். அவர் சிரித்தார்,

“சொன்னால் நம்பமாட்டீர்கள்” என்றார்.

“பரவாயில்லை, சொல்லுங்கள்.”

“நீங்கள் எழுதிய ஊபர் கட்டுரையைப் படித்தபோது கிடைத்தது” என்றார்.

நான் டெலிபோனை வைத்தேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு