Published:Updated:

வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்
வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்

என். ஸ்ரீராம் கதைகள் சித்திரிக்கும் புனைவுலகுபடங்கள் : ப.சரவணக்குமார்

பிரீமியம் ஸ்டோரி

மிழக நிலவெளியெங்கும் புனைகதைகள் காலங்காலமாக மிதக்கின்றன. எது புனைவு, எது நிஜம் என்ற கேள்விகளுக்கு அப்பால் சொல் விளையாட்டுத் தொடர்கிறது. ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னரும் ஒரு கதை பொதிந்திருக்கிறது. அன்றாட அரசியலும் கதைகளும் பிரிக்க இயலாதவாறு பிணைந்துள்ளன. சூழலியல் நாசத்திற்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்களை அநியாயமாகக் கொன்றுவிட்டு, சமூகவிரோதி, தீவிரவாதி, தேசவிரோதி, எனத் தமிழக அரசு புனைந்திடும் கதைகளுக்குக் கணக்கேது? நவீன வாழ்க்கையில் காட்சி ஊடகங்கள் காட்சிப்படுத்துகிற காட்சிகளுக்குப் பின்னர் அளவற்ற கதைகள் ஒளிந்திருக்கின்றன. எதுவும் நடப்பதற்கான சாத்தியங்கள் நிரம்பிய வாழ்க்கையில் மனித இருப்பானது, கதைகளால் ததும்பி வழிகிறது. கதை என்பது மொழியின் அலகிலா விளையாட்டு. மௌனமும் பேச்சும் ஒன்றிணைகிற இடத்தில் பாவனையுடன் வெளிப்படுகிற கதைகள் புனைவின் மொழியால் காலத்தைப் பதிவாக்கிட முயலுகின்றன. பேச்சு மொழி X எழுத்து மொழி என இருவேறு நிலைகளில் புனைவுகளைக் கட்டமைத்திடும்போது, இலக்கியப் பிரதி வடிவெடுக்கிறது. குறிப்பாக நாட்டார் மரபு சார்ந்த நிலையில் உருவாக்கப்படுகிற புனைவுகள், காத்திரமான அரசியல் பிரதிகளாக வடிவெடுக்கின்றன. இதுவரை அறியப்பட்ட உலகிற்கு மாற்றாகக் கிராமியப் பின்புலத்தில் வெளிப்படுகிற கதைகள், ஒருவகையில் பண்பாட்டு அடையாளத்தை மறுதலிக்கின்றன. பொதுப்புத்தியில் உறைந்திருக்கிற கருத்துகளுக்கு மாற்றாகப் புதிய வகைப்பட்ட பேச்சுகள் உருவாவதற்கான சாத்தியமான சூழலில் என்.ஸ்ரீராமின் கதைகளை அணுக வேண்டியுள்ளது. 90-களின் பிற்பகுதியில் புனைகதைகளை எழுதத் தொடங்கிய ஸ்ரீராமின் கதைத் தளமானது, கொங்கு வட்டாரம் சார்ந்து பெரிதும் விரிந்துள்ளது. தாராபுரம் என்ற நிலவெளியில் வாழ்ந்திடும் மக்களின் கதைகளை முன்னிறுத்துகிற எழுத்துகள், வாழ்வின் துயரங்களைப் பேசுகின்றன. சில கதைகள் பெருநகரத்து வெக்கையில் வதங்கிடும் இளைஞர்களின் அவலங்களைப் பதிவாக்கியுள்ளன.

வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்

கதை என்பது மொழிகளால் ஆன குறியீடு. புறவுலகைப் புரிந்திட மனிதனுக்கு எப்போதும் கதைகள் உதவுகின்றன. அமானுட ஆற்றல் தொடங்கி, இயற்கையின் பிரமாண்டத்தை விளங்கிடக் கதைகளின் வழியான முயற்சிகள், சங்க இலக்கியம் தொடங்கி இன்றளவும் தொடர்கின்றன. இன்னொருபுறம் பயம், நாடோடித்தனம், கொண்டாட்டம், அற்பத்தனம், உன்னதம், அபத்தம், மகிழ்ச்சி எனப் பல்வேறு நிலைகளில் புனைகதைகள், சூழலை அடையாளப்படுத்துகின்றன. தொன்மம், புராணம் போன்ற பழங்கதைகள் ஒருவகையில் நாட்டார் கதைகளுடன் தொடர்புடையன. வாழ்வின் கணக்கற்ற சாத்தியப்பாடுகளை முன்னிறுத்திப் பேச்சை உருவாக்குகிற வல்லமையுடைய கதைகள் வெறும் புனைவுகள் மட்டுமல்ல. ஸ்ரீராமின் பெரும்பாலான கதைகள் எளிய கிராமத்து மக்களின் வாழ்க்கையைச் சித்திரித்தாலும், அவை வாழ்க்கை குறித்து எழுப்புகிற கேள்விகள் ஆழமானவை. புனைவை எழுதுகிறபோது, ஸ்ரீராம் தான் பிறந்து வளர்ந்த தாராபுரம் மண்ணின் இருப்பையும், தான் சார்ந்த இனக்குழு வாழ்க்கையையும் தொன்மத்தையும் பண்பாட்டு நிகழ்வுகளையும் வாய்மொழி வரலாற்றையும் கவனப்படுத்தியுள்ளார். கதைசொல்லி என்ற நிலையிலிருந்து விலகி, தன்னிலை அற்ற சூழலில் ஸ்ரீராமின் கதைமொழியானது, மற்றமையாக மாறியுள்ளது.

கிராமத்து நிலம் சார்ந்த எழுத்தினைப் பதிவாக்குகிற ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் எப்போதும் மண்ணுடன் நெருக்கமாக இருக்கின்றன. தமிழகக் கிராமம் என்பது கள்ளங்கபடமற்றது, வெளிப்படையானது, புனிதமானது, எளிமையானது என இதுவரை பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது, சரியல்ல. தோப்புகளும் துரவுகளும் நிரம்பிய நிலவெளியில் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு அடுக்குகளில் உறைந்திருக்கிற விநோதங்களும் மர்மங்களும் நிரம்பித் ததும்புகின்றன. யதார்த்தத்தில் கிராமத்து மனிதர்களும் நடப்பு வாழ்க்கையும் சொல்லாடல்களும் ஒரு வரையறைக்குள் அடங்காதவை. இதனால்தான் ஸ்ரீராமின் கதைசொல்லல் முடிவிலியாக நீள்கிறது. இந்த எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்னைகள், ஏன் இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியுடன் ஸ்ரீராமின் கதைகள் வாசிப்பின் வழியாக உருவாக்குகிற பிரதிகள் கவனத்திற்குரியன.

ஸ்ரீராமின் கதைகள், கொங்கு மண்ணின் இருப்பினைப் பதிவாக்கியுள்ளதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. தாராபுரம் வட்டாரம் சார்ந்த கூர்மையான அவதானிப்பு மூலம் அவருடைய எழுத்து உருவாக்கியுள்ளதை, சமகாலப் பண்பாட்டின் கூறுகள் என்று சொல்ல முடியும். நிலம் சார்ந்த படைப்பு என்பது சங்க காலத்தில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வொரு நிலத்துக்கும் என உருவாகியிருக்கும் தனிப்பட்ட கூறுகள், அந்த நிலத்தில் வாழ்கிற மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களின் இருப்பினையும் தீர்மானிக்கின்றன. வானம் பார்த்த பூமிக்கும் மழைக்குமான உறவு அறுபடுகையில், அன்றாட வாழ்க்கையில் மதிப்பீடுகளின் சரிவு தொடங்குவதை ஸ்ரீராமின் கதைகள் முன்னிறுத்துவது, இயற்கை சார்ந்த தேடலாகும்.

ஸ்ரீராமின் தொடக்க காலக் கதைகள் எளிய விவரணைகள் மூலம் கிராமத்துப் பின்புலத்தில் விரிந்துள்ளன. பிந்தைய கதைகள், வாழ்க்கைக்கும் கிராமத்து மனிதர்களுக்கும் இடையிலான உறவின் வெக்கையை அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. நிலம், வேளாண்மை, மழை என்ற மூன்று சொற்களும் நிலத்துடன் மல்லுக்கட்டுகிற விவசாயின் வாழ்வில் முதன்மையிடம் வகிக்கின்றன. அன்றாடம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உணவு உற்பத்தியில் ஈடுபடுகிற விவசாயிக்கு நாளை என்பது மற்றுமொரு நாளைதான். வேறு வழி எதுவும் அறியாத சூழலில் மண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ள தனது இருப்பு குறித்த பிரக்ஞை எதுவுமற்ற கிராமத்தினர் படுகிற பாடுகள், அளவற்றவை. மழை பொழியாமல், போதிய நீர் இல்லாமல் சாவியாகிற பயிர்கள் ஒருபுறம் எனில், மழை கொட்டித் தீர்த்து, நாசமடையும் பயிர்கள் இன்னொருபுறம் என விவசாயின் இயற்கையுடனான சூதாட்டம் தொடர்கிறது. அடுத்த வருடம் எல்லாம் சரியாகும், விளைச்சல் அமோகமாகும் என்ற நம்பிக்கை, பெரும்பாலான விவசாயிகளின் ஜீனில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மீண்டும் மீண்டும் நம்பிக்கை பத்திரத்தைப் புதுப்பிக்கிற விவசாயியைத் தள்ளி நின்று அவதானிக்கிற கதைசொல்லியான ஸ்ரீராமின் ஆதங்கம், மனவேதனைதான் கதையாகியுள்ளனவா? யோசிக்க வேண்டியுள்ளது.

ஸ்ரீராமின் பெரும்பாலான கதைமாந்தர்கள், வாசகர்களுடைய கூட்டுக் கற்பனையில் ஏதோ ஒருவகையில் நிஜமான மனிதர்களாக மாறிவிடுகின்றனர். ஏனெனில், பல்லாண்டுகளாக இத்தகைய மனிதர்கள்மீது மனித உணர்ச்சிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் அளவற்ற புனைவுகளில் உணர்ச்சிப் பெருக்கில் திளைக்கிறோம். வாசகர்களை இத்தகைய கதைமாந்தர்களுடன் மாந்தராக ஒருவிதமான மயக்கத்தில் வாழச்செய்தல்தான் புனவிலக்கியத்தின் வல்லமை. பொதுவாக ஸ்ரீராமின் கதைமாந்தர்கள் கையாலாகாதவர்கள் அல்லது தங்களுடைய வீழ்ச்சிக்குத் தாங்களே வழியமைக்கின்றனர். சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்வதில் ஏன் கிராமத்தினர் ஆர்வத்துடன் முனைகின்றனர்? கடவுள் அல்லது விதி என்று வரையறுத்திட இயலுமா? கதைமாந்தர்களின் செயல்பாடுகள் மாற்ற முடியாத பின்புலமுடையவை. புனைவைவிட யதார்த்தத்தில் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என்ற கேள்விகள் முக்கியமானவை. ஸ்ரீராம், கதைப் பிரதியில் முன்வைக்கிற மாற்றமுடியாத கதையாடல்களின் போக்குகளும், கதைமாந்தர்களின் இயல்புகளும் வாசக விருப்பங்களுக்கு எதிரானவையாக இருக்கின்றன. அந்தக் கதைகள் முக்கியம் அல்ல என்ற ஓர்மையுடன் வாசிக்கையில், அவை நமது கதைகளாக உருவெடுக்கின்றன. அதனால்தான் துயரம் ததும்பிடும் மகாபாரதம் தொடங்கி துன்பியலை ருசிக்கத் தொடங்குகிறோம். இத்தகைய பின்புலத்தில்தான் ஸ்ரீராமின் புனைகதைகளில் வெளிப்படும் கசப்பு, அவலம், வன்முறை, குரோதம் போன்றவற்றைக் கதைகளுடன் இசைவாக்கி உரையாடலைத் தொடங்குவது நடைபெறுகிறது. வாசிப்பில் நிம்மதியின்மையை உருவாக்கிடும் ஸ்ரீராமின் கதைகளை வாசிப்பது, ஒருவகையில் முரண். ஆனால், யதார்த்தத்தில் அதுதான் நடைபெறுகிறது.

பொதுவாக மனிதனை மையமிட்ட சூழல் என்ற நிலையில் இயற்கையைப் புரிந்திடாமல், நாசாமாக்குதல் துரிதமாக நடைபெறுகிற காலகட்டத்தில், சூழல் சார்ந்து மனித இருப்பை அறிந்திட ஸ்ரீராம் முயன்றுள்ளார். பூமியானது அனைத்திற்கும் ஆதாரமென்ற நிலையில் பூச்சிகள் தொடங்கி, பல்வேறு உயிரினங்களுடன் பரந்துபட்ட வெளியில் மனிதனைப் பொருத்துதல், இவருடைய கதைகளில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீராமின் கதைசொல்லலில் முக்கிய அம்சம், இயல்பாக இயற்கையை வருணித்தல். சிறிய சம்பவம் என்றாலும் பூச்சி, பறவை, செடிகொடி என இயற்கையைக் கதைக்குள் கொண்டுவருதல் முடிவற்று நீள்கிறது. ஊரைவிட்டு வெளியேறிச் சென்னையில் வாழ்ந்தபோதிலும் தாராபுரத்து மண்ணின் வெக்கையும் ஈரமும் அடுத்தடுத்து இவருடைய புனைவுகளில் நெடியடிக்கின்றன. நிலம் என்பது அங்கே வாழ்கிற மனிதர்களையும் உள்ளட்டக்கியது என்ற நிலையில் முடிவற்ற கதைகள் வேவ்வெறு கோணங்களில் சொல்லப்பட்டுள்ளன. கத்தாழங்குருவிகள், ஆந்தைகள், அழுக்கு வண்ணான் குருவிகள், கோட்டான்கள், செம்போத்து, இச்சி மரங்கள், கிளுவை மரம், வேலா மரம், சோளத்தட்டை, உழுவாம் பூச்சி, தோக்குருவிகள், செம்மறிகள் என உயிரினங்கள் சார்ந்த விவரிப்பில் ஸ்ரீராமிற்குச் சொல்வதற்கு இன்னும் கதைகள் நிரம்ப உள்ளன. கொங்கு நிலத்திற்கே உரிய தனிப்பட்ட அம்சங்களைக் கண்டறிந்து, ஸ்ரீராம்போல இத்தனை நுணுக்கமாக எழுதிய படைப்பாளர்கள் ஒப்பீட்டளவில் குறைவு. கரிசல் நிலம் சார்ந்த கதைசொல்லலில் கி.ராஜநாராயணன் போல கொங்கு மண் சார்ந்து தனித்த கதைசொல்லியாக ஸ்ரீராம் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்

கிராமத்தில் வாழ்கிற விளிம்புநிலையினரான பூசாரி, கோடாங்கி, ஆடு மேய்ப்பவர், கிணறு தோண்டுபவர், வாத்து மேய்ப்பவர், கொட்டு அடிப்பவர், கொம்பு ஊதுபவர், பேயோட்டுபவர், மாட்டிறைச்சி விற்பவர், அருவியில் தவறி விழுந்தவர்களைத் தேடியெடுப்பவர் எனப் பல்வேறு பிரிவினர் ஸ்ரீராமின் கதைமாந்தர்களாகியுள்ளனர். மாறிவரும் கிராமியச் சூழல் அவர்களைக் கிராமத்து வெளியைவிட்டுத் துரத்துகிறது. எதிலும் சார்ந்திட இயலாமல், பொருளியல் வாழ்க்கையில் படுகிற வதைகளும், ஆதிக்க சாதியினரினரால் ஏற்படுகிற அவமானங்களும் சிலரை மதிப்பீடுகளைத் துறந்து அத்துவான வெளியில் அலைகிறவர்களாக மாற்றிவிட்டன. சிலர் சிறு நகரத்தில் தறி வேலை, போர் லாரியில் ஊர் ஊராகப் பயணம் எனச் செல்கின்றனர். புதிதாகச் சென்ற இடத்தில் இணைந்திட முடியாமலும், கிராமத்து மண்ணுக்குப் போக இயலாமலும் தத்தளிப்பது தொடர்கிறது.

வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன் வலுவான சாதிய அடுக்கில் மேல் X கீழ் கற்பித்து கிராமத்தினரை நிரந்தரமாகப் பாகுபடுத்தி இருக்கிற சூழலின் வெக்கை, கிராம வெளியெங்கும் பரவியிருக்கிறது. தோட்டி, சாணார், மாதாரி, கவுண்டர் போன்ற சாதிகளின் பின்புலத்தில் கிராமத்தினரின் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுகின்றன. இடுகாட்டில் புதைகுழி வெட்டுகிறவராகக் அரண்மனைக்காரர் உள்ளிட்ட கவுண்டர் வளவு ஆள்களால் வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட சோமனின் வலியைப் பேசுகிற  ‘நிழல் விளையாட்டு’ கதை, சாதிய மேலாதிக்கத்தின் குறியீடு. அரண்மனைக்காரர் தன் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் வேலைசெய்த சோமனின் அக்காவுடன் பாலுறவுகொள்கிறார். அதனால் கருவுற்ற அக்கா, குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டவுடன், அவளுக்குக் குழி வெட்டிய தம்பியான சோமன், ஊரார் சொல்வதற்கேற்ப அவளுடைய வயிற்றைக் கத்தியினால் கிழித்து அடக்கம் செய்கிறான். ஆதிக்க சாதியினரின் அதிகாரம் எங்கும் வலுவாக இருக்கும்போது, யாரிடமும் நியாயம் கேட்கமுடியாமல் சோமன் உறைகிறான். ஒருகட்டத்தில் அநியாயமாக அரண்மனைக்கார் அடித்து உதைத்ததினால் கோபமடைந்து சோமன் கேட்ட கேள்வியினால், அரண்மனைக்காரர் தூக்கில் தொங்குகிறார். சோமனை இரவோடு இரவாக வெட்டிப் புதைக்காமல், அரண்மனைக்காரர் தற்கொலை செய்துகொண்டார் என்பது முரணாக இருக்கிறது. என்றாலும் சாதியத்தின் கொடூரத்தைச் சொல்கிறபோது, அதற்கெதிரான நிலையில் விளிம்பு நிலையினரின் மனக்குமுறலைப் பதிவுசெய்திட முயலுவது, ஸ்ரீராமின் நோக்கமாக இருக்கலாம்.

ஸ்ரீராமின் கதைகளில் இடம் பெற்றுள்ள பெண்கள், சொற்களுக்கு இடையே ஒளிந்திருந்து புனைவாக வெளிப்படுகின்றனர். இதுவரை மரபான பின்புலத்தில் பண்பாடு என்ற பெயரில் பெண்ணுடல்கள்மீது சுமத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர். பெண் என்ற சொல்லின் பின்னர் பொதிந்திருக்கிற தொன்மக் கதையாடலைச் சிதைத்துப் புதிய வகைப்பட்ட பெண்களைக் கதைமாந்தர்களாக்கியுள்ள ஸ்ரீராமிற்குப் பருண்மையான நோக்கம் இருக்கிறது.  ‘தாமரை நாச்சி’ கதையில் மனப்பிறழ்வுக்கு உள்ளான தாமரை நாச்சியினால், ஏனைய மூன்று பெண்களின் திருமணம் தடைபடுகிறது. அவளுடைய தந்தையான மணியக்காரர் நஞ்சினைத் தந்து, மகளான நாச்சியைக் கொல்கிறார். அப்புறம் நாச்சியின் அம்மா அழுகிற சப்தம் இரவு முழுக்கக் கேட்கிறது. அம்மாவின் அழுகை ஒலியும் திடீரென சாமத்தில் நின்றுபோனது. எந்தவிதமான பதற்றமும் இன்றி தொடர்ச்சியாகக் குடும்பத்தில் கொலைகளைச் செய்கிற மணியக்காரர் இயல்பாக இருக்கிறார். பெண் என்பவள் சகஉயிர் என்ற நிலைக்கு அப்பால், அவள் மீது சுமத்தப்படுகிற வன்முறை காலந்தோறும் தொடர்கிறது. கதைசொல்லலில் எந்த இடத்திலும்  தனது குரலைப் பதிவாக்கிடாமல் தாமரை நாச்சியையும் அவளது அம்மாவையும் தொன்மக் கதையாக்கி, வாசிப்பில் ஸ்ரீராம் உருவாக்கிடும் வலிகள், பெண்ணின் துயரத்தை மட்டும் பேசவில்லை. ஆண் மையச் சமூகம் தனது மேலாதிக்கத்தில் தனக்கான நியாங்களை கட்டமைத்து பெண்ணை நெருக்கடிக்குள்ளாக்குவதையும் பேசுகிறது.
 
இதுவரை பெண் பற்றிக் காலங்காலமாகப் புனையப்பட்டுள்ள எல்லாக் கதையாடல்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது ‘மூன்றாம் நதி ஓடும் ஊரின் கதை’. பெண்ணுடல் மீதான ஒடுக்குமுறையின் உச்சத்தைக் கதையாக்கியுள்ள ஸ்ரீராம் சொல்கிற கதை வெற்றுப் புனைவு என்று சொல்லவியலாமல், வாசிப்பில் ஏறபடுத்துகிற வலி, துன்பியல் நாடகமாகியுள்ளது. தறி வேலை செய்கிற பெண், தீராத வறுமையினால் குழந்தைகளையும் கணவனையும் பிரிந்து, தரகனின் பேச்சைக் கேட்டு, தனது சிறுநீரகத்தில் ஒன்றை விற்பதற்காக பெங்களூருக்குக் கிளம்புகிறாள். செல்லும் வழியில் அவளுடைய உடல், தரகனால் கேவலமான முறையில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறது. அருவறுப்பும் அசூயையும் மிகுந்திட அவளுடைய உடல் மீதான வதை தொடர்கையில் எல்லாவற்றையும் சகிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. கன்னடத்துக்காரன் உமேஷ் அவளுடலைச் சிதிலமாக்குகிறான். வேறு சில ஆண்களும் அத்துமீறுகின்றனர். பெண் என்ற நிலையில் சிதிலமாக்கப்படும் உடலின் வதைகள் தொடர்கின்றன. உடலின் உறுப்பை விற்றுக் கடனை அடைத்து, கௌரவமாக வாழ முயலும் குடும்பப் பெண்ணுக்கு ஏன் இப்படியெல்லாம் நடைபெறுகின்றன என்று வாசிப்பில் தோன்றும் கேள்விக்கு விடை எதுவுமில்லை. சிறுநீரகத்தைத் தந்துவிட்டுச் சிறிது பணத்துடன் வீடு திரும்புகிறவளின் கணவன் காணாமல்போகிறான். அவனுக்கு வேறு பெண்ணுடன் பாலியல் உறவு. தறி வேலையில் தற்செயலாகச் சந்தித்த நாகராஜுடன் சேர்ந்து வாழ்கிறவள், மீண்டும் முன்பணம்-கடன் என்ற வலைக்குள் சிக்குகிறாள். அவனும் ஏற்கெனவே சிறுநீரகத்தை விற்றவன் என்ற நிலையில் அவளின் வலி தொடர்கிறது. எல்லாவிதமான நம்பிக்கைகளும் சிதையும் நிலையில் பெண்ணுடல் அனுபவிக்கிற வதைகளின் கதையாடலைப் பேசுகிற கதை, வாசகனின் சமநிலையைச் சிதிலமாக்குகிறது. எவ்விதமான நிலைப்பாடும் இன்றி சொல்லப்பட்டுள்ள கதை, ஒருபோதும் நிஜமானது அல்ல என்று முடிவெடுக்கவியலாமல் திணறுவது, கதையின் உச்சமாகும்.

வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்

‘கூறு’ என்ற கதை எளிய மொழியில் பெண்ணின் பிரச்னைகளைப் பதிவாக்கியுள்ளது. படையன் மாதாரி, அவனுடைய மனைவி கமலம் என இருவரையும் மையமிட்டு விரிந்துள்ளது கதை. மாட்டை விலைக்கு வாங்கிவந்து வெட்டி, இறைச்சியைக் கூறுபோட்டு விற்கிற மாதாரியின் மனைவிக்குக் குழந்தை இல்லை. குழந்தையின்மைக்குக் காரணம் தன்னிடமிருக்கிறது என்பதை அறிந்த மாதாரி, மனைவி கமலம்தான் எனப் பிரச்னையைத் திசை திருப்புகிறான். இந்நிலையில் தொடர்ந்து சினைப் பிடிக்காத பசு மாட்டை விலைக்கு வாங்கிவந்து, வெட்டிக் கூறுபோட்டு விற்க முயல்கிறான் மாதாரி. கன்று ஈனாத  பசு மாட்டை வெட்டுவதுபோலக் குழந்தையைப் பெற்றெடுக்காத தன்னையும் வெட்டுவதாக நினைக்கிற கமலத்தின் வலி எங்கும் பரவுகிறது. மகப்பேறு வாய்க்காத நிலையில் தன்னுடலைச் சினை பிடிக்காத பசுவின் உடலுடன் பொருத்திக் கமலம் அடைகிற மனவேதனைக்குத் தீர்வு எதுவுமில்லை. ஏன் இப்படி கமலத்திற்குத் தோன்றியது? பெண் x ஆண் உறவின் மறுபக்கத்தைப் பெண்ணுடல் அனுபவிக்கிற வதையாகக் கதையாக்கியுள்ள ஸ்ரீராமின் புனைவு, பிரதியில் இருந்து கமலத்தை வெளியேற்றி வாசக மனதில் உறைந்திடச் செய்துள்ளது.

 ‘கெண்டை மீன் குளம்’ கதையில் மூன்று பெண் குழந்தைகளின் தாயான சகுந்தலா, தனது கணவன், பிள்ளைகளை விட்டுப் பால்காரனுடன் செல்வதற்குக் காரணம் என்ன? ஒருவகையில் நேசமான புருஷன்தான். ஏன் இப்படி நடந்தது? அவளுடைய தந்தை தொடங்கி, குடும்பத்தினர் படுகிற துயரத்துடன், பால்காரனின் பெண்டாட்டியின் கேவலமான வசவுப் பேச்சுகள் வேறு. சகுந்தலா மீண்டும் வீட்டிற்குத் திரும்பி வருகிறாள். தந்தையாரின் செருப்படியை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கிறாள். குடும்பம் என்ற அமைப்பு உருவாக்கியிருக்கிற வரையறைகளைத் தூக்கியெறிந்துவிட்டுச் சகுந்தலா எடுத்த முடிவு, வெறுமனே காமம் சார்ந்தது மட்டுமா? ‘அத்திமரச் சாலை’ கதையில் கதைசொல்லியின் அம்மா, கணவனைவிட்டுப் பிரிந்து ஏற்கெனவே திருமணமாகி இரு பெண்டாட்டிகளுடன் வாழ்கிற வாத்து மேய்ப்பவனுடன் செல்கிறாள். அங்கும் தங்கிட இயலாமல், சென்னைக்குப் போய்  வேறு ஒருவனுடன் சேர்ந்து வாழ்கிறாள். சூழலின் வெக்கை தாங்காமல் குடும்பத்திலிருந்து துரத்தப்படுகிற பெண்கள் எடுக்கிற முடிவுகள், அவர்களைத் தொடர்ந்து அலைக்கழிக்கின்றன. பெண் பற்றிய பொதுப்புத்திக்கு மாற்றாக ஸ்ரீராமின் கதைகளில் இடம்பெற்றுள்ள பெண்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஆணின் மனம் இதுவரை கற்பித்திருக்கும் பெண் பற்றிய புனைவுகளின் மறுபக்கத்தைச் ஸ்ரீராம் கதைகளாக்கியுள்ளார்.

இனக்குழு தேவதை, இயற்கைசார் தேவதை போன்ற நாட்டார் தெய்வங்களுடன் செய்வினை, மந்திரீகம், குறி சொல்லல், காவடி என அதியற்புதச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ள கதைகள் சுவராஸ்யமானவை. ஸ்ரீராமின் எழுத்தானது இனக்குழு, நிலம், கிராமியச் சமூகம், தொன்மம், வெளி, மழை, வெய்யில் என எழுதப்படுகையில் அவருடைய தன்னிலை மறைந்துபோகிறது. முனி விரட்டு, நெட்டுக்கட்டு வீடு, ஆறுமுகக் காவடி, உருவாரம், பிணம் தழுவியவன், சிதைகோழி, கொம்பூதிகள், கருப்பணவெளி, உடுக்கை விரல் போன்ற கதைகளில் கிராமத்தினரின் நம்பிக்கைகள் துடியான கடவுள்கள், கெட்ட ஆவிகள், மாந்திரீகம் சார்ந்த அம்சங்கள் பதிவாகியுள்ளன. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று கருப்பண சாமிக்குப் படையலிட்டுப் பூசைசெய்து, சாமியின் அருளினால் தன்னை நாடி வருகிறவர்களுக்குக் கணக்கு எனப்படும் குறி சொல்கிற பூசாரியின் அதியற்புத ஆற்றல், செயல் இழப்பதால் ஏற்படுகிற மன உளைச்சலைக் ‘கருப்பண வெளி’ கதை நுட்பமாகச் சித்திரித்துள்ளது. ‘வளர்த்த மாடு ஒன்னு/வழி மாறிப் போயிருச்சு/கயித்த அத்துக்கிட்டு/ கட்டுத்தாரை விட்டுமல்லோ/ காத வழி போயிருச்சு/ மாடு எங்கே இருக்குன்னு/ கணக்குக் கேட்டுச் செல்லறதுக்கு/ வந்திருக்கே... வந்திருக்கே’ என்று பூசாரி சொல்கிற கணக்கு, திடீரென அறுபடுகிறது. முப்பத்திரண்டு வருடங்களாகக் கருப்பனுடன் ஏதோவோர் அலைவரிசையில் தொடர்புகொண்டிருப்பதாக நம்புகிற பூசாரியின் அமானுட ஆற்றலுக்கு என்ன ஆச்சு?  கதைசொல்லியான ஸ்ரீராமுக்கு ஏதாவது காரணம் தெரிந்திருக்குமா? யோசிப்பதற்குள், பூசாரியின் முன்னர் கருப்பன் தோன்றியதான பிரேமை, பிரதியை மாயவுலகில் தள்ளிவிட்டது. கடவுளால் கைவிடப்பட்ட பூசாரி, இனிமேல் கடவுளை நம்பி வாழ முடியாது என்ற முடிவெடுக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகிறார்.

கிராமத்து வெளிகளில் எல்லா மூலைகளிலும் ஏதோவொரு கண்ணுக்குப் புலப்படாத தீயஆவிகள் உறைந்திருப்பதான நம்பிக்கை, பலரையும் பயத்துக்குள்ளாக்குகிறது. திடீரென உடல் நலக்குறைவு எற்பட்டால், எதிராளி ஏவிவிட்ட செய்வினைதான் காரணமென்ற நம்பிக்கை நிலவுகிற கிராமத்தினரிடையில் காத்து, கருப்பு, பில்லி, சூனியம், ஏவல் பற்றிய பேச்சுகள் எங்கும் பரவியுள்ளன. முனி அப்புச்சியை நினைக்காத சூழலினால் நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து மழை பொழியாமல் போயிற்று. மாராண்டி விரதமிருந்து முனியாக மாறினான். இரவில் எருமைக் கிடாயைப் பலியிட்டுக் குடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொண்ட மாராண்டி, தெய்வமுற்று ஆவேசமாக ஊருக்குள் ஓடிவர, ஊரார் வீட்டுக் கதவை அடைத்துக்கொண்டு பீதியில் உறைந்திருந்தனர். சாட்டைக்காரனின் சாட்டை விளாசலில் முனியின் உடலில் ரத்தம் கசிந்திட, கடைசியில் “நா போறேன். ஓடிப்போறேன். என்னை உட்டுடுங்கோ” என்று கத்துகிறது. காலையில் வீட்டுக்குத் திரும்பிய முனியாக ஆடிய மாராண்டியைப் பார்த்து, அவனது மகன் “அம்மா முனி வந்திருச்சு தொரத்துமா அதை” என்று கத்துகிறான். எது புனைவு எது யதார்த்தம் என்ற வரையறை சிதைந்திட மாரண்டியா, முனியா என்ற கேள்வி தோன்றுகிறது.

‘நெட்டுக்கட்டு வீடு’ கதையில் செல்லீயக் கவுண்டரை மையமிட்ட சம்பவங்கள் விநோதம் கலந்த கொடூரமானவை. கம்மாலனுக்குத் தருவதற்காக வைத்திருந்த பழைய வேட்டி சட்டையைக் சாமக்கோடாங்கிக்குக் கவுண்டர் தந்தபோது, அவற்றை அவன் ஏன் சுடுகாட்டில் வீசிவிட்டுப் போனான்? மருந்து எடுப்பதில் வல்லவனும் மந்திர வேலையில் கைதேர்ந்தவனுமான மலையாள மாந்திரீகன், பூமிக்குள் இருந்து எடுத்த பாட்டிலில் முடிகளும் தாயத்துகளும் இருந்தன. அவருடைய மகள் பழனத்தாளின் தற்கொலை, பிரமாண்டமான வீடு சிதிலமாகிட, தனிஆளாகச் சோற்றுக்கு வட்டிலை ஏந்துகிற கவுண்டர் எனக் கதை தொடர்கிறது. உண்மையில் மருந்து என்ற மாயம், கவுண்டரின் செயல்பாடுகளில்தான் இருக்கிறது என்று கதைசொல்கிறாரா ஸ்ரீராம்? எதிரிக்கு மரணத்தை ஏற்படுத்துவதற்காக அவனைப்போல உருவம் செய்து மலையாள மாந்திரிகன் மூலம் உருவேற்றிச் சுடுகாட்டில் வைத்துச் சடங்கு செய்திட முயலுகிற சம்பவத்தின் பின்புலத்தில் சொல்லப்பட்ட ‘உருவாரம்’ கதை, மூடநம்பிக்கைக்கு எதிரானது. கெட்ட ஆவி, தீமையைத் தரும் மாந்திரீகச் சடங்கு என்பதற்கும், அவை எல்லாம் நம்பிக்கை சார்ந்தவை என்ற புரிதலுக்கும் இடையில் சொல்லப்பட்டுள்ள கதை, மாறிவரும் கிராமத்தின் இன்னொரு முகம். பழனிக்குக் காவடி எடுத்துச் செல்கிற பெரிய பூசாரி, உடன்வரும் பெரிய தோட்டி என இருவரும் செல்கிற வழியில் மலையாள மாந்திரீகனின் ஏவலால் ஏற்படுகிற அதியற்புத நிகழ்வுகள்  ‘ஆறுமுகக் காவடி’ கதையாகியுள்ளது. தெய்வ ஆவேசமுற்று ஆடுவதில் சாதி பார்த்துச் சந்நதம் வருவதில்லை. இப்படி நடக்குமா? என்ற கேள்விக்குக் கதையில் இடமில்லை. கதைமாந்தர்கள் எல்லாம் தொன்மங்களாகிப் பல்லாண்டுகளாகக் காவடி தூக்கிச் செல்கிறவர்கள் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கின்றனர். ஸ்ரீராம் விநோதமும் அதியற்புதமும் ததும்பிடும் கதைகளை  ஆவேசமுற்ற நிலையில் பதிவாக்கியுள்ளார். இப்படி நடக்குமா என்று வாசிப்பில் எழுகிற கேள்விகள் அர்த்தமற்றவை.

வதைகளும் வலிகளும் நிரம்பிய வெளி - ந.முருகேசபாண்டியன்கொங்கு நிலவெளிக்கு அப்பால் சில கதைகள் சென்னை நகரப் பின்புலத்தில் விரிந்துள்ளன. திரைப்படக் கனவுடன் சென்னை நகருக்குப் போய் அரைப் பட்டினியுடன் ஏழாண்டுகளாகப் போராடுகிற ‘இவன்’ பற்றிய ‘அப்பாவும் வண்ணக் கனவுகளும்’ கதை வலி மிகுந்தது. ஊரில் வசதியாக இருக்கிற பிரசிடென்ட் நாராயணசாமி ஒருபுறம் எனில், அவருடைய மகன் சினிமாவுக்காக அனுபவிக்கிற சிரமங்கள் இன்னொருபுறம் என்ற நிலையில் ஸ்ரீராம் விலகி நிற்கிறார். கதையில் வருகிற இவன் அல்லது அப்பா நீங்களாக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எல்லோருக்கும் ஏதோவொரு கணக்கு வழக்கு இருக்கிறது. ‘மூன்று மழைக்காலங்கள்’ கதையைச் சொல்கிற கதைசொல்லி, தாராபுரத்திலிருந்து பேருந்தில் பயணிக்கையில் அறிமுகமான சுரபதி ராஜேந்தர் பற்றிச் சொல்கிற சம்பவங்கள், என்ன ஆச்சு இந்த சுரபதிக்கு என்று தோன்றுகிறது. திரைப்படம் என்ற கனவுத் தொழிற்சாலையின் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்டு சென்னைக்குக் கிளம்பிவருகிற சுரபதி, சூழலின் வெக்கையைத் தாங்கவியலாமல், ஊருக்குத் திரும்பி, விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொள்கிறான். மனதில் மின்னிடும் கனவுகள் இடைவிடாமல் துரத்திட தினமும் சிரமப்பட்டு சினிமாவில் சேர்ந்திட முயலுகிறவர்கள் சென்னையில் தங்கியிருக்கிற இடம், சூழல், பார்க்கிற வேலை, நண்பர்கள் என எல்லாம் நெருக்கடியான சூழ்நிலையையும் மனநிலையையும் தோற்றுவிக்கின்றன. சுரபதி போல ஒருத்தரை நாம் ஒவ்வொருவரும் நேரில் சந்தித்திருக்கலாம். இளமைப் பருவத்தைத் தொலைத்துவிட்டுக் கனவு காண்கிறவர்கள் அடைகிற துயரங்கள் குறித்த பதிவுகள், வெறுமனே கதையென்பதற்கு அப்பால் தொந்தரவு செய்கின்றன.

 கலைஞனுக்கும் அமானுட ஆற்றலுக்கும் இடையிலான உறவைச் சொல்கிற ‘உடுக்கை விரல்’ கதை நுட்பமானது. கதைசொல்லியின் அப்பா மாபெரும் உடுக்கடிக் கலைஞர். கடுமையான வறட்சி நிலவும் கோடைகாலத்தில் பொன்னர் சங்கர் கதைப் பாடலை உடுக்கடித்துப் பாடினால் மழை பொழியும் என்பது ஐதீகம். நிகழ்த்துக்கலை கலைஞர் என்பதற்கு அப்பால் இயற்கையுடனான உறவில், கூத்தானது வேறு ஒன்றாக உறுமாறுகிறது. கூத்துக் குடும்பப் பாரம்பர்யத்தில் இருந்துவந்த கதைசொல்லி, இரவில் சண்முகா நதியில் தனியாளாக இருந்து, ஆவேசத்துடன் உடுக்கடித்துப் பாடிய பாடலினால் மழை பொழியவில்லை. விரக்தியில் வெண்கல உடுக்கையையும் உடுக்கை விரல்களையும் தண்ணீரில் தூக்கியெறிந்த கலைஞன், பழநிமலைப் படிக்கட்டில் போய் அமர்ந்தான். அவன் முன்னால் நாணயங்கள் விழுந்தன. இன்றும்கூட கிராமத்தினர் உடுக்கடிக் கலையை அதியற்புத ஆற்றலுடன் தொடர்புடையதாக நம்புகின்றனர். கூத்துக் கட்டினால் நிச்சயம் மழை பொழியுமென்ற கிராமத்தினரின் நம்பிக்கையுடன் தொடர்புடை யவர்களாகக் கலைஞர்கள் மாறியுள்ளனர். இயற்கையுடன் ஏதோ ஒருவகையில் வினையாற்றும் வல்லமையுடைய கூத்துக்கலைஞன், இறுதியில் பிச்சைக்காரனாக மாறுவது, துயரத்தின் உச்சம். மாறிவரும் சூழலில் மகாகலைஞன் என்றாலும் அவனும் கைவிடப்பட்டுத் தனிமையாக நிற்கையில் என்ன செய்ய முடியும் என்பதை ஸ்ரீராம் கதையாக்கி யுள்ளார்.

நிலம் சார்ந்து வெறுமனே வறுமை அல்லது வறட்சி பற்றிப் பேசுவது மட்டும் ஸ்ரீராமின் நோக்கமல்ல. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள கிராமத்துச் சூழலில் மனித இருப்புக் குறித்துக் கதைகளின் வழியாக உருவாகியுள்ள பேச்சுகள்தான் முக்கியமானவை. இதனால்தான்  ஸ்ரீராம் பல கதைகளில் முக்கியமான திருப்பங்களைப் பற்றி விளக்கிடாமல் மௌனம் சாதிக்கிறார். எழுத்து போலவே மௌனமும் வலிமையானது என்ற நிலையில் வாசகன் பிரதிக்குள் தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் வாசித்து முடித்தவுடன், அவ்வளவுதான் கதை என்று தோன்றுகிற அற்ப மனநிலையைச் சிதைத்து, கதை உருவாக்கிய உணர்ச்சியுடன் தவிக்க நேரிடுகிறது. மேலும் கதையாடலில் ஸ்ரீராம் சொல்லாமல்விட்ட அல்லது சொல்லாமல் தவிர்த்த இடங்கள், யூகத்தின் மூலம் வாசகனின் தேடலைத் துரிதப்படுத்துகின்றன. மரபான கதைசொல்லலில் இருந்து விலகி நின்று சித்திரிக்கிற இத்தகைய சம்பவங்கள்தான் ஸ்ரீராம் புனைகதைகளின் தனித்துவம். புனைகதையாளராக ஸ்ரீராம் வெற்றியடைவதும் இந்த இடத்தில்தான்.

உதவிய நூல்: என்.ஸ்ரீராமின் படைப்புகள்.தோழமை வெளியீடு, சென்னை, 2016.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு