2000-வது ஆண்டு பிறந்திருந்தது. பாரிஸில் வசிக்கும் ஷோபாசக்தி என்னை அங்கே அழைத்தார். ஓர் இலக்கியச் சந்திப்பை முன்வைத்து நான் அங்கு செல்வது என்று திட்டமிட்டோம். வீசா வாங்குவதற்கு அது ஒரு வலுவான காரணமாக இருக்கும். பணக்காரர்களுக்கு எடுத்த எடுப்பில் வீசா கிடைத்துவிடும்; பராரிகளுக்கு அப்படியில்லை. மேலும், என்னை அங்கே அழைப்பவர்களும் கனவானாக இருந்தால் நலம். புலம்பெயர்ந்து வாழும் ஓர் அகதி அழைத்தால் எவன் மதிப்பான்? பாரிஸிலிருந்து இலக்கியச் சந்திப்புக்கான அழைப்பும் பாரிஸின் மேரி (முனிசிபாலிட்டி) சான்றிதழும் எனக்குக் கிடைத்துவிட்டன.

நான் அப்போது அஞ்சல் துறையில் ஸ்டெனோவாக இருந்தேன். சென்னையில் உள்ள தலைமையகம். அரசுத்துறையில் வேலை பார்த்துக்கொண்டு நீங்கள் என்ன செய்தாலும் அதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். 5,000 ரூபாய்க்கு மேல் நீங்கள் ஒரு பொருளை வாங்கினால் அதை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும். 5000 ரூபாய்தான் லிமிட். நம்ப முடியாது. ஆனால், சட்டம் அதுதான். இந்தியாவில் ஏன் யாருமே சட்டத்தை மதிப்பதில்லை என்பதன் காரணமும் இதுதான். 5,000 ரூபாய்க்கே அப்படி என்றால், வெளிநாடு போவதெல்லாம் சாதாரணமா? வீசா அலுவலகத்தில், நாம் வேலைசெய்யும் இடத்திலிருந்து “இவர் வெளிநாடு செல்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று ஒரு சான்றிதழ் வாங்கிக் கொடுக்க வேண்டும். எனவே, 2,000 பிப்ரவரியில் துறை அதிகாரிக்கு எழுதினேன். என் விண்ணப்பம் அங்கே சுற்றி இங்கே சுற்றி, கடைசியில் துறை அதிகாரியின் மேஜைக்கு வரும்போது 2001 ஜனவரி வந்துவிட்டது. சரியாக ஒரு வருடம். ஒரே கட்டடம்தான். ஐந்து நிமிட வேலைக்கு ஓர் ஆண்டு எடுத்தது. இலக்கியச் சந்திப்பு நவம்பரிலேயே முடிந்துவிட்டதால், அதையே காரணம் காட்டி துறை அதிகாரி என் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார்.

ஒரு நாவலுக்கு உரிய சமாச்சாரத்தை நான் இங்கே சுருக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். முதலில் என் மீது ஏதேனும் ஒழுங்கு மீறல் நடவடிக்கை நிலுவையில் இருக்கிறதா என்று விசாரித்து பத்து இடங்களுக்கு என் விண்ணப்பத்தை அனுப்பினார்கள். அந்தப் பத்து இடங்களையும் நான் நேரில் போய்ப் பார்த்து ‘முறைவாசல்’ செய்து என் விண்ணப்பத்தை அங்கிருந்து நகர்த்த வேண்டும். பிறகு, பே அண்ட் அக்கவுண்ட்ஸ் அலுவலகம் போகும். பிறகு, துறையின் கூட்டுறவு வங்கி. அலுவலகத்தின் கேட் கீப்பரைத் தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் போய் வந்து கடைசியில் புஸ்வாணம் ஆனது விண்ணப்பம்.

அடுத்த ஆண்டும் பிப்ரவரியிலேயே எல்லாச் சடங்குகளையும் முடித்து அனுப்பி வைத்தார் ஷோபா. நானும் என் விண்ணப்பத்தை மேலிடத்துக்கு அனுப்பினேன். ஆனால், முந்தின ஆண்டைவிடச் சற்றுத் துரிதமாக வேலை செய்தேன். துறைத் தலைமை அதிகாரி இந்த நாட்டை சூப்பர் பவர் ஆக்க வேண்டும் என்று நினைப்பவர், நம் மதிப்புக்குரிய மோடி மாதிரி. அதனால் அவருக்கு எல்லாமே முறையாக நடக்க வேண்டும். என் விண்ணப்பத்தை தில்லி உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். அதை என் உளவாளிகள் மூலம் துப்பறிந்த நான், தில்லி மந்திரி ஒருவரின் சிபாரிசில் அங்கிருந்து காகிதத்தை விரைவில் நகர்த்த இங்கே இருந்த ஒரு விவிஐபி மூலம் முயன்றேன்.

ஒருநாள் தில்லி அமைச்சகத்திலிருந்து எனக்கு போன். நீங்கள் எந்த வருஷத்துக் கேடர்? புரியவில்லை. எந்த ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வுபெற்றீர்கள்? உங்கள் பெயர் எந்தப் பட்டியலிலும் இல்லையே? எனக்குப் புரிந்துவிட்டது. நீங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தால்தான் உள்துறை அமைச்சகத்துக்கெல்லாம் பேப்பர் போகும். “நான் ஐ.ஏ.எஸ் கிடையாது ஐயா. வெறும் ஸ்டெனோ.” “என்னது, ஸ்டெனோவா? ஸ்டெனோவின் விண்ணப்பத்தை எதற்கு தில்லிக்கு அனுப்பினீர்கள்?” உச்சபட்ச கோபத்தில் கேட்ட தில்லி அதிகாரி போனை அறைந்தபடி வைத்துவிட்டார்.

அடுத்து, என் சென்னை அதிகாரியிடமிருந்து எனக்கு ஒரு தாக்கீது வந்தது. “ஒரு ஸ்டெனோவாகிய நீர் ஏன் பாரிஸ் போகிறீர்? உமக்கு ஏது அவ்வளவு பணம்?” “ஐயா, நான் ஒரு எழுத்தாளன். இலக்கியச் சந்திப்புக்குப் போகிறேன்.” “ஓ, உம் கதை ஒன்றை அனுப்பிவையும்.” அனுப்பினேன். உடனே என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு இன்கிரிமெண்ட்டை ரத்துசெய்தார் அதிகாரி. காரணம்? கதை ஆபாசமாக இருந்ததாம்.

இதற்குள் அக்டோபர் ஆகிவிட்டது. ம்ஹும். இந்த முறையும் சென்ற ஆண்டைப் போல் ஏமாற முடியாது. ஒரு பத்திரிகை நண்பர்மூலம் அந்தப் பத்திரிகையில் வேலை பார்ப்பதாகப் பொய்ச்சான்றிதழ் வாங்கி வீசாவுக்கு விண்ணப்பித்தேன். வீசா கிடைத்தது.

அதுவரை நான் வெளிநாடே சென்றதில்லை. வெளிநாட்டை விடுங்கள், விமானநிலையத்துக்குள்கூட நுழைந்ததில்லை. பயந்துகொண்டே சென்னை விமானநிலையத்தின் இமிக்ரேஷன் கவுண்டருக்குப் போனால், அங்கே இருந்த மலையாளி அதிகாரி என் மீது சந்தேகமாக இருக்கிறது என்று நிற்க வைத்துவிட்டார். விமானம் கிளம்ப கொஞ்ச நேரம்தான் இருந்தது. அந்த நேரத்தில் அங்கே நின்ற கவிஞர் அறிவுமதிதான் அவர்களுடன் பேசி அனுமதி பெற்றுத் தந்தார். அவர் சுவிஸ் செல்வதற்கு இருந்தார். என் விமானம் நேராக பாரிஸ் போகவில்லை. இரண்டு இடங்களில் இறங்கி வேறு விமானம் மாற வேண்டும். அது எனக்கு அப்போது தெரியாததால் அப்படியே விமானத்தில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால் விமானத்தில் யாருமே இல்லை. என்ன செய்வது, அது எந்த நாடு, எதுவும் புரியவில்லை. அப்போது, ஒரு ஏர் ஹோஸ்டஸ் புயலைப்போல் நுழைந்து என்னை இழுத்துக்கொண்டு ஓடினார். ஓட்டம் என்றால் அப்படி ஓர் ஓட்டம். பாரிஸ் கிளம்ப இருந்த அந்த விமானம் என் ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது போல. நான் உள்ளே நுழைந்ததும் கதவு மூடப்பட்டது.

பாரிஸ் விமானநிலைய இமிக்ரேஷனில் ஒரு பிரச்சினையும் இல்லை. க்யூகூட இல்லை. ‘எதற்காக வந்தீர்கள்?’ என்றார் அதிகாரி. ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னேன், ‘எக்ரிவான்.’ பிரெஞ்சில் கடைசி ‘ன்’-ஐ முடிக்கக் கூடாது. எக்ரிவா(ங்) என்று தொங்கலில் விடவேண்டும். எழுத்தாளன் என்று பொருள். பிரான்ஸில் அது ஒரு மேஜிக் வார்த்தை. நானும் நண்பர் கலாமோகனும் ஒரு பாருக்குப் போனபோது, பார் முதலாளி நான் ஒரு எக்ரிவான் என்று தெரிந்துகொண்டு பணம் வாங்க மறுத்து விட்டார். அது மட்டுமல்ல; கிளம்பும்போது அனிஸ் என்ற மதுப்புட்டியையும் பரிசாகக் கொடுத்தார். (ஜீரகத்தில் செய்யப்படும் உசத்தியான மது அது.)

விமானநிலையத்திலிருந்து வெளியே வந்து நண்பரின் இல்லம் செல்ல மொந்த்பர்னாஸ் மெத்ரோ ரயில்நிலையத்தில் நண்பருடன் நின்றுகொண்டிருந்தேன். பூமிக்குக் கீழே ஐந்து அடுக்குகளில் மெட்ரோ ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஐந்தாவது அடுக்கில் டிரைவர் இல்லாத ரயில். அந்த மெட்ரோ சிஸ்டம் பாரிஸில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று கேட்டேன். நான் அங்கே போனது 2001. சரியாக 101 ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே மெட்ரோ வந்திருக்கிறது. பாரிஸின் அத்தனை மூலைகளையும் இணைக்கும் ரயில்கள். கார் வைத்திருப்பவர்கள்கூட காரில் போகாமல் மெட்ரோவிலோ பஸ்ஸிலோதான் செல்கிறார்கள்.

விமானநிலையத்திலும் அதற்கு வெளியிலும் கண்ட இரண்டு காட்சிகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ஜீன்ஸை இறக்கி முழங்கால் மடித்து அமர்ந்து சிறுநீர் போய்க்கொண்டிருந்தாள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்துக் கொண்டிருக்கும் பகுதியில் இப்படி ஒரு காட்சியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? ஆச்சர்யம் என்னவென்றால், அங்கே யாருமே அது பற்றிப் பதற்றம் அடையவில்லை. அந்தச் சிறுநீர் வாய்க்காலை எல்லோரும் தாண்டித் தாண்டிப் போய்க்கொண்டிருந்தார்கள். எத்தனையோ புத்தகங்களில் பிரான்ஸின் சுதந்திரத்தன்மை பற்றி வாசித்திருக்கிறேன். நண்பர் அந்தச் சம்பவத்துக்கு விளக்கம் சொன்னார். நாம் இருப்பது பூமிக்குக் கீழே நான்காவது அடுக்கு. இது குளிர் காலம். (நான் சென்றிருந்தது நவம்பர்). நான்கு அடுக்குகளையும் தாண்டி வெளியே போனாலும் யூரினல் எங்கே இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும் ரெண்டு ஃப்ராங்க் சில்லறை வேண்டும். இன்னும் சில நிமிடங்களில் இந்த இடத்தைத் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்து விடுவார்கள்.

வெளியே போனதும் கண்ட காட்சி மற்றோர் அதிசயம். பல ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருந்தன. முத்தம் என்றால் பிரெஞ்ச் கிஸ். கண்கள் மூடியிருந்தன. ஏதோ தியானத்தில் இருப்பதுபோல் தங்களை மறந்து நின்றுகொண்டிருந்தார்கள். நானும் நண்பரும் ஓர் இடத்துக்குப் போய்விட்டு, திட்டம் மாறியதால் கிளம்பிய இடத்துக்கே வந்தபோது ஆச்சர்யம் இன்னும் அதிகமானது. பத்து நிமிடமாக ஒரு ஜோடி சிலையைப்போல் முத்தமிட்டபடியே இருந்தது. நண்பர் கிண்டலாகச் சொன்னார். முத்தம்தான் இப்படி. குழந்தை பெற்றுக் கொள்வதில் நம் ஆள்கள்தான் கில்லாடி. அவர் சொன்னது உண்மைதான். நான் பார்த்த தமிழ்ப் பெண்கள் பெரும்பாலும் இரண்டு குழந்தைகளோடு மூன்றாவதையும் தாங்கியபடி இருந்தார்கள்.

நான்கு மாதங்கள் தங்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். இடையில் நடந்த ஒரு சம்பவத்தால் இரண்டு மாதத்திலேயே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. டிசம்பர் 18 அன்று நண்பர் ஒருவர் பார்ட்டி கொடுத்தார். அன்று என் பிறந்த நாள். பிரெஞ்ச் இலக்கியம் பற்றிக் கொஞ்சம் பேசச் சொன்னார்கள். குழுமியிருந்த 20 பேரில் ஒன்றிரண்டு பேரே தமிழர்கள். ஜான் ஜெனே விளிம்பு நிலையிலிருந்து வந்த மனிதர். ஒரு செக்ஸ் ஒர்க்கருக்குப் பிறந்தவர். Gay-யாகவும் திருடனாகவும் வாழ்ந்தவர். ஆனால், அவரது பிரெஞ்ச் மிகக் கவித்துவமாக இருந்தது. அவரது சக எழுத்தாளரான லூயிஸ் ஃபெர்தினாந் செலின் மேட்டுக்குடியில் பிறந்து, மருத்துவராக வாழ்ந்தாலும் அவருடைய பிரெஞ்ச் விளிம்புநிலை மனிதர்களின் பிரெஞ்சாக இருந்தது என்று பேசினேன். அதைக் கேட்டு, ஸோர்போன் பல்கலைக்கழக மாணவி ஒருத்தி என்னோடு நடனமாட விரும்பினாள், ஆடினேன். அடுத்த வாரமே இங்கே உள்ள ஒரு பத்திரிகையில் அந்தப் புகைப்படத்தோடு நான் பாரிஸில் செட்டிலாகிவிட்டதாகச் செய்தி. அதைப் பார்த்து எனக்குப் போலிச் சான்றிதழ் வழங்கிய நண்பரும் என் மனைவி அவந்திகாவும் கலவரமாகி என்னை உடனடியாக இந்தியா வரவழைத்தார்கள்!

பி.கு. வந்துசேர்ந்தவுடன் நான் பார்த்து வந்த அஞ்சல் துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்!