Published:Updated:

நகல்

விகடன் விமர்சனக்குழு

சிமாமண்டா என்கோஜி அடிச்சீ - தமிழில்: வடகரை ரவிச்சந்திரன்ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

ன்கெம் அவளது கணவனின் காதலி பற்றி அறியும்போது, வரவேற்பறையின் தட்டுமாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெனின் முகமூடியின் துருத்திக்கொண்டு தெரிந்த கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நகல்

‘அவளுக்கு இளவயதுதான். இருபத்தி யொன்றுதான் இருக்கும்’ என்று தொலைபேசியில் இஜமமகா சொல்லிக் கொண்டிருந்தாள். “அவளது கேசம் குட்டையாகச் சுருண்டிருக்கும். கேசத்தைப் பதப்படுத்தும் தைலத்தைப் பயன்படுத்துவாள்போல. இளம்பெண்கள் இப்போது பதப்படுத்தும் தைலத்தையே அதிகம் விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இதை உன்னிடம் சொல்லக்கூடாதுதான். நான் ஆண்களையும், அவர்கள் போகும் வழிகளையும் அறிவேன். ஆனால், அவள் உன் வீட்டில் வசிக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். பணக்கார ஆண்களைத் திருமணம் செய்து கொள்கிறபோது இப்படித்தான் நடக்கிறது”. இஜமமகா வேண்டுமென்றே மிகையான ஒலியில் பெருமூச்சு விடுவதைக் கேட்கிறாள் என்கெம். “ஒபியோரா நல்ல மனிதன்தான். ஆனால், அவனது காதலியை உனது வீட்டுக்குள் கொண்டுவந்து வைப்பதென்பது மரியாதை இல்லாத காரியம். அவள் அவனது வாகனங்களை லாகோஸ் முழுக்க ஓட்டிக்கொண்டு திரிகிறாள். அவலோவா சாலையில் அவள் மாஜ்தா வாகனத்தை ஓட்டிச் செல்கையில் நானே என் கண்களால் பார்த்தேன்.”

“இதையெல்லாம் என்னிடம் சொல்வதற்கு நன்றி” என்கிறாள் என்கெம். அவள் பேசி ஓய்ந்துபோன இஜமமகாவின் வாயைக் கற்பனை செய்துகொள்கிறாள்.

“அதைப் பற்றிச் சொல்ல வேண்டியது எனது கடமை. தோழி என்று பிறகு எதற்காக இருக்கிறோம்? வேறு என்ன செய்ய முடியும் நான்?” எனக் கேட்கிறாள் இஜமமகா. ‘செய்ய’ என்கிற வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தமும் அவளது குரலின் தொனியும் அவள் நடந்தவை பற்றி சந்தோஷப்படுகிறாளோ என்று என்கெமை யோசிக்கவைத்தன.

அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு இஜமமகா, அவள் நைஜீரியாவிற்குப் போய் வந்ததைப் பற்றியே பேசுகிறாள். விலைவாசி அதிகரித்துவிட்டது பற்றி, போக்குவரத்து நெரிசலின்போது வியாபாரத்தில் ஈடுபடும் சிறுபிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது பற்றி, மண் அரிப்பு அவளது சொந்த ஊருக்குச் செல்லும் சாலையின் பெரும் பகுதிகளை அரித்துத் தின்றுவிட்டதைப் பற்றி என ஓயாத பேச்சு. என்கெம் பொருத்தமான நேரங்களில் பெருமூச்செறிகிறாள். அவளும் ஆறு மாதங்களுக்கு முன்பு கிருஸ்துமஸின்போது, நைஜீரியாவிற்குச் சென்று வந்ததைப் பற்றி இஜமமகாவிற்கு நினைவுபடுத்தவில்லை. அவளது விரல்கள் மரத்துப்போனது பற்றியோ அவள் தொலைபேசியில் அழைத்திருக்க வேண்டாமென எண்ணியதைப் பற்றியோ என்கெம் இஜமமகாவிடம் சொல்லவில்லை. பேச்சை முடிக்கும் முன்பாக வாரயிறுதி நாள்களில் நியூஜெர்சியில் வசிக்கும் இஜமமகாவின் வீட்டிற்குக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களிக்கிறாள் என்கெம். அந்த வாக்கை அவள் எப்போதும் காப்பாற்றமாட்டாள் என்பதை அவள் அறிவாள்.

என்கெம் சமையலறைக்குள் சென்று ஒரு கோப்பையில் தண்ணீர் நிரப்பி, பின்பு அதைத் தொடாமல் அப்படியே மேஜையில் வைத்துவிடுகிறாள். பின்னர் வரவேற்பறைக்குச் சென்று பெனின் முகமூடியை உற்றுப்பார்க்கிறாள். செம்பு நிறத்திலிருந்த அதன் அம்சங்கள் பெரிதாகத் தோன்றின. அவளது அண்டை வீட்டுக்காரர்கள் அதை ‘மேன்மையானது’ என்றார்கள். அதன் காரணமாகவே இரண்டு வீடுகள் தள்ளி வசித்த ஒரு தம்பதியினர் ஆப்பிரிக்கக் கலைப்பொருள்களின் சேகரிப்பில் இறங்கிவிட்டனர்.

என்கெம், 400 ஆண்டுகளுக்கு முன்பாக பெனின்இன மக்கள் அசலான முகமூடிகளைச் செதுக்குவதைக் கற்பனை செய்கிறாள். அவர்கள் தீமையைத் தவிர்க்கவும், தீயசக்திகளிடமிருந்து அரசனைப் பாதுகாக்கவும் ராஜாங்க சடங்குகளில் முகமூடிகளைப் பயன்படுத்தியதாக ஒபியோரா அவளிடம் சொல்லியிருந்தான். அதற்கென குறிப்பிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே முகமூடிக்குப் பாதுகாவலர்களாக இருந்தார்கள். மேலும், இறந்துவிட்ட அரசனைப் புதைக்கும்போது, சேர்த்துப் புதைக்க புதிய மனிதத் தலைகளை வெட்டிக்கொண்டுவரும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. எண்ணெய் பூசிய திரண்ட தோள்கள் பளிச்சிட, இடுப்பில் கச்சைகள் அசைந்தாட, பெருமிதம்கொண்ட இளைஞர்கள் கம்பீரத்துடன் நடப்பதை என்கெம் கற்பனைசெய்கிறாள்.

பியோராவுடன் முதல்முறை அமெரிக்கா வந்தபோது அவள் கர்ப்பமாக இருந்தாள். ஒபியோரா வாடகைக்கு எடுத்த வீடு, பச்சைத் தேயிலை மணத்துடன் புதியதாக இருந்தது. வாகனம் செல்லும் பாதை நெருக்கமாகச் சரளைக்கற்கள் பாவியிருந்தது. ‘பிலடெல்பியாவிற்கு அருகே அழகான புறநகர் பகுதியில் வசிக்கிறோம்’ என்று தொலைபேசியில் லாகோசில் உள்ள தோழிகளிடம் பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டாள் என்கெம்.

அவர்கள் வசித்த தெருவிலிருந்த அவளது அண்டைவீட்டுக்காரர்கள்- வெளுத்த கேசத்துடன் வெள்ளைநிறத் தோற்றம் கொண்டவர்கள் - அவர்களாகவே வந்து அறிமுகப்படுத்திக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெறுவது, தொலைபேசி இணைப்புப் பெறுவது என ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டுச் சென்றார்கள். அவளது பேச்சுச் சாயலும், அன்னியத்தன்மையும் அவளை நிராதரவானவளாகத் தோன்றச் செய்தன என்பதைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. அவள் அந்த மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் விரும்பினாள். ஒபியோரா அவர்களது வாழ்க்கை நெஞிழித்தன்மைகொண்டது என்று அடிக்கடி சொல்வான். ஆனாலும், அவனும்கூட, தன் குழந்தைகள் அவர்களது அண்டைவீட்டுக்காரர்களின் குழந்தைகள்போல் வளரவேண்டும் என்று விரும்பினான் என்பதை அவள் அறிவாள். அந்தக் குழந்தைகள் கீழே விழுந்த உணவைப் பாழாகிவிட்டது என்று ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அவளது பால்யம் என்பது எந்த உணவுப்பண்டம் கீழே விழுந்தாலும் அதை உடனே எடுத்து உண்பதாகவே இருந்தது.

ஒபியோரா முதல் நாலைந்து மாதங்கள் உடனிருந்தான். அதன் பின்னர், அவன் நைஜீரியா சென்றுவிட்ட பிறகு, அண்டை வீட்டுக்காரர்கள் அவனைப் பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டனர். “உன் கணவன் எங்கே?” “ஏதும் பிரச்சினையா?” என்கெம், “எல்லாம் நல்லபடியாக இருக்கிறது” என்று அவர்களுக்குப் பதில் சொன்னாள்.

அண்டைவீட்டுக்காரர்கள் அவர்களைப் பற்றி அறிய ஆவல் கொண்டிருப்பதைச் சொன்னபோது ஒபியோரா சிரித்தான். அவன் வெள்ளை மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஏதாவதொரு விஷயத்தை மாறுபட்டுச் செய்தாயெனில் அவர்கள் உனக்கு ஏதோ கோளாறாகிவிட்டது என்றுதான் நினைப்பார்கள் என்றான்.

ன்கெம் ஒரு கையால் பெனின் முகமூடியின் செதுக்கப்பட்ட உலோகத்தின் மூக்குப் பகுதியைத் தடவுகிறாள். சில வருடங்களுக்கு முன்பாக அதை வாங்கி வந்தபோது, அதைச் சிறந்த நகல் என்று ஒபியோரா குறிப்பிட்டான். 1800களின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள் தாம் மேற்கொண்ட பயணங்களை, ‘தண்டிக்கும் பயணங்கள்’ என்று சொல்லிக்கொண்டார்கள் என்றும் அத்தகைய பயணங்களின்போது அவர்கள் அசல் முகமூடிகளைக் கவர்ந்துசென்றதைப் பற்றியும் கூறினான். அப்படிக் கவர்ந்து செல்லப்பட்ட ஆயிரக்கணக்கிலான முகமூடிகள், போரில் கைப்பற்றிய பொருள்களாகக் கருதப்பட்டு உலகெங்கிலுமுள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினான்.

நகல்

என்கெம் அந்த முகமூடியைக் கையில் எடுத்து, அதை முகத்தோடு முகம் சேர்க்கிறாள். அது குளிர்ச்சியாகவும் கனமாகவும் உயிரற்றும் இருக்கிறது. இருந்தாலும் ஒபியோரா அதைப் பற்றியும் மற்றவை குறித்தும் பேசுகையில் அவன் அவற்றுக்கு உயிரூட்டுகிறான். கூடத்தில் வைக்கப்பட்டுள்ள நோக் சுடுமண் சிற்பங்களை அவன் கடந்த வருடம் வாங்கிக் கொண்டுவந்தபோது, நோக் இனத்தவர்கள் அவற்றை மூதாதையர் வழிபாட்டிற்குப் பயன்படுத்தியது, புனிதத் தலங்களில் வைத்து அவற்றுக்குப் படையலிட்டது, ஆங்கிலேயர்கள் சிலைஉருவங்கள் கடவுளுக்கு எதிரானவை எனக் கூறி அவற்றைக் கவர்ந்துசென்றது பற்றியெல்லாம் கூறினான். நம்மிடம் இருப்பவற்றின் மதிப்பை நாம் அறிவதில்லை என்று எப்போதும் சொல்வான். அரச பதவி வகித்த முட்டாள் மனிதனொருவன் லாகோஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று அதன் காப்பாளரிடம் 400 ஆண்டுகள் பழமையான மார்பளவு சிலையொன்றை வற்புறுத்திப் பெற்றுச் சென்று, அதை ஆங்கிலேய அரசிக்கு அன்பளிப்பாக அளித்த கதையைச் சொல்லி முடிப்பான். சில வேளைகளில் ஒபியோரா சொல்லும் கூற்றுகளின் நிஜத்தன்மை பற்றி அவளுக்குச் சந்தேகம் எழும். ஆனாலும், அவன் பேசும்போது கவனித்துக் கேட்பாள். அவன் அழப்போகிறவன்போல கண்கள் பளிச்சிட, கனிவுடன் பேசுவான்.

அடுத்த வாரம் அவன் வரும்போது, அவன் என்ன கொண்டுவருவான் என்பதைப் பற்றி யோசிக்கிறாள். அவன் கொண்டுவரும் கலைப் பொருள்களை எதிர்நோக்கியிருக்கிறாள். அவற்றைத் தொட்டுப்பார்ப்பதும், அவற்றின் அசல் வடிவங்கள் பற்றி அவற்றின் பின்னுள்ள வாழ்க்கை பற்றி கற்பனை செய்வதும் அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது. அடுத்த வாரம் அவளது குழந்தைகள் தொலைபேசியில் அல்லாது நிஜமான மனிதனொருவனை ‘டாடி’ என அழைப்பார்கள். அவள் இரவில் கண்விழித்து பக்கத்தில் படுத்திருக்கும் அவனது குறட்டை ஒலியைக் கேட்பாள். குளியலறையில் அவன் பயன்படுத்திய துண்டு ஒன்று கிடக்கக் காண்பாள்.

என்கெம் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறாள். பள்ளி சென்ற குழந்தைகளை அழைத்து வரச் செல்வதற்கு இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. ஜன்னல் திரைத்துணியில் வீட்டு வேலைக்காரப் பெண் அமேச்சி கவனத்துடன் அமைத்திருந்த விரிசலினூடாக மாலை நேரச் சூரியன், மையத்தில் கண்ணாடி பதித்த மேஜையில் செவ்வக வடிவிலான ஒளிக்கற்றையைப் பாய்ச்சியது. என்கெம் தோல்சோஃபாவின் ஓரத்தில் அமர்ந்து வரவேற்பறையை நோட்டமிடுகிறாள். கடந்த நாள்களில் ஒருநாள், வீட்டு அலங்காரப்பொருள்கள் விற்கும் கடையின் பிரதிநிதி ஒருவன் வந்து, மேஜை விளக்கை மாற்றிச் சென்றான். அவன், “மேடம்! உங்களுடையது மிகச் சிறந்த வீடு” எனச் சொல்லியிருந்தான். அவனது முகத்தில் ஆர்வம் மேலிடச் சிரிக்கும் அமெரிக்கச் சிரிப்பின் சாயலிருந்தது. தானும் அதைப் போன்றதொரு வீட்டை உடைமையாகக்கொள்ளும் காலம் வரும் என்று நம்பிக்கை அந்தச் சிரிப்பில் மறைந்திருந்தது. அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் அவள் மிகவும் விரும்பும் ஒன்று இப்படி அபரிமிதமான நம்பிக்கைகொள்ள வைப்பதுதான்.

குழந்தை பெற்றுக்கொள்ள அமெரிக்கா வந்திருந்தபோது, அவள் பெருமையும், பூரிப்பும்கொண்டிருந்தாள். ஏனெனில், தங்கள் மனைவிகளைக் குழந்தை பெற்றுக்கொள்ள அமெரிக்காவிற்கு அனுப்பிய பணக்கார நைஜீரியர்கள் என்ற வரிசையில் சேர்ந்திருந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் என்பதுதான் அதற்குக் காரணமாக இருந்தது. பின்னர், அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீடு விற்பனைக்கு வந்தது. அதை நாம் வாங்குவோம் என்றான் ஒபியோரா. அவன் அவளையும் சேர்த்து ‘நாம்’ என்று சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அத்துடன், அமெரிக்காவில் வீடு வைத்திருந்த பணக்கார நைஜீரியர்களின் வரிசையிலும் அவளது கணவன் இடம்பிடித்திருப்பது அவளுக்கு மேலும் பெருமையைத் தந்தது.

குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்குவது என அவர்கள் முடிவெடுத் திருக்கவில்லை. அது இயல்பாக நிகழ்ந்தது. அடான்னாவிற்குப் பிறகு, மூன்று வருடம் கழித்து ஒகே பிறந்தான். அவள் கணினிப்பாட வகுப்புகளுக்குச் சென்றதால் அடான்னாவுடன் தங்கினாள். அவள் கணினிப்பாட வகுப்புகளுக்குச் செல்வது நல்ல விஷயம் என்று ஒபியோரா சொல்லியிருந்தான். பின்னர் என்கெம் ஒகேவைக் கர்ப்பம் தரித்திருந்தபோது, அடான்னாவை ஒரு முற்பருவப் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர் அவன் குழந்தைகளைச் சேர்க்க நல்ல தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றைக் கண்டுபிடித்தான். அந்தப் பள்ளி வீட்டிற்கு அருகிலேயே இருந்தது அவர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றான் ஒபியோரா. அவளது குழந்தைகள் வெள்ளைக்காரக் குழந்தைகளுடன் அருகருகே அமர்ந்து கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும். அது போன்றதொரு வாழ்க்கையை அவள் கற்பனைசெய்து பார்த்ததில்லை. எனவே, அவள் ஒன்றும் சொல்லவில்லை.

நகல்

முதல் இரண்டு வருடங்கள் ஒபியோரா ஒவ்வொரு மாதமும் வந்துபோனான். அவளும் குழந்தைகளும் கிருஸ்துமஸ்ஸிற்கு லாகோஸிற்குச் சென்றுவந்தார்கள். பின்னர் அவனுக்குப் பெரியஅளவில் அரசாங்க ஒப்பந்தம் கிடைத்தபோது, அவன் கோடை காலத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் அமெரிக்காவிற்கு வந்துபோவது என்று முடிவெடுத்தான். அவனுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள முடியாமலிருந்தது. அரசாங்க ஒப்பந்தங்களை இழக்க அவனுக்கு மனமில்லை. அடுத்தடுத்து அரசாங்க ஒப்பந்தங்கள் குவிந்தன. 50 முக்கியமான நைஜீரியத் தொழிலதிபர்கள் பட்டியலில் அவனும் ஒருவனாக இடம்பிடித்திருந்தான். அந்தப் பட்டியல் வெளியான நியூஸ்வாட்ச் பத்திரிகையின் பக்கங்களை ஒளிநகலெடுத்து அவளுக்கு அனுப்பிவைத்திருந்தான். அவள், அதை ஒரு கோப்பில் இட்டு, பத்திரப்படுத்தினாள்.

பெருமூச்செறிந்த என்கெம், தலைமுடியைக் கையால் கோதுகிறாள். தலைமுடி கெட்டியாக பழையதாகத் தோன்றுகிறது. அவள் நாளைய தினம் ஒபியோரா விரும்பும் விதத்தில் கழுத்தில் விழும்படியாக தலைமுடியைத் திருத்திக்கொள்ளத் திட்டமிட்டிருந்தாள். கூடத்திற்கு நடக்கும் அவள், பின்னர் அகன்ற படிகளில் ஏறி இறங்கிய பின், சமையலறைக்குள் நடக்கிறாள். அவளும் குழந்தைகளும் கிருஸ்துமஸ் பண்டிகையின்போது, லாகோஸிலிருக்கும் நாள்களில் இப்படித்தான் வீடு முழுக்க நடந்து திரிவாள். ஒபியோராவின் அந்தரங்க அலமாரியை முகர்ந்துபார்ப்பாள். அவனது வாசனைத்தைலப் பாட்டில்களைக் கைகளால் தடவிப்பார்ப்பாள். மனதில் முளைக்கும் சந்தேகங்களை ஒதுக்குவாள். ஒருமுறை கிருஸ்துமஸ்ஸிற்கு முந்தைய நாள், தொலைபேசி ஒலிக்கக் கேட்டு எடுத்துப் பேசியபோது, எவரும் பதில் பேசவில்லை. ஒபியோராவிடம் சொன்னபோது, அவன் சிரித்தவாறு, ‘யாராவது குறும்புக்காரர்களாக இருக்கலாம்’ என்றான். அவளும் அது உண்மையில் யாராவது குறும்புக்காரர்களாக இருக்கலாமென்றும் அல்லது தவறான எண்ணிலிருந்து வந்த அழைப்பாக இருக்கலாமென்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

ன்கெம் மாடிப் படிகளில் ஏறிச்சென்று குளியலறைக்குள் நடக்கிறாள், அமேச்சி தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தியிருந்த லைசாலின் கார நெடியை முகர்கிறாள். கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை உற்றுப்பார்க்கிறாள். அவளது வலது கண், இடது கண்ணைக் காட்டிலும் சிறியதாகத் தோன்றுகிறது. அவற்றை ‘கடற்கன்னியின் கண்கள்’ என்று ஒபியோரா குறிப்பிடுவான். அவன் தேவதைகளைவிடவும் கடற்கன்னிகளே மிக அழகான படைப்புகள் என்று எண்ணினான். கச்சிதமான நீள்வட்ட முகம். மாசுமருவற்ற கறுத்தநிற சருமம் என அவளது முக வடிவம் எப்போதும் மற்றவர்களை அது குறித்துப் பேச வைத்திருக்கிறது. ஆனாலும், ஒபியோரா அவளது கண்களைக் கடற்கன்னியின் கண்கள் எனக் குறிப்பிடுவது அவளை மேலும் அழகானவளாக உணரவைத்தது. அந்தப் பாராட்டு அவளுக்கு இன்னொரு ஜோடிக் கண்களைக் கொடுப்பதைப்போலத் தோன்றியது.

அவள், அடான்னாவின் நாடாக்களை சின்னத் துண்டுகளாக வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தரிக்கோலை எடுத்து அதைத் தலைக்கு உயர்த்துகிறாள். முடிக் கற்றைகளை இழுத்துப் பிடித்து தலையின் தோலிற்கு நெருக்கமாகவும் சுருளாகச் சுருட்டுவதற்குப் போதுமான அளவிலும் அவளது கட்டைவிரல் அளவிற்கே விட்டு மயிரை வெட்டுகிறாள். தலைமுடி பஞ்சுத் துண்டுகள்போல மிதந்துசென்று வெண்மைநிறத் தொட்டியில் விழுகின்றன. அவள் மேலும் வெட்டுகிறாள். விட்டில் பூச்சிகளின் கருகிய இறகுகள்போல முடிக்கற்றைகள் மிதந்து விழுகின்றன. அவள் மேலும் முடியைக் கோதி வெட்டுகிறாள். மேலும் முடிக்கற்றைகள் விழுகின்றன. சில கண்களில் விழுந்து, அரிக்கிறது. அவள் தும்முகிறாள். அவள் அன்று காலையில் தலையில் தேய்த்த இளஞ்சிவப்பு நிற பதனத்தைலத்தை முகர்கிறாள். ஒருமுறை டெலவேரில் நடந்த திருமண வைபவத்தில், தான் சந்தித்த நைஜீரியப் பெண்ணை நினைவுகூர்கிறாள். பெயர் நினைவில் இல்லை. அவளும் சுருண்ட தலைமுடியைக்கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் மிகவும் சகஜமாக என்கெமின் கணவனும் அவளது கணவனும் ஏதோ ஒருவிதத்தில் உறவுக்காரர்கள்போல் பாவித்து ‘நமது கணவன்மார்’ என்று விளித்து ஏதோ புகார் சொன்னாள். அவள் என்கெம்மிடம், “நமது கணவன்மார் நம்மை இங்கே அமெரிக்காவில் வைத்திருக்க விரும்புகிறார்கள். தொழில் நிமித்தமாகவும் விடுமுறைக்கும் அவர்கள் இங்கே வருகிறார்கள். பெரிய வீடுகளுடனும் வாகனங்களுடனும் நம்மையும் குழந்தைகளையும் விட்டுச்செல்கிறார்கள். நைஜீரியாவிலிருந்து பணிப் பெண்களைக் கூட்டிவருகிறார்கள். அவர்களுக்கு அளவிற்கதிகமான அமெரிக்கச் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. நைஜீரியாவில் தொழில் நன்றாகப்போகிறது என்றும் இன்னும் பலவற்றையும் சொல்வார்கள். இங்கே தொழில் நல்ல முறையில் நடந்தாலும் அவர்கள் இங்கே தங்க விரும்புவதில்லை. ஏன் தெரியுமா? இங்கே பெரிய மனிதர்கள் என்றால் எவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களை ‘சார்... சார்’ என்று எவரும் விளிக்கமாட்டார்கள். அவர்கள் அமரும் முன்பு இருக்கைகளைத் துடைப்பவர் எவரும் இருக்கமாட்டார்கள்.”

என்கெம், அந்தப் பெண்ணிடம் மீண்டும் நைஜீரியாவிற்குத் திரும்பும் திட்டமிருக்கிறதா எனக் கேட்டபோது, என்கெம் ஏதோ துரோகம் செய்துவிட்டதுபோல் அந்தப் பெண் கண்கள் விரியத் திரும்பிப் பார்த்தாள்.  “திரும்ப நைஜீரியாவில் என்னால் எப்படி வசிக்க இயலும்? இவ்வளவு காலம் இங்கே அமெரிக்காவில் இருந்துவிட்டபின் நான் பழைய ஆளாக எப்படி மாற முடியும்? எனது குழந்தைகள் எப்படிக் கலப்பார்கள்?” என்கெம் அந்தப் பெண்ணின் சிரைக்கப்பட்ட புருவங்களை விரும்பவில்லை என்றாலும்கூட அவளைப் புரிந்துகொண்டாள்.

என்கெம் கத்தரிக்கோலைக் கீழே வைத்துவிட்டு மயிரை அகற்றிச் சுத்தம்செய்ய அமேச்சியை அழைக்கிறாள். அவளைக் கண்டு ‘மேடம்!’ என வீரிடுகிறாள் அமேச்சி.  “உங்கள் கூந்தலை ஏன் வெட்டினீர்கள்? என்ன நடந்தது?”

“நான் என் கூந்தலை வெட்டுவதற்கு ஏதாவது நடக்க வேண்டுமா என்ன? மயிரை அகற்றிச் சுத்தம் செய்!”

என்கெம் அவளது அறைக்குள் நடக்கிறாள். பெரிய அளவிலான மெத்தையின் உறை, சுருக்கங்கள் ஏதுமின்றி இழுத்துவிடப்பட்டிருப்பதை உற்றுப்பார்க்கிறாள். அமேச்சியின் திறமையான கைகளும்கூட மெத்தையின் ஒருபுறம் தட்டையாக இருப்பதையும், அது வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையையும் மறைக்க முடியவில்லை.

அவள் வெளியே வந்து குளியலறையின் பக்கம் நிற்கிறாள். அமேச்சி அடக்கத்துடன் பழுப்பு நிற முடிக்கற்றைகளைக் குப்பைக்கூடையில் சேகரித்து அகற்றுகிறாள். என்கெம் தலைமுடியை வெட்டியிருக்க வேண்டாமோ என நினைக்கிறாள். அமேச்சி இங்கு வந்த பின்னர் இவ்வளவு காலத்தில் மேடம்/பணிப்பெண் என அவர்களைப் பிரிக்கிற கோடு மங்கிவிட்டிருந்தது. அமெரிக்கா உங்களுக்கு அதைத்தான் செய்கிறது என நினைக்கிறாள். சமத்துவத்தை உங்கள் மீது திணிக்கிறது. உங்களது சிறு குழந்தைகள் தவிர, உங்களுடன் பேசுவதற்கு ஆளில்லை. ஆகையால் நீங்கள் இயல்பாகப் பணிப்பெண்ணின் பக்கம் சாய்கிறீர்கள். நீங்கள் அறியும் முன்பாக அவள் உங்களுக்குச் சமதையாக உங்களுடைய தோழியாகிவிடுகிறாள்.

என்கெம் அமேச்சியிடம், “இன்றைய நாள் நன்றாக இல்லை. அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றாள்.

“நான் அறிவேன் மேடம். உங்கள் முகத்திலேயே அது தெரிகிறது! என்று சொல்லி புன்னகை செய்கிறாள் அமேச்சி.

தொலைபேசி ஒலிக்கிறது. அழைப்பது ஒபியோராதான் என்பதை என்கெம் அறிந்திருந்தாள். இரவில் இவ்வளவு நேரத்திற்குப் பிறகு வேறு எவரும் அழைக்க மாட்டார்கள்.

“டார்லிங் எப்படியிருக்கிறாய்?” எனக் கேட்கிறான் ஒபியோரா. “இதற்கும் முன்னதாக என்னால் அழைக்க முடியவில்லை. நான் அபுஜாவிலிருந்து இப்போதுதான் திரும்பினேன். அமைச்சருடன் ஒரு சந்திப்பு இருந்தது. எனக்கான விமானம் நள்ளிரவு வரை தாமதமாகிவிட்டது. இப்போது அதிகாலை இரண்டு மணி ஆகிவிட்டது. உன்னால் இதை நம்ப முடிகிறதா?”

என்கெம், இரக்கத் தொனியில் உச்சுக்கொட்டினாள்.

“அடான்னாவும், ஒகேயும் எப்படியிருக்கிறார்கள்?” எனக் கேட்கிறான்,

“அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். தூங்கிவிட்டார்கள்.”

“உனக்கு உடல்நலம் சரியில்லையா? உன் பேச்சு விநோதமாகப்படுகிறது” என்றான்.

“நான் நலமுடன்தான் இருக்கிறேன்.” குழந்தைகள் பற்றி அவனிடம் பேச வேண்டும் என்பதை அவள் அறிவாள். ஆனால், அவள் நாக்கு தடித்து, வார்த்தைகள் புரளாதவிதத்தில் கனத்துப் போய்விட்டதாக உணர்கிறாள்.

“வானிலை இன்று எப்படி இருந்தது?”

“கதகதப்பு கூடத் தொடங்கியிருக்கிறது.”

“நான் வருவதற்கு முன் அது முடிந்துவிட்டால் நன்றாக இருக்கும்” என்று சொல்லிச் சிரிக்கிறான். “நான் என் விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டேன். உங்கள் எல்லோரையும் விரைவில் பார்ப்பேன்.”

அவள், ‘நீங்கள்... எனத் தொடங்குவதற்கு முன், அவன் முந்திக்கொண்டுவிடுகிறான்.  “டார்லிங், நான் போக வேண்டும். எனக்கு ஒரு அழைப்பு வருகிறது. அமைச்சரின் உதவியாளன்தான் இந்நேரத்தில் அழைக்கிறான். ‘ஐ லவ் யு’ என்கிறான்.
அவளும் ‘ஐ லவ் யு’ என்கிறாள். ஆனால் அதற்கு முன்பாகவே இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது.

அவனைக் காட்சிரூபத்தில் காண முயல்கிறாள். ஆனால், அவளால் முடியவில்லை. ஏனெனில், அவன் வீட்டில் இருக்கிறானா, பயணத்தில் இருக்கிறானா அல்லது வேறு எங்காவது இருக்கிறானா என்பது பற்றி அவளுக்கு உறுதியில்லை. பின்னர் அவன் தனியாக இருப்பானா அல்லது சுருண்ட கேசத்தையுடைய அந்தப் பெண்ணுடன் இருப்பானா என்று யோசிக்கிறாள். அவளது மனம் நைஜீரியாவில் உள்ள படுக்கையறை நோக்கி அலைகிறது. ஒவ்வொரு கிருஸ்துமஸின்போதும் அந்த அறை, ஒரு விடுதிஅறைபோலவே தோன்றுகிறது. அந்தப் பெண் உறக்கத்தில் தலையணையை இறுகப் பற்றுவாளா? அந்தப் பெண்ணின் முனகல் சத்தம் கண்ணாடியில் பட்டுத் திரும்புமா? அந்தப் பெண் குளியலறைக்கு விரல் நுனியில் நடந்து செல்வாளா? (அவளே தனியாளாய் இருந்தபோது திருமணமான காதலன் வீட்டில், மனைவி இல்லாத வாரக் கடைசியில் அவனது வீட்டிற்குக் கூட்டிச் சென்றிருந்தபோது அவ்வாறு விரல் நுனியில் நடந்திருக்கிறாள்.)

அவள் ஒபியோராவை மணப்பதற்கு முன், திருமணமான ஆண்கள் பலருடன் உறவில் இருந்திருக்கிறாள். லாகோஸில் தனியாளாய் இருந்த எந்தப் பெண்தான் அதைச் செய்யாமல் இல்லை? ஒரு தொழிலதிபரான இகென்னா அவளது தந்தைக்கு நடந்த ஹெர்னியா அறுவைச் சிகிச்சைக்கு உண்டான செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டான். ஓய்வுபெற்ற படைத் தளபதியான டுஞ்சி, அவளது பெற்றோரின் வீட்டு மராமத்துச் செலவை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் ஒரு புதிய சோஃபாவையும் வாங்கித் தந்தான். அவன் அவளது இளைய சகோதர, சகோதரிகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வான் என்ற எதிர்பார்ப்பில் அவனுக்கு நான்காம் தாரமாக வாழ்க்கைப்படவும் அவள் தயாராக இருந்தாள். ஆனால், டுஞ்சிக்கு அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை. குடும்பத்தின் மூத்த மகள் என்ற ஸ்தானத்திலிருந்த அவளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட எதையும் அவளால் செய்ய முடியாதிருந்ததால் அவளுக்கு அவமானமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. அவளது பெற்றோர் இன்னும் வறண்டுபோன வயலில் உழன்றுகொண்டிருந்தார்கள். அவளுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் வாகனக் காப்பகங்களில் ரொட்டிப் பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டு திரிந்தார்கள். அவனுக்குப் பின்னும் பலர் அவளது வாழ்க்கையில் வந்துபோனார்கள்.  அவளது மேனியழகைப் பாராட்டியவர்கள், அவள் பள்ளியிறுதி வகுப்புதான் படித்திருக்கிறாள் என அவளை மணந்துகொள்ளச் சம்மதியாதவர்கள் எனப் பலர். அவள் வடிவான முகஅழகைக் கொண்டிருந்தபோதும் அவள் இன்னும் நாட்டுப்புறப் பெண்தான் என்ற காரணத்திற்காக அவர்கள் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

பிறகு, ஒரு மழைநாளில் அவள் ஒபியோராவைச் சந்தித்தாள். அவன் அந்த விளம்பர நிறுவனத்தின் வரவேற்பறைக்குள் நுழைந்தபோது அவள் புன்னகைத்து,  “காலை வணக்கம் சார்! நான் உங்களுக்கு உதவலாமா எனக் கேட்டாள். அவன்,  “ஆமாம். இந்த மழையை நிற்கச் செய்யுங்கள்” என்றான். சந்தித்த முதல் நாளிலேயே ‘கடற்கன்னியின் கண்கள்’ என வர்ணித்தான். மற்ற ஆண்களைப்போல் அவன் அவளைத் தனியார் விருந்தினர் மாளிகையில் சந்திக்குமாறு சொல்லவில்லை. மாறாக பலரும் வந்துபோகும் இடமான லகூன் உணவு விடுதிக்கு அவளை இரவுணவிற்கு அழைத்துச் சென்றான். அங்கு எல்லோரும் அவர்களைப் பார்த்திருக்கக்கூடும். அவன் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்தான். அவன் கொண்டுவரச்செய்த ஒயின் அவள் நாவில் புளித்தது. “நாளடைவில் நீயாக அதை விரும்புவாய்!” என்றான். எல்லோரையும்போல் அவனும் ஒருநாள் அவளைவிட்டு விலகிச் சென்றுவிடுவான் என்ற எதிர்பார்ப்பில் அவள் காத்திருந்தாள். ஆனால், மாதங்கள் உருண்டோடின. அவன் அவளது சகோதர சகோதரிகளைப் பள்ளியில் சேர்த்தான். படகுக்குழாமில் இருந்த அவனது நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தினான். இகெஜாவில் மேல்மாடத்துடன் கூடிய வீட்டில் அவளைக் குடிவைத்தான். பின்னர் அவன் அவளிடம் தன்னை மணந்து கொள்வாளா எனக் கேட்டபோது, அவன் சொன்னாலே போதும் என்றிருந்தது அவளுக்கு.

ந்தப் பெண்ணை அவர்களது படுக்கையில் ஒபியோராவின் கரங்களில் தவழும் கோலத்தில் கற்பனை செய்துபார்க்கிற இந்தப் பொழுதில் அவள் மனதில் ஆழமான உடைமையுணர்ச்சி பெருகுகிறது. தொலைபேசியை வைத்துவிட்டு அமேச்சியிடம் கொஞ்சநேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு காரில் கடைவீதிக்குச் செல்கிறாள். தலைமுடியைப் பதப்படுத்தும் தைலமடங்கிய ஒரு பெட்டியை வாங்குகிறாள். காரில் அமர்ந்தவள் விளக்கை ஒளிரச் செய்து, அந்த அட்டைப்பெட்டியி
லிருந்த சுருண்ட தலைமுடியைக்கொண்ட பெண்ணின் படத்தை உற்றுநோக்குகிறாள்.

அமேச்சி உருளைக் கிழங்கு சீவுவதை என்கெம் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மெல்லிய உருளைக்கிழங்குத் தோல், பழுப்புநிற வட்டங்களாகக் கீழே விழுவதைப் பார்க்கிறாள்.

“கவனமாக இரு. நீ கைக்கு வெகு நெருக்கமாகச் சீவுகிறாய்” என்கிறாள்.

“சேனைக்கிழங்கைச் சரியாகச் சீவவில்லை என்றால் என் அம்மா சேனைக்கிழங்குத் துண்டால் என் தோலில் தேய்த்துவிடுவாள். பல நாள்களுக்குத் தோல் அரித்துக்கொண்டிருக்கும்” என்கிறாள் அமேச்சி சிரிப்புடன். அவள் உருளைக்கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் ஊரில் குழம்பு வைப்பதற்குச் சேனைக் கிழங்கைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், இங்கு ஆப்பிரிக்கப் பொருள்களுக்கான கடைகளில் நல்ல சேனைக்கிழங்கு கிடைப்பதில்லை. அமெரிக்கக் கடைகளில் உருளைக்கிழங்கைத்தான் சேனைக்கிழங்கு என்று சொல்லி விற்கிறார்கள். போலிக்கிழங்கு என்றெண்ணி என்கெம் சிரித்துக்கொள்கிறாள். இருவரது பால்யமும் எப்படி ஒரே மாதிரியானது என்று அவள் அமேச்சியிடம் ஒருபோதும் சொன்னதில்லை. அவளது அம்மா சேனைக்கிழங்கைத் தோலில் தேய்த்ததில்லை. ஆனால், அவளது வாழ்வில் கிழங்கு என்பதே கிடையாது. மாறாகக் கிடைப்பதைக்கொண்டு அவளது அம்மா சமைக்கும் உணவுதான் கிடைத்தது. அவளது அம்மா எவருமே உண்ணாத செடியின் இழைதலைகளைக்கொண்டு கீரைச்சாறு தயாரித்துவிடுவாள். அவை எப்போதும் மூத்திரச் சுவையுடன்தான் இருக்கும். அண்டையில் வசிக்கும் பையன்கள் அந்தச் செடிகளின் மீது மூத்திரம் பெய்வதை அவள் பார்த்திருக்கிறாள்.

“குழம்பு வைக்க கீரையைப் பயன்படுத்தவா அல்லது காய்ந்த ஒனுக்பு இலைகளைப் பயன்படுத்தவா மேடம்” எனக் கேட்கிறாள் அமேச்சி. அவள் சமைப்பதை என்கெம் கவனித்துக்கொண்டிருக்கும்போது அவளைக் கேட்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அமேச்சி. “சிவப்பு வெங்காயமா அல்லது வெள்ளை வெங்காயமா மேடம்?”

“உனக்குப் பிடித்தமானதைப் பயன்படுத்து” என்கிறாள் என்கெம்.

அமேச்சி கழுவும் தொட்டியில் கீரையைக் கழுவுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்கெம். அமேச்சி பலம் மிக்க தோள்களையும் அகன்ற இடுப்பையும் கொண்டிருக்கிறாள். ஒபியோரா என்கெமை அமெரிக்காவிற்கு அழைத்து வந்தபோது அவளுக்குப் 16 வயதுதான். வந்த புதிதில் அதிகமாக வெட்கப்படுகிறவளாக இருந்தாள். பல மாதங்களுக்குப் பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் பார்த்து அதிசயித்துக்கொண்டிருந்தாள். ஒபியோரா அமேச்சியின் அப்பாவிற்கு ஓட்டுனர் வேலை கொடுத்து, இரு சக்கர வாகனமொன்றையும் வாங்கிக்கொடுத்தான். அமேச்சியின் பெற்றோர் ஒபியோராவின் காலில் விழுந்து நன்றி சொன்னபோது, அவர்கள் தன்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அமேச்சி கீரை இலைகளிருந்த வடிதட்டைக் குலுக்கிக்கொண்டிருக்கிறாள். என்கெம், ‘உன் முதலாளி ஒபியோரா ஒரு பெண்ணைக் காதலியாக வைத்திருக்கிறாராம். அந்தப் பெண் இப்போது லாகோஸில் உள்ள வீட்டில் இருக்கிறாளாம்.”

அமேச்சி, வடிதட்டைக் கழுவும் தொட்டிக்குள் போட்டுவிடுகிறாள். “மேடம்?”

“நான் சொன்னது உனக்குக் கேட்டதா?” எனக் கேட்கிறாள் என்கெம். அவளும் அமேச்சியும் ருக்ராட்ஸ் தொலைக்காட்சி தொடரில் எந்தக் கதாபாத்திரம் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது, பிரியாணி செய்ய பாஸ்மதி அரிசியைவிட அங்கிள் பென் அரிசிதான் சிறந்தது, அமெரிக்கக் குழந்தைகள் தங்கள் மூத்தோருக்குச் சமதையாகப் பேசுவது ஆகியவை பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவன் என்ன சாப்பிடுவான் அல்லது அவனது துணிகளை எப்படித் துவைப்பது என்பதைத் தவிர்த்து ஒபியோராவைப் பற்றி வேறு எதுவும் பேசியதில்லை.

அமேச்சி, என்கெம் பக்கம் திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு எப்படித் தெரியும் மேடம்?” எனக் கேட்கிறாள்.

“என் தோழி இஜமமகா தொலைபேசியில் அழைத்து அதை என்னிடம் சொன்னாள். அவள் நைஜீரியாவிற்குச் சென்று திரும்பியிருக்கிறாள்.”

அமேச்சி, அவள் பேசிய வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யக் கேட்பதுபோல் என்கெமை உற்றுப்பார்க்கிறாள். “மேடம், அது உண்மையாக இருக்குமா?”

“இப்படியொரு விஷயத்தில் அவள் பொய்சொல்ல மாட்டாள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்கிறாள் என்கெம். அவளது கணவனின் காதலி அவர்களது வீட்டில் வசிக்கிறாள் என்பதை அவளே உறுதிப்படுத்தும் நிலையிலிருப்பதன் துயரத்தை உணர்கிறாள். ஒருவேளை இஜமமகா பொறாமையில்கூட அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவை பற்றியெல்லாம் யோசித்துப்பார்க்கும் நிலையில் அவள் இல்லை. ஏனெனில், அது உண்மைதான் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அவளது வீட்டில் எவளோ ஒருத்தி வசிக்கிறாள்.

“அடுத்த வாரம் முதலாளி ஒபியோரா இங்கு வரும்போது அதைப் பற்றி அவரிடம் விவாதியுங்கள் மேடம்!” எனச் சொல்லியவாறு அடுப்பிலிருந்த பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றுகிறாள் அமேச்சி. “அவர் அந்தப் பெண்ணை வெளியேறச் சொல்லிவிடுவார். உங்களது வீட்டில் இன்னொரு பெண் வந்து வசிப்பது தவறானது மேடம்!”

“அவர் அந்தப் பெண்ணை வெளியேறச் சொல்லிவிடுவார். பிறகு என்ன?”

“நீங்கள் அவரை மன்னித்துவிடுங்கள் மேடம். ஆண்கள் என்றாலே அப்படித்தான்.”

என்கெம், அமேச்சி பேசுவதைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். அமேச்சியின் பாதங்கள் நீலநிறப் பாதணிகளுக்குள் உறுதியாகத் தரையில் பாவியிருக்கின்றன. “நான், அவர் காதலி வைத்துக்கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல்லியிருந்தால் நீ என்ன சொல்லியிருப்பாய்?” எனக் கேட்கிறாள்.

“எனக்குத் தெரியவில்லை மேடம்” என்கிற அமேச்சி, அவளது பார்வையைத் தவிர்க்கிறாள். கொதிக்கும் எண்ணெயில் வெங்காயத்துண்டுகளைப் போடுகிறாள்.

“உன் முதலாளி ஒபியோரா எப்போதும் காதலிகளை வைத்துக்கொண்டிருக்கிறார் என்று நீ எண்ணுகிறாய். அப்படித்தானே?”

“அது எனக்குத் தேவையில்லாதது மேடம்!” என்கிறாள் அமேச்சி.

‘அதைப் பற்றி உன்னிடம் பேச விரும்பவில்லையெனில் அதைப் பற்றி உன்னிடம் பேசியிருக்கமாட்டேன் அமேச்சி.”

“ஆனால், உங்களுக்கும் அது தெரியும்தானே மேடம்?”

“எனக்கு என்ன தெரியும்?”

“முதலாளி ஒபியோரா காதலிகளை வைத்திருக்கிறார் என்று நீங்கள் அறிவீர்கள் மேடம். நீங்கள் கேள்விகள் கேட்டதில்லை. ஆனால், மனதில் நீங்கள் அறிவீர்கள்.”

என்கெம் இடது காதில் அசௌகரியமான வலியை உணர்கிறாள். மனதில் அறிந்திருப்பது என்றால் என்ன? அவளது வாழ்க்கையில் மற்ற பெண்கள் குறுக்கிடுவதன் சாத்தியத்தை எண்ணிப்பார்க்க மறுக்கிறாளா?

“முதலாளி ஒபியோரா நல்ல மனிதர் மேடம். அவர் உங்கள் மீது அன்பு கொண்டிருக்கிறார். அவர் உங்களைக் கால்பந்தாட்டமாடப் பயன்படுத்தவில்லை.” அமேச்சி அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்குகிறாள். அவளது பார்வை என்கெமின் மீது நிலைத்திருக்கிறது.

அவளது குரல் மென்மையாகவும், நயந்து பேசுவதாகவும் ஒலிக்கிறது. “பெண்கள் பலரும் உங்கள் மீது பொறாமை கொண்டிருப்பார்கள். ஒருவேளை உங்கள் தோழி இஜமமகா உங்கள் மீது பொறாமை கொண்டிருக்கலாம். அவள் உங்களுக்கு உண்மையான தோழியாக இல்லாமலிருக்கலாம். அவள் உங்களிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் அறியக்கூடாத நல்ல விஷயங்கள் இருக்கின்றன.”

என்கெம், தலைமுடிக்குள் கையைவிட்டு அளைகிறாள். பதப்படுத்தும் தைலம் தடவியதால் பிசுபிசுவெனக் கையில் ஒட்டுகிறது. கையைக் கழுவ எண்ணி எழுகிறாள். அவள் அமேச்சியுடன் சில விஷயங்களில் ஒத்துப்போக நினைக்கிறாள். அறியாமலிருக்க வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. இஜமமகா தன்னிடம் சொன்னதில் மோசம் ஒன்றுமில்லை என நினைக்கிறாள். “உருளைக்கிழங்கைப் பார்’ என்கிறாள் என்கெம்.

ன்று இரவு குழந்தைகளைப் படுக்கைக்கு அனுப்பிய பிறகு, சமையலறையில் உள்ள தொலைபேசியை எடுத்து பதினான்கு இலக்க எண்ணைப் பதிவிடுகிறாள். அவள் நைஜீரியாவிற்குத் தொலைபேசியில் பேசியதில்லை. எப்போதும் ஒபியோராதான் அழைப்பான். அவனது வோர்ல்ட்நெட் அலைபேசி சேவை சர்வதேச அழைப்புகளுக்குப் பல சலுகைகளை வழங்குகிறது.

“ஹலோ! மாலை வணக்கம்.” ஆண் குரல் ஒலிக்கிறது. படிப்பறிவற்ற நாட்டுப்புற இபோ உச்சரிப்பு.

“அமெரிக்காவிலிருந்து மேடம் பேசுகிறேன்.”

“மேடம்!” குரல் மாறுகிறது. இதம் கூடுகிறது. “மாலை வணக்கம் மேடம்!”

“பேசுவது யார்?”

“உசென்னா மேடம். நான் புதிதாக வந்திருக்கிற வேலைக்காரப் பையன்.”

“நீ எப்போது வந்தாய்?”

“நான் வந்து இரண்டு வாரங்கள் ஆயிற்று மேடம்.”

“முதலாளி ஒபியோரா இருக்கிறாரா?”

“இல்லை மேடம். இன்னும் அபுஜாவிலிருந்து திரும்பவில்லை.”

“வேறு யாரும் இருக்கிறார்களா?”

“எப்படி மேடம்?”

“வேறு யாரும் இருக்கிறார்களா?”

“சில்வெஸ்டரும், மரியாவும் இருக்கிறார்கள் மேடம்.”

என்கெம் பெருமூச்சு விடுகிறாள். வீட்டு மேற்பார்வையாளனும் சமையல்காரியும் இருப்பார்கள் என்பதை அவள் அறிவாள். நைஜீரியாவில் இப்போது நள்ளிரவாக இருக்கும். புதிதாக வந்த வேலைக்காரப் பையனைப் பற்றி ஒபியோரா தன்னிடம் சொல்லவில்லையே. அந்தச் சுருண்ட கேசத்தையுடைய பெண் இருப்பாளா? அல்லது தொழில் நிமித்தமான பயணத்தில் அவளும் ஒபியோராவுடன் சென்றிருப்பாளா?

“வேறு யாரும் இருக்கிறார்களா?”

என்கெம் மறுபடியும் கேட்கிறாள்.

“மேடம்?”

“சில்வெஸ்டர், மரியாவையும் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா?”

“இல்லை மேடம். இல்லை.”

“நிச்சயமாக இல்லையா?”

சற்று நீண்ட இடைவெளி விட்டு, “ஆமாம் மேடம்.”

“ஓகே. முதலாளி ஒபியோராவிடம் நான் அழைத்ததாகச் சொல்.”

என்கெம் இணைப்பை உடனே துண்டித்து விடுகிறாள். நான் இப்படித்தான் மாறியிருக்கிறேன் என நினைக்கிறாள். நான் முன்பின் அறியாத வேலைக்காரப் பையனிடம் என் கணவனைப் பற்றி உளவு பார்க்கிறேன்.

அமேச்சி, “கொஞ்சம் குடிக்கிறீர்களா மேடம்?” எனக் கேட்கிறாள். என்கெம் அமேச்சியின் சற்றே சாய்ந்த கண்களில் தெரிவது இரக்கமா என யோசிக்கிறாள். என்கெம் பச்சை அட்டையைப் பெற்ற நாளிலிருந்து சில வருடங்களாக கொஞ்சமான அளவில் குடிப்பது அவர்களது மரபாகிவிட்டிருந்தது. அன்று குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பிறகு, அவள் ஒரு சாம்பெய்ன் பாட்டிலைத் திறந்து அமேச்சிக்கும் தனக்குமாக ஊற்றினாள். அமேச்சியின் உரத்த சிரிப்பிற்கு நடுவே அவள் ‘அமெரிக்காவிற்கு’ என்று சொல்லி கோப்பையை உயர்த்தினாள். இனிமேல் அமெரிக்காவிற்குத் திரும்பி வர விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அமெரிக்கத் தூதரகத்தில் கேட்கப்படும் தரக்குறைவான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இப்போது அவள் இந்த நாட்டைச் சொந்தமாகக்கொண்டவள். ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களும் குரூரத் தனங்களும் ஒருசேரக் காணப்படுவது இந்த நாடு. இந்த நாட்டில் இரவில் ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்களைப் பற்றிய அச்சமின்றி காரோட்டிச் செல்லலாம். மூன்று பேர் சாப்பிடப் போதுமான உணவை ஓராளுக்குப் பரிமாறும் உணவு விடுதிகளைக்கொண்டது இந்த நாடு.

சொந்த மண்ணையும் நண்பர்களையும் பிரிந்திருக்கிற ஏக்கம் அவளுக்கு இருக்கிறது. அமெரிக்க நகரங்களின் தெருக்களில் பனி படர்வதைப் பார்க்கையில் மழை பெய்யும்போதும் வெயிலடிக்கிற லாகோஸின் மாலை நேரங்களைப் பற்றி அவளுக்கு நினைவு வரும். சில வேளைகளில் ஊருக்குத் திரும்பிவிடுவதைப் பற்றி யோசித்திருக்கிறாள். ஆனால், இப்போது அமெரிக்கா அவளுக்குள் ஊறிவிட்டது.

“சரி! கொஞ்சமாகக் குடிக்கலாம்.” என்கிறாள் அமேச்சியிடம். ‘ஃப்ரிட்ஜில் இருக்கிற ஒயின் பாட்டிலையும் இரண்டு கோப்பைகளையும் எடுத்து வா”

ன்கெம் ஒபியோராவை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரச் செல்கிறாள். ஒகேயும், அடான்னாவும் பின்னிருக்கைகளில் கச்சைகளை மாட்டி அமர்ந்திருக்கிறார்கள். ஒபியோராவை அழைக்கச் செல்கையில் அவள் சிரித்த முகமாகத்தான் இருப்பாள். இன்று அவள் சிரிக்கவேயில்லை. அதை உணர்ந்ததாலோ என்னவோ அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள். முதல் நாளன்று அவர்கள் எல்லோரும் இரவுணவிற்கு உணவு விடுதிக்குச் செல்வார்கள். வீட்டிற்குத் திரும்பிய பிறகு, ஒபியோரா குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை அளிப்பான். அவர்கள் அவன் கொண்டுவரும் விளையாட்டுப் பொருள்களுடன் இரவில் நெடுநேரம் கண் விழித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவள், அவன் வாங்கிவந்த வாசனைத் தைலத்தையும், வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே அணிய வாய்க்கும் இரவுநேர உடையையும் அணிவாள்.

அவன் எப்போதுமே அவனது குழந்தைகளின் நடத்தைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறான். அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என அவன் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாமே அவள் தொலைபேசி வழியாகச் சொல்லக் கேட்டதுதான். அவனது நண்பர்களின் வருகையின்போது, அவன் குழந்தைகளிடம் மாமாவிற்கு வணக்கம் சொல்லுங்கள் என்பான். அதற்கு முன்னதாக “இவர்கள் பேசும் ஆங்கிலத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் இவர்கள் அமெரிக்கர்களாக மாறிவிட்டார்கள்” என்று சொல்லி நண்பர்களைச் சீண்டுவான்.

விமானநிலையத்தில் எப்போதும் போலவே அவர்கள் குதூகலத்துடன்  “டாடி...” என்று சொல்லி ஒபியோராவைக் கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். என்கெம் அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள். அவன் கொண்டுவரும் விளையாட்டுப் பொருள்களால் கவரப்படும் நிலை விரைவில் மாறி, அவர்கள் வருடத்தில் சிலமுறை மட்டுமே பார்க்கக் கிடைக்கும் அவனைக் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என நினைக்கிறாள்.

ஒபியோரா அவளை முத்தமிட்ட பிறகு, சற்றுப் பின்னால் சென்று அவளைப் பார்க்கிறான். அவன் எந்தவித மாற்றமுமின்றி இருக்கிறான். சாதாரணமாக, வெளுத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும் அவன், விலையுயர்ந்த மேற்சட்டையை அணிந்திருக்கிறான். “டார்லிங்! நீ எப்படியிருக்கிறாய்? நீ உன் கூந்தலை வெட்டிவிட்டாயா?” எனக் கேட்கிறான்.

என்கெம் தோள்களைக் குலுக்கிக்கொண்டு முதலில் குழந்தைகளைக் கவனியுங்கள் என்று சொல்லும் விதத்தில் மெல்லச் சிரிக்கிறாள்.

“டாடி, எங்களுக்கு என்ன கொண்டுவந்தீர்கள்?” எனக் கேட்டு அடான்னா அவனது கையைப் பிடித்து இழுக்கிறாள்.

இரவுணவிற்குப் பின்னர், என்கெம் படுக்கையில் அமர்ந்து வெண்கலத்தினாலான இஃபே தலையைப் பார்க்கிறாள். அது உண்மையில் பித்தளையால் செய்யப்பட்டது என ஒபியோரா சொல்லியிருந்தான். அது வர்ணம் பூசப்பட்டு, தலைப்பாகையுடன் காணப்படுகிறது. ஒபியோரா கொண்டுவந்துள்ள முதல் அசலான பொருள் அதுதான்.

“நாம் இதைக் கையாளுகையில் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறான் அவன்.

அதைக் கையால் தடவியவாறு ஆச்சரியப்பட்டவளாய், “அசலான பொருள்” என்கிறாள் அவள்.

“சில பொருள்கள் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால், இது பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதற்குக் கொடுத்த விலைக்குத் தகுந்த பொருள்தான்” என்று சொல்லியவாறு அவன், அவளருகே அமர்ந்து காலணிகளைக் கழற்றுகிறான். அவனது குரல் கிளர்ச்சியுடன் ஒலிக்கிறது.

“இது எதற்குப் பயன்படுத்தப்பட்டது?” எனக் கேட்கிறாள் என்கெம்.

“அரசனின் மாளிகையை அலங்கரிக்கத்தான். அவற்றில் பெரும்பாலானவை அரசனை நினைவுகூரவோ கௌரவிக்கவோ செய்யப்பட்டவைதான். அருமையாக இருக்கிறதல்லவா?”

“ஆம். இதைக்கொண்டும் அவர்கள் பயங்கரமான செயல்களைச் செய்தார்கள் என நம்புகிறேன்.”

“என்ன?”

“பெனின் முகமூடிகளைக்கொண்டு செய்ததைப்போல. அரசனின் சவத்துடன் புதைக்க என மனிதத் தலைகளுக்காக அவர்கள் மனிதர்களைக் கொன்றார்கள் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.”

ஒபியோராவின் பார்வை அவள் மீது நிலைத்திருக்கிறது.

அவள் அந்த வெண்கலத்தலையை விரல் நகத்தால் தட்டுகிறாள்.

“நீ ஏன் உன் கூந்தலை வெட்டினாய்?” எனக் கேட்கிறான் ஒபியோரா.

“உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

“எனக்கு உன் நீண்ட கூந்தலைப் பிடித்திருந்தது.”

“குட்டையான தலைமுடி உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

“நீ ஏன் அதை வெட்டினாய்? அமெரிக்காவில் இதுதான் புதுப் பாணியா?” அவன் சிரித்தவாறு குளிக்கத் தயாரானவனாய் சட்டையைக் கழற்றுகிறான்.

அவனது வயிறு வேறுபட்டுத் தெரிகிறது. முதிர்ந்து உப்பிய வயிறு. இருபதுகளில் இருக்கும் இளம்பெண்கள், மத்திய வயதின் அடையாளங்களைக்கொண்ட ஆண்களை எப்படிச் சகித்துக்கொள்கிறார்கள் என்று அவள் யோசிக்கிறாள். அவள் உறவிலிருந்த திருமணமான ஆண்களை நினைவுகூர முயல்கிறாள். அவர்கள் ஒபியோராவைப்போல் முதிர்ந்து, உப்பிய வயிற்றைக்கொண்டிருந்தார்களா? அவளால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எதையுமே அவளால் நினைவுகூர முடியவில்லை. அவளது வாழ்க்கை எங்கே போயிருக்கிறது என்பதைக்கூட.

“உங்களுக்குப் பிடிக்கும் என நான் நினைத்தேன்” என்கிறாள் அவள்.

“உனது அழகான முகத்திற்கு எதுவென்றாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் டார்லிங். ஆனால், நான் உன் நீண்ட கூந்தலை அதிகமாக விரும்பினேன். நீ அதை மீண்டும் வளர்க்க வேண்டும். பெரிய மனிதனது மனைவிக்கு நீண்ட கூந்தல்தான் அழகாக இருக்கும்.” அவன் ‘பெரிய மனிதன்’ என்பதை அழுத்திச் சொல்லிச் சிரிக்கிறான்.

அவன் இப்போது நிர்வாணமாக இருக்கிறான். உடம்பை வளைத்து நெளித்து குளியலுக்குத் தயாராகிறான்.

அவனது வயிறு மேலும் கீழும் குலுங்குவதைக் கவனிக்கிறாள். மணமான புதிதில் அவளும் கிளர்ச்சியுற்று அவனுடன் சேர்ந்து குளித்திருக்கிறாள். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டன.

அவள் அவனது வயிற்றைப்போல கனிந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவளாகிவிட்டாள். அவன் குளியலறைக்குள் நடப்பதைப் பார்க்கிறாள்.

“ஓராண்டு காலத் தாம்பத்ய வாழ்க்கையை கோடைகாலத்தில் இரண்டு மாதங்கள், டிசம்பர் மாதத்தில் மூன்று வாரங்கள் என சுருக்க முடியுமா?” எனக் கேட்கிறாள்.

ஒபியோரா மலப்பிறையைக் கழுவிவிட்டு “என்ன?” எனக் கேட்கிறான்.

“ஒன்றுமில்லை.”

“என்னோடு குளிக்க வா!”

அவள் தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதன் சத்தத்தில் ஒன்றும் கேட்காதவள்போல் பாசாங்கு செய்கிறாள். சுருண்ட தலைமுடியைக்கொண்ட அந்தப் பெண் ஒபியோராவுடன் சேர்ந்து குளிப்பாளா என யோசிக்கிறாள்.

குளியலறையிலிருந்து எட்டிப்பார்த்து ஒபியோரா, “டார்லிங், என்னுடன் குளிக்க வா!” என்கிறான். அண்மையில் இரண்டு வருடங்களாக அவன் தன்னோடு குளிக்கச் சொல்லிக் கேட்டதில்லை. அவள் தன் ஆடைகளைக் களைகிறாள்.

குளியலறையில் அவனது முதுகில் சோப்பைத் தேய்த்தவாறு, “அடான்னாவிற்கும், ஒகேவிற்கும் லாகோஸில் பள்ளியொன்றைப் பார்க்க வேண்டும்” என்கிறாள். அதைச் சொல்ல வேண்டுமென்று அவளுக்குத் திட்டமேதும் இருக்கவில்லை. ஆனால், அதுதான் சரியானது. அவள் எப்போதும் அதைத்தான் சொல்ல வேண்டுமென்று விரும்பினாள்.

ஒபியோரா திரும்பி, அவளை உற்றுப் பார்த்தவாறு “என்ன?” என வினவுகிறான்.

“குழந்தைகளுக்குப் பள்ளி இறுதித்தேர்வு முடிந்த பிறகு, நாம் ஊருக்குத் திரும்புகிறோம். நாம் லாகோஸில் வாழ திரும்பிப் போகிறோம்.” அவள் அவனது மனதை மாற்றும் முயற்சியில் மெள்ளப் பேசுகிறாள். ஒபியோரா அவளைத் தொடர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் அவனது முகத்திற்கு எதிராக நின்று எதையும் இதுவரை பேசியதில்லை. அவளாக ஒரு முடிவெடுத்து பேசிக் கேட்டதில்லை. அந்தக் குணம்தான் முதலில் அவளிடம் அவனை ஈர்த்திருக்குமோ என யோசிக்கிறாள்.

“நாம் விடுமுறைக்காலத்தை இங்கே ஒன்றாகக் கழிக்கலாம்.” என்கிறாள் என்கெம் ‘நாம்’ என்பதை அழுத்திச் சொல்கிறாள்.

“என்ன... ஏன்?” எனக் கேட்கிறான் ஒபியோரா.

“நான் எனது வீட்டில் புது வேலைக்காரப்பையன் வேலைக்குச் சேர்ந்ததை அறிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும், குழந்தைகளுக்கு நீங்கள் தேவை.”

“அதுதான் உன் விருப்பம் என்றால், அதைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம்” என்கிறான் ஒபியோரா முடிவாக.

அவள் அவனை மெள்ளத் திருப்பி, அவனது முதுகில் சோப்பைத் தேய்க்கிறாள். பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை. அது நடந்துவிடும் என்பதை என்கெம் அறிவாள்.

நைஜீரியாவின் இபோ இனத்தவரான சிமாமண்டா என்கோஜி அடிச்சீ 15.9.1977 அன்று நைஜீரியாவின் அநம்ப்ரா மாநிலத்தில் உள்ள எநுகு எனும் ஊரில் பிறந்தார். அவரது முதல் நாவல் பர்ப்பிள் ஹைபிஸ்கஸ் (Purple Hibiscus) அக்டோபர் 2003-ல் வெளியிடப்பட்டு 2005-ம் ஆண்டு காமன்வெல்த் நாட்டு எழுத்தாளர்களுக்கான விருதினைப் பெற்றது. 2004ம் ஆண்டு ஆரஞ்சு (Orange), புக்கர் (Booker) ஆகிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் பட்டியலில் இடம்பெற்றது. 2003ம் ஆண்டு ஓ ஹென்றி (O Henry) விருதினைப் பெற்றார். 2006-ல் வெளியான அவரது இரண்டாவது நாவல் ‘மஞ்சள் நிறச் சூரியனின் பாதி’ (Half of a yellow sun), 2007-ம் ஆண்டிற்கான ஆரஞ்சு விருதினைப் பெற்றது.

தனது படைப்புகள் யாவும் உண்மையை அடிப்படையாகக்கொண்டே எழுதப்பட்டவை என்றும் அவற்றில் தனது கற்பனை சிறிதளவே கலந்துள்ளது என்றும் அடிச்சீ கூறுகிறார். அடிச்சீ, தற்போது நைஜீரியாவிலும் அமெரிக்காவிலுமாக வாழ்ந்து வருகிறார். தான் அமெரிக்காவில் இருந்தாலும் எப்போதுமே ஒரு நைஜீரியப் பெண்ணாகவே தன்னை உணர்வது தனக்கு இணக்கமாக உள்ளதாகக் கூறும் அவர், ‘உலகை நான் நைஜீரியக் கண்கள்கொண்டே பார்க்கிறேன்’ என்கிறார். இந்த ‘நகல்’ சிறுகதை உள்ளிட்ட அடிச்சீயின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ‘உன் கழுத்தைச் சுற்றி இருப்பது’ என்ற தலைப்பில் ‘பாரதி புத்தகாலய’த்தில் விரைவில் வெளிவரவிருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு