Published:Updated:

கி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்
கி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்

படங்கள்: புதுவை இளவேனில்

பிரீமியம் ஸ்டோரி

நாட்டுப்புறக் கதைகள், நம் தொன்மத்தின் வேர்களை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பண்பாட்டு ஊடகம். முன்னோர்கள், தெய்வங்கள், மட்டுமின்றி மண்ணில் விளைந்த பயிர்களையும், பழங்களையும் பற்றிய பல கதைகள் நம்மிடம் இருக்கின்றன. மூதாதையர்களின் தீர்க்கமான ரேகைகள்போலவே நாட்டுப்புறக் கதைகளும் ஆழ்ந்த அர்த்தம்கொண்டவை. அவை கட்டுப்பாடற்ற கற்பனையைக்கொண்டு உருவானவை. உழைத்துக் களைத்த மக்களின் மறு தினத்திற்கான உத்வேகத்தைக் கொடுத்தவை. புழுதியைத் தங்கள் தேகத்தின் நிறமாக்கிய சிறுவர்களுக்கு உறக்கத்தையும், உறக்கத்தில் கனவுகளையும் கொடுத்தவை. அந்த நாட்டுப்புறக் கதைகளைத் தன் எழுத்துகளின் வழியே  பெருங்
கொடையாகக் கொடுத்தவர் கி.ராஜநாராயணன். அவரின் பல நாட்டுப்புறக் கதைகளை ஒன்றாகக் கலந்து, ‘கி.ரா குழம்பு’ என்ற நவீன நாடகத்தை அரங்கேற்றினர் ‘பெர்ச்’ நாடகக் குழுவினர். 

கி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்

கோழி தலைகுனிந்து பூமியில் எதைத் தேடுகிறது, மொச்சைப் பயற்றின் வயிற்றில் ஏன் வெள்ளைநிறக் கோடு உள்ளது, வானமும் பூமியும் ஏன் தனித்தனியே தொலைவில் இருக்கிறது. இவற்றுக்கான பதிலைத்தான் ‘கி.ரா.குழம்பு’ கவித்துவமாக நிகழ்த்துகிறது.

வாரயிறுதி நாளின் சூரியன் மறையத் தொடங்கிய நேரம், மஞ்சள்நிற விளக்கொளியின் கதகதப்பில்  ஆரம்பமானது நாடகம். ‘முன்னவொரு காலத்துல வானம் ரொம்ப தூரமில்ல’ என வெண்கலக் குரல் உதிர்த்த பாடல், ‘கோபல்ல கிராமத்தின்’ கரிசல் நில வரைபடத்தை வரையத்  தொடங்கியது. வானம், பூமி, சூரியன், நிலா, கருடன், இட்லிக்காரப் பாட்டி, நாவல்மரம், சுப்புச் செட்டியார், மொச்சைப் பயறு எனக் கி.ரா-வின் கதாபாத்திரங்களைத் தற்போதைய சூழலுடன் புனைந்து கலைக்குழம்பு படைக்கப்பட்டது. கி.ராவின் கதைகளில் நிறைந்திருக்கும் கிராமத்து நையாண்டி, கரிசல் சிறுவர்களின் சேட்டை என அனைத்தும் நாடகத்திலும் தவறவில்லை. அதிகற்பனையின் உச்சத்தை சமகால யதார்த்தத்தின் அறத்துடனும் அரசியலுடனும் பேசியது நாடகம். அதன் ஒட்டுமொத்த சாராம்சம் இவைதாம்:

வானமும் பூமியும் காதலர்கள். தற்போது இருப்பதைப்போல வெகுதொலைவுகளில் பிரிந்துகிடக்காமல் நெருங்கியிருந்த காலம். அவர்களின் குழந்தைகளான சூரியனும் சந்திரனும் கோபல்ல கிராமத்தில் சுற்றித் திரிகின்றன. இட்லிக்காரப் பாட்டி, தன்  தென்னைமரத் துடப்பத்தால் அடித்ததில் சூரியனும் நிலவும் மேலே செல்கின்றன. பாட்டி அடித்ததில் பாட்டியின் தென்னந் துடப்பத்திலிருந்த ஒரு தென்னங்குச்சியும், பாட்டி சமைப்பதற்கு வைத்திருந்த ஒரு சிறு மொச்சைப் பயறும் சிதறிவிழுகின்றன. தன் பிள்ளைகளோடு வானமும் மேலே செல்கிறது. வானம் மேலே சென்றபோது, கோபல்ல கிராமத்திலுள்ள நாவல்மர உச்சியிலிருந்து கருடனும் வானத்தோடு மேலே செல்கிறது. மேலே சென்ற கருடன், பரந்தாமனிடம் பூமிக்குச் சென்று நாவல்பழம் சாப்பிடுவதற்கான வழியைக் கேட்கிறது. (அது வரை சிறகற்றிருக்கும்) கருடனின் சிறகைத் தைக்க பரந்தாமன் ஓர் ஊசியைக் கொடுக்கிறார். சிறகைத் தைக்கக் கொடுக்கும் ஊசியுடன் பூமிக்கு வரும் கருடன், கோபல்ல கிராம மக்களுடன் கொள்ளும் உரையாடலையும் மக்களின் வாழ்வையும் குறித்த மாயாயதார்த்தப் புனைவுதான் கி.ரா. குழம்பு. 

கி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்

கருடன், பரந்தாமன், வானம், பூமி, இட்லிக்காரப் பாட்டி, சுப்புச் செட்டியார், சூரியன் நிலா, கோழி, தவளை, சிறுவர்கள், மொச்சைப் பயறு, தென்னங்குச்சி என ஒட்டுமொத்தக் கதாபாத்திரங்களையும் நடித்தது ஆனந்த் சாமி, ரவீந்திரா விஜய், மாயா எஸ்.மோகன் ஆகிய மூன்றே பேர்தான். (பாண்டிச்சேரியில் நிகழ்த்தப்பட்டபோது மாயாவுக்கு பதில் காளீஸ்வரி பங்குபெற்றார்.)  

ஒவ்வொரு உயிர்களின் உடல்மொழியோடும் கதைக்கான எள்ளல்தன்மை குழைத்த நடிப்பை வெளிப்படுத்தினர் நடிகர்கள். வானம், கிராமம் போன்றவற்றிற்கான எவ்வித ஓவியப் பின்புலமும் இல்லாமல் தங்கள் நடிப்பாலும் பாடல்களாலும் அந்த அரங்கத்திற்குள் வானத்தையும் கிராமத்தையும் பறவைகளையும் கொண்டுவந்தார்கள். பின்னணி இசையற்ற, மூன்று பாடல்களுடன் நாடகத்தை இயக்கியிருந்தார் ராஜீவ் கிருஷ்ணன்.

வானத்தில் உள்ள பரந்தாமன், மக்களின் வேண்டுதலிலும் அவர்களின் பஜனையிலும் சலிப்புற்று உறங்கியே கிடக்கிறார். “வானம், பூமியிடமிருந்து வெகுதொலைவில் இருப்பது மகிழ்ச்சிதான். ஒருவேளை வானமும் பூமியும் அருகருகே இருந்தால், மனிதர்கள் தினமும் வேண்டுதல்கள் வைத்து துன்புறுத்துவார்கள்” என்கிறார். கருடனிடம் தான் கூறும் மந்திரத்தை மனிதர்களிடம் கூறிவிட்டு, ‘பரோட்டாவும் சால்னாவும்’ வாங்கிவரச் சொல்கிறார். பூமியில் அந்த மந்திரத்தைச் சொன்னதும் பாம்பின் தோல் உரிவதாக நடித்துக்காட்டி அரங்கைச் சிரிப்பில் ஆழ்த்தினர்.

கி.ரா.குழம்பு - சக்தி தமிழ்ச்செல்வன்

பூமிக்கு வந்த கருடன், தன் சிறகைத் தைக்க பரந்தாமன் கொடுத்த ஊசியை காகத்திற்கும் கோழிக்கும் கொடுக்கிறது. அதற்குப் பதிலாக, தான் கேட்பவற்றை தருவீர்களா என இருவரிடமும் கேட்க, ‘சரி’ என்கின்றன இரண்டும். ஆதார் கார்டு எடுத்துத் தருவீர்களா? எனக் கருடன் கேட்க,  ‘அது மட்டும் முடியாது. நீ மாடாக இருந்தால்கூட கிடைத்துவிடும். ஆனால், உனக்குக் கிடைக்காது’ எனச் சமகால அரசியலையும் இடைச்செருகியிருந்தனர். கோழியிடம் கொடுத்த ஊசியைத் தவறவிட்ட கோழி, இன்றுவரை தலைகுனிந்து அந்த ஊசியை பூமியில் தேடிக்கொண்டி ருக்கிறது என விளக்கம் கொடுத்தனர்.

கோபல்ல கிராமத்தில் இட்லி வியாபாரம் செய்யும் பாட்டி சூரியனை அடித்தபோது, சிதறிய மொச்சைப் பயறும் தென்னங்குச்சியும் நாவல்பழம் சாப்பிட ஆசைப்படுகிறார்கள். நாவல்மரத்துக்குச் செல்ல ஆற்றைக் கடக்கையில் நிறைய தண்ணீர் குடித்ததால், மொச்சைப் பயற்றின் வயிறு கிழிகிறது. அதன் வயிற்றைத் தைக்க, கோழி தொலைத்த ஊசியை தென்னங்குச்சி எடுக்கிறது. அதைக் கோபல்ல கிராம தையல்காரனிடம் கொடுக்க, வெள்ளை நூலில் மொச்சைப் பயற்றின் வயிறைத் தைக்கிறார். அதோடு நாடகத்தை நிறைவுசெய்த குழு, பார்வையாளர்கள் அனைவருக்கும் மொச்சைப் பயறு ஒன்றைக் கொடுத்தனர். அதன் வயிற்றுப் பகுதியில் வெள்ளையாக ஒரு கோடு தெரிந்தது. அந்தத் தழும்பு போன்ற கோடு, கி.ராவை, இட்லிக்காரப் பாட்டியை, கோபல்ல கிராமத்து மக்களை, பார்வையாளர்களை, வானத்தை, பூமியை அவற்றோடு சேர்த்து நம்மையும் ஒரு புள்ளியில் இணைத்தது. அதுதான் நிகழ்வின் உச்சம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு