Published:Updated:

“இழைத்தலின் மீது நம்பிக்கையில்லை!” - சீனிவாசன் நடராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“இழைத்தலின் மீது நம்பிக்கையில்லை!” - சீனிவாசன் நடராஜன்
“இழைத்தலின் மீது நம்பிக்கையில்லை!” - சீனிவாசன் நடராஜன்

சந்திப்பு: வெ.நீலகண்டன் - படங்கள்: கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

சீனிவாசன் நடராஜன், சிந்தாந்தம் கலந்த படிமக்கோடுகளைத் தொழில்நுட்பக் கலவைகொண்டு உயிர்ப்பிக்கும் சமகால பாணி சித்திரக்காரர். தைல வண்ணக் காலகட்டத்தின் தொடர்ச்சியான வீடியோ ஆர்ட், மல்டி மீடியா, டிஜிட்டல் மேனுப்புலேஷன்  போன்ற நவீன உத்திகளில் தனக்கெனத் தனி அடையாளத்தைக் கண்டடைந்தவர். தற்போது, தொன்மத் தத்துவார்த்தத்தின் ஏகாந்த வெளிப்பாடான வெகுநுட்பப் படிமச் சித்திரங்களில் வந்து நிற்கிறார். உலகெங்கும் படைப்புகளைக் காட்சிப்படுத்திய, அங்கீகாரங்களைப் பெற்ற, கவனிக்கப்படும் இந்திய நவீன ஓவியர்களில் ஒருவரான சீனிவாசன் நடராஜனுடன் ஒரு மாலை நேரச் சந்திப்பும் உரையாடலும்!

“இழைத்தலின் மீது நம்பிக்கையில்லை!” - சீனிவாசன் நடராஜன்

“தமிழகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஓவியத்தில் பயன்படுத்திய கலைஞர்களில் ஒருவர் நீங்கள். ஆனால், இப்போதைய உங்கள் சித்திரங்களில் சிந்தாந்தத் தன்மை மிகுந்திருக்கிறதே?”

“நான் சிந்தாந்தவாதி. சித்தாந்தத்தை நம்பும் எந்தக் கலைஞனும் இறுதியில் அதற்குள்தான் கரைந்தாக வேண்டும். தீவிரமான அனுபவார்த்த வாழ்க்கையில் நான் இப்போது கண்டடைந்திருப்பது இந்த வெளி. நான் பிறந்து வளர்ந்த சூழல் என்னை இப்படி நகர்த்தியிருக்கிறது. கீழத்தஞ்சையில் உள்ள ராஜமன்னார்குடி என்ற ஊரைச் சேர்ந்தவன் நான். சைவத்தைப் பின்னணியாகக்கொண்டது எங்கள் குடும்பம். சென்னை ஓவியக்கல்லூரியில் படித்தேன். அந்தோணி தாஸ், சந்தானராஜ், கன்னியப்பன், பாஸ்கரன் எனப் புகழ்பெற்ற ஓவியர்கள் அப்போது அங்கு இருந்தார்கள். கீழத்தஞ்சையில் ஒவ்வொரு வீடுமே நூலகம் போலிருக்கும். ஏராளமான பக்தி இலக்கிய நூல்களை வரிசை வரிசையாக அடுக்கிவைத்திருப்பார்கள். எனக்குச் சிறுவயதிலிருந்தே சித்தாந்தங்களைக் கற்பதில் ஆர்வமுண்டு. சைவக் குடும்பம் என்பதால் அந்தத் தேடல் இயல்பானதுதான். கோயிலில் சித்திரம் வரையும் குடும்பம் ஒன்று எங்கள் ஊரில் இருந்தது. அந்தக் குடும்பத்தில் ஐக்கியமாகிவிட்டேன். சுவற்றுக்கு வெள்ளையடிப்பதைத்தான் முதன்முதலில் கற்றுக்கொடுத்தார்கள். பிறகு, படிப்படியாகக் கோடுகள் இழுக்கப் பழகினேன். தெய்வ வடிவங்கள் கைவந்தன. எங்கள் ஊரைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் சூரியமூர்த்தி, என் ஆர்வம் கண்டு எனக்கு நவீன பாணி ஓவியங்களையும் ஓவியர்களையும் அறிமுகப்படுத்தினார். ‘எது உண்மையோ, அதை நோக்கிச் செல்’ என்று ஒரு பெருவெளியை நோக்கிச் செலுத்தினார். அவரது வழிகாட்டுதலில்தான் சென்னை ஓவியக்கல்லூரிக்கு வந்தேன். அந்தக் காலகட்டத்தில் நகரம் சென்று படித்த முதல்தலைமுறை மாணவனாகவும் நான் இருந்தேன். ஓவியப் படிப்பை முடித்துவிட்டு, திருவாவடுதுறை மடத்தில் மூன்றாண்டுகள் சைவ சிந்தாந்தம் படித்தேன். அங்கிருந்துதான் என் பயணம் தொடங்கியது.

சித்தாந்தங்களில் மூழ்குபவன் மொழியினூடாகவே தன் வாழ்வைக் கடப்பான். கலையின் பக்கம் திரும்புவதில்லை. என் வாழ்வில் அது ஏதோவொரு செயலாக நடந்தேறியது. தீராத நவீன இலக்கிய வாசிப்பு என் கலைக்கு அழகியல் தன்மையை அளித்தது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் சித்தாந்தத்தையும் ஒன்றாகக் கலந்தது எனக்கான அடையாளமாக அமைந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கோடுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த வெறுமையும் நிறைவின்மையும் என்னை வேறு வேறு தளத்துக்கு உந்துகின்றன. என் வாழ்வின் முக்கியமான காலகட்டம் இதுவெனக் கருதுகிறேன். இந்த ஓவியங்கள் ஏகாந்த நிலையிலிருந்து நான் வரைந்தவை...”

“உங்கள் சித்திரங்களின் அடர்த்தியாக இருக்கும் எளிதில் அணுகமுடியாத உளவியல்தன்மை, இயல்பானதா? திட்டமிட்டு உட்புகுத்துகிறீர்களா?”

“கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் சித்திரங்களை வரையும் முறை, உங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும். இதுகுறித்து நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. காரணம், இது எனக்கே எனக்கான அணுகுமுறை. பிறருக்குப் பொருந்தாமல் போகலாம். சிறு வயதிலிருந்தே நான் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்ப்பதில் ஆர்வம்கொண்டவன். என் வாழ்க்கையே அப்படித்தான். இதோ இந்த ஓவியம், நான் இயல்புநிலையிலிருந்து வரைந்ததில்லை. இயல்பு நிலையில் என்னால் இப்படியோர் ஓவியத்தை உருவாக்க முடியாது.  என்னை நான் ஒரு ஏகாந்த நிலைக்கு எடுத்துச்செல்வேன். அதற்கு ஒரு ‘பிராசஸ்’ இருக்கிறது. அது அனுபவமாக மட்டுமே உங்களால் உணரமுடியும். அதற்காக, நான் சொல்வதை யோக நிலையாகவோ அமானுஷ்யமாகவோ ஆன்மிகமாகவோ புரிந்துகொள்ளாதீர்கள். இது பயிற்சியால் உருவாக்கப்படும் ஒரு தீவிர நிலை.

“இழைத்தலின் மீது நம்பிக்கையில்லை!” - சீனிவாசன் நடராஜன்

நான் இந்த ஓவிய பாணியை “இழைத்தலின் மீது நம்பிக்கையில்லை” என்ற தத்துவார்த்த அடிப்படையில் உருவாக்கி வைத்திருக்கிறேன். ஒரு கரித்துண்டையோ பென்சிலையோ பானை ஓட்டையோ எடுத்து ஒன்றின் மீது தீட்டுகிறீர்கள்... அதுதான் இழைத்தல். அந்த இழைத்தலை முதன்முதலில் எது உணர்கிறது... நம் கைகளா, கண்களா, மூளையா? அரிசிமாவைக் கையில் அள்ளி தரையில் தூவும்போது ஏற்படும் கோடுகளின் தொடர்பற்ற நிலையை ‘இழைத்தலின் மீது நம்பிக்கையில்லை’ எனப் புரிந்துகொள்ளலாம். கிராமத்தில் வீட்டுச் சுவர்களில் சினிமா போஸ்டர் ஓட்டுவார்களே... அதுமீது விரலை வைத்து அப்படியே அழுத்தியபடி இழுத்துப் பார்ப்போமில்லையா... அதை உணர்ந்தவர்கள் என் சித்திரங்களின் தன்மையை எளிதாக உணரமுடியும். ஒவ்வொன்றின் மீது விரலை இழைக்கும்போதும் நம் உணர்ச்சி வேறுபடும். அந்த உணர்வை எப்படிப் புரிந்துகொள்கிறோம்? ஒரு பரப்பின் மீது இன்னொரு பரப்பு படும்போது ஏற்படுகிற இழைத்தல்தான் கலை. மொழிக்குள்ளாகவே புழங்கிப் புழங்கி புதியதொரு மொழியை உருவாக்குவதைப் போல சித்திரங்களோடு புழங்கி, இனியொன்றுமில்லை என்ற நிலையில் நான் கண்டடைந்தது இது.

நாம் இரண்டுவிதமாகச் செயல்படுகிறோம். ஒன்று, ‘போலச்செய்தல்’. நமக்குப் பிடித்த ஏதோவொன்றைச் செய்துகொண்டேயிருப்பது. இன்னொன்று, மாறுதலுக்கு உள்ளாவது. நான், இரண்டாம் நிலைக்காரன். சிந்தனையளவில் வேறொன்றைத் தேடிக்கொண்டே இருப்பேன். நான் ஒரு காக்கா வரைகிறேன். ‘ந’ போட்டு இரண்டு கோடுகளைக் கால்களாக்கி கோடிழுக்கிறேன். அதன்பிறகு அழகழகாக, வெவ்வேறு விதத்தில் என் கற்பனைக்கேற்ப வரைந்து  தள்ளுகிறேன். ஒரு கட்டத்தில் காக்காவின் உருவம் எனக்கு மறந்துவிடும். நான் காக்காவையே பார்த்ததில்லை என்றாகிவிடும். காக்கா என்ற வார்த்தையே நினைவில் இருக்காது. நான் காக்காவைப் பற்றி ஒன்றுமறியாதவனாக இருப்பேன். ஒரு விஷயத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு, தெரிந்த விஷயத்தை முழுமையாகச் செய்துபார்த்துவிட்டு, அதை முற்றிலுமாக மறந்துபோவது. இது எளிதல்ல... அதற்கு ஒரு ‘பிராசஸ்’ இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறாக இருக்கும். எனக்கு, அது கோட்டோவியமாக இருக்கிறது.

கோட்டோவியம் மூலமாக எனக்குள்ளிருக்கும் எல்லா நினைவுகளையும் வெளியேற்றிவிடுவேன். ஒரு கட்டத்தில் நான் முற்றிலும் காலியான ஒரு மனிதனாக இருப்பேன். அதுதான் நான் வரையத் தக்கநேரம். என் முன்னால் வண்ணங்கள் இருக்கும். ரோலர், பிரஷ்கள் இருக்கும். ஏதுமற்றவனாக இருக்கும் நான், எது இருக்கிறதோ அதையெடுத்து வரையத் தொடங்குகிறேன். அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ... ஒருநாளோ அந்த நிலை நீடிக்கலாம். ஆழ் அமைதி நிலையில் அப்போது நிகழும் எந்தச் செயலும் பிறிதொரு சூழலில் என் நினைவில் தங்காது. என்ன நடந்தது, எந்த வண்ணத்தை எதோடு சேர்த்தேன்... திரும்பத் திரும்பச் சிந்தித்தாலும் அந்தத் தருணம் பிடிபடாது. அதை ஏகாந்த நிலை என்று நான் எண்ணுகிறேன். அந்த நிலையில் வரையப்பட்ட படிம வடிவப் படைப்புகள்தான் இந்தச் சித்திரங்கள் எல்லாம். இந்தச் சித்திரங்கள் உளவியல் பேசுகிறதா, வெறும் கோடுகளாகவோ கிறுக்கல்களாகவோ தெரிகிறதா என்பதெல்லாம் உங்கள் பிரச்னை...”

“உங்களின் எல்லா ஓவியங்களிலும் ஒரு முற்றுப்பெறாத் தன்மை இருக்கிறது. ஏன்?”


“நான் ஒரு சோப்போ, பிஸ்கட்டோ தயாரிக்கவில்லை. இது, என் வாழ்வின் அடியாழத்திலிருந்து வெளிப்படுகிற படைப்பு. தொடக்கம், முடிவு பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. எப்படித் தொடங்குகிறேன் என்பதையே தீர்மானிக்க முடியாதநிலையில் முடிவைப் பற்றி எப்படித் தீர்மானிப்பது? நான் விசித்திரமான ஓர் ஏகாந்த வெளியைக் கண்டடைந்து அதில் இயங்கிகொண்டிருக்கிறேன். நான் தயாரிப்பது விற்பனைக்கான பொருளல்ல. மற்றவர்கள் விருப்பத்துக்கு வடிவமைத்துத் தரமுடியாது. இதன் தன்மை, பார்வையைப் பொறுத்து விரியும். யாரோ ஒருவருக்கு அவர் எதிர்பாராத புதிய பாதை இதில் விரியலாம். மும்பையில் என் கண்காட்சி நடந்தபோது, இந்த ஓவியத்தின் முன்னால், ஒரு பெண் மருத்துவர் அமர்ந்து தியானம் செய்தார். பெரும் கூட்டம் அங்கிருந்தது. எதுவும் அந்தப் பெண்ணைப் பாதிக்கவில்லை. இந்த ஓவியங்கள், காஸ்மிக் எனர்ஜியின் தன்மையைத் தூண்டுவதாக சிலர் எழுதுகிறார்கள். நான் எந்த இலக்கோடும் இவற்றை வரையவில்லை. இது தொடருமா முடியுமா என்பதையும் நான் தீர்மானிப்பதில்லை.”

“நீங்கள் எழுதிய ‘விடம்பனம்’ நாவலின் உள்ளடக்கத்திலும் தொடர்புநிலைச் சிக்கல் இருப்பதாகப்படுகிறது. இயல்பான நாவல்தன்மையை ஏளனம் செய்வதுதான் நோக்கமா?”

“அதை நான் ஒரு விமர்சன நாவல் என்றுதான் சொல்வேன். சுகுமாரன் சொன்னதுபோல, நம்மைச்சூழ இருக்கும் எல்லாவற்றின் மீதுமான விமர்சனம். இந்த நாவலுக்கும் என் சித்திரங்களுக்கும் தொலைவான வேறுபாடுகள் இல்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஏதுமற்றவனாக நானிருக்கும் நேரத்தில் ஏதேதோ பேசுவதாகவும் கேள்விகள் கேட்பதாகவும் என் நண்பர்கள் சொல்வார்கள். ஒரு கட்டத்தில் அதையெல்லாம் மீள்நிலையில் நாமும் கேட்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. நண்பர்கள் அந்தத் தருணத்து உரையாடல்களை ரெக்கார்டிங் செய்ய ஆரம்பித்தார்கள். அவற்றைக் கேட்கும்போது, என் இயல்புக்கு முற்றிலும் மாறான வேறு சில வாழ்க்கைகளும் தரிசனங்களும் தேடல்களும் அதற்குள் இருந்ததைக்  கண்டேன். அந்த வெளி ஒரு நாவலுக்கானதாகப்பட்டது. ‘விடம்பனம்’ அப்படித்தான் உதித்தது. விடம்பனத்துக்கு முன்பான என் எழுத்துகள் வேறு தன்மைகொண்டவை. ‘விடம்பனம்’ எனக்குப் புதிய பல சவால்களை உருவாக்கியிருக்கிறது.”

ஒரு கலைஞனின் இயல்பே நிலையற்ற தன்மைதான். தேடல், கலைஞனின் தன்மையை மாற்றிக்கொண்டேயிருக்கும். அடுத்து, அடுத்தென்று சிருஷ்டித்துக்கொண்டிருப்பதுதான் கலையின் ஆகப்பெரிய விளைவு. கோட்டோவியங்களில் தொடங்கிய நான், இப்போது வந்து நிற்பது ஓர் ஏகாந்த வடிவ படைப்புக்களத்தில். ஆழ்ந்த அமைதி என்பது இனம்புரியாத ஏகாந்தம். மெல்லிய புன்சிரிப்பு என்று சொல்லலாம். அந்த ஏகாந்த உணர்வின் காட்சிப்படிமம்தான் இதோ இந்த சித்திரங்கள், எழுத்துகள். மற்றபடி மரபை உடைப்பதோ, தன்மையை மாற்றுவதோ என் வேலையல்ல...” 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு