Published:Updated:

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா
பிரீமியம் ஸ்டோரி
அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

படங்கள் : க.பாலாஜி

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

படங்கள் : க.பாலாஜி

Published:Updated:
அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா
பிரீமியம் ஸ்டோரி
அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

ம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். கவியரசர் கண்ணதாசன் பயன்படுத்திய சில பொருள்களோ உணர்வுபூர்வமான கதைகள் சொல்லும். அப்பாவின் நினைவாக காந்தி கண்ணதாசனும், அண்ணாதுரை கண்ணதாசனும் அவர் பயன்படுத்திய சில பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாத்துவருகிறார்கள். அவற்றின் பின்னாலிருக்கும் உணர்வுபூர்வமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டார் காந்தி கண்ணதாசன்... 

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

சின்னஞ்சிறு சக்க ரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்னைமறந் தேஇருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்!


``அப்பாவுக்கு வாட்ச் கட்டுறது ரொம்பப் பிடிக்கும். விதவிதமா வாட்ச் கட்டுவார். ஆனால், எல்லாம் சாதாரணமான வாட்ச். அம்மாவோ, அப்பாவுக்கு அனைத்தையும் காஸ்ட்லியானதாக வாங்கித் தரணும்னு  ஆசைப்படுவாங்க. அப்போல்லாம் வெளிநாட்டுலருந்து வர்ற பொருள்களை வீடுகளுக்கே கொண்டுவந்து விக்கிறவங்க இருந்தாங்க. அம்மா ரெகுலரா அவங்ககிட்ட பவுடர், சோப் வாங்குவாங்க. ஒரு தடவை ஒருத்தர் ரோலக்ஸ் வாட்ச் கொண்டு வந்திருக்கார். அதைப் பார்த்தவுடனேயே அம்மாவுக்குப் பிடிச்சுப் போச்சு. அப்பவே அது 1,500 ரூபாய். அம்மா, அதை வாங்கிட்டாங்க. அப்பா எங்கேயாவது அதைத் தொலைச்சிடுவார்னு அதுக்குப் பின்னாடி `கண்ணதாசன்’னு பேரைப் பொறிச்சுவெச்சிட்டாங்க. அந்த வாட்சுக்காகவே ஒரு தங்கச் செயின் செஞ்சு, அப்பா கையில போட்டுவிட்டாங்க. இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்துக்கிட்டிருந்த நேரம் அது. பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி இங்கே வந்திருந்தார். போர் நிதிக்காக எல்லாரும் பணம் கொடுத்திருக்காங்க. அப்பா சட்டுனு வாட்ச்சைக் கழட்டிக்கொடுத்துட்டார். லால் பகதூர் சாஸ்திரியோட வந்தவங்க, செயினை மட்டும் எடுத்துக்கிட்டு வாட்ச்சைத் திருப்பிக் கொடுத்துட்டாங்க. அதற்குப் பிறகு, அம்மா, வேற ஒரு செயினைப் போட்டு திரும்பவும் அப்பா கையில கட்டிவிட்டாங்க. அப்பா ரொம்ப நாள் இதைவெச்சிருந்தார். அப்புறம், இதோட  கீ கொடுக்குற பட்டன் வெளியில வந்துடுச்சு. அதை ரிப்பேர் பண்ண இங்கே ஆள்கள் இல்லைனு சொன்னாங்க. ஸ்விட்சர்லாந்த் போகணுமாம். வாங்கி 50 வருஷம் ஆகியும் பளபளப்பு போகலை. இந்த ரோலக்ஸ் வாட்ச் அப்பாவோட அடையாளம்.’’

மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கை யான பதிகம்
மலையளவு தூக்கிஉடன்
வலிக்கும்வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வ மிருகம்


``எங்க வீட்ல முக்கியமான சில பொருள்கள்ல, இடங்கள்ல `PKP’னு ஒரு வார்த்தையைப் பொறிச்சிவெக்கிறது வழக்கம். அதுக்கு `பார்வதி, கண்ணதாசன், பொன்னழகி...’னு அர்த்தம். அப்பாவுக்கு ரெண்டு மனைவி. ரெண்டு பேர் பெயரும் அதுல சேர்ந்திருக்கும். அப்பாவுக்குப் பேனாவுல எழுதுற பழக்கமே கிடையாது. கையெழுத்துப் போடுறதுக்கு மட்டும்தான் அவருக்கு பேனா தேவைப்படும். மத்தபடி அவர் சொல்றதையெல்லாம் உதவியாளர்கள்தான் எழுதுவாங்க. அம்மா இந்தப் பேனாவை வாங்கி, இதுலயும் `PKP’னு சின்னதா பொறிச்சு அப்பாகிட்ட கொடுத்துட்டாங்க. கோல்டு டிப்டு பென்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

பேனாவோட நிப் 24 கேரட் தங்கத்தால ஆனது. பேனாவோட மூடியும் தங்கம்.  அப்பா இதை ஒரு உதவியாளர்கிட்ட  கொடுத்து, `நீ வெச்சுக்கோ’னு சொல்லிட்டார். அம்மா, `அதெல்லாம் முடியாது. வீட்லேயே இருக்கட்டும்’னு சொல்லி வாங்கி வெச்சுட்டாங்க. இதை எப்படியோ பத்திரமா என் சகோதரர் அண்ணாதுரை இன்னும் வெச்சிருக்கார்.’’

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்
ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைக் கண்டேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!


``கவிஞரையும் ஒரு பொருளையும் பிரிக்கவே முடியாதுன்னா அது எச்சில் பணிக்கம்தான். பண்ணையாருங்க, மிராசுதாரருங்க, நிலச்சுவான்தாரருங்க, பணக்காரங்க, மார்வாடிங்க... இவங்களுக்கெல்லாம் எச்சில் துப்புறதுக்கு ஒரு பணிக்கத்தைப் பயன்படுத்துற பழக்கம் இருந்துச்சு.  இது வெத்தலை பாக்கு போட்டு துப்புறதுக்காகப் பயன்படுறது. அப்பாவுக்கு புகைப்பிடிக்கிற பழக்கம் இருந்ததுனால அடிக்கடி எச்சில் துப்புவாரு. எச்சில் துப்புறதோட, சிகரெட்டை அணைச்சு அதையும் இதுலதான் போடுவாரு. அப்பா ஒருநாள் பூரா யூஸ் பண்ணினதுக்கு அப்புறம் இந்தப் பணிக்கத்தை அம்மாவோ, அப்பாவோட உதவியாளர் வசந்தனோ நல்லா விளக்கி, கழுவிவெச்சுடுவாங்க. வேற யாரும் இதைத் தொடமாட்டாங்க. காலையில எந்திரிக்கிறப்போ அப்பாவுக்கு இது ஃப்ரெஷ்ஷா இருக்கணும். அப்பா எந்திரிக்கிறது ஆறு மணிக்குன்னா, அம்மா அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு கழுவி, துடைச்சுவெச்சுடுவாங்க. அஞ்சரை மணிக்கு பால் வந்தவுடனே டீ போட்டு, இந்தப் பணிக்கத்தை ரெடிபண்ணிட்டுதான் அம்மா, அப்பாவை எழுப்புவாங்க. வெளியே போகும்போது, அப்பா இதைக் கூட எடுத்துட்டுப் போக மாட்டார். இது வீட்ல இருக்குற பணிக்கம். வெளியில வேற இருந்தது. இதையும் அம்மாதான் காரைக்குடியிலருந்து அப்பாவுக்காக வாங்கிட்டு வந்தாங்க.’’

ஓர் கையில் மதுவும் ஓர் கையில் மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால்தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இல்லையெனில்
ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் கேட்பான்


``அப்பா பயன்படுத்தின மதுக்கோப்பை, சாதாரண ஒரு டீக்கடை கிளாஸ்தான். ஒரு லார்ஜை எடுத்து இதுல ஊத்தி, மேலே கோடு இருக்குற விளிம்பு வரைக்கும் தண்ணி ஊத்துவார். அந்தக் கணக்குக்காகத்தான் இந்தக் கிளாஸ். அதிகபட்சமா மூணு லார்ஜ்தான் சாப்பிடுவார். இதைச் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அதைக் குடிக்கிறதுக்கே கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரம் ஆகும். ரசிச்சுச் சாப்பிடுவார். ரசனைன்னா அப்படி ஒரு ரசனை... காலை ஆட்டிக்கிட்டு, யோசிச்சுக்கிட்டு, ஒவ்வொரு மிடறாக் குடிப்பார். வெள்ளைக்காரன்கூட அப்படி சாப்பிட்டிருக்க மாட்டான். அப்படி ஒரு ஸ்டைல். அந்த நேரத்துல ஏதோ கற்பனையில இருப்பார். வேற உலகத்துல இருப்பார். சில நேரங்கள்ல ரெக்கார்டு போட்டு பாட்டு கேட்பார். மத்தபடி எப்பவும் யோனைதான். 

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

குடிக்கும்போது, சாப்பாடு அவருக்கு பிரமாதமா, வெரைட்டியா இருக்கணும். சிக்கன், மீன், முட்டை, மட்டன், உள்ளான் குருவி, அயிரை மீன், முயல் கறி, வெள்ளெலிக் கறினு விதவிதமா சாப்பிடுவார். பறக்குறதுல ப்ளேனையும், ஓடுறதுல ரயிலையும் தவிர எல்லாத்தையும் சாப்பிடுவார்.   தொழில் நேரத்துல மது அருந்த மாட்டார். ராத்திரியில மட்டும்தான். பகல்ல எப்பவாவது நாலு பேர் கும்பல் சேர்ந்தாதான் சாப்பிடுவார். அப்போதும் ரெண்டு லார்ஜுக்கு மேல சாப்பிட மாட்டார். குடிச்சதுக்கு அப்புறம், நல்லா சாப்பிட்டுட்டு தூங்கிட்டார்னா, இடியே விழுந்தாலும் எந்திரிக்க மாட்டார். நல்லா ஓய்வு எடுப்பார். மது அருந்தும்போது, ரெண்டு சிகரெட் பிடிப்பார்.

அப்பாவோட அரசியல், சினிமா நண்பர்கள் பல பேரை நான் பார்த்திருக்கேன். கன்ட்ரோலே இல்லாமக் குடிப்பாங்க. யாராவது வீட்ல கொண்டுபோய் விடுற நிலைமை வரைக்கும் குடிப்பாங்க. ஆனா, அப்பா எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் தவறினதே இல்லை. ரசிச்சு ரசிச்சுக் குடிப்பார். ஏன்னா, அப்பா வாழ்க்கையை ரசிச்சவர்!’’

காதலியாய் வேஷமிட்ட கட்டழகு
நடிகையெல்லாம்
தாயாக வேஷமிட்டுத் தடியூன்றி
வருவதெலாம்
காலமகள் விட்டெறிந்த கல்லால்
விழுந்தகதை!
ஆலமரம் தளருங்கால் அடிமரத்தை
விழுதுதொடும்!


``அப்பா மேக்கப்பெல்லாம் போட மாட்டார். ஆறடி உயரம், அதுக்கேத்த உடம்பு, குரல். டச்சப்புக்கு பவுடர்னு ஒண்ணு வேணும்... அவ்வளவுதான். அப்பாவுக்கு தலைக்கு எண்ணெய் வெச்சுக்கத் தெரியாது. அதுக்கு அம்மாவையோ, என்னையோ, இல்லை சகோதரர் அண்ணாதுரையையோ கூப்பிடுவார். நாங்கதான் எண்ணெய் தேய்ச்சுவிடணும். சிங்காரம்னு ஒரு சிகையலங்காரக் கலைஞர் இருந்தார், அவர்கிட்டதான் முடிவெட்டிப்பார். வேற யார்கிட்டயும் வெட்டிக்கப் பிடிக்காது. ஒரு நாளைக்கு ரெண்டு வேளை குளிக்கிற பழக்கமிருந்தது. அவர் எல்லாத்துலயும் ஒரு குழந்தை மாதிரி. குளிச்சு, டிரெஸ்ஸெல்லாம் போட்டுட்டு இந்த ‘யார்ட்லி’ பவுடரைத்தான் போட்டுக்குவார். அலங்காரத்துக்குனு வேற எதையும் யூஸ் பண்ண மாட்டார்.’’
 
அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர்முன்,
பேதையர்முன், ஏழையர்முன்,
நெஞ்சாரப் பொய்யுரைத்துத்
தன்சாதி தன்குடும்பம்
தாம்வாழத் தனியிடத்து(ப்)
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
`பண்பு’டையான் கவிஞனெனில்,
நானோர் கவிஞனல்லன்;
என்பாட்டும் கவிதையல்ல! 


``அப்பா வீட்ல இருக்கும்போது, இந்தச் நாற்காலியிலதான் உட்கார்ந்திருப்பார். காலை நீட்டிக்கிட்டு உட்கார்றது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த மாடல் நாற்காலியைத்தான் விரும்புவார். சினிமாவுக்குப் பாடல் கம்போஸிங் பண்றப்போ, படத்தோட இயக்குநர் ஏற்கெனவே பாடலுக்கான சிச்சுவேஷனை மியூசிக் டைரக்டர்கிட்ட சொல்லியிருப்பார். அதுக்குப் பொருத்தமா மியூசிக் டைரக்டர் ட்யூன் போட்டு வெச்சிருப்பார். இப்படிப் பாடலுக்கு ட்யூன் போடுற கலாசாரத்தை விஸ்வநாதன் - ராமமூர்த்திதான் ஆரம்பிச்சுவெச்சாங்க. இசையமைப்பாளர் சிச்சுவேஷனையும் ட்யூனையும் சொல்வார். அப்பா, பாட்டு எழுதுறப்போ இந்த மாடல் நாற்காலியிலதான் உட்கார்ந்திருப்பார். விஸ்வநாதன் சார் ஒரு நாற்காலியில உட்கார்ந்திருப்பார். ஒரு டீப்பாய் மேல அவரோட ஹார்மோனியம் இருக்கும். அவருக்குக் கீழே ஜமக்காளத்துல கிதார், தபேலா, மிருதங்கம் வாசிக்கிறவங்கனு ஆர்கெஸ்ட்ராகாரங்க நாலஞ்சு பேர் உட்கார்ந்திருப்பாங்க. அவங்களுக்குப் பக்கத்துலதான் நாற்காலியில கவிஞர் உட்கார்ந்திருப்பார்; அவருக்கு வலது பக்கத்துல ராம கண்ணப்பன், பஞ்சு அருணாச்சலம்னு அவரோட உதவியாளர்கள் யாரோ... அவங்க கீழே உட்கார்ந்திருப்பாங்க. அப்போதான் அவங்க என்ன எழுதுறாங்கனு பார்க்குறதுக்கு அப்பாவுக்கு  ஈசியா இருக்கும். பரீட்சைக்கு எழுதத் தோதா அட்டை எடுத்துட்டுப் போவோம்ல... அது மாதிரி ஒரு பேடுல பேப்பரைவெச்சுத்தான் உதவியாளர், அப்பா சொல்லச் சொல்ல எழுதிக்கிட்டிருப்பார். எல்லாமே கொட்டை கொட்டை எழுத்துல இருக்கும். அப்பா நாற்காலியில உட்கார்ந்துகிட்டு பார்த்தாலே என்ன எழுதியிருக்காங்கனு தெரிஞ்சிடும். 

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

ட்யூனைக் கேட்டுட்டு அப்பா கண்ணை மூடிட்டு நெத்தியில கைவெச்சுட்டார்னா, அந்த இடமே அமைதியாகிடும். ஆர்கெஸ்ட்ரா வாசிக்கிறவங்க, உதவியாளர்கள் யாரும் சத்தம்போட மாட்டாங்க. குயில், காக்கா, கிளி கத்துறதுனு இயற்கையான சத்தம்தான் கேட்டுக்கிட்டு இருக்கும். வரிகள் மனசுல வந்ததும், விஸ்வநாதனைப் பார்ப்பார். கால்ல இருக்குற செருப்பைக் கழற்றி, தள்ளிவெச்சுடுவார். காலாட்டிக்கிட்டு இருந்தா அதை நிறுத்திடுவார்; இதெல்லாம் அவர் தொழிலுக்குக் கொடுத்த மரியாதை. அதனாலதான், அவர் இறந்து 36 வருஷங்கள் ஆன பிறகும் அவர் பாடல்கள் மக்கள் மனசுல ஒலிச்சுக்கிட்டேயிருக்கு.

இந்த நாற்காலி வீட்லயும் இன்னொண்ணு கம்போஸிங்குக்காக கவிதா ஹோட்டல்லயும் இருந்தது. அப்பாவோட நாற்காலியில யாரும் உட்கார மாட்டாங்க. கவிதா ஹோட்டல்ல அப்பாவோட சேர்ல ஒரு கைத்துண்டு இருக்கும். அதுதான் அடையாளம்... `கவிஞர் சேர்’னு அதுக்குப் பேரு. அதுக்குப் பக்கத்துல டீப்பாய்ல தண்ணி, தீப்பெட்டி, ஆஸ் ட்ரே, எச்சில் துப்புற கிண்ணம் எல்லாம் இருக்கும். இந்த செட்டப் மாறவே மாறாது. தெரியாம விசிட்டர்ஸ் யாராவது அந்த நாற்காலியில  உட்கார்ந்துட்டாங்கன்னா, அங்கே இருக்குற பியூன் ஓடி வந்து மாற்றி உட்காரச் சொல்வார். 

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

வீட்ல இருக்கிற இந்த நாற்காலியில அப்பப்போ பிரம்பு, வொயர் பிஞ்சு போயிடும். பசங்க பிரிச்சுப் போட்டுடுவாங்க. அவர் எப்பவாவது வெளியூர் போனார்னா உடனே அதை ரிப்பேர் பண்ணி, பெயின்ட் பண்ணி அழகாக்கிடுவாங்க அம்மா. அப்பா, வீட்ல இருக்குறப்போ இதைத் தவிர வேற எதுலயும் உட்கார மாட்டார். எனக்குத் தெரிஞ்சு இந்த நாற்காலியில உட்கார்ந்து 1,500 பாடல்கள் எழுதியிருப்பார்.

அப்பாவோட இன்னொரு வழிமுறை... நடந்துக்கிட்டே பாடல் வரிகளைச் சொல்றது. அது ரொம்ப அரிது. இன்னொரு வழிமுறை... கீழே மெத்தைபோட்டு தலையணையில சாய்ஞ்சுக்கிட்டு சொல்றது... அதுவும் ரொம்ப அரிது. அவர் சேர்ல உட்கார்ந்துக்கிட்டு எழுதினதுதான் அதிகம்.  

அந்த அரியாசனம் அப்படியே இருக்கிறது - பாலு சத்யா

அப்பா, உடம்பு சரியில்லாம அமெரிக்காவுக்குப் போயிருந்தபோதுதான் இறந்தார். அப்போ, அவரோட பொருள்களையெல்லாம் ஆளாளுக்கு எடுத்துவெச்சுக்கிட்டாங்க. அவரோட செருப்பையே ஆளுக்கு ஒண்ணா எடுத்துக்கிட்டாங்க. அப்பாவோட பனியன், சட்டைனு ஒவ்வொண்ணும் ஒவ்வொருத்தர்கிட்ட இருக்கு. கவிதா ஹோட்டல்ல இருந்த பொருள்களையெல்லாம் ஆளாளுக்கு எடுத்துவெச்சுக்கிட்டாங்க. எங்ககிட்ட சொல்லவே இல்லை. எங்ககிட்ட இருந்த அப்பாவோட அலமாரி, அவர் வாங்கின பதக்கம், விருதுகள், ஜிப்பானு பொருள்களை பத்திரப்படுத்தி வச்சிருக்கோம்.’’

எல்லையில்லாத் துயர்தீர
இறைவன்வர வில்லையெனில்
`இல்லை அவன்’ என்பாரை
இறைவனென நாம் துதிப்போம்!


கவிஞரின் புதல்வர் அண்ணாதுரை கண்ணதாசன், கவிஞர் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் குறித்துச் சொல்கிறார்... ``யாரோ ஒருத்தர் அப்பாகிட்ட `நீலக்கல் மோதிரம் போட்டுக்கோங்க. அதுதான் உங்களுக்கு ராசி’னு சொல்லியிருக்காங்க. அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஆனா அருகிலிருந்த அம்மா, சென்னையிலுள்ள ஒரு ஜுவல்லர்ஸ்ல ஆர்டர் குடுத்து, இந்த மோதிரத்தைச் செஞ்சு வாங்கிட்டாங்க. அப்பா அதைப் போட்டுக்கிட்டார். இந்த மோதிரம் வந்ததுக்கப்புறம் அப்பாவுக்கு வாழ்க்கையில சில நல்ல மாற்றங்களெல்லாம் நடந்தது. கடைசிவரைக்கும் அப்பா இதைக் கழற்றவே இல்லை.”

 காந்தி கண்ணதாசன், கவிஞர் அமர்ந்திருந்த நாற்காலியைத் தன் அலுவலகத்தில், தன் இருக்கைக்குப் பக்கத்திலேயே வைத்திருக்கிறார். உள்ளே நுழைந்ததும், அதைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் தன் இருக்கையில் அமர்கிறார். கவியரசரின் கம்பீரமான அரியாசனம் வெறுமையாக இருக்கிறது... அதில் அமர்வதற்குப் பொருத்தமான ஆள் இன்னும் வரவில்லை என்பதுபோல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism