Published:Updated:

பிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பிரீமியம் ஸ்டோரி
பிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

க்கத்தின் சுவர்களில் கற்களுக்குப் பதிலாக மனிதர்கள் நிற்கிறார்கள்
நம்மால் வெல்ல முடியாதது பசி ஒன்று மட்டுமேயென்று அவர்கள் அறிந்திருக்கவில்லையா
வாட்களைக் கூர்மையாகவும்
சொற்களால் கவிதைகளையும் படைத்தவர்கள்
இயந்திரங்களை உருவாக்கியவர்கள்
வேட்கையின் கண்களை
போர்களில் கிழிந்து தொங்கிய தசைகளின் ஆழத்தில் கண்டவர்கள்
ஒரு சைன்யத்தை ஒருவன் எதிர்கொண்டதும்
ஒரு சைன்யத்தை சிலரே சாய்த்ததும்
ஒரு சைன்யத்தின் முன்னே திமிறி எழுந்து தங்களைப் பலியிட்டவர்களும்
ஒரு சைன்யத்தையே கட்டி எழுப்பியவனும்
வரலாறோ தொன்மமோ தொல்கதையோ
நம்மை உருவாக்கியது இரத்தத்தின் மீதான நம்பிக்கையே
மொழியிலிருந்து பொருளையும் புண்களின் மீது தடவும் களிம்புகளையும்
உலோகங்களைக் கரைக்கும் அமிலங்களையும்
திசைகாட்டிகளையும் காய்ச்சல் மாத்திரைகளையும் தேசங்களென்னும் கற்பனையையும்
ஒன்றின் விளிம்பிலிருந்து மற்றொன்றை நீட்டி
ஒன்றின் மரணத்திலிருந்து மற்றொன்றின் உயிரணுக்களைத் திரட்டிய
நாமே நன்மைக்கும் தீமைக்கும் அப்பாலான உலகத்தின் நாயகர்கள்
நகரத்தை முற்றுகையிட்டவர்களும் முற்றுகையிடப்பட்ட நகரத்தினுள்ளே
கடைசி ரவுண்ட் தோட்டாக்களே உயிர்பிழைத்தலின் மீதமிருக்கும் விதைகளென
திசைகளாகவே எழுந்த உடல்களில் விதைத்தவர்கள்
பரிதாபம் நாம் அலுவலகங்களுக்குச் செல்கிறோம்
பரிதாபம் நாம் பேருந்து பாஸ்களைப் புதுப்பிக்கிறோம்
பரிதாபம் நாம் அசிங்கமான மதுபான விடுதிகளில் எழும்பாத குறிகளோடு
பெண்களைப் பற்றிப் பேசுகிறோம்
குரைக்கவும் திராணியற்ற காயடிக்கப்பட்ட நாய்களைப்போல
நமது சோம்பல் மிகுந்த சுயத்தின் மதிப்போ
விருத்தசேதனத்தில் வெட்டியெறியப்பட்ட துண்டுத் தோலிற்கு நிகரானது
பரிதாபம் நாம் ஒரு காக்கிச் சீருடையின் முன்னே ஒடுங்கி நடக்கிறோம்
பரிதாபம் நாம் வேசைகளையும் மனைவிகளையும் உருவாக்கியிருக்கிறோம்
பரிதாபம் நாம் சிறுசேமிப்பில் ஆர்வத்தோடிருக்கிறோம்
பரிதாபம் நாம் தேசப்பற்றோடிருக்கிறோம்
நமக்கோ ஒரு துண்டு இறைச்சியைத் தின்ன கோகோ கோலாவும்
கூடவே ஆண்மைக் குறைவுக்கான மாத்திரைகளும்
கூடவே அதிகாரிகளின் தயவும் நீதிமன்றங்களின் காருண்யமும்
கூடவே ஆயுள் காப்பீட்டு முகவரின் அறிமுகமும் தேவையென்கிறோம்
நிலங்களை நீர்நிலைகளை ஆகாயப் பறவைகளைப் பாழடிக்கிறோம்
குழந்தைகளின் உடல்களைச் சிதைக்கிறோம்
மனநோய் விடுதிகளின் அறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறோம்
குழந்தைப் பேறின்மைக்கான மருத்துவமனைகளையும்
46 & 2 குரோமோசோம்களுக்காக கார்ல் யுங்கிற்கு நன்றி
வரலாறு முடிந்துவிடக் கூடிய எதிர்கால உலகின் நம்பிக்கையே அது ஒன்றுதான்
நமது நரம்புகள் ஏன் இசையற்று பலவீனமடைந்திருக்கின்றன?
நமது மூளைகளின் மடிப்பில் ஏன் அச்சமே நிறைந்திருக்கிறது?
நமது கண்கள் ஏன் அசிங்கத்தை வீழ்ச்சியை சகித்துக்கொள்கின்றன?
முகத்தைத் திருப்பிக்கொள்வதால் அழுகிய பழங்களின் நாற்றம் மறையாதென்பதும்
உரித்து எறியப்பட்ட தோலில் ஆரஞ்சின் சுவையில்லை என்பதும் அறிந்தே
வீழ்ச்சியை, அழுகளை, தடுமாற்றத்தை,
பயத்தை, தயக்கத்தை, நோயை, கடனை
ஏன் இவையெல்லாம் இல்லாததைப்போல நம்மால் நடிக்கவும்  முடியாமலிருக்கிறோம்?
எகிப்தின் முதுகில் பிரமிடுகளை ஏற்றிய பாரோக்களும்
ஹெல்ஸ்பான்ட் ஜலசந்தியைச் சாட்டையால் அடித்தவர்களும்
மூன்று தலை நாயோடு பாதாளத்தை ஆண்ட ஹெய்டிஸும்
எதன் பொருட்டுத்தான் ஆண்களாக இருந்தார்கள்?
எதன் பொருட்டுத்தான் பிரம்மாண்டக் கற்பனைகளில் ஆழ்ந்தார்கள்?
நாமோ எரியாத தெருவிளக்குகளைக் குறித்துப் புகாரளிக்க கையெழுத்துக்களைச் சேகரிக்கிறோம்
வாக்காளர் பட்டியலில் நமது பெயர்களைத் தேடுகிறோம்
ஒரு காதல் கவிதையை எழுதவும்
நன்கு மழிக்கப்பட்ட ஒரு யோனியைப் பார்க்கவும்
இடையீடில்லாத விடுமுறை தினத்திற்காகக் காத்திருக்கிறோம்
நமது நெருப்பு சில்லிட்டுப் போவதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறது
எஞ்சிய அனலின் மீது வெட்டுகள் விழப் போரிடுகிறது
நாம் அதைச் சற்றே கவனித்து அதன் கொழுந்துகளைத் தூண்ட வேண்டும்
அதன் அழைப்பிற்கு நமது கால்களை முன்னகர்த்த வேண்டும்
மாய்ந்தவர்களின் ஏளனத்திலிருந்து பிறந்தேயிராதவர்களின் வசைகளிலிருந்து
நமது காலத்தைக் காக்க வேண்டும்
நுகத்தடியென்பது பழைய உவமை என்றாலும் காலத்தின் கழுத்திலிருந்து
அதை நீக்கத்தான் வேண்டும்
ஆண்களான நாம் அடிமைகளைப்போல சுயமைதூனம் செய்கிறோம்
வாழ்வை முடிக்க ஒரு துயர நினைவும்
பங்குச் சந்தையில் இழந்த பணமே பைத்தியம் பிடிக்கவும் போதுமானதாக இருக்கிறது
நம்மைத் தொட்டிலில் இட்டவர்களுக்கு ஆண்களுக்கான வாழ்வைப் பதிலளித்தோமா?
உறுதிமொழிகள் ஏதும் அளிக்காமல் அனைத்தையும் மூடி விடுகிறோம்
பாதி வாசித்த புத்தகத்தை
பழைய உறவை பின்பு கேட்கவென பதிவு செய்த இசைத்துணுக்கை
முன்னுரிமை கோரும் நூறு செயல்கள் இருப்பதாகச் சொல்கிறோம்
வரிசையில் நின்று பணமெடுக்க இயந்திர உதிரி பாகங்களை விற்பதற்காக
உணவு பரிமாறுவதற்காக இலவச மாத்திரைகளை வாங்குவதற்கும்
நாள்பட்ட கொப்பளத்திற்காக மந்திரிக்கவும்
சோதிடனின் வீட்டுக்கு வெளியேயிருக்கும் நாற்காலிகளில் காத்திருக்கவும்
சுயமுன்னேற்ற விற்பன்னர்களின் பேச்சைக் கேட்கவும்
நம்பிக்கை அளிக்கும் ஒரே ஒரு சொல்லைக்கூட நமக்கு நாமே சொல்லிக் கொள்ள முடியவில்லையா?
கூன் விழுந்த மேகத்துண்டு சிதைவதை
மலைக்கோவில் விளக்குகள் நள்ளிரவுக்கு மேல் அடர்ந்து ஒளிர்வதை
பங்குனி மாதப் புத்திலைகளின் புதுப்பிறப்பை
இளவேனில் கொன்றைகளின் மஞ்சள் நிறத்தை இப்போதும் பார்க்கிறோம்
அன்றாடத்தின் அலுப்போடு இரவு நேரத்தில்
கறுப்புநிற பைகளில் கறி வாங்கிப் போகிறவர்களைப் பார்க்கிறோம்
பட்டாம்பூச்சிகள் முன்பு போலில்லை என்கிறோம் (எதுவுமே)
ஒளியில்லாத மலர்கள் வீட்டுத் தொட்டிகளில் பூக்கின்றன
ஆப்பிள் பழங்களின் இந்தப் பிரதேசமே கண்டிராத பச்சை நிறத்தின் மீது
அடுக்குமல்லி முல்லை சரக்கொன்றை பொம்மலின் மீது
நாம் அழகென நம்பும் அனைத்தையும் பெட்ரோலின் கரும்புகை மூடுவதை அனுமதிக்கிறோம்
ஓர் எக்ஸ்ட்ரா துண்டுக்காக
ஓர் எக்ஸ்ட்ரா பாராட்டிற்காக
இன்னுமொரு எக்ஸ்ட்ரா ஆயிரத்திற்காக
நம்மை நல்ல விலைக்கு விற்றுக்கொள்வதைத் தவிர வாழ்வின் வேறு மகிழ்ச்சிதான் என்ன?
நம்மைக் கொன்றழிக்கும் இயந்திரத்தில் நாமே தலை நுழைத்துக்கொள்வதைத் தவிர
வேறு மார்க்கம்தான் என்ன?
ஆண்களான நாம் நேரத்தைக் கொல்வதைத்தான் வாழ்வென்கிறோமா?
அப்படியொன்றும் நம்பகமானவர்கள் நன்மையைச் செய்துவிடவில்லை
வாழ்வை மெதுவாக வாழ்வதற்கு என்கிறோம்
எளிதில் நொறுங்கிவிடக்கூடிய புதிய அர்த்தங்களை உற்பத்தி செய்கிறோம்
குறை சொல்வதோ பங்கத்தை அனுமதிப்பதோ ஆண்களின் செயலில்லை
நீமியா சிங்கத்தைக் கொன்ற ஹெர்குலிஸின்
அனைத்து தேசங்களின் நுழைவாயிலை பெர்ஸபோலிஸில் எழுப்பியவர்களின்
ஹான் வம்சத்தை நிறுவியவர்களின் கண்களில்
குமாஸ்தாக்களின் முன்னே கைகட்டி நிற்கும் நாம் ஆண்களாகத் தெரிவோமா?
வெறும் குமாஸ்தாக்களை ஆண்களென்போமா?
நம்மால் பணத்தைப் பெருக்க முடியுமென்று
நாம் சாதுர்யமுள்ளவர்களென்று பெண்களிடம் நிரூபிக்க முனைகிறோம்
ஆண்களால் நிறைவேற்ற முடியாதவற்றைக் கேட்பதே பெண்களின் வழக்கம்
ஆண்களை உள்ளூர அவர்கள் ஏளனம் செய்வதை நாம் அறியவில்லையா?
அரைகுறைப் புணர்ச்சிக்காக அன்பென்ற ஒன்றை அவளிடம் எதிர்பார்க்கிறோம்
நான்கு சுவர்கள் எழுப்பி பெண்ணோடு சேர்த்து நம்மையும் சிறையிலிடுகிறோம்
ஈர முத்தத்தைப் பெற்ற பின்போ உலகை வென்றவர்களாக பெருமிதமடைகிறோம்
அவள் உடலைச் சிதைக்கிறோம் அவளது குரூர மரணத்தை ரசிக்கிறோம்
தனித்திருக்க அஞ்சி குழந்தைகளை உற்பத்தி செய்கிறோம்
ஒருமுறையாவது கண்ணாடியின் முன் நின்று
நாம் ஆண்களென்று சொல்லத் தயங்குகிறோம்
உதட்டுச் சாயத்தையும் நாப்கின்களையும் தவிர
பெண்களின் அனைத்துப் பொருள்களையும் பாவிக்கிறோம்
உடலென்றாலும் ஞானமென்றாலும் தீமையென்றாலும் முட்டாள்களென்றாலும்
வாக்குரிமையுள்ளவர்களென்றாலும் பின்புத்தியுள்ளவர்களென்றாலும்
இவையனைத்துமே இயலாமையின் அலங்காரச் சொற்கள்
இயலாமையின் வசைச் சொற்கள்
பெண்கள் பெண்கள் மட்டுமே
அவளோடு சமரிடுவதும் இணக்கத்திற்கு முயல்வதும் அவளைப் பகுத்தாய்வதும்
அன்பைப் பரிமாற முனைவதும் ஏமாற்றத்திற்கான தோற்றுவாய்கள்
பெண்களிடமிருந்து விலகியிருத்தல் எளிதானதில்லையென்றாலும் தீங்கற்றது
மடகாஸ்கரின் யானைப் பறவையை மூன்று கோடி வருடங்கள் வாழ்ந்த
அமெரிக்கக் கண்டத்தின் கத்திப்பல் பூனையை அழித்த நினைவின்றியே
காவிரியாற்றின் பொன் (மஹசிர்) மீன்களை
வங்காளப் புலிகளை பனிக்கரடிகளை கடல் ஆமைகளை அழிக்கிறோம்
ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமற்றவர்களைப்போல
அவசரமாக வீடு திரும்பி தொலைக்காட்சியில் முகம் புதைக்கிறோம்
நள்ளிரவுக்குப் பின்னான சாலைப் பயணித்திலாவது
வீராணம் ஏரிக்கரையின் மீதாவது
கொழும்புத் தேங்காயின் கைகொள்ள முடியாத அளவிலாவது நாம் ஆண்களென்று உணர்கிறோமா?
வாழ்வை அனுமதித்தவர்களும் வாழ்வைப் பெருக்கியவர்களும்
வாழ்வைப் பாதுகாத்தவர்களும் ஆண்களாகிய நாமென்றே அறிவோம்
நம்மை சமாதானமாகப் போகச் சொல்லும் அறிவுரையை கூச்சமின்றி ஏற்கிறோம்
தொலைக்காட்சி ரிமோட்களில் மணக்கும் குளிர் மிகுந்த திரையரங்குகளில்
மடிக்கணிணிகளில் ரன்னிங் சூக்களில் பிராண்டட் ஆடைகளில்
உடலைக் கழுவும் திரவங்களில் குளிர்சாதனங்களில் அபார்ட்மெண்ட் வீடுகளில்
வேறெந்த தலைமுறை ஆண்களைவிடவும் நாம் ஆண்களாக உணர்கிறோம்
புனித பார்த்தலோமோவின் நாளில் அழித்தொழிக்கப்பட்ட புராட்டஸ்டண்டுகளும்
பதினோரு நாள்கள் பாக்தாத் முற்றுகையில் சரிந்தோரும்
புத்தகங்களின் மை கரைந்து கறுத்து ஓடிய டைக்ரிஸ் நதியில் கரைந்தவர்களும்
மலிவாகக் கிடைக்கும் இணையத் தொடர்புக்காக
மலிவாகக் கிடைக்கும் ஆடைகளுக்காக
மலிவாகக் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்காக வரிசையில் நிற்கும்
நமது முகங்களை அவர்கள் மனிதர்களின் முகமென்ற அளவிலாவது மதிப்பார்களா?
வீட்டைப் பொருள்களால் நிரப்புவதும் பாதுகாப்பான மூதலீடுகளில் ஈடுபடுவதும்
விடுமுறை தினங்களில் கார்களைத் துடைப்பதும்
பூங்காக்களில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பதுமாக
நழுவிக்கொண்டிருக்கும் கண்ணாடிப் பெட்டிக்குள்
வாழ்வை அடைப்பதே பாதுகாப்பென்கிறோம்
துளி வெளிச்சத்திற்காகவும் சற்றே ஈரமிகுந்த காற்றிற்காகவும்
கல்லறைகளை நகலெடுக்கும் வீடுகளில் அகாலத்திலும் விழித்திருக்கிறோம்
சனிப்பெயர்ச்சிக் காலத்தில் கோயிலில் நிற்கும் ஆண்களைப் பாருங்கள்
பரிசாரகர்களின் பைத்தியங்களின் கிகலோக்களின் உடல்மொழிகூட அல்ல
இறந்த எலிகளின் மழையில் நனையும் உடலின் சாயலுடைய அவர்கள்
பெண்களைவிடவும் பெண்களாகத் தெரிகிறார்கள்
வாழ்க்கை அட்டையைப்போல நம்முள் துளைத்துக் குடியிருக்கிறது
நாம் நம்மைத் தவிர அனைத்தையும் தீவிரமாகக் கருதுகிறோம்
நாம் நம்மைத் தீவிரமாகக் கருதினால் அச்சமடைகிறோம்
பலமின்றியும் வயோதிகத்தை எண்ணியும்
எலும்புகளை நாணல்களாக்க முயல்வதே புத்திசாலித்தனமென்கிறோம்
பிறப்பதற்கு முன்பே தலை நரைத்தவர்களின் உன்னதக் கற்பனையே மானுட விடுதலை
ஆண்களாகிய நாம் உன்னதக் கற்பனைகளின் குதிரை வீரர்களாக நம்மைக் கருதுகிறோம்
கண்களை உச்ச அளவில் திறந்து பாருங்கள்
நாம் நம்மை குணப்படுத்த முயல்கிறோமா? அல்லது நோயுறவா?
நாம் ஆடைகளைக் களையாமலே நிர்வாணித்திருக்கிறோம்
அச்சத்தை
தனிமையுணர்வை
சுமையை
துயரத்தை
கோபத்தை
எதிர்காலமென்னும் தீர்க்கதரிசனத்தை நம்புவதால் பொறுக்கிறோம்
நாமே எதிர்காலத்தைத் தீர்க்கதரிசித்து
அடைய முடியாத தூரத்திற்கு அதனைத் தள்ளியும்வைத்திருக்கிறோம்
நதிக்கரைகளில் வனங்களில் வசித்த ரிஷிகளையும்
குழந்தை ஏசுவைக் கண்ட மேஜாய்க்களையும்
அடாரக்சியாவையும் அபோனியாவையும் போதித்த எபிகூரஸையும் கேளுங்கள்
அனைத்தையும் அறிந்த பின்பு வாழ்வுதான் எதற்கென்று?
நன்மை
அன்பு
கருணை
குடும்பம்
கர்மா
இவையெல்லாம் சலிப்பில்லாமிலிருக்கச் செய்த சிறிய ஏற்பாடுகள் மட்டுமே
அல்லது சொத்துக்களைக் காப்பாற்ற அல்லது துயரத்தை ஏற்றுக்கொள்ள
தற்காலிகமான அழிவே பசி
பயிர்களின் அழிவே பூச்சிகளின் வாழ்வென்றும்
பயிர்கள் முளைக்கும் வரை பூச்சிகள் பசியால் துடித்திருக்கவும் வேண்டுமென்பதே
உடலின் ஞானம்
இரக்கத்தின் பெயரால் உயிர் பிழைத்தவர்களும்
இரக்கத்தின் பெயரால் வீடுகளைக் கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட்டவர்களும்
இரக்கத்தின் பெயரால் தண்ணீரைப் பகிர்பவர்களும்
ஆண்கள் ஆண்களிடமே மடிந்தார்களென்பதை அறிந்தேயிருக்கிறார்கள்
ஆண்கள் ஆண்களிடமே மண்டியிட்டார்களென்பதையும்
காவியக் குவியல்களுக்கு வெளியே எறியப்பட்ட ஒரு நெடிய வாக்கியமாகவும்
தாழ்வார இருளில் பழைய வலைகளில் தியானிப்பவர்களாகவும்
நீண்ட துயரார்ந்த ஓரங்க நாடகத்தின் பாத்திரமாகவும்
சவலைப் பிள்ளைகளை உற்பத்தி செய்துவிட்ட வரலாற்றின் பிழைகளாகவும்
அபத்த நொடிகளின் வசியத்தில் ஆட்பட்டவர்களாக
ஆணெனும் நம்பிக்கை மறைந்து மனிதனாக எஞ்சி நிற்பினும்
ஒரு பிரபஞ்ச மலரின் மீது நடனமாடும்
பால்வீதித் தாமரையின் ஒளியில் முகம் நனைக்கும்
நிலவின் பயண திசையறிந்தே
கவிதைகளின் விதைகளை விதைக்கும் ஆண்களாகிய நாம்
விதியின் பரிசோதனைக் கூடக் குழந்தைகள்
அல்லது
உடலேயில்லாத இரயில் பூச்சியின் அலையடிக்கும் கால்கள்.

பிறந்திராத சூப்பர்மேன்களுக்கான இரங்கற் குறிப்பு - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்


(கடவுள் இறந்த உலகில் சூப்பர்மேனைக் கனவு கண்ட நீட்ஷேவிற்கு)                                                    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு