பிரீமியம் ஸ்டோரி

ப்படியும் சில மாதங்களின் இடைவெளியில் பெண்கள்மீதான வன்முறை, செய்திகளாக உருவெடுத்துவிடுகின்றன. அதிலும், குழந்தைகள்மீதான பாலியல் வன்முறை குறித்த செய்திகளைப் பரபரப்பாகப் பகிர்ந்து, பரபரப்பாக விவாதித்து, அதே வேகத்தில் மறந்தும்விடுகிறோம். பிறகு அதை நினைவுபடுத்த, இன்னுமொரு கொடூரச் சம்பவம் நடைபெற வேண்டியிருக்கிறது.

தலையங்கம்உண்மையில் இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படை என்ன? ஆழமாக யோசிக்க வேண்டிய தருணம் இது. பொதுவாக பாலியல் சீண்டல் அல்லது பாலியல் வன்முறை குறித்த செய்திகள் வரும்போதெல்லாம், பெண்களின் ஆடைச்சுதந்திரம் உட்பட நவீன மாற்றங்களைக் கேள்விக்குள்ளாக்கும் போக்கு தொடர்கிறது. மத மற்றும் பண்பாட்டு அடிப்படைவாதிகள் இத்தகைய விவாதங்களை உரத்த குரலில் முன்வைக்கத் தொடங்குகின்றனர். அதற்குக் கணிசமான ஆதரவும் உண்டு என்பதை நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பெண் எப்படி நடக்க வேண்டும், யாருடன் பழக வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், எந்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டும், என்ன மாதிரியான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றே திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது. சமூகம் என்பதே பெண்களுக்கு அறிவுறுத்தும் நிறுவனமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான பாலியல் வன்முறைகளை நிகழ்த்துபவர்களாக ஆண்கள் இருக்கும்போது, பாதிக்கப்பட்ட பெண்களை ஒழுங்கமைப்பது குறித்தே ஏன் இந்தச் சமூகம் பேசுகிறது?

முதலில் பாலினச் சமத்துவத்தைக் கற்றுக்கொள்வதற்கான மனப்பான்மையை ஆண்களிடத்தில் வளர்க்க வேண்டியதுதான் அடிப்படையானது. ‘பெண் என்பவள் எளிதில் கையாளப்படக்கூடியவள்; என் இச்சைக்காகவே உருவாக்கப்பட்டவள்; அவள் விரும்பாவிட்டாலும் வன்முறையின்மூலம் அவளை நான் அடைய முடியும்’ என்ற ஆண் மனம்தான் எல்லாவிதப் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கிறது. ‘பெண்ணுடல் என்பது ஆணுடலைப்போல் இன்னோர் உடல்’ என்பதையும் தங்களுக்கான விருப்பங்களை நிறைவேற்றுவதற்குப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்துவமான உரிமைகள் உண்டு என்பதையும் ஆண்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஒருபுறம் நவீன வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் துய்த்துக்கொண்டே இன்னொருபுறம் பண்பாட்டு அடிப்படைவாதத்தையும் பேணும் பண்பாட்டுப் போலித்தனத்தை இந்தியச் சமூகம் களைய வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்குவது, பெண்களுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தருவது, ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நல்ல தொடுகை, தீய தொடுகைக் குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்துவது ஆகியவையெல்லாம் அவசியம்தான். அவற்றையெல்லாம்விட முக்கியம், நம் சமூகத்திலும் மனநிலையிலும் ஏற்பட வேண்டிய மாற்றம்.

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு