Published:Updated:

`நாக்கைத் துன்புறுத்தாத, எளிமையான வட்டாரவழக்கு சென்னைத் தமிழ்!’ - எழுத்தாளர் அரவிந்தன்

`நாக்கைத் துன்புறுத்தாத, எளிமையான வட்டாரவழக்கு சென்னைத் தமிழ்!’ - எழுத்தாளர் அரவிந்தன்
`நாக்கைத் துன்புறுத்தாத, எளிமையான வட்டாரவழக்கு சென்னைத் தமிழ்!’ - எழுத்தாளர் அரவிந்தன்

“சென்னைக்கு ஆயிரம் கதவுகள். எதன் வழியாகவும் உள்ளே நுழையலாம். நமக்கான இடம் நிச்சயம்” என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அந்த ஆயிரம் கதவுகள் வழியாகவும் நுழைந்தவர்களைச் சுமந்து நிற்கும் பெருநகரமாக சென்னை இன்று மாறி நிற்கிறது. பலரின் கனவுகளை, குடும்பங்களை, முக்கியமாகப் பொருளாதாரத்தை என்று அடுக்கிக்கொண்டே போகலாம் இந்தப் பெருநகரின் சுமையை. 

சென்னை நமக்கு இவ்வளவு கொடுத்தும் அதன் நிலம் மீது, அந்நிலத்தின் பூர்வகுடிகள் மீது, அவர்களின் பழக்கவழக்கங்கள், உணவு, மொழி மீது தீராத வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது. இதன்  பொருட்டே சென்னையை, அதன் மொழியை, கலாசாரத்தைப் பற்றிய பேச வேண்டிய, விவாதிக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்கான மிக முக்கியமான முன்னெடுப்பாக, உலக தமிழ்ப் பண்பாடு மையம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை சார்பில் ‘சென்னையும் அதன் தமிழும்’ கருத்தரங்கு நடத்தப்பட்டது.

வட்டார வழக்கும் சென்னை மொழியும்: 

"தமிழகமெங்கும் தமிழ்மொழி அந்தந்த வட்டாரங்களுக்கு ஏற்ப பேசப்படுகிறது. ஆனால், எந்த வட்டார வழக்கும் சந்திக்காத ஒரு விமர்சனத்தை அல்லது எதிர்வினையை சென்னைத்தமிழ் சந்திக்கிறது. சென்னை வட்டார வழக்கைப் பேசுகின்றபோதே முகம் சுளிக்கின்ற தன்மை இன்றளவும் குறைந்தபாடில்லை. எல்லா மொழியும் அதைப் பேசும் மக்களின் வாழ்நிலையைப் பொறுத்து அமைவது. சென்னைத் தமிழ் என்றாலே அதன் கொச்சைத்தன்மை, புரியாத தன்மை ஆகியவைதான் முன்வைக்கப்படுகிறது. கொச்சை இல்லாமல் எந்த வட்டார வழக்கும் கிடையாது" என்று சொன்ன எழுத்தாளர் அரவிந்தன், சில வார்த்தைகளுக்கான விளக்கத்தையும் முன் வைத்தார்.

எடுத்துக்காட்டாக, பம்பரம் விளையாடும் போது தலைக்கு மேல் பம்பரத்தைத் தூக்கிப் போட்டு, பிடித்து விளையாடுவார்களாம். அதாவது, அப் ஹெட் என்ற வார்த்தை அங்கு பயன்படுத்தப்படும். அதன் திரிபுதான் 'அப்பீட்டு'. இதேபோல `ஐ அம் ஆன் பெயில்’ என்பது 'அம்பேல்' போன்ற வார்த்தைகளாகத் திரிந்தது என்றார்.

"செந்தமிழ், ஆங்கிலம், அரபி, தெலுங்கு என்று பல மொழிகளின் கலப்பு சென்னைத்தமிழில் உள்ளது. நாஸ்தா, பேமானி, சோமாரி, அசால்ட், அப்பீட்டு, கஸ்மாலம், பேஜார் என்று அனைத்து வார்த்தைகளுமே திரிபான வார்த்தைகள். நாக்கைத் துன்புறுத்தாத எளிமையான வட்டாரவழக்கு சென்னை பாஷை. உணர்ச்சியை மிக அழகாகவும், துல்லியமாகவும், சிக்கனமாகவும் பேசக்கூடியது சென்னைத்தமிழ். இதற்குக்காரணம், அவர்களின் மொழி அன்றாட வாழ்க்கையிலிருந்து வருகின்ற ஒன்றாக இருப்பதுதான்” என்றார் அரவிந்தன். 

சென்னையும் அதன் உணவும்: 

சென்னையின் உணவு குறித்துப் பேசினார் எழுத்தாளர் பாக்கியம் சங்கர். "கடந்த சில ஆண்டுகளாக மிகவும் விவாதத்திற்கு உரிய, பிரச்னைக்கு உரிய ஒன்றானது  உணவு. உணவுக்கு பின்னாலிருக்கும்  அரசியலும், அதன் விளைவாக நடந்த கொடுமையான செயல்களும் அதிர்ச்சிக்குரியவை. மொழி எப்படியோ அதுபோலவே உணவும் நமக்கான மிகப்பெரிய அடையாளத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறது. இந்தக் கட்டமைப்பை சாதி, மத, வர்க்க ரீதியாகப் பிரித்து வைத்துள்ளனர். எந்த உணவு பிரச்னைக்குரிய உணவாக இருக்கிறதோ, அதுதான் வடசென்னையின் பிரதான உணவாக இருக்கிறது. ‘உழைப்பவன் ஊறுகாய் வைத்து ஒப்பேற்ற முடியாது’. இங்கே உழைப்பவர்கள் அதிகம். 

பேட்டையில் ‘தேசம்மா சோறு’ என்று ஒன்று உண்டு. தேசம்மா எங்களது கடல்தாய். குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தால், கண் திருஷ்டி பட்டுவிட்டதென்று, தேசம்மா சோறுபோடு என வேண்டிக்கொள்வார்கள். கடல் தண்ணீரை வீடெங்கும் தெளித்து மூன்று நாட்கள் சுத்தபத்தமாக இருந்து, அக்கம்பக்கத்து வீடுகளில் சொல்லுவார்கள். தேசம்மாவுக்கும் முன்னால் பெரிய இலை போட்டு மீன்குழம்பு, கறிக்குழம்பு, காரக்குழம்பு என அனைத்தையும் சோற்றில் பிசைந்து வைப்பார்கள். கற்பூரம் காட்டி குழந்தைக்குத் திருநீறு போட்டு சோற்றையும் ஊட்டுவார்கள். தேசம்மாவே வந்து ஊட்டியதாக அதற்குப் பொருள். அதற்குப் பிறகு எந்த கண்ணும் குழந்தையின்மீது படாது என்பது நம்பிக்கை. அக்கம்பக்கத்தினர் தூக்குச்சட்டி கொண்டுவந்து சோற்றையும் பங்கிட்டுக்கொள்வர். இப்படி, பகிர்ந்து உண்ணுதலை வாழ்க்கையாகவே கொண்டிருக்கின்றனர் பேட்டை மக்கள்" என்றார். 

சினிமாவும் சென்னையும்…

வடசென்னை மக்களைப் பற்றி பதிவான படங்களாக அஜயன் பாலா கூறும்போது, “அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை ஓரளவுக்குப் பதிவு செய்ததில் முக்கியமான படம் ‘பசி’. அதன்பின்னர் 2000-க்குப் பிறகுதான் நிலவியல் சார்ந்த படங்கள் வரத்தொடங்கின. பெரும்பாலும் எல்லா படங்களிலும் வடசென்னைக்காரர்கள் வன்முறையாளர்களாகவே காட்டப்படுகிறார்கள். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்கள் வடசென்னைக்குள்ளிருக்கும் அழகியலை அழகாகப் பதிவு செய்தபடங்கள். பொல்லாதவன், வடசென்னை படங்களையும் கூறலாம். மொழியையும், லேண்ட் ஸ்கேப்பையும்கூட யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியதில் பா.இரஞ்சித்தும், வெற்றிமாறனும் முக்கியமானவர்கள்.

மேலும், மௌன படங்களின் காலங்களில் இருந்து நடிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாகப் பாட்டில் மணி, மிகவும் புகழ்பெற்ற நடிகராக மட்டுமில்லாமல் ‘ஹரிஜன சிங்கம்’ என்ற தலித் சினிமாவையும் எடுத்துள்ளார். பேசும்படம் வந்தபிறகு சென்னையல்லாதவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள். சென்னைமொழி சினிமாவிற்கு வராததற்குப் பெரும்பான்மையான காரணம் இதுதான். எனினும் என்.எஸ்.கே, சந்திரபாபு, சுருளிராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன் என்று எல்லாருமே நகைச்சுவைக்காகச் சென்னை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதன்பின்னர் லூசுமோகன் பெரும்பான்மையான மக்களிடம் சென்னை மொழியை எடுத்துச் சென்றார்” என்றார்.

இலக்கியமும் சென்னையும்…

இலக்கியம் என்பது வெறும் அழகியல் புனைவுகளை மட்டும் தந்துவிட்டுச் செல்லும் ஒன்றல்ல. சமகாலத்தைப் பற்றிய பதிவை வரலாறாக மாற்றி அக்காலத்தின் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி சென்னையைப் பற்றிய கதைகள் வந்துள்ளன. அசோகமித்திரன், புதுமைப்பித்தன் போன்றவர்கள் தன் படைப்புகளில் சில இடங்களில் சென்னைத் தமிழைப் பயன்படுத்தியுள்ளனர். ஜெயகாந்தன் சற்று அதிகமாகவே தன்னுடைய புனைவுகளில் சென்னைத் தமிழை பயன்படுத்தியுள்ளார். கரன்கார்க்கி, தமிழ்ப்பிரபா, பாக்கியம் சங்கர், தமிழ்மகன் உள்ளிட்டோர் சென்னை சார்ந்து எழுதுகிறார்கள்.

சென்னைக்குள் இருந்து சென்னையை உடல் வழியாகவும், உணர்ச்சி வழியாகவும் அனுபவித்தவனால்தான் அதை எழுத முடியும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். குறிப்பாக கரன்கார்க்கியின் வாசிப்பு அனுபவத்தைக் கேட்கும்போது பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளையே வாசித்திருக்கிறார். ரஷ்ய இலக்கியங்களை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறார். அதன் வழியாகவே தன் நிலத்திற்கான ஒரு எழுத்தாளராக உருவாகியிருக்கிறார். இவர்களின் முக்கிய கருத்தாக முன்வைக்கப்படுவது, யார் எதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான், அதற்கான சமூக அந்தஸ்து வழங்கப்படுகிறது. அதற்குப் பின்னால் சமூக, பொருளாதார, வர்க்க அடுக்குகள் மறைந்திருக்கிறது என்பதுதான்.

கருத்தரங்கில்15-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பல்வேறு தலைப்புகளில் சென்னை சார்ந்தும் அதன் மொழி சார்ந்தும் பேசினர். அனைவருமே வடசென்னை என்பதை மையமாகக்கொண்டே பேசினர். `தமிழகத்தில் சென்னை இருக்கிறது என்பதைக் கடந்து சென்னையில்தான் தமிழகமே இருக்கிறது என்பதுதான் சரி’ என்கிறார் மானுடவியலாளர் பக்தவதசலபாரதி. ஆனால், கருத்தரங்கில் சென்னையே வடசென்னையாக மட்டும்தான் இருந்தது.