Published:Updated:

``எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை!'' - கவிஞர் கல்யாணராமன்

``எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை!'' - கவிஞர் கல்யாணராமன்
``எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை!'' - கவிஞர் கல்யாணராமன்

விதை, ஆய்வுநூல் மட்டுமன்றி விமர்சனப் பூர்வமான தன் கருத்துகளுக்காகவும் அறியப்படுபவர் கல்யாணராமன். நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 3 கவிதைத் தொகுப்புகளும், `கனல் வட்டம்' என்கிற ஆத்மாநாம் குறித்த ஆய்வுநூலையும் வெளியிட்டுள்ளார். அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றும் வெளிவரவிருக்கிறது. நவீன கவிதைகள், நாவல்கள் பற்றி தொடர்ந்து இலக்கிய நிகழ்ச்சிகளில் உரையாற்றி வருபவர். அடைமழையோடு பின்னணியில் காயத்ரி மந்திரமும் மென்மையாக ஒலிக்க, ஜன்னலில் வந்து விழுந்த சாரல் தெறிப்புகளூடே கலந்துரையாடினோம்....

பிறந்த ஊர், படிப்பு பற்றி சொல்லுங்க.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், (இன்று திருவாரூர் மாவட்டம்), எருக்காட்டூர் என்ற குக்கிராமம்தான் நான் பிறந்த ஊர். எருக்கஞ்செடிகள் நிறைய இருந்ததால, அந்தப் பேர் வந்ததாச் சொல்வாங்க. இது சங்கப்புலவர் தாயங்கண்ணணார் பிறந்த ஊர். 1 - 6 வகுப்பு வரை எருக்காட்டூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், 6 - 10 வகுப்பு வரை கண்கொடுத்தவனிதம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படிச்சேன். நடந்தும் சைக்கிளிலும் பள்ளிக்குப் போன நினைவு இன்னும் இருக்கு. 

சென்னைக்கு எப்படி, எப்போது புலம் பெயர்ந்தீங்க?

எங்க அப்பா பெருவிவசாயி. ஐந்தாறு வேலி அவர் சாகுபடி செய்தார். ஆனால், சொந்தமாகத் துண்டுநிலம் கிடையாது. நான் ஒன்பதாவது படிக்கும்போது, அப்பாவுக்குக் காலில் அடிபட்டது. அது ஆறாப் புண்ணாச்சு. ஷூகர் இருந்ததால், காலை எடுக்கும் நிலைக்குப் போய், கடைசியில இறந்தும் போனார். எனக்கு மூணு அக்கா, ஒரு அண்ணன். மூணு அக்காவும் கல்யாணமாகி சென்னையில் இருந்தாங்க. அண்ணனும் சென்னையில்தான் கல்லூரியில சேர்ந்திருந்தான். ரெண்டாவது அக்கா பெருங்களத்தூரில் இருந்தாங்க. அவளோட கணவர்தான், என்னையும் சென்னைக்குக் கூட்டிவந்தார். மேல்நிலைப்பள்ளி, கல்லூரிப்படிப்பு எல்லாம் சென்னையில்தான் முடிச்சேன். அப்பா இறக்கவில்லை என்றால், நான் சென்னைக்கு வந்திருக்க மாட்டேன்.

என்ன படிச்சீங்க? இலக்கியம், பேச்சின் மேல் எப்படி ஆர்வம் வந்தது?

ஆரம்பத்துல இருந்தே தமிழ்ல ஆர்வம் இருந்தது. எங்க ஊர்ல திராவிடர் கழகத்தாரும், கம்யூனிஸ்ட்களும் ரொம்ப செல்வாக்கா இருந்தாங்க. அப்போ எங்க ஊர்ல திராவிடர் கழகம் சார்பா நிறைய கூட்டங்கள் நடக்கும். எப்பவும் நண்பர்களோட தி.க. அல்லது கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்குப் போவேன். அங்க பேசற கருத்துகளைக் கேட்டு நானும் அப்படிப் பேசணும்னு நினைப்பேன். வீட்ல அம்மாவால, பிரபந்தம் பால பாடமாச்சு. அரசியல் பிரசாரக் கூட்டங்களுக்கும் போவேன். பக்கிரிசாமி நாடார் வீட்ல `தாய்’, `மூலதனம்’ எல்லாம் பாத்திருக்கேன். இடதுசாரித் தோழர்களால் நூலக வாசிப்பும் அறிமுகமானது.

பெரியார், அண்ணா, கலைஞர் பத்தின பேச்சு ஊர்ல தினமும் நடக்கும். அதைக் கேக்காம யாருமே ஊர்ல இருக்க முடியாது. வீட்ல விகடன், குமுதம், கல்கி, தினமணி வாங்குவாங்க. கல்கி, சாண்டில்யன், ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் கதைகள்  படிக்க வாய்ப்பிருந்தது. சென்னைக்கு வந்தபின் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கொஞ்சகாலம் மயக்கம் இருந்தது. நான் ஜெயின் கல்லூரியில் படித்தபோது, அங்கு நாரணோ ஜெயராமன் இருந்தார். அவர் மூலம், தீவிர இலக்கியமும் சிறுபத்திரிகைகளும் அறிமுகமாச்சு.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி கதைகளை 20 வயதுக்குள் படித்துவிட்டோம். தினமும் ஒரு புத்தகம் படிக்கணும் என்று வெறியோடு படித்தோம். பின் கிறித்தவக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். அங்குப் பேராசிரியர் பாரதிபுத்திரன் வழிநடத்திய வனம் கவியரங்கில் தீவிரமாக இயங்கினேன். ‘புதிய பேனா’வாகக் கோமலின் சுபமங்களாவில் என் முதல் சிறுகதை வந்தது. பின் புதிய பார்வையில் ’நம்பிக்கையூட்டும் கவிஞர்’ பகுதியில் என் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டன.

உங்கள் படைப்புகளுக்கான அங்கீகாரமும் விமர்சனமும் எப்படி இருந்தது? 

நரகத்திலிருந்து ஒரு குரல் (1998), எப்படி இருக்கிறாய் (1999), ஆரஞ்சாயணம் (2018) ஆகிய கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. ஆத்மாநாம் பற்றிக் ‘கனல் வட்டம்’ விமர்சனநூல் வெளியாகியுள்ளது. இப்போது சிறுகதைகள் எழுதி வருகிறேன். தி.ஜானகிராமன் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறேன். நவீன இலக்கியம் குறித்தெழுதிய கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணமுள்ளது. அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அதைப் பற்றிக் கவலையில்லை. நிறைய விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறேன். என் எழுத்துக்குத் தகுதியிருப்பின் அது கவனிக்கப்படும். அங்கீகாரம் முக்கியமில்லை.
 
ஆத்மாநாமை முதன்முதலில் எப்படி அறிந்துகொண்டீர்கள்?

என் 14  வயதில், அப்பா இறந்தார். அந்தத் துக்கம் வீட்டில் கனத்திருந்த நாள் ஒன்றில், தோட்டத்து மாமரத்தடியில் அமர்ந்து, பைண்டிங் செய்திருந்த சுஜாதா தொடர்கதை ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில், 'இந்தக் கவிதை முடியும்போது இருக்கும் நான் (இருந்தால்), ஆரம்பத்தில் இருந்தவன் தானா' என்ற ஆத்மாநாமின் கவிதையை, மேற்கோள் காட்டியிருந்தார். அதற்குமுன் நவீனக் கவிதை படித்ததாக நினைவில்லை. ஒருவகையில் நான் படித்த முதல் நவீனக் கவிதையே ஆத்மாநாமுடையதுதான்! அதனாலோ என்னவோ, அந்தச் சொற்களும் ஆத்மாநாம் என்ற பெயரும், என் தந்தையின் மரணத்தோடு சேர்ந்து, என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.

பிறகு சைபர் சிம்மன்தான், ஆத்மாநாமின் 'காகிதத்தில் ஒரு கோடு' தொகுப்பு கொடுத்தான். மூன்று நாளில் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்பதால், என் மூத்த அக்கா, ஆத்மாநாமின் கவிதைகளை ஒரு நோட்புக்கில் கைப்பட எழுதிப் பிரதியெடுத்தாள். Xerox எடுப்பது தண்டச்செலவு என்பது அவள் கருத்து. அதைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டேயிருந்தேன். பல கவிதைகள் மனப்பாடமாகிவிட்டன. அன்று முதல் இன்று வரை, ஆத்மாநாம் ஏற்படுத்திய அதிர்வுகள் தொடர்கின்றன. 

’கனல் வட்டம்’ நூலையொட்டிச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்ததற்கு என்ன காரணம்? முகநூல் தவிர, வேறு என்ன மாதிரியான விமர்சனங்களை எதிர்கொண்டீர்கள்?

ஆத்மாநாம் பற்றி ஒரு விமர்சன நூல்தான்நான் எழுதினேன். பதிப்பு என்னுடைய வேலை இல்லை. அதைச் செய்யவும் அப்போது நான் விரும்பவில்லை. முதலில் நண்பர்கள் சேர்ந்து நடத்திய அண்ணாநகர் ஆய்வுவட்டத்திலும், பின் ’பரிசல்’ செந்தில்நாதன் முன்னெடுத்த நவீனக்கவிதை முன்னோடிகள் பற்றிய கூட்டத்திலும் ஆத்மாநாம் குறித்துப் பேசினேன். இதன் நீட்சியாகத் தேடலைத் தொடர்ந்தபோதுதான், பதிப்பு பற்றியும் தவிர்க்க முடியாமல் நான் பேச நேர்ந்தது.

காலச்சுவடு 200-ம் இதழில் ‘சூன்யத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ கட்டுரையை நான் எழுதியபிறகே, இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதில் ஆத்மாநாம் பதிப்புத் தொடர்பாகப் பற்பல  பேசியுள்ளேன். அவற்றை மீள இங்குப் பேசத் தேவையில்லை. நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன். என் கட்டுரையைச் சிலர் பிரம்மராஜன் மீது தொடுக்கப்படும் தனிநபர் தாக்குதலாகக் குற்றஞ்சாட்டி முகநூலில் பதிவிட்டார்கள். நானூறு பக்கத்துக்கும் மேற்பட்ட ஒரு பெருநூல் ’கனல் வட்டம்’. அதில், இருபது இருபத்தைந்து பக்கங்களிலேயே இந்தப் பதிப்பு சார்ந்த விஷயங்களுள்ளன. மற்ற நானூறு பக்கங்களிலும், ஆத்மாநாம் கவிதைகள் பற்றிய விமர்சனமேயுள்ளது.

இந்தச் சர்ச்சையில் ஈடுபடத் துளியும் விரும்பவில்லை. பிரம்மராஜன் மீது எனக்கு உரிய மதிப்புண்டு. பதிப்புப் பிரச்னைகளைக் கவனப்படுத்துவது மட்டுமே என் இலக்கு. என் நண்பரான ஒரு கவிஞர் மற்றும் நான் மதிக்கும் ஒரு சிறுபத்திரிகையாளர் இருவரும் எனக்கு போன் செய்து, `ரெண்டு வாரம்  வீட்டை விட்டு வெளியில வராதீங்க, உங்களை அடிப்பதற்குத் தயாரா இருக்கா’னு சொன்னாங்க.

ஆத்மாநாம் பதிப்பு ஆய்வுக்குள் செல்லவேண்டிய அவசியம் என்னவாக இருந்தது?

இன்றுவரை ஆத்மாநாமுக்குக் காலவரிசையிலான ஒரு பதிப்பு வெளியிடப்படவில்லை. காலவரிசைப் பதிப்பு ஒன்றுக்கான பல குறிப்புகளை,  என் நூலின் பின்னிணைப்பாகத் தந்திருக்கிறேன். இதுவரை ஆத்மாநாமின் கவிதைகள் 156 என்றால், அவற்றுக்கான பிரசுர விவரங்களை முடிந்தவரையில் தொகுத்தளித்திருக்கிறேன். இன்னும் 30-க்கும் மேற்பட்ட கவிதைகளுக்கு முதற்பிரசுர விவரங்கள் தெரியவில்லை. இந்த விவரங்கள் கிடைக்குமா என்றும் தேடிக்கொண்டிருக்கிறேன். 1972 - 1984 வரையிலான இந்த 12 ஆண்டுகள்தான் ஆத்மாநாம் கவிதைகளில் இயங்கிய காலம். இந்த 12 வருடத்தில் வந்த எல்லாச் சிறுபத்திரிகைகளையும் சேகரித்து வைத்திருக்கும் நூலகம் ஏதும் இங்கில்லை. தனிநபர்கள் வசமே சிறுபத்திரிகைகள் இருக்கின்றன. அவர்களில் சிலர் அந்தப் பிரதிகளைத் தரத் தயாராயுள்ளார்கள்; பலர் தயாராயில்லை. இச்சூழலில், ஆவணங்களைத் தொகுப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. நவீனக் கவிகளுள் ஆத்மாநாம், ஆகச்சிறந்த கவிஞனாக ஏற்கப்படும் நாள் தொலைவில் இல்லை என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு. ஆத்மாநாமும் பிரமிளுமே நவீனக் கவிதைகள் கோரும் சவால்களை ஈடுசெய்துகொண்டு, நாளும் வளர்கிற கவிகள் என்று நினைக்கிறேன். இந்த நம்பிக்கையைத்தான், என் நூலிலும் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளேன்.  

ஆத்மாநாம், பிரமிள் தவிர்த்து நவீனகாலம் தொடங்கி இப்போதுவரை தவிர்க்க முடியாத கவி வரவுகளாக நீங்கள் யார் யாரைக் கருதுகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த கவிஞர்களைச் சொல்ல முடியுமா?

ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யன், பிரமிள், நகுலன், சி.மணி, சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், தேவதேவன், தேவதச்சன், இன்குலாப், சுகுமாரன், பிரம்மராஜன், பழமலய், சுயம்புலிங்கம், மனுஷ்யபுத்திரன், ரமேஷ் பிரேம் முதலியோர் காத்திரமான முன்னோடிக் கவிகளாவர். இந்த முன்னோடிகளின் தடத்தில், இன்னும் ஐம்பது தரமான கவிஞர்களை அடையாளப்படுத்த முடியும். வானம்பாடிகளையும், அவர்களைத் தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை உரத்தகுரலில் பாடிய கவிஞர்களையும் பற்றித் தனியாகப் பேசவேண்டும். 2000-க்கு முன்னும் பின்னும் எழுதவந்த பெண் கவிஞர்களும், தலித் கவிஞர்களும் 90-களில் தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட தேக்கமுடைத்து முன்னகர்த்தினர். 

இவர்கள் என் மனப்போக்குக்கு இசைவானவர்கள் என்பதுடன், தமிழ்க் கவிதையிலும் முக்கியமானவர்கள். சில குறிப்பிட்ட அனுபவங்களை அவற்றின் ஊற்றுநிலையில் சென்று சந்திக்கும் காரியத்தைப் பிரயாசையின்றி யூமா. வாசுகியின் சொற்கள் சாதித்திருக்கின்றன. நிகழ்காலத்தின் நிஜப்பிரச்னைகளைத் தொந்தரவு செய்யும் உக்கிரமான கவிதரிசனங்களாக யவனிகா ஸ்ரீராம் கவனப்படுத்தியுள்ளார். உணர்வுப் பெருக்கின் தீவிரத்தைக் கட்டுப்பாடான மொழியின் மூலம் மீட்டிக் குறைவாகச் சொல்லி நிறையப் பெற வைத்திருக்கிறார் ஸ்ரீநேசன். மனவெளியின் நுண்ணசைவுகளைச் சொற்களில் காட்சிரூபமாகப் பெருக்கெடுக்கவைத்துப் பிரக்ஞையின் எல்லைகளை ஃபிரான்சிஸ் கிருபா அகலப்படுத்தியுள்ளார். ரவி சுப்பிரமணியன், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, என்.டி.ராஜ்குமார், இளம்பிறை, அ.வெண்ணிலா, ராணிதிலக், குட்டி ரேவதி, சுகிர்தராணி, பச்சியப்பன், இசை, வெய்யில், நரன், போகன்சங்கர், பச்சோந்தி எனப் பலரும் பல தளங்களிலும் செயல்பட்டு வருகின்றனர்.

நவீனத் தமிழ் இலக்கியம் தேக்கநிலையை அடைந்துள்ளதாகக் கூறும் ஒரு போக்குள்ளது. தத்துவார்த்தரீதியாக அல்லது கோட்பாட்டுரீதியாக இன்னும் அது நகரவில்லை என்று சொல்கிறார்களே! அது பற்றி உங்கள் கருத்து என்ன?

நம் சமூகத்தில் தனிமை சிலாகிக்கப்படும் அளவுக்குப் பொதுமை சிலாகிக்கப்படுவதில்லை. துறவுக்கு இங்குள்ள மதிப்பே இதற்குச் சாட்சி. இங்கே நகுலன் தத்துவக்கவிதை எழுதுகிறார் என்றால், பிராமணக் கருத்தியலிலிருந்து எழுதுகிறார் என்று முடித்துவிடுவார்கள். தேவதச்சன் தத்துவக்கவிதை எழுதுகிறார் என்றால், கோவில்பட்டி சார்ந்த ஒரு வாழ்விலிருந்து எழுதுகிறார், அந்த வட்டாரமே அப்படித்தான் என்று ஓரங்கட்டிவிடுவார்கள். பிரமிளைப் படிமக்கவிஞர் என்பதும், சி.மணியைக் கேலிக்கவிஞர் என்பதும், ஆத்மாநாமை நகரக்கவிஞர் என்பதும், பழமலயைக் கிராமக்கவிஞர் என்பதும், இன்குலாபைப் புரட்சிக்கவிஞர் என்பதும் இப்படித்தான்.

பலரையும் அவரவர் சார்ந்த வட்டாரம், சாதி அல்லது அம்மாதிரியான குறுகிய எல்லைகளுக்குள்ளேயே அடைக்கும் போக்கு தமிழ் விமர்சனத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான், எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை. இந்தச் சிக்கல், இன்னும் இங்கேயுள்ளது. மானுட வாழ்க்கை பற்றிய அடிப்படையான தேடல்களைக் கொண்டதாகக் கவிதை மாறவேண்டும். 

நம் கவிதைகளை நாமெழுதும் பொதுத்தன்மையை நோக்கி,  எப்போது நகர்த்தத் தொடங்குகிறோமோ, அப்போதுதான் நீங்கள் கேட்கும் கோட்பாடு அல்லது தத்துவார்த்தரீதியிலான பெருங்கவிதைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியும், திராவிட இயக்கக் காலத்தில் பாரதிதாசனும் இப்படித்தான் வெளிப்பட்டார்கள். நெருக்கடிநிலைக்காலம், இன்குலாபையும் ஆத்மாநாமையும் அவரவர் நோக்கில் இப்படித்தான் கூர்மைப்படுத்தியது. காலத்துக்கும் கவிதைக்கும் உறவு இருக்கிறது.

இது குழப்பங்களின் - தெளிவின்மையின் காலமாயுள்ளபோது, சில நல்ல கவிதைகளையே கவிஞர்கள் எழுதமுடியும். இன்று நல்ல கவி எனப்படுவோர் எழுதிய அனைத்தையும் சிறந்த கவிதைகள் என்று எந்த விமர்சகரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், ஒரு பத்துக் கவிதைகளையாவது ஆகச்சிறந்தவையாக எழுதிவிடும்போது, அந்த ஆளுமை, ஆழமாகப் பதிகிறது. அப்பதிவிலிருந்தே, அவர்களை நாம் அளவிடுகிறோம். நம் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்போது, இன்னும் சுதந்திரமான வாழ்க்கை கூடும்போது, குடும்பம், அரசு, கல்விக்கூடம், பணியிடம், இன்னும் பிற நிறுவன அமைப்புகளிலும் புதுக்காற்று புகும்போது, கலையிலக்கியமும் முன்நகரும். அப்போது நீங்கள் கூறும் தத்துவார்த்தப் புரிதலும், அதன் இயல்பாகும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்!

அழுத்தமாக முடிக்கிறார் கல்யாணராமன்.