Published:Updated:

`தமிழ் இலக்கியங்களில், பெண் வன்கொடுமையா?’ - சர்ச்சைக்குத் திரி கிள்ளிய ஹெச்.ராஜா!

`தமிழ் இலக்கியங்களில், பெண் வன்கொடுமையா?’ - சர்ச்சைக்குத் திரி கிள்ளிய ஹெச்.ராஜா!
`தமிழ் இலக்கியங்களில், பெண் வன்கொடுமையா?’ - சர்ச்சைக்குத் திரி கிள்ளிய ஹெச்.ராஜா!

"ஹெச்.ராஜா இவ்வாறு பதிவிட்டதில் வியப்பில்லை. ஆனால், அமைச்சரின் எதிர்வினை கூடுதல் கவலைக்குரியதாக இருக்கிறது!" - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்

ர்ச்சைகளுக்குப் பெயர் போன பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மற்றுமொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழாய்வுத் துறையினர், வருகிற டிசம்பர் 6, 7 தேதிகளில் `தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்' என்கிற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்திருந்தனர். இதில் மாணவர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்க இருந்தனர். கருத்தரங்குக்கான அறிவிப்பும் அதில், பேசப்படவிருந்த தலைப்புகளும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் கருத்தரங்கு நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ஹெச்.ராஜா. இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், `திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில், தமிழ் இலக்கியப் பதிவுகளில், `பெண் வன்கொடுமைகள்' என்கிற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் என்கிற போர்வையில் தொல்காப்பியம், சங்க அக இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம், பட்டினத்தார் பாடல்கள் ஆகிய தமிழ் இலக்கியங்கள் மற்றும் இந்து இதிகாசங்களைக் கொச்சைப்படுத்தும் இழி நோக்குடனும் தமிழகம் முழுவதும் மதக்கலவரத்தைத் தூண்டும் குறிக்கோளுடனும்  மிஷனரிகள் மற்றும் அர்பன் நக்ஸல்கள் திட்டமிட்டுள்ளனர்' என்று குற்றம் சாட்டியிருந்ததோடு மட்டுமல்லாமல், தமிழக அரசு தலையிட்டு கருத்தரங்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் பகிரங்கமாகக் கோரியிருந்தார்.

இதற்குக் கடந்த சனிக்கிழமை டிவிட்டரில் பதிலளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "தமிழக அரசு சம்பந்தப்பட்ட பிரச்னையில் தலையிட்டு இத்தகைய இழிவான மற்றும் அவதூறு பரப்பக்கூடிய கருத்தரங்கு நடக்காது என்பதை உறுதி செய்யும். பெண்களை மகிமைப்படுத்தும் எண்ணற்ற இலக்கியப்படைப்புகள் தமிழில் நிறைந்திருக்கையில், 'தமிழ்ப் பண்பாடு பெண்களைத் தாழ்த்தி வைத்தது' என்ற நஞ்சுக் கருத்தை பதியவிட அனுமதிக்காது" என்றார்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெறவிருந்த கருத்தரங்கு ஒத்தி வைக்கப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தமிழ் ஆர்வலர் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. கருத்தரங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் உறுதியாகத் தெரிவித்திருந்தபோதும் கல்லூரி நிர்வாகம் 'கருத்தரங்கம் ரத்து செய்யப்படவில்லை' என்றும் 'தற்காலிகமாகவே ஒத்திவைக்கப்படுவதாகவும்' தெரிவித்துள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், கருத்தரங்கம் தள்ளி வைக்கப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் காரணம் கூறியிருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருச்சியில் ஒரு கல்லூரியின் சர்வதேசக் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணியை, கருத்துச் சுதந்திரத்தின் மீது, குறிப்பாக முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான கருத்து வெளிப்பாடுகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான், சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஹெச்.ராஜா இவ்வாறு பதிவிட்டதில் வியப்பில்லை. ஆனால், அமைச்சரின் எதிர்வினை கூடுதல் கவலைக்குரியதாக இருக்கிறது' என்றுள்ளனர்.

இதுபற்றி கருத்து கேட்டபோது கல்லூரி முதல்வர் பேரா. ஆரோக்கிய சாமி சேவியர், “தற்போதைக்கு நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு தகவல்களை பின்னர்தான் கூற முடியும்'' எனnக் கருத்துக் கூற மறுத்துவிட்டார். தமிழ்த்துறைத் தலைவர் பேரா. செல்வகுமரன் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பிலிருந்து பேசிய மாணவர் எழில் கூறுகையில், “அவர்கள் புகார் கூறுவதைப்போல குறிப்பிட்ட ஒரு மதத்தையோ அல்லது இதிகாசங்களையோ இழிவுப்படுத்தக்கூடிய விதத்தில் எதுவுமே ஒருங்கிணைக்கப்படவில்லை. கஜா புயல் நிவாரணப் பணிகளில் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அது இன்னமும் முடியாததால்தான் கருத்தரங்கை ஒத்திவைத்திருப்பதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. விரைவில் மறு தேதிக்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

கல்விப் புலங்களில் தொடரும் நிகழ்வுகள்:

இந்திய உயர்கல்வி புலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா, அஹமதாபாத் பல்கலைக்கழகத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளிவந்த பின்னணியில், 'தன்னுடைய கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலைகளினால்தான் அஹமதாபாத் பல்கலைக்கழகத்தில் இணைய இயலவில்லை' என அறிவித்திருந்தார். 'ராமசந்திர குஹா தன்னுடைய சொந்த விருப்பத்தினால்தான் பணியில் சேரவில்லை' என அஹமதாபாத் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தாலும் இது ஏ.பி.வி.பி மாணவர்கள் கொடுத்த புகார் கடிதத்தின் பேரில்தான் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் (Political Science) துறையின் பாடத் திட்டத்திலிருந்த 'எழுத்தாளர் காஞ்சா ஐலய்யாவின் மூன்று புத்தகங்களை நீக்க வேண்டும்' எனப் பல்கலைக்கழக அகாடமி குழு பரிந்துரைத்தது. கல்வித் துறையைத் தாண்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தன. சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை பேராசிரியர் நல்லூர் சரவணன், மாணிக்கவாசகரைப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட்டதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் சர்ச்சையைக் கிளப்பின.

சமீபத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் உமர் காலித் பேசவிருந்த நிகழ்வும் உறுதிசெய்யப்பட்டு பின்னர் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது.

இதுபற்றி எழுத்தாளர் அ.மார்க்ஸ் கூறுகையில், “கடந்த ஆண்டு நான்கூட தமிழ்த்துறையில், 'தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழல் பாதிப்புகள்’ என்கிற நிகழ்வில் கலந்துகொண்டு பேசினேன். இதுபோன்றே நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறார்கள். அங்குள்ள துறைத் தலைவரும் நிர்வாகமும் எந்தவொரு தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் கூறுவதைப் போல கிடையாது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் பி.ஜே.பி-யின் ஹெச். ராஜா இருவருமே ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். இருவரும் ஒரே குரலில் பேசுவதில் வியப்பில்லை. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்பது முழுச் சுதந்திரத்தோடு செயல்பட வேண்டிய நிறுவனங்கள். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகப் பல்கலைக்கழகங்களில் இது மாதிரியான தலையீடுகள் என்பது இதுவரை இல்லாத ஒன்று. திராவிட இயக்கங்களின் கொஞ்ச நஞ்ச அடையாளமும் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்போதைய ஆட்சியில் அழிந்து வருகிறது” என்றார்.

கல்லூரி நிர்வாகமும் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பிலும் 'கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காகத்தான் கருத்தரங்கு ஒத்திவைக்கப்படுவதாக'த் தெரிவித்திருக்கிறார்கள். கஜா புயல் நிவாரணம் ஒரு வாரத்துக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறபோது, தற்போது அதற்காக ஒத்திவைக்கப்படுவதாகக் கூறுவது சற்று சந்தேகங்களை கிளப்பவே செய்கிறது. வெள்ளிக்கிழமை, ஹெச்.ராஜா கருத்தரங்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியதற்கும் சனிக்கிழமை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அரசு தலையிடும் எனக் கூறியதற்கும் நேற்று நிர்வாகம் கருத்தரங்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்ததற்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது. அவ்வாறு அரசு தலையீடு இல்லை, கருத்தரங்கு ரத்து செய்யப்படவில்லை என்றால், நிர்வாகம் மாற்றுத் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிடுவது ஒன்றே யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

அடுத்த கட்டுரைக்கு