Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஆடி மாதம்

மு
னியாண்டவருக்குக் கொடை,
நீண்ட அரிவாளில் நின்று
குறிசொல்லும் சாமியாடி,
முனியாண்டவரின் கண்களோடு பொருந்திப்போகும்
இவரின் கண்கள் மருள் வந்தபோது
கறிச்சோறு சாப்பிடும்முன்
சாமிக் குத்தம் குறை அறிய
உன்னிப்பாகும் ஊர்க்கூட்டம்
சாராய நெடி விலகாமல் விலகின
சொந்தங்கள்-
பின்னர் தன்னந்தனியே
ஒரு வருடம் முழுவதும் முனியாண்டவர்.

- செ.பரந்தாமன்

சொல்வனம்

கந்துவட்டிக்கு அடைத்த உயிர்க்கடன்

கு
ருணையென இறைந்து கிடக்கின்றன
மனத்தட்டில் துயரப்பருக்கைகள்
புல் வரப்பில் திருவடி நகர்த்தி
வயலைச் சுற்றி வருகிறார் அப்பா.
முகத்தில் அப்படியொரு
பரிதவிப்பின் ரணக்கொப்புளக் களை
சென்ற வெள்ளாமையே மாற்றம் தாளாமல்
கந்துவட்டிக்கு உயிர்க்கடனடைத்து
பரலோகம் போன பரமசிவம் மாமாவிற்கு
வயல் வடிக்கும் கண்ணீர்த் துளிகளாய்
தலைகவிழ்ந்து நிற்கின்றன நெல்மணிகள்.
பின்புறமாய் விரல்கள் கோத்து
ஆழ்யோசனையில் பழனம் வெறிக்கும்
அப்பாவின் கைகளைப் பார்க்கையில்
மரணித்த விவசாயி கழுத்தில் அணிவித்த
மாலையைப்போலவே இருந்தது.

- மீனா சுந்தர்

மழைக்கால நினைவுகள்

நீ
ண்ட இடைவெளிக்குப் பிறகான
மழை வலுத்திருந்த நாளொன்றில்
ஊருக்குள் நுழைகிறீர்கள்
வழக்கமான மேகங்கள் ஏதுமின்றி
வானம் வெளிறியிருந்தது
பெருநிலத்தின் இயல்பால் எழுந்த வாசம்
தொப்புள்கொடி அறுத்த கிழவியின்
முகத்தை நினைவுறுத்துகிறது
தெருமுனைத் தொடக்கத்தில் கடந்து சென்ற
நடுத்தர வயதுடைய பெண்ணுக்கு 
உங்களது பள்ளிக்கூட சிநேகிதியின்
சாயல் வாய்க்கப்பெற்றிருக்கிறது
அவளுடைய பெயர் நினைவிடுக்குகளில்
சிக்கிக்கொண்டு வெளிவர மறுக்கிறது
என்றோ ஒரு காலத்தில் ஊஞ்சலாடிய
நைலான் கயிறு தொங்கிக்கொண்டிருக்கிற
பூவரசமர வீட்டின் முன்பு
இப்போது நிற்கிறீர்கள்
முற்றத்துத் தூணின் பின்பக்கப் பழுப்புச்சுவரில்
தயிர்க்காரி தடவிச் சென்ற கோடுகளை 
எண்ணத்தொடங்குகிறீர்கள்
அக்கணத்தில் அவ்வீட்டின் உள்ளிருந்து
பேரிசையாக ஒலிக்கத் தொடங்கிய
தந்திக்கருவியின் இசை
உங்கள் காதுகளின் நுண்ணரம்புகளைத் தீண்ட
இழப்பின் சுவையறிந்து தேம்பத் தொடங்குகிறீர்கள்
காற்றில் கலந்த பேரோசையென
உங்கள் தேம்பல்  மெள்ளக் கரைகிறது
அத்தந்தியிசையில்!

- வே.முத்துக்குமார்.


உயிர்க்கவசம்...

ப்பா அம்மா மகளென
மூன்று பேர் செல்லும்
இருசக்கர வாகனப் பயணங்களில்
இருக்கும் ஒரேயொரு தலைக்கவசத்தை
நடுவில் அமர்ந்திருக்கும்
மகளுக்கு அணிவித்துப்
பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது
நடுத்தர குடும்பத்துப் பாசம்.

- சாமி கிரிஷ்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி