Published:Updated:

நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ

நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ
பிரீமியம் ஸ்டோரி
நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ

இந்திரன்

நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ

இந்திரன்

Published:Updated:
நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ
பிரீமியம் ஸ்டோரி
நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ

கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாளக் கவி செம்மனம் சாக்கோ (Chemmanam Chacko), 14.08.2018 அன்று கொச்சியில் தனது 92-வது வயதில் காலமானார். இவர், கேரள வாழ்க்கையின் சாதாரண மனிதர்களின் சமூக அரசியல் பிரச்னைகளைச் சாதாரண மொழியில் பகடியாக அணுகும் கவிதைகளுக்காகப் பெயர்பெற்றவர். ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைக் கனவுகண்ட இவரது 50 ஆண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில், இவர் பகடி செய்யாத கேரள நிறுவனம் ஒன்றுகூடக் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிதைபோலத் தெரியாத, சாதாரண மனிதனின் பேச்சுக்கும் எழுத்து மொழிக்கும் ஓர் உறவை ஏற்படுத்தக்கூடிய ஒரு மொழிநடையை சாக்கோ தேர்ந்தெடுத்தார். “கவிதை என்றைக்குத் தோன்றியதோ, அன்றைக்கே மக்களின் மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தலாமா, வேண்டாமா என்கிற கேள்வி தோன்றிவிட்டது” என்பது எலியட்டின் வாக்கு.

டி.எஸ்.எலியட் தனது ‘கவிதையின் சமூகச் செயல்பாடு’ எனும் கட்டுரையில் கவிதை, தொல்பழங்காலத்திலிருந்து என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது என்பதைக் கணக்கிலெடுத்துக்கொள்கிறார். ஆதிகாலத்தில் கவிதை மந்திர உச்சாடனங்களாகவும், கிரேக்கர்களின் மதச்சடங்குகளிலிருந்து உருவாக்கப்பட்ட நாடகச் செயல்பாடாகவும், ஷெல்லி போன்றவர்களின் காலத்தில் சமூகச் சீர்திருத்தச் செயல்பாடாகவும் இருந்து வந்திருக்கும் வரலாறுகளைப் பார்க்கிறபோது, இன்றைய அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகக் கவிதை இருப்பதில் தவறில்லை என்று தெரியவருகிறது. எனவேதான், செம்மனம் சாக்கோ கவிதைக்கென்று இருந்த கல்யாண குணங்களைப் பற்றி கவலைப்பட்டதைக் காட்டிலும் அதன் சமூகச் செயல்பாடு குறித்து அதிகம் கவலைப்பட்டார்.

நையாண்டியை ஆயுதமாய் ஏந்திய மலையாளக் கவி - செம்மனம் சாக்கோ

அடுத்ததாகக் கவிதையின் தலையாய பணி என்று கருதப்படுவது ‘களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டி’ மகிழ்ச்சியைக் கொடுப்பது என்பதாகிறது. தமிழின் அழகியல்வாதி தொல்காப்பியரின் கருத்துப்படி கவிதை, ‘இழும் எனும் மொழியால் விழுமியது நுவலல்’ எனவே, கவிதை மகிழ்ச்சியைக் கொடுக்கும் அதே நேரத்தில், அந்த மகிழ்ச்சி உன்னதமானதாக இருக்கவும் வேண்டியதாகிறது. இந்த இரண்டு பணிகளில் தனது பகடியின் மூலம் மக்கள் மனதில் மகிழ்ச்சியையும் அதனை அடுத்துவரும் விளைபொருளாகச் சமூக விமர்சனத்தையும் செம்மனம் சாக்கோ தனது கவிதைகளில் சாதிக்க முயன்றார்.

இதனால் கவிதை, ஒரு சமூகச் செயல்பாடு அல்லவென்று நம்பிய இலக்கியவாதிகள், இவரது கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தயங்கியது உண்டு. ஆனாலும், இவர் 2012-ல் ‘குஞ்சன் நம்பியார் கவிதை விருது’ போன்ற பல கவிதை விருதுகளைப் பெற்றார். இவரது மொத்த கவிதைத் தொகுதி வெளிவந்தபோது, மக்கள் அவற்றை உடனே வாங்கித் தீர்த்தார்கள். தான் இலக்கிய சன்னிதானங்களுக்காக எழுதுகிற கவிஞர் அல்லவென்று தெளிவாக இருந்த சாக்கோ மக்களுக்காக எழுதினார். மக்கள் மனதில்  இடம்பெற்றார்.

இவர் கவிதைகள் சமூகத்தில் எத்தகைய செல்வாக்கு செலுத்தின என்பதற்கு ஓர் உதாரணம் காட்டினாலே போதுமானது. எழுத்து ஒரு சமூகத்துக்குச் சேவை செய்யும் தொழில் என்று நம்பிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த செம்மனம் சாக்கோ, ஒருமுறை ஒரு கவிதை எழுதினார். அந்தக் கவிதையின் தலைப்பு, ‘அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் ஒரு நாற்காலி காலியாக இருக்கிறது’. ஜூலை 1991-ல் இக்கவிதை ‘மாத்ரூபூமி’யில் வெளிவந்தது. மறுநாளே ஜேம்ஸ் ஜோசஃப் எனும் அக்கவுன்டன்ட் ஜெனரல் தலைமை அதிகாரி அவர் அலுவலகத்தில் ஒரு சுற்றறிக்கை விட்டார். அதில் சாக்கோவின் விமர்சனக் கவிதை முழுவதாக இடம்பெற்றிருந்தது. இக்கவிதையை மேற்கோள் காட்டி, ‘தனது ஊழியர்கள் மற்றவர்கள் குற்றம் செய்யாத அளவுக்கு நடந்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னது அந்தச் சுற்றறிக்கை. இதற்குப் பெயர்தான் கேரளா. சாக்கோ சாதாரண மனிதனின் கவி என்பதற்கு இதைக்காட்டிலும் உதாரணம் கொடுக்க முடியுமா? பகடி என்பது மக்கள் மனதில் வெகு விரைவில் சென்று சேர்கிறது என்பதை இக்கவிதை மூலம் அறிந்த சாக்கோ, பகடியை ஓர் ஆயுதமாக ஏந்தத் தொடங்கினார்.

கேரளாவில் வைக்கம் அருகேயுள்ள மூலகுளம் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் மகனாகப் பிறந்த சாக்கோ, பெரிய வயல்களைக் கடந்து தனது பள்ளிக்குப் போகும் வழியில், வள்ளத்தோல் கவிதைகளை உரக்கப் பாடியபடி செல்லும் வழக்கத்தைக்கொண்டிருந்தார். புத்தகம் படிக்கும் சிறுவர்களை அதிக வேலை வாங்கமாட்டார்கள் என்பதால், சதா புத்தகமும் கையுமாகக் காட்சியளித்ததாகச் சொல்லும் சாக்கோ, பின்னாளில் கேரளப் பல்கலைக்கழகத்தின் அகராதித் துறையின் இயக்குநராகத் தன்னை ஆக்கியது இந்த வாசிப்புப் பழக்கம்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். கேரளச் சமூகத்தின் குறைகளைத் தொடர்ந்து பகடி செய்துவந்தார் சாக்கோ. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவு முதற்கொண்டு (உள்பார்ட்டி யுத்தம்) எதுவுமே சாக்கோவின் விமர்சனத்துக்குத் தப்பியதில்லை.

1947-ல் இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘விளம்பரம்’ வெளிவந்த பிறகு, தொடர்ந்து 23 கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டார். இவற்றில் ‘கனகாக்‌ஷரங்கள்’ எனும் தொகுதி பெரும்புகழ் சேர்த்தது. ‘ராஜபாதா’ எனும் தொகுதி இவருக்குக் ‘கேரள சாகித்ய அகாடமி விருது’ பெற்றுக் கொடுத்தது. 2006-ல் கேரள சாகித்ய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.

ஒரு காலகட்டத்தில் கேரளத்தில் பஞ்சம் வந்தபோது, பிரதான உணவான அரிசியைப் பயிர் செய்யாமல் ரப்பர் மரங்களை வளர்ப்பவர்களுக்கு அரசு ஆதரவளித்தது. இதனால், அரிசி கிடைக்காமல் போகவே அரசாங்கத்தில் ரேஷன் முறையும், கோதுமையும், மரவள்ளிக் கிழங்கிலிருந்து செய்த மக்ரோணியும் அறிமுகம் ஆயின. இதனால், கவலையுற்ற சாக்கோ ‘நெல்’ எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். இந்த ‘நெல்’ எனும் பிரபலமான கவிதையில் விவசாயிகள் நெல்லைப் பயிர் செய்யாமல் ரப்பர் மரங்களைப் போன்ற பணப்பயிர்களை விளைவிப்பது பற்றிய விமர்சனத்தை நையாண்டியுடன் முன்வைத்தார். இக்கவிதையைப் பாராட்டிய அய்யப்பப் பணிக்கர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ‘ஆக்ஸ்போர்டு இந்தியக் கவிதை’ தொகுதியில் சேர்த்தார்.

செம்மனம் சாக்கோவின் கவிதைகள், கேரளாவின் சமூகச் சூழலை விமர்சித்து எழுதப்பட்டவை என்றபோதிலும் அவை சாதி, மதம், பணம் போன்றவற்றினால் சமூகத்தில் சமதர்மம் குலைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு குரல் என்பதால், அது உலகின் எல்லாப் பகுதி மக்களையும் ஏதோவொரு முனையில் தொட்டுப் பேசுவதாகவே அமைகிறது. 92 வயது வரை வாழ்ந்த சாக்கோ, தனது 50 ஆண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில் தனது விமர்சனக் குரலைத் தொடர்ந்து ஒலித்ததுதான் அவரது வாழ்நாள் சாதனை.