Published:Updated:

கவிதையின் கையசைப்பு - 4

கவிதையின் கையசைப்பு - 4
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 4

கவிதை எழுதுவதற்காகவே வாழ்கிறேன்

கவிதையின் கையசைப்பு - 4

கவிதை எழுதுவதற்காகவே வாழ்கிறேன்

Published:Updated:
கவிதையின் கையசைப்பு - 4
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - 4
கவிதையின் கையசைப்பு - 4

ரபுக் கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றில், சுமியா அல் காசிம் என்ற கவிஞரின் ஒரு கவிதையை வாசித்தேன். அக்கவிதையில் ஒரு சிறுமி, ‘பூமி ஏன் சுழல்கிறது?’ எனக் கேட்கிறாள். அதற்கு அக்கவி, ‘கடவுள் ஒருநாள் காலையில் காபி குடிக்கும்போது, சர்க்கரைத்துண்டினைக் கரைப்பதற்காக ஸ்பூனைக் கோப்பையினுள் சுழற்றத் தொடங்கினார். சர்க்கரைத்துண்டு கரையவில்லை. வேகமாக ஸ்பூனைச் சுழற்றினார். அந்தச் சுழற்சியின் காரணமாகவே பூமி சுழலத் தொடங்கியது’ எனக் கூறுகிறான். இந்தக் கவிதையை வாசித்தபோது வியப்பாக இருந்தது. மறுபுறம், நவீனக் கவிதையின் புதுக்குரலைக் கேட்ட உற்சாகம் உருவாகியது.

மதச்சட்டங்களால் ஆளப்படும் அரபு உலகிலிருந்து காலைக் காபி குடிக்கும் கடவுள் உருவாகிறார் என்பது நவீனத்துவத்தின் அடையாளம். காபிக்கான சர்க்கரையைக் கரைக்கத் தொடங்கிய கடவுளின் கைச்சுழற்சியால் பூமியும் சுழலத் தொடங்கியது என்பது வேடிக்கையான மறுமொழிபோலத் தோன்றுகிறது. ஆனால், அன்றாட வாழ்விலிருந்தே உலகம் சுழல ஆரம்பிக்கிறது என்பதைக் குறிப்பதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். கவிதையில் பூமி, கடவுளின் மேஜைபோல உருமாறுகிறது. `கடவுளின் காலைக் காபி’ என்ற சொற்பிரயோகம் கடவுளோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுள் குறித்து நம் மனம் கட்டிவைத்திருந்த புனிதபிம்பம் கலைந்துபோய் சகமனிதனைப்போலக் கடவுள் உருமாறுகிறார்.

 கவிதை எப்போதுமே நாம் அறிந்த உலகை, அறியாத உலகமாக மாற்றுகிறது; அன்றாட உலகின் பொருள்களுடன் புதிய உறவை ஏற்படுத்துகிறது. பயன்பாடு சார்ந்து மட்டுமே அர்த்தம்கொண்டி
ருந்தவற்றை அதைக்கடந்து வேறு தளங்களில் வேறு அர்த்தம்கொள்ளச் செய்கிறது.

கவிதையின் கையசைப்பு - 4

தண்ணீரில் மிதக்கும் நிலவை ஒருவன் உடைக்க விரும்பினால் என்ன நடக்கும்? அவன் கல்லெறிவதன் மூலம் கலைந்து சிதறும் தண்ணீரின் அலைகளைக் காணமுடியும். ஆனால், நிலவு அப்படியே இருக்கும். அப்படிக் கைக்கொள்ள முடியாத, அழிக்க முடியாத, ஆனால் பார்த்து ரசிக்கிற, உணர முடிகிற நிலவைப்போல, கவிதை செயல்படுகிறது. அதனால்தான் ஒரு புல் வளர்வதுபோல நிசப்தமாகக் கவிதை தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்கிறார்கள் ஜென் கவிஞர்கள்.

அரபுக் கவிதைகளின் வரலாறு, வாய்மொழிப் பாடல்களிலிருந்தே தொடங்குகிறது. தொல்காலத்தில் கவிதை என்பது பாடலே. கவிஞன் தன் பாடலை, தானே பாட வேண்டும் என்பதே நியதி. இனிய குரலும் வெளிப்பாட்டு முறையுமே கவிதையை ரசிக்கவைத்திருக்கிறது. அந்த நாள்களில் கவிஞன் என்பவன் தனி நபரில்லை. அவன் ஒரு குழுவின் பிரதிநிதி; அடையாளம். இன்றுள்ள கவிஞனைப்போல அவனைத் தனித்த ஆளுமையாகக் காண இயலாது. அன்றைய கவிஞன், கேட்பவர் இல்லாத நேரங்களில் பாடுவதில்லை. காலமாற்றத்தில் பாடலிலிருந்து கவிதை உருமாற்றம்கொண்ட பிறகு, எதிரிலிருப்பவர் தேவையற்றுப்போகிறார். இன்றைய நவீனக் கவிதை மௌனவாசிப்பிற்கு உரியது. வாசிப்பவனின் மனநிலைக்கு, புரிதலுக்கு ஏற்ப கவிதை உருமாறிக்கொண்டே இருக்கக்கூடியது.

மூன்று முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டவரும் சமகால அரபுக் கவிதையுலகின் தனிக்குரலாகக் கருதப்படுகிறவருமான அடோனிஸ், மகத்தான கவியாகக் கொண்டாடப்படுகிறார். ‘கவிதையே எனது அடையாளம், கவிதை எழுதுவதற்காகவே நான் பிறந்தேன், கவிதை எழுதுவதற்காகவே வாழ்கிறேன்’ என்கிறார் அடோனிஸ். ‘எது கவிதை?’ என அடோனிஸிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்: “கவிதை என்பது வெடிகுண்டல்ல. அது ஒரு வாசனைத் திரவியம். அமைதியின் நறுமணத்தை வெளிப்படுத்தும் அபூர்வ வாசனைத் திரவியம்.”

 நேரடியான அரசியல் செயல்பாட்டில் தொடர்ந்து இயங்கிவருபவர் அடோனிஸ். அவரது அரசியல் கவிதைகள் தீவிரமான தொனியில் அதிகாரத்தைக் கேள்வி கேட்கின்றன. அடோனிஸின் கவிதைகள் இரண்டு தளங்களில் இயங்குகின்றன. ஒன்று, காதல் மற்றும் அக அனுபவங்களிலிருந்து உருவான கவிதைகள். மற்றது, சமகாலப் பிரச்னைகள். அகதியாக வாழும் துயரம், அதிகாரத்தால் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கேட்பது போன்றவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள்.

கவிதையின் கையசைப்பு - 4

  அரபுக் கவிதையின் மரபான வடிவத்தை விலக்கி, புதிய வடிவத்தைக்கொண்ட கவிதைகளை அடோனிஸ் எழுதியிருக்கிறார். குறிப்பாக, வசனக்கவிதை போன்ற வடிவங்களை அவர் கையாண்டவிதம் சிறப்பானது. கவிதை, தொடர்ந்து மனிதனின் அக உலகினைப் புற உலகத்துடன் உறவுபடுத்துகிறது. அதாவது, இரண்டும் தனித்தனியானவை இல்லை. நாணயத்தின் இரு பகுதிகள்போலவே அகமும் புறமும் இருக்கின்றன. புறக்காரணிகள் அகத்தைப் பாதிப்பதும் அக உந்துதல் புறத்தில் செயலாக உருவாவதும் அறிந்த விஷயம்தானே. கவிதை இந்த இரண்டுக்குமான ஊசலாட்டத்தை, சார்பை, பகிர்ந்து கொள்ளலை முன்வைக்கிறது. மொழியின் வழியாக இந்தச் செயல்பாடு நடைபெறுகிறது. சொல்லைக்கொண்டு சொல்லைக் கடப்பது என்ற விசித்திரச் செயல் கவிதையில் நடைபெறுகிறது. அதாவது, மௌனத்திற்கும் பேச்சிற்கும் இடையிலும் பேச முடியாதவற்றைப் பேச முனைவதிலும் கவிதை செயல்படுகிறது.

காதலைக் கொண்டாடும் அடோனிஸ், ‘காதலின் வழியே ஒருவர் உடலுக்குள் மற்றவர் புகுந்துவிட முடியும்’ என்கிறார்.

‘மழையின் ஒவ்வொரு துளியும்
ஒரு கண்சிமிட்டல்’


என அடோனிஸின் கவிதை ஒன்று குறிப்பிடுகிறது. இக்காட்சி நமக்கு மழை குறித்த அனுபவத்தைப் புதியதாக்குகிறது. பல்லாயிரம் கண்கள் கொண்டதாக மழை உருமாறுகிறது.

‘தடயமில்லாமல் நெருப்பு
மறைந்துபோவதுபோல
கொல்லப்பட்ட மக்களும் உலகிலிருந்து
மறைந்துபோகிறார்கள்’


என இன்னொரு கவிதையில் அடோனிஸ் கூறுகிறார். கொல்லப்பட்டவர்களின் அடையாளம்கூட மிஞ்சுவதில்லை என்ற துயர் கவிதையில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

‘பரபரப்புடன், நிசப்தமாக, வேட்கையோடு ஊர்ந்து செல்லும்
விந்தின் ஒற்றைத் துளிபோல
நகர்ந்து செல்கிறேன்’


என இன்னொரு கவிதையில் அடோனிஸ் தன் இருப்பைப் பற்றிக் கூறுகிறார்.

 அடோனிஸின் கவிதைகள் மரபிலிருந்து உருவானவை. ஆனால், மரபின் வரம்புகளை மீறியவை. ‘மதம், இனம், பால் அடையாளம் என எதுவும் தனக்குக் கிடையாது. தான் ஒரு கவிஞன், கவிஞர்கள் சமகாலத்துடன் மட்டும் உரையாடுகிறவர்களில்லை. எல்லாக் காலத்துடனும் தொடர்புகொள்கிறார்கள். ஆக்டோபஸ் எல்லாப் பக்கங்களிலும் கைகள் கொண்டிருப்பதுபோலக் கவிஞனுக்கும் நூறு கைகள் இருக்கின்றன. கவிஞனும் ஒரு சிந்தனையாளனே. அவன் தன் கவிதையின் மூலம் உலகை மாற்றுவதுடன் புதிய வாழ்முறையை அறிமுகம் செய்துகாட்டுகிறான்’ என்கிறார் அடோனிஸ்

கவிதையின் கையசைப்பு - 4

அடோனிஸின் கவிதைகள் சூபி கவிதை மரபும் சர்ரியலிஸ பாணியும் ஒன்று சேர்ந்து உருவானவை. சர்ரியலிஸக் கருத்துப்படி கவிதை என்பது மனதின் முடிவில்லாத இயக்கம். அறிவை மறுத்து நடைபெறும் சிந்தனைகளின் பீறிடல். கனவுநிலை போலக் கட்டற்று நடைபெறும் நிகழ்வு. மனதின் அடியாழத்திலிருந்து பீறிடும் காட்சிகளை, உணர்வை சர்ரியலிசம் முதன்மைப்படுத்துகிறது.

தோற்ற அளவில் சூபியும் சர்ரியலிஸமும் இரண்டும் எதிரெதிர் நிலைபோலத் தோன்றும். ஆனால், சூபி கவிதைமரபும் சர்ரியலிஸக் கவிதைகளும் சந்திக்கும் பொதுப்புள்ளிகள் நிறைய இருக்கின்றன. அதை, தான் அடையாளம் கண்டுகொண்டிருப்பதாகவும் அந்த இரண்டுக்குமான பாலத்தைத் தனது கவிதைகளின் வழியே உருவாக்கி வருவதாகவும் சொல்கிறார் அடோனிஸ். தனது நேர்காணல் ஒன்றில் வறுமையும் பால்யமும் தன்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டுவதாகச் சொல்கிறார்.

 அரசியல் கவிதைகளின்மூலம் மக்கள் எழுச்சியை உருவாக்கிவரும் அவரிடம் இன்றைய அரபுக் கவிதைகளின் நிலை பற்றிக் கேட்கிறார் நேர்காணல் செய்பவர். அதற்கு அடோனிஸ் கோபத்துடன் இப்படிப் பதில் அளித்திருக்கிறார். “இன்று அரபு தேசத்தில் ஆட்சியாளர்கள் தொடங்கி, கலகக்காரர்கள் வரை சகலரும் தங்களைக் கவிஞர்களாக அறிவித்துக்கொள்கிறார்கள். ஆண்டுக்குப் பலநூறு கவிதைத் தொகுப்புகளும் வெளியாகின்றன. ஆனால், அதில் எத்தனை இலக்கியத் தரமிக்கவை; நல்ல கவிதைகள்? இன்று கவிதையும் சந்தைப் பொருளாகிவிட்டது. அமெரிக்காவில் எழுத்து ஒரு வணிகம். சந்தையே புத்தகங்களின் விதியைத் தீர்மானிக்கிறது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அமெரிக்காவில் ஆண்டுக்குப் பல்லாயிரம் புத்தகங்கள் வெளியாகின்றன. அதில், நல்ல புத்தகங்களைத் தேடினால் ஐந்தோ பத்தோகூட இருக்காது. அதே நிலைதான் அரபு உலகிற்கும். அங்கே பயன்படுத்தி வீசி எறியும் காகிதக் கோப்பைகள்போலக் கவிதையை மாற்றிவிட்டார்கள்.”

அரசியல் காரணங்களுக்காகத் தேசத்தைவிட்டு வெளியேறிய அடோனிஸ், தற்போது பாரீஸ் நகரில் வசித்து வருகிறார். 20 கவிதைத் தொகுப்புகளையும் 13 விமர்சனக் கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அல் கிதாப் என்ற பெயரில் 2,000 பக்கங்களுக்கும் அதிகமான நவீன இதிகாசம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

 1930-ம் ஆண்டு வடமேற்கு சிரியாவிலுள்ள லடாகியாவின் தெற்கிலுள்ள கஸ்ஸாபின் கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் அலி அஹ்மத் சைட் எஸ்பர். இவரது ஊரில் பள்ளி இல்லாத காரணத்தால், வீட்டிலே சமயப் பாடங்களைக் கற்றிருக்கிறார். ஒருமுறை இவரது ஊருக்கு சிரிய அதிபர் சுக்ரி அல் ஹெவாதி வருகைதந்தார். அப்போது, கூட்டத்திற்குள் முண்டியடித்துத்தான் எழுதிவந்த கவிதை ஒன்றை அவர் முன்பாக அலி அஹமத் வாசித்திருக்கிறார். ஒரு சிறுவன் தன் முன்னே வீரமிக்க கவிதையைப் பாடியதைக் கண்டு மகிழ்ந்த அதிபர், “உனக்கு என்ன உதவி தேவை என்றாலும் கேள்...” என்றார். “நான் படிக்க வேண்டும். என்னை நல்ல பள்ளியில் படிக்கவைப்பீர்களா?” எனக் கேட்டான் அலி அஹமது. அதிபர் உடனே சம்மதம் தெரிவித்து, தேசத்தின் மிகச்சிறந்த பள்ளி ஒன்றில் அவரைச் சேர்க்கவைத்து, அவரது படிப்புச் செலவு முழுமையையும் அரசே ஏற்றுக்கொள்ளச் செய்தார். இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் அலி அஹமத், “கவிதையே என் வாழ்க்கையை உருவாக்கியது. பத்து வயதுக்குள் நான் எப்படிக் கவிதை எழுத ஆரம்பித்தேன். எந்த தைரியத்தில் அதை அதிபர் முன்னால் வாசித்துக் காட்டினேன் என்பது தெரியாது. ஆனால், என் கவிதையை அதிபர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவில் மேற்கோள் காட்டிப் பேசியதுடன் இந்தப் பையன் மிகச்சிறந்த கவிஞராக வருவான் என்று ஆசியும் வழங்கியபோது, நான் கவிதை எழுதுவதற்காகவே பிறந்தவன் என்ற எண்ணம்  உருவானது.” என்கிறார் அடோனிஸ். அலி அஹ்மத் சைட் எஸ்பர் என்ற தனது பெயரை விடுத்து, அடோனிஸ் என்ற கிரேக்கக் கடவுளின் பெயரைத் தனது புனைப்பெயராகச் சூடிக்கொண்டதற்குக் காரணம், தான் தனது சமூக அடையாளம் தேவையற்றதாகக் கருதியதே என்கிறார் அடோனிஸ்.

கவிதையின் கையசைப்பு - 4

அடோனிஸ் அரபுக் கலாசாரத் தொன்மங்களைத் தனது படைப்பில் மறுஉருவாக்கம் செய்கிறார். மதக்கட்டுப்பாடுகள், ஒழுக்கவிதிகளை மறுத்த அவரது கவிதைகள் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாகின. அவரது கவிதைகளின் மீது கோபம்கொண்ட அடிப்படைவாதிகள் அவருக்குக் கொலைமிரட்டல்கள் விடுத்தனர். அவரது கவிதைத் தொகுப்புகளைத் தீவைத்துக் கொளுத்தும்படியாக ஆணையிட்டார்கள். அவரது வீடு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பைக் கண்டு அடோனிஸ் பயந்துவிடவில்லை. தான் மதமற்றவன் என்று உரத்த குரலில் அறிவித்தார்.

அடோனிஸ் இளைஞராக இருந்தபோது, நேரடியாக அரசியல் இயக்கத்தில் இணைந்து களப்போராட்டங்களில் கலந்துகொண்டார். அரசியல் நெருக்கடி காரணமாக, 1956-ல் சிரியாவை விட்டு வெளியேறி லெபனானுக்குச் சென்றார். அங்கிருந்தபடியே சில ஆண்டுகள் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி, தீவிர அரசியல் கட்டுரைகளை எழுதிவந்தார். 1957-ம் ஆண்டில், ‘அடோனிஸ் ஷைர்’ என்ற இலக்கிய இதழ் ஒன்றை நடத்த ஆரம்பித்தார். அந்த இதழ் அரபு மொழியில் நவீனக் கவிதைக்கான களமாக விளங்கியது. அந்த இதழில் டபிள்யூ.பி.யேட்ஸ், எஸ்ரா பவுண்ட் மற்றும் டி.எஸ்.எலியட் உள்ளிட்ட ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதைகளை அரபு மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

“என்னுடைய பதிமூன்றாவது வயது வரை மின்சாரம், தொலைபேசி, கார் எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. கிராமத்தில் இந்த வசதிகள் எதுவும் கிடையாது. பள்ளிப் படிப்பிற்காக ஊரைவிட்டு வெளியேறிய பிறகே இவற்றை அறிந்துகொண்டேன். இன்றும் மின்சாரமில்லாத கிராமத்தின் நினைவுகள் எனக்குள் இருக்கின்றன. என் சொந்த ஊருக்கு நான் திரும்பிப் போக முடியாது. ஒருவேளை அங்கு சென்றால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்படுவேன். 100 வயதைக் கடந்த அம்மாவை நேரில் போய்ப் பார்க்க முடியாதவனாக பாரீஸில் வசிக்கிறேன்” என்கிறார் அடோனிஸ்.

‘ஆதியில் ஒரு வார்த்தை இருந்தது
அந்த வார்த்தையில் ரத்தம் படிந்திருந்தது’


என அடோனிஸின் ஒரு கவிதை தொடங்குகிறது. இருப்பின் வலியை உணர்த்தும் கவிதைகள் இன்மையின் இயல்பையும் எடுத்துக்காட்டுகின்றன. நவீனக் கவிதைகள் பெரிதும் இன்மையை முதன்மைப்படுத்துகின்றன. இருப்பின் வலியைச் சொல்லும்போதும்கூட இன்மையின் மீதே சார்புகொள்கின்றன. அகதியாக வெளியேறி வாழும் வாழ்வின் துயரத்தைத் தனது கவிதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார் அடோனிஸ்.

“மத ஒழுங்குகளும் சட்டங்களும் ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுகின்றன. எதை எழுத வேண்டும்; எதை எழுதக் கூடாது என்பதை மதம் தீர்மானிக்கிறது. அதை மீறுகிறவர்கள் மீது வன்முறையை ஏவிவிடுகிறது. எழுத்தாளர்கள் எப்போதும் சுதந்திரத்தை விரும்புகிறவர்கள்; கண்காணிப்பும் தண்டனையும் தன் எழுத்தைத் தடைசெய்துவிட முடியாது என உறுதியாக நம்புகிறவர்கள். ஆகவே, அவர்களால் ஒருபோதும் மதச்சட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது” என்கிறார் அடோனிஸ்.

அரபு உலகின் சமகால அரசியல் பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் அடோனிஸிற்கு ‘கதே’ விருது உள்ளிட்ட உலகின் முக்கிய இலக்கிய விருதுகள் பல கிடைத்திருக்கின்றன.
“உள்நாட்டுப் போரின்போது, நான் இருட்டை முழுமையாக உணரத் தொடங்கினேன். அப்போது ஒரு வெளிச்சத்தைக் கண்டறிந்தேன். அந்த வெளிச்சம் மின்சாரத்தால், மண்ணெண்ணெயால் உண்டாக்கப்பட்ட வெளிச்சமல்ல. தன்னை அழித்துக்கொண்டு எரியும் மெழுகுவத்தியின் வெளிச்சம். அந்த வெளிச்சம் பால்ய காலத்திற்கு என்னை அழைத்துக்கொண்டு போனது” என்கிறார் அடோனிஸ்.

கவிதையின் கையசைப்பு - 4

அடோனிஸின் கவிதைகளும் இதுபோன்ற வெளிச்சத்தையே உலகுக்குத் தருகின்றன. அவற்றை வாசிக்கும் மனிதன் அந்த மஞ்சள் வெளிச்சத்தின் கதகதப்பில் நெருக்கத்தை உணர்கிறான். கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் சென்று வருகிறான். சொல்ல முடியாத ஒரு நம்பிக்கையைப் பெறுகிறான். கனவுகள் காணத் தொடங்குகிறான்.

‘சொற்களைக்கொண்டு ஒரு பாலத்தைக் கட்டுகிறேன்
அதன் வழியே உங்கள் துயரத்தைக் கடந்துபோய்விடலாம்’


என அடோனிஸ் ஒரு கவிதையில் கூறுகிறார். சொற்களால் உருவாக்கப்படும் பாலமே கவிதை. அந்த விந்தையைச் சிருஷ்டிப்பதாலேயே கவிஞனைக் கொண்டாடுகிறோம்.

அடோனிஸ் கவிதைகள்

தமிழில்: சமயவேல்

பாதை

பகிர்வதற்கு நான் தேடினேன்
உறைபனி மற்றும் நெருப்பின்
வாழ்வை
              ஆனால்,
உறைபனியோ நெருப்போ
என்னை உள்ளே விடவில்லை.
                 எனவே,
நான் எனது அமைதியைப் பாதுகாத்தேன் 
பூக்களைப்போலக் காத்துக்கொண்டு,
கற்களைப்போலத் தாங்கிக்கொண்டு.
காதலில் நான் இழந்தேன்
என்னையே.
          நான் உடைந்து போனேன்
மேலும் காத்திருந்தேன்
நான் கனவுகண்ட வாழ்க்கைக்கும்
நான் வாழ்ந்த 
மாறிகொண்டிருக்கும் கனவுக்கும் இடையில்
ஓர் அலையைப்போல நான் ஊசலாடிய வரைக்கும்.    

கவிதையின் கையசைப்பு - 4

நெருப்பு மரம்

ஆற்றங்கரை மரம்
இலைகளால் அழுகிறது.
அது தூவுகிறது கரையில்
கண்ணீருக்கு மேல் கண்ணீரை.
அது நதியிடம் வாசிக்கிறது
நெருப்பு பற்றிய அதன் தீர்க்கதரிசனத்தை.
எவர் ஒருவரும் பார்க்காத அந்தக்
கடைசி இலை
நான் தான்.
            எனது மக்கள்
இறந்துவிட்டார்கள் நெருப்பு
அணைவதைப்போல — ஒரு தடயமும் இல்லாமல்.

ஒரு மரம்

என்னிடம் கத்தி எதுவும் இல்லை
ஒரு தலையை நான் ஒருபோதும் செதுக்கியதில்லை
கோடையிலும் குளிர்காலத்திலும்
நான் ஒரு தப்பிப் பறந்துகொண்டிருக்கும் பறவை
பசியின் ஒரு பெருவெள்ளத்தில்
ஒரு வெற்றுக் கூட்டிற்கு.

எனது ராஜாங்கம் ஒரு தண்ணீர்ச்
சாலை.
ஒவ்வொரு இன்மையிலும் நான் இருக்கிறேன்
வலியில் அல்லது பயத்தில்,
மழையில் அல்லது வறட்சியில்,
தூரத்தில் அல்லது அருகில் —
பொருட்களின் ஒளியை நான் பெற்றிருக்கிறேன்.

மேலும் நான் போகும்போது,
பூமியின் கதவை நான் மூடுகிறேன்
எனக்குப் பின்னால்.

பண்டைய காலம் 

ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தை
இறக்கிறது ஒரு சுவருக்குப் பின்னால், அது
சுவர்களின் மூலைகளுக்குத் தனது முகத்தைத்
திருப்பிக்கொண்டு.
                 வீடுகள் விரைந்தோடுகின்றன
பழிவாங்குதலைக் கோரியவாறு
அதன் ஆவி புதைகுழியிலிருந்து எழும்புவதற்கு
முன்பாக..
                  நித்தியத்திடமிருந்து அல்ல
ஆனால், ஒரு கசப்பான நிலத்திலிருந்து
அது வருகிறது, துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து போலவே 
தப்பி ஓடுகிறது. நகரம், பொதுச்
சதுக்கங்கள், ஏழைகளின் வீடுகள் ஊடாக.
அது வருகிறது பாலைவனத்திலிருந்து,
மேலும் அதன் முகத்தின் மேல் இருக்கிறது  
புறாக்களின், கருகிய மலர்களின் பசி. 

காதலில் இருக்கும் எனது உடலுக்கு ஒரு கண்ணாடி

எனது உடல் காதலிக்கும்போது
அதன் சூறாவளியில் அது நாளை உருக்குகிறது
நறுமணம் வருகிறது
அதன் படுக்கைக்கு அங்கே கனவுகள்
தூபம்போல மறைகிறது
மேலும், தூபம் போலத் திரும்புகிறது.

துயருறும் குழந்தைகளின் பாடல்கள்
எனது உடல் பாடும் பாடல்கள்.
தொலைந்து, பாலங்களின் ஒரு கனவால்
குழம்பி, நான் புறக்கணிக்கிறேன்
கரையிலிருந்து அக்கரைக்கு
என்னைக் கடக்கும் அந்த உயரே எழும்பும் சாலையை.

கவிதையின் கையசைப்பு - 4

அவனது கண்களில் அவன் எடுத்துச் செல்கிறான்

அவனது கண்களில் அவன் எடுத்துச் செல்கிறான் 
ஒரு முத்து; நாட்களின் முனைகளிலிருந்து
மேலும் காற்றுகளிலிருந்து அவன் எடுக்கிறான்
ஒரு பொறியை; மேலும் அவனது கையிலிருந்து
மழையின் தீவுகளில் இருந்து
ஒரு மலை; மேலும் படைக்கிறான் ஒரு விடியலை.
நான் அவனை அறிவேன்—அவன் எடுத்துச் செல்கிறான்
அவனது கண்களில் கடல்களின் தீர்க்கதரிசனத்தை.
ஒரு இடத்தைப் பரிசுத்தப்படுத்தும் 
கவிதையையும் வரலாற்றையும் எனக்குப் பெயரிட்டான்.
நான் அவனை அறிவேன்—அவன் எனக்குப் பெயரிட்டான், வெள்ளம்.
 
மரணதண்டனை நிறைவேற்றுபவருக்கு ஒரு கண்ணாடி

“நீயொரு கவிஞன் என்று நீ கூறுகிறாயா?”

எங்கிருந்து வருகிறாய் நீ? உனக்கு அருமையான தோல் இருக்கிறது

மரணதண்டனை நிறைவேற்றுபவரே, நீங்கள் என்னைக் கேட்கிறீர்களா? 
அவனது தலையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்
      ஆனால், அவனது தோலை, காயமில்லாமல் எனக்குக் கொண்டுவாருங்கள்
      அவனது தோல் என்பது எனக்கு மிக அதிக மதிப்புடையது
அவனை எடுத்துச் செல்லுங்கள் வெளியே.

உனது வெல்வெட் தோல்
எனது தரை விரிப்பாக இருக்கும். 

       “நீயொரு கவிஞன் என்று நீ கூறுகிறாயா?”

ஒரு கனவுக்கு ஒரு கண்ணாடி

எனது கனவை எடுத்துக்கொள்
தை அதை, உடுத்து அதை,
ஒரு உடை.
          
      நேற்றை நீ
      எனது கைகளில் உறங்கச் செய்தாய்
      சுற்றிலும் என்னை அழைத்துக்கொண்டு
      ஒரு முனகலைப்போல என்னைச் சுழற்றி 
      சூரிய ரதத்தில்,
      ஒரு கடற்பறவை மேலே உயர்கிறது
      எனது கண்களில் இருந்து எழும்பி.

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும்
அங்கு ஓர் உரையாடல் எனது முகத்துக்கும் அதன் கண்ணாடிக்கும் இடையில்
இல்லை, காதலை வாசிப்பதற்காக இல்லை
மேலும் எனது முகச்சாயல்களில் உள்ள மாற்றங்களை அல்லது எனது
உற்றுப் பார்த்தலில் இருக்கும் மரணத்தின் கனமின்மையை வாசிக்க அல்ல, ஆனால்
எனது காதலுக்குக் கற்பிப்பதற்கு
எவ்வாறு கண்ணாடியைக் கேட்பது: ஏன் நான் உணர்வதில்லை
இருப்பின் இரவுத்-தன்மையை, அதன் அறியாதவைகள் மற்றும் என்னுடைய சாரத்தை?
நான் ஏன் உணர்வதில்லை எனது வாழ்வை
எனது முகத்துக்குள் நான் பார்க்கும்போது தவிர?

இருபதாம் நூற்றாண்டுக்கு ஒரு கண்ணாடி

ஒரு பையனின் முகத்தைத் தாங்கியிருக்கும் ஒரு சவப்பெட்டி
ஒரு புத்தகம்
ஒரு காக்கையின் வயிற்றின் மேல் எழுதப்பட்டிருப்பது
ஒரு மலருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு கொடிய மிருகம்

ஒரு பாறை
ஒரு பைத்தியக்காரனின் நுரையீரலுடன் சுவாசிக்கிறது

      இதுவே அது.
      இதுவே இருபதாம் நூற்றாண்டு.

-  - எஸ்.ராமகிருஷ்ணன்