Published:Updated:

“நாங்க மொத்தம் மூணுபேரு!”

“நாங்க மொத்தம் மூணுபேரு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க மொத்தம் மூணுபேரு!”

“நாங்க மொத்தம் மூணுபேரு!”

காகமும் வேகமாகக் கரையும் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேளை அது!

சென்னை ஆழ்வார் திருநகரிலிருக்கும் கவிஞர் யுகபாரதியின் வீடு சிரிப்பொலியால் அதிர்ந்தது. அவரைச் சந்திக்க வந்திருந்தார்கள் இயக்குநர் ராஜுமுருகனும், அவரின் அண்ணன் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இயக்குநர் சரவணனும். `இந்த மூன்று பேர் சந்திப்பதில் என்ன விசேஷம்?’ என்கிறீர்களா..? இவர்கள் மூன்று பேரும் தஞ்சை-திருவாரூர் மண்ணின் மைந்தர்கள். காவிரியாற்றின் கரையிலமர்ந்து கவிதை படித்தவர்கள்... அரட்டையடித்தவர்கள். கொறடாச்சேரி நூலகத்தில் ஒன்றாக நாள்களைக் கழித்தவர்கள். கலை இலக்கிய இரவுகளில் கவிதை வாசித்தும் பேசியும் அறிவைக் கூர்தீட்டிக்கொண்டவர்கள். சென்னைக்கு ஒன்றாகக் கிளம்பி வந்து ஒரே வீட்டில் வசித்து வாலிபத்தில் வறுமைக் கனியையும் பிறகு வெற்றிக் கனியையும் ருசித்தவர்கள். இன்று தமிழ் சினிமாவின் தனித்த அடையாளம் கொண்ட கவிஞராகவும், இயக்குநராகவும் அறியப்பட்ட, அறியப்படப் போகிறவர்கள். அவர்கள் மூவரும் வழக்கமாகச் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வுதான் இது. நடுவில் நானும் விகடன் நண்பர்களும் புகுந்துகொள்ள ‘வட்டியும் முதலுமாய்’ அங்கே மலர்ந்து கிளர்ந்தன பசுமை நினைவுகள். 

“நாங்க மொத்தம் மூணுபேரு!”

“எங்க மூணு பேர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத வருஷம் எதுனு யாராச்சும் தனித்தனியா கேட்டாலும் தொண்ணூத்து எட்டாவது வருஷத்தைச் சொல்லுவோம். ஒண்ணா நாங்க சென்னை கிளம்பி வந்து ஒண்ணா இருந்த வருஷம். தம்பி ராஜுமுருகன் படிச்சிட்டிருந்தான். அவன் மட்டும் வேடந்தாங்கல் பறவைபோல மெட்ராஸுக்கு எங்களைப் பார்க்க வருவான்.’’-  சென்னைக்கு வந்த கதையை ஆர்வமாகச் சொல்லத் தொடங்குகிறார் பாடலாசிரியர் யுகபாரதி.

“எங்க கையிலே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்தான் இருந்தது. சென்னையில ரூம் எடுத்துத் தங்குறதுக்கு, சாப்பிடுறதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகும்னே அப்போ தெரியாது. சென்னைக்கு வந்த மூணாவது நாள் கையில காசே இல்லை. என்ன பண்ணுறதுனே தெரியல. அப்போ, எங்கள் நண்பர் ஒருத்தரிடம் உதவி கேட்டுப்போனோம். ஆனா, அவரே இன்னொரு நண்பர்கிட்ட கேட்டுதான் தங்கியிருக்கார்னு அங்கே போனதுக்கு அப்புறம்தான் எங்களுக்குத் தெரிந்தது.  ‘இது யுனிவர்சிட்டி கெஸ்ட் ஹவுஸ். வார்டன்கிட்ட கேட்டு சொல்றேன்’னு எங்ககிட்ட சொன்னார் அந்த நண்பர். வார்டன் எங்களுக்கு இடம் தர மறுத்துட்டார். ஆனால்...”

 யுகபாரதி சின்ன இடைவெளி விட, இயக்குநர் சரவணன் தொடர்கிறார். “அதனால அந்த அறையில் வார்டனுக்கே தெரியாமல் நாங்க கொஞ்சநாள் தங்கியிருந்தோம். தம்பி ராஜு முருகன் எழுதிய ‘வட்டியும் முதலும்’ புத்தகம் படிக்கின்ற எல்லோருக்கும் கிடைக்குற ஒவ்வொன்றுமே எங்களுடைய அனுபவம்தான்’’னு சரவணன் முடிக்க, ராஜுமுருகன் தொடர்கிறார்.

‘`நாங்க மூணு பேரும் முதன்முதல்ல ‘அப்சரா மேன்சன்’ல தங்கியிருந்தோம். பேய்ப் படத்துல வர்றமாதிரி இருட்டான அறைகள் கொண்ட மேன்சன் அது. பகல்லயே பூத் பங்களா மாதிரி கிடக்கும். நைட் ரெண்டு மணிக்கு திடீர்னு தபேலா, ஆர்மோனியம், ஃப்ளூட்னு ஏதாவது இசைக் கருவி இசைக்கிற சத்தம் கேட்கும். போய்ப் பார்த்தா, எவனும் அப்படி வாசிச்சிருக்க மாட்டான். விடியற்காலை வரைக்கும் இந்தச் சத்தமெல்லாம் கேட்டுட்டே இருக்கும். நாங்க மூணு பேரும் எந்திருச்சு முழிச்சிட்டே இருப்போம். அப்புறமாத்தான் தெரிஞ்சது, கலைத்தாகம் கொண்ட ஒரு வடநாட்டுக்காரர் அவனுடைய வறுமையை நினைச்சு இதையெல்லாம் வாசிச்சிட்டிருந்திருக்கார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நாங்க மொத்தம் மூணுபேரு!”

எங்களைச் சுத்தி அந்த மேன்சனில் விதவிதமான ஆட்கள் இருந்தாங்க. அந்த நண்பர்கள் கூட்டத்துல ஒரு இன்ட்ரஸ்டிங் கேரக்டர் இருந்தார். அவர் இயக்குநர் டி.ஆரின் உதவியாளர் ரகுபதி. எதுகை மோனை இல்லாமல் பேசவே மாட்டார். ‘டே தம்பி... உன் வீடே இருக்கு உன்னை நம்பி... சீக்கிரம் படம் பண்ணலைனா ஆகிடுவே வெம்பி’னு தான் பேச ஆரம்பிப்பார்’’னு ராஜுமுருகன் சொல்ல, யுகபாரதி தொடர்கிறார்.

‘`நம்பிக்கையிழந்த காலகட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய மனிதரா இருந்தவர் இந்த ரகுபதி. ‘ரஜினிக்குப் படம் பண்ணலாம்னு இருக்கேன்... நாம சொன்னா, நாளைக்கே வந்து நடிச்சுக் கொடுத்துருவார். கதை செம ஸ்ட்ராங்ல...’னு சீரியஸா சொல்வார். அந்தளவுக்கு அதீத நம்பிக்கையில் இருப்பார். ரகுபதியும், வடநாட்டு இசைக் கலைஞரும் எங்கள் கவலைகளை மட்டுமல்ல, அப்சரா மேன்சன் மாடிப் படிக்கட்டில் துப்பப்பட்டிருக்கும் பான்பராக் நாற்றத்தையும் மறக்க வெச்சிருவாங்க” என்று யுகபாரதி முடிக்க,

“மேன்சன் லைஃப்புக்கு அப்புறம் கோடம்பாக்கத்துல அம்பேத்கர் ஹாஸ்டலில் அண்ணனுக ரெண்டு பேரும் தங்கியிருந்தாங்க. அவங்களைப் பார்க்க ஊருல இருந்து நான் வந்திருந்தேன். குளிக்குற பக்கெட்டுல சாப்பாடு கொண்டு வருவாங்க. எனக்கு ஆச்சர்யமா அதே நேரத்தில் அதிர்ச்சியாகவும் இருக்கும்’’னு ராஜு முருகன் சரவணனைப் பார்க்க,

“மனிதம், அன்பு இதெல்லாம் என்னன்னு அந்த ஹாஸ்டலில்தான் தெரிஞ்சிக்கிட்டோம். எங்களை விருந்தினர் போல அப்படி கவனிச்சாங்க. ரொம்பச் சின்ன அறை அது. அதில், இருபத்து நாலு பேர் தங்கியிருந்தாங்க. எல்லோருமே ரோட்டுல வேலை பார்க்குறவங்க. கண்ணு தெரியாதவங்களும் இருந்தாங்க. ஒரு மழை நாளில் இரவு கடுமையான பசி. சாப்பாடு இல்லாம அலைஞ்சவங்கனு எங்களைப் பார்த்தாலே தெரியும். அங்கே இருந்தவங்க பதறிப் போயிட்டாங்க. கையிலே கிடைச்ச வாளி, மக்கெல்லாம் எடுத்துட்டு ஓடுனாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வாளி நிறைய சாப்பாடு, மக்குல சாம்பார்னு கொண்டு வந்து எங்க முன்னாடி வெச்சு, ‘தப்பா எடுத்துக்காதீங்க சார். மெயின் ஹாஸ்டல் போய் சாப்பாடு கொண்டு வந்தோம். கூச்சப்படாம சாப்புடுங்க’னு சொன்னாங்க’’ என சரவணன் கண்கலங்கிச் சொல்ல, யுகபாரதி தொடர்கிறார்.

‘`சாப்பாட்டை எடுத்துக் கையிலே வெக்கிறேன். கண்ணுல இருந்து கண்ணீர் வழியுது. அன்பினால் அன்னிக்கு அழுதோம். வேலைக்காக இன்டர்வியூ கிளம்பினா, எங்க சட்டையை எடுத்துட்டுப் போய் அயர்ன் பண்ணிக் கொண்டு வருவாங்க. இன்னைக்கும் அம்பேத்கர் ஹாஸ்டலை கிராஸ் பண்ணிப் போகும் போது கண்ணுல இருந்து கண்ணீர் வந்துரும்.’’ நெகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்த யுகபாரதியைத் தொடர்ந்தார் ராஜுமுருகன் .

“குக்கூ’ படத்தோட ஷூட்டிங்கை இந்த அம்பேத்கர் ஹாஸ்டல்லயும் நடத்தினேன். அங்கே தங்கியிருந்த கண்ணு தெரியாதவங்க நடிச்சிருந்தாங்க. சினிமால ஏதோ படம் பண்ணிட்டோம்னு பெயர் வாங்கிட்டாலும், நாங்க இன்னும் எளிய மனிதர்களுடன் பயணம் செஞ்சுகிட்டுதான் இருக்கோம். இதுவரைக்கும் அவர்கள் யாரும் எங்களிடம் எதுவும் கேட்டதில்லை. கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். அவர்களுடைய மிகப்பெரிய ஆசை என்னவா இருக்குனா...அவர்கள் வீட்டுக்குப் போகணும். அவங்ககூட ஒருநாள் தங்கிட்டுப் போகணும்ங்கிறதுதான்’’னு ராஜுமுருகன் சொல்லி முடித்தார்.

“இன்னிக்கு சினிமாவையும் தாண்டி மக்களுக்கான அரசியலை, சமூக மாற்றத்துக்கான பணிகளை பண்ணிட்டுதான் இருக்கோம். அதுக்கு சினிமாவை ஒரு கருவியா மட்டும் பயன்படுத்திட்டிருக்கோம். வறுமையை ஜெயிச்சிட்டாலும் அடுத்தடுத்துனு தேடல்கள் எங்க மூணு பேருக்குமே இருக்கு. இந்தக் கலையால மக்களுக்கு ஏதாச்சும் பண்ணணும்கிற ஒற்றைப்புள்ளி எங்க மூணு பேரையும் இப்பவும் ஒண்ணாக்கியிருக்கு. அதனால நாங்க ஜெயிச்சிட்டதா நினைக்கலை. சினிமா என்பது எங்கள் இலக்கும் அல்ல. இது ஒரு பயணம். இன்னும் போக வேண்டிய தூரமும் செய்ய வேண்டிய பணிகளும் நிறையவே இருக்கு!”- ராஜுமுருகன் சொல்ல, இப்போது  யுகபாரதியும் சரவணனும் தலையசைத்து ஆமோதித்தார்கள்.

வாழ்த்துகள் தோழர்களே!

ஆர்.சரண், இரா.கலைச்செல்வன், சனா - படங்கள்: க.பாலாஜி