Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியங்கள்: வேலு

சொல்வனம்

பேச்சியின் கேள்விகள்

எங்கடா என் பலி
எனக் கேட்டபோது
வெட்டிய பன்றியின்
வெதுவெதுப்பான
ரத்தத்தைக் கொடுத்தார்கள்.

எங்கடா என் படையல்
எனக் கேட்டபோது
மிலிட்டரி ரம்மையும்
முக்கூடல் சுருட்டையும் வக்கணையாய்க் காட்டினார்கள்.

எங்கடா என் மரியாதை
எனக் கேட்டபோது
சம்பங்கி மாலைகளை
சரஞ்சரமாய்ச் சாத்தினார்கள்

எங்கடா என் பயிர்கள்
எனக் கேட்டபோது தூங்கிப்போயிருந்த பிள்ளைகளைத் தூக்கி வந்து காட்டினார்கள்.

சந்தோசமடா சந்தோசம்
வேட்டைக்குப் போகவேணும் எங்கடா என் வனம்...
 
கேட்டபோது
கதறியழத் தொடங்கினாள் கருவறையில் இருந்த
காட்டுப்பேச்சி.

- கண்மணிராசா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சொல்வனம்

காவல் பூட்டு

சேமித்துக்கொள்ள
காங்கிரீட் தளத்தில் பதித்த
தடங்களில் என்ன இருக்கிறது
பூட்ஸுக்குள் கால்கள் முடங்கும் வாழ்வு
தனிமை நிரம்பிய அறைகளில்
பழுதாகித் தொங்கும் விளக்குகள்
மீன்குழம்பின் வாசனையற்றுப்போன
சமையலறைக்கு அதன் பின் வராதுபோன பூனையால்
அடுப்பில் பூனை படுத்திருக்கும் என்று
சொல்ல முடியாத வேதனை
செத்தால் நாற்றம் வெளிப் போகும் வரை
உறங்கிக் கிடக்கலாம் உள்ளுக்குள்
பூட்டுகள் காவலுக்குத் தொங்கிக்கொண்டிருக்கும்

- விகடபாரதி

சொல்வனம்

எம்ஜிஆருக்காக அழும் டிஎம்எஸ்!

நிலா உடன் வரும் நடுநிசிப் பயணத்தில்
இயர் போனின் வழி செவிகளுக்குள் கசிகிறது
`ஓடும் மேகங்களே...' என
`ஆயிரத்தில் ஒருவன்' எம்ஜிஆருக்காக
டிஎம்எஸ் சோகக் குரல் தந்த பாடல்.
கடந்துபோகும் மேகங்களினிடையே
கள்ளன்-போலீஸ் விளையாடும் பாவனையில்
ஒளிந்து வெளிப்பட்டு
புன்னகையோடு வருகிறது நிலா.
கண்ணெதிரே விரிந்திருக்கும் கரிய வானத்தில்
கைதட்டி உற்சாகமூட்டும்
மழலைகளின் வடிவமாய்
கண்சிமிட்டிக் குதூகலிக்கின்றன விண்மீன்கள்.
`நான் காற்று வாங்கப்போனேன்...' என
`கலங்கரை விளக்கு' எம்ஜிஆருக்காக டிஎம்எஸ்
அடுத்து குரல்கொடுக்கத் தொடங்கியிருக்க
இப்போது நிலாவோடு சில மேகங்களும்
கேட்டபடியே உடன் வருகின்றன.
டிஎம்எஸ் குரல்வழி தொடரும்
எம்ஜிஆர் சோகப்பாடல்களில்
இறுதிப் பாடல் நிறைவடையும் தருவாயில்
வலிதாளாத மேகங்கள் ஒன்றுதிரண்டு
அடக்க முடியாமல்
அடை மழையென அழத்தொடங்க
தெறிக்கும் துளிகளில் கலந்து விழுகின்றன
விம்மும் நிலாவும் விண்மீன்களும்
கைகளால் முகம் பொத்தி
வடிக்கும் கண்ணீரும்!

- பாப்பனப்பட்டு .வ.முருகன்

சொல்வனம்

ரு சிலிண்டர் அன்பு!

முகவரி தேடியலையும் வெளியூர்க்காரரை
அழைத்துப்போய் இடம்சேர்க்கும்
நகரத்து இளைஞனும்,
பின்கேட்கும் ஒலிப்பான்களைப்
பொருட்படுத்தாமல் பிரேக்கை அழுத்திமிதித்துக்
குழந்தைகளிடம் சாலையைக்
கடக்கச் சொல்கிற ஆட்டோக்காரரும்,
யாரோ கலங்கும் பொழுதுகளில்
எங்கோ ஈரம் கசியவிடும் மனிதர்களும்
அவரவர் இடத்திலிருந்து
அன்பு செய்கிறார்கள்.
இவர்களையெல்லாம் வேடிக்கை பார்க்கிற
ஃபர்ஸ்ட் பர்சன் சிங்குலருக்கு
ஏனோ மாதக்கடைசி தாண்டும்
எரிவாயு சிலிண்டர் மீது
எல்லையற்ற அன்பு பிறக்கிறது.
இவ்வன்பினுள்ளும் முந்தையவைபோலவே
ஒரு கடல் விரிகிறது!

 - விக்னேஷ் சி செல்வராஜ்

ஓவியங்கள்: வேலு