Published:Updated:

மோடி ஆட்சியை விமர்சிக்கும் சசி தரூரின் புத்தகம் எப்படி இருக்கிறது?! #TheParadoxicalPrimeMinister

மோடி ஆட்சியை விமர்சிக்கும் சசி தரூரின் புத்தகம் எப்படி இருக்கிறது?! #TheParadoxicalPrimeMinister
மோடி ஆட்சியை விமர்சிக்கும் சசி தரூரின் புத்தகம் எப்படி இருக்கிறது?! #TheParadoxicalPrimeMinister

தேர்தல் சூழலில் மோடியை விமர்சித்து வெளிவந்திருக்கிறது 'The Paradoxical Prime Minister: Narendra Modi and his India'. இதை எழுதியிருப்பவர் சசி தரூர்.

இன்னும் சில மாதங்களில் மக்களவைக்கான தேர்தல் தொடங்கவிருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்தவுடன், மக்களவை தேர்தலுக்கான பிரசாரங்கள் நாடுமுழுவதும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியையும், பிரசாரங்களையும் செய்து வருகிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வெளிவந்திருக்கிறது 'The Paradoxical Prime Minister: Narendra Modi and his India'. அதாவது, 'முரண்பாடுகளின் பிரதம அமைச்சர் - நரேந்திர மோடியும் அவரது இந்தியாவும்'. இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சசி தரூர்.

புத்தகத்தின் அட்டைப்படமே`லண்டன் மேடம் டுசாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மோடியின் மெழுகு சிலையை அவரே சரிசெய்வது போன்றதாகத் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. சசி தரூர் நரேந்திர மோடி எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயல்பவர் என்று புத்தகத்திற்குள் சொல்வதை, அட்டைப்படத்தில் சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 50 கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகம், பிரதமராக மோடி இருந்த நான்கு ஆண்டுகளில் அவரது பேச்சுக்கும், செயலுக்கும் இருக்கும் முரண்பாடுகளாகப் பலவற்றை முன்வைக்கிறது. 

"நரேந்திர மோடி ஒரு முரண்பட்ட மனிதர். அவர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கிறது. ஒரு பக்கம் இந்திய அரசியலமைப்பு தான் முக்கியம் என்று கூறி, முற்போக்கான விஷயங்களைப் பேசுகிறார்; மறுபக்கம் வாக்குகளுக்காகப் பிற்போக்கு விஷயங்களை ஊக்குவிக்கிறார். ஒருபக்கம் அவரது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாகக் கூறிக்கொண்டே, மறுபக்கம் அவரது அரசாங்கம் செயல்படாமல் நிற்கும் தருணங்களான மதக்கலவரங்கள், பசு குண்டர்கள் செய்யும் படுகொலைகள் முதலானவற்றுக்கு வாய்மூடி நிற்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒருபக்கம் பேசிக்கொண்டே, இந்தியப் பொருளாதாரத்தின் மீது அவநம்பிக்கையை உருவாக்கி வருகிறார்" எனத் தொடங்குகிறார் சசி தரூர். முழு புத்தகமும் ஏறக்குறைய இந்தத் தொடக்கத்தைத்தான் விவரிக்கிறது.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபோது, அவர் தொடங்கிய `தூய்மை இந்தியா' திட்டத்தில் சசி தரூர் இணைத்துக் கொள்ளப்பட்டார். அதே சமயத்தில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மோடியின் வெளியுறவுக் கொள்கையை ஆதரித்துப் பேசினார். இது அன்றைய காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியது. `இந்திய அரசியலில் ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பாராட்டுவதையே ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று விமர்சிக்கிறார் சசி தரூர். மோடியின் இளமைக்காலம் தொடங்கி, குஜராத் முதல்வராக அவர் பொறுப்பேற்றது, 2002-ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான வன்முறையின்போது அவரது செயல்பாடுகள், அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது கவனம் தேசிய அரசியல் மீது திரும்பியது முதலானவற்றைச் சுருக்கமாக பதிவுசெய்திருக்கிறார். 

பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள், மோடி அப்போதைய தேர்தல் பிரசாரங்களில் பேசியது ஆகியவற்றில் தொடங்கி தற்போதைய அரசியலில் அந்த வாக்குறுதிகளில் மோடி காட்டியிருக்கும் முரண்பாடுகளையும் பேசுகிறார் சசி தரூர். மோடிக்கும் அவருக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்புகளையும், அவற்றில் நிகழ்ந்தவற்றையும் சமகால அரசியலோடு பொருத்திக் காட்டுகிறார். 

ஐந்து பாகங்களாக இந்தப் புத்தகத்தைப் பிரித்துள்ளார் சசி தரூர். முதல் பாகம் மோடியைப் பற்றி அறிமுகம் செய்கிறது. இரண்டாம் பாகம் மோடி ஆட்சியில் இந்தியாவின் பன்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகளாகச் சிறுபான்மையினர், தலித்கள் முதலானோருக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளை விவரிக்கிறது. மூன்றாம் பாகத்தில் மோடியின் அரசு செயல்பாடுகளையும், நான்காம் பாகத்தில் மோடியின் பொருளாதார கொள்கைகளையும் பேசுகிறார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்ததால், ஐந்தாம் பாகத்தை மோடியின் வெளியுறவுக் கொள்கையை முன்வைத்துப் பேசியுள்ளார்.

மோடியின் ஆட்சியில் நிகழ்ந்த அனைத்தையும் புள்ளிவிவரங்களோடு பதிவுசெய்துள்ளார் சசி தரூர். துல்லியமான, அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களோடு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 'மோடி' என்ற பிம்பத்தைக் கட்ட விளம்பர நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டது, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களைப் பாஜக ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது, குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, சர்தார் வல்லபபாய் படேல் சிலை என மோடி ஆட்சியின் நிகழ்ந்த அனைத்தின் மீதும் விமர்சனத்தை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். 

காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளுள் ஒருவராக சசி தரூர் இந்தப் புத்தகத்தில் மறுக்க முடியாத விமர்சனங்களை வைத்திருக்கிறார். ஆனால், பாஜகவின் செயல்பாடுகளை விமர்சிக்கும்போது, காங்கிரஸ் கட்சியையும் அவற்றோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரஸ் அல்லாத ஒருவர் எழுதியிருந்தால், இந்தக் கேள்விகள் எழாது. 

'கடந்த கால கசப்புகளை மனதில் கொண்டு மதக் கலவரங்கள் ஏற்பட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது' என்கிறார் சசி தரூர். இது உண்மை என்று நினைப்பதற்குள், அவரே தொடர்ந்து, 'மதக் கலவரங்கள் நிகழாமல் இருந்தால்தான் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்குள் வரும்' என்கிறார். புத்தகத்தின் பல இடங்களில் இதுபோன்று அவர் பேசுவதைக் காண முடிகிறது                 

காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும், பாஜக எதிர்ப்பாளர்களுக்கும் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான சிறந்த ஆவணமாக இருக்கிறது இந்தப் புத்தகம். பாஜகவினரும், மோடி ஆதரவாளர்களும் மறுக்கவே முடியாத விஷயங்களைப் பதிவுசெய்திருக்கிறார் சசி தரூர். பாஜக ஆட்சியைப் பற்றிய எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான விமர்சனமாக 'தி பேரடாக்ஸிகல் ப்ரைம் மினிஸ்டர்' அமையும். 

அடுத்த கட்டுரைக்கு