Published:Updated:

'இரவணசமுத்திரம் ஞாபகம் வருதே...'

'இரவணசமுத்திரம் ஞாபகம் வருதே...'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'இரவணசமுத்திரம் ஞாபகம் வருதே...'

திருநெல்வேலி-தென்காசி இருப்புப் பாதையை ஒட்டி அமைந்து இருக்கும் தன் சொந்த ஊர் இரவணசமுத்திரம் பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்  இசை அமைப்பாளர் பரத்வாஜ்!

'இரவணசமுத்திரம் ஞாபகம் வருதே...'
##~##

''150 வருஷத்துக்கு முன்னாடி இரவணப்ப நாயக்கர்னு ஒருத்தர் இங்கே வந்து நிலத்தை கூறு போட்டு வித்தாராம். அதனால் அவரோட பெயரையே ஊருக்கு வெச்சுட்டாங்கனு சொல்வாங்க. நான் இங்கதான் பிறந்தேன். எனக்கு மூணு வயசு இருக்கும்போது அப்பாவுக்கு ராஜ்ய சபாவில் வேலை கிடைச்சதால் குடும்பத்தோடு டெல்லிக்குப் போயிட்டோம். அங்கேதான் ப்ளஸ் டூ, டிகிரி, சார்ட்டர்ட் அக்கவுன்ட் எல்லாம் படிச்சேன். இருந்தாலும் ஒவ்வொரு வருஷமும் லீவுக்கு மறக்காம இரவணசமுத்திரம் வந்துடுவோம். ஊருக்கு வந்ததும் ஆச்சி, தாத்தாகிட்ட கூடப் பேசாம, ராமநதி ஆத்துக்கு குளிக்க ஓடுவேன்.  

என்னை மாதிரி வெளியூர்ல இருந்து லீவுக்காக நிறையப் பசங்க ஊருக்கு வருவாங்க. எல்லாம் ஒண்ணாச்சேர்ந்ததும் எங்க ஊர் கிரிக்கெட் டீம் ஸ்ட்ராங் ஆகிடும். உடனே தென்காசி ரயில்ல ஏறி அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி ஊர்களுக்குப் போய் கிரிக்கெட் விளையாடிட்டு வருவோம்.  ஊர்ல ரயில் போற சத்தத்தை வெச்சுத்தான் எல்லா வேலைகளும் நடக்கும். காலையில் சாப்பிடுறது, வேலைக்குப் போறது, வயல் வேலையை முடிச்சு கரை ஏறுவதுனு எல்லாமே ரயிலை கணக்குவெச்சுதான்.  எங்க ஊருக்கு ரயில் வந்தது பெரிய கதை. தண்டவாளம் போடுறதுக்கு நிலம் அளக்கும்போது, 'பெரிய பாதிப்பு வரப் போகுது’னு பயந்து ஆழ்வார்குறிச்சி, அம்பா சமுத்திரம் ஊர் மக்கள் அப்போ போராட் டம் நடத்தியிருக்காங்க. அந்தச் சமயத்தில் எங்க ஊர்க்காரர் ஒருத்தர் ரயில்வே போர்டுல உறுப்பினர். அவர் பேசி னதும் ரயில்வே லைன் ஊருக்கு வெளியேதான் போகணும்கிற நிபந்தனையோட மக்கள் சம்மதிச்சாங்கலாம். எங்க ஊரில் மட்டும்தான் ரயில், ஊருக்கு உள்ளே புகுந்து போகும். பக்கத்து ஊர் களில் ரயில் ஊருக்கு வெளியேதான் போகும். அப்போ ஊரில் எல்லா நோய்களுக்கும் அமிர்கான்னு ஒரே டாக்டர்தான். அவருகிட்டதான் எல்லாரும் எல்லாத்துக்கும் மருந்து வாங்கிச் சாப்பிடுவோம்.

'இரவணசமுத்திரம் ஞாபகம் வருதே...'

பயலுங்க எல்லாரும் ஒண்ணாச்சேர்ந்தா, வில் வண்டி பூட்டி குற்றாலத்துக்குக் குளிக்கப் போவோம். நாங்க போனாலே ஹோட்டல்காரங்க கலவரம் ஆவாங்க. ரெண்டு இட்லி வாங்கிட்டு ரெண்டு சொம்பு சாம்பார் குடிப்போம். ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது, சாம்பார் முழுசா காலியாகி இருக்கும். அங்கே இருந்து கடையம் கிளம்பி, கோபாலகிருஷ்ணா தியேட் டர்ல படம் பார்த்துட்டு வண்டியிலேயே தூங்கிடுவோம். பழகின பாதைங்கிறதால் மாடுங்க நேரா வீட்டு வாசல்ல வந்து நிக்கும்.

எங்க கேங்ல நான் நல்லா பாட்டுப் பாடுவேன். நான் பாட்டு எடுத்துவிட்டதுமே கூட்டம் கூடிடும். ஏரியாவில் ஃபேமஸ் ஆன பாடகன் ஆகிட்டேன். டிராக்டர், மைக் செட்லாம் வாடகைக்கு எடுத்துட்டுப்போய் பக்கத்து ஊர்கள்ல பாடிட்டுவருவோம். அவங்ககிட்ட கைதட்டு வாங்குறதுக்காக, இந்த மாதிரி கைக் காசு செலவு பண்ணி ஊர் ஊராப் போய் பாடுவேன்.

தாத்தா, ஆச்சி அப்பா, அம்மா எல்லாருக்கும் இந்த ஊர்தான். அதே மாதிரி என்  மனைவியோட தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாருக்கும் இந்த ஊர்தான் பூர்வீகம். பல தலை முறையா எனக்கும் இரவணசமுத்திரத்துக்கும் நெருங்கியத்தொடர்பு உண்டு. 'பாண்டவர் பூமி’ படத்தில் 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...’, 'ஆட்டோகிராஃப்’ படத்தில் 'ஞாபகம் வருதே..’ பாடல்களுக்கான இசையை என் வாழ்க்கையில் இருந்துதான் எடுத்தேன். எனக்கு எல்லாம் கொடுத்த ஊருக்கு நான் ஏதாவது திரும்பக் கொடுக்கணுமே?

'இரவணசமுத்திரம் ஞாபகம் வருதே...'

'நமது கிராமம்’ திட்டம் மூலம் ஊரில் பூங்கா ஒண்ணு வெச்சுக் கொடுத்து இருக்கேன். இப்பவும் மாதம் ஒருமுறை ஊருக்கு வந்துட்டுப் போவேன். எவ்வளவுதான் வேலை விஷயமா வெளிநாடுகளுக்குப் போனாலும், இரவணசமுத்திரம் வந்தாத்தான் எனக்கு நிம்மதி பெருமூச்சு வரும். ஏன்னா எனக்கும் என் ஊருக்குமான பந்தம் அப்படிப்பட்டது!''

 • மதுரை வேலம்மாள் பள்ளிக்கூடத்தில் இவர் இசை அமைத்த ‘ஒவ்-வொரு பூக்களுமே...’ பாடலை தினமும் பிரேயர் பாடலாக ஒலிக்கச் செய்து இருக்கி-றார்-கள்!
   
 • 1,330 திருக் குறளுக்கும் இசை அமைத்துப் பாடலாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்  பரத்வாஜ்!
   
 • ‘காதல் மன்னன்’ இவருடைய முதல்  தமிழ்ப் படம். இவருடைய 25&வது படம் ‘அட்டகாசம்’, இவருடைய 50&வது படம் ‘அசல்’.
   
 • இந்த சென்டிமென்ட் காரணமாகவே இவருடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார் அஜீத்!
   
 • ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...’ பாடலில் ‘வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்’ என்ற வரிக்காக, அந்தப் பாடலை அடிக்கடி கேட்பது இவருடைய வழக்கம் !

- ஆ.கோமதிநாயகம்
படங்கள்: எல்.ராஜேந்திரன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு