Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

கோல விடியல்

சாலையில் விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களைத்
துரத்திக்கொண்டிருக்கும் நாய்க்கு
இப்போதைக்கு எந்த இலக்குமில்லை
விரையும் வாகனங்களைத் தவிர

யாரோவால் நடப்பட்டு
யாரோவால் தண்ணீர் பாய்ச்சப்பட்டு
யாரோவால் அறுக்கப்பட்டு
யாரோவால் பாரமேற்றி அனுப்பப்பட்ட வைக்கோலொன்று
எடுப்பதற்கு யார் ஒருவரும் இல்லாமல்
தனியே அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது சாலையில்

கடையில் வடை வாங்கி
தினம்தோறும் ஒரு துண்டை விண்டு வீசும்
பரோபகாரிக்காக
வாகனங்கள் எழுப்பிப்போகும் தூசுகளுக்கிடையே
காத்திருக்கிறது காகமொன்று

இன்னும் திறக்கப்படாத கடைகளின் கதவுகளில்
ஒட்டியிருக்கும் மண்ணில்
ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய பாதங்கள்
புதிதாய் மாறிக்கொண்டேயிருக்கும்
பழைய வீதியில் இறங்கி நடக்கின்றன

ஆரம்பித்துவிட்ட வாகன இரைச்சல்களுக்கு நடுவிலும்
கிளம்பி அடங்கும் தூசுகளுக்கு நடுவிலும்
அவ்வளவு தெளிவாய் அழகாய் மலரும் கோலமொன்று
தன் வெள்ளை மொழிகளால் ஏற்றுகிறது
விடியலொன்றை அத்தனை மனங்களிலும்

- சௌவி

சொல்வனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டயறியிலிருந்து...

வாசித்த சொற்கள் சிலவற்றை
எனது டயறியின் மய்யப் பகுதியில்
மூடிவைக்கிறேன்

நான் டயறியைத் திறந்து பார்க்கும்
மற்றொரு நாளில்
அவை வளர்ந்து
ஒரு பூனைக்குட்டியாகவோ
ஓர் அணில்பிள்ளையாகவோ
என்னைச் சந்திக்க வேண்டும் என்பது
எனது மனதின் இயங்குதல்

அதை
ஒருநாள் திறந்து பார்க்க
டயறியிலிருந்து
வினோத மிருகம் ஒன்று வெளியேறியது

பிறகு
அந்த மிருகம்
எனக்குள் வளர்ந்த
பூனைக்குட்டியையும்
அணில்பிள்ளையையும்
தின்னத் தொடங்கியது.

வழமைபோல் வாசித்துவிட்டு
இக்கவிதையையும் மறந்துவிடுங்கள்.

- ஏ.நஸ்புள்ளாஹ்

சொல்வனம்

மேசை மூங்கில்

நீண்ட விடுப்பில் சென்று திரும்பிய ஒருநாள்
அலுவல மேசையின் நிறம் மாறியிருந்தது
மென்சிவப்பிலிருந்து
அடர்நீலத்தைப்  போர்த்தியிருந்தன
பொய்ச்சுவர்களும் தடுப்புகளும்.
மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்கான ரசீதுகளை
சரிபார்த்தபடி வாங்கிச் செல்கிறாள்
மனிதவள  அலுவலர் ஒருத்தி...
இயந்திரப் புன்னகையோடு.
போலியான நல விசாரிப்புகளை எதிர்கொண்டு
நாடகமொன்றை ஒவ்வொருவருக்கும் அரங்கேற்றிய பின்
கணினியை மெதுவாய் உயிர்ப்பிக்கிறேன்... மெல்லிய சிணுங்கலோடு
விழி திறக்க... மின்னஞ்சல் விசாரிப்புகள்... சாவிலிருந்து மீண்டதைப் பற்றி... சிலருக்கு அது தத்தமது முன்னெச்சரிக்கைகள்.
பலருக்கு... அதுவும் ஓர் அலுவலகக் கடன்!
இப்போதுதான் கவனிக்கிறேன்... மேசையில்
சிறிய கண்ணாடிப்பேழையில் வைத்திருந்த
சீன மூங்கில் செடியைக் காணவில்லை!
மீளவே போவதில்லை எனக் கணித்தார்களோ..?

- அனலோன்

சொல்வனம்

ஒரு மீன்

வீட்டைக் காலிசெய்கிறார்கள்
கடைசியாக மீன்களைப் பையில் பிடித்துக்கொண்டு
கடலைக் கவிழ்க்கிறார்கள்
திகைப்பினிடையே
ஒரு வார்த்தை வரவில்லை
வாய் மட்டும் அசைந்தபடியிருக்கிறது
ஒரு மீனுக்கு.

-  யியற்கை. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism