Published:Updated:

தனுக்கோடி - சிறுகதை

தனுக்கோடி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தனுக்கோடி - சிறுகதை

கலாப்ரியா - ஓவியங்கள்: ஸ்யாம்

தனுக்கோடி - சிறுகதை

கலாப்ரியா - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
தனுக்கோடி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தனுக்கோடி - சிறுகதை

ன்று வயலில் வேலை ஒன்றுமில்லை, அதனால் சின்னத்தாயி அரங்கு வீட்டை, கொஞ்சம் ஒதுங்க வைக்கலாமென்று உள்ளே போனாள். வீட்டைவிடச் சற்றுத் தாழ்வாக இருக்கும் அறை வீட்டில், உயரத்தில் இருக்கும்  ஜன்னலில் இருந்து வர்ற வெளிச்சத்தைத் தவிர மத்தப்படி வெளிச்சம் குறையாகத்தான் இருக்கும். அந்த நிழலான இருட்டும்,   உயர ஜன்னலிலிருந்து வரும்  காற்றும், அறைவீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். வழுவழுப்பான பாவூர்ச் செங்கல் பாவிய தரை. கொஞ்சம் ஒதுங்க வைத்த பின் சின்னத்தாய்க்கு அச்சலாத்தியாக வந்தது. ஒரு குதிருக்குப் பின்னால் போய் முந்தானையை விரித்துப் படுத்துவிட்டாள். எப்போதோ சிந்திய நெல் தவிட்டின் வாசனை மூக்கை நெருடியது. அப்போவெல்லாம் எம்புட்டு நெல்லும் அரிசியும் தவிடும் இங்கே இருக்கும். பழைய காலங்களை நினைத்துக்கொண்டு படுத்தபடியே காலியாகக் கிடக்கும் மூலைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று சுவர் ஓரமாக ஏதோ பளபளப்பாகத் தெரிந்தது. எழுந்து போய்ப் பாத்தாள். கொஞ்சம் தகடு போல இருந்த தங்க வளையல்கள். கொஞ்ச நாள் முன்பு கிட்டத்தட்ட அதே இடத்தில் இரண்டு ஜோடி கண்ணாடி வளையல்கள் கறுப்புக் கலரில் கிடந்தன. இதையும் யார் கையிலோ பார்த்திருக்கிறாள்.  

தனுக்கோடி - சிறுகதை

கஷ்டப்பட்டு நினைவுபடுத்திக் கொண்டிருக்கையில், தனக்கோடி ஆச்சி சத்தம் தெருவில்  வீட்டுக்கு அருகேயே கேட்டது. ஆச்சியை அவளுக்குப் பிடிக்கும். ஆனால் இந்த மனநிலையில் அவளைப் பார்க்க என்னவோ போலிருந்தது. மகனை மெதுவாகக் கூப்பிட்டு, ``ஏல, இசக்கி முத்து தனக்கோடியா சத்தம் மாதிரி கேக்குலே, என்னை எங்கேன்னு கேட்டா, வயலுக்குப் போயிருக்கான்னு சொல்லிரு, நான் இந்த அறைவீட்டை ஒதுங்க வச்சுகிட்டு இருக்கேன். அவ `…….’ ஒரு இடத்துல ரொம்ப நேரம் தரிக்காது, சீக்கிரமே போயிருவாலே,” என்று  ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னாள்.

இசக்கிமுத்துவுக்கு அம்மா சொன்ன கெட்ட வார்த்தையைக் கேட்டு சிரிப்பாய் வந்தாலும் அடக்கிக்கொண்டான். என்ன செஞ்சாலும் அம்மாவுக்குக் கோபம் வராது. ஆனா கேலியா சிரிச்சிட்டா பேய்க் கோபம் வந்துரும், அடி பின்னிருவா. அவள் அடிக்கடி எதையாவது மறந்திரக்கூடாது என்று சேலை முந்தியில் முடிச்சுப் போட்டு வைத்துக்கொள்ளுவாள். ஆனால் மறு நாள் துவைத்துக் காயப் போட்டு மடித்து வைக்கையில்தான்   இது என்னத்துக்கு முடிச்சுப் போட்டு வச்சது என்று மண்டையைப் பிய்ப்பாள்.   ஒரு நாள்   இசக்கி, ``எம்மா எதுக்கும்மா முடிச்சுப் போட்டு வச்சிருக்கே மறந்துபோய்ட்டா, இன்னம எதுக்கு முடிச்சுப் போட்டேன்னு இன்னொரு முடிச்சுப் போட்டு வையி”ன்னு சொன்னான். பக்கத்தில் கிடந்த தென்னை வாரியலை எடுத்து விளாசிவிட்டாள். அப்புறம் அரை மணிநேரம் மூசுமூசுன்னு அழுதாள். முகமெல்லாம் சிவந்து வீங்கி அப்படியே சாய்ந்துவிட்டாள். ரத்தக் கொதிப்பு. அன்றிலிருந்து இசக்கி, அம்மாவைப் பார்த்து சாதாரணமாகக் கூடச் சிரிக்க மாட்டான். 

இன்றைக்கு மகனிடம் இப்படிச் சொல்லி விட்டாளே தவிர,   ஆச்சி சரியான ஆளுல்லா, கரெக்டா கண்டுபுடிச்சிருவாளே என்று பயந்தாள். இப்படித்தான் ஒருதரம் மேல வீட்டு மாரித்தாய் அக்காவைப் பார்க்க வந்திருக்கா. அவளுக்கு சப்பட்டையான நேரம் போல. ஆச்சியைப் பாக்க இஷ்டப்படாம, ஏ ஆச்சி, ``நான் வீட்டுக்கு விலக்கமா இருக்கேன்”னு, கதவுக்குப் பின்னால் ஒளிஞ்சபடியே சொல்லியிருக்கிறாள்.  ``ஏட்டி ஏங்கிட்ட பொய் சொல்லப் படுமா, நான் அவ்வையாரம்மனைக் கும்பிடறவள்ளா, என்னமும் அக்யானியமா வாக்குச் சொல்லிருவேன்னு, ஏம் மூஞ்சில முழிக்கப் பயப்படுதே என்னட்டி. நான் வாயை மூடிக்கிட்டு இருந்தாலும் நடக்கறது நடந்தேதான்டி தீரும். ஒட்டுறவு இல்லாத வீட்டுக்கா நான் போறேன். என்னமோ தோணுது ஏம் புள்ளைக உங்களையெல்லாம் பாக்கணும்னு. தோணறப்ப, மலையிலே இருந்து இறங்கி வாறேன், பாக்கேன், போறேன். சிலருக்கு நல்லது நடக்கு, சிலருக்குக் கெடுதல் விளையுது, கெடுதல்னு ஒண்ணும் கிடையாது, எல்லாமே நல்லதுக்குத்தான்”  என்று  முகத்துக்கு நேரேயே  மாரித்தாய் அக்கா கிட்டச் சொல்லிட்டு, அவ வீட்ல சாப்பிடாமலே  கிளம்பிவிட்டாள், தனுக்கோடி ஆச்சி.

ஆசையாய், ஆச்சி பின்னால் ஓடி வந்து கை நீட்டிய பிள்ளைகளுக்கு எல்லாம் குங்குமம்  கொடுத்தாள். மாரித்தாயும் மன்னிச்சுக்கோ ஆச்சி என்று  ஓடியாந்து கை நீட்டினாள்.  சிரித்துக்கொண்டே தவிர்த்துவிட்டு மலையேறிப் போய்ட்டா. கொஞ்ச நாளில் மாரித்தாய் புருசன் முருகேசன், துலாக் கல்லில் நின்னு கிணத்திலேருந்து தண்ணி இறைச்சுக்கிட்டு இருந்தான். துலாக்கல்லு உடைஞ்சு அவனும் விழுந்து கல்லும் அவன் மேலேயே விழுந்துட்டு. அம்புட்டுத்தான் போய்ச் சேர்ந்துட்டான்.

ஆச்சி முடியெல்லாம் சடை விழுந்து, மஞ்சள் சேலையணிந்து  ஒரு சாமியார் போல் ஊரின் மேற்கேயுள்ள மலைக் குகையில் இருக்கிறாள். திடீரென்று நினைத்தாற்போல, கீழே வருவாள். ``பேராண்டி மாசானம் இருக்கானா, ரத்தினம் பொஞ்சாதி செல்லம்மா இருக்காளா, அவங்களைல்லாம் தேடுச்சுன்னுதான் வந்தேன் என்பாள்.   அவள் குறிப்பாக யாரையாவது பாக்கணும்ன்னு ஆசையா தேடி வருவா. அவளுக்கு எல்லார் பேரும் தெரியும். புதுசாப் பொறந்ததைக்கூட அடுத்த தடவை ஞாவகமா கேப்பா.  இவ வந்து விசாரிச்சா  அந்த வீட்டில் ஏதாவது தும்பமும் நடக்கும். கல்யாணம் காட்சின்னும் வரும். யாராவது காணாமப்போய்விடுவார்கள். அல்லது எங்காவது தூரா தொலைக்குப் போய் அட்ரஸ்ஸே இல்லாமப்போனவன் திரும்பி வந்துவிடுவான்.

தனுக்கோடி - சிறுகதை

ஒருநாள், ``ராசப்பா எப்படிள்ளா இருக்கான்” என்று கேட்டுக்கொண்டே ஒரு வீட்டுக்கு வந்தா. ``என்ன ஆச்சி இப்படிக் கேக்கே, அவன் போன இடமே தெரியலையே”ன்னு சொல்லும் போதே, ஒரு ஆள் ஓடி வந்து,  ராசப்பா வந்துட்டான், ஊர்ச்சாவடியில மறிச்சு எல்லோரும்  பேசிக்கிட்டிருக்காங்க, என்று சொன்னான். அவன் சம்சாரம் தலையை அள்ளி முடிஞ்சுகிட்டே தெருவில் இறங்கி, எய்யா, என் ராசான்னு அழுது கத்திக்கொண்டே ஓடினாள். ஆச்சி, ``புருஷன் பேரைச் சொல்லுதா பாரு” என்று சொல்லியவாறே  மலையை நோக்கிப் போனாள். அவள் போவதைக்கூட யாருமே கவனிக்கவில்லை. அப்புறம் ராசப்பா பொஞ்சாதி சகிதமா மலையேறிப் போய்ப் பார்த்து வந்தான்.

யாராவது அப்பாவு படுக்கையில் கிடையாகக் கிடந்து தானும் நொம்பலப்பட்டு, மத்தவங்களையும் சங்கடப்படுத்துவான். ``எப்பா இவனைத் தேடி, ஆச்சி வந்து விசாரிச்சா, இன்னும் படுத்தாமல் போய்ச் சேர்ந்திருவானேன்னு சிலர் நினைப்பாங்க. அவளும், ``ஏய் அப்பாவுவைத் தேடுச்சுடே எப்படி இருக்கான்னு” வந்து நிற்பாள். ஆனா அவ வந்த முகூர்த்தம், அவன் கல்லுக்குத்தியா எந்திரிச்சு உக்காந்திருவான். முன்னெல்லாம் அவள் வந்தால் எல்லோரும் சந்தோஷப்பட்ட காலங்களும் உண்டு. சில அசம்பாவிதங்கள் நடந்ததைக் கேட்டுக் கேட்டு, சுற்றியுள்ள நாலைந்து கிராமத்தில் இப்போதுள்ள தலைமுறை ஆட்களுக்கு ஆச்சி வந்தால் இனம் புரியாத பயமே வரும்.  சின்னப் புள்ளைகளைப் பத்தி விசாரிச்சா அதுகளுக்கு நல்லதே நடக்கும். யாராவது குழந்தையைப் பார்த்து ``ஏட்டி இது கிட்ணம்மா புள்ளைதானே, இவளை ஏன் தோட்டக் காட்டுக்கெல்லாம் விளையாட அனுப்புதா” என்பாள்.  அவள் இரண்டொரு நாளில் சடங்காகி உக்காந்துவிடுவாள். கிட்ணம்மாளுக்கு மகள் சடங்காகாதது ரொம்ப நாள் கவலை.

அந்த ஊருக்கு மேக்காம கண்ணாடியா ஒரு ஆறு ஓடுகிறது. அதன் புண்ணியத்தில் மேற்குத் திசை பூராவும் பச்சைப் பசேல்னு தோப்பும்   வயலுமாக இருக்கும். அதையும் தாண்டினால் வரும் மலையில்தான் ஆச்சி இருக்கிறாள். மலையில் சிறுசா ஒரு அருவி. அருவிக்கு வலது ஓரமா ஒரு குகை. அதில் சித்துச் சிறுக்கென்று முழங்கை உயரத்துக்கு அவ்வையாரம்மன் சிலை. அதற்கு மஞ்சனையைப் பூசிப்பூசி சிலையின் முகமெல்லாம் மொழு மொழுவென்று தெளிவில்லாம இருக்கும்.  ஆச்சிதான் விளக்கெண்ணை, மஞ்சள், சுண்ணாம்பு சேர்த்துக் கூட்டி சிகப்பா மஞ்சனை செய்து, பூசுவாள். சமயத்தில் ஊருக்குள் வரும் போது கொண்டு வந்து எல்லோருக்கும் தருவாள். சின்னப் பிள்ளைகள் அவளை மஞ்சனையாச்சி என்றும் அழைக்கும். அருவி கோடையிலும் வத்தாம விழுந்துகிட்டே இருக்கும். அதுக்கு முன்னால ஒரு ஆழமான தடாகம். எம்பது அடி ஆழம் இருக்கும்ப்பாங்க. ஆச்சி அதில் அநாயசமாக நீந்திக் குளிப்பாள்.   அம்மனும், அருவியும் ஆச்சியும்தான் ஒருத்தருக்கொருத்தர் துணை. ஆச்சி அங்க வந்ததே பெரிய கதை.

தனுக்கோடியா, கோயிந்தனுக்கும் அவன் பங்காளிகள் பலருக்கும் ஆச்சி முறை வேணும். ஆச்சின்னா யாராவது ஒரு தாத்தாவின் சம்சாரம் இல்லை. பங்காளிகளில் ஒருவரின் பூட்டனோ, ஓட்டனோ ஒருத்தருக்கு ஐந்து சம்சாரம். அதில் கடைசி சம்சாரத்தின் மகள். அஞ்சாவதா ஒரு பஞ்சவர்ணக் கிளியல்லா புடிச்சிருக்கான் கிழவன் என்று ஊரே சொல்லும். அந்தப் பூட்டன் காலத்துக்கு அப்புறம், ஐந்தாவது சம்சாரமும் அவள் ஒரே மகளான தனுக்கோடியும் தனியானாலும், யாருக்கும் பாரமில்லாமல்  காட்டில் விறகு வெட்டி வந்து விற்று வாழ்க்கையை ஓட்டினார்கள். ஒருநாள் அம்மா கூட வராமல் தனுக்கோடி மட்டும் விறகுச் சுமையோடு அழுதுகொண்டே  ஊருக்கு வந்தாள். நாலைந்து நாள்கள் கழித்து அம்மைக்காரி தடாகத்தில் மிதப்பதாகத் தகவல் வந்தது. வேண்டுமென்றே விழுந்தாளா தவறிப்போய் விழுந்தாளா தெரியாது. ஊரோடு திரண்டு போனது. நாலைந்து பேர் தண்ணீரில் பாய்ந்து, நீந்தி உடலைக் கரைக்கு இழுத்து வந்து, ஒரு ஓரமாய் காரியம் செய்தார்கள். அதற்கப்புறம் தனுக்கோடிக்கு ஊருக்குத் திரும்ப மனமில்லை, எல்லோரும் போய் இருட்ட ஆரம்பித்தும், அம்மாவை எரித்த  அருவிக்கரையிலேயே இருந்தாள். அங்கிருந்த ஒரு சாமியார் ஆதரவா நாலு வார்த்தை பேசி,  குகையில் தங்க வைத்து பூசை வைக்கச்  சொல்லிக் கொடுத்தார்.

 மலைக்கு ஆடு, மாடு மேய்க்கப் போகிறவர்கள், மூங்கில், விறகு, விசேஷ வீட்டிற்குக் கமுகு, பாக்குக்குலை, மற்ற தோரணச் சாமான்  வெட்டி வருபவர்கள்  எல்லோரும் சாமியார், மலை உச்சிக்குப்  போய் பைரவர் சாமிக்கு  உக்கிரமான வழிபாடுகள்  செய்வார் என்று சொல்லுவார்கள். அவரைத்தவிர அந்தப் பகுதிக்கு  வேறு யாரும் அவ்வளவு சுலபமாக ஏற முடியாது. அது அகத்தியர், சாமியாரும் ஒரு சித்தர் என்றும் சொல்லுவார்கள்.   அதுக்கு நேர் பின்னால்தான் மகர ஜோதி தெரியும் `காந்த மலை’ இருக்கு என்பார்கள். ஒருநாள் தனுக்கோடி   வயிற்று வலியால் துடித்தபோது அவளின் தலையைத் தடவி சாமியார் ஆசீர்வாதம் செய்ததும் அவள் பூப்போன்ற தலைமுடியில் சடை விழுந்து முடி அடை மாதிரி ஆகிவிட்டதாம். வலியும் நின்றுவிட்டதாம், மலையில் தேனெடுக்கும் பளிஞர்கள் தாங்களே பார்த்ததாகச் சொல்லுவார்கள். அவள் உடலின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தக் குருதியும் வழியவே வழியாது  என்று அவர்கள் கூடச் செல்லும் பெண்கள் பக்தியாய்ப் பேசுவார்கள். பளிஞர்கள் எப்போது தேன் சேகரித்தாலும், சாமியார் முன்னால் கொண்டு வைத்துவிடுவார்கள். சாமியார்,  ஒரு சிறிய சுரைக்குடுவையில் மட்டும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் தேன் வாங்கிக்கொள்ளுவாராம். அதற்கு மேல் ஒரு துளியோ வேறெதுவுமோ, எப்போதும் வாங்கிக்கொள்ள மாட்டார். ஒரு நாள்   உச்சிக்குப் போன சாமியார் திரும்பவே இல்லை.  அதனால் தனுக்கோடிக்கு அதே போல தேனைப் படைக்க ஆரம்பித்து விட்டார்களாம். இது எல்லாமே கிராமத்தில் காலங்காலமாக உலவும் கதைகள். 

தனுக்கோடி - சிறுகதை

தங்கவளையலைப் பார்த்தது ஒரு பக்கம், தனுக்கோடியா சத்தத்தைக் கேட்டது ஒரு புறம், சின்னத்தாய்க்கு மனசு நிலை கொள்ளவில்லை. பயமும் ஆற்றாமையுமாய் அறைவீட்டை விட்டு வெளியே வந்தாள். ``என்னள்ளா அறை வீட்ல புதையல் எடுத்துக்கிட்டிருந்தியா” என்று ஆச்சி கேட்டாள். ஒரு ஓலைக் கொட்டானில் இருந்து மஞ்சனையை எடுத்து அவள் நெற்றியிலும் இசக்கி நெற்றியிலும் கோபி போலப் பூசினாள்.  இசக்கி முத்து விளக்கெண்ணெய் நாத்தம் தாங்காமல் முகம் சுழித்தான். ஆச்சி, ``நீ போய் விளையாடுடே” என்றாள். ``ஏட்டி தனுக்கோடி, கோயிந்தன் எங்கே, உன் சக்களத்தி வீட்டுக்கா போயிருக்கான்,” என்றவள், ``என்னட்டி திகைச்சுப் போயி நிக்கே, ஓம்பேரு உனக்கே தெரியாது என்னட்டி.. ஏம் பேரைத் தாண்டி ஒனக்கு வச்சிருக்கு, உங்க ஆத்தா அந்தப் பேரைச் சொல்ல மாட்டாங்கறதாலே சின்னத்தாயின்னு வச்சிட்டா.   அவனுக்காவது தெரியுமா கேளு” என்று அங்கே பவ்வியமாக வந்த கோயிந்தனைக் காட்டினாள்.

அவனைப் பார்த்ததும் சின்னத்தாயியின் முகம் கறுத்தது. ``என்னப்பா கோயிந்தா நான் வந்திருக்கேன்னு காசியம்மா சொன்னாளா, அவளைப் பாத்துட்டுதான் வாரேன். முதலிலேயே முறைக்காரி, அவளைக் கட்டியிருக்கலாம்ல்லா, அப்ப விட்டுட்டு இப்ப புருசன் இல்லாதவளை ஒட்ட வச்சா நல்லாவா இருக்கு. சரி போகுது விடு.  களத்து மேட்டு கிட்ட ஒங்க வீட்டுப் பேருக்கு ஒரு சத்திரம் இருக்கே அதை எனக்குத் திறந்து குடு. இன்னமே நான் கீழே வந்திரலாம்னு இருக்கேன், மலைக்கெல்லாம் போகலை, காசியம்மாவை அதில் வைக்க வேண்டாம். அவளுக்கு வேற வீடு தயாரா இருக்கு,” சொல்லி விட்டு, ``இவ பேரும் தனுக்கோடிதான், ஒனக்கு தெரியுமா” என்றாள். ஊமையாய் நின்ற கோயிந்தனின் காலடியில் சின்னத்தாயி அந்தத் தங்க வளையலைத் தூக்கி எறிந்தாள். ``ச்சே கோட்டிக்காரி இன்னமே அவன் உன்னை நல்லா வச்சிக்கிடுவான்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ``ஆச்சி சாப்பிட்டுட்டுப் போங்க’’ என்றவளிடம், ``முதலில் புருஷனைக் கவனிட்டி, புருஷனைக் கவனி” என்றபடியே நகர்ந்தாள். நடையில் ஒரு சோர்வு தெரிந்தது. மலையடிவாரத்தில் தயங்கித் தயங்கி காசியம்மா ஆச்சி பின்னால் போனதாகச் சிலர் சொன்னாலும், ஆச்சி சொன்னது போலவே காசியம்மாவை எல்லோரும் மறந்தேபோனார்கள்,  கோயிந்தன் உட்பட.

தனுக்கோடி ஆச்சி சத்திரத்து வீட்டிற்கு வந்த மூன்றாம் நாள் பிடித்த மழை ஒரு வாரம் போல கொட்டு கொட்டென்று கொட்டியது. மலையே கண்ணுக்குத் தெரியவில்லை. வானம் வெளி வாங்கி முதல் வெயில் பட்டதும்தான் மலை ஒரு அபூர்வ ஒளியுடன் ஊருக்கு அருகே வந்து விட்டதுபோலத் தெரிந்தது. மலையில் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளிக் கம்பியாய்  அசையாத அருவிகள். வயல்களில் முழங்கால் அளவு தண்ணீர் கொட்டிக் கிடந்தது. அவரவர்களுக்கு அவரவர் வீட்டுப்பாட்டைக் கவனித்து சீர் செய்யவே நேரமில்லை.  வீட்டுக்குள் கட்டி வைத்திருந்த மாடுகளை மறுபடி தொழுவத்திற்கு மாற்றினார்கள். ஒவ்வொருவராய் தெருவில் இறங்கி வந்து   சேதாரம் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். காய்ந்த விறகு இருந்த வீடுகளிலிருந்து, விறகும் தீக்கங்கும் எல்லார் வீட்டிற்கும் பரிமாற்றமானது. வீடு இல்லாத சனங்களுக்கு ஊர்ப் பொதுவில் கஞ்சி காய்ச்ச கோயிலில்   அடுப்புக் கூட்டினார்கள். அரிசி மூட்டைகள் வந்து சேர்ந்தன.

`இத்தனை வருஷத்துல இல்லாத மழையப்பா, இப்படிக் கண்ணால கண்டது நாமளாத்தான் இருக்கும். தனுக்கோடியா வேணும்னா பாத்திருப்பா’ என்று பேசிக் கொண்டிருந்த சிலர், ``ஆமா அவ என்னப்பா ஆனா” என்று களத்து மேட்டு சத்திரத்திற்கு ஓடினார்கள். சின்னத்தாயியும் ஏ ஆச்சி என்றபடி ஓடினாள். தண்ணீரில் நீந்துகிற மாதிரி போய்த்தான் சத்திரத்துக்குப் போக வேண்டியிருந்தது. அதற்குள் மலையில் சிக்கிக்கொண்ட சிலர் மெதுமெதுவாக இறங்கி ஊருக்குள் வந்தார்கள். மேல் காலெல்லாம் சகதியும் ரத்தமும். விழுந்து எழுந்து வந்திருப்பார்கள் போல. அவர்கள்,   ``அருவி கிட்ட எல்லாம் போக முடியலை, மரத்தில் இருந்துதான் பார்த்தோம்.  அவ்வையாரம்மன் குகையெல்லாம் கல்லும் மண்ணும், பாறையும் அடைச்சிக்கிட்டு. சாமியார்க் கிழவி என்ன ஆனாளோ தெரியலை’’ என்றார்கள். சத்திரத்தை நோக்கிப் போய்க்கொண்டே, அவதான் சத்திரத்தில இருக்காளே என்றார்கள். நல்ல உயரமுள்ள அஸ்திவாரம்தான். ஆனாலும்  சத்திரம் ஈரமும் நசுநசுப்புமாகக் கிடந்தது. 

உள்ளே போய் சட்டென்று வெளியே வந்த ஆண்கள் கண்ணில் படுகிற மாதிரி சின்னத்தாயிதான் முழங்காலுக்கு மேல் திரைத்த சீலையுடன்  தண்ணீருக்கு ஊடாக வந்துகொண்டிருந்தாள். ``எப்பா சின்னத்தாயிப் பிள்ளைக்கு கைலாகு கொடுத்துக் கூட்டியாங்கப்பா,” என்றதும் நாலைந்து பேர் அவளைத் தூக்கிக் கொண்டே வந்து சத்திரத்துத் திண்ணையில் உட்கார்த்தினார்கள். அவள் குதித்து உள்ளே ஓடினாள். நடுவில் ஒரு உயரமான திண்டில் கிடந்தாள் தனுக்கோடியாள். அவளின் வாய் சிரித்த மானிக்கி லேசாகத் திறந்திருந்தது கண்கள் ஏறக் குத்தி நின்றன. ஆச்சி என்று ஒப்பாரி வைக்கப் போனவளின்  நாசியில் ரத்தத்தின் கவிச்சி வாசனை நெருடியது. அழுத வாயை  மூடியபடி அருகே போனாள். ஆச்சியின் அடிவயிற்றுச் சேலையெங்கும் வடிந்து படர்ந்து காய்ந்தும் காயாமலும் பூப்பின் குருதி. ஆச்சீ என்று கதறியபடி அதன் மேல் குழந்தைபோல் விழுந்தாள் சின்னத்தாயி.