சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

ஆபரேஷன் எலியார்

ஆபரேஷன் எலியார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபரேஷன் எலியார்

சிறுகதை ஓவியங்கள்: வேலு

`சம்பவம்' நடந்த அன்று ஞாயிற்றுக்கிழமை. நானும் பாசமலரும் (அண்ணன்) தொலைக்காட்சியில் `சிலந்தி மனிதன்' (அட... ஸ்பைடர்மேன்...பா) பார்த்துக்கொண்டிருந்தோம். சிலந்தி பற்றியும் DNA மாற்றம் பற்றியும் தன் அறிவைக் காட்டி சிலாகித்தான் அண்ணன். (அவன் ஒன்பதாவது படிக்கிறானாம்... எல்லாம் தெரியுமாம்)

``வீட்டுப்பாடம் ஏதும் கொடுக்கலையா?’’என்ற அம்மாவின் ஏவுகணை வரும் என்பதால், தடுப்பாட்டம் ஆட ரெடியானோம்.

``அம்மா... அப்பப்போ டி.வி. பார்த்துட்டே வீட்டுப்பாடம் செய்றோம் சரியாம்மா’’ என்று வாலன்டரியாகச் சொன்னான் அண்ணன்.

ஆபரேஷன் எலியார்

அம்மா குளிர்ந்துபோய், ``செய்ங்க தங்கங்களா’’ என எங்கள் கடமை உணர்வை மெச்சினார்.

உடனே, பக்கத்து அறைக்குள் போனவன், அடுத்த கணம் `சொய்ங்' என வெளவால் மனிதனாகப் (Bat Man) பறந்து வந்தான். முகம் வெளிறி... வியர்த்திருந்தது.

``என்னடா... என்னாச்சு?’’

ஆபரேஷன் எலியார்``எ... எ... எ...லி’’ என்றதும், ``எங்கேடா’’ என்றபடி நான் சோபாமீது ஜம்பி நின்றுவிட்டேன்.

``இங்கே இல்லே... ரூம்ல’’ என்றான் முறைப்புடன்.

சமையலறையில், மிக்ஸி ஓடும் சத்தத்தில் அம்மா வேறு உலகத்தில் இருந்தாள்.

``வா...டா... பயப்படாம... பார்க்கலாம்’’ என்று அவனை முன்னால் போகவிட்டு, பின்னால் சென்றேன்.

எலியைப் பிடிக்க பூனைபோலப் போனாத்தானே சரியா இருக்கும். பதுங்கிப் பதுங்கிப் போனோம். அண்ணன் கையில் ஆயுதமாக ஒட்டடைக்குச்சி.

`ஆபரேஷன் எலியார்' ஆரம்பமானது. அறைக்குள் விழுந்துகிடந்த புத்தகப் பையைக் குச்சியால் குத்தினான். பேரமைதி...

ஆபரேஷன் எலியார்

``டேய்... இன்னும் உள்ளேயே வா இருக்கும். அங்கே அலமாரியில் ஏதோ அசையற மாதிரி இருந்துச்சுடா. தட்டிப்பார்’’ என்றேன்.

அலமாரியைத் தட்டியதும், `க்ளிங்' என்ற சத்தம். திடுக்கிட்டு நிமிர்ந்தோம். அங்கிருந்த பூ ஜாடியைத் தட்டிவிட்டு, கம்பீரமாக போஸ் கொடுத்து அமர்ந்திருந்தார் நம் நாயகன்.

‘‘இ....இ... இருக்கு'' என்று அண்ணன் அலறும்போதே, `ஜிங்' எனக் குதித்தது. நான் வெளியில் பாய்ந்தேன். என் பின்னாடியே அது ஓடிவந்தது. அண்ணனோ சுவருடன் பல்லியாக ஒட்டிக்கொண்டான்.

சமையலறையில் மிக்ஸி சத்தம் நின்றுவிட்டது. ஒரு மூன்றாம் உலகப் போரே நடந்தது தெரியாமல் வெளியே வந்த அம்மா, ``என்ன பண்றே?'' எனக் கேட்டார்.

``ஐயோ... அம்மா... எலி... எலி'' எனக் கிலியுடன் கத்தினேன்.

ஆபரேஷன் எலியார்

``என்னது எலியா?’’ என்ற அம்மாவின் பார்வை, வாசலுக்குப் போவதா வெளியே போவதா எனத் தெரியாமல் அங்கும் இங்குமாகத் தடுமாறிக்கொண்டிருந்த எலியின் மீது சென்றது.

``ஏய்.... ச்சூ'' என்றபடி காலை நீட்டி ஒரு எத்து விட்டார். `பாகுபலி' சிவகாமியைக் கண்டதுபோல எலி பதறிக்கொண்டு வாசல் வழியே ஓடிவிட்டது.

``இதுக்கா இவ்வளவு அமர்க்களம் பண்ணியிருக்கீங்க. சரி, சரி பஜ்ஜியும் காரச் சட்னியும் ரெடி பண்ணியிருக்கேன். சாப்பிட்டுக்கிட்டே படிங்க'' எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அப்புறம் என்ன? தட்டு நிறைய பஜ்ஜியோடு, டிவி முன்னால் அமர்ந்திருந்தோம். புத்தகங்கள் ஒரு பக்கமாக இருந்தன.

எதிரி அடித்த அடியில் பல்டி அடித்துக்கொண்டிருந்தார் சிலந்தி மனிதன். ``சே... நானா இருந்திருந்தா இந்நேரம் அவனை ஒரே அடியில சுருட்டி இருப்பேன்'' என்றான் அண்ணன்.

``ஆமாமா... நீ பெரிய வீரனாச்சே'' என்றபடி பஜ்ஜி சாப்பிடுவதில் கவனமானேன் நான்.

ஆபரேஷன் எலியார்